ஞாயிறு, 21 மார்ச், 2010

உலக தண்ணீர் தினம்..

தண்ணீர் தினம்.





தண்ணீர் என்றதும், தமிழ் நாடு, குறிப்பாக சென்னை மக்களிடையே புகழ் பெற்ற 'தண்ணி' அல்ல நம் நினைவுக்கு வர வேண்டியது.அது வேறு. அது கொண்டாடப் பட வேண்டிய ஒன்றும் அல்ல..அதற்கு என்று தனி நாளும் இவர்கள் வைத்துக் கொள்வதில்லை!

பெரிய நீர் நிலைகளைப் பார்க்கும் பொழுது நம் மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி - இப்போதெல்லாம் எங்கே அந்த மாதிரி பார்க்க முடிகிறது? காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் பார்த்த நாட்கள் கனவாய்ப் போய் விட்டன. காவிரி என்று இல்லை, எந்த ஆற்றிலுமே 'புரண்டு ஓடும் நதிமகளை'ப் பார்க்க முடிவதில்லை. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. நம் மூதாதையர் நல்ல தண்ணீருக்காகப் பட்ட கஷ்டங்களின் வெளிப்பாடோ? அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் நம்மூர் அரசியல்வாதிகள் அதையும் கூறு போட்டு விற்க முற்சிப்பது தனிக் கதை.

மக்களோ, மாக்களோ... தண்ணீர், அதிலும் சுத்தமான குடி நீர் இன்றி வாழ்வது கடினம்.

உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு.





உட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான். எதிர் காலச் சந்ததியினருக்கு, நாம் இந்த உலகில் பிறந்தபோது காற்றும் நீரும் எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதை அதே அளவு சுத்தமாக அல்லது அதைவிடச் சுத்தமாக நம்மால் விட்டுப் போக முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு - ஐ எஸ் ஓ தர சான்றிதழ்கள் கூட இருக்கின்றன - தொழிற்சாலைகளுக்கு.








சுத்த நீரின் விகிதம் கிட்டத் தட்ட பாதி ஒரே ஏரியில்! இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள். ஒரு சின்ன கப்பலே போகும் அளவுக்குப் பரந்த இந்த ஏரியின் ஆழம் சில இடங்களில் ஒன்றரை கி. மீ.க்கும் அதிகம்! ரஷ்யாவில் தெற்கு சைபீரியாவில் இருக்கும் பைக்கால் எரியைத்தான் பார்க்கிறீர்கள். இன்னொரு படம் கனடாவில் இருக்கும் ஒரு ஏரி. புகழ் பெற்ற நீர் வீழ்ச்சிகள், அமேசான், மிஸ்ஸெளரி, மிச்சி சிப்பி, கங்கை, பிரம்ம புத்ரா என்று நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன பெயர்களை எல்லாம் விட்டு விட்டோம் என்றால், பூமியின் தெற்கு பகுதியில் தண்ணீர் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது என்பது புரியும்.

நீரின்றி அமையாது உலகினில் யார் யாருக்கும் வானின்று அமையாது ஒழுக்கு ... என்றார் வள்ளுவப் பெருமான். 2000 வருடங்களுக்கு முன்பே, அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்கள் அவ்வளவாக இல்லாத போது மக்களின் வாழ்க்கை ஆற்றங்கரைகளிலேயே கழிந்தது. மக்கள் தொகை அதிகம் ஆகி மற்ற இடங்களிலும் வேளாண்மை செழிக்க நீர் நிலைகள் கட்டப் பட்டு, நீரைத் தேக்கி தேவைப் படும்போது உபயோகிக்கத் தொடங்கினார்கள்..

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கத்தானே செய்யும்? வாழ்க்கை முறைகளால் அதிகரித்த நீர்த் தேவையுடன், உலோக உற்பத்தி, இரசாயன உற்பத்தி இவற்றுக்கு நீரின் தேவை அதிகம் இருப்பதன் கூட, நீரில் கலக்கும் பூச்சி கொல்லிகள், மற்ற ரசாயனங்கள், இவை தவிர மக்கள் பண்ணும் அசுத்தங்கள் சொல்லி மாளாது.

இந்த அசுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நாம் குறைத்துக் கொள்ளாவிட்டால், நம் சந்ததியினர் குடி தண்ணீருக்கு மட்டும் தம் நாளின் பெரும் பகுதியை செலவழிக்க நேரும்.

நமக்குத் தேவை : தண்ணீர் சிக்கனம், அசுத்தப் படுத்தாதிருத்தல், புதிய மற்றும் எல்லோராலும் பயன் படுத்தக் கூடிய சுத்திகரிப்பு & பாதுகாப்பு முறைகள்.







நம்மைப் போன்று வீடுகளில் / அலுவலகங்களில் தண்ணீரை வீணாக்காமல் இருக்க சொட்டிக் கொண்டேயிருக்கும் குழாயை சரிப் படுத்துதல் முதல், குழாயை தொடர்ச்சியாக திறந்து வைத்துக் கொண்டு பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.





வாஷிங் மெஷினில் குறைந்த அளவு (minimum level) தண்ணீர் setting. குளிப்பதற்கு அதிக பட்சம் பதினைந்து லிட்டர் தண்ணீர் போதும்.


சொந்த வீடுகளில் குடியிருப்போர், ஓவர் ஹெட் டாங்க் நிரம்பி வழிந்து நீர் விரயமாவதைத் தடுக்க ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் பொருத்தலாம்.
மழை நீர் சேகரிப்பு என்ற அற்புதமான முறையை நாம் சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஒரு முறை அது கட்டாயச் சட்டமாக்கப் பட்ட பொது ஏதோ அரசாங்கத்தை ஏமாற்றுவது போல நினைத்து மக்கள் அதை செய்யாமலேயும், அரை குறையாகச் செய்தும் சான்றிதழ் பெற்றது நினைவுக்கு வருகிறது.சரியாகப் பின்பற்றினால் பெரிய அளவு நன்மை பயக்கும் திட்டம் அது.


தண்ணீர்த் தேவை குறைந்த சமையல் முறைகள் - உதாரணமாக மைக்ரோவேவ் மற்றும் இண்டக்ஷன் குக்கர் உபயோகிக்கும் பொழுது
பாத்திரங்களில் கரி படிவதில்லை - அதனால் அதிகம் உபயோகப் படுத்தப் படும் TSP என்னும் ட்ரை சோடியம் பாஸ்பேட் உபயோகம் குறைகிறது.

அல்லது பாட்டி மாதிரி கரிப் பாத்திரம் என்று தனியே ஒன்றிருந்தால் அதன் கருப்பு நிறம் காரணமாக சூடு சீக்கிரம் பரவும்.

நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு எல்லைக்குள் கடைபிடிக்கக் கூடிய முறைகளில் உங்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் அது பற்றி 'எங்களுக்கு' எழுதுங்களேன். தண்ணீர் தினம் என்ன, மாதம், வருடம் எல்லாமே கொண்டாடுவோமே!

(தண்ணீர் மாசுபடுதலை தடுக்கவும், சிக்கனமாக தண்ணீரைப் பயன் படுத்தவும் இன்னும் நிறைய ஐடியா கொடுப்பவர்கள், இங்கே பின்னூட்டத்தில் அவைகளைப் பதியலாம். நல்ல ஐடியாக்களுக்கு, எல்லோருக்கும் பயன்படக் கூடிய ஐடியா கொடுப்பவர்களுக்கு வழக்கம்போல பாயிண்டுகள் உண்டு)

25 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்.தண்ணீரின் அவசியம் அனைவருக்கும் தெரிய வேண்டியுள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து போராடி , நீரைகாப்போம்.

    பதிலளிநீக்கு
  2. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான்.


    ..........உண்மை. நாமும் குற்றவாளிகள்தான்.

    பதிலளிநீக்கு
  3. //சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான்//

    சரியான குற்றச்சாட்டு...சபாஷ்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு. தண்னிரின் அவசியம் எல்லாருக்கும் தெரிய வேண்டியது ஒன்று கூடி உழைபோம்.

    கேரளத்தில்வெள்ளத்தினு ஒரு போழும் நங்கட் நாட்டில் கஷ்டமில்ல,
    என்னவென்றால் தமிழ் நாடு அளவுக்கு ப்ளாட்கள் கிடையாது. நிறய்ய மரங்கள் இருக்கனும்.

    பதிலளிநீக்கு
  5. நீரில்லாமல் துணி துவைக்கலாம், குளிக்கலாம். அதற்கான தொழில்நுட்பம் பரிசோதனை முறையிலும் சாத்திய அளவிலுமே இன்னும் இருப்பது தான் வருத்தமாக இருக்கிறது. இந்தியா தான் உலகுக்கு முன்னோடியாக இருந்த இந்தத் தொழில்நுட்பங்களை பொதுப்பயனுக்குக் கொண்டு வர வேண்டும். வருமா?

    பதிலளிநீக்கு
  6. போற போக்க பார்த்தா, இனிமேல் இது மாதிரி புகைப்படங்களில் மட்டும்தான் ஏரியை
    பாக்க முடியும் போல.

    பதிலளிநீக்கு
  7. //சொந்த வீடுகளில் குடியிருப்போர், ஓவர் ஹெட் டாங்க் நிரம்பி வழிந்து நீர் விரயமாவதைத் தடுக்க ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் பொருத்தலாம்.//

    ம்ம் எனக்கு தெரிஞ்சு நிறைய வீட்ல இப்படித்தான் தண்ணீரை வேஸ்ட் பண்றாங்க...

    :(

    பதிலளிநீக்கு
  8. நம்மைப் போல் சாதாரண மக்கள் தண்ணீரை சிக்கனமாகச் செலவு செய்யலாம். மழை நீர் சேமிக்கலாம். ஷவர் குளியல் தண்ணீர் சிக்கனத்துக்கு ஒரு வழி. இதில் பலருக்கு நம்பிக்கை இல்லை. அப்படி அவ நம்பிக்கைப் படுபவர்கள் ஒரு லிட்டர் குவளையில் ஷவரில் நீர் பிடித்துப்பார்க்கவும். ஒரு லிட். நிரம்ப ரொம்ப நேரம் பிடிக்கும்.

    தண்ணீருக்கு மிகப் பெரும் ஆபத்து நகராட்சிகள், தொழிற்சாலைகள் கழிவு நீரை ஏரி குளம் ஆறு என்று வரை முறை யில்லாமல் கலப்பதுதான். இது குறித்து பொறுப்புணர்வு அரசுக்கு இல்லை. காரணம் அசுத்தம் செய்பவர்கள் அரசியல் கட்சிகளுக்கு நெருக்க மானவர்கள். இதை எதிர்த்து, பொறுப்பை வற்புறுத்தி ஒரு காந்தி தோன்றிப் போராடினால்தான் பலிக்குமோ என்னவோ. அதே போல தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை அளவுக்கு மீறி உறிஞ்சி சாஃப்ட் பானங்கள் தயாரித்து விரயம் செய்கின்றன. குளோபலைசேஷன் காரணமாக அவர்களை எதிர்த்து ஏதும் செய்ய திராணியற்றுப் போய் விட்டோம்.

    குப்பையை சமாளிப்பதும், கழிவு நீரை நிர்வாகம் செய்வதும் அவசரத் தேவைகள். இலவசமாக என்ன எப்படிக் கொடுக்கலாம் என்ற சிந்தனையில் எல்லாக் கட்சிகளும் போன பிறகு இதைப் பற்றி யார் கவலைப் பட இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  9. குரோம்பேட்டைக் குரும்பை22 மார்ச், 2010 அன்று AM 10:10

    நிறமேற்றப் பட்ட, நச்சுப் பொருட்கள் கலந்த சாஃப்ட் டிரிங்குகளை குடிப்பதை விட்டு, உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் நல்லதாகிய இளநீர் குடிப்பது என்று விஷயம் அறிந்தவர்கள் ஆரம்பித்தால் அது உலக தண்ணீர் தினத்தில் நாம் எடுக்கும் நல்ல உறுதிமொழியாக அமையும்.

    பதிலளிநீக்கு
  10. குரோம்பேட்டைக் குறும்பன்22 மார்ச், 2010 அன்று AM 10:24

    அது யாருங்க குறும்பனுக்குப் போட்டியாக ஒரு குரும்பை?
    சரி - ஓவர் ஹெட் டாங்குக்கு
    நல்ல ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் - எங்கு வாங்கலாம்? விவரம் கொடுங்க.

    பதிலளிநீக்கு
  11. சரியான தருணத்தில் அருமையான கட்டுரை!
    சின்னச்சின்ன லாட்களில் பாத்திரம் தேய்க்காமல் மொத்தமாக தேய்த்தால் தண்ணீர் உபயோகம் பெருவாரியாக சேமிக்கலாம்.பாத்திரம், சின்க் அலம்பும் போது சின்னதாக திறந்து விட்டுக்கொண்டால் போதுமே..

    பதிலளிநீக்கு
  12. தினமும் குளிக்க ஒரு வாளி தண்ணீர்தான் என்று நிர்ணயம் செய்து பிடித்து வைத்துக்கொண்டு குளித்தல் (அல்லது) ஷவரில் குளித்தல்.

    தினந்தோறும் துவைக்காமல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை துவைத்தல். கூடுமானவரை வாஷிங் மெஷினில் துவைப்பதை தவிர்த்தல்.


    டாய்லட்களில் அதிக அளவு தண்ணீரை பிளஷ் செய்யாமல் இருத்தல் கூடுமானவரை வெஸ்டர்ன் டாய்லட் உபயோகிக்காமல் தவிர்த்தல்.

    தேவையில்லாதபோதும் கூட குளிர்பானங்களை ஒரு அந்தஸ்துக்காக குடித்து, குளிர்பான நிறுவனங்களை ஊக்குவிக்காமல் இருத்தல். (குளிர்பான நிறுவனங்கள்தான் நிலத்தடி நீரை டன் கணக்கில் உறிஞ்சுகின்றனர்.)


    போன்றவை தண்ணீரை மிச்சப்படுத்தும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. தண்ணீர் சிக்கனம் பற்றி - நிறைய யோசனைகளை இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் எவ்வளவோ சொல்லப்போகிறீர்கள். இதுவரை பதியப் பட்ட கருத்துகளில்
    அப்பாதுரை கூறியிருப்பதை நாங்களும் எங்கேயோ படித்த ஞாபகம். தொலைக் காட்சியில் கூட யாரோ யாரையோ இது சம்பந்தமாக பேட்டி கண்டார்கள். துரை சொல்லியிருப்பதுபோல, அதற்குப் பின் அது பற்றி யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
    ராமன், குரும்பை, அனன்யா, வேல்ஸ் - எல்லோரும் நல்ல கருத்துகள் கூறியிருக்கிறீர்கள். யோசனைகளை கூறிய ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பாயிண்டுகள் வழங்குகிறோம்.

    பதிலளிநீக்கு
  14. வாஷிங் மெஷின் துவைப்பது ஏதோ நிறைய தண்ணீர் வீண் ஆகும் என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல. சுமார் 16 அல்லது 18 உருப்படிகளை சுமார் அறுபது லிட் தண்ணீரில் துவைத்து விட முடியும். அதுவே பிரன்ட் லோடிங் என்றால் இன்னும் குறைவுதான். மூன்று வாளித் தண்ணீருக்கும் குறைவாக துணி துவைக்க பயன் படுத்தும் வீடுகளில் மட்டும் மெஷினை விட சிக்கனமான நீர் பயன்பாடு இருக்குமோ என்னவோ.

    பதிலளிநீக்கு
  15. அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . சமூக அக்கறை உள்ள பதிவு .பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  16. தேவையான நேரத்தில் தேவையான இடுகை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. வாங்க சரவணன்,
    நன்றி.

    நன்றி சித்ரா.

    நன்றி புலிகேசி.

    உண்மை விஜிஸ் கிச்சன், நன்றி.

    வாங்க அப்பாதுரை, நம்ம இந்தியாதானே...வரும்..வரும்.

    நன்றி அண்ணாமலையான்.

    வாங்க சைவகொத்துபரோட்டா.. நீங்க சொல்றதும் உண்மைதான்.

    வாங்க வசந்த், நன்றி.

    வாங்க அநன்யா மஹாதேவன், உண்மை. நன்றி.

    வாங்க வேல்ஸ், குளிர்பானங்கள் குறித்து நீங்க சொன்னது சரி.

    வாங்க தமிழ் உதயம், நன்றி.

    வாங்க பனித்துளி, நன்றி.

    நன்றி தேனம்மைலக்ஷ்மணன்

    பதிலளிநீக்கு
  18. படங்களுடன் பதிவு மிக அருமை.

    //உட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான்.//

    சரியாகச் சொன்னீர்கள்.

    இந்தப் பதிவு விகடன் good blogs பரிந்துரையில் இடம் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. தண்ணிய சேமிக்க...
    ரெண்டு நாளைக்கி ஒரு தரம் குளியுங்கள்..
    சரக்க தண்ணி மிக்ஸ் பண்ணாம ராவா அடிங்க..
    வேலை (வேர்க்க விருவிருக்க) செய்யாதீங்க.. இல்லைன்னா ரொம்ப குடிச்சு செலவு செய்வீங்க..(தண்ணியத்தான்)
    toilet பேப்பர் ...... ஆங்க., வேணாம்.. இதுக்கு மட்டும் தண்ணியவே்னியவே யுஸ் பண்ணுங்க.. (இல்லைன்னா நாறிடும், உங்க பொழப்பு)..

    -- மேலே சொன்னது போல யோசிக்காம தண்ணிய சேமிக்க நல்ல / புது விதமா யோசிங்க சார்..

    பதிலளிநீக்கு
  20. நாட்டிற்கு மிகவும் தேவையான பதிவு.

    எனக்கு தெரிந்து பல பேர் வீட்டின் வெளிப்புறத்தை பெருக்குவதோடு மட்டுமின்றி, தண்ணீரால் கழுவியும் விடுகிறார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் வாரத்தில் ஒருநாள், மேல் மாடியிலிருந்து, அது இரண்டு மாடி கட்டிடம் வேறு, கீழே இருக்கும் கார் பார்கிங், குழந்தைகள் விளையாடும் இடம் என்று தெரு வரை கழுவி விடுவார்கள். பல பேருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. இப்படி தண்ணீரை செலவு செய்வது, பல குடும்பங்களுக்கு அவர்கள் செய்யும் துரோகம் என்றே சொல்லலாம். இது போன்ற பழக்கங்களை தவிர்த்தே ஆக வேண்டும்.

    இந்த பதிவு விகடன் good blogs பரிந்துரையில் இடம் பெற்றுள்ளதற்கு, வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. நன்றி ராமலக்ஷ்மி, நீங்கள் சொல்லிதான் விகடன் பக்கத்தை கவனித்தோம். நன்றி.

    நன்றி திவ்யா,

    ஹா..ஹா..ஹா மாதவன் நன்றி..

    உண்மை மீனாக்ஷி, நாங்களும் பார்த்திருக்கிறோம். தினமும் வீட்டை வாளி வாளியாக தண்ணீர் ஊற்றிக் கழுவுபவர்களையும் கூடப் பார்த்திருக்கிறோம். வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. பயனுள்ள பதிவு -கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றியும் சொல்லவும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!