செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: பொய்ப்பூக்கள்



          இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் நண்பர் 'சேட்டைக்காரன்' வேணுஜியின் படைப்பு இடம்பெறுகிறது.  அவர்  ப்ரொபைல் படமாக நாகேஷ் படத்தை வைத்திருந்தவர்.  நகைச்சுவை மன்னர்.  உவமை அரசர்.  அவர் எழுத்துகளை ரசிக்காதவர் இருக்க முடியாது.  அவர் தளத்தைப் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.  பாடல்கள் பற்றியும் பழைய திரைப்படங்கள் பற்றியும் கூட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவார்!


          அவரின் தளம் சேட்டைக்காரன்.


           இந்தக் கதை பற்றிய அவர் முன்னுரை தொடர்கிறது.  அதனைத் தொடர்ந்து அவர் படைப்பு...

====================================================================


வணக்கம்!


சேட்டைக்காரன்’ என்ற மாறுவேடத்தைக் கலைத்தபின்னர், அனேகமாக என்னுடன் பழகிவரும் அனைத்து சகபதிவ நண்பர்களுக்கும் இரண்டு விஷயங்கள் நன்றாகத் தெரியும். ’ஸ்ரேயாவுக்கு நடிப்பு வராது; சேட்டைக்காரனுக்குப் படிப்பு வராது.’ சுஜாதாவின் சிறுகதைகூட எனக்கு சுக்லா & க்ரேவல் அக்கவுண்டன்ஸி புத்தகம்போலவே பயமுறுத்துவது வழக்கம் ஆதலால் எனக்கு வாசிப்பனுபவம் இல்லை. ஒரு சில ஆண்டுகள் புத்தகக்கண்காட்சிக்குச் சென்று, அதிகபட்சம் மிளகாய் பஜ்ஜியும், மிரண்டாவும் உட்கொண்டு புறமுதுகு காட்டியவன். ஆனாலும், நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து ஏறத்தாழ 400 பதிவுகளும் போடுமளவுக்கு மதர்ப்பு வந்திருக்கிறதென்றால், அதற்கு ‘பண்புடன்’ இணையக்குழுமமே காரணம்.



எங்கள் பிளாக்’ என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து, எனது சிறுகதையைப் பதிவேற்ற விரும்புகிறதென்றால், அதனால் ஏற்படப்போகும் சகலவிதமான பின்விளைவுகளுக்கும் ‘பண்புடன்’ குழுமமே முழுப்பொறுப்பு என்றால் மிகையாகாது. எனவே…



     அந்தக் குழுமத்தில், 24-02-2009-ல் நான் எழுதிய ‘பொய்ப்பூக்கள்’ என்ற சிறுகதையை உங்களுக்காக மீள்பதிவு செய்ய விரும்புகிறேன்.

இவ்வளவு பீடிகைகள் போடக்காரணம், கதை படித்துவிட்டு ‘என்ன அபத்தம் இது?’ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அல்ல. என்னிடமிருந்து வேறு எதையும் யாரும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். நன்றி! 


======================================================================









பொய்ப்பூக்கள்
சேட்டைக்காரன்  


ரவீந்திரன் காரைக் கிளப்பியதுமே வாசலின் கதவு திறக்கப்பட்டது.


ஸ்டீயரிங்கை இரண்டு கைகளாலும் பிடித்தபடியே கண்களை இறுக்க மூடிக்கொண்டு மனதுக்குள்ளே முணுமுணுத்தார். ’காக்க காக்க கனகவேல் காக்க..’ கியரைப்போட்டு ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து அழுத்த அவர் எத்தனித்தபோது, பாபு உள்ளேயிருந்து சட்டையின் பட்டன்களைப் போட்டும் போடாமலும் ஓடி வந்தான்.


"அப்பா! இருங்க, நானும் வர்றேன்," பாபு அவரது அனுமதி தேவையில்லை என்பது போல, அதற்காகக் காத்திருக்காமல் முன்பக்கக் கதவைத் திறந்து கொண்டு ஏறி அமர்ந்து கொண்டான்.


"எங்கேடா வர்றே?" ரவீந்திரன் குழப்பத்தோடு கேட்டார்.


"நீங்க எங்கே போறீங்களோ அங்கே! வண்டியை விடுங்கப்பா..," என்று அவரை ஏறிட்டுப் பார்க்காமல் சட்டை பட்டன்களைப் போட்டுக்கொள்வதில் கவனமாக இருந்தான்.


"நான் பெங்களூர் போறேண்டா," என்றார் ரவீந்திரன் எரிச்சலுடன்.


"சரி! நான் கூட வர்றேனே? டிரைவர் இல்லாம உங்களைத் தனியா அனுப்ப எனக்கு மனசில்லே," என்றபடி, பாபு டேஷ்போர்டைத் திறந்து உள்ளேயிருந்த சி.டி.க்களில் தனக்குப் பிடித்தமானதைத் தேட ஆரம்பித்தான். வண்டியை வேறு வழியில்லாமல் சாலையில் திருப்பிய ரவீந்திரன் நெடுஞ்சாலையை நோக்கி விரையத் தொடங்கினார்.


"! அம்மா உன்னைக் கூடப் போன்னு அனுப்பினாளா?" ரவீந்திரனின் குரலில் வெறுப்பு தொனித்தது.


"அம்மா சொல்லணுமா? தனியா வண்டியெடுக்காதீங்கன்னு டாக்டர் சொல்லியிருக்காரா இல்லையா?"


"ஏண்டா, ஹோசூரிலேருந்து பெங்களூர் போறதுக்கு...," என்று ரவீந்திரன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்ளாகவே, பாடல் ஒலிக்கத் தொடங்கி விட்டிருந்தது.


கிஸ் கோ காத்தில் மே கஹூம், கிஸ்கோ மஸீஹா சம்ஜூம்..சப் யஹா தோஸ்த் ஜோ பேட்டே ஹை, கிஸ் கோ க்யா சம்ஜூம்..,என்று ஜக்ஜித் சிங் உருகத்தொடங்கியிருந்தார்.


"அப்பா! உங்களுக்கு ஹிந்தி, உருது ரெண்டுமே தெரியாது. எப்படீப்பா கஜல் கேட்கறீங்க?" என்று கேட்டான் பாபு.


"மனசுலோனி மர்மமுலு தெலுசுகோ பாட்டை உங்கம்மா பாடறாளே, என்னிக்காவது தெலுங்கு தெரியுமான்னு கேட்டிருக்கியா?"


பாபு அப்பாவைத் திரும்பி நோக்கினான். அவன் முகத்தில் ஒரு வறண்ட புன்னகை அரும்பியது.


அப்பா, அம்மா இருவர் மீதும் சம அளவு பாசம் இருக்கிற பிள்ளைகளுக்கு இது போன்ற சவால்கள் அதிகமோ என்று தோன்றியது. அதுவும் அப்பா-அம்மாவின் உறவு, உள்பக்கம் சாயம்போய், வெளிப்பக்கம் அகல ஜரிகை போட்டுப் பளபளத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டுப்புடவையாகி வெகுநாட்களாகி விட்டிருந்தன. அவர்கள் இருவருக்கும் இருந்த நம்பிக்கையில் சின்னச் சின்ன விரிசல்கள் தென்படத் தொடங்கியிருந்தன. அவர்களது வார்த்தைப் பரிமாற்றங்கள் குறைந்து போய் விட்டிருந்தன. இருவருக்கும் ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருப்பது பிடிக்கத் தொடங்கி விட்டிருந்தது. ’சீ!’ என்று விட்டு விடவும் முடியாமல், ஒட்டிக்கொண்டிருக்கவும் முடியாமல், எண்ணையும் நீரும் போல ஆகிவிட்டிருந்தார்கள்.


"அப்பா, கோபமா?"


"இல்லை," என்று ரத்தினச்சுருக்கமாக பதில் அளித்து விட்டு, ரவீந்திரன் சாலையில் கவனத்தை செலுத்தினார்.


எங்கே தவறு செய்தோம் என்று அவர் யோசிக்கத் தொடங்கினார். இந்த இறுக்கம் ஏற்படுவதற்கு அவர் தான் காரணம் என்று அவருக்கே தெரியும். ஆனால், புதைகுழியில் கால் வைத்து விட்டதுபோல், அதிலிலிருந்து மீள முடியாத நிலை. இதை அவர் வெளிப்படையாகப் பேசி, தேவைப்பட்டால் ஒரு வார்த்தை மன்னிப்பும் கேட்டிருந்தால், நிலைமை சுமுகமாகியிருக்கும். என்ன செய்வது, இந்த வயதில்போய் அவருக்குள்ளே தான் ஆண், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு திடீர் வீறாப்பு!


"அப்பா! ப்ளீஸ்! கோவிச்சுக்காதீங்க," என்று மீண்டும் பேசினான் பாபு.


"என்னை டபுள் ரோட்டிலே இறக்கி விட்டிட்டு நீங்க ஜெயநகர் போங்க! திரும்பி வரும்போது எனக்கு போன் பண்ணுங்க! நான் வந்து சேர்ந்துக்கிறேன்.."


"பாபு!," ரவீந்திரன் வண்டியின் வேகத்தைக் குறைத்தவாறே, மகனைத் திரும்பி நோக்கினார்.


"நிஜமாத் தான் சொல்றேன்!" என்று நேராக சாலையில் கண்களைப் பதித்தவாறே பேசினான் பாபு. "உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே நான் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட விரும்பலே! உங்க கூட வர்றதுக்கு ஒரு பொய் சொன்னேன். வீட்டுக்குத் திரும்பிப் போய் அம்மா கிட்டேயும் பொய் சொல்லிக்கறேன்! உங்களுக்கும் சந்தோஷம், அம்மாவுக்கும் நிம்மதி! நான் உங்க கூட இருக்கிற வரைக்கும் இப்படியே மாத்தி மாத்திப் பொய் சொல்லி உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா வைச்சிட்டிருக்கேன்."


சிறிது நேரம் .சியின் குளிரையும் மீறி அந்தக் காருக்குள்ளே மௌனம் தன் வெப்பத்தைப் பரப்பிக்கொண்டிருப்பது போலிருந்தது. இவனிடம் என்ன சொல்வது என்று யோசித்து யோசித்து, சிறிது நேரம் கழித்துத் தொண்டையை செருமிக்கொண்டு ரவீந்திரன் பேச ஆரம்பித்தார்.


"பாபு, என்னோட நிலைமையை நீ புரிஞ்சிக்கணும்!"


பாபு பதிலேதும் பேசவில்லை.


"சொல்லவோ கேட்கவோ கண்ணியமா இருக்காது தான்! ஆனா, எனக்கு சில விஷயங்கள் தேவைப்படுது! அதுனாலே ஏற்பட்ட குழப்பங்கள் தான் இதெல்லாம்! இப்போ புலிவாலைப்  பிடிச்ச மாதிரி இருக்கு! என்னாலே உதறிப் போட்டுட்டு வந்திடமுடியாது."


"யாரை...?" பாபு கேட்டான். "அம்மாவையா...அவங்களையா...?"


"உங்கம்மாவை நான் எப்பவுமே உதற முடியாது," என்று தீர்மானமாகசொன்னார் ரவீந்திரன். "அப்படி நான் பண்ணினா இத்தனை பொய் சொன்னதெல்லாம் முட்டாள்தனமாயிடும். இன்னும் சொல்லப்போனா, எந்தப் பொய்யுமே உங்கம்மாவுக்காக சொன்னதில்லை..இந்த சொஸைட்டிக்காக சொன்ன பொய்கள்...!"


"பரவாயில்லேப்பா! வேறே ஏதாவது பேசுவோம்!" என்றான் பாபு. "உங்களோட தன்னிலை விளக்கமெல்லாம் வேண்டாமே!"


"நீ சொன்னா சரி," என்றார் ரவீந்திரன். "ஆனா, உன் மேலே எனக்கு இருக்கிற பாசம் மட்டும்....."


"தெரியும்," என்று இடைமறித்தான் பாபு. "அதெல்லாம் பேசவே வேண்டாம்!"


"டபுள் ரோட்டிலே இறங்கி என்ன பண்ணுவே?"


"மூடிருந்தா லால்-பாக் போவேன்! இல்லாட்டி அப்படியே ஆட்டோ பிடிச்சு எம்.ஜி.ரோடோ அல்லது மெஜஸ்டிக்கோ போவேன்."


"கையிலே பணம் வைச்சிருக்கியா...?"


"உம்..இருக்கு! ஐநூறு ரூபா வைச்சிருக்கேன்..."


"ஏதாவது சினிமா போறதுன்னா போயேன்.."


"அவ்வளவு நேரமாகுமா...?" என்று கேட்ட பாபு, உடனே உதட்டைக் கடித்துக்கொண்டான். "சாரிப்பா!"


"பரவாயில்லேடா," என்றார் ரவீந்திரன். "உனக்குத் தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே! உன் கிட்டே சொல்றதுக்கென்ன? இன்னிக்கு அவளுக்கு பொறந்தநாள்! பரிசு கொடுத்திட்டு ஒரு வாய் சாப்பிட்டிட்டு வர வேண்டியது தான்! அதிகபட்சம் ஒரு மணி நேரம். பரவாயில்லையே..?"


"தாராளமா...."


"இது உனக்கு எவ்வளவு தர்மசங்கடமாயிருக்கோ, அதே அளவு எனக்கும் இருக்கு," என்றார் ரவீந்திரன்.


"எனக்கு ஒண்ணுமில்லை," என்றான் பாபு. "கொஞ்சம் வருத்தமுண்டு. அழையாவிருந்தாளி மாதிரி நம்ம வீட்டுக்குள்ளே வந்து சில பொய்கள் நம்மைஆட்டிப்படைச்சிட்டிருக்கே! அதைத் தவிர எது சரி, எது தப்புன்னெல்லாம் நான் உங்களோட பேச விரும்பலே..."


"பாபு, நீ விரும்பினாலும் விரும்பாட்டாலும் கடைசிவரைக்கும் உன் கூடவரப்போறது பொய் தான்," என்றார் ரவீந்திரன். "ஏன், அதுக்கப்புறமும் கூட! நெருப்புன்னா வாய் வெந்திராது! நாளைக்கே நான் போயிட்டாலும் கூட, நீ எனக்காக கோதானம், பூதானமா பண்ணப்போறே? கிடையாது! அய்யருக்குப் பத்தோ இருபதோ கொடுத்து சமாளிக்கப்போறே! பொய்யை விட வலிமையானது வேறே எதுவும் கிடையாது! ஆம்னிப்ரெஸன்ட்...ஆம்னிபொட்டெண்ட்..."


பாபு பதில் கூறாமல் புன்னகைத்தான். இது பலமீனமானவர்கள் பிரயோகிக்கிற இன்னொரு ஆயுதம். ’நான் செத்து விட்டால்...,’ என்று பயமுறுத்துவது! அப்பாவுக்கும் இந்த ஆயுதம் பிடித்திருக்க வேண்டும்! அவர் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டிருக்கிற ஸ்டியரிங்கைப் போலத் தான் வாழ்க்கை, அவர் விரும்புகிற திசையில் திரும்பும் என்ற ஒரு இனம் புரியாத மமதை அவருக்கு வந்திருக்க வேண்டும். அல்லது, இப்படி சொன்னால், ’ஐயோ, இப்படியெல்லாம் பேசாதீர்கள் அப்பா,’ என்று மகன் பதறினாலும் பதறுவான் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கக்கூடும்!


பாபுக்கு அப்பாவின் சாவு பற்றிய பேச்சு எந்த விதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவருக்குள்ளே மெல்ல மெல்ல ஏற்பட்டுக்கொண்டிருக்கிற தோல்வி மனப்பான்மையின் அறிகுறியாகவே அவரது அசந்தர்ப்பமான வார்த்தைகள் தொனித்தன.


"பாபு...என்ன யோசிக்கிறே...?"


"ஒண்ணுமில்லை!"


"ஒண்ணு கேட்டாக் கோவிச்சுக்கமாட்டியே!"


"கேளுங்கப்பா..!"


"நீ சொன்னியே! உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டு அவஸ்தைப் பட விரும்பலேன்னு...அப்போ நீயே ஒத்துக்கறியா? பொய் சொன்னாத் தான் நிம்மதியா இருக்க முடியுமுன்னு...?"


மகனை மடக்கி விட்ட திருப்தியோடு புன்னகைத்தார் ரவீந்திரன். அவரது நோக்கம் புரிந்தது பாபுவுக்கு. கூடவே,அவருக்குத் தான் விவாதத்தில் வென்று விட்டோம் என்ற மகிழ்ச்சியில், வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருப்பது புரியாமல் போய் விட்டது என்பதும் புரிந்தது.


"நீங்க ஜெயிச்சிட்டீங்கப்பா!" என்று பாபு புன்முறுவலோடு கூறி விட்டு, சீட்டில் சாய்ந்து கொண்டான்.


அதன் பிறகு அவர்கள் இருவரும் எதையெதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். பணவீக்கம், பங்குச்சந்தை, இலங்கைப் பிரச்சினை, கொஞ்சம் அரசியல் - பொழுதைப் போக்க, பேசிக்கொள்ள விஷயங்களா இல்லை...?


லால்பாக் வடக்குக் கதவின் முன்னால் பாபு இறங்கிக்கொண்டான்.


"எனக்கொண்ணும் அவசரமில்லைப்பா! டேக் யுவர் டைம்! அங்கிருந்து கிளம்புறதுக்கு அரை மணி முன்னாலே எனக்கு போன் பண்ணுங்க! இங்கேயே வந்து நிக்கிறேன்.."


"நீ எங்கேயிருக்கியோ நான் வர்றேனேப்பா...?"


"வேண்டாம்! இது தான் சரி! நான் இங்கேயே வர்றேன்..."


கதவை சாத்தி விட்டு இளம்வெயிலில் டபுள் ரோட்டில் சிறிது நேரம் நடந்தான். குறிக்கோளின்றி நடந்தான். இப்படித்தான் தன் வீட்டில் அப்பாவும் அம்மாவும் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணியபோது வேடிக்கையாக இருந்தது. காற்றின் வேகத்தில் தோற்றுப்போன காய்ந்த இலைகளைப் போல! எங்கேயாவது போய் தரையில் விழுவோம் என்ற ஒரு அற்ப நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு, விழுவதற்கு எப்போதும் தயாராக இருப்பவர்களைப் போல!


இப்படித்தான் எல்லாக் கணவன்களும், எல்லா மனைவிகளும் ஒரு வயதுக்கு மேல், ஒருவரையொருவரு பொய்சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பார்களா என்று யோசித்தபோது, வயிற்றுக்குள்ளே சில்லிட்டது. நல்ல வேளை, தன் திருமணத்துக்கு இன்னும் குறைந்தது நான்கு ஆண்டுகளாவது ஆகும் என்று அவனுக்குள்ளே ஒரு ஆறுதல் ஏற்பட்டது. ஆனால், வாழ்க்கையில் பெற்றோரின் மீது தன்னையுமறியாமல் ஒரு விதமான அருவருப்பு ஏற்படத் தொடங்கியிருந்தது மட்டும் உண்மை தான்.


வயதுக்கு மீறிய, வரம்புகடந்த அப்பாவின் அந்தரங்க வாழ்க்கை; அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்க கணவனோடு மகனையே துப்பு துலக்க அனுப்புகிற ஒர் அம்மா. இருவர் மீது சரிசமமாக எரிச்சல் வந்தது. இருவரது நடவடிக்கைகளிலும் குழந்தைத்தனமே மேலோங்கியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இருவருமே குடும்பம் நடத்துக்கிற கோட்பாடை விட்டு விலகி, அவரவர் சுயநலங்களுக்காக அல்லாடிக்கொண்டிருப்பது போலிருந்தது. இரண்டு பேருக்கும் நடுவே இயல்பான ஒரு மகனாக இருப்பது மூச்சுத் திணறுவது போலிருந்தது.


பல்வேறு சிந்தனைகளுக்கு ஆட்பட்டு நடந்து கொண்டே போனவன், ரிச்மண்ட் சர்க்கிள் வரைக்கும் வந்து விட்டிருப்பதை உணர்ந்தான். அப்போது அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.


"ஹலோ அம்மா!"


"என்னடா? போய்ச் சேர்ந்திட்டீங்களா?"


"!"


"அப்பா எங்கே?"


"பக்கத்திலே தான் இருக்கார்; பேசறியா?"


"வேண்டாம்! வேண்டாம்!"


பாபு நிம்மதிப் பெருமூச்சு விடுத்தான். ’சரி கொடு,’ என்று ஒரு வேளை அம்மா சொல்லியிருந்தால்....?


"சாப்பிட்டாச்சா?"


"இல்லை! பெட்ரோல் பங்கிலே இருக்கோம்! அப்படியே மாவல்லி டிபன் ரூம் போகவேண்டியது தான்..."


"சரி, சொன்னதெல்லாம் ஞாபகத்திலே இருக்கில்லே...?"


"!"


"ஜாக்கிரதை!"


அவர்கள் பேசி முடித்தபிறகு, பாபுவுக்கு சிரிப்பு வந்தது. ஒரு பொய் மூன்று பேரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பது உறைத்தது. இனி, இப்படித் தான் இருக்கப்போகிறதா வீடு? அவ்வளவு தானா, அம்மா அப்பாவின் தாம்பத்யம்..? இனி பழைய புகைப்படங்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தானா? அவனுக்குக் குழப்பமாக இருந்தது.


ஆட்டோ பிடித்தான். எங்கேயோ இறங்கினான். எந்தக் கடைக்குள்ளோ புகுந்து எதையோ தேடி வாங்கினான். பிறகு, அங்கிருந்து கிளம்பினான். மெல்லிய தூறல் விழத் தொடங்கியிருந்தது. ஆனால், அவனுக்கு உள்ளும் புறமும் எரிந்து கொண்டிருப்பது போலிருந்தது. அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்த்துக்கொண்டான்.


அப்பா! சீக்கிரம் வாருங்கள் அப்பா! இங்கேயிருந்து கிளம்பி விடலாம்.’


ரவீந்திரனிடமிருந்து போன் வரும்வரைக்கும் நரகவேதனையாக இருந்தது. ஒருவழியாக வந்த போது...

 
"எங்கேடா இருக்கே...?"


"கெம்பேகௌடா சர்க்கிள்!"


"நான் கிளம்பறேன்!"


"சரிப்பா!" என்று போனை அணைத்தவன், மனதுக்குள்ளே கடவுளுக்கு நன்றி தெரிவித்தான். அங்கிருந்து இன்னோர் ஆட்டோ பிடித்து, மீண்டும் தான் இறங்கிய இடத்துக்கே வந்து நின்றான். சிறிது நேரத்தில் காரும் வந்தது. கதவும் திறந்தது.


"அப்பா! நான் ஓட்டட்டுமா?" பாபு கேட்டான்.


"! ஓட்டேன்!" என்றார் ரவீந்திரன்.


பாபு ஸ்டீயரிங்கை இரண்டு கைகளாலும் இறுக்கப் பிடித்துக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு முணுமுணுத்தான்.


காக்க காக்க கனகவேல் காக்க!’


"வாட் சர்ப்ப்ரைஸ்! உனக்கு எப்பலேருந்துடா கடவுள் நம்பிக்கையெல்லாம்...?" ரவீந்திரன் வியப்போடு கேட்டார்.


"கொஞ்ச நாளாத்தான்! நிறையப் பொய் சொல்றேனில்லையா? தைரியம் தேவைப்படுது," என்று அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தான் பாபு. "ஒரே ஒரு அற்ப சந்தோஷம்! அம்மாவுக்காக நான் உங்க கிட்டே பொய் சொல்லறா மாதிரி ஒரு சந்தர்ப்பம் கண்டிப்பா வராதுங்கிறது தான்...."


ரவீந்திரன் உறைந்து போய் உட்கார்ந்திருக்க, பாபு காரை விரைந்து செலுத்தத் தொடங்கினான்.





**********************

33 கருத்துகள்:

  1. கத்தி மேல் நடை. சொல்லாத விஷயங்கள் கதையின் ஹைலைட்

    பதிலளிநீக்கு
  2. கத்தி மேல் நடை. சொல்லாத விஷயங்கள் கதையின் ஹைலைட்

    பதிலளிநீக்கு
  3. சேட்டைக்காரன்க பதிவுகளை படித்தால் நரசிம்மராவ், மன்மோகன் சிங் வகையாறாக்களுக்குக் கூட சிரிப்பு வந்துவிடும்.சீரியஸ் கதைகளிலும் அசத்துவார்
    இக்கதையும் அவ்வண்ணமே. போட்டாரே ஒரு போடு. அடுத்த தடவை ரவீந்திரன் பெங்களூர் போக மாட்டார்.
    கடைசி வரிகளில் "அம்மாவுக்காக நான் உங்க கிட்டே பொய் சொல்லறா மாதிரி ஒரு சந்தர்ப்பம் கண்டிப்பா வரக் கூடாது." என்று சொல்லி இருந்தால்இன்னும் கொஞ்சம் பயந்திருப்பார் ரவீந்திரன்,
    முடிவு மட்டும் சுஜாதா ஸ்டைலில் இருந்தாலும். சுஜாதாவிடம் அதிகம் காணப்படாத நகைச்சுவை இக்கதையிலும் உள்ளது சேட்டைக்காரனுக்கே உள்ள தனிச் சிறப்பு.
    கலக்கல் சேட்டைக்காரன் சார்.
    வலைப் பதிவிலும் அவ்வப்போது எழுதுங்கள்
    அற்புதமான கதைப் பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம் சார்

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமையான கதை. அற்புதமானதோர் எழுத்து நடை.

    ஒவ்வொருவரின் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் மிகவும் ரஸித்து ருசித்துப் படிக்க முடிந்தது.

    ‘சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை ... விலையேதும் இல்லை’ என்ற பாட்டுப்போல அந்த பிறந்த நாள் கொண்டாடிய ஜெயநகர் தேவதையைப் பற்றிய செய்திகளை ஏதும் கதையில் கொண்டுவராமல், மிகவும் கவனமாக இனிமையாக எழுதியுள்ளார் நம் கதாசிரியர்.

    மிகவும் ரஸித்த வரிகள்: “அப்பா-அம்மாவின் உறவு, உள்பக்கம் சாயம்போய், வெளிப்பக்கம் அகல ஜரிகை போட்டுப் பளபளத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டுப்புடவையாகி வெகுநாட்களாகி விட்டிருந்தன.”

    கதாசிரியர் வேணு அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    இங்கு இன்று இதனை வெளியிட்டு படிக்க வாய்ப்பளித்த ‘எங்கள் ப்ளாக்’குக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. சேட்டைக்காரரின் பதிவில் நகைச் சுவை தவிர சுடும் உண்மைகளும் இருப்பது ரசிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  6. கதை அருமையாக இருந்தது. Ofcourse, வெடிச்சிரிப்பு எதிர்பார்த்தேன்.. ஆனால் கதை உறவுகளைச் சொல்லும் விதமாக இருந்தது. பெரியோர்கள் இடையே பையன் அகப்பட்டுக்கொளவதை நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். பெண்கள் மட்டும் இந்த நாட்டில் தர்மத்தைப் பேணவில்லையென்றால், திருமண பந்தம் வெகுவிரைவில் காணாமல் போய்விடும். இதைத்தான் கதையின் மெசேஜாகச் சொல்லியிருக்கிறீர்கள். "தெலுங்கு தெரியுமான்னு" - வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாருவதே உங்கள் பாணி. ரசித்தேன்.

    ’ஸ்ரேயாவுக்கு நடிப்பு வராது; சேட்டைக்காரனுக்குப் படிப்பு வராது" - இது என்ன அ'நியாயமாக இருக்கிறது. ஏதோ ஸ்ரேயாவுக்கு மட்டும் நடிப்பு வராது.. மற்றவர்களெல்லாம் நடிப்பில் பிளந்து கட்டுவதுபோல. அதுவும்தவிர, ரசிகக் குஞ்சுகள் ஏதோ அவர்கள் நடிப்பைப் பார்க்கப்போகிறார்ப்போல் தப்புக்கணக்கு போட்டுவிட்டீர்களே.. 'படிப்பு வருதோ இல்லையோ.. ஆழப்படிக்காமல், அரைப் பத்திகூட எழுத முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

    "என்னிடமிருந்து வேறு எதையும் யாரும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை" - இது செம உடான்ஸ். உங்கள் நகைச்சுவைக் கட்டுரைக்கு என்னைப்போல் பல ரசிகர்கள் உண்டு. என்ன ஒரு குறை.. ரொம்ப அதிகமா, அதுவும் இப்போதெல்லாம் எழுதமாட்டேங்கிறீங்க.. நிறைய எழுதுங்க..

    பதிலளிநீக்கு
  7. 'சேட்டைக்காரன்' நான் மிகவும் மதிக்கும் பதிவர். காமெடியாய் ஒரு முன்னுரை, ஸீரியசான ஒரு கதைக்கு!! இந்த மட்டில் பாபு கல்யாணத்தை வெறுக்காமல் இருக்கிறானே! அருமையான கதை!
    "என்னிடமிருந்து வேறு எதையும் யாரும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன்" என்ன ஒரு வில்லத்தனம்!! :-))

    பதிலளிநீக்கு
  8. அட! சேட்டைக்காரன்!!! எங்கள் இருவரின் சீனியர் எங்கள் கல்லூரியில் என்பது இத்தனை வருடங்கள் கழித்து அறிந்த விஷயம் என்றாலும் மகிழ்ந்த தருணம். அட எங்கள் சீனியர் என்று. அருமையான கதை! சுஜாதாவை வாசிக்க பயம் என்று சொன்னாலும் முடிவு அதில் கொஞ்சம் அவர் எட்டிப்பார்த்திருக்கிறாரோ?!!!!! உரையாடல்கள் அக்மார்க் சேட்டைக்காரன் பாணி!!!....

    சேட்டைக்காரன் நகைச்சுவை மன்னர். நாங்கள் வலைத்தளம் ஆரம்பித்த போது அவர் வலையில் இல்லை. ஆனாலும் அவரது பழைய பதிவுகள் வாசித்துச் சிரித்ததுண்டு

    வாழ்த்துகள் சேட்டைக்காரன்/அண்ணா, எங்கள் ப்ளாகிறகும் மிக்க நன்றி!!!

    பதிலளிநீக்கு
  9. //ஸ்ரேயாவுக்கு நடிப்பு வராது; சேட்டைக்காரனுக்குப் படிப்பு வராது// ஹஹஹஹஹ் சேட்டைக்கார அண்ணா இது உங்கள் குறும்புத்தனம்....அது சரி ஸ்ரேயாவுக்கு நடிப்பு வராது அப்படி என்றால் இப்போதிருக்கும் மற்றவர்கள் எல்லோரும் நன்றாக நடிக்கிறார்கள் என்று அர்த்தமா....

    //என்னிடமிருந்து வேறு எதையும் யாரும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை// சேட்டைக்கார வேணு அண்ணா இது உங்களுக்குக் கொஞ்சம் ஓவரா இல்லை??!!!!!ஹஹஹ

    //"மனசுலோனி மர்மமுலு தெலுசுகோ பாட்டை உங்கம்மா பாடறாளே, என்னிக்காவது தெலுங்கு தெரியுமான்னு கேட்டிருக்கியா?"// ஹஹ செம...இப்படிக் கதையில் பல ரசிக்க வைத்தன...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. யாரங்கே! அற்புதமான கதை எழுதியிருக்கும் சேட்டைக்காரனுக்கு ஆயிரம் பொற் காசுகளும் அதை வெளியிட்ட எங்கள் ப்ளாக் சிரிராமுக்கு நூறு பொற் காசுகளும் பரிசாக அளியுங்கள்!(நம் மகிழ்சியை வெளிகாட்டவும் பொய் சொல்லலாம் இல்லையா?)

    பதிலளிநீக்கு
  11. யாரங்கே! அற்புதமான கதை எழுதியிருக்கும் சேட்டைக்காரனுக்கு ஆயிரம் பொற் காசுகளும் அதை வெளியிட்ட எங்கள் ப்ளாக் சிரிராமுக்கு நூறு பொற் காசுகளும் பரிசாக அளியுங்கள்!(நம் மகிழ்சியை வெளிகாட்டவும் பொய் சொல்லலாம் இல்லையா?)

    பதிலளிநீக்கு
  12. யாரங்கே! அற்புதமான கதை எழுதியிருக்கும் சேட்டைக்காரனுக்கு ஆயிரம் பொற் காசுகளும் அதை வெளியிட்ட எங்கள் ப்ளாக் சிரிராமுக்கு நூறு பொற் காசுகளும் பரிசாக அளியுங்கள்!(நம் மகிழ்சியை வெளிகாட்டவும் பொய் சொல்லலாம் இல்லையா?)

    பதிலளிநீக்கு
  13. யாரங்கே! அற்புதமான கதை எழுதியிருக்கும் சேட்டைக்காரனுக்கு ஆயிரம் பொற் காசுகளும் அதை வெளியிட்ட எங்கள் ப்ளாக் சிரிராமுக்கு நூறு பொற் காசுகளும் பரிசாக அளியுங்கள்!(நம் மகிழ்சியை வெளிகாட்டவும் பொய் சொல்லலாம் இல்லையா?)

    பதிலளிநீக்கு
  14. நல்ல கதை. பெற்றோர்கள் உறவு விரிசல் கண்டால் குழந்தைகள் பாடு வெகு திண்டாட்டம்.

    சேட்டைக்காரன் அவர்களுக்கும், அவர் கதை வாங்கி போட்ட உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நல்ல கதை. பெற்றோர்கள் உறவு விரிசல் கண்டால் குழந்தைகள் பாடு வெகு திண்டாட்டம்.

    சேட்டைக்காரன் அவர்களுக்கும், அவர் கதை வாங்கி போட்ட உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. நல்ல கதை படைத்த சேட்டைக்காரன் அவர்களுக்கும், இங்கே எங்களுக்கு படைத்த ஶ்ரீராம் அவர்களுக்கும் முதலில் நன்றி.

    அவரின் கதையை இப்போது தான் நான் வாசித்து இருக்கிறேன்.
    பாராட்டுகள்

    தம +1

    பதிலளிநீக்கு
  17. நல்ல கதை! கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக வைப்போம் என்ற பாரதியின் கூற்றை விளக்கும் கதையாக எனக்குப் படுகிறது!

    பதிலளிநீக்கு
  18. ரசித்தேன். பாராட்டுகள். உங்களுக்கும் கதாசிரியருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. பாவம் அந்தப் பையன்.
    ஆனால் கடைசி லைன். அச்சோ. பின்னிப்புட்டான் பையன்.
    வேணு ஜி. அற்புதம். அருமை. உண்மையாவே இது போல கதை படித்ததில்லை. எத்தனை பொய்கள் உலகை ஆளுகின்றன.. என்னை மிகவும் பாதிக்கிறது இந்தக் கதை. மிக நன்டறி மா. ஸ்ரீராம் ரொம்ப நன்றி மா.

    பதிலளிநீக்கு
  20. ஒரேஒரு அற்ப ஸந்தோஷம்.அம்மாவுக்காக நான் உங்ககிட்ட பொய் சொல்ற மாதிரி ஒரு ஸந்தர்ப்பம் கண்டிப்பா வராதுங்கறதுதான். இந்த ஒரு வரியே போதும். பெண்களின் பொருமைக்கு. பெண்ணாக இருந்தால் கூடவே வருவேன் என்று அடம் பிடித்து ரகளையாக்கிவிட்டுதான் வருவாள். எவ்வளவு நாஸூக்கான கதை. ஒரு வயது வந்த பிள்ளை பொய் சொல்லி அம்மாவின் மனதை சற்று ஆறுதலுக்கு முயற்சிக்கிறானோ?இதே பெண்ணாக இருந்தால் தகப்பனும் எதுவும் சொல்ல மாட்டார். நல்ல கற்பனை. எங்கோ ஒன்று நடந்து கொண்டுதானிருக்கிறது. கதை அருமை. ஏமாளி பெண்கள்தான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. ரஸித்த வரிகள்: “அப்பா-அம்மாவின் உறவு, உள்பக்கம் சாயம்போய், வெளிப்பக்கம் அகல ஜரிகை போட்டுப் பளபளத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டுப்புடவையாகி வெகுநாட்களாகி விட்டிருந்தன.”

    பதிலளிநீக்கு
  22. விஷமக்காரக் கண்ணன் பாட்டு நினைவுக்கு வருகிறது வேணு ஜி.
    எத்தனை நகைச்சுவையான முன்னுரை.

    பதிலளிநீக்கு
  23. மிக அருமையாக உணர்வு பூர்வமாக எழுதி இருக்கிறார். எங்கே தப்பு, என்ன தப்பு என்பதே புரியாமல் பலருடைய வாழ்க்கை இப்படித் தான் நடக்கிறது. இதிலே எனக்குப் பிடித்தது
    " உங்கம்மாவை நான் எப்பவுமே உதற முடியாது," என்று தீர்மானமாகசொன்னார் ரவீந்திரன்."
    இந்த வரிகளும், தன் தாய்க்காகப் பொய் சொல்ல வேண்டி வராது என்று பாபு சொல்வதும் தான். மனைவியை இவ்வளவு நேசிக்கும் இவர் எப்படி எந்தச் சூழ்நிலையில் தடுமாறினார்?

    பதிலளிநீக்கு
  24. முன்னுரை பிடித்திருந்தது அதை விட கதை இன்னும் பிடித்திருந்தது.

    விஸ்வநாதன்

    பதிலளிநீக்கு
  25. கதையின் நடையை இரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  26. சேட்டைக்காரன் ..இன்னொரு சேட்டைக்காரனைப் பற்றி சீரியஸ் ஆக எழுதி இருப்பதைப் படித்து ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  27. அருமையான கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  28. கேட்டு வாங்கிப்போட்ட
    அற்புதமான கதை
    வெளியே உள்ளே உவமை அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  29. இது மாதிரி பொத்தி வைத்திருக்கும் ரகசியத்தை மனம் விட்டு அப்பா மகனிடம் பேசுகிற மாதிரி ஜானகிராமனும் எழுதியிருக்கிறார்; ஜெயகாந்தனும் எழுதியிருக்கிறார்.

    ஆனால் வேணுஜி வேறே மாதிரி அணுகியிருப்பது தான் அவருடைய வெற்றி.

    கதை என்னிக்குமே எனக்கு முக்கியம் கிடையாது. ஒரு கதையைப் படித்து விட்டு 'இதான் கதை'ன்னு யாரானும் சொன்னாலும் அசுவாரஸ்யம் தான். ஆனால் அந்தக் கதையை எழுத்தில் சொல்ற விதம்?..

    வேணுஜி இந்த விஷயத்தில் அசத்தியிருக்கிறார். தன் எழுத்தைத் தானே ரசித்து எழுதுகிறவர்களால் தான் இப்படியெல்லாம் எழுத முடியும். வாழ்த்துக்கள், வேணுஜி!..

    பதிலளிநீக்கு
  30. கதையும் முடிவும் மிக அருமை. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  31. கதையும் முடிவும் மிக அருமை. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  32. கிச்சனுக்கு (அழுதுகொண்டே சமைக்கப்) போவதற்கு முன், கொஞ்சம் சிரித்துவிட்டு போகலாம் என்று வாசிக்க ஆரம்பித்தேன்.... இப்பவே அழுகை வர்ற மாதிரி ஆகிடுச்சு!!

    எந்த வரியைவிட, எதைச் சொல்ல என்று தெரியாமல் எல்லாமே அருமை....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!