செவ்வாய், 10 அக்டோபர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : சரவெடி - ஏகாந்தன் - சீதை 22



     ராமனை சீதை மன்னிக்கும் கதைத்தொடரில் திரு ஏகாந்தன் அவர்களின் படைப்பு இன்று இடம் பெறுகிறது.   



============================================================= 


முன்னுரை

நான் எழுதிவைத்த சில கதைகள் ஆங்காங்கே ‘டாக்குமெண்ட்ஸ்’-ல், பென்

–ட்ரைவில் என்று வசதியாகத் தூங்குகின்றன. இது ‘எங்கள் ப்ளாக்’

கேட்டுக்கொண்டபடி ’சீதை ராமனை மன்னித்தாள் !’ என முடியும் தொடருக்கான

ஒரு சிறு முயற்சி. வாசகர்கள் எப்படி எதிர்கொள்வரோ தெரியாது..!

-ஏகாந்தன்


=========================================================

சரவெடி
ஏகாந்தன்



இரவு 9 மணிக்கு நிதானமாக வீட்டிற்குள் வந்தவனை ஏற இறங்கப் பார்த்தாள் ரம்யா.  வெறும் கை.  கோபமான கோபம் அவளுக்கு. ’எங்கே பை? ஒன்னும் வாங்கலையா?  எங்கேர்ந்து வர்றீங்க!’ பொரிந்தாள்.

‘அது வந்து…’

‘என்ன !’

’ரம்யா, நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்டீன்னா..’

’ஒன்னும் வேண்டாம். கைய அலம்பிட்டு சாப்பிட ஒக்காருங்க.

தட்டில் அவனுக்குப் பிடித்த விஷயங்கள் ஒவ்வொன்றாக இறங்கின. ஜோராகப் பண்ணியிருந்தாள்.   சாப்பிட சிரமப்பட்டான் கோவிந்த்.

‘ரம்மி .!’

‘பேசாம சாப்பிடுங்கன்னு சொல்றேன்ல!’

அவனுக்கு மோர் சாதம் போட்டுவிட்டுத் தனக்கும் தட்டைப் போட்டுக்கொண்டாள்.

அவசர அவசரமாக சாப்பிட்டுமுடித்தாள். பாத்திரங்களைக் கழுவி அடுக்கி சமையலறையை வேகமாகச் சுத்தம் செய்தாள். கடுங்கோபம் காரியங்களில் தெறித்தது.

பத்தாகப் போகிறது என்றது சுவர்க்கடிகாரம்.  சமையலறைக் காரியங்களை முடித்து வெளியே வருகையில் அவளை மீண்டும் எதிர்கொண்டான்.

‘கோபப்படாம நான் சொல்லப்போறதக் கொஞ்சம் கேட்கறயா…’

புயலாகத் திரும்பியவள் பெட்ரூமில் நுழைந்தாள். ’படார்’ என அலறியது கதவு.

அவன் தலையைக் குலுக்கிக்கொண்டான். மெல்ல இன்னொரு பெட்ரூமிற்குப்போய் படுக்கையில் விழுந்தான்.

அவன் அப்படி செய்திருக்கக்கூடாதுதான். அன்று அவளது பிறந்தநாள். போனவாரம் ஃபீனிக்ஸ் மாலில் இருவரும் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு ஷோரூமில் அருமையான டிசைனர் சூரிதாரைப் பார்த்தாள்.  நீலநிறத்தில் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் அவளைக் கவர்ந்திழுத்தது. உள்ளே ஒளிந்திருந்த குட்டி லேபிள் 5450ரூ. என்றது.  தொட்டுப் பார்த்து ’அழகாயிருக்குல்ல!’ என்றாள் ரம்யா கண்கள் பளபளக்க.

’ப்ரமாதமா பண்ணியிருக்கான். ராஜஸ்தான் வொர்க் தெரியறது!’ என்றான் கோவிந்த். ‘அடுத்த வாரம் என் பர்த்டேக்கு வாங்கிடுறீங்களா?’ என்று அவள் கேட்டதற்கு ‘ஆல்ரைட்!’ என்று சிக்னல் கொடுத்திருந்தான் அவன். இன்று மாலை அவன் மறக்கவில்லை. ஆனால் நடந்தது …

கடந்த மார்ச் ஒண்ணாந்தேதி அவனது பிறந்த நாள்  வழக்கம்போல் அவனது நினைவிலில்லை. அன்று மாலை 7 மணிக்கு அவன் வீடுதிரும்பி கைகால் அலம்பிவிட்டு, ஃபேனைப்போட்டுக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தபோது ரம்யா பளிச்சென்று உடுத்தி ப்ரகாசமான சிரிப்புடன் நெருங்கினாள். கையில் சின்ன தட்டில் கொஞ்சம் ஸ்வீட், மிக்சர், ஆவி பறக்கும் காஃபி. ’என்னது?’ என்று அவன் குழம்புகையில் ’வாயத் திறங்க !’ என்று அவன் திறப்பதற்குமுன் ஸ்வீட்டைத் திணித்தாள். ‘ஹாப்பி பர்த்டே!’ என்று சிரித்தவாறே இடுப்பைக் கிள்ளினாள்! 


‘ஏய்!  வலிக்கறது..’ என்று அவன் நெளிய உள்ளே சென்று ஒரு பேக்கட்டை எடுத்துவந்து கொடுத்தாள்.  திறந்தவன் உள்ளே நீலநிறப் புள்ளிகளுடன் லைட்ப்ளூவில் பீட்டர் இங்க்லேண்ட் மின்னுவதைப் பார்த்தான். ரூ.1599 -  மிரட்டியது ஸ்டிக்கர். ‘இவ்வளவு எக்ஸ்பென்சிவா ஷர்ட்லாம் எதுக்கு? டீ-ஷர்ட் எடுத்திருக்கலாமில்ல? ஏது பணம்?’ கேட்டான். 

’இதுக்குல்லாம் தனியா எடுத்துவச்சிருப்பேன்னு தெரியுமா ல்லியா..அப்பறம் என்ன கேள்வி!’

மனைவியின் மயக்கும் புன்னகை மனதில் ஓடியது.  சே! இவளோட பிறந்தநாள்ல ஒன்னும் வாங்காம பெரிய தப்பு பண்ணிட்டேனே.. ஏற்கனவே மகா முன்கோபியாச்சே இவள்..  குழப்பத்தோடு புரண்டவன் சோர்ந்திருந்ததால் தூங்கிப்போனான்.

காலையிலும் நிலைமையில் எந்த முன்னேற்றமுமில்லை.  காஃபி போட்டு அவன் பக்கத்தில் வைத்தாள்.  வாசலில் கிடந்த ஹிண்டுவை தூக்கிவந்து அவனுக்கருகில் ஸ்டூலில் போட்டாள்.  போய்விட்டாள் பேரரசி!  அவன் வாயைத் திறக்கப்போய் பட்டாசு வெடித்துவிட்டால்?  சாத்தியக்கூறுகள் இன்னும் இருந்ததால் அப்படி ஏதும் முயற்சிக்காமல், பேப்பரை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். காஃபியை மெல்ல உறிஞ்சினான்.  காலை காஃபியின் மணத்தில், ருசியில் எந்தக் குறையுமில்லை.

அவள் கோபம் அதிகமாக ஆக, காரியங்கள் கனவேகத்தில் நடக்குமே தவிர, கிட்ச்சனில் இருந்து வெளிவரும் ப்ராடக்ட்டில் குறை காணமுடியாது. ரம்யாவின் திறமை, சிறப்புக் குணம் இது. அவன் முகத்தில் லேசான முறுவல். கூடவே, தேவியின் கோபத்தைத் தணிக்காமல் சனி, ஞாயிறு எப்படிக் கழியுமோ என்கிற கவலையும் அவனுள்ளே விஸ்வரூபமெடுத்தது.

நேற்று அந்த நிகழ்ச்சியில் அவன் தன் வெகுநாளைய நண்பன் நரசிம்மனைக் காண்போம் என நினைத்திருக்க வாய்ப்பில்லை.  உண்மையில் இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்றே அவனுக்குத் தெரியாது.  எல்லா காரியங்களையும் நண்பர்களோடு ஓடி ஆடி முடித்தபின் மேடைக்கு வந்தால், சீனியர் மேனேஜருக்குப் பக்கத்தில் இவன் உட்கார்ந்திருக்கிறான்.  மீசையோடு குறுந்தாடிவேறு.  அடையாளம் காண சிலகணங்கள் பிடித்தது. இருவருக்கும் ஒருவரைஒருவர் அங்கே கண்டதில் சந்தோஷ வியப்பு. 

’நர்சிம்! நீ எங்கடா இங்க ?’ என்று மெதுவாக ஆரம்பித்த கோவிந்திடம் குனிந்து ’ஒங்க மேனேஜர் என்னோட சொந்த மாமாடா!’ என்று சொல்லி ஆச்சரிய லெவலைக் கூட்டிவைத்தான் சினேகிதன்.  மேற்கொண்டு குசலம் விஜாரிக்க சந்தர்ப்பமில்லை. கோவிந்த் தன் வீட்டு முகவரியைக் கொடுக்க ’நாளை சனிக்கிழமைதானே, சாயந்திரமா உன் வீட்டுக்கு வர்றேன்’ என்று சொல்லிப் போனான் அவன்.

நரசிம்மனின் ஞாபகம் வந்ததுதான் தாமதம்..  ஐயய்யோ, சாயந்திரம் இவன்வேற வந்துடுவானே.  ரம்மியோடு சமாதான ஒப்பந்தத்திற்கான வழி ஏதும் இன்னும் தட்டுப்படலியே .. தவித்தான் கோவிந்த். கிட்சனுக்கும் பாத்ரூமுக்குமாக அவள் பாய்ந்துகொண்டிருக்க, மூணு வயசுக் குழந்தைபோல் முன்னாலும் பின்னாலும் போய் நின்றான்.  மெல்லப் பேசப் பார்த்தான்: ரம்யா.. ரம்மி.. ரம்.. வளைந்தான்..நெளிந்தான்.  ’உம்’ என்ற சத்தம் கூட அவளிடமிருந்து இல்லை.  

’கல்நெஞ்சக் கள்ளி!’ என்று தான் மனதுள் நினைத்தது எங்கே அவளுக்குக் காதில் விழுந்திருக்குமோ என்று பதற்றத்துடன் கிட்ச்சனுக்குள் எட்டிப்பார்த்துவிட்டுத் தன் ரூமுக்குத் திரும்பினான்.  ஹிண்டுவை எடுத்துவைத்துக்கொண்டு மனப்பாடம் செய்யும் சிறுவனைப்போல் சீரியஸானான் கோவிந்த்.

சற்றுநேரத்தில் ரம்யா பூஜை செய்யும் சத்தம். சில ஸ்லோகங்களை ராகமாக எடுத்துவிடுவாள். பாடும்போதுதான் அவள் குரல் எப்படிக் குழைகிறது! இதுதான் சரியான கட்டம்.  பூஜை முடித்தபின் இதமான மூடில் இருப்பாள். நண்பனின் வருகைபற்றி சொல்லிவிடுவோம்.  பூஜை முடித்துத் தட்டில் ரெண்டு குட்டி வாழைப்பழப் ப்ரசாதத்தோடு தன் ரூமுக்கு அவள் வருவதைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்தான். நீட்டிய தட்டிலிருந்து பவ்யமாக ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு ‘ரம்யா! எனக்கு பழய நண்பன் ஒருத்தன்னு சொல்லியிருக்கேன்ல.. ’எச்சிலை விழுங்கினான். 

அவனைப் பாராமலே ‘அதுக்கென்ன இப்போ!’ என்று உறுமித் திரும்பியவளை விடாது தொடர்ந்தான்.

குரலை இன்னும் தாழ்த்திக்கொண்டு ‘அவன் சாயந்திரம் வர்ரேன்னுருக்கான். நீ அவனுக்காக ஒன்னும் செய்யவேண்டாம்..கொஞ்சம் காஃபி மட்டும் போட்டுண்டுவந்து எங்களுக்கு முன்னால் ரெண்டு நிமிஷம் ஒக்காந்துட்டுப் போயிட்டீன்னா போதும்..ப்ளீஸ்..! ‘  கெஞ்சினான்.  அவள் ஒன்றும் சொல்லாது சமையலறைக்குள் நுழைந்தாள். இலுப்பச்சட்டியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு கத்திரிக்காயைப் புரட்டிவிட்டாள். உள்ளுக்குள் புரண்டான் கோவிந்த்.

‘ஒனக்கு ஏதும் சிரமமில்லாம, அவன் போனப்பறம் நானே கப்-சாஸரையெல்லாம் அலம்பிவச்சிடறேன்..’  சட்டென அவனை நோக்கித் திரும்பியவளின் பார்வையில் உஷ்ணம் தகித்தது. ‘இதுக்கு முன்னால ஒங்கள கிட்ச்சனுக்குள்ளே விட்டிருக்கேனா!’ அவளது கேள்வி ஜ்வாலையாகத் தீண்ட, 

’இல்லியே..  இல்லியே..’ எனத் தடுமாறினான் கோவிந்த்.  ‘அப்பறம் எதுக்கு இந்தக் கப் அலம்பற சேவையெல்லாம்?’ சீறியவளைப் பார்த்து ‘..இல்ல..சரி!’ என்று குழறிப் பின்வாங்கி ரூமுக்கு வந்தவன் ‘அப்பாடா..இது போதும்டா சாமி!’ என்று நினைத்துக்கொண்டான்.

மதியச் சாப்பாடு சத்தமின்றி முடிந்தபின் தன் அறைக்குள்போய் படுக்கையில் சாய்ந்தாள் ரம்யா.  அவள் கையிலிருந்த ஆனந்தவிகடன். ’கார்த்தி முழுமையான நடிகர்!’ என்று கண்டுபிடித்திருந்தது. ’முழுமையான நடிகனா!’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள் ; படிக்க ஆரம்பித்தாள்.

கோவிந்துக்கு ஹிண்டு போரடித்தது. தூக்கிப்போட்டான் மூலையில். நேற்றுத் திடீரென தரிசனம் தந்த நர்சிம் மனதில் மீண்டும் வந்தான். தாடியும் மீசையுமாய் ஆள் ரொம்பத்தான் மாறிவிட்டான்.  பெங்களூரில் காரியமாக வந்திருக்கிறேன் என்றானே. வரட்டும்.  பேச நிறைய இருக்கிறது.

கொஞ்ச நேரம் படுத்து அசந்தவனை புல்லட் ஒன்று கிடுகிடுத்து எழுந்து உட்காரவைத்தது. ஜன்னல் திரையை ஒதுக்கிப் பார்த்தான். வீட்டு நம்பரை சோதித்தவாறே உள்ளே வந்துகொண்டிருந்தான் நர்சிம். டீ-ஷர்ட்டிற்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு வெளியில் வந்த கோவிந்த் ‘வாடா ! எங்கே இப்படி பெங்களூர்ல திடீர்னு தரிசனம்!’ என்றவாறு உள்ளே அழைத்துவந்தான். 

சத்தம் கேட்டு எழுந்த ரம்யா, கண்ணாடி முன் நின்று தலையை வேகமாக சரிசெய்துகொண்டு, ஹாலுக்கு வந்தாள். அதற்குள் சோஃபாவில் அமர்ந்துவிட்ட நர்சிமுக்குத் தன் மனைவியை அறிமுகம் செய்தான் கோவிந்த். 

‘ இது ரம்யாடா! ரம்யா..நான் சொல்வேனே என்னுடைய காலேஜ்மேட் நண்பன்னு, நர்சிம்!; என்று நண்பனைக் காட்டினான். ’ஹாய்!’ என்றாள் மலர்ச்சியுடன் ரம்யா. கிட்ச்சனுக்குள் புகுந்து ட்ரே- தண்ணீர் டம்ளர்களுடன் திரும்பி அவர்களுக்குக் கொடுத்தாள்.  சோஃபாவில் தள்ளி உட்கார்ந்துகொண்டாள். .

’ஏண்டா இப்பிடி தாடி மீசையோடக் கெளம்பிட்டே! நேத்திக்கு நிகழ்ச்சில ஒன்னயப் பாத்தவுடன் முதல்ல அடையாளமே தெரியலே’ என்று ஆரம்பித்தான் கோவிந்த்.

‘சும்மாதாண்டா.. அறிவுதான் வளரமாட்டேங்குது. தாடியயாவது வளத்துப் பாப்போமேன்னுதான்…!’ சிரித்தான்.  ‘சாரி! ஒங்க கல்யாணத்துக்கு நான் வரமுடியல.  அப்போ நேப்பாளில் ஒரு ப்ராஜெக்ட்டில் இருந்தேன்’ என்று குறிப்பாக ரம்யாவைப் பார்த்துச் சொன்னான் நர்சிம்.

’இப்போ?’ கேட்டான் கோவிந்த்.

’டெம்ப்ரரலி ப்ளேஸ்டு இன் ஹைதராபாத்!  நாளை மற்றுமொரு நாளே!’ என்று கடகடவென சிரித்தான்.

’இலக்கியம் ஒன்ன கெட்டியாப் புடிச்சிண்டிருக்குன்னு தோணுது!’- கோவிந்த். ’ட்ராவலின்போது ஜி.நாகராஜன், ஆதவன், மௌனின்னு தூக்கிட்டுத்தான் சுத்தறேன்’..என்றான் நர்சிம்.

’ஒய்ஃப் ஹைதராபாதிலா?’ -கேட்டாள் ரம்யா

’இல்லாத ஒய்ஃபை எங்கேன்னு சொல்றது!’ என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அவள்.

‘எப்பதாண்டா கல்யாணம் பண்ணிக்கப்போறே?’ என்றான் கோவிந்த்

’அம்பிகாவுக்கு மொதல்ல ஆகட்டும்டா’ என்றான் நர்சிம்

’சிஸ்டரா?’ கேட்ட ரம்யாவுக்கு  ‘ரெண்டு வயசு சின்னவ. இருபத்து அஞ்சு முடிஞ்சு இருபத்தாறு நடக்குது. சட்டுன்னு முடிச்சிடனும்னு பாக்கறோம். அவ தட்டிக்கழிச்சுகிட்டே போறா!’ என்று பதில் சொன்னான் நர்சிம்.

‘தோ வர்ரேன்..!’ என்று எழுந்த ரம்யா கிட்ச்சனுக்குள் புகுந்தாள். இருபது நிமிஷத்தில் கையில் ஒரு ப்ளேட், காஃபி கப்புகளுடன் ஹாலில் ப்ரவேசித்தாள்.

அவளது கையில் இருந்த சங்கதிகளை நோட்டம்விட்ட கோவிந்த் ப்ரகாசமானான்.

ரம்யான்னா ரம்யாதான் என்று ஸ்லாகித்துக்கொண்டான் மனதுக்குள்.

ப்ளேட்டில் வைத்து இருவருக்கும் கொடுத்தாள். வாங்கிக்கொண்ட நர்சிம்,

‘என்னது! ஏன் இத்தன சிரமம்?  லஞ்ச்சே லேட்டாத்தான் சாப்ட்டேன்..’ என்றான் சூடான குனுக்கை வாயில் போட்டுக்கொண்டே.

’கெட்ச்சப் வேணுமா?’ என்று தந்தவளிடம்  ‘குனுக்கு ப்ரமாதம்! தொட்டுக்கல்லாம் ஒன்னும் தேவயில்ல இதுக்கு.  இதயெல்லாம் பாத்தே வருஷங்கள் ஆயிடுச்சு.  அமிர்தம்!’ என்று இன்னொன்றை உள்ளே தள்ளினான். கோவிந்தும் சாப்பிட்டுப் பார்த்து ருசி ப்ரமாதமாக இருந்ததில் திருப்தி அடைந்தான்.

’காஃபி ஆறிடப்போகுது!’ என்றாள் ரம்யா.

காஃபி கப்பை எடுத்து லேசாக உறிஞ்சிய நர்சிம் ரம்யாவைப் பார்த்து ‘அடடா!’ என்றான்.  கோவிந்திடம் தொடர்ந்தான்:

‘ நேத்திக்கு நானும் ஒன்னய அங்க எதிர்பாக்கல. நீ பெங்களூர்ல இருக்கேன்னுதான் தெரியும் ;  எங்கேன்னு தெரியாது. மாமாவ சந்திக்கணும்னு ஃபோன் செய்தப்போ கம்பெனில ஒரு சின்ன ஃபங்க்‌ஷன். அங்கே இருப்பேன்.  நீயும் வந்துடு. அங்கேர்ந்து ஏர்ப்போர்ட் போயிடுவேன். நேரமில்லன்னார். அதான் வந்தேன்’ என்றான்.

என்ன ஃபங்க்‌ஷன்? ஒன்னும் சொல்லலியே இவர் என்று யோசித்தாள் ரம்யா.  தான் அவனை வாயத் திறக்கவேவிடலையே என்று ஞாபகம் வர, தன்மீதே கோபத்தைத் திருப்பினாள்!  நண்பர்களின் சம்பாஷணையில் அவள் கவனம் சென்றது.

‘நேத்திக்குப்பூரா பெண்ட் எடுத்துடுத்துடா வேல. சாயந்திரம் மேனேஜர் ஒரு சின்ன ஃபங்க்‌ஷனா வச்சு பணத்த அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்துடுவோம்னார். ஓடி ஆடி கடைசிக் கலெக்‌ஷன் பண்ற பொறுப்பயும் என் தலைல போட்டுட்டார்!’ என்றான் கோவிந்த்.

’சோகக் கதய கேட்டவுடனே எனக்கும் கொடுக்கணும்னு தோணித்து. ரெண்டாயிரம்  வெட்டினேன். அதுசரி, அம்பதாயிரம் எப்படிக் கொடுத்தீங்க? கலெக்‌ஷனே 44500 தானேடா?’ – நர்சிம்.

திருதிருவென விழித்தான் கோவிந்த்.  கடைசித் துளி காஃபியை உறிஞ்சிக் கப்பை வைத்தான். வேறவழியில்லை. சொல்லிடவேண்டியதுதான். ‘மீதிய நாந்தாண்டா போட்டேன்!’

கேட்டுக்கொண்டிருந்த ரம்யாவுக்குப் புரிய ஆரம்பித்தது.

யார்டா அந்த ராம்சிங்?’ கேட்டான் நர்சிம்.

’கம்பெனில ஏழுவருஷமா செக்யூரிட்டி வேல பாத்தவரு. ரெஸ்ட் டயத்திலயும்கூட இன்னும் எத்தனயோ வேல.  எந்தக் காரியம் சொன்னாலும் மாட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னதில்ல..  எனக்கே எத்தன தடவை டீ போட்டுக்கொடுத்திருப்பாரு..  அமைதியான ஆளு. அம்பது வயசிலே போயிட்டார் மனுஷன். ஹார்ட் அட்டாக்.  ஏழை நேப்பாளிக் குடும்பம். மனைவி வீடுவீடாப்போய்ப் பாத்திரம் தேக்கறா.  பணக்கஷ்டம், வாடகை பாக்கி இப்படி ப்ரச்சினைகள். பையன் ப்ளஸ் டூ எழுதப்போறான். எப்படியாவது ஒரு பெரிய தொகையா சேத்து அவங்க கையில கொடுத்துடம்னு ஒருவாரமா முயற்சி செஞ்சேன். அப்பாவோட வேலயக் கொடுக்கமுடியலைன்னாலும், ஒரு ஆஃபீஸ் பாயாவாவது பையன வேலைல அமர்த்தி, ஒரு சம்பளத்தைப் போட்டுக்கொடுத்து, நிராதரவான குடும்பத்தக் காப்பாத்திரணும்னு சீனியர் மேனேஜர்கிட்ட கெஞ்சியிருக்கேன்.  ஆகட்டும்னுருக்கார்.  அனேகமா அடுத்த மாதம் அவன் சேர்ந்துடுவான்.’

’நல்ல மனசுடா ஒனக்கு. உன் சக்திக்கு மீறி செஞ்சுட்டே நீ ஒரு ரியல் ஹீரோடா!’ என்றான் நர்சிம்.

’ஏய்! அப்படில்லாம் ஒன்னும் சொல்லாதே…’  என்றான் கோவிந்த் பலஹீனமாக.  ரம்யா என்ன நினைப்பாளோ..

தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்த ரம்யா,  தட்டு, டம்ளர், கப்-சாஸர்களை எடுத்துப்போகிற சாக்கில் அங்கிருந்து அகன்றாள்.  கிட்ச்சனுக்குள் நுழைந்தவுடன் மறைவாக நின்று கண்ணைத் துடைத்துக்கொண்டாள். தன் புருஷனை தூரத்திலிருந்து மெல்ல அளவிட்ட அவளது கண்கள் ஒரு கணம் பெருமையில் பளபளத்தன.

சில நிமிடங்களில் புறப்பட்டான் நர்சிம்.  ‘தேங்க்ஸ். போய்ட்டு வர்ரேம்மா!’ என்றான் ரம்யாவைப் பார்த்து.. ’டேய், கிளம்புறேண்டா!’ என்று நகர்ந்தான்.

’அடுத்த விசிட் எப்போடா ?’ – கோவிந்த்.

’நெக்ஸ்ட் மன்த் வருவேன். இனி அடிக்கடி சந்திப்போம். நீ உன் மிசஸ்ஸைக் கூட்டிண்டு வாடா ஹைதராபாதுக்கு’ என்று அழைத்துவிட்டுப் போய்விட்டான் அவனது சினேகிதன்.

அவன் போனதும் மெல்ல ஹாலுக்குத் திரும்பிய கோவிந்த் ரம்யாவைப் பார்த்து ‘தேங்க்ஸ் ரம்மி!’ என்றான் மெதுவாக. அவள் அமைதியாக கிட்ச்சனுக்குள்போய் கப், டம்ளர் என ஒவ்வொன்றாய் அலம்ப ஆரம்பித்தாள். கோவிந்த் தன் அறைக்குத் திரும்பி, படுக்கையில் விழுந்தான். அவளுக்குப் புரிந்திருக்கும். என்ன நினைக்கிறாளோ?  இருந்தாலும் அவளுக்கு ஏதாவது வாங்காமல் நேற்று நான் வீடு திரும்பியிருக்கக்கூடாது …

கொஞ்சம் அசந்திருப்பான்.  தலையில் எதையோ குறுகுறுப்பதாக உணர்ந்தான்.  விழித்தவனின் கண்களில் ரம்யா.  அவள்தான் அவன் தலையை மெல்லக் கோதிவிட்டுக்கொண்டிருந்தாள்.

‘சாரி, நேத்திக்கு .. நான் ஒனக்கு..’  என்று தடுமாறியவனின் வாயை மெதுவாக விரலினால் அழுத்தினாள்.

’சரியான பிறந்தநாள் பரிசைத்தான் எனக்கு நீங்க கொடுத்திருக்கீங்க.  நான் ஒரு சராசரி.. ஒங்களப் புரிஞ்சுக்கல..!’  என்று தழதழத்தாள் ரம்யா.  

’என்ன சொல்றா இவ..’ என்று ஆச்சரியமாகி எழுந்த கோவிந்த், தாழ்ந்திருந்த அவள் முகத்தை மெல்லத் தாங்கி உயர்த்தினான்.  அவள் முகத்தில் அப்படி ஒரு கனிவு. அவனது மனம் லேசானது. அவளது தலையை வருடிவிட்டான். அழகிய நயனங்களை சந்தித்தவன் புரிந்துகொண்டான்: 


ஓ..! இனி கவலையில்லை. இந்த சீதை தன் ராமனை மன்னித்துவிட்டாள் .



தமிழ்மணத்தில் வாக்களிக்க....

79 கருத்துகள்:

  1. கவிதை போன்ற கதை..
    பூவின் மெல்லிதழ் போன்ற இனிய உணர்வுகள்..

    இனிய காலைப் பொழுது மேலும் இனிமையாயிற்று..

    பதிலளிநீக்கு
  2. அருமை இப்படிக் கணவனை மன்னிக்காமல் இருந்தால் இவளை மன்னிக்க முடியாதுதான்.

    வாழ்த்துகள் நண்பர் திரு. ஏகாந்தன்

    பதிலளிநீக்கு
  3. அருமை, இனிமை, நல்ல உணர்வு பூர்வமான கதை. ரம்யாவின் பாத்திரப் படைப்பு என்னை நானே பார்த்துக்கறாப்போல் இருந்தது! எனக்கும் இப்படித் தான் மனதில் என்ன உணர்வுகள் மேலோங்கினாலும் அப்போ வீட்டு வேலைகளிலோ அல்லது மற்ற வேலைகளிலோ தொய்வு ஏற்படாது. இன்னும் வேகமாகச் செய்து முடிப்பேன். ஆனால் பேச்சு இருக்காது! :)

    பதிலளிநீக்கு
  4. //வீட்டு வேலைகளிலோ அல்லது மற்ற வேலைகளிலோ தொய்வு ஏற்படாது. இன்னும் வேகமாகச் செய்து முடிப்பேன்//

    கீதா அக்கா... நீங்கள் ஜப்பானில் பொறந்திருக்க வேண்டியவர்!

    No grrrrrrrr please...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க ஜப்பானில் பிறந்திருந்தால் படைப்புகள் எல்லாம் அந்த மொழியில் அல்லவா வெளிவரும்!..

      நமக்குத் தான் ஜப்பானிய மொழி தெரியாதே..

      நீக்கு
  5. மிக அருமை ஏகாந்தன். இந்த மாதிரி அழகான கதை படித்து நாட்களாகிறது.
    கடைசியில் புரிதல் வந்ததே இன்பம்.
    அருமையான கண்வன். கொஞ்சும் இல்லறம். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  6. @ஶ்ரீராம், நறநறநறநற நறநறநறநற க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தானே கூடாது! :))))))

    பதிலளிநீக்கு
  7. கதை ஆரம்பத்தில் கோவிந்த் ரம்யாவை ரம்மி என்று அழைத்ததை, தவறாகப் புரிந்துகொண்டேன். மனைவியின் பிறந்த நாளை மறந்து, 'ரம்மி' ஆடி, பணத்தை இழந்து வந்துவிட்டார் என்று நினைத்தேன். 'ரம்' என்று கூப்பிட்டிருந்தால் அதுவும் தவறாக தோன்றியிருக்கும் !

    பதிலளிநீக்கு
  8. இயல்பான நடையில் அருமையான கதை!! இந்த சீதை ராமனை மன்னித்த கதை ரொம்பவும் பிடித்திருந்தது!!

    பதிலளிநீக்கு
  9. துளசி: ஏகாந்தன் சார்! அடி பின்னிட்டீங்க! அருமையான கதை! ரொம்ப ரொம்ப ரசித்து வாசித்தேன்!! உங்கள் எழுத்து நடையும் அருமை! பல ஆண்களுக்கும் இப்படி அனுபவங்கள் இருந்திருக்குமோ என்றும் நினைத்துக் கொண்டேன்..நல்ல காலம் நான் ஆரம்ப நாட்களில் மறந்ததே இல்லை....ஹாஹாஹாஹா...தப்பித்தேன்..அருமையான கதைக்குப் பாராட்டுகள் சார்!

    கீதா: வாவ்! அடி பின்னிட்டீங்க சகோ!! செம செம!!! ஒவ்வொரு வரியையும் ரசித்து ரசித்து வாசித்தேன். இயல்பான நடை....அதுவும் காட்சிகள் மனதில் விரிய விரிய....காரணத்தை எக்ஸாட்டாக யூகிக்க முடியலைனாலும்....ஓரளவு...ஏதோ ஒரு நல்ல விஷயமாக இருக்கும் அதனால் ரம்மி மன்னிப்பாளோ என்று கொஞ்சம் யூகிக்க முடிந்தது...மிக மிக நல்ல முடிவு...கதையிலிருந்து மனம் அகலவே இல்லை....அத்தனை இயல்பான நடை வாசிப்பவர்களையும் நெருங்க வைக்கும் நடை....மிகவும் பிடித்தது ...வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  10. நான் எழுதிவைத்த சில கதைகள் ஆங்காங்கே ‘டாக்குமெண்ட்ஸ்’-ல், பென்

    –ட்ரைவில் என்று வசதியாகத் தூங்குகின்றன. //

    ஆஹா கை கொடுங்க ஏகாந்தன் சகோ!! எனக்கும் இதே கதைதான்....நிறைய தூங்குகின்றன...அதுவும் சில பாதியில் அந்தரத்தில் தொங்குகின்றன. ஒரு சில நான் என்ன எழுத நினைத்தேன் என்ற குறிப்புகளுடன். ஒரு சில அதுவும் இல்லாமல் எனவே நான் அப்போது என்ன நினைத்து தொடங்கினேன்...என்ன முடிவு நினைத்திருந்தேன் என்று தெரியாமல் இப்போது புதிதாக யோசிக்கும் நிலையில்....ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ரம்மியின் குணம் கொஞ்சம் ஒரு விஷயத்தில் பிரதிபலித்தது. எனக்கே பர்த் டே எல்லாம் நினைவு இருக்காது...நினைவு தெரிந்த நாளிலிருந்து கொண்டாடிய நினைவும் இல்லை. எனவே எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாததால் இம்மாதிரி கோபங்கள் வந்ததில்லை. ஆனால், மனதுள் வீட்டில் வேறு ஏதேனிற்கும் கொஞ்சம் நியாயமான வருத்தம் இருந்தால்....வீட்டில் எதிர்த்துப் பேசியதே இல்லை...என் எண்ணங்களையும் சொல்லியதில்லை. . (கோபம் வந்ததில்லை. இப்போது சமீபத்தில் வருகிறது..ஹிஹிஹிஹி...) ஆனால் மனதை டைவேர்ட் செய்ய வேண்டுமே....அதனால் வீட்டு வேலைகளை ஃபாஸ்டாக முடிப்பேன் மட்டுமல்ல....அதிகப்படியாகவும் ஏதேனும் இழுத்துவிட்டுக் கொண்டு செய்வேன்...க்ளீனிங்க் அது இது என்று...ஹாஹாஹா..அதெல்லாம் வலைப்பக்கம் வருவதற்கு முன்.....ஆனால் இப்போது சமீப காலத்தில் அதிலும் மாற்றம் வந்துள்ளது.....வலைப்பக்கம் உட்கார்ந்து விடுகிறேன்...ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ரம்மி மற்றும் கோவிந் ஸ்வீட் கப்பிள்!!! பல வரிகளில் அது பளிச்! ரொம்ப அழகா அதைச் சொல்லியிருக்கீங்க ஏகாந்தன் சகோ...

    //இலுப்பச்சட்டியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு கத்திரிக்காயைப் புரட்டிவிட்டாள். உள்ளுக்குள் புரண்டான் கோவிந்த்.// ஹாஹாஹாஹா இந்த வரி செம!!! ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  13. //கதை ஆரம்பத்தில் கோவிந்த் ரம்யாவை ரம்மி என்று அழைத்ததை, தவறாகப் புரிந்துகொண்டேன். மனைவியின் பிறந்த நாளை மறந்து, 'ரம்மி' ஆடி, பணத்தை இழந்து வந்துவிட்டார் என்று நினைத்தேன். 'ரம்' என்று கூப்பிட்டிருந்தால் அதுவும் தவறாக தோன்றியிருக்கும் !//

    ஹாஹாஹாஹாஹா...ஹையோ சிரிச்சு முடிலை கௌதம் அண்ணா...

    கௌதம் அண்ணா இப்ப புரியுது நீங்களும் அண்ணியின் பிறந்தநாளை மறந்துட்டு இப்படி ஏதாவது வார்த்தை ஜாலம் செய்து வழிந்து ஹிஹிஹிஹி சொல்லி சமாளிச்சீங்களோ?!!!!!...அதிரா, ஏஞ்சல் இந்த கௌதம் அண்ணாவை என்ன பண்ணலாம்!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  14. //வீட்டு வேலைகளிலோ அல்லது மற்ற வேலைகளிலோ தொய்வு ஏற்படாது. இன்னும் வேகமாகச் செய்து முடிப்பேன்.ஆனால் பேச்சு இருக்காது! //

    அட !! கீதாக்கா ஹைஃபைவ்!!!! மீ டூ!!! ஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அருமையான கதை பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  16. அன்யோன்ய தம்பதிகள். கண்முன் காட்சி தருகிரார்கள். இப்படிதான் தர்க்கங்களுடன்,ஊடலும்,கூடலுமாக எதிரே நிற்பதுபோலத் தோன்றுகிறது. தத்ரூபம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. இயல்பான சம்பவங்கள் , சரளமான நடை, நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  18. ///சரவெடி ஏகாந்தன்////
    ஹையோ இது எப்போ தொடக்கம் சொல்லவே இல்லை:)...
    சரவெடியாக மகுடமும் கிடைச்சிருக்கு வாழ்த்துக்கள்... எங்கள் கொம்பியூட்டரில் ஏதோ எரர் அதனால லிங் இல்லாதோருக்கு வோட் பண்ண முடியாமைக்கு வருந்துகிறேன்....

    எதுக்கு பெயர் மாறியிருக்கு எனத்தானே எண்ணுறீங்க.... வர வர வலையுலகில் மைனஸ் வோட் ... வைரஸ் போல பரவுது... அடுத்தது அதிராவுக்குப் போட்டிட்டாலும் எனும் பயத்தில பெயரை மாத்திட்டேன்ன்ன்ன்... மீ ஒரு அப்பாவீஈஈ:)

    இந்த மைனஸ் வோட் போடுவதை விட்டுப்போட்டு தமிழ்மணத்தையே தூக்கிடலாமே... எய்தவர் இருக்க குட்டிக் குட்டி அம்புகளை நோகலாமோ:).. அப்படி ஒன்று இருப்பதனால்தானே இவ்ளோ பிரச்சனை... ஆரம்ப காலம் மகிழ்ச்சியாகவே இருந்தோம்... என்னைப்போல நீதியை நியாயத்தை எடுத்துச் சொல்லும் தெகிறியம் இங்கின ஆருக்குமே இல்லை... ஹையோ மீ இப்போ அண்ட த பெட்:)... எனக்குத் தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமை:)..
    என்னைக் காப்பாத்துங்கோ... கதை படிச்சிட்டு வாறேன்.

    பதிலளிநீக்கு
  19. நன்றாகவே எதிர்கொண்டோம். பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. சரவெடி!! சூப்பர்!!! தீபாவளிக்கு ரம்மியும், கோவிந்தும் சரவெடி வெடித்து மகிழ்வுடன் கொண்டாடட்டும்!!!

    பதிலளிநீக்கு
  21. அதிரா இது என்ன புது சரவெடி....அப்பாவி அதிரானு மாத்திருக்கீங்க...இதுக்கு தேம்ஸ்ல போராட்டம் நடத்தலையா..!! ஹாஹாஹா

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  22. அதிரா! தமிழ்மணம் இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே!! நாம கண்டுக்காம இருந்துட்டா போதும்னு நினைக்கிறேன் நான். அதைப் பற்றிப் பேசுவதால்தான் தானே டாப்பிக் எழுகிறது. மற்றொன்று த ம ஓட்டுகள் மகுடம் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் இரு நாட்கள் அப்புறம் மாறிவிடும். ஆனால் நாம் இடும் கருத்துகள் இணையத்தில் இருக்கும். பதிவுகள் இருக்கும்... நம் கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள்..ரேங்க் புகழ் என்பதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். பல ரேங்க் ஹோல்டர்ஸ் அதன் பின் காணாமல் போய்விடுகின்றனர் ஆனால் அமைதியாகக் கற்பதன் தரம் மற்றும் வேலையின் தரம், ஆராய்ச்சிகள், இவைதான் நிலைக்கிறது... இதுதான் முக்கியம் இல்லையா, அது போல..நாம் பதிவுகளுக்கும், வாசிப்பிற்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டால் போதுமே இல்லையா.நல்ல நட்புகள், அதுவும் மிக மிக அழகாக எழுதும் நட்புகள் இருக்கும் போது, அதிலிருந்து நாம் கற்பதற்கு நிறைய இருக்கும் போது.. த ம பற்றி எல்லாம் நாம் பேசாமல் கவலைப்படாமல்... இருந்தால் போதும்...நிறைய சிந்திப்போம், எழுதுவோம்...அதிரா...சரிதானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. கதை நகர்த்திய விதம் மிக அருமையாக இருந்தது... உங்கள் போனகதையும் முடிவிலே இப்படித்தானே சொல்லியிருந்தீங்க.... கிட்டதட்ட இரண்டும் ஒரே கருவைக் கொண்டதுபோல அமைஞ்சிருக்கு.

    இருப்பினும், ரம்யாவுக்கு அட்லீஸ்ட் ஒரு சொக்கலேட் ஆவது வாங்காதது தப்புத்தான்....

    இன்னொருவருக்கு உதவி செய்தது மிகப் பெரிய விசயம்தான் ஆனா, அதுக்காக மனைவிக்கு எதுவுமே வாங்காமல் இன்னொருவருக்கு செலவு செய்தது மன்னிக்க முடியாது... :)... ஹா ஹா ஹா என்னதான் இந்த சீதைகள் பண்ணுகிறார்கள்:)..

    பதிலளிநீக்கு
  24. ஒரு சில நிகழ்வுகளை இயல்பாகச்சொல்லிக் கதை பண்ணியது சிறப்பு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  25. கீதா... மீ ஒரு அப்பாவீஈஈ ஹா ஹா ஹா:) .. சொன்னால்தானே எல்லோருக்கும் புரியும்.. அதனால்தான் பெயரை மாத்திட்டேன்ன்ன்:).

    நீங்க சொல்லும் இதே கருத்துத்தான் கீதா, நானும் சொல்கிறேன்.. த. மணத்தில் ஆர்வம் இருப்போர் அதுக்கு வோட் கேட்டு ஆரவாரப் படுவார்கள், பெரிது படுத்தாதோர் ஒதுங்கி இருக்கலாம்.. எதிர்ப்புக்கள் எதுக்கு... அதனால சந்தோசம் குறைகிறதெல்லோ....
    எல்லோரும் எழுதுகிறோம் எல்லாமே கலகலப்பாகத்தானே போகிறது அதில் எக்குறையும் இல்லையே.. வோட்... மகுடம் என்பது ரீ க்கு சுகர் போடுவதைப்போல:)...
    இன்னொன்று, ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு , நம் கபேர்ட்லயே வைப்பதற்கும், அட் கள் போட்டு விளம்பரம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்குதுதானே... ஏதோ எழும்பினோம் சாப்பிட்டோம் வேர்க் போனோம் வந்து தூங்கினோம் என்பதுபோல இருக்காமல்.. போஸ்ட் போட்டு அதுக்கு கூக்குரல் பண்ணி வோட் வாங்கி... மகுடம் பெறுவதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது கீதா:).

    நாம் எழுதும் கதைகள், போடும் படங்கள் சமையல் குறிப்புக்கள் ஜோக்குகள் எதுவும் உலகத்திலே யாருக்குமே தெரியாத விசயம் என இல்லைத்தானே... அதனால அதுக்கு நாம் போடும் கூக்குரல் கும்மாளம்தான் அதிகம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது... அந்த மகிழ்ச்சி கெட்டிடக்கூடாதே எனத்தான் எண்ணுறேன்...

    கீதா என் வாயைக் கிளறி ... என்னை உளற வச்சிட்டீங்க:)... அதனால என்னைக் காப்பாத்தும் பொறுப்பும் உங்களுக்கே:).. என்னைப் பத்திரமாய்க் கொண்டுபோய்க் காசியில் விடவும் பீஸ்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
  26. நாம் எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பது பெரிதல்ல:) எப்படி வாழ்ந்தோம் என்பதுதானே பெரிது கீதா:).... ஹையோ என் செக் ஐயும்காணல்லியே... இப்போ .
    வைரவாஆஆஆஆ என்னைக் காப்பாத்துங்ங்ங்... மீ காசிக்குப் போக பிளேனில கால் வச்சிட்டேன்ன்ன்ன்.. சொம்பியூட்டரும் ஏதோ பிரச்சனையாகிட்டுது:).

    பதிலளிநீக்கு
  27. @ துரை செல்வராஜூ :

    அழகான கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. @ KILLERGEE Devakottai :

    நண்பரே, பாராட்டுகளுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  29. @ Geetha Sambasivam :

    ரசனைக்கும், கருத்துக்கும் உளமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  30. @ கரந்தை ஜெயக்குமார் : கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. @ வல்லிசிம்ஹன் :

    கருத்துக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  32. @ kg gouthaman :

    ரம்மி, ரம்-ன்னு படிக்கும்போதே பதற்றம் வந்துடுத்தோ! கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. @ புலவர் இராமாநுசம் : வாழ்த்துக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  34. @ ராமலக்ஷ்மி :

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. @ வரதராஜலு.பூ :

    முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  36. வாவ் !!ஏகாந்தன் சார் மிக அழகான ரம்மியமான கதை ..

    ரம்யா கோவிந்திற்கு இடையே நடைபெறும் சம்பவங்கள் சம்பாஷணைகள் உரசல்கள் எல்லா தம்பதிகளுக்குள்ளும் நடப்பதுதான் :)
    கதையை வாசிக்கும்போது பலர் என்னைப்போல் தங்கள் வீட்டு நிகழ்வுகளை நினைத்து பார்த்திருப்பார்கள் ..
    எங்க வீட்ல கோபம் வந்தா என்னை சொல்றேன் :) காபி போட்டு கொடுப்பேன் வேலைல்லாம் செய்வேன்
    கீதாக்கா மாதிரியே ஆனா காபியில் சர்க்கரையை போட்டுட்டு கலக்காம கொடுத்திருவேனே :)

    பதிலளிநீக்கு
  37. @அப்பாவி அதிரா :)
    உங்க சமையல் குறிப்புகளை பார்த்தும் யாருக்காவது மைனஸ் ஒட்டு போட மனசு வரும்ங்கறீங்க :)

    பதிலளிநீக்கு
  38. @ Dr B Jambulingam :

    பாராட்டுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. @ காமாட்சி :

    உணர்வுபூர்வமான பாராட்டுக்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  40. @ Thulasidharan V Thillaiakathu :

    //துளசி : பல ஆண்களுக்கும் இப்படி அனுபவங்கள் இருந்திருக்குமோ என்றும் நினைத்துக் கொண்டேன்..நல்ல காலம் நான் ஆரம்ப நாட்களில் மறந்ததே இல்லை..//

    கருத்திற்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நல்லபிள்ளை மாதிரி கதை எழுதியிருக்கிறேனே தவிர, வீட்டில் என் ரெகார்ட் சரியில்லை. பிறந்தநாள், கல்யாணநாள் என எதுவும் என் நினைவில் இருப்பதில்லை. என் மனைவியும் ஆரம்பத்தில் நினைவுறுத்த முயன்று பலனில்லாது, இது உருப்படாத கேஸ் என்று விட்டுவிட்டாள்!

    //கீதா: ..கதையிலிருந்து மனம் அகலவே இல்லை...// //... இந்த வரி செம!!! ..//

    ரசனைக்கும், பாராட்டுக்கும் மனங்கனிந்த நன்றிகள்.

    //.. இம்மாதிரி கோபங்கள் வந்ததில்லை.. இப்போது சமீபத்தில் வருகிறது..//

    இதனைப் படித்ததும் ‘கோபம் ஒரு நல்ல குணம்’ எனும் தலைப்பில் ஜெயகாந்தன் குமுதத்தில் எழுதியிருந்த நடுப்பக்கக் கட்டுரை ஒன்று (எழுபதுகளின் கடைசியாக இருக்கக்கூடும்) நினைவில் லேசாக எட்டிப்பார்க்கிறது.

    ஆனானப்பட்ட ரிஷிகளுக்கே கோபம் வரும்போது, நாமெல்லாம் என்ன, சாமான்ய மனிதர்கள்! வரட்டும்; வந்துவிட்டுப்போகட்டும்..

    பதிலளிநீக்கு
  41. @ அப்பாவி athira :

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அப்பாவி!
    இந்த self-given title பிரிட்டிஷ் அரசு தரும் 'Sir' பட்டத்தைவிட ப்ரமாதமானது.

    //. . அதுக்காக மனைவிக்கு எதுவுமே வாங்காமல் இன்னொருவருக்கு செலவு செய்தது மன்னிக்க முடியாது... //

    கல்யாணமான ஆம்பிளைங்க அறிந்துகொள்ளவேண்டிய அடிப்படையான விஷயம். மறந்துப்பிட்டு மண்டயப் பிச்சுக்கப்படாது . .

    பதிலளிநீக்கு
  42. @ G.M Balasubramaniam :

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. @ Angelin:

    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    //.. ஆனா காபியில் சர்க்கரையை போட்டுட்டு கலக்காம கொடுத்திருவேனே //

    அடடா, என்னே உங்கள் சாமர்த்தியம்!

    பதிலளிநீக்கு
  44. காதல் காலத்தில் (காதல் இல்லையென்றால்) கல்யாண ஆரம்ப காலத்தில் காதலியிடம் அல்லது மனைவியிடம் அளவுக்கு மீறி வழியாமல் இருந்தால் இந்த மாதிரி அடிக்கடி அவர்கள் முருங்கை மரம் ஏற மாட்டார்கள். சிம்பிள் வைத்தியம் இது.

    காதலியோ மனைவியோ காதல் கணவனிடம் ஆரம்பத்திலிருந்தே வழிகிற மாதிரி பார்த்துக் கொண்டால் அது கடைசி வரை கைகொடுக்கும். அவளின் 45 வயதுக்குப் பின்பும். 5-வது வேதத்தில் கரைகண்ட பதிவீரராம சோழனின் அதிஅற்புத கண்டுபிடிப்பு இது.

    இந்த மாதிரி அடிக்கடி மூடு மாறும் மனைவிமார்கள் தங்கள் துணைவர்களை இதய நோய்க்கு வெகு சீக்கிரத்தில் ஆட்படுத்தி விடுவதாகவும் ஒரு மெடிகல் ரிப்போர்ட் கூறுகிறது. கணவனுக்கும் நாளாவட்டத்தில் அடிக்கடி மூடு மாறும் நோய் தொற்றிக் கொள்ள, அது அவர்களின் குழந்தைகளுக்கு பிறவியிலேயே படிந்து அதுவே அவர்களின் வம்ச ரீதியான குடும்ப நோயாகவும் பரிமளிக்க...

    ஆனால் உங்கள் கதை ஒரு கோணத்தில் அற்புதம். கதையின் ஆரம்பத்திலிருந்தே
    வாசிக்கையில் இந்த மாதிரி மனைவிமார்களிடம் அதிகபட்ச வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தியதில் உங்கள் பங்களிப்பும் பிரமாதம். வாழ்த்துக்கள், நண்பரே!

    பதிலளிநீக்கு
  45. நேக்கு கோபம் வந்தால், மனதில் கோபத்தை அடக்கிக்கொண்டு எந்த வேலையும் செய்ய மாட்டேன்.. எனக்கு ஒரு பிரச்சனை எனில் அதை தீர்க்கும் வரை வேலை ஓடாது:).. அதுக்காக நீண்ட நேரம் எல்லாம் ஆகாது... என்னை சமாதானப்படுத்துவது ச்சோ சிம்பிள்.... உஸ்ஸ்ஸ் எண்டாலே சிரிச்சிடுவேன்:)).

    மீ ஒரு அப்பாவி:)... நம்மை நாமளே புகழ்ந்தாத்தான் உண்டு... அடுத்தவர்களோ வந்து என்னைப் புகழப்போகினம்:)..

    பதிலளிநீக்கு
  46. பயணம் இரண்டு வாரம். நேரம் கிடைத்தால் படித்து கண்டிப்பாக கருத்திடுவேன் (ஓரிரு வாரங்களானாலும்)

    இப்படிக்கு பாலமுரளிகிருஷ்ணா நெல்லைத்தமிழன் (யார்யாரோ ஆஷாபோஸ்லே, அப்பாவி, அதிரடி என்று மனம் போன போக்கில் தனக்குத்தானே டைட்டில் கொடுத்துக்கொள்ளும்போது, நானும் அந்த அதிரடியை ஆரம்பித்துவிட்டேன்)

    பதிலளிநீக்கு
  47. இந்த மாதிரி பேசாமல் கழுத்தறுப்பவர்களை விட படபடவென்று பொரிபவர்கள் பரவாயில்லை என்று தோன்றுகிறது. மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே புரியாது. தங்களையும் வருத்திக் கொண்டு மற்றவர்களையும் வருத்தி...... நல்லவேளை கணவனின் நல்ல மனதை புரிந்துகொண்டு மன்னித்தாளே அதுவரைக்கும் சரி.

    ஒருவிஷயம் புரியவில்லை. மனைவிக்குப் பிறந்தநாள் பரிசு முதலிலேயே வாங்கிவிட மாட்டீர்களா? பரிசு முதலிலேயே வாங்கிவிட்டு அன்றைக்கு லீவும் போட்டுவிட்டால் பிரச்னையே இல்லையே!
    அப்படியெல்லாம் செய்துவிட்டால் ஏகாந்தன் கதை எழுத முடியாதே!
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள், ஏகாந்தன். தொடர்ந்து நிறைய கதை எழுதுங்கள். நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  48. //இப்படிக்கு பாலமுரளிகிருஷ்ணா நெல்லைத்தமிழன் //

    haaaaaaa :) ஹையோ இருங்க நானும் ஒரு அடைமொழி பேர் தேடிட்டு வரேன் :)

    பதிலளிநீக்கு
  49. ஹையோ ஹையோ ஹையோ நேக்கு கொப்பி வலது :) வேணும்ம்ம்ம்ம்ம்.... நான் என் கிட்னியை ஊஸ் பண்ணி... மேலே பார்த்து கீழே பார்த்து தேம்ஸ் ஐப்பார்த்து அஞ்சுவின் அரையடிக் ஹீல்ஸ் ஐப் பார்த்தெல்லாம் ஓசிச்சு:) ஒன்றைக் கண்டுபிடித்தால்.... எல்லோரும் நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கினம் கர்ர்ர்ர்ர்ர்:)...

    பிறகேதும் பிரச்சனை என வந்திட்டால்... அதிராதான் ஆரம்பிச்சா நாங்க சொல்லவில்லை என தப்பி ஓடும் பிளானுக்கெல்லாம் விட மாட்டேன்ன்ன்:)...

    நெல்லைத்தமிழன் 2 வீக்ஸ் க்கு உங்களை மிஸ் பண்ணப்போகிறோம்... ஏன் தெரியுமோ? சண்டைப்பிடிக்க ஆளில்லையே:)... ஹா ஹா ஹா ஹப்பி ஹொலிடேய்ஸ்...

    பதிலளிநீக்கு
  50. //கல்யாண ஆரம்ப காலத்தில் காதலியிடம் அல்லது மனைவியிடம் அளவுக்கு மீறி வழியாமல் இருந்தால்//

    //5-வது வேதத்தில் கரைகண்ட பதிவீரராம சோழனின் //

    ஜீவி ஸார்.. நகைச்சுவையில் கலக்கறீங்க...

    //தங்கள் துணைவர்களை இதய நோய்க்கு வெகு சீக்கிரத்தில் ஆட்படுத்தி விடுவதாகவும் ஒரு மெடிகல் ரிப்போர்ட் கூறுகிறது//

    அப்பல்லோ ரிப்போர்ட்தானே!!

    //இந்த மாதிரி மனைவிமார்களிடம் அதிகபட்ச வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தியதில்//

    நகைச்சுவை என்றால் சரி. இல்லை என்றால் மாறுபடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  51. ரஞ்சனி அக்கா சொல்லியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியது.கடைசி நிமிஷம் வரை பரிசு வாங்காமல்தான் இருப்பார்களா என்று தோன்றினாலும் கதையை அமைத்துக் கொள்ள அது உதவுகிறதுதான்.

    விதம் விதமாக சீதை ராமனை மன்னிக்கும் கதைகளில் ஒரு இயல்பான ஊடலில் இது நிகழ்வது ரசிக்கக் கூடியதாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  52. நெல்லை...இரண்டு வாரப் பயணத்துக்கு வாழ்த்துகள். ஆனால் அதனால் நீங்கள் பிளாக் பக்கம் வருவது தடைப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி!!!

    இப்படிக்கு எம் கே தியாகராஜ பாகவதர் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  53. @கே ஜி கௌதமன் சார் - //கதை ஆரம்பத்தில் கோவிந்த் ரம்யாவை ரம்மி என்று அழைத்ததை, தவறாகப் புரிந்துகொண்டேன். மனைவியின் பிறந்த நாளை மறந்து, 'ரம்மி' ஆடி, பணத்தை இழந்து வந்துவிட்டார் என்று நினைத்தேன். 'ரம்' என்று கூப்பிட்டிருந்தால் அதுவும் தவறாக தோன்றியிருக்கும் !//

    பெங்களூர்ல இருந்து எங்களூருக்கு (சென்னை) வருவதற்கான நேரம் வந்துவிட்டது போலிருக்கு. குளிர் காலம் வருவதாலா அல்லது அங்கு குளிர் அதிகமானதாலான்னு தெரியலை. உங்களுக்கு கற்பனை அதீதமாகிறது. (ரம், ரம்மி)

    பதிலளிநீக்கு
  54. மிஸ் பண்ண மாட்டீர்கள். உடனுக்குடன் பின்னூட்டமிட மாட்டேன்.

    ஶ்ரீராம்- எனக்கு எம்.கே.டி. பாடல்கள் மிகவும் பிடிக்கும். 89ல் என் முதல் பணியின்போது (பெரிய கம்பெனியில்) நடு இரவில் சாஃப்ட்வேர் புரோகிராம் கம்பெனி டேட்டா சென்டர்ல தனியா வேலை பார்க்கும்போது "அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்" னு மனமுருகிப் பாடிக்கொண்டே வேலை செய்வேன் (On my own interest in addition to day time work). AC roomஅனால் வெளில அவ்வளவு சத்தம் கேட்காது. அதன் பிறகு என் வாழ்வும் கொஞ்சம் வளம் பெற்றது.

    பதிலளிநீக்கு
  55. @ ஜீவி:

    உங்களின் பின்னூட்டத்தைப் படித்ததும் ஒருமுறை தலையைச் சிலுப்பிக்கொண்டேன். இது ஜீவி-சாரிடமிருந்தா என்று மேலே பார்த்து சோதித்தும்கொண்டேன். ஏதாவது புராணம், மெடிக்கல் ரிப்போர்ட் என்று கையை வைத்துவிட்டோமா எனும் கிலேசம்! வேறொன்றுமில்லை.

    //.. இந்த மாதிரி மனைவிமார்களிடம் அதிகபட்ச வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தியதில் உங்கள் பங்களிப்பும் பிரமாதம். . //

    Oh, really? Whatever, you are free to be sarcastic! வாசகருக்கு ஹாஸ்ய உணர்வு இருக்ககூடாதென நான் சொல்லமாட்டேன்!

    பதிலளிநீக்கு
  56. @ ரஞ்சனி நாராயணன் :

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு வருகிறீர்கள் என நினைக்கிறேன். வருக!

    // . .பரிசு முதலிலேயே வாங்கிவிட்டு அன்றைக்கு லீவும் போட்டுவிட்டால் பிரச்னையே இல்லையே! . . //

    அதானே.. இந்த ஹீரோவுக்கு ஒரு மண்ணும் தெரியலயே. .

    //. . அப்படியெல்லாம் செய்துவிட்டால் ஏகாந்தன் கதை எழுத முடியாதே!. . //

    ஐயய்யோ! ஒரு பயங்கர உண்மையை இப்படிப் போட்டு உடைத்துவிட்டீர்களே அம்மா !

    பதிலளிநீக்கு
  57. //இப்படிக்கு எம் கே தியாகராஜ பாகவதர் ஸ்ரீராம்.//



    ஹாஹா :)


    பதிலளிநீக்கு
  58. ஸ்ரீராமுக்கும், எங்கள் Blog-க்கும் :

    வாய்ப்பளித்தமைக்கு நன்றி. அன்பிற்கு மேலும் நன்றி.

    பதிலளிநீக்கு
  59. @ நெல்லைத்தமிழன்:

    //பயணம் இரண்டு வாரம். நேரம் கிடைத்தால் படித்து கண்டிப்பாக கருத்திடுவேன்.. //

    பயணம் இனிதாக வாழ்த்துக்கள். கருத்துக்குக் காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  60. சூப்பர்.... இதான் தாங்க கோவிந்தனுக்கு எதுக்குங்க இந்த கோவிந்த் செய்யும் முறைமையே மிக சரி புண்ணியத்திற்கு..... ரம்யாவுக்கு சிடுசிடுபோயிற்று சில்லென்று ஆனது

    பதிலளிநீக்கு
  61. //இந்த மாதிரி மனைவிமார்களிடம் அதிகபட்ச வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தியதில்//

    நகைச்சுவை என்றால் சரி. இல்லை என்றால் மாறுபடுகிறேன்.//

    @ஶ்ரீராம், அதே! அதே! கணவனின் தாமதத்தின் காரணம் புரியாவிட்டாலும் கணவனுக்குச் செய்ய வேண்டிய எதையும் குறை வைக்கவில்லை. தன் கடமையிலிருந்து பின்வாங்கவில்லை. கோபத்தின் காரணமாகத் தான் ஒன்று பேசி, கணவன் ஒன்று சொல்லி என வாத விவாதம் வளராமல் இருக்கவேண்டித் தன்னை அடக்கிக் கொண்டு காத்திருக்கிறாள். என்றாலும் கணவன் வாயால் சொல்லாட்டியும் எழுத்து மூலமாவது தன் மனைவிக்கு விஷயத்தைத் தெரிவித்திருக்கலாம். இல்லாட்டியும் அவனாய்ப் பேசிக் கொள்கிறாப்போல் சொல்லி இருக்கலாம். மனைவி மௌனமாக இருந்ததே சரி! பேச்சு அநாவசியமான வாதங்களை வளர்க்கும். கோபம் அதிகமாக இருக்கும்போது மௌனமே சிறந்தது.

    பதிலளிநீக்கு
  62. மேலே சொன்னது என்னுடைய பார்வையின் கோணத்தில்! மற்றவர்கள் மாறுபடலாம். :)

    பதிலளிநீக்கு
  63. கதை நன்றாக இருக்கிறது. ரம்யாவின் ஊடலும் உண்மையை உணர்வதும் கடைசியில் மன்னிப்பதும் முடிவிற்கு ஏற்றபடி இயல்பா வந்திருக்கு. (யாரது.... கோபம் வரும்போது சண்டை போடாமல் அமைதியாக கூட கொஞ்சம் வேலை பார்க்கும் மனைவி பெட்டர் என்று நினைப்பது? :). )

    எனக்கும் எப்போதும் அதே மாத்த்தில் வரும் நண்பனின் பிறந்தநாள் ஞாபகத்தில் இருக்கும், கண்டிப்பாக இன்னொரு நாட்டில் இருந்த அவனை வாழ்த்துவேன் ஆனால் பெரும்பாலும் மனைவியின் பிறந்தநாள் மறந்துவிடுவேன், வாழ்த்த விட்டுப்போய்விடும்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  64. கதையைப் படிக்கையில் ட்ரஸ்ஸின் விலையைப் பார்த்துட்டு நான் முதல்லே நினைச்சது அதை வாங்குவதற்கு உள்ள பணம் கணவனிடம் இல்லாமல் போனது என நினைச்சேன். முடிவில் பார்த்தால் வேறே! :))))) ஆனால் இதை மனைவியோடு கடைக்குப் போய்ப் பார்த்த அன்றே உன் பிறந்த நாளைக்குனு இதை வாங்கிடுனு உடனே வாங்கிக் கொடுத்திருக்கணும்! அப்படி வாங்கினால் கதை பிறந்திருக்காதோ! :)

    பதிலளிநீக்கு
  65. // இப்படிக்கு எம் கே தியாகராஜ பாகவதர் ஸ்ரீராம். //
    // நெல்லைத் தமிழன்: ..எனக்கு எம்.கே.டி. பாடல்கள் மிகவும் பிடிக்கும். 89ல் என் முதல் பணியின்போது..//

    நீங்கள் நம்புவீர்களோ என்னவோ? போன வெள்ளியில் எB-ல் இளையராஜா, எஸ்.பி.பி, எஸ்.ஜானகி ஓடிக்கொண்டிருக்கையில் எனக்கு எம்.கே.டி.யின் நினைவு வந்தது.க்யூபாவின் அதிக ஆளில்லா சாலைகளில் கார் ஓட்டுகையில் எம்.கே.டி.யின் பாடல்களைக்(பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்.., உனையலால் ஒரு துரும்பசையுமோ ஓ பாண்டுரங்கா.., அன்னையும் தந்தையும்தானே..) கேஸட்டில் போட்டு ரசித்துக்கொண்டு வருவேன்(2006-09). இதைப்பற்றிப் பின்னூட்டத்திலேயே எழுத நினைத்தேன். சுதந்திரத்துக்கு முன்னிருந்த கலைஞர்களைப்பற்றி இப்போதைய வாசகர்கள் அறிவார்களா, பாடலைப் போட்டால் ரசிப்பார்களா என்கிற சிந்தனையில் எழுதவில்லை. இப்போது ஸ்ரீராம்/நெல்லை என எம்.கே.டி.சுற்றுவதைப் பார்த்தால், மேலும் ரசிகர்கள் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையும் வருகிறது. அடுத்த வெள்ளியை பாகவதர் வெள்ளியாக்கிக் கலக்கலாமே ?

    பதிலளிநீக்கு
  66. @ நெல்லைத்தமிழன்:

    படிக்க நேரங்கிடைத்துவிட்டதே! வாழ்த்துக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  67. ஏகாந்தன் ஸார்... நாங்களும் எம் கே டி ரசிகர்களே.... கில்லர்ஜியும் எம் கே டி ரசிகர்தான். ஏற்கெனவே வெள்ளி வீடியோவில் ஓரிரு முறை எம் கே டி பாடல் பகிர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  68. @ ஸ்ரீராம்:

    உங்களோடு சேர்ந்து கில்லர்ஜியும் எம்.கே.டி. ரசிகரா! பலே!

    பாகவதரைப்போல் பாடத்தெரிந்த ஒரு நடிகன் இப்போதையத் தமிழ்ச்சூழலில் கிடைப்பானா? அப்படியே ஒரு கலைஞன் இருந்தாலும், ’மற்றவர்கள்’ அவனைத் தலையெடுக்க விடுவார்களா என்று யோசித்துப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  69. அருமையான கதை.
    கோபத்தின் காரணமும் அருமை.
    மன்னிப்பின் மேன்மையும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  70. @ கோமதி அரசு:

    வாருங்கள். கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!