செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

சிறுகதை​ - பாட்டியும் நீச்சல் பயிற்சியும் - ரஞ்சனி நாராயணன்

பாட்டியும் நீச்சல் பயிற்சியும்

கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்த பாட்டியைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள் அனன்யா. நல்ல காலம் பாட்டி
விழவில்லை. விழப் போனவளை அப்பா சட்டெனப் பிடித்துக் கொண்டுவிட்டார். டாக்டர் வந்து பார்த்தார்.

‘ஒன்றுமில்லை. BP நார்மல். இரவு சரியாகத் தூங்கவில்லையோ?’ சோர்வாக உட்கார்ந்திருந்த பாட்டியை டாக்டர் விசாரித்தார். 

‘தூங்கினேன் னு தான் நினைக்கிறேன்’  பாட்டி மெதுவான குரலில் சொன்னாள்.

‘நன்றாக ரெஸ்ட் எடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். தூக்கம் வந்தால் தூங்கிவிடுங்கள். சரியாகிவிடும்’. பாட்டியின் அறையை விட்டு வெளியே வந்து டாக்டர் அப்பாவிடம் ஏதோ சொன்னார். அப்பாவும் கவனமாகக் கேட்டுக் கொண்டதற்கு அடையாளமாக தலையை ஆட்டினார். டாக்டர் ‘நாளைக்குப் பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார்.

பாட்டியின் கையை மெதுவாகத் தடவிக் கொடுத்தாள் அனன்யா. பாட்டி இந்தப் பக்கம் திரும்பினாள்.  அனன்யா ஆவலுடன் ‘பாட்டி!, பாட்டி!’ என்று மெதுவாகக் குரல் கொடுத்தாள். பாட்டியிடமிருந்து பதில் இல்லை. 

அனன்யாவின் கையை பிடித்துக் கொண்டாள் பாட்டி.

காலையிலிருந்து பாட்டி படுத்துக் கொண்டே தான் இருக்கிறாள். மதியம் அம்மா சாதத்தைக் கலந்து எடுத்துக் கொண்டு போய் பாட்டிக்குக் கொடுத்தாள். பாட்டி பேசவேயில்லை. வீடே அமைதியாக இருந்தது. 

பாட்டிக்கு உடம்பு சரியல்லை என்பதால் அனன்யாவின் ஸ்விம்மிங் கிளாஸ் கட்.

தினமும் இரவு 8 மணிக்கு மேல் பாட்டியும் அனன்யாவும் படுக்கையின் மேல் உட்கார்ந்து கொண்டு கதை புத்தகம் படிப்பார்கள். அந்த நேரத்தை மிகவும் ஆவலுடன் பாட்டியும் பேத்தியும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சிலசமயம் பாட்டி ‘சுண்டுவிரல்’ கதை சொல்லுவாள். தினமும் கேட்டாலும் அலுக்காமல் ‘ம்’ கொட்டிக் கொண்டே கேட்பாள் அனன்யா.  இன்னிக்கு அதெல்லாம் ஒன்றும் இருக்காது. அம்மாவும் அப்பாவும் பாட்டியைப் பற்றி மிகவும் கவலைப்படுவது அனன்யாவிற்கு நன்றாகப் புரிந்தது. இப்போ என்ன செய்வது? 

அனன்யாவின் குரலுக்கு பாட்டியிடமிருந்து பதில் இல்லை. அதுவே அனன்யாவிற்கு வருத்தமாக இருந்தது. என்ன ஆயிற்று பாட்டிக்கு?

மெதுவாக படுக்கையின் மேல் ஏறி பாட்டியின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். பாட்டியும் அவளைக் கட்டிக் கொண்டாள். அனன்யாவிற்கு சந்தோஷமாக இருந்தது.

‘பாட்டி! பாட்டி! என்ன ஆச்சு பாட்டி உனக்கு?’

‘ஒண்ணுமில்லடா கண்ணு! கொஞ்சம் டயர்டா இருந்தது. அவ்வளவு தான்’. பாட்டி பேத்தியை இறுக அணைத்துக் கொண்டாள். பாவம் குழந்தை!

பாட்டி காலையில் நடந்த அமளியை நினைத்துக் கொண்டாள். பாவம் குழந்தை! கடந்த ஒரு மாதமாக ‘I am scared of swimming’ என்று குழந்தை ஆயிரம் முறை பாட்டியிடம் கூறியிருப்பாள். அப்படி அனன்யா சொல்லும் போதெல்லாம் பாட்டிக்கு வயிற்றை பிசையும். இப்படி பயப்படும் குழந்தையை அழ அழ வைத்து அப்பாவும் அம்மாவுமாக நீச்சல்
பயிற்சிக்கு இழுத்துக் கொண்டு போவார்கள். கோடை விடுமுறை வந்தாலும் வந்தது. மாற்றி மாற்றி ஏதோ ஒரு வகுப்பிற்கு குழந்தையை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். குழந்தை வீட்டில் இருந்த நாழியே இல்லை. பாட்டு, கராத்தே, சம்மர் கேம்ப், கூடவே நீச்சல் வகுப்பு. மற்ற வகுப்புகளுக்கெல்லாம் குஷியாகப் போகும் குழந்தை. நீச்சல்
என்றால் பயந்தது. பாட்டியிடம் மட்டுமல்ல; தன் அப்பா அம்மாவிடமும் சொல்லிக் கொண்டிருந்தது ‘I am scared of swimming’ என்று.

‘எல்லாத்துக்கும் பயந்தால் என்ன செய்வது? கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும் போகப்போக சரியாகி விடும்’ என்று குழந்தையை சமாதானப்படுத்தினர் தாயும் தந்தையும். பாட்டி இதையெல்லாம் கண்டுக்காமல் இருந்தாள் ஆரம்பத்தில்.

போகப்போக குழந்தை பாட்டியிடமும் வந்து ‘I am scared of swimming’ என்று சொல்ல ஆரம்பித்தவுடன் பாட்டிக்கு கவலை அதிகமாயிற்று. ‘ஸ்விம்மிங் ஸார் பக்கத்துல இருக்கார் இல்லையா? அப்புறம் ஏன் பயப்படற? தைரியமா போய் பண்ணு’ என்று ஊக்கமளித்தாள்.

‘உங்களோட ஜபமாலையை அவளுக்குக் குடுங்கோம்மா ‘I am scared of swimming’ என்று ஒரு 108 தடவ சொல்லட்டும்.  பயம் தெளிந்துவிடும்’ என்று சிரித்தாள் மருமகள். யாரும் இல்லாத போது மருமகளிடம் சொன்னாள் பாட்டி. ‘பாவமா இருக்கு குழந்தையைப் பார்த்தா. பயப்படறதுன்னா விட்டுடுங்கோளேன்!’

‘இல்லைம்மா! அப்படியெல்லாம் விடமுடியாது. ஒரு மாசத்திற்கு 3000 ரூபாய். ஸ்விம்மிங் ஒரு லைஃப் ஸ்கில். வசுதா (மருமகளின் அக்கா பெண்) பண்றதைப் பார்த்து தானும் பண்ணனும்னு இவதான் கேட்டா.  அதனாலதான் சேர்த்தேன்.  இப்ப போக முடியாதுன்னா என்ன பண்றது? நீங்க அதுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காதீங்கோ!’ மருமகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிவிட்டு போய்விட்டாள்.

அடுத்த நாள் பாட்டி மெல்ல பிள்ளையிடம் போய்ப் பேசினாள். ‘அதைப் பார்த்தா பாவமா இருக்குடா. நீயும் தான் நீச்சல் கத்துண்டே. இன்னமும் உனக்கு வரல. குழந்தையை படுத்தாதீங்கோடா!’

யூடியூப் ஷார்ட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தவன் கோவத்துடன் பாட்டியைத் திரும்பிப் பார்த்தான். ‘நான் எவ்வளவு அழுதிருப்பேன் நீச்சல் வேணாம் வேணாம்னு. நீ கேட்டியா? தினம் அழ அழ அழைச்சுண்டு போவியே! இப்போ பேத்திக்குப் பரிஞ்சுண்டு வர? நீ இதுல தலையிடாதே. நாங்க பார்த்துக்கறோம். அதுக்கு ரொம்ப திமிரு ஜாஸ்தி ஆயிடுத்து. பிடிவாதம் வேற!’ படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு வெடுக்கென்று எழுந்து போனான்.

பாட்டிக்குக் கண்ணில் ஜலம் வந்துவிட்டது. இந்தக் காலத்து இளம் பெற்றோர்களுக்கு எல்லாமே கௌரவ பிரச்னை.

எல்லா குழந்தைகளும் நீச்சல் கற்றுக் கொள்ளும்போது தங்கள் குழந்தை மட்டும் எப்படி கற்றுக் கொள்ளாமல் இருப்பது?  சம்மர் காம்ப்பில் குழந்தை செய்த கலைப்பொருள் ஒன்று கூட குழந்தையால் செய்ய முடியாது. ஆசிரியைகளே வெட்டி ஒட்டி குழந்தைகள் செய்தது என்கிறார்கள். நாம் கொடுக்கும் காசு இவர்கள் சொல்லும் பொய்க்காகத்தான். 

இன்னிக்கு காலையில் ரொம்ப அமர்க்களம். குழந்தையை எழுப்பும்போதே ‘ஸ்விம்மிங் போகணும் எழுந்துக்கோ’ என்று சொல்ல, அழ ஆரம்பித்த குழந்தை நிறுத்தாமல் அழுதாள். முதலில் சமாதானமாகப் பேச ஆரம்பித்த பிள்ளையும் மருமகளும் கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் இழக்க ஆரம்பித்தனர். ‘இன்னிக்கு நீ ஸ்விம் பண்ணலைனா பெப்பா பிக்
கிடையாது. ஒருவாரத்துக்கு டீவி கிடையாது! ஓகே வா?’ குழந்தை பெரிய குரலில் அழ ஆரம்பித்தது. தான் இப்போ ஏதாவது பேசினால் நிலைமை மோசமாகும் என்று நினைத்த பாட்டி நிலை கொள்ளாமல் தவித்தாள். 

குழந்தையின் அழுகை பெரிதாக ஆக இவர்களும் மாற்றி மாற்றி கத்த ஆரம்பித்தனர். பாட்டி உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தாள். தலை சுற்ற ஆரம்பித்தது. தடுமாறிய பாட்டியை ‘அம்மா! என்னாச்சு மா?’ என்றபடியே பிள்ளை வந்து பாட்டியைப் பிடித்துக் கொண்டான். இந்த அமர்க்களத்தில் குழந்தையை நீச்சல் வகுப்பிற்கு அழைத்துச் செல்லவில்லை.

பாட்டிக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது.

‘அனன்யா! வா! வந்து நம்ம ரூம்ல படுத்துக்கோ!’ குழந்தையைக் கூப்பிட்டுக்கொண்டே வந்த பிள்ளையின் குரல் கேட்டு  பாட்டி கண் விழித்தாள். ‘இங்கேயே தூங்கட்டுமேடா’! என்றாள். 

‘வேணாம்! வேணாம்! உன்ன நன்னா ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லி இருக்கார் டாக்டர். இது பக்கத்துல படுத்துண்டு ராத்திரியெல்லாம் உதைச்சுண்டே இருக்கும். நீ தூங்கு. உன்னால இன்னிக்கு ஸ்விம்மிங் கிளாஸ் போச்சு. நாளைக்கு எப்படியாவது அனுப்பணும்!’  பிள்ளை இன்னும் குறையாத கோவத்துடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போனான்.

சிறிது நேரத்தில் திரும்ப வந்தான். ‘அம்மா! சின்ன விஷயத்துகெல்லாம் டென்ஷன் ஆகாதம்மா ப்ளீஸ்! குழந்தையோட நல்லதுக்குத்தான் நாங்க பண்றோம். நம்மளோட வீட்டுல நல்லா வாயடிக்கறது. வெளில போனா பேசவே மாட்டேங்கறது. எல்லாத்துக்கும் பயப்படறது. அதனால தான் எல்லா கிளாஸுக்கும் அனுப்பறோம். நாங்க வளர்ந்தா மாதிரி இல்லை இப்போ. நாங்க அத ரொம்ப கோவிச்சுக்க மாட்டோம். கவலைப்படாதே. எங்களுக்கு இருக்கற டென்ஷன் போறாதுன்னு நீ வேற படுத்தாதே! உன்னோட பேத்தியை நாங்க கொடுமைப் படுத்தறதில்லை. எங்களோட
குழந்தை அவ. கொஞ்சம் புரிஞ்சுக்கோம்மா!’ ஆரம்பத்தில் நிதானமாகப் பேசியவன் போகப்போக கடுமையாக பேசிவிட்டு எழுந்து போனான்.

‘எனக்கு டென்ஷனா? இவர்களுக்கா’? இந்தக் காலத்து பெற்றோர்களை நினைத்தால் பாட்டிக்கு இன்னும் கவலை அதிகரித்தது. ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள் பாட்டி.

எப்போது தூங்கினாளோ குழந்தையின் குரல் கேட்டு கண் விழித்தாள் பாட்டி. 

‘ பாட்டி நீ ஓகே வா இப்போ?’ என்ற குழந்தை ஸ்விம் சூட்டில் இருந்தது.

குழந்தையைக் கட்டிக்கொண்ட பாட்டி, ‘சமத்துடி கண்ணு. உனக்காக நான் இப்படி தினமும் விழ முடியாதுடி. சமத்தா அம்மா அப்பா சொல்ற மாதிரி கேளுடி’ என்றவள் குழந்தையின் காதில் சொன்னாள்: ‘நேத்திக்கு நான் விழற மாதிரி ஆக்டிங் பண்ணினேன்......!’ 

ஒரு நிமிடம் திகைத்த குழந்தை கண்கள் மலர, ‘நிஜமாவா?’ என்றது.

‘ஆமா... I pretended...! அம்மா அப்பா கிட்ட சொல்லிடாதே!’

இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு குழந்தை கலகலவென சிரித்தது. பாட்டிக்கு ஒரு ஃஹை ஃபை
கொடுத்து விட்டு ‘அப்பா! ஸ்விம்மிங் போலாம் பா!’ என்று ஓடியது.

45 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மாலை வணக்கம் ஜீவீ ஸார். தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்.

      நீக்கு
  2. எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது, க்ளைமாக்ஸ் வரிகளைப் படித்து.

    நிஜ சம்பவம் இயல்பான உரையாடல்கள், குடும்ப அங்கத்தினர்களின் குணநலன் போன்றவற்றாலும், எழுதிய வித்த்தாலும் நல்ல கதையாகப் பரிணமித்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை தமிழன். பாராட்டுக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஞ்சனி மேடம் கதையுடன் வந்திருக்கிறார். நல்வரவு. இது கதையல்ல நிஜம் எனலாம். ஆனாலும் ஒரு சின்ன டவுட். தற்போது எந்த டாக்டர் வீட்டுக்கு வந்து வைத்தியம் பார்க்கிறார் என்பதே?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார். கிட்டத்தட்ட நிஜம்தான். எங்கள் குடியிருப்பிற்குப் பக்கத்தில் தாரா கிளினிக் என்று ஒரு Day Care Center இருக்கிறது. நாங்கள் யார் போன் செய்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் அங்கிருந்து டாக்டர் வருவார் - நாங்கள் எல்லோருமே சீனியர் சிடிசன் என்பதால். என்ன ஒன்று, வந்தவுடனே ரொம்ப டயர்டு ஆக இருக்கீங்களே ஒரு பாட்டில் க்ளுகோஸ் ஏத்திடலாமா? என்பார். அதேபோல நாங்கள் போனாலும் கேட்பார். அதனால் அவரைக் கூப்பிடுவதையும், நாங்கள் அங்கே போவதையும் தவிர்த்து விடுவோம்.
      கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. இங்கே ஸ்ரீரங்கத்தில் மருத்துவர் வீட்டுக்கு வருகிறார். நாம் போய் அழைத்து வரணும் முதலில் வரும்போது. பின்னர் அவராகவே வந்துடுவார்.

      நீக்கு
  4. எழுதி எழுதிப் பழகிய கை. இனிமையான குடும்பப் பாங்கான நடையில் வீட்டுக்கு வீடு வாசல்படியாய் கதை சொல்லல் மிளிர்ந்து மனதில் சிம்மாசனமிட்டது. பாட்டி, தாத்தா --- பேத்தி, பேரன் உறவுகள் காவியமானவை. சொல்லச் சொல்ல இனிக்கும் தான். செவ்வாய் எபிக்கு தனிக் களையைக் கொடுத்த
    சகோதரிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவீ ஸார். உங்களது பாராட்டு 'வசிஷ்டர் வாயால்' என்பது போல.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. கதை மிக அருமை. ரஞ்சினி அடிக்கடி வாங்க .

    //தினமும் இரவு 8 மணிக்கு மேல் பாட்டியும் அனன்யாவும் படுக்கையின் மேல் உட்கார்ந்து கொண்டு கதை புத்தகம் படிப்பார்கள். அந்த நேரத்தை மிகவும் ஆவலுடன் பாட்டியும் பேத்தியும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சிலசமயம் பாட்டி ‘சுண்டுவிரல்’ கதை சொல்லுவாள். தினமும் கேட்டாலும் அலுக்காமல் ‘ம்’ கொட்டிக் கொண்டே கேட்பாள் அனன்யா. //
    "சுண்டுவிரல் "கதை கண்ணன் கோவரத்தனகிரியை குடையாக பிடித்த கதையா?

    பாட்டி, பேத்தியின் இரவு நேர கதை நேரத்தை படிக்கும் போது என் பேத்தியின் நினைப்பு வந்து விட்டது. இப்படித்தான் ம் கொட்டி கேட்பாள், முகபாவங்கள் கதைக்கு ஏற்ற மாதிரி மாறும். சனிக்கிழமை காலை முதல் மறுநாள் காலை வரை மெளன விரதங்கள் இருந்த காலங்களில் அவளுக்காக இரவு கதை நேரத்தில் மட்டும் விட்டேன். அந்தக் காலங்களை நினைக்க வைத்து விட்டது.

    மகன் சொன்னதும் சரிதான். காலங்கள் முன்பு போல இல்லையே!

    கதை நிறைவை படித்தவுடன் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். முதலில் தலைப்பை பார்த்தவுடன் பாட்டியும் நீச்சல் கற்றுக் கொள்ள போகிறார் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி. நிச்சயம் வருவதற்கு முயற்சிக்கிறேன்.
      கோவர்த்தனகிரி கதை இல்லை. இது நமது சுண்டுவிரல் அளவே உள்ள ஒரு சிறுவனின் சாகசக் கதை. என் பாட்டி எனக்கு சொன்ன கதை. கதையைக் கேட்டுக் கொண்டே வரும்போது 'அந்த சுண்டு விரல் இப்படி செய்திருக்கலாமே, அப்படி ஸெய்திருக்கலாமே என்று யோசனைகளும் சொல்லுவாள்.

      உண்மையில் பாட்டிகளும் இங்கு நீச்சல் கற்றுக் கொள்ளுகிறார்கள் குடியிருப்பிற்கு உள்ளேயே நீச்சல் குளம் இருப்பதால்.

      ஆமாம். அப்படியும் ஒரு முடிவு கொடுத்திருக்கலாம்.
      கதையை படித்து ரசித்ததற்கு நன்றி. பேத்தி, பேரன்களுக்காக விட்டுக் கொடுப்பது நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது எல்லாம் ஒருவித சுகம்.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கதை நன்றாக உள்ளது. பாட்டி, பேத்தியின் உறவும், பேத்தியின் மீது தனிப்பட்ட அன்பும், அக்கறையுமாக கதை ஒரு குடும்பத்தின் இயல்பாக இருந்தது.

    குழந்தையின் தந்தை சொல்வதும் உண்மைதான். இந்தக் காலத்திற்கு இந்த மாதிரி ஒரு பயிற்சிகள், அவசியமாகிறது. ஒரு நாளின் நேரத்தை கணக்கிட்டு வாழும் முறைகள் இப்போது எல்லோர் வீட்டிலும் சகஜமாகி விட்டது.

    இறுதியில் குழந்தை உற்சாகமாக தன் அன்பு பாட்டிக்கு ஃஹைஃபை தந்து விட்டு தன் பெற்றோர்கள் முடிவுக்கும் மதிப்பளித்து நீச்சல் பயிற்சிக்கு செல்வது சிறப்பு. அருமையான கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காலத்திற்கு தகுந்தாற்போல குழந்தைகளும் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளியுலக அனுபவங்களும் இப்போது அதிகம். டீவீயில் எல்லாவற்றையும் பார்த்து விடுகிறார்கள். எதைப் பற்றியுமே ஒரு வியப்போ, ஒரு பொருள் வேண்டுமென்று காத்திருத்தலோ அவர்களுக்கு இல்லை. உனக்கு என்ன வேணும்னு சொல்லு பாட்டி, அமேசானில் வாங்கிவிடலாம் என்கிறாள் பேத்தி. எல்லாமே விரல் நுனிகளில். ஆசைப்பட்ட பொருள்கள் கேட்பதற்கு முன் வீட்டு வாயிலுக்கு வந்துவிடுகிறது.
      உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  9. ரஞ்சனிக்கா!!!! ஆஹா கதை அருமை. அதுவும் முடிவு, 'பாட்டி தான் சும்மா அப்படி நடித்தேன்னு சொல்வாங்கன்னு' எதிர்பார்த்தேன் அதே போன்று!!!!! சூப்பர். நானும் பாட்டிகளிடம் வளர்ந்த குழந்தை! என்பதால் பாட்டி சைக்காலஜி நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். பாட்டி மற்றும் தாத்தாக்கள் Saviors ....Samaritans என்றும் கூடச் சொல்வேன்!!!!! ஆனால் நல்ல தாத்தா பாட்டிகளாக இருக்க வேண்டும்

    கதையில் ரஞ்சனி பாட்டி தெரிகிறார்!!! ரொம்ப ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா. பாட்டிகளின் நாடித்துடிப்பு அறிந்த பேத்தி நீங்கள். கதையின் முடிவை ஊகித்தது வியப்பல்ல. தாத்தா பாட்டிகளை நினைக்கும்போது உங்களுக்கு எத்தனை உற்சாகம் வருகிறது! எனக்குக் கூட அப்படித்தான். என் பாட்டி சொன்ன கதைகளை இன்னும் நினைவு வைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. நான் முதலில் போட்ட பதிலைக் காணோமே!

      நீக்கு
    3. வாங்க கீதா. பாட்டிகளின் நாடித்துடிப்பு அறிந்த பேத்தி நீங்கள். கதையின் முடிவை ஊகித்தது வியப்பல்ல. தாத்தா பாட்டிகளை நினைக்கும்போது உங்களுக்கு எத்தனை உற்சாகம் வருகிறது! எனக்குக் கூட அப்படித்தான். என் பாட்டி சொன்ன கதைகளை இன்னும் நினைவு வைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  10. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனின் அருள் எல்லோருக்கும் இருக்கட்டும். உங்களது பிரார்த்தனையில் நானும் கலந்து கொள்ளுகிறேன்.

      நீக்கு
  11. தாத்தா பாட்டிகளின் விசிறி நான். ஸோ கதையை ரொம்ப ரசித்து வாசித்தேன். ஒன்றிப் போய் என்றும் சொல்லலாம். ரஞ்சனி பாட்டியும் பேத்தியும் அப்படியே கண் முன்னே....

    பாட்டி பேத்தி உறவு அருமை! இப்படியான தாத்தா / பாட்டிகள் என்றால் பேத்தி பேரன்களுக்கு சொர்கம். (எல்லா தாத்தா பாட்டிகளும் சொல்ல மாட்டேன்)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தான். என்பாட்டியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
      இதைப் போல தினமலர் வார இதழில் வெகு நாட்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். பாட்டியும் பேத்தியும் தான். பேத்திக்கு 6 அல்லது 7 வயதாகியும் இன்னும் படுக்கையில் உச்சா போய்விடுகிறாள், அம்மா அப்பா இருவரும் தினமும் திட்டுவார்கள். குழந்தையை தரையில் ஒரு பாயைப் போட்டு படுக்கச் சொல்லுகிறார்கள். ஊரிலிருந்து பாட்டி வருகிறாள். குழந்தையை தன் அருகில் படுக்க வைத்துக் கொள்ளுகிறாள். குழந்தை சொல்லுகிறாள் 'என் பக்கத்துல படுத்துக்காத பாட்டி. நான் உச்சா போய்விடுவேன்' என்று. பாட்டி சொல்லுகிறாள் 'நானும் தான் ராத்திரில போவேன். என்ன ஒரு வித்தியாசம் என்றால் நான் எழுந்து பாத்ரூம் போய் போவேன். நீ இங்கயே போகிறாய்' என்கிறாள். குழந்தையின் பள்ளியில் நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட பாராட்டுகிறாள். குழந்தை மெல்ல மெல்ல மாறுகிறது. பல வருடங்கள் ஆகியும் மறக்காத கதை.

      நீக்கு
    2. நானும் தான். என்பாட்டியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
      இதைப் போல தினமலர் வார இதழில் வெகு நாட்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். பாட்டியும் பேத்தியும் தான். பேத்திக்கு 6 அல்லது 7 வயதாகியும் இன்னும் படுக்கையில் உச்சா போய்விடுகிறாள், அம்மா அப்பா இருவரும் தினமும் திட்டுவார்கள். குழந்தையை தரையில் ஒரு பாயைப் போட்டு படுக்கச் சொல்லுகிறார்கள். ஊரிலிருந்து பாட்டி வருகிறாள். குழந்தையை தன் அருகில் படுக்க வைத்துக் கொள்ளுகிறாள். குழந்தை சொல்லுகிறாள் 'என் பக்கத்துல படுத்துக்காத பாட்டி. நான் உச்சா போய்விடுவேன்' என்று. பாட்டி சொல்லுகிறாள் 'நானும் தான் ராத்திரில போவேன். என்ன ஒரு வித்தியாசம் என்றால் நான் எழுந்து பாத்ரூம் போய் போவேன். நீ இங்கயே போகிறாய்' என்கிறாள். குழந்தையின் பள்ளியில் நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட பாராட்டுகிறாள். குழந்தை மெல்ல மெல்ல மாறுகிறது. பல வருடங்கள் ஆகியும் மறக்காத கதை.

      நீக்கு
  12. ரஞ்சனி நாராயணன் அவர்களது கை வண்ணம் சிறப்பு...

    பாட்டி, பேத்தி அன்பின் உறவு பிரிக்க முடியாதது..

    பரிவும் பாசமுமாக ஒரு குடும்பத்தின்
    இயல்பான கதை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  13. /// கலைப்பொருள் ஒன்று கூட குழந்தையால் செய்ய முடியாது. ஆசிரியைகளே வெட்டி ஒட்டி குழந்தைகள் செய்தது என்கிறார்கள். நாம் கொடுக்கும் காசு இவர்கள் சொல்லும் பொய்க்காகத் தான்.///

    நிஜத்தில் நடப்பது இதுவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரஞ்சனி நாராயணன் அவர்களால்
      கனிவும் கருணையுமாக கதைக் களம் மலர்ந்து இருக்கின்றது.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல் ஏதேதோ வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். என்ன செய்வது?

      உங்களது பாராட்டால் மனம் மிகவும் மகிழ்ந்து விட்டது. நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. நன்றி தனபாலன். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது கருத்தைப் பார்க்கிறேன்.

      நீக்கு
  15. ஒரு உண்மையான பாட்டியின் அழகு முகம் தெரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வாங்க கில்லர்ஜி. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
    3. வாங்க கில்லர்ஜி. உங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி.

      நீக்கு
  16. கதை இக் கால குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் உரையாடல்களுடன் செல்கிறது.
    பாட்டியான என்னையும் நினைத்துக் கொண்டேன். எனது பேரன் விரும்பி வகுப்புகளுக்கு போய் வருகிறான்.
    பிள்ளையை பயமுறுத்தும் வாக்கியம் எங்கள் வீட்டிலும் இதுதான் "பெப்பா பிக்
    கிடையாது. ஒருவாரத்துக்கு டீவி கிடையாது! ஓகே வா?’ குழந்தை பெரிய குரலில் அழ ஆரம்பித்தது."" பேரன் அழ பாட்டி தாஜா பண்ண பாட்டி கெடுக்கிறார் என்ற பேச்சுத்தான் இங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி. பாட்டியாக இருந்தால் இதையும் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். பேரன் பேத்திகளின் அன்பு இதையெல்லாம் மறக்கச் செய்துவிடும். வருகைக்கும், கதையை ரசித்துப் படித்ததற்கும் நன்றி.

      நீக்கு
  17. பேத்தி மீது அதீத பாசம் வைத்திருக்கும் , பாட்டியின் உணர்வுகளை ஒரு சிறு நிகழ்ச்சியின் மூலம் அழகாக சொல்லியிருக்கிறார் ரஞ்சனி நாராயணன். ஒரு நல்ல சின்னஞ்சிறு கதை. அடிக்கடி வாருங்கள் மேம்.

    பானுமதி வெங்கடேவரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு. வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி. நம் குழந்தைகளை வளர்க்கும்போது தாய் தந்தை என்கிற பொறுப்புணர்வு அதிகம் அதனால் அவர்களிடம் கண்டிப்பும் அதிகம் காட்டுவோம். இப்போது நமக்கு பொறுப்பு என்று எதுவுமில்லை. கொஞ்சுவது, விளையாடுவது மட்டுமே நம் வேலை. இன்னொன்று இப்போது நிறைய நேரம் கிடைக்கிறது பேரன் பேத்திகளைக் கொஞ்சுவதற்கு. வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி பானு.

      நீக்கு
  18. இந்தக் காலத்துக்கு ஏற்ற கதை. பாட்டி/பேத்திகளின் அந்நியோனியம் புரிஞ்சுண்டு நல்லபடியாப் பெற்றோரும் நடந்து கொள்கிறார்கள். நல்லவேளையாப் பேத்தியைப் பாட்டியிடமிருந்து பிரிக்கலை.

    பதிலளிநீக்கு
  19. வாங்க கீதா. பாட்டி பேத்தியை பிரிப்பதா? கற்பனை கூட செய்ய முடியாது.
    உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. என்னுடைய தாமதமான வருகைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. உங்களது இன்னொரு கருத்து எனக்கு மெயிலில் வந்திருக்கிறது. இங்கு காணோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!