வியாழன், 31 ஆகஸ்ட், 2023

தோஷமில்லை ஆயினும் ஈஸ்வரனை நினை

 நாம் மறுதளித்த விஷயங்களையே நாம் செய்ய வேண்டி வரும். 

சூழ்நிலை!  

யார் இதைச் சொன்னாலும் கொரோனா கால வாட்ஸாப் forward மருத்துவம் போல கேட்கவேண்டிய நிலையும் வரும்!  

காளஹஸ்தி போகவேண்டும் என்று சொல்லப்பட்டபோது முதலில் அதைத்தான் சொன்னோம் - என் மகனுக்கு தோஷம் எதுவும் கிடையாது.  தோஷம் இருந்தால்தான் அங்கு செல்வார்கள்.

போகப்போக எல்லோருமே அங்கு சென்றுவரச் சொல்லி அறிவுறுத்த, இறைவன் சித்தம் என்று கிளம்பினோம்.  விசாரித்ததில் எல்லா சமீபத்து மாப்பிளைகளும், பெண்களும் தோஷம் பற்றி கவலைப்படாமல் காளஹஸ்தி சென்று வந்திருக்கின்றனர் என்று தெரிந்தது.

ஆ...  காளஹஸ்தி என்று  சொல்லும்போதே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்று பாடிக்கொண்டே கிளம்பினோம்.

செல்லும் வழியில்தான் ஓட்டுநர் சட்டெனக் கடந்த  கல்கி பகவானின் ( !! )  வசிப்பிடமாக இருந்த மாளிகையைக் காட்டினார்.  ஷாஜஹான் அரண்மனை தோற்றது.  கணவனும் மனைவியும் மட்டுமே அங்கு வாழ்ந்ததாகக் கூறினார்.  எப்படி மெயின்டெயின் செய்தார்களோ....!  ஓட்டுநர் எங்கள் பழைய வீட்டுக்கருகில் இருக்கும் நண்பர்.  கோவில் பற்றி விவரங்கள் அவருக்கு தெரிந்திருந்தது.

நாங்கள் சென்றது சனிக்கிழமை என்றாலும் பிரதோஷ நாள்.  அங்கு சென்று இறங்கியபோது 'அடடே..  பெரிய கூட்டமில்லை, சீக்கிரம் சென்று வாருங்கள்' என்று அனுப்பி வைத்தார்.  உள்ளே செல்போன் அனுமதி கிடையாது, வானிடியிலேயே வைத்துவிட்டுச் சென்று விடுங்கள் என்றார்.  ஏனோ திருப்பதி நினைவு வந்தது!  ஆனாலும் இவர் நன்கு பழகிய பக்கத்து வீட்டு நண்பர்.  எனவே அதுபடியே செய்தோம்.  உள்ளே சென்றால் கூட்டத்தின் அளவு தெரிந்தது!  

காலை ஏழரை மணி.  

ஐநூறு ரூபாய், 750 ரூபாய் டிக்கெட்டுகள் இருக்கும் என்று சொல்லி இருந்தார்.  உள்ளே சென்றோம்.  

வாயிலில் நாங்கள் ஏதாவது ஆயுதம், வெடிகுண்டு வைத்திருக்கிறோமா என்று எங்களைச் சோதித்த பெண்மணிடம் கோவில், பரிகாரமுறை பற்றி ஓரிரு விவரங்கள் கேட்டதும் 'தெரிந்த நபர் இருக்கிறார்..  லைனில் நின்று டிக்கெட் வாங்க வேண்டாம்...  டிக்கெட் ரெடி..  வேண்டுமா?" என்றார் காதருகில்.  மறுத்துவிட்டு உள்ளே சென்றோம்.  தூரத்தே கம்பியில் சாய்ந்து நின்று காத்திருந்த 'அவர்' எங்கள் முகங்களை பார்த்து எங்களை புரிந்து விட்ட (வேறென்ன..  இனா வானான்னுதான்) பாவனையில் புன்னகையுடன்  எங்களை அணுகினார்.  நாங்களும் தெரிந்தே இரையானோம்.  ஐநூறு ரூபாய் டிக்கெட்டே போதும், எல்லாம் ஒன்றுதான் என்றார்.  இரண்டு மகன்களுக்குமாய் இரண்டு ஐநூறு ரூபாய் டிக்கெட்டுகள் வாங்கி கொண்டோம்.  

டிக்கெட்டுடன் சில பொருட்களும் சேர்த்து (மஞ்சள்) பையில் போட்டு கொடுத்தனர்.  நவதானியங்கள், பூக்கள், வெற்றிலை பாக்கு, தேங்காய், ரவிக்கைத்துணி இரண்டு என்று ஒரு செட்.  அதைத்தவிர உரு போன்ற ஒன்று.  நாங்கள் எங்கள் இரண்டு மகன்களுக்குமே பரிகாரம் செய்ய பணிக்க பட்டிருந்தோம்.  இருவருமே திருவோண நட்சத்திரத்துக்காரர்கள்!  அவருக்கு ஐநூறு ரூபாய் கேட்டார்.  சரி என்று சொன்னோம்.  எங்களை அங்கு நீளமாகக் காத்திருந்த கூட்டங்களை எல்லாம் தாண்டி உள்ளே அழைத்துச் சென்றார்.  அடுத்த இருபது நிமிடங்களில் ஆரம்பிக்கப்போகும் பரிகார மண்டபம் ஒன்றில் அமரவைத்துச் சென்றார்.

நாங்களாக வந்திருந்தால் இந்த பரிகார மண்டபத்துக்கு வரவே இன்னும் ஒன்றரை மணிநேரம் ஆகி இருக்கும்!

முதலில் ஒருவர் உள்ளே வந்து பரிகாரஸ்தர்களைத் தவிர உடன் வந்திருப்போரை வெளியேற்றினார்.  அந்த வகையில் நானும் பாஸும் வெளியே வந்து மண்டபத்தின் படிக்கட்டு அருகே வெளியே வாகான ஒரு இடம்பிடித்து நின்றோம்.  ஏனோ எல் கே ஜி யில் மகன்களை சேர்த்து விட்டு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது! பரிகாரஸ்தர்களை வரிசையாக அமரவைத்து அவரவர்கள் வாங்கி கொண்டு வந்திருந்த பொருட்களை எப்படி பிரித்து முன்னே அடுக்கிக் கொள்ள வேண்டும் என்று மைக்கில் மூன்று மொழிகளில் படிப்படியாக சொன்னார்.  தெலுங்கு, தமிழ், கன்னடம்.  அவர் தமிழ் வித்தியாசமாக இருந்தது.

எல்லோரும் அவர் சொன்னபடி அடுக்கியானபின் ஒரு ஐந்து நிமிடம் காத்திருப்பு.  ஏன் என்று பார்த்திருந்தபோது -

அவர் முடித்து மைக்கைக் கீழே வைத்துவிட்டு, இங்கே படிக்கட்டு வழியே வெளியேற, ஐந்து நிமிடங்களில் பக்கத்து பிரகாரத்திலிருந்து ஒரு அர்ச்சகர்/குருக்கள்/வாத்யார் சுவரேறிக் குதித்து உள்ளே வந்தார்.  அங்கிருந்து படி இறங்கி பக்கத்துக்கு பிரகாரத்துக்கு வந்து இங்கு வந்து படியேறி வருவதில் இரண்டு சிரமங்கள்.  ஒன்று நேர விரயம்.  இன்னொன்று அப்படிச் செய்ய முடியாதபடி நெருக்கி நின்றிருக்கும் மக்கள் கூட்டம்!  எனவே அவர் சென்றவழி இவர் வரவில்லை.  குறுக்கு வழியில் சுருக்க வந்தார்!

அந்தப் பிரகாரத்திலிருந்த கடவுள் ப்ரதிமையிலிருந்து தாங்கள் தள்ளி இருந்ததாக மகன்கள் அபிப்ராயப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் பிரகார பார்வையிலிருந்து பின் வரிசையில் உள்ளே தள்ளி இருந்தார்கள்.  எனக்கும் தோன்றியதையே  அங்கிருந்த அருகோர், வாத்தியார், முன்னூறு ரூபாய்க்காரர் (பின்னர்) எல்லோரும் ஒரே மாதிரி பதிலைச் சொன்னார்கள்.  "இந்த ஸ்தலத்தில் கால் வைத்து விட்டாலே போதும்"

அங்கிருந்து உள்ளேயிருந்தபடி கோவிலை ஒரு நீள்பார்வையில் பார்த்தபோது தெய்வீகமாக உணர்ந்தோம்.....

[ ஹிஹிஹி...]

=======================================================================================================

மா(சா)லைப் பார்வை
-----------------------------------
கடற்கரையோ கல்யாணமோ
கோவிலோ குளமோ
திருவிழாவோ 'மாலோ'
அலைந்த அலைச்சலின்
ஆயாசத்தோடு
நடந்து கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.
வீட்டுக்கு சென்றதுமே
படுக்கையில்
விழப்போகும் உந்துதலுடன்
தளர் நடை நடக்கும் பெரியவர்.
அவர் கையை ஒரு கையிலும்
பெரிய பையை மறு கையிலும்
பிடித்து நடக்கும் அவர் மனைவி..
குன்றாத குறும்புடன் ஓடும்
ஒரு குழந்தை
இறங்காத அடத்துடன் இடுப்பில்
ஒரு குழந்தை
வீட்டை அடைந்ததும்
காத்திருக்கும்
தனக்கான பணிகளை
மனதுக்குள்
பட்டியலியிட்டபடியே
பெருமூச்சுடன் நடைபோடும்
நடுத்தர வயதுப் பெண்
அயர்ச்சியைக் காட்டாமல்
மலர்ச்சியும் இல்லாமல்
முகப்பூச்சுக் கவலையுடன்
முன்னே நடக்கிறாள்
பள்ளி இறுதி பெண் ஒருத்தி.
காலையில் கிளம்பியபொழுது
கலகலப்பாகத்தான் இருந்திருக்கும்
இந்தக் குடும்பம்.
காலையில் இவர்களைப் பார்த்திருந்தால்
கலகலப்பாகியிருப்பேன் நானும்
அந்தி மாலையில் அவர்களை பார்த்து
அயர்ச்சிதான் வருகிறது எனக்கும்

================================================================================

படித்ததில் ரசித்தது 

பட்டிமன்றத்தின் வெற்றி, கவியரங்கத்தைத் துடைத் தெறிந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
“நிச்சயமாக! பட்டிமன்றத்தின் வெற்றி, கவியரங்கத்தை காவு வாங்கியதோடு நின்றுஹவிடவில்லை. சாலமன் பாப்பையா போன்ற பெரிய தமிழறிஞர்களைக்கூட காமெடியன்கள் ஆக்கிவிட்டது. முன்பெல்லாம் கல்லூரி விழாக்களுக்கு மாணவர்கள் ஏற்பாடு செய்வது இலக்கிய
கூட்டமாகவோ அல்லது கவியரங்கமாகவோ இருக்கும். இப்போது அவர்களும் தமிழறிஞர்கள் கோணங்கிகளாக அர்த்தமற்ற நகைச்சுவை அரட்டை அடிக்கிற பட்டிமன்றங்களை ஏற்பாடு செய்வது துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் கவியரங்கத்தைப் புத்துயிர் செய்து மீட்டெடுக்க
வேண்டுமானால், கவியரங்கக் கவிதையில் நகைச்சுவையை முன்னிலைப்படுத்த வேண்டும். அரசியல் அங்கதமும் சமூகப் பகடியும் அவசியம். கவியரங்கப் பங்கேற்பு என்பது நுட்பம் வாய்ந்தது. ஏதோ கையில் கொண்டு வந்த கவிதையை கடமைக்கு வாசித்து விட்டுப் போவோம் என்ற கடமை உணர்ச்சி இங்கே கவைக்கு உதவாது.
ஒருமுறை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் கவியரங்கில் பங்கேற்றேன். எனது முறை வந்தபோது அப்துல் ரகுமான் அழைத்தார். எப்படி அழைத்தா ரென்றால், “ராதாகிருஷ்ணன் வருகிறார் ஏர்வாடியிலிருந்து…. யாரும் பயப்பட வேண்டாம்’ என்றார். பார்வையாளர்கள் தரப்பிலிருந்து ஒரே நகைப்பொலி. கலகலப்பு அடங்கவே பல நிமிடங்கள் பிடித்தது. காரணம், ஏர்வாடி தர்க்காவுக்கு மனநோயாளிகள் சிகிச்சைக்காக கூட்டி வரப்படுவது காலங்காலமாய் நடக்கும் ஒன்று. பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட கலகலப்பை இரட்டிப்பாக்க அவர் கூறியதையே பிடித்துக் கொண்ட நான் இப்படித் தொடங்கினேன்.
“ஏர்வாடியிலிருந்து வருகிறவர்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஏர்வாடிக்குப்
போகிறவர்களைப் பார்த்துதான் பயப்பட வேண்டும். என்னைக் கேட்டால் நாம் எல்லாருமே ஏர்வாடிகள் தான். சமூகத்தின் மனநிலையில் ஏற்படும் முரண்களை, காயங்களை குணப்படுத்தக் கூடியவர்கள்’ என்றதும்… கைத்தட்டல் காதைப் பிளந்தது. இந்த சமயோசித கவிதை நுட்பம்தான் கவியரங்கத்துக்குத் தேவை.’
உங்களது இலக்கிய வாழ்வில் மிகவும் நெருடலாக நீங்கள் உணர்ந்தது?
“ஒரு பிரபலமான வெகுஜனப் பத்திரிகைக்கு எனது சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தேன்.  

“திருமணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல’ என்ற அந்தக் கதை,
“பிரசுரத்துக்கு ஏற்றதல்ல’ என்று குறிப்பிட்டு உடனடியாக எனக்கே திரும்ப வந்தது. எனக்கோ அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை சிறப்பாக, ஒரு முத்திரைக் கதையை அனுப்பி வைத்தால், இவர்கள் இப்படித் திருப்பி அனுப்பிவிட்டார்களே என்று எண்ணினேன். பின்னர் அதே கதை சிவசங்கரியும் பாலகுமாரனும் நடுவர்களாக இருந்த “அமுதசுரபி’ சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுக்குரிய கதையாகத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. அதற்குப் பின்னர் அரசின் ஃபிலிம் டிவிஷன் அதே கதையைக் குறும்படமாகத் தயாரித்தது. மொத்தத்தில் பிரபலமான வெகு ஜனப் பத்திரிகைகள், கதை எப்படி இருக்கிறது என்பதை விடுத்து, கதை யாரிடமிருந்து வருகிறது என்பதில் கவனம் செலுத்துவதையே இந்த நெருடலான சம்பவம் எனக்கு உணர்த்தியது.”
விளம்பரம் விரும்பாதவராக வும் எளிய மனிதராகவும் இருப் பதில் உங்களுக்கு அப்படி என்ன அலாதி விருப்பம்?
“1996 -ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது இந்தக் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியாக அமைந்துவிடும் என்று நினைக்கிறேன். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கலைஞருக்குப் பாராட்டு விழா நடத்தினோம். அது 1996 -ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கலைஞரை வரவேற்பதற்காக அரங்கின் வாயிலில், சங்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் நின்றிருந்தோம். கலைஞர் தமது அமைச்சரவை சகாக்கள் சிலரோடு வந்து இறங்கினார். அவரை அனைவரும் வரவேற்றபோது, அவரது சகாக்களில் ஒருவர், “யாரைய்யா நீ…. எட்டப் போ’ என்று என்னைப் பிடித்துத் தள்ளினார். நான் கீழே விழுந்தேன். கலைஞர் மிகவும் நல்லவர். அவருக்கு இது தெரியாது. இதை நான் பெரிதுபடுத்தாமல் மேடைக்குச் செல்ல முயற்சித்தேன். ஏனெனில் நான்தான் வரவேற்புரை நிகழ்த்தியாக வேண்டும். சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனக்கு ஒதுக்கப்பட்ட முக்கியமான பணி அது. ஆனால் காவல் துறை அன்பர்கள் என்னை மேடைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. என் பரிதாபகரமான நிலையைக் கண்ட சங்கத்தின் தலைவர், காவலர்களிடம் கையைக் காட்டி, “அவர்தானய்யா பொதுச் செயலாளர்’ என்ற பின்பே விட்டார்கள். என்னை நானே பிரபலப் படுத்திக் கொள்ளாத – விளம்பரப் படுத்திக் கொள்ளாத நிலையில் எனக்கு நேர்ந்தது இது. என்னைத் தள்ளிய அமைச்சர் பெருமானும் தடுத்த காவலர்களும் இதில் குற்றமற்றவர்கள்.
பொதுவாக விளம்பரம் என்பது அதிக செலவு பிடிக்கக் கூடியது. அந்தப் பணத்தில் மனித
நேயத்துடன் பல பணிகளைச் செய்ய
முடியும் என்பது என் அனுபவம். மிக முக்கியமாக, கவிஞன் அல்லது ஒரு படைப்பாளி அறியப்படும் முன்னரே அவனது படைப்பு அறியப்பட வேண்டும். என் கவிதைகளைத் தெரிந்தால் போதும்; என்னைத் தெரிய வேண்டாம்.”
ஏர்வாடி ராதாகிருஷ்ணனை நேர்காணல் செய்தவர் சி.ஜெயந்தன்.

=========================================================================

இணையத்தில் பார்த்ததில் ரசித்தது 


===========================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


- திருமணத் தகவல் நிலையங்கள் தங்கள் வெப் சைட்டில் வெளியிடும் வரன்களைப் பற்றிய தகவல்களின் உண்மையைக் கண்டறிந்த பின்னரே வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. – சிரம சாத்தியமான காரியம்.

- அம்மா உணவகத்திற்கு சப்ளை செய்த பொருள்களுக்கு தர வேண்டிய 25 கோடி ரூபாயை சென்னை மாநகராட்சி நிலுவையில் வைத்துள்ளதால் டி.யூ.சி.எஸ். ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை. – அது அம்மா உணவகம் என்பதாலா?

- மைசூரு, பெங்களூரு எக்ஸ்பிரஸ் வேயில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்கள்.

- கட்டிய புடவையோடு வீட்டை விட்டு ஓடினாள் என்பார்கள், பெங்களூரில் 5000 பெண்கள் புடவை கட்டிக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். International fitness day ஐ சிறப்பிக்கும் விதமாக பெங்களூர் விஜயநகர் பி.ஜி.டி. மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மூன்று கிலோ.மீட்டர் தூரத்தை 86 வயதான மூதாட்டி உட்பட பல்வேறு வயதில் இருந்த பெண்கள் ஒடி கடந்திருக்கிறார்கள்.

- ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை இயற்றி வரும் தாலிபான் அரசு பெண்கள் பூங்காக்களுக்குச் செல்லக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது. 


=================================================================================================





நா. பா. வின் எழுத்து லட்சியவாதப் போக்கைச் சார்ந்தது. யதார்த்தவாதப் போக்கை அவர் மதித்தார்; யதார்த்தவாத எழுத்தாளர்கள் மீது மிகுந்த மரியாதையும் வைத்திருந்தார். ஆனாலும் தமது எழுத்தின் நெறியாக லட்சியவாதத்தையே அவர் மேற்கொண்டார். யதார்த்தவாதப் போக்கைச் சார்ந்து அவர் எழுதியவை குறைவு.
அவரது தொடக்ககால நாவல்களான குறிஞ்சிமலர், பொன் விலங்கு போன்றவை லட்சியவாதப் போக்கின் சிகரங்களைத் தொட்டவை. போகப் போக அவரது படைப்பிலக்கியத்தில் யதார்த்த வாதத்தின் சாயலும் சிறிது படியத் தொடங்கியது. குறிப்பாக சமகால அரசியலை மையமாக வைத்து அவர் எழுதிய சாத்திய வெள்ளம், சமகால சினிமாவை மையமாக வைத்து அவர் எழுதிய நீல நயனங்கள் போன்ற நாவல்களில் அவரின் பாணியான லட்சியவாதத்தை மீறி யதார்த்த வாதம் ஓரளவு ஊடுருவுவதைப் பார்க்கலாம்.
எனினும் லட்சியப் பாத்திரங்களை உருவாக்கி எழுதுவதிலேயே அவர் ஒரு தன்னியல்பைக் கண்டார். அவரின் தொடக்க கால லட்சியவாத நாவல்கள் பெரும் புகழ் பெற்றுப் பெரு வெற்றி அடைந்ததும், அவரை இதே வகை நாவல்களை எழுத ஊக்கு வித்திருக்க வேண்டும்.
குணங்களில் மட்டுமல்ல, தோற்றங்களில் கூடத் தம் பாத்திரங்களை லட்சியப் பாத்திரங்களாக அவர் உருவாக்கினார். அரவிந்தன், பூரணி, பாரதி, மோகினி , சத்தியமூர்த்தி என்றெல்லாம் அவர் படைத்து உலவ விட்ட பாத்திரங்கள் சராசரித் தோற்றமுடையவர்கள் அல்ல. அவர்கள் பேரழகர்கள். பேரழகிகள். தாமரை போன்ற பாதங்களை உடையவர்கள். ரோஜாப்பூ போன்ற நிறத்தை உடையவர்கள்.
தமிழ்ச் செய்யுள் மரபில் தென்பட்ட காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றி அவர் உரைநடை இலக்கியம் படைத்தார் என்று கருதத் தோன்றுகிறது.
தன்னேரில்லாத் தலைவனை உடைத்தாய் என்று தண்டியலங்கார இலக்கண நூல் சொல்லும் காப்பியக் கதாநாயகர்களாகவே நா.பா.வின் நாவல் நாயகர்கள் இருந்தார்கள்.
நா.பா. தாமே அழகர். யாரையும் வியக்க வைக்கும் வசீகரமான தோற்றமுடையவர். செக்கச் சிவந்த பாதங்களும், கைகளும், சிவந்த மேனியும் கொண்டவர் கிரேக்கச் சிலையைப் போல் செதுக்கிச் செப்பனிட்டது போன்ற அவரது தோற்றப் பொலிவு அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. 'அழகான பத்திரிகை ஆசிரியர் யார்?' என்ற கேள்விக்கு 'நா. பா.' என்று சாவி ஒருமுறை பதில் சொல்லியிருந்தார்.
நா.பா. சுய பிரதிபலிப்புப் பாத்திரங்களாகவே தமது பெரும்பாலான கதாநாயகர்களைப் படைத்தார் என்று சொல்வதுண்டு. வாட்டசாட்டமான உருவமும் வடிவழகும் கொண்டவர்கள் அவரது பாத்திரங்கள்.
தோற்றத்தில் மட்டுமல்ல, குணத்திலும் அவர்கள் உன்னத மானவர்கள். நேர்மை, நாணயம், தனி மனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் முதலிய அனைத்தும் ஒருசேரக் கொண்டிருந்த குணசீலர்கள் அப்பழுக்கற்ற மனிதர்கள்.
நா.பா.வின் பாத்திரங்கள் மண்ணுக்கு 'ஓர் அரையடி மேலேதான் நடப்பார்கள்' என்று அவரின் சிலர் வாசகர்கள் குறை சொல்வதுண்டு. இதை ஒரு குறையென்று கொள்ளாமல் ஒரு தன்மை என்று கொள்பவர்களும் நிறைய பேர் உண்டு.
சென்னை வானொலியில் நடந்த ஒரு பேட்டியில் நா.பா.வின் பாத்திரங்கள் லட்சியப் பாத்திரங்களாக இருப்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
'ஏன்? லட்சியப் பாத்திரங்களைப் படைக்கக் கூடாது என்று ஏதும் விதி இருக்கிறதா என்ன? நான் அப்படித்தான் படைக்கிறேன். படைப்பேன். வால்மீகியும், கம்பனும் லட்சியப் பாத்திரங்களைத் தானே உருவாக்கினார்கள்? அவர்கள் படைத்த பாத்திரங்கள் தரைக்கு அரையடி அல்ல, நான்கடி அல்லவா மேலே நிற்கின்றனர்? இராமாயணத்தை நாம் இலக்கியமாக ஒப்புக் கொள்ளவில்லையா? லட்சியவாதம் என்பது ஒரு போக்கு. யதார்த்தவாதம் என்பது இன்னொரு வகைப் போக்கு. இரண்டு போக்குகளும் இலக்கியத்தின் எல்லாக் காலத்திலும் இருக்கத்தான் இருக்கும். நான் லட்சிய வாதத்தைப் பின்பற்றுகிற எழுத்தாளன்' என்று நா. பா. தன்னிலை விளக்கம் அளித்தார்.
- திருப்பூர் கிருஷ்ணன்
நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்.

===============================================================================

பொக்கிஷம் 



90 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் ரசிக்கும்படி இருந்தது.

    காளஹஸ்தி டிரிப்பில் ஏற்பட்ட கடுப்பில் ஒரு நகைச்சுவையே போதும் என,று நினைத்துவிட்டீர்கள் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை...  ஒரு வார காலமாக அலுவலக மன உளைச்சல்கள் ஒருபுறம், இல்ல மனத்தாங்கல்கள் ஒரு புறம் படுத்துகின்றன.  மனம் எதிலும் செல்லவில்லை!  வழக்கத்துக்கு மாறாக இந்தக் கதம்பத்தையே இன்று காலை நாலரைக்குதான் பினிஷ் செய்தேன்!

      நீக்கு
  2. சமீப காலங்களில் தொடர்ந்து நான் புடலங்காய் வாங்கி வருகிறேன். இரண்டு வாங்கிவந்தால் போதாதா? எதற்கு ஐந்து என்கிறாள் மனைவி. 20 ரூபாய்க்கு கடையில் இவ்வளவு கொடுத்தால் நான் என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  இங்கும் அதே கதைதான்.  முருங்கைக்காயும் 20 ரூபாய்க்கு எட்டு தருகிறார்கள்.  பத்து ரூபாய்க்கு போதும் என்றால் கேட்க மாட்டேன் என்கிறார் கடைக்காரர்.  மினிமம் இருபது ரூபாயாக்குத்தான் கொடுப்பாராம்!

      நீக்கு
    2. முருங்கைக்காய் முந்தானை முடிச்சு??

      நீக்கு
  3. மக்களின் ரசனை மலினப்பட்டுவிட்டதால் பட்டிமன்றங்களும் நீர்த்துப்போய்விட்டன.

    திரையில் நகைச்சுவைக் காட்சிகள், நடிகர்கள் நீர்த்துப்போய் இப்போது யோகிபாபுவிடம் வந்து நிற்பதைப்போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோகி பாபு பரவாயில்லை என்றே நினைக்கிறேன்.  நான் அவரை ராசிபபதுண்டு.  பரோட்டா சூரி போன்றோர்தான் மோசம்.  

      நீக்கு
    2. சொல்லிட்டீங்க இல்ல... இனி யாராவது, யோகிபாபுவை கதாநாயகனாகப் போட்டுப் படமெடுத்து, சூரியை, வடிவேலுவை, கஞ்சா கருப்புவை காலி பண்ணியதுபோல பண்ணிடுவாங்க.

      நீக்கு
    3. ஓ.. உங்களுக்குத் தெரியதா நெல்லை? அவர் அல்ரெடி மண்டேலா, கூர்க்கா, பொம்மியின் அப்பாவோ அல்லது ஏதோ ஒரு பெயர்.. அந்தப் படங்களிலெல்லாம் ஹீரோவாக நடிதிருக்கிறார்.

      நீக்கு
  4. ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பேட்டியை ரசித்தேன்.

    கவியரங்குகளில் ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை வாசிப்பதே (வாசித்துக் கழுத்தறுப்பதே), கவிதை வாசிப்பவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளத்தான் என்றே இதுவரை நினைத்துவந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. பொறுமையை இழக்க வைக்கும் விஷயம் அது எனக்கும்!

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. பரிஹாரம் செய்ய காளஹஸ்தி போன கதை தொடர்கதையா? அனுபவம் திருமணஞ்சேரியில் கண்டது போன்றே இருக்கிறது. விழுந்த கோபுரத்திற்கு பதில் வேறு புதிய கோபுரம் கட்டிவிட்டார்களா??
    கல்கி என்றது அம்மா பகவான் தானே? இப்போது எங்கிருக்கிறார் ?

    காலையில் இல்லாத அயர்ச்சி
    மாலையில் வருவதன் காரணம்
    ஆதித்தனின் ஆதிக்கம்.

    கவியரங்கம் நடத்தினால் தற்போது விலை போகாது. காரணம் தொலை காட்சிகள்.

    ஒரு காலத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வாழ்த்துப்பா என்ற முறையில் கவிதைகள் நோடீஸ் நிறைய கிடைக்கும். கொடுப்பவர்களுக்கு தான் எழுதிய கவிதையை பிறரும் வாசிக்கின்றனர் என்ற ஒரு பெருமை அவர்கள் முகத்தில் காணலாம்.

    நா பா பற்றிய திருப்பூர் கிருஸ்ணன் கட்டுரை நா பா வின் லட்சிய பாத்திரங்களை உருவாக்கும் லட்சியங்களை நன்றாக விளக்குகிறது..

    ஒன்றே என்றாலும் நன்றே. அந்த இன்னொன்னு தான் இது என்ற வாழைப்பழ ஜோக் இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழுந்த கோபுரமா? இங்கேயா, ஸ்ரீரங்கத்திலா? இங்கே எதுவும் கோபுரம் விழுந்த மாதிரி தெரியவில்லை! கல்கிதான் அம்மா பகவானா என்பது சரியாய்த் தெரியவில்லை.

      உண்மையில் இப்பொது சென்னையில் ஆதித்தனின் ஆதிக்கம் ரொம்ப ரொம்ப ரொம்ப மோசம். வெக்கையும், அனலும் தாங்க முடியவில்லை.

      கவியரங்கங்கள் வழக்கொழிந்து விட்டனதான்!

      ஜோக் தயார் செய்ய நேரம் இல்லை. மன்னிக்கவும். விரைவில் நிலைமை சீரடையும் என்று நம்புகிறேன்!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
    தலைப்பில் உள்ளது போல், தோஷமேதுமில்லை. ஆயினும் விடாது அந்த ஈஸ்வரனை நினைத்துக் கொண்டேயிருப்போம். அது ஒன்றுதான் மனதில் ஏற்படும் வலிகள் மிகுந்த பிரச்சனைகளுக்கு நல்லதொரு வழி. விரைவில் இறைவன் தங்களுக்கு நல்லதை நடத்தி வைக்க நானும் அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    எங்கு சென்றாலும் பணந்தான். பணத்திற்குதான் எப்போதுமே முதலிடம். காளஹஸ்தி நாதருக்கும் இது விதி விலக்கல்லவே ...! தங்களது அனுபவங்களை நீங்கள் நகைச்சுவையாக கூறினாலும், தங்களது மனவேதனையை விளங்க வைக்கிறது. "எத்தை தின்றால் பித்தம் தீரும் கதையாக" நாங்களும் குழந்தைகளுக்கு இதற்காக சுற்றியிருப்பவர்களின் அறிவுரை அச்சுறுத்தலுக்கேற்ப அப்போது திருமணஞ்சேரி சென்று வந்தோம். அப்புறமும் நிறைய பரிகாரங்கள். அனைத்துமே இறைவன் விட்ட வழி. ஆனால், இறைவன் நம் நிழலாக இருப்பார் என்றே நம்புவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துன்பம் வரும் வேளையில் மட்டும் கடவுளை நினைப்பது வஹக்கமாகி விட்டது. உங்கள் ப்ரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  8. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. தோஷம் என்று ஏதுமில்லை..

    நம்முடன் நாம் கொண்டு வந்திருப்பவையே அவை!..

    ஆயினும் இடைவிடாமல் சர்வேஸ்வரனை நினைத்துக் கொண்டிருப்போம்.

    இது தான் மனதின் வலிகளுக்கு மருந்து.. மேலும் எதையும் தாங்கிக் கொண்டு இயங்குகின்ற வல்லமையைத் தரக்கூடியது..

    அன்பர்களுக்கு
    நல்லதொரு வழியினை விரைவில் இறைவன் தந்தருள வேண்டும் - என நானும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..

    குறிப்பு:
    இந்தக் கருத்துரை முழுமையாக என்னுடையதல்ல.. அன்புக்குரிய கமலா ஹரிஹரன் அவர்களது கருத்தினை வழியொற்றி ( காப்பியடித்து) எழுதியிருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்காவுக்கு ஏற்கெனவே நன்றியைத் தெரிவித்து விட்டேன். உங்களுக்கும் நன்றி!

      நீக்கு
  10. இப்பொழுது எந்த சோசியரிடம் போனாலும் தோஷம் இருப்பதாகவும், காளகஸ்தி போகச் சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோசியர் மட்டும்தான் சொல்லவில்லை. மற்ற அனைவரும் சொன்னார்கள்!

      நீக்கு
  11. ஆ! ஸ்ரீராம், நான் திருப்பத்தூர் கோயில் பத்தி போட்டப்ப நீங்க அங்க கருத்துல நீங்க போன இடம் அருகில்தான் போய்வந்தோம்னு சஸ்பென்ஸ் சொல்லிருந்தீங்க....கரர்ர்ர்ர்ர்ர் இது அங்கிட்டு!

    பரவால்ல பரிகாரம், தோஷம் எல்லாம் விடுங்க. ஒரு கோயில் விசிட் தரிசனம். பரிகாரம் தோஷம் இருந்தாதான் போணுமா என்ன? ஸ்ரீராம்? சாதாரணமா போகலாமே அப்படி எடுத்துக்கோங்க,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெதான் கீதா... ஓ.. அதற்கு விடை நான் முன்னர் சொல்லவே இல்லையா?

      நீக்கு
  12. நாம் மறுதளித்த விஷயங்களையே நாம் செய்ய வேண்டி வரும்.
    சூழ்நிலை! //

    புரிகிறது. ஆனால் தலைப்புதான் நான் சொல்வதும். தலைப்பு நல்லாருக்கு.
    வேண்டுதல் அது இதுன்னு போகாம கோயிலுக்குப் போகலாமேன்னு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமுறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்.. தோளுக்குரியவரை இறைவன் என்று அழைக்கலாம்.

      நீக்கு
  13. கல்கி பகவான் வீடு பத்தி சொல்லிருந்தீங்க. இப்ப அவர் ஆக்டிவா இல்லை இல்லையோ?!

    //கோவில், பரிகாரமுறை பற்றி ஓரிரு விவரங்கள் கேட்டதும் 'தெரிந்த நபர் இருக்கிறார்.. லைனில் நின்று டிக்கெட் வாங்க வேண்டாம்... டிக்கெட் ரெடி.. வேண்டுமா?" //

    இது நல்ல பிஸினஸ் ஸ்ரீராம்...

    ஆனால், அடுத்து நீங்களே சொல்லிட்டீங்க...ம்ம் தெரிந்தே இரையானது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் தொடர்ச்சியே போல இன்னோரு சம்பவதிலும் இது தொடரும்! பின்னர் வரும்.

      நீக்கு
  14. ஏனோ எல் கே ஜி யில் மகன்களை சேர்த்து விட்டு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது! //

    ஹையோ ஸ்ரீராம் டபக்குனு சிரிச்சிட்டேன்...!!

    ஸ்‌ரீராம் எல்லாம் நல்லபடியா நடக்கும். என்ன ஒண்ணுனா அது வரை மனம் ஒரு நிலையில் இருக்காதுதான்!

    ஹிஹிஹி - தொடர்கிறது என்பதா??...ஹாஹாஹா!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஹிஹிஹி - தொடர்கிறது என்பதா??...ஹாஹாஹா!!! //

      ஆம்! மகன்களுக்கு பரிகாரம் செய்யும் முறை தெரியாமல் திருதிருவென விழிக்கக் கூடாதே எனும் கவலை!

      நீக்கு
  15. காளஹஸ்தி கோயில் பெரிது அழகு! ஒரே ஒரு முறை போயிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம். சிலப்போ இப்படிச் சுற்றி வரப்ப இனிய நினைவுகள் இருக்க வேண்டாமா வீட்டுக்குத் திரும்பும் போது? ஆனா பாருங்க! இப்போதெல்லாம் பொழுது போக்குகளே அயற்சியாகிவிட்டதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.. சும்மா இது ஒரு சாலையோரக் காட்சி.. அவ்வலளவே!

      நீக்கு
  17. ஸ்ரீராம் இந்தப் பட்டிமன்றங்களில் கன்டென்ட் ரொம்பக் குறைவு
    //கோணங்கிகளாக அர்த்தமற்ற நகைச்சுவை அரட்டை அடிக்கிற பட்டிமன்றங்களை //

    அதேதான்...பட்டிமன்றங்கள் இப்படினா, மோட்டிவேஷனல்னு நடத்தறாங்களே...அதுல டிவி ஆட்கள் பேசறாங்க...சொல்லப்படும் கன்டென்ட் கண்டிப்பா பசங்க மனசுல பதியப் போவது இல்லை...ஏன்னா நகைச்சுவைன்னு ....வேண்டாம் நான் எதுவும் சொல்லலை. நல்ல விஷயங்களைத் தேன் தடவி கொடுப்பது நல்லதுதான் ஆனால் இது அதீதமாகப் போகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

      நீக்கு
  18. பொதுவாக விளம்பரம் என்பது அதிக செலவு பிடிக்கக் கூடியது. அந்தப் பணத்தில் மனித
    நேயத்துடன் பல பணிகளைச் செய்ய
    முடியும் என்பது என் அனுபவம். மிக முக்கியமாக, கவிஞன் அல்லது ஒரு படைப்பாளி அறியப்படும் முன்னரே அவனது படைப்பு அறியப்பட வேண்டும். என் கவிதைகளைத் தெரிந்தால் போதும்; என்னைத் தெரிய வேண்டாம்.”//

    சூப்பர்! மிக நல்ல உயர்வான கருத்து. ரொம்பப் பிடித்தது

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இணையத்தில் ரசித்த படம் = சிரித்துவிட்டேன்! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பெங்களூர் பெண்கள் ஓடியது ஆஹா அட! அதுவும் 86 வயதுப் பெண்மணி!

    ஆஃப்கானிஸ்தான் எல்லாம் ஒரு நாடா? பாவம் மக்கள், பெண்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. நா பா - திருப்பூர் கிருஷ்ணன். நா பா பற்றி சுவாரசியமான கட்டுரை. இப்போது நாபா எழுதியது போல் லட்சியவாத எழுத்து வந்தால் வாசிப்பாங்களா? யதார்த்தம் இல்லை என்று சொல்லிடுவாங்கன்னே தோன்றுகிறது. வந்தும் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. புடலங்காய் - வேற புடலங்கா!! ஹிஹிஹி புடலங்காய் வைத்தே வெவ்வேறு டிஷ் செய்துடலாமே!

    சிலப்போ இப்படித்தான் காய்கள் நமக்கு கால் கிலோ போதும்னா இல்லை அரைகிலோதான் என்று சொல்றப்ப அதுவும் விலை மலிவா இருந்தா வாங்காம இருக்க முடிவதில்லை. ஸோ வெவ்வேறு வகையாகச் செய்துவிடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. காளஹஸ்திக்கு யாரும் சொல்லாமலேயே நாங்க 2,3 முறை போனோம். ஆனால் திருமலை யாத்திரையெல்லாம் முடித்துக் கொண்டு கடைசியில். ஏனெனில் காளஹஸ்தி போனால் நேரே வீட்டுக்கு வரவேண்டும். வேறே எங்கும் செல்லக் கூடாது என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று நாங்களும் வேறெங்கும் அலையவில்லை. உணவுக்கு ஒதுங்கி விட்டு நேரே வீடு திரும்பி விட்டோம்.

      நீக்கு
  24. உங்கள் அனுபவங்கள் வழக்கம்போல் ரசனை. தெரிந்தே ஏமாந்தது உள்பட. இது கூடத் தொடருமா? சரியாப் போச்சு போங்க!ஜோக் பரவாயில்லை ரகம். இந்தப் பட்டிமன்றங்கள் அதிலும் சன் தொலைக்காட்சியில் வரும் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றத்தை நாங்க ஒரு முறை கூட உட்கார்ந்து பார்த்ததே இல்லை எனில் நம்புவீர்களோ? விளம்பரங்களில் ட்ரெயிலர் போல் காட்டுவதைப் பார்ப்பது தான். இவை எல்லாம் வரும் விடுமுறை தினங்களில் எங்க வீட்டில் தொலைக்காட்சியே போட மாட்டோம். ஏதேனும் முக்கியச் செய்தி என்றால் மட்டும் போடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கூட தொடருமான்னா.. ஆமாம். நீளமாய்ப் போகிறது.. கட்ஷார்ட் பண்ணணும். மேலும் இருக்கும் பிஸி நிலையில் இரண்டு வாரங்களை சமாளிக்கலாம்! இருக்கவே இருக்கு மற்ற கதம்பமெல்லாம்!

      நீக்கு

  25. @ கில்லர் ஜி..

    /// இப்பொழுது எந்த சோசியரிடம் போனாலும் தோஷம் இருப்பதாகவும், காளகஸ்தி போகச் சொல்கிறார்கள்..///

    சோலந்தூர் சோனமுத்து சோசியர் கூடவா!?..

    எல்லாம் கமிசன் மண்டி தரகு ஏவாரம் போல இருக்குதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோசியர்கள் எப்பொது சென்று கேட்டாலும் ஒன்று சொல்கிறார்கள். "இன்னும் இரண்டு வருடம் கழித்து திருமண வேலைகளை ஆரம்பியுங்கள்!"

      நீக்கு
  26. குன்றக்குடி அடிகளார் (இப்போதுள்ளவருக்கு முன்னால் இருந்தவர்) நடத்திய பட்டிமன்றங்கள், காரைக்குடி கம்பன் கழகப் பட்டி மன்றங்கள் இவை எல்லாம் அப்போது வானொலியில் ஒலிபரப்புவார்கள். ஆர்வத்துடன் உட்கார்ந்து ரசித்துக் கேட்போம். நீதிபதி எஸ்.எம்.இஸ்,மயில், நீதிபதி மஹாராஜன் போன்ற பெரியோர்கள் பங்கேற்பார்கள். கோவையைச் சேர்ந்த ஓர் வட இந்தியர் (பெயரை மறந்துட்டேன்) தமிழில் வெளுத்துக் கட்டுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னவயதில் நான் அப்பாவுடன் ஒன்றிரண்டு கவியரங்கங்களுக்குச் சென்றதுண்டு. அப்புறம் வாய்ப்பு அமையவில்லை ( நல்லவேளை)

      நீக்கு
  27. திருப்பூர் கிருஷ்ணனின் நா.பா.பற்றிய விமரிசனக்கட்டுரையைப் படிச்சிருக்கேன். திருப்பூர் கிருஷ்ணன் நா.பா.வின் அபிமானி, சீடரும் கூட. தன் ஒரே மகனுக்குக் குறிஞ்சி மலர்க் கதாநாயகன் அரவிந்தனின் பெயரைத்தான் வைத்திருந்தார். அந்த ஒரே மகன் சமீபத்திய கொரோனாவில் இறந்து போனது துரதிருஷ்டம். :(

    பதிலளிநீக்கு
  28. @ கீதா..

    /// ஆஃப்கானிஸ்தான் எல்லாம் ஒரு நாடா? பாவம் மக்கள், பெண்கள்..///

    ஆஃப்கானிஸ்தான் எல்லாம் ஒரு நாடா?.. பாவம் பெண்கள் பல வழிகளிலும்!..

    அது தான் நல்ல சட்டம்.. இங்கேயும் நடைமுறைப் படுத்தலாமா?..

    பதிலளிநீக்கு
  29. ஏர்வாடி ராதாகிருஷ்ணனை நேர் காணல் கண்டவர் ஜெயந்தன் என்பது புதிய செய்தி. அமுதசுரபியில் பரிசு பெற்றுப் பின்னர் ஃபில்ம் டிவிதனின் குறும்படமாக மாறிய கதையின் பெயரைச் சொல்லி இருக்கலாமோ?
    பானுமதியின் நியூஸ் ரூமின் செய்திகள் படித்தவை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயந்தன் கதை எதுவும் படித்திருக்கிறீர்களா? நான் படித்ததில்லை. பதிரிகையில் பெயர் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. @கீதா அக்கா: நான் எ.பி.யின் நிருபராக களப்பணி செய்து செய்திகள் சேகரிப்பதில்லை. தினசரியில் படிக்கும் செய்திகளைத்தான் பகிர்ந்து கொள்கிறேன்.

      நீக்கு
  30. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  31. ஆ... காளஹஸ்தி என்று சொல்லும்போதே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்று பாடிக்கொண்டே கிளம்பினோம்.//

    காளஹஸ்தி போய் பரிகாரம் செய்து வந்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு போய் வந்தால் நல்லது நடக்கும்.
    நம் மனம் நம்புகிறது அல்லவா! அது போதும். அதுவே நடத்தி வைக்கும்.


    சோசியரிடம் போனால் இப்படி ஏதாவது கோவில் சொல்வார்கள்தான்.

    கவிதை சாலை காட்சிகளை கண் முன் கொண்டு வந்து விட்டது, அருமை. சாலை காட்சிகள் உற்சாகத்தையும் தரும், அலுப்பையும் தரும் என்பது உண்மைதான். எத்தனை விதமான மனிதர்கள்!
    அவர்களின் மன ஓட்டத்தை சொல்லும் கவிதை அருமை.
    நேற்று "நடந்தால் கால்வலி வயதானல் தளர் நடை "என்று மகன் , மகளிடம் சொன்னேன். உங்கள் கவிதையிலும் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை வளர்ந்து மரமாகி நீண்ட நாட்களாகிறது. பழம் கிட்டவில்லை!!

      நீக்கு
  32. மற்ற பகிர்வுகளும் நன்றாக இருக்கிறது. பொக்கிஷ பகிர்வு சிரிப்பு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  33. காளஹஸ்தி தரிசனம் நன்று. எங்கும் கையூட்டு.

    புடலங்காய்,முருங்கைக்காய் விலை மலிவாக உள்ளது.
    ஜோக்ஸ் ஹா..


    பதிலளிநீக்கு
  34. பதிவின் தலைப்பு அருமை.

    //மனமே நீ ஈசன் நாமத்தை
    வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்//

    தலைப்பை படித்தவுடன் நினைவுக்கு வந்த பாடல்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... என் அப்பாவுக்குப் பிடித்த பாடகர்! எனக்கும் அவரது நிறைய பாடல்கல் பிடிக்கும். தேவகோட்டைஜியும் அவர் ரசிகர் என்றும் தெரியும்!

      நீக்கு
  35. மீ லாண்டட்ட்ட்ட்:)..

    ஏன் தோசம் இருந்தால்தான் ஈஸ்வரனை நினைப்பினமோ? ஒருவேளை இங்கு தோசம் என்பது பிரச்சனை+துன்பங்களைக் குறிக்குமோ...

    //நாம் மறுதளித்த//
    இதில எனக்கு கொயப்பமாக இருக்கு ஸ்ரீராம், இதில் ளி சரியா? லி சரியா? நான் நினைப்பது மறுதலித்த என வரோணும் என, சரியாகத் தெரியவில்லையே... டமில்ப் புரொபிசரைக் கூப்பிடுங்கோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில தோஷங்களுக்கு சில தலங்கலளை பரிகார ஸ்தலமாக சொல்வார்கள். ராகு, கேது மற்றும் காலசர்ப்ப தோஷத்துக்கு காளஹஸ்தி ப்ரபலம்.

      நீக்கு
  36. காளகஸ்தி, எனக்கு மிகவும் நெருக்கமாக ஏதோ அடிக்கடி கேட்டுப்பழகிய ஒரு பெயராக இருக்குது, ஏனென எனக்கு இப்போ நினைவு வரவில்லை.

    // இருவருமே திருவோண நட்சத்திரத்துக்காரர்கள்! //

    ஓ எங்கள் மகன்கள் இருவரும் நட்சத்திரம் வேறு ஆனா ஒரே ராசி, ஒரே நம்பர் ஹா ஹா ஹா.

    ஒரே நட்சத்திரகாரர் வீட்டில் ஒன்றாக இருந்தால் சண்டை வரும் எனச் சொல்வார்கள்.. உங்கள் இருவரும் அப்படி இல்லைத்தானே ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே பரிகார விஷயமாக உங்களுக்குத் தெரிந்த யாரேனும் இந்தத்தலம் பற்றி சொல்லி இருக்கக் கூடும்.

      மகன்கள் இருவரும் ஓரளவுக்கு சண்டையிட்டுக் கொள்வார்கள். ரொம்ப எல்லாம் கிடையாது. இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உண்டு.

      நீக்கு
  37. //எல்லோரும் ஒரே மாதிரி பதிலைச் சொன்னார்கள். "இந்த ஸ்தலத்தில் கால் வைத்து விட்டாலே போதும்"

    அங்கிருந்து உள்ளேயிருந்தபடி கோவிலை ஒரு நீள்பார்வையில் பார்த்தபோது தெய்வீகமாக உணர்ந்தோம்.....//

    இது உண்மைதான் எங்களுக்கும் இதில் நம்பிக்கை உண்டு, கோயில் வளவில் கால் வைப்பதற்கே ஒரு கொடுப்பனை வேண்டும், எத்தனை பேர் சின்ன வயசிலிருந்தே சில கோயிலுக்குப் போக நினைப்பர், காசு, வசதி இருந்தாலும் போக முடியாமல் ஆகிடும்... கால நேரம் சரிவரும்போது அது தானாக நடக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குமே அந்த உணர்வு வந்தது அதிரா. அங்கிருக்கும்போது சிலிர்த்தது உண்மை.

      நீக்கு
  38. கவிதை சூப்பர்.. ரசித்தேன்..

    நீங்கள் ரசித்தவைகள் நானும் ரசிக்கிறேன், பொக்கிசம் அப்பவே இப்படி இருந்திருக்கே, இப்படி இது புழக்கத்தில் உலா வருது...

    பதிலளிநீக்கு
  39. ஸ்ரீராம் பிளீஸ் உள்பெட்டியைச் செக் பண்ணவும்.. என் கிணற்றைக் காணம், சே சே டங்கு ஸ்லிப்பாகுதே:) என் கொமெண்ட்ஸ் ஐக் காணம்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... இதோ பார்க்கிறேன்.

      நீக்கு
    2. கொண்டு வந்து சேர்த்து பதிலும் அளித்து விட்டேன் அதிரா... நன்றி.

      நீக்கு
  40. கீதா அக்காவின் கவனத்துக்கு... இன்றைய பதில்கள் யாவும் அழகி மென்பொருள் வாயிலாகக் கொடுக்கப்பட்டவை!

    பதிலளிநீக்கு
  41. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காளஹஸ்தி, சிதம்பரம், திருவண்ணாமலை,திருச்சி தாயுமானவர் கோவில் போன்ற கோவில்களில் நிலவும் தெய்வீக சாந்னித்தியம் அலாதி.

      நீக்கு
  42. இன்றைய பதிவு ஏனோ சோர்வாக இருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  43. பரிகாரப் பரிந்துரைகள் அதிகமாகி விட்டன. / "இந்த ஸ்தலத்தில் கால் வைத்து விட்டாலே போதும்"/ உண்மை. இது பொதுவாக எல்லா கோயில்களுக்கும் பொருந்தும். நாம் சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரம்தான் என்பது என் கருத்து.

    நாம் மாலைப் பார்வை - எதார்த்தம். நியூஸ் ரூம் - நன்றி! தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!