புதன், 23 ஆகஸ்ட், 2023

கணவர் / மனைவியோடு பார்த்த முதல் படம் எது?

 

சந்திரயான் நிலவை நெருங்கிக் கொண்டிருக்கும் காலம் என்பதால், நீங்கள் எல்லோரும் கேள்விகள் கூட கேட்காமல் டென்ஷன் ஆக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். 

அதனால் நாங்க கேட்டுவிடுகிறோம். 

பதில் சொல்லுங்கள். 

1) மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் - எந்த உதவியும் கிடைக்காமல் திகைத்து நின்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? எங்கு? எப்போது? எந்த சூழ்நிலையில்? 

2) வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு விஷயம் நமக்கு மட்டும் பிடிக்காமல் இருக்கும். உங்களுக்கு அப்படி ஏதாவது உண்டா? அது எது?

3) பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில், புத்தகங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள உங்கள் புத்தகங்களை பைண்ட் செய்து வைத்துக்கொள்வீர்களா? அல்லது அட்டை மட்டும் போடுவீர்களா? அல்லது அதுவும் கிடையாதா?  

4) படித்த காலத்தில், உங்கள் ஊரில் இருந்த எல்லா தியேட்டர்களிலும் சினிமா பார்த்திருக்கிறீர்களா? 

5) நீங்கள் உங்கள் கணவர் / மனைவியோடு பார்த்த முதல் சினிமா எது? எந்த ஊர்? எந்த தியேட்டர்? 

= = = = =

KGG பக்கம் : 

இன்றைய எனது பக்கம், மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு என்னுடைய பதில்களாக அமைகிறது. 

1) பதினைந்து வருடங்களுக்கு முன்பு (என்று ஞாபகம்) நானும் என் மனைவியும், call taxi பிடித்து, நாரத கான சபா சென்றோம். சுதா ரகுநாதன் கச்சேரி என்று நினைக்கிறேன். போகும்போது மிக மிக சாதாரணமாக இருந்த வானிலை கச்சேரி முடிந்து வெளியில் வந்து பார்க்கும்போது பயங்கர மழை. கொட்டு கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. பஸ் ஸ்டாண்ட் போய் நின்றால் வந்த பஸ் எதுவும் நிற்கவில்லை - எல்லாவற்றிலும் புளியடைத்த மாதிரி கூட்டம். டாக்ஸி எதுவும் நிற்கவில்லை. ஆட்டோ எல்லாம் ஆட்களோடு விர் விர்ரென்று சென்றன. கிட்டத் தட்ட முக்கால் மணி நேரம் செய்வதறியாமல் திகைத்து நின்றுகொண்டிருந்தோம். அதுதான் எனக்கு ரொம்ப நேரம் உதவி கிடைக்காமல் திகைத்து நின்ற சந்தர்ப்பம். தெருக்களில் எல்லாம் முழங்கால் ஆழம் தண்ணீர் நின்றது. எதிர் திசையில் வந்த ஒரு ஆட்டோ டிரைவர் எங்களைப் பார்த்து மனம் இரங்கி, அருகே அழைத்து எங்கே போகவேண்டும் என்று கேட்டார். ' நாங்கள் போகவேண்டியது குரோம்பேட்டை. ஆனால் நீங்கள் ஏதாவது ஒரு சபர்பன் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு சேர்த்தீர்கள் என்றால் நல்லது' என்றேன். அவர், " சார் நான் மண்ணடி பக்கம் போகிறேன். உங்களை பார்க் ஸ்டேஷன் அருகே இறக்கி விடுகிறேன்" என்றார். ' அது போதும் என்று மழையில்  மிக மிக மெதுவாக ஊர்ந்து சென்று பார்க் ஸ்டேஷன் அருகே இறங்கிக்கொண்டோம். அந்த ஆட்டோ டிரைவரராகிய முஸ்லிம் பெரியவருக்கு மனமார வாழ்த்து சொல்லி, நூறு ரூபாய் கொடுத்தோம். 

2) எனக்கு ரவா உப்புமா பிடிக்காது. வீட்டில் உள்ள மீதி எல்லோருக்கும் பிடிக்கும். 

3) என்னுடைய புத்தகங்களுக்கு அண்ணன் அல்லது அக்கா அட்டை போட்டுக் கொடுத்துவிடுவார்கள். 

4) நான் படித்த ஊரில் இரண்டே இரண்டு தியேட்டர்கள்தான். இரண்டிலும் பல சினிமாக்கள் பார்த்துள்ளேன். 

5) மனைவியோடு சேர்ந்து முதலில் பார்த்த படம் : அமர் அக்பர் ஆண்டனி. ஊர் : கோயம்புத்தூர். தியேட்டர் பெயர் ஞாபகம் இல்லை. (சென்ட்ரல் ?) 

= = = = = = = =

அப்பாதுரை பக்கம் : 

உரித்தால் உரியும் வெங்காயம்

சர்வ லோகே ஆவ்ருத்ய திஷ்டதி என்று கீதையில் கண்ணனைப் பற்றி வருகிறது. வருகிறதாவது? கீதையே கண்ணன் சொன்னதாகத் தானே சொல்றாங்க? யார் சொல்றாங்கனு அடுத்த கேள்வியா அதுக்குள்ளே? விடுங்க. விஷயம் என்னான்னா அனைத்து உலகங்களிலும் வியாபித்திருக்கும் தன்மையவன் கண்ணன் என்ற பொருளில் வரும் கீதை வரிக்கு உதாரணமும் விளக்கமும் உண்டு.  உதாரணத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னால என் பாட்டி கதையா சொன்னாங்க. அது மெய்ஞானம்னு மறந்துட்டேன். விளக்கத்தை  இப்ப ஆய்வுச் செய்தியா சமீபத்தில படிச்சேன். இது விஞ்ஞானம்னு அசந்துட்டேன்.

ஒரே நேரத்தில் பல இடங்களில் வியாபிக்க சாத்தியப்படும்னு இப்ப சொல்றாங்க.  எப்படினு பார்த்தா இதான் மேட்டரு. 

அந்த பெரிய வெங்காயத்தை எடுப்பா, உரிப்போம்.

ஒளியின் வேகம் பற்றித் தெரிஞ்சிட்டிருப்போம் (சென்னைல கரெண்ட் கட்டாவுறத பத்தி சொல்லலிங்க).  ஒளியின் வேகம் பற்றிய புரிதல்னாலதான் சூரியன் சந்திரன் அகில உலகம் அண்டம் கிரகம் காலம் எல்லாவற்றையும் அறியவும் அளக்கவும் முடியுது. அதுல கடைசியா சொன்னேன் பாருங்க காலம்.. அதுக்கு வருவோம். (காலம் பத்தி காளிதாசனும் கண்ணதாசனும் சொன்ன கவிதைகளை இன்னொரு காலத்துக்கு வச்சுக்குவோம்.) இப்ப விசயத்துக்கு. 

காலம் என்பது பல வகைகளில் நம் தினசரி வாழ்வின் அடிப்படையாகிறது. நேற்று இன்று போன்ற நாள் கணக்கு, காலை மாலை போன்ற பொழுதுக் கணக்கு, வயது, கடைக்கு ஆபீசுக்கு போய் வரும் நேரம், குழந்தை வாலிபம் வயோதிகம் போன்ற உடல் முதிர்ச்சிக் கணக்கு, பிறப்பு இறப்பு போன்ற ஆயுள் கணக்கு...  என்று நம் இயக்கம் எல்லாமே கால அடிப்படையில் தான் என்பது பிரமிக்க வைக்கிறது இல்லையா? அப்படிப்பட்ட இந்தக் காலத்தின் அடிப்படையோ ஒளியின் வேகம் என்றால் அந்த ஒளியின் வேகத்தை கொஞ்சம் அசைச்சுப் பார்த்தால் ஏதாவது புரியுமா என்று பார்க்கத் தோன்றுமா தோன்றாதா?  அட எனக்கில்லிங்க.. பட்ச்ச விஞ்ஞானிங்களுக்கு தோணுமானு கேட்டேன்.

ந்யூடன் ஐன்ஸ்டைனிலிருந்து பல விஞ்ஞானிகள் சென்ற பல நூறு வருடங்களாக அசைத்துக் கொண்டிருக்கிற சமாசாரம் இது. சமீபத்தில் இந்த பரிமாண கட்டமைப்பு விதிகளை மாற்றினால் காலம் பரவிய இருப்பு ஒரே நேரத்தில் சாத்தியம்னு கண்டுகிறாங்க சில செர்ன் விஞ்ஞானிங்க. தமில்ல சொல்லணும்னா பச்ச கொய்ந்தேலந்து படுகெயம் வரைக்கும் நாம மாறினாலும் நமக்கு பிடிச்ச பருவத்துக்கு டக்குனு இட்டாற ஒரு டெக்குனிக்கு. ஒரே டயத்துல கொய்ந்தையா அம்மா மடில படுத்துட்டு நிம்மதியா இருக்கலாம், அப்பன் கிட்ட அடிவாங்கிட்டு ஓடுற பத்து வயசு காலிப்பயலா இருக்கலாம், பக்கத்து ஊட்டு பச்சக்கிளியோட இச்சக் பண்ற இருபத்திரண்டு வயசு தறுதல.. இப்படி வகைக்கு ஒண்ணாவும் ஒரே டயத்துல இருக்கலாம்.  இதான் மேட்டரு.

காலம் பரவிய இத்தகைய வியாபிப்பிற்கான அடிப்படை கணிதங்களை சமீபத்தில் சமர்பித்திருக்கிறார்கள் செர்ன் இயக்க விஞ்ஞானிகள். (செர்ன் இயக்கத்தின் கடவுள் அணு பற்றி நமக்கு ஏற்கனவே தெரியுமே). 

வெங்காயத்தை உரிச்சுக்கிட்டே வருவோம்.

மூன்று இடப்பரிமாணங்கள்: நீளம், அகலம், உயரம். ஒரு நேரம் அல்லது காலப் பரிமாணம். இவை தான் நமக்குத் தெரிந்த நான்கு பரிமாணங்கள்.  ஒளியின் வேகத்திலோ அல்லது வேகத்தை விட அதிகமாகவோ நாம் பயணிக்க முடிந்தால் காலத்தை நில்லென்று சொல்லும் மாயம் கைக்கு வரப்பெறுவோம்னு ஐன்ஸ்டைன் மேற்சொன்ன நான்கு பரிமாணங்களையும் புரட்டிப் போட்டு பலவிதமான கணக்கு போட்டு ரிலெடிவிடி தியரினு ஒரு மண்டைக்காய்ச்சலை நமக்கு குடுத்துட்டு போனாரு.  ஐன்ஸ்டைனுக்கு முன்னால இதை ஆர்யபட்டா சொன்னாருனா ஆருயா அந்த பட்டானு கேப்பாங்க.. விடுங்க. ஆனா இப்ப இந்த செர்ன் ஆசாமிங்க இன்னா சொல்றாங்கன்னா.. காலப் பரிமாணங்கள் மூன்று, இடப்பரிமாணம் ஒன்று என்று இந்தக் கணக்கை மாற்றிப்போட்டால் அஷ்டே! ஒரே நேரத்தில் (இடத்தில்) பல நேரங்களில் (இடங்களில்) வியாபிக்க முடியும்னு பக்கம் பக்கமா கணக்கு போட்டு நிரூபிச்சுட்டாங்க. QED. ஜுஜுபி.

மஸ்கு மாதிரி ஆளுங்களுக்கு இது ரஸ்கு தின்ற மாதிரி.  அவுரும் இன்னும் சில செல்வந்தர்களும் இந்தக் கணக்கை ஆளுக்கு பிலியன் செலவு பண்ணி நிஜவுலகுக்கு கொண்டுட்டு வந்துருவாங்க. எனக்கு ஒரு சந்தேகமுமில்லே.  மனுசன் நூறு வயசு வாழுறதுன்றது இப்ப சாதாரணமா போயிட்ட பிறகு பொழுது போக வேணாமா? 

அட இன்னாபா இது.. இவ்ளோ பெரிய வெங்காயம் கைல இருந்துச்சு.. உரிச்சிக்கிட்டிருந்தேன்..?

பாட்டி சொன்ன கதைக்கு வருகிறேன். ப்ருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த காலம்.  ஆண் பெண் சிறியவர் முதியவர் ஆடு மாடு பறவை என்று கண்ணனை அறியாத உயிரில்லை. கண்ணன் அறியாத 

உயிருமில்லை.  தினம் இதைப் பார்த்த பிரம்மாவுக்கு ஒரு நாள் மிகப்பொறாமை.  கண்ணனின் அன்புக்குப் பாத்திரமான பல நூறு உயிர்களை அவரவர் வீடு அதனதன் இடங்களில் தன் மாயையினால் மறைத்து விட்டு தானும் காணாமல் போய் விடுகிறார்.  பிரம்ம நேரக் கணக்குப்படி சாப்பிட்டு தூங்கி மெள்ள ஆடி அசைந்து  வந்து பிருந்தாவனத்தில் பார்த்தால்.. தான் மறைத்து வைத்த உயிர்கள் எல்லாம் கண்ணனோடு விளையாடிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும்..  தன் ஞானக் கண்களால் பார்த்தார்.  தான் மறைத்த அத்தனை உயிர்களும் மறைந்த நிலையிலேயே இருந்தன. ஆனால் கண் எதிரே கண்ணனுடன் அதே உயிர்கள் அதே உடலுடன்.. இதெப்படி சாத்தியம்?  பிரம்மாவுக்கு குழப்பம். கண்ணனிடம் சரணடைந்து விளக்கம் கேட்கிறார். கண்ணன் சொன்ன விளக்கம் இங்கே முக்கியமில்லை (அதை அழகாகச் சொல்ல அக்கா கீதா சாம்பசிவம் இருக்காங்க இல்லே?). கண்ணன் பிரம்மனுக்கு அதோ பார்னு கைகாட்டுனது தான் இங்கே முக்கியம். பிரம்மன் பார்த்த திசையில் பிரம்மனைப் போலவே நூறு பிரம்மன்கள்! 

(மறுபடியும் கீசா சரண்).

பின்னொரு காலத்தில் :-) கீதையில் கண்ணன் தன்னைக் காலன் என்று சொல்கிறான். என்ன பொருள்? அண்டங்கள் உலகங்கள் எல்லாம் கால அடிப்படையில் இயங்குவதை இங்கே கவனிப்போம். (இதுக்கும் இப்ப செர்ன் ஆசாமிங்க விளக்கம் கொடுத்துட்டாங்கனு தோணுது).

அவ்ளோ தானா? எங்கேப்பா வெங்காயம்? 

வால்: 

பாட்டி சொன்ன கதையை விட்டு இப்ப படிச்ச கதைக்கு வந்தா செர்ன் விஞ்ஞானிகள் அதையே மாத்திப் போட்டு சொல்லியிருக்காபல தோணுது. இடப் பரிமாணங்கள் இந்த உலகுக்கு, காலப் பரிமாணங்கள் பரந்த உலகப் பயணத்திற்கு என்று கணக்கு போட்டு நிரூபிச்சிருக்காங்க.  அதை வைத்து இணையுலகப் பயணங்கள் (ஒளி வேகப் பயணம்) தொடங்க மஸ்காதி மகானுபவர்கள் முயற்சியைத் தொடங்கிவிட... கண்ணன் காலத்தில் இணையுலகம் சர்வ சாதாரணமாக இருந்ததோ என்ற பக்திக்கப்பாற்பட்ட ஐயம் ஏற்படுகிறதே?  

குட்டிவால்:

இங்கே என் எண்ணங்களுக்குத் துணையானவை: kmit மாணவர்களின் சுவாரசியமான ப்லாக் kmitre, sciencealert இணைய தளம், மற்றும் பகவத்கீதை கோனார் நோட்ஸ்.

= = = = = =

118 கருத்துகள்:

  1. எந்த உதவியும் கிடைக்காமல் திகைத்து நின்ற...... இக்கட்டான, திகைத்த, என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியாத நிலைமைகள் பல வந்து, எங்கிருந்தோவெல்லாம் உதவிக் கரங்கள் நீண்டு, அதனைத்தாண்டி வந்திருக்கிறேன். இறைவன் என்னைக் கைவிட்டதில்லை என்று எல்லாச் சமயங்களிலும் நான் உணர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பு மனைவியுடன் நான் பார்த்த படம் கருத்தம்மா....டிக்கெட்டுக்கான மீதி சில்லறையை வாங்க மறந்தேன். படத்தை ரசித்துப் பார்த்தேன். இப்போது, ரொமான்ஸ் மூடு இல்லாமல் இந்த மாதிரி படத்துக்கா கூட்டிச் செல்வார்கள்? என யோசிக்கிறேன். படம் பார்த்துவிட்டு வந்ததும், "மாமியார்" பொசிஷனுக்கு வரும் கடுகடுப்பையும் முதன் முதலாகப் பார்த்த தருணம் அதி (அம்மாவின் கடு கடு சொற்களின் மூலம்)

    பதிலளிநீக்கு
  3. 1) மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் - எந்த உதவியும் கிடைக்காமல் திகைத்து நின்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? எங்கு? எப்போது? எந்த சூழ்நிலையில்?
    சில வருடங்களுக்கு முன். சவுதியில்.

    2) வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு விஷயம் நமக்கு மட்டும் பிடிக்காமல் இருக்கும். உங்களுக்கு அப்படி ஏதாவது உண்டா? அது எது?
    ஊறுகாய்.

    3) பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில், புத்தகங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள உங்கள் புத்தகங்களை பைண்ட் செய்து வைத்துக்கொள்வீர்களா? அல்லது அட்டை மட்டும் போடுவீர்களா? அல்லது அதுவும் கிடையாதா?
    அதுவும் கிடையாது. ஏழு எடடாம் வகுப்புகளில் நாங்கள் நாலைந்து பேர் வடடம். வீட்டில் வாங்கிக்கொடுத்த புத்தகங்களை ஆளுக்கு ஒரு சப்ஜெக்ட் மட்டும் கையில் வைத்துக் கொண்டு பிற புத்தகங்களை பிற மாணவர்களுக்கு விற்று விட்டு பரீட்சை நேரத்தில் எங்கள் கையில் இருந்த புத்தகத்தை மாற்றி மாற்றிப் படித்துத் தேறினோம்.. (பிட் அடித்தும் தேறினோம்). புத்தகம் விற்ற காசில் குரோம்பேட்டை லெதர் கம்பெனி தாண்டி அய்யர் ஒடடலில் நிறைய மசால் தோசை சாம்பார் சாப்பிட்டேன். ஒன்பதாம் வகுப்பில் அந்த வட்டம் காணாமல் போனது.

    4) படித்த காலத்தில், உங்கள் ஊரில் இருந்த எல்லா தியேட்டர்களிலும் சினிமா பார்த்திருக்கிறீர்களா?
    பக்கத்துக்கு ஊர் தியேடடார்களிலும்.

    5) நீங்கள் உங்கள் கணவர் / மனைவியோடு பார்த்த முதல் சினிமா எது? எந்த ஊர்? எந்த தியேட்டர்?
    நினைவில்லை. (அப்படி ஒரு படமா?) ஊர் மினியேபலீஸாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. அப்பாத்துரையின் பகுதி அசரடிக்கிறது. தெரிந்த விஷயம், எழுத்தின் வன்மையால் மிகவும் ரசிக்கும்படி ஆகிறது.

    பழைய காலத்துக்குச் சென்று திரும்புதல் சுவாரசியம் என்றாலும், அதனால் என்ன பயன்? எதையும் மாற்ற சாத்தியமில்லை எனும்போது?

    ராஜராஜன் காலத்துக்குச் சென்று பார்க்கணும் என நினைத்துப் போனால், நம் அனுபவம், ஒரு எலியைப் பிடித்துச் சாப்பிட்டது, பகைவனுக்குப் பயந்து சரசரவென ஊர்ந்து மறைந்தது என்பது மட்டுமே அனுபவமாகிவிடும், அப்போது நாம் பாம்புப் பிறவி எடுத்திருந்தால்.

    பதிலளிநீக்கு
  5. சாப்பிடும் விஷயத்தில் நான் தனி மரம். வீட்டில் எல்லோரும் சாப்பிடும் உணவுகளில் பல எனக்குப் பிடிக்காது, நான் சாப்பிட்டதில்லை. இந்தக் குணத்தால் பாதிக்கப்பட்டது என் மனைவிதான். புதிய உணவை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்குக் கிடையாது.

    பதிலளிநீக்கு
  6. புதன் கேள்வி என்றதும் சட் என்று என் மனதுக்குத் தோன்றுவது,

    தினமும் பதிவு வெளியிட்டுவிடும் தில்லி வெங்கட் நாகராஜுக்கு என்னாச்சு? யமுனை கரைபுரண்டு ஆபத்தான நிலைமையில் ஓடியகோதும் பதிவுகள் வெளியிட்டவர், சமீபத்தில் ரொம்பவே இடைவெளி கொடுத்திருக்கிறாரே.... இணையம் இல்லா இடத்தில் பணிகளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெ நா மேடைக்கு வரவும்.

      நீக்கு
    2. பணிச் சூழல் காரணமாக பதிவுகள் எழுதுவதில், நண்பர்களின் பதிவுகள் படிப்பதில் பெரிய இடைவெளி. விரைவில் எழுத முயற்சிக்கிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத் தமிழன் மற்றும் அப்பாதுரை.

      நீக்கு
    3. நன்றி. வெ நா. வாழ்க வளமுடன்.

      நீக்கு
  7. நண்பர் அப்பாதுரை பக்கம் நான் அவ்வளவு ஆழ்ந்து அறியாத விஷய ஞானத்தைக் கிளர்த்தியிருக்கிறது. பின்னூட்டங்களில் இன்றைய இந்தப் பகுதி உள்ளடக்கம் பற்றி எத்தனை பேர் பிரஸ்தாபித்து ஒரு அறிவு பூர்வமான உரையாடலை ஆரம்பித்து வைக்கிறார்கள் அவற்றின் மூலமும் அதற்கான அப்பாதுரையாரின் விளக்கங்கள் மூலமும் இன்னும் என்னன்ன மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்பதற்காகவும் காத்திருகிறேன். எளிமையான நடையில் எனக்கு அவ்வளவு எளிமையில்லாத விஷயத்தைத் தொட்டு எழுதிய நண்பர் துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கருத்துரை எதுவும் வழங்கவில்லை, ஐயா. துரை அவர்களின் பதிவைத் தொடர்ந்த மேலதிக விளக்கங்களுக்குக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  8. மாயம் வாழ்வே மாயம்
    நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
    காணும் சுகமே மாயம்

    செர்ன் விஞ்ஞானிகள் கணக்கு போட்டு கடவுளைக் கண்டதை நாம் ஒரு ஒற்றை வார்த்தையில் "மாயை" என்று சுலபமாக விளக்கி விடுகிறோம்.
    குவாண்டம் சித்தாந்த்தைப் பற்றி சுஜாதாவும் விளக்கியிருக்கிறார். அப்பாதுரை சாரும் விளக்கியிருக்கிறார். ஆனால் இவ்வாறு சிந்தித்து "கடவுளைக் காண்பது" எதற்காக என்ற விரக்தியும் தோன்றுகிறது.

    வாழ்வு என்பதே மாயை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்குள் அடுத்த டவுட்.
      மாயம் என்பதும் மாயை என்பதும் ஒன்றா ஐயா?

      அதற்கு அடுத்த டவுட்.

      மாயம்ன்னா என்னன்னு கூகுளில் கேட்டேன்.
      இல்லாதது இருப்பது போலத் தெரிவது மாயமாம்.
      அப்போ இருப்பதும் இல்லாதது போலத் தெரிவதும் மாயமா
      ஜெஸி ஸார்?

      நீக்கு
    2. விஷயம் டைவர்ட் ஆகாதிருக்கக் கடவது..

      நீக்கு
    3. சிற்றறிவு. மாயம் : மறைந்திருப்பது. மாயை : எல்லாவற்றிற்கும் அடிப்படை. துகள் என்றால் துகள். அலை என்றால் அலை. ஒரே சமயத்தில் இரு வேறு தளங்களில் காட்சி போன்றவை இதில் அடங்கும். அடுத்த குழப்பம்???

      நீக்கு
    4. மாயை சக்தியாகும்.
      மாயம் சக்தியின் வெளிப்பாடாகும்.
      என்று நினைக்கிறேன்.

      மாயம் என்பது நிஜம் போல் ஆனால் நிஜமில்லை என்று சொல்லலாமா? கனவின் மாயா லோகத்திலே...

      நீக்கு
    5. இருப்பதை இல்லாதது போல் செய்வதும் மாயம் தான். மாதக் கடைசி மணிபர்ஸ் போல.

      நீக்கு
    6. சிந்தித்து கடவுளை காண வேண்டியது மனித வி(ரக்)தி என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    7. பல விஷயங்களை இளமையில் சொல்லிக் கொடுத்த மாதிரி சொல்கிறோம் என்று நினைக்கிறேன்.
      உதாரணத்திற்கு பச்சை, சிவப்பு, நீலம் என்று நிறங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் பர்ப்பிள் என்று சொல்வது இந்தியாவில் பர்ப்பிள் இல்லை. இந்த மாதிரியே ஒவ்வொன்றும்.

      நீக்கு
    8. ஒளியின் அலைவரிசை வேறுபாடுகளே நிறங்கள். இந்த அலைவரிசையை உள்வாங்கும் சக்தி பெற்ற கண்கள் நரம்பு மண்டலத்தின் மூலம் மூளைக்கு கடத்தப்படும் செய்திக்கேற்ப நிறவேறுபாடுகளை நமக்குக் கற்பித்தவாறு நாம் புரிந்து கொள்கிறோம். அவ்வளவு தான். இப்படித் தான் ஒவ்வொரு விஷயமும் என்று கொண்டால் அது தவறா துரை ஸார்?

      நீக்கு
    9. பச்சை நிறத்தை சிவப்பு என்று ஒருவன் கற்றிருந்தான் என்றால் அவனைப் பொருத்த மட்டில் அவனுக்கு அது சிவப்பு. அவ்வளவு தான் விஷயமே.
      அறிவு புரிந்து கொள்ளும் 'இருப்பதும் இல்லாததும்' கூட இப்படித் தான். கற்பதின் வழி கற்றவைகள் தீர்மானமாகின்றன என்று கொள்ளலாமா ஸார்?
      சந்திரயான் பற்றி நமக்குத் தெரிய வரும் தகவல்களை 'ஓ.. அப்படியா?' என்று அது பற்றி அறிந்த அறிவாக ஏற்றுக் கொள்கிறோம். அவ்வளவு தான்.
      பிற்காலத்தில் அத்தனையும் தப்புக் கணக்கு என்று அறிய வந்தால் தவறு. இவ்வளவு தான் விஷயம்.

      நீக்கு
    10. //அமெரிக்காவில் பர்ப்பிள் என்று சொல்வது இந்தியாவில் பர்ப்பிள் இல்லை.// - ஜீவி சார்... நமக்குக் கற்றுக்கொடுத்தது, நாம் பார்க்கும் (அல்லது relate செய்ய முடிந்த) நிறங்கள். வயலெட்டுக்கு வாடா மல்லி, கத்தரி, ரோஸுக்கு ரோஜாப்பு, சிவப்புக்கு இரத்தம் என்பது போல. இப்போ நீங்க purple என்று சொல்லும்போது அந்த நிறத்தை நான் சிறுவயதில் படித்ததில்லை என்றுதான் தோன்றுகிறது.

      நீக்கு
    11. வெளியில் நிறமில்லை ஒளியினால் நிறம் என்பதே மிகப் பெரிய வியப்பு தானே? வீணைக்குள் புதைந்திருக்கும் ராகம் என்று கண்ணதாசன் வரி நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
    12. பழுப்பு நிறத்தைத் தான் purple என்று அன்னாட்களில்
      சொல்வதுண்டு.

      நீக்கு
    13. Brown -க்கும் Purple -க்கும் இடையே மெல்லிய வித்தியாசம்.

      நீக்கு
  9. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. 1) மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் - எந்த உதவியும் கிடைக்காமல் திகைத்து நின்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? எங்கு? எப்போது? எந்த சூழ்நிலையில்?

    உண்டு. இரண்டாவது மகன் பிரசவத்திற்காக நான் மனைவி முதல் மகன் மூவரும் மனைவி ஊரான கோவைக்கு ரயிலில் பயணம். நடுவில் கொல்லத்தில் இறங்கி வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது ரயில் புறப்பட்டு விட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. கையில் டிக்கெட் இல்லை, பணமும் கொஞ்சம் தான். பின்னர் மனைவி மகன் திரும்பி நான் நிற்கும் கொல்லம் ஸ்டேஷனுக்கு வந்தது. மீண்டும் ரயிலில் கோவைக்கு சென்றது என்றது எல்லாம் ஒரு சிறுகதையாகவே எழுதலாம்.

    2) வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு விஷயம் நமக்கு மட்டும் பிடிக்காமல் இருக்கும். உங்களுக்கு அப்படி ஏதாவது உண்டா? அது எது?

    பப்பாளிப் பழம்.

    3) பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில், புத்தகங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள உங்கள் புத்தகங்களை பைண்ட் செய்து வைத்துக்கொள்வீர்களா? அல்லது அட்டை மட்டும் போடுவீர்களா? அல்லது அதுவும் கிடையாதா?

    நான் வாங்குவதே பழைய புத்தகங்கள் தான். பாதிவிலை, 3ல் ஒன்று என்றெல்லாம் பேரம் பேசி வாங்குவேன். காரணம் புத்தகம் வாங்க கிடைக்கும் தொகை 5 ரூபாய் தான். மீதி என்னிடம் உள்ள கடந்த வருட புத்தகங்களை விற்று முதலாக்க வேண்டும். அட்டை கடைசி பக்கங்கள் போன்றவை புத்தகங்களுக்கு இருக்காது.

    4) படித்த காலத்தில், உங்கள் ஊரில் இருந்த எல்லா தியேட்டர்களிலும் சினிமா பார்த்திருக்கிறீர்களா?

    உண்டு இருந்தது மூன்று தியேட்டர்கள். நியூசினிமா, முத்தையா, பாடலி. அப்பா கமர்சியல் டாக்ஸ் ஆஃபிஸில் டைப்பிஸ்ட். இரண்டாவது இரவு காட்சியில் ஓ சி யில் அப்பாவுடன் செல்வேன். போர் என்றால் உறங்கி விடுவேன். ஓ சி டிக்கெட் பாக் பெஞ்சில் தான்.

    5) நீங்கள் உங்கள் கணவர் / மனைவியோடு பார்த்த முதல் சினிமா எது? எந்த ஊர்? எந்த தியேட்டர்?

    நினைவில்லை. காரணம் அன்றைய திருவனந்தபுரத்தில் தமிழ் சினிமா காண நிறைய பயணிக்க வேண்டும். முதலில் பார்த்தது ஷோலே என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. 1) மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் - எந்த உதவியும் கிடைக்காமல் திகைத்து நின்ற அனுபவம் உங்களுக்கு உண்டா ? எங்கு ? எப்போது ? எந்த சூழ்நிலையில் ?

    1) அபுதாபியில் நிறைய உள்ளது ஆனால் இறைவன் துணையால் அவைகள் நீங்கி இருக்கிறது.
    ***********************

    2) வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு விஷயம் நமக்கு மட்டும் பிடிக்காமல் இருக்கும். உங்களுக்கு அப்படி ஏதாவது உண்டா ? அது எது ?

    2) நான் கடந்த முப்பது வருட காலமாக எதையுமே பிடிக்கவில்லை என்று சொன்னது கிடையாது. வெறுப்பை வெளியில் காட்டாமல் உண்டு விடுவேன்.
    ***********************

    3) பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில், புத்தகங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள உங்கள் புத்தகங்களை பைண்ட் செய்து வைத்துக்கொள்வீர்களா ? அல்லது அட்டை மட்டும் போடுவீர்களா? அல்லது அதுவும் கிடையாதா ?

    3) கண்டிப்பாக அட்டை போட்டு பத்திரப்படுத்தி விடுவேன்.
    ***********************

    4) படித்த காலத்தில், உங்கள் ஊரில் இருந்த எல்லா தியேட்டர்களிலும் சினிமா பார்த்திருக்கிறீர்களா ?

    4) தேவகோட்டை லட்சுமி, சரஸ்வதி, அருணா மூன்றிலும் திரைப்படங்கள் பார்த்து இருக்கிறேன் அதிகம் அல்ல இன்று சரஸ்வதி தியேட்டர் இல்லை.
    ***********************

    5) நீங்கள் உங்கள் கணவர் / மனைவியோடு பார்த்த முதல் சினிமா எது ? எந்த ஊர் ? எந்த தியேட்டர் ?

    5) மனைவியோடு முதலில் பார்த்த திரைப்படம் பரமக்குடி சாந்தி தியேட்டர் சின்னதம்பி, கடைசியாக பார்த்த திரைப்படம் பரமக்குடி ஓம் சண்முகா தியேட்டர் கும்மிப்பாட்டு. இன்று மனைவியும் இல்லை இரண்டு தியேட்டர்களும் இல்லை.
    ***********************

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்தாவது பதில் கண் கலங்க வைத்துவிட்டது.

      நீக்கு
    2. நான் பரமக்குடி ரவி தியேட்டரில் பார்த்த ராஜ ராஜ சோழன் படம் நினைவுக்கு வந்தது. அப்போ, தியேட்டரின் உள் பக்கம் மேல் பகுதியில் இருக்கும் டோம் லைட் அணைந்ததும் படம் திரையில் வரும். அதனால் நடிகர்கள் மேலே தங்கள் ரூம் லைட்டை அணைத்துவிட்டு மேடைக்கு வருகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன்.

      கில்லர்ஜிக்கு மனைவியும், சகோதரியும் மறைந்தது மிகவும் வருத்தம். வாழ்க்கையில் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு ஊருக்குத் திரும்பியவருக்கு ஆறுதலாக ஒரு துணையும் இல்லையே என்று பல முறை நினைத்து வருந்தியிருக்கிறேன்.

      நீக்கு
    3. சொந்தங்கள் நெருங்கி வந்து கில்லர்ஜியின் மனதைக் குளிர வைக்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    4. துளைத்துச் சென்ற பதில் கில்லர்ஜி

      நீக்கு
  12. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
    காணின் கிழக்காம் தலை

    காலம்...!

    பதிலளிநீக்கு
  13. சர்வ லோகே
    ஆவ்ருத்ய திஷ்டதி:

    ரொம்பவும் சொல்லத் தெரியாது..
    அவன் இவன், லொட்டான் லொசுக்கான் எல்லாரையும் தள்ளி வைத்து நாட்களாகின்றன..

    தேவார, திருவாசக திருமந்திரத்திற்குள் எல்லாம் இருப்பதாக நினைக்கின்றேன்..

    ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய்ப் பெருக்கம் ஆகிப்
    பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரமன் ஆகிக்
    காவியங் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற
    தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.. 4/32
    -: திருநாவுக்கரசர் :-

    அவியும் ஆகி - வேள்வியில் இடப்படும் ஆகுதி..

    ஆகுதியும் அதனை ஏற்றுக் கொள்ளும் பரமனும்!..

    காவியங் கண்ணள்
    கடல் வண்ணம் என்றெல்லாம் போய்க் கொண்டே இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  14. தெய்வம் வரலாம்.. எப்படியும் வரலாம்.. கால இருக்கின்ற இருப்பில் அஃறிணையாகக் கூட வரலாம்.. இன்று ஆழ் துளையிடுவதற்கு வந்த லாரியின் பெயர் அருட்கோதை..

    குருவி என்று கூட வந்திருக்கலாம்.. நான் குருவியை நினைத்துக் கொண்டு இருப்பதில்லை..

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    கேள்வியும், அதற்கு அனைவரிடமிருந்து வந்த பதில்களும் நன்றாக உள்ளது. தங்கள் பக்கத்திலும் கேளவிகளுக்கு பதிலாக வந்த பகுதியும் நன்றாக உள்ளது.

    1.திகைத்து நின்ற சந்தர்ப்பங்கள் நிறையவே நடந்துள்ளது. ஆனால், இறைவன் துணையாக இருந்திருக்கிறார். இன்றும் அந்த நம்பிக்கையில்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டுள்ளது.

    2.வீட்டில் அனைவருக்கும் தேவையான உணவை பார்த்துப் பார்த்து செய்யும் போதே எனக்கும் அது பிடித்துப் போய் விடும். பொதுவாக எனக்கென்று பிடிக்காத உணவு இல்லையென்றே கூறலாம்.

    3. பள்ளியில் படிக்கும் போது, எப்போதும் ஒவ்வொரு வகுப்பிற்கும் பழைய புத்தகங்கள்தான். அப்போது அவர்கள் அதை வாங்கித் தரும் போது குடும்ப சூழல் உணர்ந்து மெளனமாகவே இருந்தோம் . அதற்கு சிலசமயம் முன்பக்க அட்டைகளோ பின் பக்க அட்டைகளோ இருக்காது. அதையும் பத்திரப்படுத்தி அப்பா, இல்லை அண்ணா அட்டை போட்டு தருவார்கள். அதை மிக கவனமாக கையாண்டு அடுத்த வருடம் விற்க ஏதுவாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த வருட வகுப்பு புத்தகங்களை வாங்க முடியும்.

    இப்போது குழந்தைகளுக்கு (பேரன், பேத்திகள்) இரண்டு மூன்றாம் வகுப்புக்கே பத்தாயிரம் ரூபாய் பக்கத்தில் புத்தகம், நோட்டுக்கள் என வாங்கும் போது, பழையதும் கண்டிப்பாக நினைவுக்கு வருகிறது. (இப்போதும் மெளனமாக அட்டைப் போடும் இடத்தில் நாம்...))) ) ஆனாலும் நம் குழந்தைகள் படிக்கும் போதே இதை கற்றுக் கொள்ள ஆரம்பித்தும் விட்டோம்.

    4. பிறந்த வீட்டிலிருக்கும் போதே சில தியேட்டர்களுக்கு பள்ளி விடுமுறையில், குடும்பத்துடன் சென்று (நல்ல குடும்ப படங்கள் மட்டுமே) பார்த்திருக்கிறேன். அப்போது பொழுபோக்கு என்பது தியேட்டர்களுக்கு செல்வது ஒன்றுதானே..!

    5. திருமணமானவுடன் முதன் முதலில் கணவர் (அதுவும் அவர் நண்பர், மற்றும் நண்பரின் மனைவியுடன்) அழைத்துச் சென்றது சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம். படம் எப்போதோ வந்த பழைய படந்தான். படம் முடிந்து வீட்டிற்கு திரும்பியதும், வீட்டிலுள்ள கணவரின் உறவினர்கள் முகமும் சிவப்பாக இருந்ததை இன்று வரை மறக்க முடியாது.))

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பார்த்துப் பார்த்து செய்யும் போதே எனக்கும் அது பிடித்துப் போய் விடும். // - எனக்கு நான் செய்த உணவைச் சாப்பிட பெரும்பாலும் பிடிக்காது (மற்றவர்களுக்குப் பிடிக்கும். இதை முதலில் சொல்லிடறேன், மற்றவர்கள் கலாய்ப்பதற்கு முன்பு). நாமே தயாரிக்கும்போது அதன் மீதான ஆர்வம் போய்விடாது?

      நீக்கு
    2. //அழைத்துச் சென்றது சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம்// - புது மனைவியுடன் செல்லவேண்டிய படமா அது? ஹா ஹா.

      நீக்கு
    3. //இரண்டு மூன்றாம் வகுப்புக்கே பத்தாயிரம் ரூபாய் பக்கத்தில் புத்தகம், நோட்டுக்கள்// - இப்போ காசுக்கும் மதிப்பில்லை. அதிலும் நம் பசங்க, அவங்க பசங்களுக்கு காசின் அருமை தெரிவதில்லையோ என்று தோன்றும். பையன், சின்ன வயசிலேயே என்னை 'நீங்க கஞ்சூஸ்' என்பான். நானோ அவனிடம், We are only custodians of fundனு சொல்வேன். ஹா ஹா

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      நமக்குள் இருக்கும் கடமை உணர்வில், வீட்டில் உள்ளவர்களுக்கு வேண்டிய உணவை செய்து தரும் போது செய்த பின்னும், மற்ற வேலைகளின் பிண்ணனியிலும் , பசி என்ற ஒர் உணர்வு வரும் போது, நமக்கு பிடிக்காதது என எதுவும் இருக்காது. அப்படியே பழகி விட்டது.

      /அதிலும் நம் பசங்க, அவங்க பசங்களுக்கு காசின் அருமை தெரிவதில்லையோ என்று தோன்றும்./

      எனக்கும் அப்படித்தான் தோணும். சொன்னால் தங்களுக்கு கிடைத்த அந்தப் பெயர்தான் கிடைக்கும்.:)) தவிரவும், இப்போதுள்ள காலகட்டத்தில் பணத்திற்கு மதிப்பே இல்லைதான். .

      /புது மனைவியுடன் செல்லவேண்டிய படமா அது? ஹா ஹா./

      ஹா ஹா ஹா. அவருக்கு அந்தப்படம் அனைவரும் சொல்லக் கேட்டு கேள்விப்பட்டு பிடித்திருக்கிறது போலும்..! எப்போதும் எவருக்கும் ரசனைகள் என்பது வேறு வேறுதானே..!

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. ..அது மெய்ஞானம்னு மறந்துட்டேன். //

    ஆஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சாவூர்ல ஞானம்னு ஒரு தியேட்டர் இருந்தது.  நான் அடிக்கடி அங்க போயிருக்கேன்!

      நீக்கு
  17. ..செர்ன் இயக்கத்தின் கடவுள் அணு பற்றி நமக்கு ஏற்கனவே தெரியுமே)...

    அந்த.. ‘கடவுள் துகள்’ தானே ?

    பதிலளிநீக்கு
  18. ..ஆர்யபட்டா சொன்னாருனா ஆருயா அந்த பட்டானு கேப்பாங்க...//

    அதில ‘ஆர்ய’ -னு ஒன்னு ஒட்டிக்கிட்டிருக்கு பாருங்க.. வெலகுங்க!

    பதிலளிநீக்கு
  19. திக்குத் தெரியாமல் திகைத்து நின்ற சமயங்கள் பல இருந்தாலும் முதல் முதல் செய்த மும்பைப் பயணம் தான். ஜாம்நகரில் இருந்து மும்பை சென்றோம் சௌராஷ்ட்ரா விரைவு வண்டியில். மழைக்காலம். ஆனால் அப்போ ஜூன் ஐந்து தேதி ஆகலை. ஆகவே மும்பையில் மழை லேசாகத்தான் இருக்கும் என நினைச்சோம். எனக்கோ மும்பை ம்ழை பற்றி எதுவும் தெரியாது. பால்கர் வரை போன வண்டி அங்கேயே நின்னுடுச்சு. எப்போக் கிளம்பும்னு தெரியாது. மும்பையில் போரிவிலியில் மைத்துனன் வீடு. வீட்டு விலாசமெல்லாம் வைச்சுக்கலை. தொலைபேசி எண்ணும் இல்லை. ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் போய் தொலைபேசி அகராதியைக் கேட்டு வாங்கி மைத்துனன் அலுவலக எண்ணைக் கண்டு பிடிச்சாலும் அவர் அன்னிக்கு அலுவலகம் போயிருப்பாரா சந்தேகம்! ஏனெனில் மின்சார வண்டிகளும் நிறுத்தம் எனச் சொன்னார்கள். எப்படியோ ஒரு ஆட்டோ பிடிச்சு போரிவிலி போனால் எங்கே போகணும்னு தெரியாது. அப்போத்தான் இறைவன் அருள் புரிந்தான், பக்கத்து டாக்சியில் எங்களைத் தேடிக் கொண்டு பால்கர் செல்ல வேண்டி ஏறிக் கொண்டிருந்த மைத்துனனைப் பார்த்துட்டோம். இது இறை அருளன்றி வேறே என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! இறையருள்தான். ஆச்சரியமான நிகழ்வு. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. இதைப் பற்றிய பதிவுகள் போட்டிருக்கேன். மேலும் திரும்பவும் எழுதி இருக்கேன். ஜிஎம்பி ஐயா கேட்டார் என நினைவு.

      நீக்கு
  20. 2.எனக்கு சாம்பாரே பிடிக்காது. வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். இட்லிக்கு மட்டும் சாம்பார் விட்டுப்பேன்.

    3.பள்ளியில் படிச்சப்போ நமக்கு சீனியர்களிடம் வாங்கும் புத்தகம் தான். பேரம் பேசி வாங்கணும். புத்தகம் நல்ல நிலையில் இருந்தால் அதிகம் காசு கேட்பாங்க. அப்பாவோட லிமிட் 2 ரூபாய்க்குள் தான் இருக்கும். ரொம்பக் கேட்டால் "படிப்பை நிறுத்து!" என்னும் ஒரே பதில் தான் வரும். பழைய வகுப்புப் புத்தகங்களை அடிமாட்டு விலைக்குக் கேட்பாங்க. அவங்களிடம் பேரம் பேசினால் புத்தகமே வேண்டாம்னுட்டுப் போவாங்க.வரும் புத்தகங்களை ஒழுங்காய் வைச்சுப்பேன். ஓரங்கள் மடங்காது. நாய்க்காதெல்லாம் இருக்காது. தற்செயலாகப் புதுசு கிடைச்சுவிட்டால் வருஷம் முழுதும் புதுசாகவே வைச்சிருப்பேன். புத்தகத்தை எடுத்துப் படிப்பியா/மாட்டாயா? என்று கேட்கும்படி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டப்பட்டாலும், எங்கள் வீட்டில், குழந்தைகள் எல்லோருக்கும் புதுப் புத்தகம்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும், அப்போதுதான் பையன்களுக்கு படிப்பில் சுவாரஸ்யம் வரும் என்பதில் தீர்மானமாக இருந்தார் என்னுடைய அப்பா.

      நீக்கு
    2. எங்க குழந்தைகளுக்கு அப்படித்தான் வாங்க நேர்ந்தது. இந்தப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மற்ற சாமக்ரியைகள், சீருடைகள் வாங்கவென ப்ராவிடென்ட் ஃபன்டில் திரும்பக் கட்டும்படியான கடன் வாங்குவார் நம்மவர். ஆனால் வேடிக்கை என்னவெனில் பள்ளியில் கட்டணமே கிடையாது. எங்க பையருக்கு மட்டும் 20 ரூபாய் ட்யூஷன் ஃபீஸ். அதுவும் அலுவலகத்தில் க்ளெயிம் பண்ணினால் திரும்பக் கொடுத்துடுவாங்க. பெண்ணுக்குப் பெண் குழந்தை என்பதால் +2 வரை எந்தவிதக் கட்டணமும் இல்லை. இப்போல்லாம் கேந்திரிய வித்யாலயாவின் சட்டதிட்டங்கள் மாறி இருக்கலாம்.

      நீக்கு
  21. 4. அதிகம் போனால் சென்ட்ரல் சினிமா, தங்கம் தியேட்டர் இவற்றில் தான் நிறையப் படங்கள் பார்த்திருப்பேன். சென்ட்ரல் சினிமா தியேட்டரின் சொந்தக்காரர் பையர் அப்பாவின் மாணவர். தங்கம் தியேட்டர் சொந்தக்காரர் கண்ணாயிரம் அப்பாவிடம் ஹிந்தி படித்துக் கொண்டிருந்தார். ஆகவே இரண்டு தியேட்டர்களுக்கும் இலவசப் பாஸ் உண்டு.

    5. கல்யாணம் ஆனதும் போன முதல் படம் கும்பகோணத்தில் ஏவிஎம்ராஜன், புஷ்பலதா நடித்த ஓர் படம். ஏவிஎம் ராஜன் இரட்டை வேடம். படம் பெயர் தரிசனமோ? என்னமோ! படம் ரொம்ப சுமார் ரகம் தான். அப்போ மற்றத் தியேட்டர்களில் போய்ப் படம் பார்க்கலாம்னா அவற்றில் எல்லாம் காட்சி ஆரம்பித்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 5 படத்தில் வந்த பாட்டு ஏதாவது ஞாபகம் இருந்தால் சொல்லுங்கள். அதை வைத்து படத்தைக் கண்டுபிடிக்கலாம்.

      நீக்கு
    2. இது மாலை நேரத்து மயக்கம் என்னும் பாடல். நல்லவரான ஏவிஎம் ராஜன் இடத்தில் குடும்பஸ்தரும் சபலருமான ஏவிஎம்ராஜன் போய்ச் சேர்ந்திருப்பார். நல்லவர் ஏவிஎம்ராஜனின் மனைவியுடன். அப்போ குடும்பஸ்தரான ஏவிஎம்ராஜன் பாடும் பாட்டு. கூடவே பாடி ஆடியது வில்லியா? இல்லாட்டிநல்லவருக்குக் காதலியா நினைவில் இல்லை.

      நீக்கு
  22. எனக்கு என்னமோ எல்லாம் தெரியும்ங்கற நினைப்பில் அப்பாதுரை சொல்லி இருப்பதைப் படிச்சுட்டுச் சிரித்துக் கொண்டே இருக்கேன். கனமான/ஆழமான விஷயம். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். பாட்டி அப்பாதுரைக்குச் சொன்ன கதையை நானும் கேட்டிருக்கேன். வியந்திருக்கேன். எவ்வளவு பெரிய விஷயத்தைப் பாட்டிச் சுருங்கக் கூறி விளங்க வைச்சிருக்கார்! சிவபுராணத்தில் இல்லாததா? ஒவ்வொரு தரம் படிக்கையிலும் புதுப்புது அர்த்தங்கள் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே எனக்குத் தெரியாதவை. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  23. நான் வாங்கிக் கொண்ட்ருந்த வாராந்தரி புத்தகங்கள் எல்லாமும் படிச்சுட்டு ரொடேஷனுக்குப் போனாலும் கண்டிஷனாக அழுக்காக்காமல் வாங்கி வைப்பேன். பிறந்த வீட்டில் இது எல்லோருக்கும் ஓர் பெருமைக்குரிய விஷயமா இருந்தது. அதே புக்ககம் போனதும் முதலில் புத்தகமே என் கைக்கு வராது. வந்தாலும் அட்டையோ/கடைசிப் பக்கமோ இருக்காது. கேட்டால் பரிக்ஷையா எழுதப் போறே என்பார்கள். பின்னர் லென்டிங் லைப்ரரிக்கு மாறிட்டேன். அதுக்கப்புறமா அலுவலக லைப்ரரி.

    பதிலளிநீக்கு
  24. கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைச்சப்புறமா ஒரு நாள் திடீரென அலுவலகத்திலிருந்து சீக்கிரமா வந்துட்டு, உடனே கிளம்பு என்றார். சரினு கிளம்பினேன். ரயிலில் சென்ட்ரல் போய் அங்கிருந்து பேருந்து பிடிச்சு ஜெமினி ரவுன்டாணா போனோம். அப்போ ஸ்டுடியோ இருந்த காலம். அதுக்கருகே தான்னு நினைக்கிறேன் சஃபையர் தியேட்டர். எப்போவேணாப் போய்ப் படம் பார்க்கலாம். எப்போ வேணாக் கிளம்பலாம் என்பார்கள். அங்கே நண்பர்கள் சிலர் காத்திருக்க எல்லோருமாக அதில் ஏதோ ஒன்றிற்குப் போனோம். டைமண்டா? எமரால்டா? அங்கே மக்கென்னாஸ் கோல்ட் படம் ஓட எல்லோருமாக அதைப் பார்க்க அமர்ந்து கொண்டோம். அப்போ ஒண்ணுமே புரியலை. தியேட்டரைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் சிரிக்க எதுக்குன்னே தெரியலை. நான் மட்டும் சிரிக்கத் தெரியாமல் உட்கார்ந்திருந்தேன். படம் முடிந்து திரும்ப பேருந்து/ரயில் பிடிச்சு வீட்டுக்கு வர ஒன்பதரை மணி ஆச்சு. அப்போ நாங்க இரண்டு பேர் தான். ஆகவே பிழைத்தேன். ஏற்கெனவே ஈபி வேலைக்கு மாற்றல் கேட்டுப் போனப்போக் காலை அலுவலகம் போயிட்டு சேர்மனைப் பார்த்துட்டுத் திரும்ப மாலை ஆகிவிட்டது. மாமியாரும் கடைசி மைத்துனனும் கொதித்துக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் மாமியார் கேட்ட முதல் கேள்வி! அவனை அழைச்சுண்டு எங்கெல்லாம் சுத்திட்டு வரே என்பது தான்! உண்மையிலேயே சிரிப்பு வந்தது எனக்கு. இங்கே சிலர் அவரவர் அனுபவத்தையும் லேசாகக் குறிப்பிடவே எனக்கு என் அனுபவமும் மனதில் வந்தது அதான் எழுதினேன். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளூ டைமன்ட் தியேட்டரில் எப்பொழுதும் தொடர் காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அங்கு நானும் பல ஆங்கிலப்படங்கள் பார்த்திருக்கிறேன். நல்ல படமாக இருந்தால் தொடர்ந்து இரண்டுமுறை பார்க்கலாம் என்று நினைத்து போவேன். ஆனால் படம் ஒருமுறை பார்த்து முடித்தவுடனேயே தலைவலி வந்து வெளியே ஓடிவந்துவிடுவேன்.

      நீக்கு
  25. சுமார் பத்துப் பனிரண்டு வருஷங்கள் முன்னர் வலைப்பக்கங்கள் மூலம் நான் முதல் முதல் பார்த்த/படித்த/கேட்ட அப்பாதுரையா இது என்னும் அளவுக்கு அப்பாதுரையின் மனதெளிவும் தத்துவார்த்த ரீதியான விஷயங்களில் புரிதலும் என்னை அசர அடிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அவர் அளவுக்கு மனத்தெளிவோ புரிதலோ என்னிடம் இல்லை என்பதே உண்மை. உண்மையான ஆன்மிகவாதி அப்பாதுரை! உண்மையில் பற்ற்ற்று இருப்பதற்குச் சிறந்த உதாரணமாகவும் இருக்கார். அண்ணாந்து பார்த்து வியக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. நாங்க இரண்டு பேரும் தனியாகத் தியேட்டரில் பார்த்த கடைசிப்படம் இஃகி,இஃகி, இஃகி! ஜிவாஜி! மெம்பிஸில் இருந்தப்போப் பெண் இந்த சினிமாவுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைச்சாள். அதன் பின்னர் பல படங்கள் பார்த்திருந்தாலும் எல்லாமும் வீட்டில் இருந்து கொண்டே தான். தியேட்டர்களுக்கே செல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  27. அவ்வப்போது கிருஷ்ண தரிசனத்துடன் ஆண்டாள் நாச்சியாரையும் நினைத்துக் கொள்ளும் எனக்கு எதிர்பாராத விதமாக இன்றொரு கூடுதல்..

    வீட்டு மனைக்கு தண்ணீர் வசதி தருவதற்கு வந்த லாரியின் பெயர் அருட்கோதை..

    பதிலளிநீக்கு
  28. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் விசாலாட்சி பெயரையும் பிரார்த்தனையில் சொல்லி வணங்கிக் கொண்டிருக்கின்றேன்..

    முன்பு அறிந்திராத ஒருவர் இன்றொரு நட்பாகக்
    கிடைத்தார்.. சில நிமிடங்கள் கழித்து பெயரைக் கேட்ட போது அவர் சொன்னார் - காசிநாதன்..

    பதிலளிநீக்கு
  29. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் - எந்த உதவியும் கிடைக்காமல் திகைத்து நின்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? எங்கு? எப்போது? எந்த சூழ்நிலையில்? //

    நிறைய சூழ்நிலைகள் வந்து இறைவன் அருளால் யாராவது உதவிக்கு வந்து சூழ்நிலை சரியாகி இருக்கிறது.

    கணவரின் இறுதி காலத்தில் அக்கம் பக்கத்தினர் மருத்துவரை அழைத்து வந்தும், தனிமையில் தவித்த போது உறவினர்கள் வரும் வரை ஆறுதலாக உடன் இருந்ததும் நடந்து இருக்கிறது.

    3) பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில், புத்தகங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள உங்கள் புத்தகங்களை பைண்ட் செய்து வைத்துக்கொள்வீர்களா? அல்லது அட்டை மட்டும் போடுவீர்களா? அல்லது அதுவும் கிடையாதா? //

    என் அம்மா அழகாய் பிரவுன் பேப்பரால் அட்டைபோட்டு லேபிள் ஒட்டி பேர் எழுதி தருவார். எனக்கு அட்டையே போட தெரியாது. என் குழந்தைகளுக்கு என் கணவர் செய்து தருவார், அவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களே அழகாய் அட்டை போட்டு கொள்வார்கள். குழந்தைகளின் புத்தகங்களை ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்க முடியாத குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். கிழிக்காமல் பத்திரமாக வைத்து கொடுப்பார்கள்.


    2) வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு விஷயம் நமக்கு மட்டும் பிடிக்காமல் இருக்கும். உங்களுக்கு அப்படி ஏதாவது உண்டா? அது எது?

    முதலில் கணவருக்கு பிடித்தது, அப்புறம் குழந்தைகளுக்கு பிடித்தது என்று சமைப்பேன், எனக்கு காரம் இல்லாமல் இருந்தால் போதும்.

    4) படித்த காலத்தில், உங்கள் ஊரில் இருந்த எல்லா தியேட்டர்களிலும் சினிமா பார்த்திருக்கிறீர்களா?

    நல்ல சினிமாகவாக இருந்தால் அப்பா, அம்மா அழைத்து செல்வார்கள், நிறைய ஊர்களில் அப்பாவோடு இருந்து இருக்கிறோம்(மாற்றல் ஆகும் அப்பாவிற்கு) அனைத்து தியேட்டர்களும் போய் இருக்க மாட்டோம்.

    5) நீங்கள் உங்கள் கணவர் / மனைவியோடு பார்த்த முதல் சினிமா எது? எந்த ஊர்? எந்த தியேட்டர்?
    நினைவில்லை. (அப்படி ஒரு படமா?) ஊர் மினியேபலீஸாக இருக்கலாம்.//

    1973 , நவம்பர் 7 ல் திருமணம் நடந்தது, எட்டு மாதங்கள் கழித்து தான் சினிமா பார்த்தோம், சேர்ந்து பார்த்த முதல் படம் "பாபி" படம். கோவையில் சென்ட்ரல் தியேட்டரில் பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
  30. காசிக்கு சமமான
    தமிழகத்தின் தலங்கள் பற்றி பதிவுகள் தந்து கொண்டிருக்கின்றேன்.. காசி பற்றி வேறு சில பதிவுகளும் வரிசையில் இருக்கின்றன..

    இதற்கிடையே காசிநாதன் என்றொருவர் புதிதாக நட்பு வளையத்தில்..

    சிவாய நம ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க எதிர்வீட்டுக்காரர் பெயர் காசிநாதன் தான். ஆனால் ஊர் ஆனைத்தாண்டவபுரம். (ஆனந்தத் தாண்டவ புரம்) இப்போ அங்கே தான் இருக்கார்.

      நீக்கு
  31. KGG சார், பக்கம், அப்பாதுரை சார் பக்கம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. சில நாட்களாக... சிவநினைவிலேயே இருந்தேன் என்றில்லை. ஏதோ பழக்க தோஷமாக யூட்யூபில் துழாவிக்கொண்டிருக்கையில், ஒவ்வொரு தேடுதலுக்கிடையிலும் என்னை நெருங்கி, நெருங்கி ரீங்கரிப்பதாய் தோன்றியது இது:

    அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கென்றால் அசங்குமோ
    கம்பமற்ற பாற்கடல், கலங்கென்றால் கலங்குமோ
    இன்பமற்ற யோகியை, இருளும் வந்து அணுகுமோ
    செம்பொனம்பலத்திலே.. தெளிந்ததே சிவாயமே..

    முன்னால் கேட்ட நினைவில்லையே ... யாராவது பெரிசு எழுதியிருக்குமோ என்று தேடினால்.. ஓ.. நம்ப சிவவாக்கியர் !

    பதிலளிநீக்கு
  33. 1. உண்டு! திருமணம் ஆன புதிதில், வாழ்க்கையே புரியாமல்! திக்குத் தெரியாத காடு போல.... ஒரு சில மாதங்கள். அதுக்குப் பிறகு இப்ப திக்கு தெரிஞ்சு போச்சு!!!! ஹாஹாஹா

    2. நோ! பிடிக்காதது என்று எதுவும் இல்லை. எனவே எங்கு போனாலும் பிரச்சனை இல்லை. சொல்லப் போனால் புதிதாகச் சுவைக்க விரும்புவேன்! - சைவ உணவுதான்...

    3. ஸ்கூல் புஸ்தகமா? ஹாஹாஹாஹா எல்லாம் நம்ம சீனியர்கிட்டருந்து வருவதுதான். அதுவும் சிலருக்குப் பைசா கொடுத்து, நம்ம பழைய புக்கு (அதுவும் அப்படி வந்தவைதான்-சிலபஸ் மாறாம இருந்தா) பைசாக்கு வித்து - கணக்கு, அறிவியல் தவிர...அதனால எப்படி வருதோ அந்த புக்கை கொஞ்சம் சரி பண்ணி...வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    4. ஹாஹாஹாஹா ஆஹா வீட்டுல கூட்டிட்டுப் போய்ட்டாலும்தான்.....நாங்க பெண் பிள்ளைகள் - படி தாண்டிட முடியுமா? வீட்டுல சினிமாக்குத் தடா...இல்லைனா அவங்க எப்பவாச்சும் மனசு வைச்சு அது நாங்க பாக்கலாம்னு பெரியவங்க செர்ட்டிஃபிக்கேட் -சினிமாக்காரங்க யு கொடுத்தா போதாது. எங்க வீட்டுப் பெரியவங்க யு கொடுக்கணும் அப்பத்தான் கூட்டிப் போவாங்க!
    அப்புறம் ஓரிரு தியேட்டர்கள்ல சில படங்கள் பார்த்ததுண்டு

    5. ஹிஹிஹிஹி - நஹின்!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. கௌ அண்ணாவின் அனுபவங்கள் அதுவும் மழையில் சிக்கிக் கொண்டு! அந்த ஆட்டோ ஒட்டுநர் வாழ்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  35. உரித்தால் உரியும் வெங்காயம் - ஆஹா செம வாசனை போங்க! சுவைத்து வாசித்தேன். பிடிச்ச விஷயம்.

    //தமில்ல சொல்லணும்னா பச்ச கொய்ந்தேலந்து படுகெயம் வரைக்கும் நாம மாறினாலும் நமக்கு பிடிச்ச பருவத்துக்கு டக்குனு இட்டாற ஒரு டெக்குனிக்கு. ஒரே டயத்துல கொய்ந்தையா அம்மா மடில படுத்துட்டு நிம்மதியா இருக்கலாம், அப்பன் கிட்ட அடிவாங்கிட்டு ஓடுற பத்து வயசு காலிப்பயலா இருக்கலாம், பக்கத்து ஊட்டு பச்சக்கிளியோட இச்சக் பண்ற இருபத்திரண்டு வயசு தறுதல.. இப்படி வகைக்கு ஒண்ணாவும் ஒரே டயத்துல இருக்கலாம். இதான் மேட்டரு.//

    ஆ! இது Transitional Analysis னும் சிக்காலஜி ஹிஹிஹிஹி அதாங்க சைக்காலஜில சொல்றாங்களே! மாறி மாறி பயணிச்சு அவேர்னெஸ்காக...

    //காலம் பரவிய இத்தகைய வியாபிப்பிற்கான அடிப்படை கணிதங்களை சமீபத்தில் சமர்பித்திருக்கிறார்கள் செர்ன் இயக்க விஞ்ஞானிகள். (செர்ன் இயக்கத்தின் கடவுள் அணு பற்றி நமக்கு ஏற்கனவே தெரியுமே). //

    வியப்பாகத்தான் இருக்கிறது. காலம் பத்தி கொஞ்சம் வாசிச்சிருந்தாலும் இது ஆஅச்சரியம்.

    என்னதான் துகளுக்குப் போனாலும் அதை விஞ்சிர முடியுமா? காலத்தை விஞ்ச முடியாதுன்னும் சொல்வாங்களே அப்படி?

    கீதா

    பதிலளிநீக்கு
  36. அப்பாதுரை ஜி என்னாங்க நீங்க, நம்ம ஜோசியருங்கள என்ன சொல்றீங்க?!!!!!!!!!!!!!!!!!!!!!!!, சூப்பரா கால ஆரூடம் சொல்றங்க டக்கு புக்குனு போன ஜென்மம் அடுத்த ஜென்மம்னு ட்ராவல் பண்ணிட்டு சொல்றாங்களே ....

    சிலருக்கு தான் போன ஜென்மத்துல என்னவா இருந்தோம்னு கரெக்ட்டா இடம், அட்ரஸ் கூடச் சொல்லுறாங்களாமே ஒரு குழந்தை கூட அப்படி ஃபேமஸ் ஆச்சு...இதெல்லாமும் காலம் மெஷின்ல சேர்த்தியா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் மூன்று நான்கு பிறவிகள் வரை நினைவில் வைப்பதாகக் சொல்றாங்க. கொடுமை, என்னைக் கேடடால்.

      நீக்கு
    2. டிட்டோ ஜிஸ்!!!

      எனக்கு வேண்டவே வேண்டாம்னு இருக்க இந்த நிமிடம் போதும்!

      கீதா

      நீக்கு
  37. நிலவில் இறங்கியது சந்திராயன்..

    வந்தேமாதரம்
    ஜெய்ஹிந்த்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெய் இஸ்ரோ! ஜெய் ஹிந்த்!

      வானத்தில் ஏறி... சந்திரமண்டல
      வாசலைத் தொடலாமா..!

      - கண்ணதாசன் அப்போ இப்படியெல்லாம் எழுதுனப்பவே யோசிச்சேன்.. இப்படி ஒருநாள் ஏதாவது செஞ்சிடுவாங்களோ நம்ம ஆட்கள்னு. நடத்திக் காட்டிட்டாங்களே. அக்கம்பக்கத்து நாடுகள்ல டென்ஷன் கூடியிருக்குமே...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!