புதன், 16 ஆகஸ்ட், 2023

ராமலிங்கம் ஏன் அப்படிச் செய்தான்?

 

நெல்லைத்தமிழன்: 

பாடலினால் (வரிகள், இசை, பாடுபவரின் திறமை) புகழா இல்லை நடிகரின் வாயசைப்பு, காட்சியினால் புகழா? வெற்றியில் யாருக்கு எவ்வளவு சதவிகிதம்?

# இது சதவீதம் எல்லாம் சரியாக கணக்கிட்டு யாருக்கு எவ்வளவு என்று சொல்வது இயலாது . அது நியாயமும் ஆகாது என்று நினைக்கிறேன் . சில பாடல்கள் நடிப்பாலும் சில பாடல்கள் இசையினாலும் பெயர் பெறுகின்றன . சாதாரணமாக (என் கருத்து ) இசைக்கு அறுபதும் நடிப்புக்கு நாற்பதும்.  வெகு சில பாடல்கள் இசைக்கு எண்பது நடிப்புக்கு 15. 

& என்னைக் கேட்டால், பாடலினால்தான் அதிக வெற்றி என்று சொல்வேன். அந்தக் காலத்தில், வீட்டுக்கு வீடு ரேடியோ கூட இல்லாத காலம் - சினிமா பாடல்கள் பக்கத்தில் ஏதேனும் கல்யாணம் நடக்கும்போது லவுட் ஸ்பீக்கர் மூலமாக பல தெருக்கள் தாண்டி கேட்கும். அப்போ சில பாடல்களின் இசை நம்மை கவர்ந்து இழுக்கும். அந்தப் பாடல்கள் இடம் பெற்ற படம் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்போது பல பாடல்கள் நாம் எதிர்பார்த்த அளவுக்கு காட்சி அமைப்பு இருக்காது. 

உதாரணத்திற்கு இந்தப் பாடல். கேட்கும்போது இருந்த எதிர்பார்ப்பு எல்லாமே படத்தைப் பார்க்கும்போது ஃபனால் !! 


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

சிறு வயதில் பெரியவர்கள் கூறிய அறிவுரை, வயதான காலத்தில் குழந்தைகள் கூறும் அறிவுரை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

# சிறு வயதில் பெரியவர்கள் கூறியதை கேட்டு நடப்பது எளிதாக இருந்தது.  இப்போது பிள்ளைகள் கூறும் அறிவுரையில் கண்டிப்பு அதிகம் இருப்பதாகவும் அதை உதாசீனம் செய்ய இயலாது என்றும் தோன்றுகிறது.

& ஆக மொத்தம் நமக்கு, மற்றவர்களுக்கு அறிவுரை கூற சந்தர்ப்பமே கிடைக்காது போலிருக்கு! மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல சிறு வயதில் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள்  நமக்கு அறிவுரை கொடுத்தார்கள். பெரிய வயதில் நம் குழந்தைகள் நமக்கு அறிவுரை கொடுக்கிறார்கள். 

நாம் ஒரு உடல் உபாதையில் அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கும் பொழுது நமக்குத் தெரிந்த இன்னொருவருக்கும் அதே அவஸ்தை இருப்பது தெரியும் பொழுது மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறதே? இது சரியா?

# அப்படியா ? எனக்கு "அடக் கடவுளே இவர்களும் மாட்டிக் கொண்டார்களே " என்ற ஆற்றாமைதான் தோன்றுகிறது.

& அதே அவஸ்தை என்றால் எதுவும் தோன்றாது. ஆனால் நம்மைவிட பெரிய அவஸ்தை படுகிறார்கள் என்று தெரிந்தால், கொஞ்சம் ஆறுதல் கிடைக்கிறது என்பது உண்மைதான். போட்டுக்கொள்ள செருப்பு இல்லையே என்று வருந்துபவனுக்கு - கால்களே இல்லாத ஒருவரைப் பார்க்கும்போது கிடைப்பது என்ன உணர்வு? 

= = = = = = =

KGG பக்கம் : 

ராமலிங்கம் ! 

நான்காம் வகுப்பில் ஒரு ராமலிங்கம்; ஐந்தாம் வகுப்பில் வேறு ஒரு ராமலிங்கம். 

நான்காம் வகுப்பில் என்னுடன் படித்த ராமலிங்கம், கட்டை + குட்டையாக இருப்பான். பெரிய, சிவந்த கண்கள். கொஞ்சம் தூக்கக் காலக்கமாக இருப்பது போலவும் தோன்றும். அப்பாவுக்கு  சிங்கப்பூரில் வேலை என்று சொல்லுவான். 

நான்காம் வகுப்பில் என்னுடைய வகுப்பாசிரியர், சந்திரசேகர் என்று ஒருவர். அவருடைய மனைவியும், இதே பள்ளியில், ஆசிரியையாக இருந்தார். சந்திரசேகர் வருகைப் பதிவேட்டைப் பார்த்து பெயர்களைக் கூப்பிடும்போது முதல் பெயர் " அருள்மொஸி வர்மன் " என்றுதான் எப்போதும் கூப்பிடுவார். அதன் காரணம் எனக்கு ரொம்ப நாட்களுக்கு தெரியாமல் இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். " ARUL MOZHI VARMAN " என்று எழுதப்பட்டிருந்த பெயரை அந்த மக்கு (!) ஆசிரியர் 'அருள் மொழி வர்மன்' என்று படிக்கத் தெரியாமல் அப்படிப் படித்தார் என்று ! அவருடைய மனைவி வருகைப் பதிவேடு பார்த்து பெயர்களைக் கூப்பிடும்போது, 'அருள் மொழி வர்மன்' என்று சரியாகச் சொல்வார்! 

ராமலிங்கம் பற்றிச் சொல்ல வந்தேன் அல்லவா! சந்திர சேகரின் மனைவி வகுப்பு நடத்த வரும்போதெல்லாம், இந்த ராமலிங்கம், வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு, பெரும்பாலான நாட்களில், ( நாகைக்கு எஸ் எஸ் ரஜூலா கப்பல் வரும் நாட்களில் எல்லாம் ) ஒரு சாக்லேட் பெட்டி போல ஒரு பெட்டியை, கொண்டுபோய் ஆசிரியை மேஜை மீது வைத்துவிட்டு, ' என்னுடைய அப்பா சிங்கப்பூரிலிருந்து அனுப்பியது' என்று சொல்லுவான். 

பெட்டியைத் திறந்து பார்க்கும் ஆசிரியையின் மகிழ்ச்சி அவருடைய முகத்தில் காணமுடியும். சாக்லேட் , பிஸ்கட் , ஸ்வீட், பொம்மை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று இருக்கும் என்று ஆசிரியை இல்லாத நேரத்தில் பெட்டி அருகே சென்று துப்பறிந்த நண்பன் துரைராஜூ கூறினான்! ( இந்த துரைராஜூ பல வருடங்கள் கழித்து நான் வேலை பார்த்த அசோக் லேலண்ட் நிறுவனத்தில், என்னுடைய டிபார்ட்மெண்ட் அருகே இருந்த fabrication டிபார்ட்மெண்டில் வெல்டர் ஆகப் பணிபுரிந்தான். இந்த துரைராஜூவால் நான், நான்காம் வகுப்பில் வேறு ஒரு சம்பந்தம் இல்லாத கேஸில் ஆசிரியர் சந்திரசேகரிடம் மாட்டி, பிறகு விடுவிக்கப்பட்டேன். அது பற்றி பிறகு எழுதுகிறேன்.) 

'ராமலிங்கம், ஆசிரியைக்கு கப்பல் வரும்போதெல்லாம், பரிசுப் பொருட்கள் கொடுத்ததன் காரணம் என்ன?' என்ற கேள்விக்கு இதுநாள் வரை எனக்கு பதில் தெரியவில்லை. உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். 

ஐந்தாம் வகுப்பில் என்னுடன் படித்த வேறு ஒரு ராமலிங்கம் சற்று வித்தியாசமான திறமை கொண்டவன். அவனுடைய வலது கை சுண்டு விரல் கீழ்ப் பகுதியில் ஒரு மரு போன்ற அமைப்பு இருக்கும். முழு பென்சில் கொண்டு வருகின்ற பையன்களை அவர்களுடைய பென்சிலை இரண்டு கைகளுக்கு நடுவே ஏந்தச் சொல்வான். 

அந்தப் பென்சிலை தன்னுடைய வலது கை சுண்டு விரல் பகுதியை கத்தி போல நடுவே ஒரு கராத்தே (அந்தக் காலத்தில் கராத்தே போன்ற சொற்களை நாம் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்! ) வெட்டு வெட்டுவான். அவ்வளவுதான் - பென்சில் இரண்டு துண்டுகளாகிவிடும்! 

பள்ளிக்கு பென்சில் இல்லாமல் வருபவர்கள் மற்றும் பென்சில் காணாமல் போனவர்கள், ராமலிங்கத்தின் உதவியை நாடி, பெரிய பென்சில் கொண்டு வந்த பையன்களின் பென்சிலை வாங்கி துண்டாடி தங்களுக்கு ஒரு துண்டு பென்சில் எடுத்துச் செல்வார்கள்! 

+= = = = = = = 

அப்பாதுரை பக்கம் : 

பிள்ளை வளர்ப்பு

பிள்ளை வளர்ப்பு பற்றி சென்ற முப்பது வருடங்களில் நிறைய அறிவுரைகள் கேட்டிருக்கிறேன். சில காசு கொடுத்து.

சில அனியாயத்துக்கு காசு கொடுத்து.  அனியாயத்துக்கு காசு கொடுத்த வகுப்புகளில் 'மாதிரி பெற்றோர்' என்று ஒரு மென்பொருள் விளையாட்டு நினைவிருக்கிறது. கணினி உருவாக்கிய மாதிரி அல்லது உதாரணப் பெற்றோர் - அதனுடன் அசல் பெற்றோரான நாங்கள் பிள்ளை வளர்ப்பு பற்றிய பலவித சிக்கல்கள் நிலைகள் நிகழ்வுகளைத் தொட்டு உருவாக்கப்பட்ட விளையாட்டில் ஆடி வெல்ல வேண்டும்.  அக்கிரமம். (இப்ப சொல்லி என்ன ஆவப் போவுது..).

என் சிறு வயதில் நான் சாதாரணமாக ஏதாவது பதில் சொன்னாலே பளார் என்று அறை விழும், முறைப்போ அல்லது கடுமையான திட்டோ விழும்.  ஒன்றும் பெரிய விஷயமிருக்காது. "இன்னிக்கு காமராஜ் செத்துட்டாருனு ஸ்கூல் லீவு விடுவாங்களாப்பா?" என்று கேட்டிருப்பேன். "இங்க வாலே.. காமராஜர் எவ்ளோ பெரிய மனுசன்.. ஒரு மரியாதை அனுதாபம் துக்கம் எதுவும் இல்லாம லீவுனு கொண்டாட்டம் கேக்குதா.. தறுதல".  உண்மையாகவே ஏதாவது உருப்படியாகக் கேட்டால் "இதெல்லாம் பெரியவங்க விசயம். ஒதுங்கிப் போலே". அனேகமாக இவ்வளவே என்னை வளர்த்த வளர்ப்பு.

எனக்குப் பிள்ளைகள் பிறந்ததும் நிலமை எப்படி மாறிவிட்டது! கத்தக்கூடாது, அடிக்கக் கூடாது, அன்பால் எதையும் சுட்டிக் காட்ட வேண்டும், வளர்ப்பு முறைகேடு அது இது என்று கோர்ட் சிறை வரை நீளும் பிள்ளை வளர்ப்பு விதிகள் முறைகள். "கடைக்குப் போய் காய் வாங்கி வா" என்று என் பெண்ணை அனுப்பினால் மறுநாள் அவளுடைய டீச்சரிடமிருந்து செய்தி வரும்.  பிள்ளையை தேவையற்ற அபாயத்துக்கு உட்படுத்துவதாக முதல் வார்னிங் தருவார்கள். மூன்று வார்னிங் வந்தால் அபராதம். பிள்ளைகளை எதுவுமே சொல்ல முடியாமல், கண்டிக்க முடியாமல், செயல்-விளைவு பற்றிய புரிதலே இல்லாமல் வளர்த்தாகி விட்டது. ஆனால் பிள்ளைகள் இப்போது என்ன சொல்கிறார்கள்? மனக்கஷ்டம், தைரியமின்மை, அழுத்தம், கவலை என அவர்களுடைய உபாதைகளுக்கெல்லாம் பெற்றோர் மற்றும் வளர்த்த விதமே காரணம் என்று  தீர்மானமாகச் சொல்லி, வாரா வாரம் மனோதத்துவ தெரபியில் மூழ்கிக் கிடக்கிறார்கள். 

இப்படியாகும் என்று முப்பது வருடங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால்? யார்ராவன் சொன்னது.. சந்ததிப் பேறு பெரும்பேறு.. புத்திர பாக்கியம்...சந்தானப் ப்ராப்தி.. டேய்... இழுத்துட்டு வாங்கடா அவனை.  

சென்ற ஞாயிறு காலை பத்து மணியிருக்கும். பிள்ளைகள் இல்லாத வீட்டில் நிம்மதியாகக் காலை காபி டிபன் சாப்பிட்டபடி டிவியில் மாலாமால் லாட்டரி படம் பார்க்கத் தொடங்கியிருந்தேன். பக்கத்து வீட்டிலிருந்து அழைத்தார் நண்பர் "அவசரமா வரமுடியுமா?".

ஓடினேன். என்னை விட மிக இளையவர். மூன்று பிள்ளைகள், இரண்டு நாய். Lucky man. நாய்கள் படு சமர்த்து. Well behaved. கதவைத் தட்டி உள்ளே நுழைந்தேன். "அவசரம்னிங்களே?".

"ஆமாம்.. ஒரு சாட்சி வேணும்.  அதான் கூப்பிட்டேன்.. போலீசை வரச்சொன்னாள் என் பெண்"

அடப்பாவி என்று எண்ணி நெளிந்தபடி "ஹிஹி.. என்ன சொல்றிங்க ?" என்றேன்.

"போலீஸைக் கூப்பிட்டிருக்கேன்.. இப்ப வருவாங்க.. விட்னஸ் கேப்பாங்க. அதான்"

"ஐ டோன் கேர். போலீஸ் வரட்டும்" என்று மகள்  சொல்லி முடிக்குமுன் வாசலில் போலீஸ்.

எங்கிருந்து ஆப்பிரிக்க மக்களுக்கு இந்த டிஎன்ஏ வந்ததோ.. ஒண்ணரை கமல்ஹாசனுக்கான உயரம் இரண்டு சிவாஜிக்கான பருமனுடன் உள்ளே வந்தார் போலீஸ். என்னைப் பார்த்தார். "வாட்சப்?" என்றார்.

"இல்லை இன்ஸ்டாக்ராம்" என்று செல்போனை பையில் வைத்தேன். தன் செருப்பில் ஒட்டிக்கொண்ட சூயிங் கம் போல என்னைப் பார்த்த போலீஸ் நகர்ந்து நண்பரைப் பார்த்தார். "வாட்சப்?" என்றார்.

நண்பர் உடனே "நான் முறைகேடாக நடப்பதாகச் சொல்லி என் பெண் உங்களை வரச்சொன்னாள்.. அதான் கூப்பிட்டேன்" என்றார். போலீஸ் எதிரில் நின்று கொண்டிருந்த நண்பரின் மகளைப் பார்த்தார். போலீசுக்கு உதவியாக இருக்கட்டும் என்று நானே "வாட்சப்?" என்றேன்.  

அந்தப் பெண் என்னைப் பார்த்த பார்வையில் எத்தனை உக்கிரம்!! பிறகே நினைவுக்கு வந்தது வாட்சப் வயதானவர்களுக்கு என்று. "ஓ, ஷடிட்" என்றாள் நண்பரின் மகள். போலீசை பார்த்து அசரவில்லை பெண்.  போலீசைப் பார்த்தால் இந்த வயதிலும் வெலவெலக்கும் எனக்கு.  

"என் அப்பா என்னை தினம் வீட்டு வேலை வாங்குறார்.  வீட்டைத் துடை, புத்தகத்தை அடுக்கு, ரூமை சுத்தமாக வை, கடைக்குப் போ, கச்சடா வாளியை வெளியே எடு, துணி துவை என்று என்னை ஓயாமல் வேலை வாங்குகிறார்.  வேலை செய்யவில்லை என்றால் அதட்டுகிறார் கூச்சல் போடுகிறார். வெளியே நிறுத்துகிறார். செல்போன் விடியோ கேம்ஸ் வாராந்திர செலவுப்பணம் போல என் உரிமைகளைப் பறிக்கிறார். சைல்ட் அப்யூஸ். அவருக்கு இந்த மீறல்களுக்கான தண்டனை அபராத விவரம் எல்லாம் சொல்லுங்க.. சிவில் வார்னிங் கொடுங்க" என்று பொறிந்தாள் நண்பரின் மகள்.

அசந்து போனேன். நண்பரின் நிலையை எண்ணி வருந்தினேன். கமல்சிவாஜி போலீஸ் மெள்ள நகர்ந்து அந்தப் பெண்ணிடம் "அவோல்டார்யு?" என்றார்.

"போர்டீன்" என்றாள் ந ம.

"பதினாலு வயதில் இத்தனை தெரிந்து வைத்திருக்கிறாயே?" என்று வியந்தார். நண்பரைப் பார்த்தார். மாட்னான் மனுசன் எனறு பரிதாபப்பட்டேன். அசராமல் "என்ன?" என்றார் நண்பர். இடுப்பில் கை வைத்தபடி போலீஸைப் பார்த்தார்  ந ம. "யூ டெலிமார்வாட்?" என்றாள். 

போலீஸ் கனைத்தார். குரலைச் சரி செய்து கொண்டு "யா.. உன் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விடச் சொல்லப் போகிறேன். அதை சாட்சியோடு பார்க்கப் போகிறேன்" என்று என்னைச் செல்லமாக இடித்தார். வலித்தது.

ந ம அதிர்ந்தாள். "வாட்?"

போலீஸ் தொடர்ந்தார். "ஆமாம்.  உன்னையும் உன் ப்ரோக்களையும் வளர்க்க எத்தனை கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா உன்னைப் பெற்றவர்கள்?  நீ அவர்களுடைய மகள்.  உன்னை முறையாக சீராக வளர்ப்பது அவர்கள் கடமை. அவர்களுக்கு அடங்கி அவர்கள் சொற்படி கேட்டு நடப்பது உன் கடமை. அப்படி நீ அடங்காவிட்டால் உன் அப்பா உன்னை அதட்டவோ அடிக்கவோ செய்தால் அது அவர்கள் உரிமை.  மீறலாகாது. பொறுப்புணர்த்தாமல் பிள்ளைகளை வளர்ப்பதே மீறல். உன்னை காயப்படுத்தினாலோ தினம் அடித்து உதைத்தாலோ சாப்பாடு தர மறுத்தாலோ வீட்டை விட்டுத் துரத்தினாலோ அது மீறல். வீட்டை சுத்தம் செய், உன் துணிகளை மடித்து வை, வீட்டில் உதவியாக இரு என்று கேட்பது மீறல் அல்ல. இன்னொரு முறை இப்படி நீ நடந்தால் உனக்குத்தான் கேடு. உன் அப்பன் கையைப் பிடித்து நானே அறையச் செய்வேன். உனக்கு கிடைத்திருக்கும் சலுகைகளில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாமல் தவிக்கும் பிள்ளைகள் எத்தனை பேர் தெரியுமா? நன்றி இல்லாமல் பொறுப்பு இல்லாமல் இருக்கும் உன்னைத்தான் டெக்ஸஸ் சட்டப்படி நான் கண்டிக்கவேண்டும்" என்று முழங்கியதைக் கேட்டு நானே ஆடிப் போனேன். எங்கே இருந்தார் இந்த கமல்சிவாஜி பதினைந்து வருடங்களுக்கு முன்? 

நேற்று நண்பரை மார்கெட்டில் சந்தித்தேன். ஒரு கையில் காய்கறிக் கூடையைத் தூக்கிக் கொண்டு இன்னொரு கையில் பூந்தொட்டி ஒன்றை சுமந்தபடி நண்பர் அருகில் அமைதியாக நின்று கொண்டிருந்தாள் ந ம.

வால்:

சிவாஜிகமல் சொன்ன டெக்ஸஸ் சட்டம் உண்மையாக இருக்குமோ? பதினைந்து வருடங்களுக்கு முன்பே சிகாகோவை விட்டிருக்கலாமோ?

37 கருத்துகள்:

  1. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அப்பா துரை ஐயா அவர்களது பிள்ளை வளர்ப்பு பக்கம் அருமையிலும் அருமை..

    விஞ்சானத்தை முகவும் வளர்த்து விட்டோம்...

    மாதிரி பெற்றோர் ஆப்பு!..

    ஆனாலும் அது செருப்பில் ஒட்டிக் கொண்ட மெல்லும் பசை மாதிரி போகும் இடம் எல்லாம் வருகின்றது..

    பதிலளிநீக்கு
  4. //பாடலினால் (வரிகள், இசை, பாடுபவரின் திறமை) புகழா இல்லை நடிகரின் வாயசைப்பு, காட்சியினால் புகழா? வெற்றியில் யாருக்கு எவ்வளவு சதவிகிதம்?

    இதற்கு ஸ்ரீதர் ஒரு முறை குமுதத்தில் பதில் சொல்லியிருந்ததாக நினைவு. இசை, பாடல், அமைப்பு, குரல், நடிப்பு - இந்த வரிசையில் திரைப்பாடல்கள் சிறப்பு அமைவதாக. ஸ்ரீதர் படப்பாடல்கள் எப்போதுமே சிறப்பாக அமைந்தது பற்றிய கேள்வி. தான் உடல்நிலை சரியில்லாமல் தவித்த போது சிவாஜி விஜயா இருவரும் சேர்ந்து பூமாலையில் பாட்டை வடிவமைத்து படம் பிடித்ததாகச் சொல்லியிருப்பார். இசையும் பாடலும் சிறப்பாக இருந்ததால் அமைப்பு சோடை போனாலும் பரவாயில்லை என்ற ரீதியில் பதில் சொல்லியிருப்பார்! (தெனாவட்டா அல்லது திறமை கர்வமா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தத் திறமைசாலிக்கும் வித்யா கர்வம் அதீதமாக இருக்கும். இல்லாதவர்கள் விதிவிலக்குகள்

      நீக்கு
  5. ஒரு பாடலுக்கு கவிஞரின் வரிகள்தான் முக்கியம் என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டண்டணக்கா டகா டண்டண்கா... பயங்கர ஃபேமஸ் பாடல். வரிகளை கில்லர்ஜிதான் விளக்கணும்

      நீக்கு
  6. @அப்பாதுரை: தலைப்பில் விட்டுப்போனது: அமெரிக்காவில்

    பதிலளிநீக்கு
  7. படத்திற்கு திரைக்கதை போல, பாடலுக்கு வரிகளும் இசையும்...

    பதிலளிநீக்கு
  8. முதலில் என்னை ஈர்ப்பது இசை. மற்றும் குரல்..பாடியிருக்கும் விதம் அது நன்றாக இருக்கறப்ப மீண்டும் கேட்போம் அப்ப பதியும் வரிகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பெரியவர்கள் கூறும் அறிவுரை vs சிறியவர்கள் கூறும் அறிவுரை

    பெரியவங்க ரொம்பவே கட்டுப்பாடுகள், சில விதிமுறைகள் இப்படித்தான் செய்யணும் அப்படித்தான் செய்யணும் என்ற கட்டுப்பாடுகள்.

    சிறியவர்கள் இப்ப சொல்வது பெரும்பாலும் நாம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களை - பழைய பாடல்களை ரிமிக்ஸ் செய்வது போல - கொஞ்சம் இம்ப்ரொவைஸ் செய்து, அதைச் சொல்லும் விதத்தில் அழகாகச் சொல்கிறார்கள்,

    என் அனுபவம் - மகன் என்னிடம் சொல்லிவிட்டுச் சொல்வான் எல்லாம் நீ எனக்குச் சொல்லிக் கொடுத்த அடிப்படை பாடங்கள்தான்னு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இப்ப சிறியவர்கள் சொல்வது ரொம்ப அழகாக விளக்கி, அறிவியல் பூர்வமாக, லாஜிக்கலாகச் சொல்கிறார்கள் என்பது என் அனுபவம். என் மகனும் சரி, என் தங்கைகுழந்தைகள், மச்சினர் குழந்தை எல்லோரும் இக்காலத்து யதார்த்தமாகப் பேசுகிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
    சில பாடல்களை காட்சிகள் இல்லாமல் கேட்க பிடிக்கும்.
    வரிகளை விட இசை தான் முதலில் கவரும், பின் வரிகளை கவனிப்போம். பாடல் இசையும், பாடல் வரிகளும் சில பாடல்களில் பொருந்தி போய் அவை காலத்தை வென்ற பாடல்களாக நிலைத்து விடும் இசை ரசிகர்களின் உள்ளத்தில்.

    பதிலளிநீக்கு
  12. சிறு வயதில் நாம் பிள்ளைகள் நன்மைக்காக அறிவுரைகள் சொன்னோம், வயதான காலத்தில் நம் நன்மைக்கு பிள்ளைகள் சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஸ்மார்ட் போன் உபயோகிக்க பேரப்பிள்ளைகள் அறிவுரை கூறும்போது பொறுமையுடன் கேட்பது நல்லது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அருமை. அது குறித்து கருத்துரைகளில் அனைவரும் கூறியதையும் ரசித்தேன்.

    தங்கள் பக்கமும், சகோதரர் அப்பாத்துரை அவர்களின் பக்கமும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. பாடல்களை பொறுத்த வரை முதலில் இசை, பின்பு கவிதை நயம், பிறகுதான் படமாக்கப்படும் விதம். மிகவும் மோசமாக கெடுக்கப்பட்ட பாடல் 'கண்ணனை நினைக்காத நாள் இல்லையே' என்று நினைக்கிறேன். "பனி விழும் மலர் வனம்.." பாடல் கூட பார்க்க தமாஷாக இருக்கும். பாடல் வரிகள், பாடப்பட்ட விதம், இசை, படமாக்கப்பட்ட விதம் எல்லாமே சிறப்பாக அமைந்த பாடல் என்றால்,புன்னகை மன்னனில் 'என்ன சத்தம் இந்த நேரம்..' பாடலை சொல்லலாம். பொதுவாகவே பாலசந்தர் படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும். அழகன் படத்தில் 'என் வீட்டில் இரவு, அங்கே இரவா? இல்ல பகலா..?' பாடல் மிகவும் நன்றாக படமாக்கப்பட்டிருக்கும். பிண்ணனியில் அந்தக் கால டி.டி.யின் தீம் மியூசிக் ஒலிக்கும். சங்கர் படங்களில் கூட பாடல் காட்சிகளுக்காக மிகவும் மெனகெட்டிருப்பார். உ.ம். 'அண்டங்காக்கா கொண்டக்காரி..' பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மைதான். சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

      நீக்கு
  16. கௌதமன் சாரின் பள்ளிக்கூட அனுபவங்கள் ஸ்வாரஸ்யம்.அருண்மொழியை அருண்மொஸி என்று வாசித்த அந்த வாத்தி மக்கு என்று அப்போதே தீர்மானித்து விட்டேர்களா?

    பதிலளிநீக்கு
  17. அப்பாதுரை எழுதியிருப்பது போல ரொம்பவும் திட்டாமல், அடிக்காமல் வளர்க்கும் பொழுது நொய் அரிசி ஆகி விடுகிறார்கள். கொதி தாங்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  18. //ஆக மொத்தம் நமக்கு, மற்றவர்களுக்கு அறிவுரை கூற சந்தர்ப்பமே கிடைக்காது போலிருக்கு! மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல சிறு வயதில் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் நமக்கு அறிவுரை கொடுத்தார்கள். பெரிய வயதில் நம் குழந்தைகள் நமக்கு அறிவுரை கொடுக்கிறார்கள். / நான் மட்டும் தானோனு நினைச்சேன், உண்மையாகவே ஆறதல்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!