புதன், 30 ஆகஸ்ட், 2023

தோசை ஏன் வட்டமாகவே செய்யப்படுகிறது?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

1) திருமணம், விசேஷம் என்றால் எல்லோரும் பால் பாயசம், உ.கி.கறி, பீன்ஸ் பருப்பு உசிலி, அவியல் என்று ஒரே மெனுவை போடுகிறார்கள். மாறுதலாக ஏதாவது சொல்லுங்களேன்.

# என்ன வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.  விசேஷ சந்தர்ப்பம் என்பதால் கொஞ்சம் ஆடம்பரம் தேவை என்று ஆகிறது.  மூங்கில் குருத்து இனிப்புக் கூட்டு, பாதாம் துவையல் தேங்காய்ப்பூ மிளகு பொடி சாலட் , தும்பைப் பூ சூப் என்று மாற்றி யோசிக்கலாம். 

& கல்யாண சமையல் எப்பொழுதும் பெண் வீட்டார் ஏற்பாடு பண்ணுவது. புதுமை என்று நினைத்து, அவர்கள் எதையாவது செய்யப்போய், மாப்பிள்ளை வீட்டாரின் சொந்தங்களில் யாராவது பழமை விரும்பி / ஐதீக ஆட்கள் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டால் பேஜார் ஆகிவிடும். அதனால் பாரம்பரிய சமையலை பின்பற்றவேண்டியது அவசியமாகிவிடுகிறது. என்னுடைய பெண் கல்யாணத்தில், மாப்பிள்ளை வீட்டார் பரிந்துரைத்த சமையல் காண்ட்ராக்ட் ஆளை நியமித்தேன். அதனால், அவர் என்ன புதுமை செய்தாலும், கவலை இல்லாமல் இருந்தேன். 

ஒரு உறவினரின் கலப்புத் திருமணத்திற்கு சென்று வந்த என் சகோதரரின் மனைவி, ஒரு சுவையான சம்பவத்தைக் கூறினார். 

தாலி கட்டி (கல்யாணம்) முடிந்ததும், மாப்பிள்ளை உறவினர்கள் எல்லோரும் சாப்பிடப் போய் பந்தியில் உட்கார்ந்தார்களாம். சாப்பாடு வரவில்லை. இருந்த சமையல்காரர்கள் எல்லோரும் கடையைக் கட்டிக் கொண்டு கிளம்பத் தயார் ஆகிக்கொண்டிருந்தனராம். என்ன விஷயம் என்று விசாரித்தால், பெண் வீட்டார் ( வேறு ஜாதி) சொன்னார்களாம். "தாலி கட்டும் வரைதான் எல்லாம் எங்கள் செலவு.. இனிமேல் எல்லாம் உங்கள் செலவுதான். 'இதை ஏன் நீங்கள் முன்பே சொல்லவில்லை?' என்று கேட்டதற்கு ' உங்களுக்கு எல்லாம் ஏற்கெனவே தெரிந்திருக்கும் என்று நினைத்தோம்.' என்றார்களாம். அப்புறம் மாப்பிள்ளை வீட்டார் - ஏற்கெனவே சமைத்த சமையல்காரர்களைப் பார்த்துப் பேசி, அவர்கள் கேட்ட பணத்தைத் தருவதாகச் சொல்லி ஒரு வழியாக சமாளித்தார்களாம்! 

2) ஊழல் செய்து விட்டு சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகளுக்கு தனி அறை, வீட்டு சாப்பாடு, டி.வி. வசதிகள் செய்து கொடுப்பது நியாயமா?

# கைதியின் அந்தஸ்துக்கு ஏற்ற வகையில் சிறை வசதிகள் கொடுக்கப் படுகின்றன என்று சொல்கிறார்கள்.  இதில் நியாயம் சிறிதும் இல்லைதான் .  என்ன செய்வது? சட்டம் ஒரு கழுதை என்பது பிரசித்தம் ஆயிற்றே !

ஜெயகுமார் சந்திரசேகரன் : 

BLOG என்ற வார்த்தை யாரால் எப்படி எப்போது உண்டாக்கப் பட்டது. அதன் தமிழ் வார்த்தை  என்ன? 

# Web + log blog ஆக மாறியது. அதுவும் உரு மாறி blog வந்தது. தமிழ் ஆக்க வல்லுனர்கள்களுக்கு இது பெரிய சவால் இல்லை.  இணையத்திடுகை போல கொடுந்தமிழாக்கம் வந்துதான் ஆக வேண்டுமா ? Blog எனும் சொல்  யார் கண்டுபிடிப்பு போன்ற தகவல் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும்.

புளியோதரை, எலுமிச்சை சாதம் உண்டாக்க சுலப வழியாக பொடி மற்றும் பேஸ்ட் கிடைக்கிறது, ஆனால் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், தயிர்சாதம்  போன்றவை உண்டாக்க பொடியோ பேஸ்டோ கிடைப்பதில்லை ஏன்?  

# எளிதான உணவு தயார் நிலையில் விற்பனைக்குக் கொண்டு வர ஆகும் மேல் செலவு அதிகம் என்பதால் பெரிய அளவில் விற்பனை சாத்தியம் இல்லை. சுவை குன்றாமல் உலர் நிலை கொண்டு வருவதும் கடினம். 

தோசை ஏன் வட்டமாகவே செய்யப்படுகிறது. முக்கோணம், சதுரம், சூரியகாந்தி பூ , வண்டிச்சக்கரம், நட்சத்திரம்  போன்ற டிஸைன்களில் செய்யக் கூடாது? ( அப்படி தோசை செய்ய ஒரு வழி திங்கள்கிழமை பதிவில் வெளியிடலாம்.) 

# வெவ்வேறு வடிவில் தோசை பூனைக்குட்டிக்கு சவரம் என்று எங்கள் வீட்டில் முக்கோண தோசை முயன்று பார்த்த போது நிராகரிக்கப் பட்டது !

& நட்சத்திர வடிவில் ஒரு தோசை செய்தேன். திருப்பிப் போட வரவில்லை. அப்படியே தோசை உப்புமாவாக அதை செய்து சாப்பிடவேண்டியதாயிற்று! 

பெங்களூரு ஹோட்டல்களில் மசாலா தோசைகள் நீள்வட்ட (elliptic) வடிவில்தான் இருக்கும். Along the major axis அதை மடித்து, கொண்டு வந்து வைப்பார்கள். தோசையைப் பிரித்துப் பார்த்தால்தான் உண்மை தெரியும்! 

புராணம் என்றால் என்ன? இதிகாசம் என்றால் என்ன? புராணத்திற்கும் இதிகாசத்திற்கும் வேறுபாடு  என்ன?

# இதிகாசம் என்பவை நடந்த நிகழ்ச்சிகள் என்றும் புராணங்கள் கடவுளர் பற்றிய "கதை " என்றும் சொல்லப் படுகிறது.

& புராணம்  நற்கருத்துக்கள், உருவகமாகப் புனையப்பட்ட கட்டுக் கதைகள் மூலம் வலியுறுத்தப்படும், புத்தகங்கள் மட்டுமே! இதிஹாசங்கள், நடந்ததை மிகைப்படுத்திக் காவியமாகப் படைக்கப்பட்ட நூல்கள்.

விக்கிப்பீடியா : இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்(Pre-historic Period)[1]. இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும். [2] இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும்மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.


= = = = = = = = 
KGG பக்கம். 

ஆறாம் வகுப்பு நாகையில் படித்த நான், ஏழாம் வகுப்பு (மட்டும்) நீலகிரியில் - நஞ்சநாடு என்னும் ஊரில் போர்டு ஹை ஸ்கூலில் படித்தேன். 

முற்றிலும் புதிய சூழ்நிலை. சுற்றிலும் புதிய முகங்கள். ஆசிரியர்கள் எல்லோருமே கோட்டு சூட்டுடன் வருவார்கள். 

ஆறாம் வகுப்பு கூரைக் கொட்டகையில் படித்த எனக்கு, இந்த பள்ளிக்கூடத்தின் பிரம்மாண்ட வகுப்பறைகள் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

பெரும்பாலான ஆசிரியர்களும், மாணவர்களும் படக இனத்தவர். மிகவும் அன்பாகப் பழகுவார்கள். பெரும்பாலும் படக இனத்து மாணவர்கள் பெயர்கள் எல்லாம் மகாபாரத மாந்தர் பெயரில் இருக்கும். அர்ஜுனன், தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் என்ற பெயர்கள் அதிகம். போஜன், நஞ்சுண்டன் போன்ற பெயர்களும் அதிகம். 

பள்ளியின் தமிழாசிரியர் கல்யாணசுந்தரம் என்று ஒருவர் வந்தார். என்னிடம், நான் எந்த ஊர் என்று அவர் கேட்க, நாகப்பட்டினம் என்று சொன்னதும் அவருக்கு ஒரே சந்தோஷம். 'அட ! நம்ம ஊர்க்காரனா நீ' என்று கேட்டார். 'Mission high school தெரியுமா?'  என்று கேட்டார். ' தெரியும் சார். அந்த ஸ்கூல் அருகேதான் நான் ஐந்தாம் வகுப்புப் படித்தபோது குடியிருந்தேன்' என்று சொன்னேன். அவருக்கு இன்னும் சந்தோஷம். 

படக பையன்கள் பலரும் எனக்கு படக மொழி சொல்லிக்கொடுப்பதில் ஆர்வமாக இருந்தனர். படக மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. பேச்சு வடிவம் மட்டுமே. இப்போது கர்நாடகாவில் காலம் கழிக்கும்போதுதான், படக மொழிக்கும் கன்னட மொழிக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது தெரிகிறது. 

காலாண்டுத் தேர்வு முடிந்ததும், லீவு ஆரம்பிக்கும் முன்பு, கடைசி பரிட்சை எழுதி முடித்ததும், எங்கள் emerald camp லிருந்து EB வேனில் வந்து படிக்கும் மாணவர்களை, அருகில் உள்ள கிராமத்திற்கு, அவர்கள் வீட்டிற்கு அழைத்தனர், சில நண்பர்கள். காலையிலேயே பரிட்சை முடிந்துவிட்டதால், EB வேன் - மாலையில்தான் வரும் ( மதியம் பரிட்சை எழுதுபவர்கள் சில வகுப்பு) என்பதால், நாங்கள் கஷ்டப்பட்டு மலை ஏறி - அந்த கிராமத்திற்குச் சென்றோம். 

நாங்கள் சென்ற வீட்டில், எங்களுக்கு ஊட்டி வர்க்கி, பிஸ்கட் எல்லாம் கொடுத்தார்கள். அப்புறம் காபி கொண்டுவந்து கொடுத்தார்கள். காபி பச்சை நிறத்தில் இருந்தது. கிரீன் டீ போல - கிரீன் காபி - ஆனால் டேஸ்ட் விளக்கெண்ணை போல இருந்தது. இனிப்பு இல்லை,கசப்பு இல்லை, எதுவுமே இல்லை! 

அதைக் குடித்துக்கொண்டு இருந்தபோது, அவர்கள் வீட்டில் இருந்த ஒரு மூன்று வயது பையன், வீட்டினுள் "no 2" போனான். அதை, அந்தப் பையனின் அம்மா கைகளினாலேயே எடுத்து வெளியே எறிந்து விட்டு வந்து, " காபி நன்றாக இருந்ததா? " என்று கேட்டார்! 

தின்றது, குடித்தது எல்லாம் வெளியே வந்துவிடும் என்ற பயத்தில், வாயைப் பொத்திக்கொண்டு, தலையை மட்டும் வேகமாக ஆட்டி வெளியே ஓடிவந்துவிட்டோம். 

எங்களை அழைத்த பையன்கள், நாங்கள் திரும்பி வரும் வழியில், அவர்களின் தோட்டத்திலிருந்து, நிறைய சிவப்பு முள்ளங்கி, கேரட், சில பெயர் தெரியாத பழங்கள் என்று பறித்து, பெரிய பை ஒன்றில் போட்டுக் கொடுத்தனர். பங்கு பிரிக்கும்போது எங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று கிலோ முள்ளங்கி, மூன்று கிலோ கேரட் - என்ற அளவுக்கு கிடைத்தன! 

நல்ல மனிதர்கள்தான். ஆனால் நாகரீக வளர்ச்சி 'அப்பொழுது' அந்த கிராம மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. 

= = = = = = = =

அப்பாதுரை பக்கம் : 

திரைக்கதை: 2001 - A Space Odyssey

1950களில் அச்சான ஆர்தர் க்ளார்க்கின் மேதாவிச் சிறுகதை, அதைத் தொடர்ந்த நாவல், இரண்டையும் தழுவி ஸ்டான்லி குப்ரிக்கின் திரைக்கதை வசன இயக்கத்தில் 1968ல் வெளியான சினிமா உலக மைல்கல்.  பாரதி வள்ளுவன் கம்பனின் வாசிப்பில் கிடைக்கும் சிலிர்ப்பும் சிந்தனையூற்றும் ஒவ்வொரு முறையும் இந்த படத்தைப் பார்க்கையில் கிடைக்கும்.

கதைப் பின்னணி.
நம் பிரபஞ்சம் உருவானதும் ​​"ஆதிசக்தி" என்று அழைக்கப்படும் அறிவும் சக்தியும் மிகுந்த ஆதிப் பிரபஞ்சவாசிகள் தோன்றினர். அவர்களின் நோக்கம் பிரபஞ்சத்தின் பராமரிப்பாளர்களாக இருப்பதே. இந்த ஆதிசக்திகளுக்கு இரண்டு முக்கிய குறிக்கோள்கள் இருந்தன:
- நம் பிரபஞ்சத்தில் புதிய உயிரினங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது
- உயிரினங்களின் வளர்ச்சியில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டுக் கட்டுப்பாட்டை மீறுகையில் அவற்றைச் சீர்படுத்துவது

உயிரினங்களின் வளர்ச்சியை மேம்படுத்திக் கண்காணிக்க உதவியாக,  உயரமான கருநிறச் செவ்வக வடிவங்களை பிரபஞ்சத்தின் நான்கு இடங்களில் ஆதிசக்திகள் நிறுத்தினர்:
1. பூமியின் நடுப்பகுதியில் 
2. நிலவின் தென்பகுதியில்
3. வியாழனின் பாதையில்
4. வேறோரு பரிமாணத்தில்

கதை விளக்கம்.
திரைக்கதை மூன்று பயணக் கட்டங்களாகச் சொல்லப்படுகிறது: 
I: மனிதப் பரிணாமப் பயணம்
II: மாற்றுக் கிரகப் பயணம்
III: மாற்றுப் பரிமாணப் பயணம்

மனிதப் பரிணாமப் பயணம்.
பூமியில், இன்றைக்குச் சுமார் ஒரு கோடி வருடங்களுக்கு முன், குறிப்பாக வரலாற்றுக்கு முந்தைய மத்திய ஆப்பிரிக்காவில், குரங்குகளிடையே படம் தொடங்குகிறது. மனிதப் பழங்குடியின் அடையாளக் காட்சி.   (மனித) குரங்குகள், மற்ற குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் பலவகை விலங்குகள் ஆங்காங்கே சிதறி வாழ்கின்றன. கூட்டாக வாழ்ந்தால் சிறுத்தைகள் தங்களை அடித்துக் கொல்வதிலிருந்து பாதுக்காப்பு கிடைப்பதை உணர்ந்த  (மனித)குரங்குகள் கூட்டாக வாழத்தொடங்கின.  சமூக நாகரிகம் தொடங்கியது. விரைவில் அச்சமூகத்தின் இனங்களுக்குள்ளே தலைமைப் பகையும் பிரிவும் சச்சரவும் உருவானதால், தனித்தனி குழுக்களாக அவரவர் தலைமையுடன் நீர் நிலைகளை ஒட்டி குகைகளில் பாதுகாப்பாக வாழ்ந்து வளரத் தொடங்கின.  எல்லைகள் தொடங்கின. இப்படி வளர்ந்த குரங்கு சமூகங்களில் ஒன்று, ஆதிசக்தி ஊன்றிய ஒற்றைச் செவ்வகத்தைக் காண்கிறது.  குரங்குகள் பயத்தில் ஆர்ப்பரிக்கின்றன. மெள்ள அமைதியடைந்து தலைவன் குரங்கில் தொடங்கி, பயம் ஆரவாரம் அதிசயம் ஆர்வம் ஏற்பு அரவணைப்பு என்று வரிசையாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி செவ்வகத்தைத் தொடவும் கட்டவும் செய்கின்றன.  பரவசமாகின்றன. சாந்தமாகின்றன. குரங்குகளின் உணர்வு பாதிக்கபடுவது இங்கே சொல்லப்படுகிறது. 

அடுத்த காட்சியில், இறந்து போன தன் இனமொன்றின் வரண்ட எலும்புக் குவியல் அருகே தலைவன் குரங்கு சிந்தனையாக அமர்ந்திருக்கிறது.  மனதுள் செவ்வகம்  வந்து போக, திடீரென்று அந்தக் குரங்கு எலும்புகளை அளையத் தொடங்குகிறது. நீளமான தடி போன்ற தொடை எலும்பை எடுத்து அதனால் பிற எலும்புகளை அடிக்க, சுக்கு நூறாக எலும்புகள் உடைவதைக் காண்கிறது. அடுத்த காட்சியில் பல குரங்குகள் ஆத்திரத்தால் நிரம்பி தலைவன் பின்னால் ஆளுக்கொரு தடியெலும்பை வைத்துக்கொண்டு மற்ற குரங்குச் சமூகத்துடன் சண்டை போட்டு, முதல் முறையாக எதிர் சமூகக் குரங்கை, இன்னொரு தன்னின உயிரை, அடித்துக் கொல்கின்றன. எலும்புடன் உலவும் குரங்குகளைக் கண்ட மற்ற சமூகக் குரங்குகள் அஞ்சிப் பணிகின்றன. எலும்பு ஒரு கருவி. இப்படி (குரங்கு) மனிதன் கருவிகளின் பயனைக் கண்டறிந்தான்.

அடுத்த காட்சியில், எதிரிக் குரங்குகளை அடித்து விரட்டிய தலைக்குரங்கு தன் கையிலுருந்த எலும்பு ஆயுதத்தை வெற்றி எக்காளத்துடன் உயரே வீசுகிறது. கேமரா அந்த எலும்பத் தொடர்ந்து பூமியின் சுற்றுப்பாதையில் மிதக்கும் ஒரு பெரிய விண்வெளிக் கப்பலுடன் பொருத்துகிறது. எலும்பிலிருந்து விண்வெளி ஊர்தி வரை (கருவி/ஆயுதம் → கருவி/ஆயுதம்) மனிதன் முன்னேறிவிட்டான் என்பதைக் குறிக்கும் திரைக்கதைத் திருப்பம். ஒரு சமூகம் விரைவாக முன்னேற பலவித உள் மோதல்கள் இருக்க வேண்டும் என்ற சமுதாயச் சிந்தனையும் இங்கே வெளிப்படுகிறது. 

தொடர்ந்து முன்னேறும் (குரங்கு)மனிதனின் பிரிவினை, பேராசை, போர்கள், பொறாமை, பகை மற்றும் புதிய ஆயுதங்களால் ஆதிசக்தி பதித்த கருஞ்செவ்வகம் அழிக்கப்படுகிறது. (இது படத்தில் காட்டப்படவில்லை. ஆனால் மனிதர்கள் தங்கள் பரிணாம வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வழியாக மோதல்கள் மற்றும் அழிவுகளை தொடர்ந்து பயன்படுத்துவதாகக் குறிக்கப்படுகிறது). 

மாற்றுக் கிரகப் பயணம்.
20ம் நூற்றாண்டின் இறுதியில் போல் தொடங்குகிறது இரண்டாவது கட்டம்.  
குரங்கைத் துறந்த மனித நாகரிகம் மிகவும் மேம்பட்டுவிட்டது. நிலவுக்குச் சென்ற மனிதர்கள் விண்வெளிப்பயண எல்லைகளைச் சுலபமாக நெருங்கி வருகின்றனர்.  செயற்கை அறிவையும் இயக்கங்களையும் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள்.  இந்த முன்னேற்றங்கள் பலவிதங்களில் திரையில் காட்டப்படுகின்றன.

பின்வரும் இரண்டாம் கட்டத்துக்கான முன்கதை திரையில் காட்டப்படவில்லை, ஆனால் ஆங்காங்கே உணர்த்தப்படுகிறது.  ஏதோ ஒரு நூற்றாண்டில் மனிதர்கள் சந்திரனின் தென்முனைக்குப் பறந்தபோது அதன் நிலத்தடியில் மிக உயரமான ஒரு கருஞ்செவ்வகம், புதையாமல் ஆனால் அந்தரத்தில் அசையாமல்,  நிற்பதைக் கண்டுபிடித்தார்கள் (இரண்டாவது ஆதிசக்தி செவ்வகம்). மனித விண்வெளி வீரர்கள் தங்கள் மூதாதையக் குரங்குகள் போலன்றி பயமும் ஆர்வமும் துறந்து அறிவுச் செறுக்குடன் செவ்வகத்தை அணுகுகிறார்கள். சூரிய ஒளி செவ்வகத்தின் உச்சியில் பட்டதும் உரத்த தொடர்ச்சியான ஒலியை வெளியிடுகிறது.  அந்த ஒலியைத் தொடர்ந்த மனித விஞ்ஞானிகள் அது வியாழனைச் சுற்றிவரும் ஒரு கலனுக்கான சமிக்ஞை என்று கண்டுபிடிக்கிறார்கள்.  சந்திரனிலிருந்து வியாழனுக்கு அப்படி என்ன செய்தி போகிறது என்று கண்டறியும் வேகத்தில் அந்த ஒலியைத் தொடர்ந்து வியாழனுக்கு பயணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இனி வரும் கதை திரையில் சொல்லப்படுகிறது.

வியாழனுக்குப் பயணம் சென்று கொண்டிருந்த டிஸ்கவரி விண்வெளிக் கலனுள் பயணிகளுக்கு திடீரென இனம் புரியாத உபாதைகள் ஏற்படுவது அறிந்து அதைச் சீராக்க, புது நபராக, குழுத்தலைவனாக,  இன்னொரு கலனிலிருந்து விஞ்ஞானி டேவிட் வந்திறங்கும் காட்சியுடன் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.  குழு அறிமுகத்தின் போது ஆறாவது நபராக, செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும்,  மனிதனால் உருவாக்கப்பட்ட கணினி ஹேல்,  தன்னைக் கலனின் தளபதியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறது. 

குரங்கு->(மனித)குரங்கு->மனிதன்->கணினி->(மனித)கணினி என்ற வளர்ச்சியின் முழுமை இந்த இடத்தில் சொல்லப்படுகிறது.

மனிதர்கள் கண்டறியாதது என்னவென்றால், இந்த ஒலி உண்மையில் மனிதன் (குரங்கு) குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி, வேறு கிரகத்திற்குப் பயணிக்கத் தயாராகிவிட்டதை உறுதிப்படுத்தும் ஒரு செய்தியாகும். இதை மனிதர்கள் உணரவில்லையே தவிர மனிதன் உருவாக்கிய செயற்கையறிவுக் கணினியான ஹேல் உணர்ந்து விடுகிறது. 

இந்த வாய்ப்பை சாதகமாகவும் சுயநலத்துடனும் பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் மேலேறிய ஹேல், தன்னைப் படைத்த மனிதர்களுக்கு எதிராகத் துணிகிறது. கலனுள் உபாதைகளையும் சிக்கல்களையும் இங்குமங்குமாக மறைமுகமாகத் தரத்தொடங்குகிறது. பயணம் தடைபட்டு தாமதமாக ஆக, கொண்டு வந்த உணவு வாயு எல்லாம் தீர்ந்ததும் மனிதப் பயணிகள் இறந்து விடுவார்கள், மனிதப் பயணிகள் இறந்ததும் உலகத்துடனான தகவலிணைப்பை அறவே அழித்துவிட்டு தான் மட்டும் வியாழனைச் சுற்றும் கலனை (இன்னொரு ஆதிசக்தி செவ்வகம் என்று யாருக்கும் தெரியாது) 'புதிய மனிதனாக' சந்திக்கலாம் என்று ஹேல் கணக்கு போடுகிறது. டேவிட் இதைக் கண்டுபிடித்து விடுகிறார்.  தன் சகாவுடன் இதைப் பற்றி மிகுந்த ஓசைக்கிடையே சொன்னாலும் அவர்களின் வாயசைவிலிருந்து ஹேல் கண்டுபிடித்து விடுகிறது. கணினிக்கு 360 டிகிரியில் வேலை செய்யும் கண் காதுகளை மனிதன் தானே படைத்தான்!

டேவிட் கண்டுபிடித்ததை அறிந்து கொண்ட ஹேல் முனைப்பாகிறது. கலனின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய மராமத்து செய்ய சகாவை அனுப்புகிறான் டேவிட். இதைக் கண்காணித்த ஹேல் சகாவின் பிராணவாயுக் குழாயைத் துண்டித்து அவனை அண்டத்தில் பிணமாகப் பறக்கவிடுகிறது.  அதே மராமத்துக்காகப் போன டேவிட் அண்டத்தில் உருண்டு கொண்டிருந்த சகாவின் பிணத்துடன் திரும்பி வந்ததைக் கண்ட ஹேல், அச்சத்தில் கலத்தின் கதவுகளை அடைத்து டேவிட்டை உள்ளே அனுமதிக்க மறுக்கிறது.  சகாவின் பிணத்தைத் துறந்த டேவிட்  மனிதருக்கென்றே அமைக்கப்பட்டிருந்த சாவியால் திருட்டுத்தனமாகப் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகையில், ஹேல் கலனுள் தூங்கிக்கொண்டிருந்த பிற மனிதப் பயணிகள் அனைவரையும் கொன்று விடுகிறது.  உள்ளே நுழைந்த டேவிட், ஹேலின் கணிணி மூளை நரம்புகளை ஒவ்வொன்றாகக் கொய்து எறிகிறான். இங்கே கணினி தன்னைப் படைத்தவனிடம் திருந்திப் பணிந்து கெஞ்சி இரைகிறது. கருணை காட்டாத மனிதன் (டேவிட்) கணினியின் கதையை முடிக்கிறான்.  ஆனால் ஹேலின் துணையில்லாமல் இந்த செய்திகளை பூமிக்கு டேவிடால் அனுப்ப இயலவில்லை.  தனியாக வியாழனுக்குப் பயணத்தைத் தொடர்கிறான்.

மாற்றுப் பரிமாணப் பயணம்.
'வியாழனைச் சுற்றும் துணைக்கோள்கள், சந்திரன்கள் இவற்றின் இடையே இது என்ன பூதாகாரமான செவ்வகம்?சந்திரனிலிருந்து வரும் சமிக்ஞை (செய்தி) இங்கே நின்றுவிட்டதே?' என்று அவன் குறிப்பெழுதும் போதே, வெறும் செவ்வகமல்ல அது இன்னொரு பரிமாணம், இன்னொரு உலகுக்கான விண்புதை என்பது டேவிடுக்குப் புரிகிறது. செவ்வகம் அவனை விண்புதையுள் இழுத்து அலைக்கழித்துப் புரட்டி அமைதியான இன்னொரு இடத்தில் கிடத்துகிறது. 

திரைக்கதையை இதற்குப் பிறகு ஒரே சுருக்காகச் சுருக்கிவிடுகிறேன்.  நீங்கள் படம் (மறுபடி) பார்த்தால் சுவை குறையக்கூடாது இல்லையா?

காலம் கழிகிறது. நாலாவது ஆதிசக்தி செவ்வகத்தை ஒரு சமயம் தன் அறையுள் காணும் டேவிட், தன் மூதாதை போல் அரண்டுபோகாமல், தன் இன மனிதன் போல் அறிவுச் செறுக்குறாமல், அமைதியுடனும் பணிவுடனும் செவ்வகத்தைத் தொட்டுப் பார்க்கிறான். மனிதன் தேறிவிட்டான், மனிதம் தன்னறிவு பெறத் தயாராகிவிட்டது என்று அறிந்த ஆதிசக்திகள், டேவிடை  (மனிதனாகவோ அல்லது வேறு உயிரினமாகவோ இல்லாமல்)  நிலவில் இருக்கும் செவ்வகத்துள் உணர்வு நிலையில் (ஆன்மா?) இணைத்து பூமியைக் கண்காணிக்கும் கருணையுருவாக அமைத்துவிடுகின்றன. சுபம்.

வால்:
என்னை மிகவும் பாதித்த கதை, நாவல் திரைப்படங்களுள் ஒன்று.  இந்தக் கதையில் சொல்லப்பட்டிருப்பவை, என்னைச் சுற்றிய சென்ற ஐம்பது வருட உலக வளர்ச்சியில் எப்படிப் பொருந்துகின்றன என்பதை அதிசயித்து இன்னொரு நீளமான பதிவே எழுதலாம்!

= = = = = =


70 கருத்துகள்:

  1. தோசை வட்ட வடிவில் வருவதற்கு காரணம் கரண்டியில் மாவை இழுப்பதற்கு சுற்றுதான் வசதியாக வருவதால் இருக்குமோ ?

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இதி - ஹாஸ என்பதற்கு - இது இப்படி இருந்தது என்று படித்திருக்கின்றேன்..

    புராணம் எனில் பழைமை..

    ஆதி புராணன் என்று தேவாரம் போற்றுகின்றது..
    புராணி என்பவர் அபிராம பட்டர்..
    புரானம் - புராதனம்!..

    பதிலளிநீக்கு
  4. கேள்விகளுக்கு பதில் அளித்ததிற்கு நன்றி.. 2001 space odyssey திரைப்படம் நானும் பார்த்த ஒன்று, அன்றைய கால கட்டத்தில் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அன்று ஒரு சவுகரியம் இருந்தது. ஆங்கிலப் படங்கள் திரையிடும் தியேட்டர்கள் கதைச் சுருக்கத்தை தமிழில் நோட்டிஸ் அடித்து கொடுத்து விடுவார்கள். அப்படி இருந்தும் புரியவில்லை. இப்பொது நீங்கள் விவரமாக கூறியபின் புரிகிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :-) true! காரைக்கால் நாட்களில் எம்ஜிஆர் படத்துக்கு கூட இலவச கதை சுருக்கம் வாங்கிப் படித்திருக்கிறேன். எப்பவாவது வரும் ஆங்கில படங்களுக்கு நிச்சயம் கதைச்சுருக்கம் தருவார்கள். தெரியாத்தனமாக போய் சிக்கிய ஹரிதாஸ் படத்துக்கு இலவச பாட்டுத்தாள் கூட வாங்கிய நினைவிருக்கிறது.

      நீக்கு
    2. ஹரிதாஸ் படம் நான் பலமுறை பார்த்த படம். எம்ஜிஆர் படத்துக்கு படச் சுருக்கம், அனேகமா அவரின் எல்லாப் படங்களுக்கும் பொருந்துமே. இதை நீங்கள் கவனிக்கலையா அப்பாத்துரை சார்?

      நீக்கு
    3. இதைவிட, பல ஆங்கிலப் படங்கள் பதின்ம வயதில் பார்க்கப் போனபோது, சீன் முடிந்துவிட்டால் பாதி, கால் படத்திலேயே பலர் எழுந்து சென்றுவிடுவதைப்்பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. புளியோதரை.... போன்றவை சாத்த்தில் கலந்து செய்வது. அதனால் அவைகளுக்கு பேஸ்ட், பொடி உண்டு (வத்தக்குழம்பு பேஸ்ட், முருங்கைப்பொடி சாதம், பிரண்டைப்பொடி சாதம்.....). தேங்காயின் ஆயுள் குறைவு. கொட்டைத் தேங்காய் உபயோகிக்கலாம், ருசி குறைந்துவிடும். அதனால் தேங்காய் சாத்த்துக்குப் பொடி இல்லை. பொங்கல்-சர்க்கரை, வெண், - சேர்ந்து வெந்து கலந்து குழையணும். அதனால் பேஸ்ட் சாத்தியமில்லை.

    Half cooked என்ற முறையில் வெண்பொங்கல், ச.பொங்கல், கேசரி... போன்றவை உண்டு. டெட்ரா பேக்கைத் திறந்து, அலுமினிய கவரை எடுத்து வெந்நீரில் ஓரிரு நிமிடங்கள் போட்டு, பிறகு திறந்து, தட்டில் கோட்டுக்கொண்டு சாப்பிட வேண்டியதுதான். இந்த முறையில் ஜீரா ரைஸ்.... போன்ற பலவும் உண்டு. நான் உபயோகித்திருக்கிறேன். ருசி. சுமார் மூஞ்சிக் குமார்.

    பதிலளிநீக்கு
  6. //என் பெண் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் பரிந்துரைத்த//- நீங்கள் கணேசா கேடரிங், செலவு ஆறு லட்சம் என நினைத்திருக்கிறீர்கள். மாப்பிள்ளை வீட்டார் பரிந்துரைத்த முருகன் கேடரிங், பன்னிரண்டு லட்சம் என்றால் என்ன செய்திருப்பீர்கள்? திருமணம் நடத்திக் கொடுப்பது நீங்கள். அந்த உரிமை பறிபோனதாக நீங்கள் நினைக்கவில்லையா? ஏம்ப்பா... கணேசாதானே நம்ம வீட்டுத் திருமணங்களுக்கு கேடர்ர். ஏன் மாத்தின? ருசி அந்த மாதிரி வரலையே என்ற கமென்ட் வந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி யாரும் சொல்லவில்லை. எல்லோருக்கும் இந்த 'மஹாலக்ஷ்மி கேட்டரிங்' சமையல் பிடித்திருந்தது. அதன் உரிமையாளர், என்னுடைய பட்ஜெட் என்ன என்று தெரிந்துகொண்டு அதன்படி எல்லாம் செய்துகொடுத்தார்.

      நீக்கு
  7. பெங்களூரில் பல இடங்களில் எகலிப்ஸ் வடிவத்தில் (கல்லின் நெடுக்கில்) தோசை சுடுவார்கள். காரணம் ஒரே சமயத்தில் கூட இரண்டு தோசை சுட்டுவிடலாம். நேரம் எரிபொருள் மிச்சம். வாடிக்கையாளர்களுக்கும் திருப்தி உடனே தோசை வந்துவிடுவதால்.

    பதிலளிநீக்கு
  8. 1. நான் மாற்றங்களை ரொம்பவே விரும்புபவள் ஆதரிப்பவள் ஆனால் பாருங்க பானுக்கா மெனு மாற்றலாம் ஆனா சாப்பிட ஆள் வேண்டுமே!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா...அதாவது கல்யாணம் என்றால் இப்படித்தான் மெனு என்ற ஒரு Script காலம் காலமாக வழக்கமாக மாறி மனதில் பதிந்த ஒன்று. அதனால் இப்படித்தான் என்றாகிவிட்டது.

    இப்போது முகூர்த்த சாப்பாடு மற்றும் காலை உணவில் மாற்றங்கள் சில இனிப்புகளில் மாற்றங்கள் செய்யறாங்க. டிஃபன் வகைகளில் செய்கிறார்கள். ஆனால் அதைச் சாப்பிட வயிறு வேண்டும்! உணவு ரொம்ப வீணாகிறது. வழக்கமா செய்யறதே வீணாகிறது. இதில் மாற்றினாலோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. # ஆசிரியர் சொல்லியிருப்பது போல் இப்போது சில கல்யாணங்களில் இப்படிச் செய்கிறார்கள்தான். முந்திரிபருப்பு, பாதாம் போட்டுச் சட்னி வடக்கு காரர்களுக்குத் தேங்காய் அவ்வளவாக ரசிப்பதில்லை என்பதால்!!! ரசமே சூப் போலத்தானே அதைக் கப்புகளில் வைக்கிறார்களே அது போன்று.

    கௌ அண்ணா, உங்களைப் போன்று இப்பசமீபத்தில் எங்கள் வீட்டில் நடந்த திருமணத்திலும், பெண்ணின் வீட்டார் தெற்கில் இல்லை என்பதால்...மாப்பிள்ளை வீட்டார் தெற்கு. எனவே சமையல் பிள்ளை வீட்டார் சொன்ன சமையல்காரர் ஆனால் மெனு பெண் வீட்டார் போட்ட மெனுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், தயிர்சாதம் போன்றவை //

    ஜெ கே அண்ணா இதுக்கு பெரிய மசாலா என்று எதுவும் இல்லையே. ஆனால் இப்போதெல்லாம் இவை பாதி வேக வைத்த நிலையில் உலர் தயாரிப்புகளாக நொடியில் ரெடி என்பது போன்று வருகின்றன...சர்க்கரைப் பொங்கலுக்கு அரிசி தனியாகவும் வறுத்த பருப்புகள், ஏலக்காய் பொடி, என்று கலந்துவிட்டு தனியாகவும், அதற்கு அளவான வெல்லம் தனியாக ஒரு பேக்கட்டில் உள்ளேயே வைத்துச் செய்யலாம். சும்மா இப்படி நான் என் மகனுக்கு முன்பு கொடுத்துவிட்டதுண்டு. பால், நெய் மட்டும் சேர்த்துக்கன்னு....இது ஒன்றும் பெரிய தயாரிப்பு இல்லைதான் ஆனால் அவனுக்கு இது சௌகரியமாக இருந்தது ஒவ்வொன்றாக எடுத்துச் செய்வதற்கு இது கையில் தயாராக...

    ஆனால் இப்போது இதெல்லாம் கொடுப்பதில்லை. தயாரிப்புகள் மாறிவிட்டன. அவனும் இனியவன் ஆகிவிட்டதால்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தேங்காய் சாதத்துக்கும், அரிசியில் தாளித்துக் கலந்து விட்டு, (அதிலேயே உப்பு இருக்கும்) தேங்காயை ரொம்பச் சிவக்காமல் வறுத்து தனியாகப் பேக்கட்டில் போட்டும் கொடுத்ததுண்டு. எலுமிச்சைக்கு அவன் எலுமிச்சை மட்டும் பிழிந்து கொண்டால் போதும் என்ற ரீதியில் கலந்துகொடுத்ததுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனா அமெரிக்காவில் அரிசி பருப்பு, மசாலா இவற்றை கொண்டு வர அனுமதிக்க மாட்டார்களே. எப்படி கஸ்டம்ஸ் தாண்டினார்?

      நீக்கு
    2. சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம் போன்ற வகைளில் சுவையூட்டுதல் சாதத்திற்க்குள் நன்றாக ஊறி ஒன்றாக கலந்து இருக்க வேண்டும். . மற்ற சாதங்கள் அப்படி இல்லை. சுவை உதிரியாக சோற்றின் மேல் பூசப்பட்டு சுவையாகிறது. ஆகவே பூசுவது சுலபம். ஊறவைப்பது கடினம் நேரம் அதிகம் ஆகும் .

      Jayakumar

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. தோசை பல வடிவங்களில் மகன் சின்னவனாக இருந்தப்ப செய்ததுண்டு. பிஸ்கட் கட்டர் நு வடிவங்கள் இருக்கும் பறவை, மரம், கப், நட்சத்திரம் ஓவல் வடிவம், குச்சி, ஐ வடிவம் என்று பல ....என்னிடம் இவை உண்டு பேக்கிங்க் செய்ததால். அதை தோசைக்கல்லில் வைத்து அதற்குள் சின்ன ஸ்பூனால் மாவை அதில் ஊற்றி ஒரு தோசைக்கல்லில் பல வடிவங்களை வைக்கலாம். ஒரு பக்கம் ஆனதும் கட்டர்களை எடுத்துவிடலாம் அதன் பின் திருப்பி போட்டால் போதும்.

    இதில் பூ வடிவத்தில் நடுவில் கேரட் அலல்து பீட்ரூட் சின்னதாக கட் செய்து, வைப்பதுண்டு. பறவை, டெட்டி என்றால் கண்ணிற்கு கடுகு அல்லது மிளகு. வாய்க்கு கேரட் அல்லது பீட் ரூட் இப்படி அவனுக்குச் செய்து கொடுத்ததுண்டு.

    இப்போது அப்பப்ப சொல்வான் "அம்மா நீ என்னை எப்படி எல்லாம் ஏமாத்திருக்கன்னு சிரிப்பான் ஆனா கூடவே சொல்றான் உன் பழக்கம் பல எனக்கும் வந்திருக்கு...புதுசா செய்யணும் கத்துக்கணும்ன்றது, பழக்கங்கள் ப்ளஸ் உன் ஜீனும் எனக்கு நிறைய வந்திருக்குன்னு. சர்க்கரை உட்பட!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஜெ கே அண்ணா திங்க பதிவில் போடலாம்..எங்கிட்ட கட்டர் இருக்குதான். ஆனால் எல்லாமே சின்ன வடிவங்கள். பார்க்கிறேன் பெரிதாக ஏதேனும் இருக்கா என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அப்பாதுரை அவர்களின் பட விமர்சனம் அருமை...

    பதிலளிநீக்கு
  15. படகா மக்கள் மிக மிக நல்ல மனிதர்களாக இருப்பாங்க ஆனால் இன்னமும் மலையில் கிராமங்களில் இருப்பவர்களால் காதல் திருமணங்களை ஏற்க முடியவில்லை. அவர்கள் இனத்திலேயே. சில விதிமுறைகள் இருக்கின்றன - படகா பெரும்பாலும் சுத்த சைவம். அவங்க அவங்க இனத்தில் பண்ணுவதில்லை. என் தோழி படகா கணவர் வேறு இனம் தோடா என நினைக்கிறேன் மறந்துவிட்டது. ஆனால் அவர் அசைவம் உண்பவர்.

    அண்ணா, படகா மக்கள் மைசூரிலிருந்து தமிழ்நாட்டு மேற்கு மலைப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள்தான். அவர்கள் மட்டுமல்ல இன்னும் பல இனங்கள் அவர்களின் உணவு முறைகள், மொழி எல்லாமே கொஞ்சம் கன்னடா போலதான் இருக்கும். எனவே தோழிக்கு இங்கு கன்னடா ஈசியாக வந்துவிட்டது.

    இப்போது நிறைய மாறிட்டாங்க. சாய்பல்லவி படகா இனம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அப்பாதுரை ஜி சொல்லியிருக்கும் படம் பார்த்திருக்கிறேன். மகனும் நானும் பார்த்தபடம். அப்போதே நிறைய இதைப் பற்றிப் பேசியிருக்கிறோம் வீட்டில். நம்ம வீட்டவரும் அறிவியல் பேசுபவராச்சே! இப்படி மாறும் என்ற வரையில். இப்போது அதில் அன்று சொன்னபடி நிறைய.

    வளர்ச்சி அபாரம். ஆனால் ஒன்று உறுதி ஒன்று முன்னில் வர வேண்டும் என்றால் மற்றொன்று அழிய வேண்டும் என்ற ரீதியில் தான் போகிறது. போர் சண்டை அழித்தல்னு

    //உயிரினங்களின் வளர்ச்சியில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டுக் கட்டுப்பாட்டை மீறுகையில் அவற்றைச் சீர்படுத்துவது//

    அதான் கஷ்டமே. உயிரினங்கள்னு இல்லை பல உருவாக்கிடலாம் அதுக்கப்புறம் அதில் விளையும் சிக்கல்களுக்குத் தீர்வு ரொம்பக் கடினம். சிலப்போ எனக்குத் தோன்றும், யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொள்வது போல மனுஷன் தன் குழியைத் தானே பறிச்சுக்கறான். ஆனால் அதை ஏற்கத்தான் வேண்டும். ஏன்னா நமக்கு எல்லாமும் தேவையாயிருக்கே!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. பட விமர்சனம் சூப்பர். எளிமையாக எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வட்டமான குழி கரண்டியினால் வட்டத் தோசை...

    சதுரமான கரண்டி சதுரமான தோசைக்கு ஆதாரமோ..
    என்னவோ..

    நமக்கு ஏன் ஊர் வம்பு?!..

    பதிலளிநீக்கு
  19. தோசை பல வடிவங்களில் . ...

    பட விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
  20. அப்பாதுரை ஐயா அவர்களது விமர்சனம் அழகு.. அருமை..

    பதிலளிநீக்கு
  21. கல்யாணச் சமையல் மெனுவை மாற்றி வாழைக்காய்ப் பொடிமாஸ், ஏதேனும் காரக்கறி அல்லது உசிலி, பூஷணிக்காய்க் கல்யாணக் கூட்டு, கத்திரிக்காய்ப்பிட்லை எனப் பண்ணலாம். சாம்பார், மோர்க்குழம்புனு வைச்சுக்கலாம். இப்போல்லாம் கலந்த சாதம் போடறாங்க. அதை நிறுத்திக்கலாம். முப்பருப்பு வடையை நல்லா மொறுமொறுனு பண்ணிப் போடலாம்.பழைய முறைப்படி லட்டுவோ அல்லது ஜிலேபியோ அல்லது பூரண போளியோ போடலாம். வட இந்திய இனிப்பு வகைகளைத் தவிர்க்கலாம். வெல்லப் பாயசங்களே விதம் விதமாய்ப் பண்ணலாம். அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பண்ணலாம். தேங்காய்ப் பாலிலேயே வெல்லத்தைக் கரைய விட்டு வெந்த வறுத்த அரிசியை அதில் போட்டு இன்னமும் நன்றாக வேக வைத்துக் கொண்டு பின்னர் இறக்கும்போது கடைசியில் முதல் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கதலிப்பழங்களை வில்லை வில்லையாக நறுக்கி அதில் சேர்த்துப் போட்டுப் புதுமை பண்ணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாண சமையல் சாதம்! காய்கனிகளும் பிரமாதம்!

      நீக்கு
  22. எங்க வீட்டிலேயே சிலருக்கு வயது ஆனாலும் இன்னமும் தோசை வார்க்க வராது. முதல் பத்து தோசைகளாவது விதம் விதமான வடிவங்களில் வரும். அவங்களைக் கூப்பிட்டு வார்க்கச் சொல்லிட்டு இதான் தோசையின் வடிவம்னு சொல்லிடலாமே!

    பதிலளிநீக்கு
  23. இதிஹாசங்கள் என்பது இது இப்படி நடந்தது என அந்த நிகழ்வுகளில் பங்கேற்ற ஒருவர் சொல்லி அதை எழுதி வைப்பது. ராமாயண காலத்தில் வாழ்ந்த வால்மீகியும், மஹாபாரத காலத்தில் வாழ்ந்த வேத வியாசரும் அப்படித் தான் இது தான் நடந்தவை என எழுதி வைத்தனர். புராணங்களை வேதங்களின் தொகுப்பு, அவற்றின் சாரம் என்னலாம். மஹரிஷிகள் தங்கள் கண்ணால் கண்டவற்றின் பொருளை மனதால் உணர்ந்து கொண்டு சொன்னவற்றை வாய் மொழியாய் இருந்தவற்றை வேத வியாசர் புராணங்களாகத் தொகுத்து வைத்தார்.

    பதிலளிநீக்கு
  24. புராணங்கள் எழுதப்பட்ட காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லுவதும் அரிதாகும். வழிவழியாகச் செவி வழியே வந்து கொண்டிருந்த விஷயங்களைத் தொகுத்து அளித்தவர் வேத வியாசர்.வேதங்கள் எத்தனை பழமை வாய்ந்தவையோ அத்தனை பழமை வாய்ந்தவை புராணங்களும்.

    பதிலளிநீக்கு
  25. படகர்கள் பற்றி கௌதமன் சார் எழுதியதும், அப்பாதுரையின் பட விமரிசனமும் மிக அருமை. இப்படி ஒரு படம் பற்றி நான் கேள்விப்படவே இல்லை. எளிமையாக என் போன்றோர் கூடப் புரிந்து கொள்ளும்படியாக அப்பாதுரை எழுதி இருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும் போது இந்தப் படத்தை அவசியம் பாருங்க.

      நீக்கு
    2. இது போல் ஏன் இன்னும் ஒரு தமிழ் படம் கூட எடுக்க முடியவில்லை? அத்தனை இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் இருந்தும் நம்மால் ஏன் ஒரு இலக்கியம் இப்படி படைக்க முடியவில்லை? சுலபமாக காப்பியடித்து பேர் வாங்கின மூன்றெழுத்து அரசன் சொந்தமாக ஒரு கதை/கட்டுரை எழுதி இது போன்ற தொலை நோக்கு இலக்கியங்களில் பத்தில் ஒரு பங்கு கூட கற்பனை செய்ய முடியவில்லையே ஏன்? அடிக்கடி தோன்றும் கேள்விகள்.

      நீக்கு
  26. என் குழந்தைகளுக்கு, பேர குழந்தைகளுக்கு வித விதமாக தோசை செய்து கொடுத்து இருக்கிறேன். கெளதமன் சார் வித விதமாக தோசை செய்து முன்பு படம் பகிர்ந்து இருக்கிறார்.
    கெளதமன் சாரின் மலை வாழ் மக்கள் உபசரிப்பு, அவர்களின் பழக்க, வழக்கம் பகிர்வும், அப்பாதுரை சாரின் பட விமர்சனமும் அருமை.

    பதிலளிநீக்கு
  27. 1950-லிருந்து பார்த்தபோது 2001 ஆர்தர் க்ளார்க்கிற்கு ஏதோ வருடம் 3001 போல மனதில் தோன்றியிருக்கும்.. கற்பனையில ஒரேயடியா எறங்கிட்டாரு.

    ஏனோ science fiction என்னைக் கவர்வதில்லை.

    ....> குரங்கு > மனிதக்குரங்கு > மனிதன் ?
    சார்ல்ஸ் டார்வினின் மூளை பரிணாம வளர்ச்சி கண்டிருந்ததா என்பதில் ஒரு சந்தேகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2000ம் ஆண்டு வாக்கில் நாமெல்லாம் பறக்கும் காரில் பயணம் செய்வதாகத் தான் science fiction கற்பனை செய்தார்கள் ஐம்பதுகளில். science fiction இலக்கியம் நம் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது என்று நம்புகிறேன்.

      கற்பனை என்றாலே சிரமம் தான். பின்நோக்கிப் பார்த்தால் நூற்றாண்டும் நேற்று போல் தோன்றும். முன்னோக்கிப் பார்த்தால் நாளையும் நூற்றாண்டு போல் தோன்றும். (இந்த பொன்மொழியை இதுக்கு முன்னால யாரும் சொல்லலீனா எனக்கு மெடல் தந்துருங்க).

      நீக்கு
    2. சுவாரசியமான கேள்வி.
      பரிணாம வளர்ச்சி அனைவருக்கும் ஒரே போல் ஏற்படுவதில்லை என்று நினைக்கிறேன். அதிலும் நம்மில் சிலர் நம் இனத்தவரே கிடையாது என்றும் நம்புகிறேன். வரலாற்றில் நிறையே பேரை இப்படித் தேர்ந்தெடுத்து பார்க்கலாம். நம்மைப் போலவே ஆக்சிஜன் குடித்தார்கள்.. ஆனால் நம்மை விட பத்தாயிரம் மடங்கு சிந்தித்து பல முன்னேற்றக் கதவுகளை உடைத்தெறிந்தார்கள். நியூட்டநிலிருந்து ராமானுஜம் காந்தி மஸ்க் வரை பலர் நம்மவரே இல்லை என்று எனக்குத் தோன்றும். டார்வினும் சேர்த்தி.

      நீக்கு
    3. நம்மில் சிலர்தான், நித்யானந்தா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், மாதா அமிர்தானந்தமயீ......... என்று பல லட்சம் நம்பிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய சக்தி படைத்தவராக அமைகிறார்கள். வித்தியாசமாகச் சிந்தித்து, புதிய திருப்பத்திற்கு வெகு சிலர்தான் அடிகோலினார்கள் (பில் கேட்சையும் மறந்துவிடாதீர்கள்). 95ல், புது PC களுக்குப் பதில் வெறும் device மாத்திரம் வாங்க முடியும், ஆனால் Operating System, Applicationsக்கு மைக்ரோசாஃப்ட் சர்வரில்தான் கனெக்ட் செய்யணும், இது பைரசியை விரட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். அதன் நீட்சிதானோ செல்ஃபோன்?

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!