வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

வெள்ளி வீடியோ : வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி

 இன்றும் ஒரு சூலமங்கலம் சகோதரிகள் பாடல்.  நிறைய பேர் இந்தப் பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.  ஆனால் நன்றாயிருக்கிறது, கேட்க உற்சாகமாயிருக்கிறது என்று சொல்லப் போகிறார்கள்.

குன்றுவளர் கந்தன் வரும் நேரம் எது கூறிவிடு கொக்கரக்கோ என்று கூவும் சேவலே 

குன்றுவளர் கந்தன் வரும் நேரம் எது கூறிவிடு கொக்கரக்கோ என்று கூவும் சேவலே 
அவன் வந்து அருள் தந்து நம்மை மகிழவைக்கும் நாளெதுவோ மனங்குளிர சொல்லி விட்டால் தேவலே 
அவன் வந்து அருள் தந்து நம்மை மகிழவைக்கும் நாளெதுவோ மனங்குளிர சொல்லி விட்டால் தேவலே  (குன்று வளர்)

பாடிப்பாடி மகிழவைப்போம் பழனி மலையிலே - கொண்டாடி 
ஆடி குளிர வைப்போம் குன்றக்குடியிலே 
பாடிப்பாடி மகிழவைப்போம் பழனி மலையிலே - கொண்டாடி 
ஆடி குளிர வைப்போம் குன்றக்குடியிலே 
தேடித்தேடி சரணடைவோம் தணிகை மலையிலே 
தேடித்தேடி சரணடைவோம் தணிகை மலையிலே 
அவனை நாடி நாடி வரம் கேட்போம் வள்ளி மலையிலே 
அவனை நாடி நாடி வரம் கேட்போம் வள்ளி மலையிலே  (குன்று வளர்) 

வேலனிருக்கும் குன்றமெல்லாம் கூவிடுவாயோ வடிவேலை 
நினைத்து அனுதினமும் பாடிடுவாயோ 
வேலனிருக்கும் குன்றமெல்லாம் கூவிடுவாயோ வடிவேலை 
நினைத்து அனுதினமும் பாடிடுவாயோ 
வேலனருகில் இருந்திடவே தவமும் செய்தாயோ 
வேலனருகில் இருந்திடவே தவமும் செய்தாயோ 
அந்த மாலவனின் மருகனை நீ வரச்சொல்லுவாயோ 
அந்த மாலவனின் மருகனை நீ வரச்சொல்லுவாயோ   (குன்று வளர்)

பால்காவடி எடுத்திடுவோம் பழனி மலையிலே -பன்னீர்க் 
காவடி எடுத்திடுவோம் மருத மலையிலே 
பால்காவடி எடுத்திடுவோம் பழனி மலையிலே -பன்னீர்க் 
காவடி எடுத்திடுவோம் மருத மலையிலே 
வேல்காவடி எடுத்திடுவோம் விராலி மலையிலே 
வேல்காவடி எடுத்திடுவோம் விராலி மலையிலே கந்த 
வேலின் அருளை பெறத்துடிப்போம் வடபழனியிலே கந்த 
வேலின் அருளை பெறத்துடிப்போம் வடபழனியிலே  (குன்றுவளர்) 


=======================================================================================================

1961 ல் வெளியான பாக்கியலக்ஷ்மி திரைப்படத்தில் இடம்பெற்ற 'மாலைப்பொழுதில் மயக்கத்திலே' பாடல் இன்று..

இந்த மாதிரி வரிகளை கண்ணதாசனைத்தவிர வேறு யாரால் எழுத முடியும்?

பருவ வயதில் ஒரு பெண்.  குழந்தைதிருமணம் செய்த வகையில் விதவை ஆனவள்.  தோழியின் வீட்டில் அவள் ஆதரவுடன் இருக்கிறாள்.  பருவம் அவள் உடலிலும் மனத்திலும் ஏற்படுத்தும் கிளர்ச்சி..  தோழியின்  காதலன்தான் தான் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் குழந்தைக் கணவன் என்னும் உண்மை தெரிந்தும் சொல்ல முடியாத நிலைமை..  

அந்த வரிகளைக் கேளுங்கள்..  வரிகளில் உணர்வைக்குழைத்து பொழியும் குரலைக் கேளுங்கள்..

இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

இரட்டையர்கள் இந்தப் பாடலை சந்திரக்கவுன்ஸ் ராகத்தில் அமைத்திருக்கிறார்களாம்.  இந்த ராகம் நம் ஹிந்தோளம் ராகம் போலவே இருக்கும்.  

 When Hindolam's kaisiki nishada is replaced with kakali nishada it becomes Chandrakauns என்கிறது கூகுள் பதில்.

இந்த ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள் 'நானாக நானில்லை தாயே, வெள்ளிச்சலங்கைகள், நான் தேடும் செவ்வந்திப் பூவிது, பாட வந்ததோ கானம்  போன்ற பாடல்கள்.

கனவில் வந்தவர் யாரென கேட்டால் கணவர் என்றார் தோழி...  கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி என்று பாடும்போது நம் மனதை பிழியும் சோகம்.. 

அருமையான பாடல்.

மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ…
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர்
யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி
காண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ…
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே
ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலை இட்டார் தோழி
வழி மறந்தேனோ
வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ…
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி 

கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர்
கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ… 

மாலை பொழுதின் மயக்கத்திலே


42 கருத்துகள்:

  1. குன்று வளர் கந்தன் வரும் நேரம் எது?
    கூறி விடு கொக்கரக்கோ
    சேவலே..
    --என்றிருந்திருந்தால் தளை தட்டாமல் இருந்திருக்குமோ என்று தோன்றியது.
    ஆனால் மெட்டமைப்பிற்கு
    அது தான் சரியாக வந்ததோ என்னவோ?
    நமக்கென்ன தெரிகிறது இதையெல்லாம் பற்றி என்ற எண்ணமும் கூடவே வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'என்று கூவும்' வார்த்தையும் மெட்டுக்கு தேவையாய் இருக்கிறது.

      நீக்கு
  2. சந்திரக் கெளஸ் ராகம் -- கேள்விப்படாதது.
    அப்படீன்னா அதற்கு அர்த்தம் என்ன, ஸ்ரீராம்?

    செளகாரைத் தவிர ஜெமினிக்குத் தோதான வேறு யாரையேனும் போட்டிருந்தால் இன்னும் சோபித்திருக்குமோ என்றொரு எண்ணம் இடையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர் ஹிந்தோளம் ராகத்துக்கு நெருங்கின உறவு. 

      அந்த வேடத்துக்கு சௌகார்தான் பெஸ்ட்னு நினைக்கிறேன்.  சாவித்ரி வேறு சோகம்!

      நீக்கு
  3. முதல் பாடல் நான் கேட்டு இருக்கிறேன் ஜி.

    இரண்டாவது பாடலும் பலமுறை கேட்டு ரசித்ததே...

    பதிலளிநீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. சூலமங்கலம் சகோதரிகளின் சேவல் பாட்டு - 80 களில் வந்திருக்கலாம்... சிங்கப்பூரில் இருந்த காலத்தில் கேட்டிருக்கின்றேன்..

    இனிமைக்குக் குறைவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  சூலமங்கலம் பாடல்களில் 'சேவல் கூவிடும் நேரம் கானம் ஒலித்தது' என்கிற பாடலும் உண்டு.  அதுவும் பகிர்வேன்.

      நீக்கு
  6. இதே காலத்தில் வந்த பல பாடல்களில் முத்திரை பதித்து இருந்தனர் சகோதரிகள்..

    பதிலளிநீக்கு
  7. பாக்கியலக்ஷ்மி படப்பாடல்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை....

    கதையைக் கவிதையாய்க் கொடுத்தவர் கவியரசர்..

    இசை - இசை தான்...

    பதிலளிநீக்கு
  8. இந்தக் கால கட்டத்தில் இப்படியொரு பாடல் வெளி வந்திருந்தால் அதை எப்படி உருவாக்கியது என்று டமுக்கு அடித்துக் கொண்டிருக்கலாம்...

    நாலு பேரை வைத்துக் கொண்டு இவர் அப்படி.. இப்படி என்று... தனக்குத் தானே புகழ்ந்து கொண்டிருக்கலாம்...

    பிழைக்கத் தெரியாதவர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் விளம்பரம் செய்து ப்ரோமோ பண்ணத்தேவை இலலாத பாடல்.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் ரசித்த பாடல் மாலைப்பொழுதில். எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். அர்த்தமும் ஆழமான கருத்துகளையும் பொதிந்து கவிதை எழுதுவதில் கண்ணதாசன் மிகச் சிறந்தவர் (வாலியைக் காட்டிலும்). நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாலி, கண்ணதாசன் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பது என் கருத்து.

      நீக்கு
  11. முதல் பாடல் கேட்டதே இல்லை. இன்றுதான் முதல் முறை கேட்டேன். நன்றாகத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  12. 2. பாடல் வரிகளுக்கு, இனிமை குரலுக்கு, இசைக்கு, ரசிக்கும் பாடல்...

    1. முருகா சரணம்...

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. இன்று பகிர்ந்த பாடல்கள் இரண்டும் மிக அருமையான பாடல்கள்.
    இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.

    பாக்கியலக்ஷ்மி திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இரண்டு பாடல்கள்தான் பிடிக்கும்!  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  15. முதல் பாடல் கேட்டது இல்லை, ஸ்ரீராம்

    நன்றாக இருக்கிறது. தலையை ஆட்டி....கால்கள் கைகள் தாளம் போட வைக்கும் மெட்டு. வேகமாக ஆட வைக்கும் ஒரு பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. இரண்டாவது பாடல் ஹையோ மனதை உருக்கும் பாடல் அருமையான பாடல் ரசித்த ரசிக்கும் பாடல்.

    ஆமாம் சந்திரகௌன்ஸ். ஹிந்தோளம் போல இருந்தாலும் ஒரு இடத்தில் நி வரும் இடத்தில் நன்றாகத் தெரிந்து விடும். ஹிந்தோளத்தில் நி2 சந்திரகௌன்ஸ் ல் நி3 ....நி நல்லா அழுத்தமா நீளும் அந்த இடம் வேறுபடுத்திடும்..அந்த நி3 தான் அந்த ராகத்தின் அழகைக் காட்டும் மாலைப் பொழுதின் பாடலில் பல இடங்களில் தெரியும் அது போல அழகுமலர் ஆட பாடலிலும்...

    எங்க ஊர் பாட்டு டீச்சர் (நாகர்கோவில் வடிவீஸ்வரம்) மீனா டீச்சர் அப்பவே சொல்வாங்க அழகுமலர் ஆட பாடல் சந்திரகௌன்ஸ் என்று. பாரதிராஜாவின் படத்தில் வந்திருக்கிறார்.

    என் உறவினர் பையன் ஒருவர் மிக நன்றாகப் பாடுவார். நல்ல இசை ஞானம் உள்ளவர். முதலில் அவருக்கு பேசும் போது கொஞ்சம் வாய் திக்கும் ஆனால் பாடும் போது வராது. தாசேட்டன் அவருக்கு சில டிப்ஸ் கொடுக்க அவர் செயல்படுத்த.. அப்புறம் சரியாகிவிட்டது. அந்தப் பையனுக்கு அவர் பாட்டு டீச்சர் அவரே எழுதி இந்த ராகத்தில் அமைத்த பாடலைச் சொல்லிக் கொடுக்க அந்தப் பையன் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அதன் பின் அது குடும்பப் பாட்டாகிடுச்சு!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.. அது என்ன பாட்டு என்கிற ஆர்வம் மனதில் ஓடுது!

      நீக்கு
  17. பாட வந்ததோ கானம் - இந்தப் பாட்டுதான் தெரியவில்லை....மற்றதெல்லாம் தெரிந்த பாடல்கள். அதிலும் வெள்ளிச் சலங்கைகள் பாட்டு ஹையோ செம பாட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட வந்ததோ செம பாட்டு.. சீக்கிரம் பகிர்கிறேன். நம்ம இளையராஜாதான்.

      நீக்கு
  18. பாட வந்ததோ கானம் பாட்டு மற்ற சந்திரகௌன்ஸ் மெட்டுகளை விட வித்தியாசம்!! அதே ராகம்...ஆனால் வித்தியாசம்...

    இதே மெட்டில் வேற ஒன்று உண்டோ? அதாவது ராகம் சொல்லலை இதே போன்று மெட்டு

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை. முதல் பாடல் நீங்கள் சொல்வது போல் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டு ரசித்தேன்.

    இரண்டாவது பல முறை கேட்டாகி விட்டது. அப்போதைக்கு இப்போது பாடலின் சோகம் மனதை அழுத்துகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்காத பாடலையும், கேட்ட பாடலையும் கேட்டு ரசித்து கமெண்ட் சொன்னதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  20. முதலாவது பாடல் இப் பொழுதுதான் கேட்கிறேன்.

    இரண்டாவது பல தடவை கேட்டு ரசித்ததுண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!