சனி, 1 மார்ச், 2025

நூல் பாண்டியன், பூர்ணிமா தேவி பர்மன் & விவசாயி விஸ்வநாத் மற்றும் நான் படிச்ச கதை

 

நியூயார்க் : 'டைம்' இதழின், இந்தாண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில், அசாமை சேர்ந்த உயிரியலாளரும், வனவிலங்கு பாதுகாவலருமான பூர்ணிமா தேவி பர்மன் இடம் பெற்றுள்ளார்.  அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து, பிரபல, 'டைம்' இதழ் வெளியாகி வருகிறது. 2025க்கான சிறந்த பெண்கள் பட்டியலை, டைம் இதழ் வெளியிட்டுள்ளது.

இதில், நம் நாட்டின் சார்பில், வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியைச் சேர்ந்த உயிரியலாளரும், வனவிலங்கு பாதுகாவலருமான பூர்ணிமா தேவி பர்மன், 45, இடம் பிடித்துள்ளார்.  மொத்தம் 13 பேர் அடங்கிய பட்டியலில், ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன், பிரான்சின் கிசெல் பெலிகாட் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.  கிசெல் பெலிகாட்டுக்கு அவரது கணவர் போதைப் பொருள் கொடுத்த நிலையில், அவரை 70க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்தனர்.  இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரத்தில், உலகளாவிய துாதராக, கிசெல் பெலிகாட் மாறினார்.  'ஹர்கிலா' என அசாமில் பரவலாக அறியப்படும், நாரை இனத்தைச் சேர்ந்த பறவை இனம், அழிந்து வரும் நிலையில் உள்ளது. இதை அழிவிலிருந்து காக்க தொடர்ந்து போராடி வருகிறார் பூர்ணிமா தேவி பர்மன்.  இதற்காக 'ஹர்கிலா ஆர்மி' என்ற பெண்களின் குழு ஒன்றை அவர் நடத்தி வருகிறார். இக்குழுவில் உள்ள பெண்கள் ஹர்கிலா பறவையின் உருவம் பொறிக்கப்பட்ட ஜவுளிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.  ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால், 2022-க்கான, 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருதை பூர்ணிமா தேவி பர்மன் பெற்றார். இவர், விட்லி விருதையும், பெண்களுக்கான மிக உயர்ந்த குடிமகன் விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார்.

========================================================================================


‘43 வருஷ சேமிப்பு… இதே மாதிரி இன்னும் ஒரு பங்கு இருந்துச்சு. 2015 வெள்ளத்துல மொத்தமா ஒரு குடோனே தண்ணி புகுந்து வீணாப்போச்சு. லட்சக்கணக்கான புத்தகங்கள் காலி…’’ இழப்பையும் சிரித்துக்கொண்டுதான் சொல்கிறார் பாண்டியன்.

பாண்டியன் படித்தது, 10-ம் வகுப்புதான். புத்தகம் தேடி வரும் மாணவர்களுக்கு அவர் தருகிற சாய்ஸ்கள் வியக்க வைக்கின்றன. நுழைவுத்தேர்வோ, பட்டப்படிப்புகளோ, எந்தெந்தப் பதிப்பாளர்களின் நூல்கள் சிறந்தவை என்பதில் தொடங்கி எப்படிப் படிக்க வேண்டும் என்பது வரை ஓர் ஆசிரியருக்குரிய கண்டிப்புடன் சொல்கிறார் பாண்டியன். தினமும் 200-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. ஏராளமானோர் நேரில் வருகிறார்கள். பெரும்பாலும் அவ்வப்போதே தேடியெடுத்து, கேட்கும் நூல்களைத் தந்துவிடுகிறார். சில பேரை ஓரிரு நாள்கள் கழித்து வரச்சொல்கிறார்.

நீண்ட தாடி, நெற்றியில் குங்குமம் என பழுத்த சாமியார் போல் இருக்கிறார் பாண்டியன். ‘‘என் பேரு நூல் பாண்டியன்’’ என்று சிரிக்கிறார்.
தமிழகத்தின் மிகப்பெரிய அறிவுப்புதையல் இருக்கிறது இவரிடம்.
வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர் மூன்றும் சந்திக்கும் சிக்னலில் நாகாத்தம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது, பாண்டியன் நடத்தும்
ஓம் ஆதிபராசக்தி பழைய புத்தகக் கடை.

( Thank you JKC Sir_)

=======================================================================================

பெண் தொழிலாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்ற விவசாயி

பெங்களூரு: தன்னிடம் விவசாய கூலியாட்களாக பணியாற்றும் பெண்களை, ஷிவமொக்காவில் இருந்து, கோவாவுக்கு சுற்றுலா அழைத்து சென்ற விவசாயிக்கு பாராட்டு குவிந்தது.  விஜயநகரா, ஹரப்பனஹள்ளியின் சிரகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி விஸ்வநாத். மாநில உளவுத்துறையில் ஏட்டாக பணியாற்றிய இவர், அந்த பணியை விட்டு விட்டு தனக்கு சொந்தமான 14 ஏக்கர் பாக்கு தோட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டார்.

இவரது தோட்டத்தில், பெண்கள் கூலி வேலை செய்கின்றனர். நிரந்தரமாக தன் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்; அது மறக்க முடியாத பரிசாக இருக்க வேண்டும் என, விஸ்வநாத் விரும்பினார்.  ஏழைகளுக்கு ஒரு முறையாவது, விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் பண வசதி இருக்காது. எனவே பெண் தொழிலாளர்களை, விமானத்தில் அழைத்து சென்று மகிழ்ச்சிப்படுத்த முடிவு செய்தார்.  அதன்படி சில நாட்களுக்கு முன், அனைவரையும், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து, கோவாவின், தாபோலிமுக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்றிருந்தார்.  இது குறித்து, விஸ்வநாத் கூறியதாவது:  "என் தோட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் கனவை, நனவாக்கிய திருப்தி எனக்குள்ளது. விமானத்தில் பறக்க வேண்டும் என்ற, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினேன்.  முதலில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, விமானத்தில் அழைத்து செல்ல ஆலோசித்தேன். ஆனால் விமான கண்காட்சி நடந்ததால், என் திட்டத்தை மாற்றினேன். நாங்கள் கோவாவுக்கு சென்றோம். ஷிவமொக்கா அருகில் உள்ள விமான நிலையம் என்பதால், அங்கிருந்து புறப்பட்டோம்.  முதல் முறை விமானத்தில் ஏறிய பெண்கள், விமானம் டேக் ஆப் ஆகும் போது பயந்தனர். ஆனால் சுற்றுலா முடிந்து திரும்பும் போது, அவர்களிடம் பயம் இல்லை. மகிழ்ச்சியாக இருந்தனர்.  நாங்கள் கோவாவின், காலங்குட், பாகா கடற்கரைக்கு சென்றோம். மான்டோபி ஆற்றில் படகு சவாரி செய்தோம். பனாஜி நகருக்கும் சுற்றுலா சென்றோம். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை கண்டு, எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.  ஏட்டாக பணியாற்றி, விவசாயி ஆனதில் எனக்கு திருப்தி அளிக்கிறது. நான் விவசாயியான பின், ஆரோக்கியமான, நெருக்கடி இல்லாத வாழ்க்கை நடத்துகிறேன்."

=========================================================================================

 

நான் படிச்ச கதை - JKC

குற்றால டூரும்கஷ்டமித்ர பந்துக்களும்!

 கதையாசிரியர்: அனுராதா ரமணன்

ஆசிரியர் பேட்டி : =====> இந்தச் சுட்டிக்குள் <=====

ஆசிரியர் அனுராதா ரமணனைப்  பற்றி அதிகம் கூற தேவையில்லை. பிறந்தது தஞ்சையில் (1947இல்) என்றாலும் சென்னையில் அம்மா வழி பாட்டி வீட்டில் வளர்ந்தார். தாத்தா ஒரு சினிமா நடிகர். அப்பாவும் அம்மாவும் அவ்வப்போது சென்னை வந்து செல்வார்கள். 

பள்ளிப்படிப்பை முடித்த பின் சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.  பரீட்சை சமயத்தில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்படவே, இடது கையினாலும் வரையப் பயின்று, பரீட்சையில் வெற்றி பெற்றார். 18 வயதில் ரமணனுடன்  திருமணம் நிகழ்ந்தது. பத்தே ஆண்டுகளில் கணவனை இழந்தார். ‘ஸ்பெஷாலிடி பப்ளிகேஷன்ஸ்நிறுவனத்தில் பணியாற்றினார். மகள்கள்: சுதா, சுபா. 

தனி ஒரு மனுஷியாக மகள்களை வளர்த்து ஆளாக்கி திருமணமும் முடித்து மகள்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். 

உத்தியோக வாழ்க்கை layout artist ஆக துவங்கியது. ஆனாலும் எழுத்தின் மேல் இருந்த ஆர்வத்தினால் எழுத்தாளர் ஆக இவருடைய வாழ்க்கை விரிந்தது. கனவுமலர்கள் கருகும்போதுஎன்னும் முதல் சிறுகதை, நவம்பர் 15, 1977-ல் மங்கை இதழில் வெளியானது. ‘சாம்பவிஎன்ற பெயரில் அக்கதையை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கான ஓவியத்தை அனுஎன்ற பெயரில் வரைந்திருந்தார். அந்தச் சிறுகதைக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது, சாவி, தினமணி கதிர், குங்குமம் போன்ற பல இதழ்களுக்கு எழுதினார். 

தினமலர் வாரமலர் இதழில், 15 ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு வாரமும், "அன்புடன் அந்தரங்கம்" பகுதியில் ஆலோசனைகள்" கூறி வந்தார்.

அனுராதா ரமணன், மத்திய திரைப்படச் சான்றிதழ் குழுவின் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். Anuradha Consultancies என்ற ஆலோசனை மையத்தை நடத்தினார்.

மற்றவர்களுக்கு ஆலோசனை பல வழங்கியவர் ஆயினும் ஒரு ஆன்மிக தேடலை மேற்கொண்டு சத்ய சாய்பாபா, பாண்டிசேரி ஸ்ரீ அன்னை, ஜக்கி வாசுதேவ் என்று தஞ்சம் அடைந்தாலும் திருப்தி அடையவில்லை.

காஞ்சி மடப் பீடாதிபதியான ஜெயேந்திரர், தன்னிடம் பாலியல் ரீதியாகப் பேசி, ஆபாசமாக நடந்துகொண்டதாக அனுராதா ரமணன் 2004 டிசம்பர் 2-ம் நாளிட்ட நக்கீரன் இதழில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள், மிகுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.

அனுராதா ரமணன் 2000 ஆண்டில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டார்.  பின்னர் பக்க வாதத்தால் அவதிப்பட்டார். 16 மே 2010 அன்று தனது 62 வயதில் சென்னையில் மாரடைப்பால் இறந்தார்.

எப்போதுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கணும் என்பது அனுவின் நித்ய மந்திரம். வீட்டிலோ, விழாவிலோ, மருத்துவமனையிலோ... எந்த இடமாக இருந்தாலும் சரி, கண்ணுக்கு மை, உதட்டுக்கு லிப்ஸ்டிக், திலகம் பொட்டு, கீழே வெள்ளை சாந்தில் பிறை நிலா, கீழே அரக்கு நிற சாந்து பொட்டு, பளிச்சென்று பட்டுப்புடவை. இவை அவரது டிரேட் மார்க் தோற்றம்.” அவருடைய தங்கை கூறுகிறார். 

"என் இறுதி யாத்திரையின் போது, எதுவும் கலைந்தோ, சரியாக இல்லாமலோ இருக்கக் கூடாது...' என்பது, அவர் எனக்கு இட்ட கட்டளை. அவருக்கு மிகவும் பிடித்த அரக்குப் புடவை கட்டி, அவருக்குப் பிடித்த டிரேட் மார்க் தோற்றத்துடன், அவர் இறுதி யாத்திரை நடைபெற்றது.” 

பின் வரும் கதை மார்ச் 2010 இல் வெளியான ஒன்று. இவர் மே 16 2010 இல் இறந்ததால் இக்கதையே இவரது கடைசி கதையாக இருக்கும் என்று தோன்றுகிறது. கதை https://www.sirukathaigal.com/ இல் இருந்து எடுக்கப்பட்டது

குற்றால டூரும்கஷ்டமித்ர பந்துக்களும்!

சுற்றுலாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். இந்தக் காலம் போல அரையாண்டு விடுமுறைக்கு பிக்னிக்’, கோடை விடுமுறைக்கு லாங் டூர்என்று போவதெல்லாம் என்னவென்றே தெரியாது எங்களுக்கு! ஆக, டீன்ஏஜில் எனக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கும் டூர் என்பது ஒரு அந்நிய வார்த்தைஅவ்வளவுதான்!

எப்போதாவது அப்படி புறப்பட்டால்சென்னையில் பாட்டியிடம் வளர்ந்த நான், பெட்டி படுக்கை கட்டிக் கொண்டு மேட்டூரில் இருந்த என் பெற்றோர் வீட்டுக்குப் போவேன். வருஷம் தவறாமல்ஏப்ரல், மேயில் என் அம்மா, என் சகோதர ரத்னங்களுடன் சென்னை வந்துவிடுவாள். பசங்களின் விடுமுறை முடிந்து, எல்லாரையும் மறுபடியும் ஒன்றுதிரட்டி அழைத்துப் போக அப்பா வருவார். இது தவிர, யாரும் எங்கேயும் போக மாட்டோம்.

விடுமுறை தினங்களில் என் தம்பிகள், நண்பர் குழாத்துடன் மொட்டை மாடியில் உட்கார்ந்திருப்பார்கள். நான், என் தங்கை மற்றும் சிநேகிதிகளுடன் கிணற்றடியில் உட்கார்ந்து அம்மா, பாட்டியின் அக்கப்-போரைக் கேட்டுக் கொண்டிருப்போம்; அல்லது என் சிநேகிதிகளில் வசதிமிக்க ஒன்றிரண்டு பேர் ஊட்டி, கொடைக்கானல் போய் வந்த சேதியைச் சொல்ல, காதிலும் மூக்கிலும் பொறாமை புகையப் புகையக் கேட்டுக் கொண்டிருப்போம்.

இந்தச் சமயத்தில்தான் என் தாத்தா ஒரு செய்தியைக் கூறினார். அதாகப்பட்டது

ஜூலை, ஆகஸ்ட்டில் பள்ளிக்கூடம் திறந்துவிட்டிருந்தாலும் ஒரு வாரம் போல குற்றாலம் போய் வரலாம்.’

ஆனால், பள்ளிக்கூடத்துக்கு லீவு போட வேண்டுமேஅப்பா ஒப்புக் கொள்வாரா?!

அதான் ஒன்றரை மாசம் லீவு இருக்குல்லேஅதுலே தென்காசி, குற்றாலம் என்னவடக்கே காசி, ஹரித்வாரே போயிட்டு வந்துடலாம்…” என்றார் அப்பா.

ஏப்ரல், மேயில அருவி, தோசைக்கல் மாதிரி காய்ஞ்சுக் கிடக்குமாம். என் சிநேகிதி சொல்றா…” என்றாள் அம்மா.

சரி! அப்போ பசங்க பெரிய லீவுல உட்கார்ந்து அடுத்த வருஷப் பாடங்களை கோ த்ரூபண்ணட்டும். குற்றாலம் கிளம்புறதுக்கு ரெண்டு நாள் முன்ன நாம திரும்பவும் மெட்ராஸ் வரலாம்என கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டு அம்மாவோடு மேட்டூருக்கு கிளம்பிவிட்டார் அப்பா.

அந்த முறை கருங்கோடையில்கூட வெயிலில் அலையாது, ஐஸ்க்ரீம் எதுவும் சாப்பிடாது, வீடே கதியாக நானும் என் உடன் பிறப்புகளும் இருந்தோம். அடுத்த வருட பாடப் புத்தகத்தை எல்லாம் வாங்கி, புரிகிறதோ இல்லையோபொட்டை நெட்டுரு அடித்தோம்.

கட்டிலம்மா (என் அம்மா-வின் அம்மாவை இப்படித்தான் கூப்பிடுவோம்), தையற்காரர் அய்யாவுவை வரவழைத்து, எனக்கும் என் தங்கைக்கும் மூன்று ஜோடி ஸாட்டீன் பாவாடை சட்டை தைத்தாள்.

தாத்தா, எப்போதுமே கறுப்பு, பச்சை சிவராயர் கரை அல்லது குண்டஞ்சி வேஷ்டிதான் கட்டுவார். அதில் அரை டஜன்நல்ல கிளாக்ஸோ மல் ஜிப்பா ஆறுரெடியானது.

குளிரப் போறது…” என்று பதறினாள் பாட்டி.

போடி பைத்தியமே.. இப்படி மெல்லிசா இருந்-தாத்-தான் ஒரு தடவை குளிச்சுட்டு வந்தவுடனேயே காயப் போட வசதியா இருக்கும்.”

அப்ப நான் பட்டுப் புடவை எடுத்துக்க வேண்டாமா…”

ரெண்டு வச்சுக்கோ. மீதிய சின்னாளம்பட்டுல எடுத்துக்கோ. அருவி விழற வேகத்துல, புடவை எல்லாம் தார் தாராக் கிழிஞ்சுடும்.”

தலை துவட்டிக்கற துண்டு?”

அங்கேயே கிடைக்கும். அதெல்லாம் மூட்டை சேர்க்காதே…” டூர் டிப்ஸ்களை கொட்டினார் தாத்தா.

எதுக்கும் கொஞ்சம் பட்சணம்குழந்தைகளோட போறோம். ‘குழந்தை பசியோ, கொள்ளித் தேளோனு சொல்லுவா…”

கட்டிலம்மாவுக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டு விட்டது. முள் தேன்குழல், மனோகரம், தேங்காய் பர்ஃபி, தட்டை.

போதாக்குறைக்கு என் அம்மா வேறு, கட்டிலம்மா-வுக்கு தபால் போட்டிருந்தாள்

சமையல் மாமிகிட்ட சொல்லி, கொஞ்சம் புளிக்காய்ச்சல், மாவடு, நார்த்தங்காய் எடுத்துக்கோ. உன் பெரிய டிபன் கேரியர். கூஜா மறக்காதே. சீஸன் சமயத்துல குற்றாலத்துல ஆகாரம் சரியா இருக்காதுனு இங்கே எல்லாரும் சொல்றா. உன் மாப்பிள்ளை ஒருவேளை சாப்பாடு சரியில்லைனாலும் ருத்ரதாண்டவம் ஆடிடுவார்.’

கடிதத்தின் விளைவாக புளிக்காய்ச்சல், தக்காளித் துவையல், தேங்காய் பொடி, சின்னதாக ஒரு ஸ்டவ், இரண்டு உருளை, ஒரு ருக்மிணி குக்கர்எல்லாம் ரெடி செய்துவிட்டாள் கட்டிலம்மா!

கோடை விடுமுறை கரைந்து, இதோஇதோஎன் அம்மா, அப்பாவும் வந்தாகிவிட்டது. மறுநாள் காலையில் திருநெல்வேலி பாசஞ்சரில் பிரயாணம்.

எத்தனை ஏற்பாடுகள்..? ஒரு வாரம் வீட்டை விட்டுப் போவதென்றால் எதையெல்லாம் யோசித்து யோசித்துத் திட்டமிட வேண்டியிருக்கிறது..?!

சமையல் பாட்டிக்கும், வேலைக்காரி கண்ணம்மாவுக்கும் ஒரு வாரம் லீவு கொடுத்து அனுப்பியாகி விட்டது. பால்கார கபாலியிடம் அன்றிலிருந்து ஏழாம் நாள் சாயந்திரம் பக்கத்து வீட்டில் பால் கொண்டு வந்து கொடுத்தால் போதும் என்று சொல்லியாகி விட்டது.

ஏரியா கூர்காவுக்கு ஐந்து ரூபாய்எங்கள் வீட்டுப் பக்கம் வந்தால் மட்டும் வாசல் கேட்டில் இரண்டு தரம் பலமாக சத்தம் செய்யும்படி!

தாத்தாவும் அவர் நண்பர் ராமண்ணாவும் போய், ‘வாடகை டாக்ஸி இரண்டு, விடிகாலையில் வர வேண்டும்என்று சொல்லி வந்துவிட்டனர்.

அடுத்த அரை மணி நேரத்திலேயே இரண்டு பெரிய டாக்ஸிகள் வீட்டு வாசலில் வந்து நிற்க

ராமண்ணா தாத்தா குடுகுடுவென வாசலுக்கு ஓட

கார் கதவுகளை அகலத் திறந்து கொண்டு, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தாற் போல

தாத்தாவுடையதாத்தாவுடையஉறவு முறைகள்இஷ்டமித்ர பந்துக்கள்கஷ்டம் தரவென்றே வந்திறங்கி விட்டன.

மணி சௌக்கியமாடா..? ஜானகி, என்ன மலைச்சுப் போய் நிக்கறே..?! சுப்புணி சொன்னான்ஒரு லெட்டர் போட்டுட்டுப் போகலாம்னு. நான்தான் வேணாம்னுட்டேன். நம்ம வீட்டுக்கு வர்றதுக்குஅட, பட்டாகுழந்தைகள் எல்லாரும் இங்கேதான் இருக்காங்களாசரியாப் போச்சு! பருத்தி, புடவையாக் காய்ச்சாப் போல! அடியேசரஸ்வதிஎல்லாரையும் இங்கேயே பார்த்துடலாம்…”

சொன்னால் நம்ப மாட்டீர்கள்கிட்டத்தட்ட ஏழெட்டு பெரிய உருப்படிகள். நாலைந்து வாண்டுகள்!

இரவு எட்டு மணிக்கு மேல் அம்மாவும், கட்டிலம்மாவும் அவர்கள் கட்டி வைத்திருந்த சாக்கு மூட்டையைப் பிரித்து, ருக்மிணி குக்கரை எடுத்து சாதம் வடித்து, புளிக்காய்ச்சலைப் போட்டுக் கலந்து, வடகத்தைப் பொரித்துக் கொடுத்ததைச் சொல்வதா? விடிகாலை இருட்டில், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு, தாத்தாவும், ராமண்ணாவும் பால்கார கபாலியைத் தேடிச் சென்றதை சொல்வதா? வந்திருந்த வாண்டுகள் எனக்கும் என் தங்கைக்குமாக எடுத்த சாட்டீன் பாவாடை- சட்டையை மாட்டிக் கொண்டு ஆனந்தப்பட்டதை சொல்வதா?

அம்மாமிஎப்படியும் ஒரு தடவை மெட்ராஸைப் பார்த்துடணும்னு ஆசை. அம்மாவுக்கு, தன் தம்பியோட வீட்டையும், தோட்டத்தையும் தன் நாட்டுப் பெண்களுக்குக் காட்டணும்னு கழுத்து மட்டும் ஆதங்கம். அதான் கிளம்பிவந்துட்டம்…”

அத்தைப் பாட்டியின் இளைய மகன் பேசிக் கொண்டிருக்கையிலேயே, தாத்தா ஏற்பாடு செய்திருந்த இரண்டு டாக்ஸிகளும் வந்ததைச் சொல்வதா?

எங்கள் கண்களில் குற்றால பொங்குமாங்கடல் பொங்கிப் பாய ஆரம்பித்ததைச் சொல்வதா?!

மார்ச் 2010

அனுராதா ரமணன், சமூகத்தின் வாழ்க்கைச் சிக்கல்களை, குறிப்பாக, பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தனது படைப்புகளில் அதிகம் எழுதினார். இவரது கதைகள் பலவும் குடும்பத்தையும், அதன் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டவை. நடுத்தரக் குடும்பத்து மனிதர்களின் எண்ணங்களை, நெருக்கடிகளைப் பிரதிபலிப்பவை. பல படைப்புகள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவரது பல படைப்புகள் பெண்களுக்கு ஒரு பிடிப்பையும் தன்னம்பிக்கையையும் தருபவையாக அமைந்தன. பொதுவாசிப்புக்குரிய எழுத்துக்களாக அவை மிகவும் புகழ்பெற்றிருந்தன. ஆனால் பெரும்பாலும் பொதுவாசிப்புத் தளத்தில் நிலைகொண்டுவிட்ட கதையோட்டமும், குணச்சித்திர வார்ப்புகளும் கொண்ட வழக்கமான கதைகளாகவே அமைந்திருந்தன. ‘அனுராதா ரமணனின் பலம் அவரது சுலபமான, சரளமான நடை. பிராமணக் குடும்ப பின்புலங்கள் மிகவும் தத்ரூபமாக இருக்கின்றன. அவர் தன் ஃபார்முலாவை விட்டு வெளியே வந்திருந்தால் இந்த நடை அவரை கொஞ்சம் மேலே கொண்டு போயிருக்கலாம்என விமர்சகர் ஆர்வி (சிலிக்கான் ஷெல்ப்) கருதுகிறார்.




5 கருத்துகள்:

  1. அனுராதா ரமணன் கதை காலத்துக்கு ஏற்றபடி படிக்க சுவாரசியமாகவே இருந்தது.

    அவர் மேட்டூரில் பிறந்தவர் என்று நினைத்திருந்தேன்.

    பாசிடிவ் செய்திகள் நன்று.

    பதிலளிநீக்கு
  2. நூல் பாண்டியன் பற்றி அறிந்ததுண்டு. நான் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துப் போகமுடியாமல் போனது.

    வெங்கட்ஜியும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த நினைவு.

    பெண் தொழிலாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்ற விவசாயி விஸ்வநாத் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    வேறு ஒருவரும் அதாவது சமூக சேவை செய்பவர் ஒருவர் வயதானவர்களை அவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றதும் இங்கு பகிரப்பட்டதா இல்லை நான் இணையத்தில் வாசித்தேனா என்று தெரியலை ஆனால் நினைய்ருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பூர்ணிமா தேவி பர்மன் அவங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அனுராதா ரமணனைப் பற்றிய விவரங்கள் தெரிந்ததுதான்.

    அது போல அவரது எழுத்து பற்றிய கருத்தும் எனக்கும் அதே கருத்துண்டு. ஒரு சின்ன வட்டத்துக்குள் எழுதியவை. ஆனால் பெண்களைக் கவர்ந்தன.

    நான் ஒன்றிரண்டு வாசித்ததுண்டு ஆனால் அதன் பின் எனக்கு வேறு வேறு ஜர்னரில் எழுதப்படும் வித்தியாசமான எழுத்து வாசிக்கப் பிடிக்கும் என்பதால்...இவர் எழுதியதை அதன் பின் வாசித்ததில்லை

    இக்கதை நல்ல சுவாரசியமான கதை கூடவே அப்போதைய காலகட்டத்தை அப்படியே கண் முன் கொண்டு வருகிறார்! அவரது சொந்த அனுபவம் தெரிகிறது.

    எங்க வீட்டில் சுசீந்திரம், கன்னியாகுமரி செல்வதற்கே அத்தனை அட்ராசிட்டிஸ் நடக்கும். அது பத்தி, இணையத்தில் ப்ளாக் தொடங்கிய போது ஃபோல்டரில் எழுதி வைத்திருந்தேன் எங்கிருக்கு என்று பார்க்க வேண்டும். அப்படியான எங்க வீட்டு ஒரு நிகழ்வான 'சேவை' பற்றி எழுதியிருந்தேன். அந்த அட்ராசிட்டிஸ்ல சுசீ யும் குமரியும் விட்டுப் போச்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஜெஸி ஸார்! தமாஷ் பண்ணாதீங்க
    கதையா இது?..

    என்னன்னவோ சொல்லுவாங்களே!
    ஒரு ஆரம்பம். அதைத் தொடர்ந்து ஒரு முடிச்சு, முடிச்சை சிக்கலாக்க போக்குக்காட்டல், ஒரு திருப்பம், கடைசியில் முடிச்சு நாம் எதிர்பார்த்தேயிராத விதத்தில் அவிழ்தல் -- இப்படி சிறுகதைக்கான அம்சம் ஒண்ணுமே காணோமே ஸார்?

    இந்துமதி மாதிரி கோர்வையாக கதை சொல்லும் போக்கு, சிவசங்கரி மாதிரி நல்ல கதைக்கான சப்ஜெக்ட் தேர்வு, ராஜம் கிருஷ்ணன் மாதிரி முற்போக்கு சிந்தனை, ஜோதிர்லதா கிரிஜா மாதிரி விதவித கதைக்களங்கள் -- இப்படியெல்லாம் ஒண்ணுமேயில்லாத, பள்ளிச் சிறுவர்களின் அரைகுறை சுற்றுலா கட்டுரை மாதிரி ஒன்றைப் போட்டு விட்டு இந்த சனிக்கிழமை எங்களை ஏமாற்றி விட்டீர்களே, நியாயமா ஸார்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!