சனி, 10 அக்டோபர், 2009

"மனதிலே பல பாட்டு...."

திரைப்படங்களை வெறுப்பவர்கள் கூட பாடல்களை ரசிப்பார்கள். திரைப்படப் பாடல்களா...வேஸ்ட் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் அவர்களும் கூட சில பாடல்களை அல்லது பாடல்களில் உள்ள சில வரிகளையாவது ரசிப்பார்கள். எனக்கு நிறைய பாடல்கள் பிடிக்கும் இருந்தாலும் சில மனதில் நின்ற வரிகள் கீழே...

    ரத்தத் திலகம் படத்தில் TMS பாடும் கவிஞர் வரிகள்,
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"... "படைப்பதனால் என் பேர் இறைவன், மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன், அவர் மாண்டு விட்டாலும் அதைப் பாடி வைப்பேன்.."என்று பாடி விட்டு மேல்சொன்ன வரியைப் பாடுவார். கவிதையைப் பொருத்த வரை அவர் காவியத் தாயின் இளைய மகன்தான்...
     வேட்டைக்காரன் படத்தில் TMS பாடும் 'உன்னை அறிந்தால்' பாடலில் எல்லா வரிகளும் நன்றாக இருந்தாலும், "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்.."
     பணக்காரக்குடும்பம் படத்தில் TMS பாடும் 'கண்போன போக்கிலே' பாடலிலும் நிறைய வரிகள் மிக நன்றாக இருந்தாலும், என் சிகர வரிகள் அந்தப் பாடலில், "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.." வரிகள் ஆகும். படத்தில் வாயசைத்த திரு MGR அந்த வரிகளுக்கேற்றவாறே வாழ்ந்து காட்டினார் என்பதில் ஐயமில்லை.
    தர்மம் தலை காக்கும் படப் பாடல். TMS. சிலபல சோதனையான நேரங்களில் எனக்கு ஆறுதலளித்த வரிகள்..."மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும். நமை வாழ விடாதவர் வந்து நம் வாசலை வணங்கிட வைத்துவிடும்..."
    கடவுளை எல்லோரும் சந்தேகப் பட்டு கேள்விகள் கேட்கும்போது கவிஞர் இறைவனையும் கவிஞனாக உருவகப் படுத்தி "கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு. காந்தியைப் போலவே காவியம் உண்டு, முடிவு விளங்காத தொடர்கதை உண்டு. முடிக்கவேண்டும் என்று முடிப்பதும் உண்டு..." என்று பாடும் ஏன் திரைப்படத்தில் SPB பாடும் பாடல்.
    பாலும் பழமும் படத்தில் TMS - சுசீலா பாடும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலில் "சொல்லென்றும் மொழி என்றும் பொருளென்றும் இல்லை" என்று பாடி விட்டு அடுத்த வரி சிக்ஸர். "சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..." விவாகரத்துகள் பெருகிவிட்ட இந்த நாளில் வாழ்க்கை தத்துவமும் அடுத்த வரியில்..."ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை..." என்பதை மறக்க முடியுமா?
    "பாதை எல்லாம் மாறி விடும் பயணம் முடிந்து விடும்..மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்..." "
     "உண்மைக்கு ஒரு சாட்சி...பொய் சொல்ல பல சாட்சி...", "ஒருகணம் தவறாகி பல யுகம் தவிப்பாயே...ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே..."ஆயிரம் கனவாகி ஆனந்த நினைவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி... ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி யார் முகம் பார்த்தாலும் அச்சத்தில் தவிப்பாய் நீ..." மனசாட்சி உறுத்துவதைப் பற்றி சொல்லும் வரிகள் இவை....
    வைரமுத்துவின் வரிகள் பலப்பல வைரவரிகள்தான்..."விதியை நினைப்பவன் ஏமாளி..அதை வென்று முடிப்பவன் அறிவாளி..."
    மனம் கவர்ந்த பாடல் வரிகள் சொல்ல ஒரு பதிவு போதாது...சொன்னதை விட சொல்லாதது ஏராளம்...

23 கருத்துகள்:

  1. தத்துவப் பாடல்கள் மட்டும்தான் என்பதில்லை, கண்ணதாசன், வைரமுத்து மட்டும்தான் என்றில்லை. சினிமாப் பாட்டுகளில் மனம் கவர்ந்த பாடல்கள் பல உண்டு. அவற்றில் அதிகம் பிரபலம் ஆகாதா சில இதோ:

    கிராமத்துத் திருவிழாவில் இளம் பெண்கள் ஆண்கள் ஆடிக் களிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பாடும் பாணி.

    வேப்பெண்ணையை பூசிக்கிட்டு
    வெறும் கையாலே நீவி விட்டு
    வேடு கட்டும் கூந்தலிலே ருக்குமணி
    காக்கா கூடு கட்டப் பாக்குதடி செங்கமலம்.

    படம்: பாகப் பிரிவினை பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

    அக்காவின் வளைகாப்பில் தங்கை பாடுகிறாள்:

    தாலாட்டுப் பாடி இவ தாயாகி மகனுக்குப்
    பாலூட்ட நெருங்குது நாளு, அவன்
    காலாட்டிக் கையாட்டி ஆடுறதப் பாத்துவிட்டா
    கீழே விட மாட்டாரு ஆளு, மகனை கீழே விட மாட்டாரு ஆளு.

    படம்: கல்யாண பரிசு பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்.

    மருமகள் நாத்தனார் கருவுற்று இருக்கிறார்கள். வளைதரப்பில் ஒருவரை ஒருவர் கிண்டல்:

    உனக்கொரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் அது
    உன்னை நன்றாய்ப் பாடு படுத்தவேண்டும்
    எனக்கு சம்பந்தி ஆகி உன்னை
    எடுத்ததெற்கெல்லாம் குறை சொல்ல வேண்டும்.

    பதில்:
    அம்மான் மகளுக்கு ஆசைப்பட்டு நீ
    ஆண் குழந்தை பெற நினைத்தாயோ
    இரண்டும் ஆணாய் பிறந்தாலோ
    இரண்டும் பெண்ணே பிறந்தாலோ
    நாம் என்ன செய்வோமடி ஏது செய்வோம்.

    வள்ளியின் செல்வன் என்ற ஜெமினி படம். கொத்தமங்கலம் சுப்பு.

    ஆறு பெருகி வரின் அனையிடலாகும்
    அன்பதன் பாதையில் அணையிடலாகுமோ?
    சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி.
    வஞ்சிக்கோட்டை வாலிபன் ; சுப்பு.

    பதிலளிநீக்கு
  2. மனதை கவர்ந்த பாடல் வரிகளை சொல்ல ஒரு பதிவு இல்லை, பல பதிவுகள் கூட போறாது. இதற்காக ஒரு தனி blog ஆரம்பிக்கணும்.
    எம்.ஜீ.ஆர். தத்துவ பாடல்கள் எல்லாமே அவர் அரசியலுக்கு வரணும் என்ற நோக்கத்துல, மக்களை மனதை கவருவதற்காக எழுதப்பட்ட பாடல்கள் தான்.
    'கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும்,
    உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்'......இதை நிஜமாவே நடத்தி காட்டிட்டாரே.

    'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலும் அதுல நீங்க குறிப்பிட்டிருக்கிற வரிகளும் என் மனசுல என்னிக்குமே நிரந்தரமா இருப்பது.

    இந்த பதிவை படிச்சபோது என் மனசுல உடனே நினைவுக்கு வந்த வரிகள்
    'உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை' ....என்னை பொருத்தவரைக்கும் வாழ்க்கைல எல்லாத்துக்குமே இது பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  3. பிடித்த பாடல் அல்லது பிடித்த வரிகள் என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது என்பது மட்டுமல்ல, ஏதாவது ஒரு வகையில் அவரவர் மனதை அது பாதித்திருக்க வேண்டும். அந்த வகையில் எல்லோருமே தனித்தனி பட்டியல் வைத்திருப்பார்கள். இது எல்லார் மனதிலும் அவரவர் பட்டியலை தூண்டி விடும் சிறு பதிவு. எல்லாவற்றையும் சொல்ல முடியாது. சொல்ல வேண்டியதை அவரவர் மனதில் தூண்டிவிட்டால் போதும்!

    பதிலளிநீக்கு
  4. நன்றாகச் சொன்னீர்கள் ஸ்ரீராம் -- வலைப் பதிவின் வெற்றியே - படிப்பவர் மனதில் சில சிமிலர் சிச்சுவேசனைக் கொண்டு வந்து - அவர்களை அதே அலை வரிசையில் அலைன் செய்துவிடுவதுதான்!

    பதிலளிநீக்கு
  5. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா ? - உண்மை, எளிமை, அருமை !

    பதிலளிநீக்கு
  6. என் மனசில் அடிக்கடி வரும் கண்ணதாசன் வரிகளில் ஒன்று ;

    "பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே-ஆனால்
    நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே"

    இந்த வரிகளைப் பற்றியே தனி இடுகை போடலாம்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீராம் பாடல்களின் ரசனை என்று அடுக்கப்போனால் பழைய பாடல்கள்,இடைக்காலப் பாடல்கள்,
    இன்றைய பாடல்கள் என்று ரசனையோடு அடுக்கிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் சொன்னவைகள் கொஞ்சமே.

    "அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்" என்று ஒரு பாடல் அடிக்கடி ஞாபகத்தில் வரும் எனக்கு.எந்தப்படம் யார் பாடியது என்று தெரியவில்லை.கேட்க இதமாய் இருக்கும் ஒரு பாடல்.இன்னும் பட்டியல் நீளும்.வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி கெட்ட மாந்தரடா
    நானறிந்த பாடமடா
    பிள்ளையாய் இருந்துவிட்டால்
    இல்லை ஒரு தொல்லையடா !

    பதிலளிநீக்கு
  9. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.."

    மறுக்க முடியாத கருத்து.

    படத்தில் வாயசைத்த திரு MGR அந்த வரிகளுக்கேற்றவாறே வாழ்ந்து காட்டினார் என்பதில் ஐயமில்லை.

    இதானே வேணாங்கிறது?

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் சொல்வது சரி. அவரவர் பாதிப்புக்கேற்றபடி பாடல் வரிகளை மதிப்பிடுவது இயல்பு.

    சேக்ஸ்பியரிலிருந்து தொடங்கி கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த், போ என்று பல ஆங்கிலக் கவிஞர்களின் கருத்தைத் தமிழில் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் கண்ணதாசன், வாலி (உள்ளூர் கம்பன், காளிதாசன் recycleம் உண்டு). குறை சொல்லவில்லை - அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அடியேனுக்குத் தெரியாமலே போயிருக்கும்.

    'என்னைப் பார்த்து எனை வெல்லவும்' - தகப்பனின் பாசத்தை விளக்கும் இறக்குமதி கருத்துகளில் என்னைப் பாதித்த கண்ணதாசன் வரிகள். தமிழ்க் கருத்து ஆங்கில வரி/பொருளை விட ஆழம் என்பேன்.

    வைரமுத்துவை நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. திரைப்படப்பாடல்களில் பாரதியார் ,பாரதிதாசன் போன்ற காலம் வென்ற கவிஞர் பாடல்கள் இடம்பெற்றுஉள்ளன என்பதை மறவ வேண்டா....இவர்கள் தான் நீங்கள் குறிபிட்ட அனைவர்க்கும் முன்னோடி என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும் .... பாரதியார் பாடல்கள் அனைத்துமே கேட்க மட்டும் இல்லாமல் படிக்கும் பொழுதே இன்பத்தை தர வல்லன ...

    பதிலளிநீக்கு
  12. //பாரதியார் பாடல்கள் அனைத்துமே கேட்க மட்டும் இல்லாமல் படிக்கும் பொழுதே இன்பத்தை தர வல்லன ...//
    மறுக்க முடியாத உண்மை.
    "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி,
    என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ"
    'கண்ணம்மா' அப்படின்னு சொல்லும்போதே மனசு அப்படியே உருகி போய்டும்.

    பதிலளிநீக்கு
  13. கண் போன போக்கிலே கால் போகலாமா

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

    பதிலளிநீக்கு
  14. ஜவர்லால், அவன்தான் மனிதன் படப் பாடல்கள் எல்லாமே நல்ல பாடல்கள்தான். நீங்கள் சொன்ன வரிகள் எனக்கும் பிடிக்கும். அதே படத்தில் வாணி ஜெயராமின் குரலில் 'எங்கிருந்தோ ஒரு குறள் வந்தது' என்ற பாடலும் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  15. ஹேமா, நீங்கள் சொல்வதுபோல மூன்று காலங்களில் பாடல்களை பட்டியலிடலாம். படிப்பவர்கள் பொறுமை இழந்து விட்டால்...? ! அன்புள்ள மான்விழியே பாடல் குழந்தையும் தெய்வமும் படப் பாடல். நல்ல பாடல்.

    பதிலளிநீக்கு
  16. அன்பு அனானி சொல்லியுள்ள நல்ல பாடலுடன் இந்த வரிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்..."பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏதடா...பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள்தானடா.."

    பதிலளிநீக்கு
  17. அப்பா சார், MGR பல இதயங்களில் குடியிருந்தார் அல்லது இருக்கிறார் என்பதை மறுக்க முடியுமா? அவரது சமகால நடிகர்களில் அவ்வளவு புகழடைந்தவர் யார்?
    அதென்ன வைரமுத்து பற்றி இப்படி சொல்லி விட்டீர்கள்? காதல் ஓவியம், சலங்கை ஒலி, ராஜ பார்வை நிழல்கள் பாடல்கள் என்று நிறைய சொல்லலாமே...

    பதிலளிநீக்கு
  18. தாரிணி, பாரதிஆர் பாடல்களை மறந்து விட்டதாக அர்த்தமாகுமா? சொன்னதை விட சொல்லாததுதான் அதிகம் என்றுதானே பதிவு முடிந்துள்ளது? அவர் "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி.." பாடலை மறக்க முடியுமா?
    மீனாட்சி சொல்லி உள்ள பாடலில் கண்ணீர் வருவது போலவே குறை ஒன்றும் இல்லை பாடலிலும் "ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா.." என்று வரும்போதும் கண்ணீர் தளும்பி விடும்!
    வசந்த் உங்கள் பதிவில் நீங்கள் படம் இணைத்துள்ள "தொட தொட எனவே" அருமையான வரிகள் கொண்ட பாடல். ஹேமா சொல்வதுபோல தற்காலப் பாடல்களில் பட்டியலிடலாம்.

    பதிலளிநீக்கு
  19. மிகச் சரியாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்ரீராம். நான் இந்த பாடலை எம்.எஸ். அவர்கள் குரலில் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும்பொழுதும் "ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா.." என்ற இந்த வரிகள் வரும்பொழுது கண்களில் இருந்து தானாகவே கண்ணீர் வந்துவிடும். அவ்வளவு அற்புதமான பாடல் இது.

    பதிலளிநீக்கு
  20. படிப்பவர்களை பல ஆண்டுகள் பின் இழுத்துச் செல்லும் பதிவு. நூற்றுக்கணக்கான பாடல்களை அசை போடா வைக்கிறது.

    ஒரு பாடல் என்னை மிகவும் பாதித்தது:

    "வந்த நாள் முதல்.....: மனிதன் மாறி விட்டான்; மதத்தில் ஏறி விட்டான். "
    (பாவ மன்னிப்பு; கண்ணதாசன் என நினைக்கிறேன்; டி எம் எஸ் )
    //"அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்" என்று ஒரு பாடல் அடிக்கடி ஞாபகத்தில் வரும் எனக்கு.எந்தப்படம் யார் பாடியது என்று தெரியவில்லை//


    பாடல் இடம் பெற்ற படம் : குழந்தையும் தெய்வமும்; ; டி. எம்.எஸ்; கண்ணதாசன் என நினைக்கிறேன்;

    பதிலளிநீக்கு
  21. படிப்பவர்களை பல ஆண்டுகள் பின் இழுத்துச் செல்லும் பதிவு. நூற்றுக்கணக்கான பாடல்களை அசை போடா வைக்கிறது.

    ஒரு பாடல் என்னை மிகவும் பாதித்தது:

    "வந்த நாள் முதல்.....: மனிதன் மாறி விட்டான்; மதத்தில் ஏறி விட்டான். "
    (பாவ மன்னிப்பு; கண்ணதாசன் என நினைக்கிறேன்; டி எம் எஸ் )
    //"அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்" என்று ஒரு பாடல் அடிக்கடி ஞாபகத்தில் வரும் எனக்கு.எந்தப்படம் யார் பாடியது என்று தெரியவில்லை//


    பாடல் இடம் பெற்ற படம் : குழந்தையும் தெய்வமும்; ; டி. எம்.எஸ்; கண்ணதாசன் என நினைக்கிறேன்;

    பதிலளிநீக்கு
  22. எம்ஜிஆர் மனதைக்கவர்ந்தவர் என்பதில் வேற்றுமையில்லை. எனக்குப் பிடித்த தமிழ் நடிகர்களில் எம்ஜிஆர், மேல் தட்டில் இருப்பவர். நீங்கள் சொன்னது போல் அவருக்குப் பிறகு அத்தனை புகழ் பெற்ற எந்த நடிகரும் இல்லையென்று தோன்றுகிறது. அதே நேரம், எம்ஜிஆரின் புகழ் அரசியல் சாக்கடையில் அடிபட்ட அறுந்த காகிதப் பட்டம் என்பதையும் மறக்க முடியவில்லை. நடிகராக இருந்த போது அவர் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை அரசியல் தலைவராக வந்தபின்னர் நிறைவேற்றவில்லை. 'பேச்சோடு சரி' என்று மற்ற அரசியல்வாதிகளை நிராகரிக்கலாம், ஏனெனில் அவர்கள் யாரையும் நம்பவில்லை. 'இவன் தலைவன்' என்று எம்ஜிஆர் பேச்சை நம்பி உரமேற்றிப் பின் ஏமாந்த போது இதயத்தைப் பிளந்தது. 'உடன் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்' என்பது வெறும் பேச்சு என்பதை உணர்ந்த போது நிறைய வலித்தது ஸ்ரீராம். முதல் காதலின் சோகம்.

    பதிலளிநீக்கு
  23. தும்பி சார்,
    ரொம்ப நாளா ஆளைக் காணோம். உங்களைப் பேச வைத்த பதிவிற்கு நன்றி!
    அப்பா சார்,
    நீங்கள் சொல்லி உள்ள ஏமாற்றம் எல்லோருக்குமே இருக்கும். அரசியலில் அவர் "நினைத்ததை முடிகாதவன்". அதற்கு அவர் காரணமல்ல. எனவே "நினைத்ததை முடிக்க முடியாதவன்"! ஆனால் பதிவு அரசியலைத் தொடாத, என் கவிஞர்களைக் கூட குறிப்பாக சுட்டாத, மனம் கவர்ந்த கவிதை வரிகளைப் பற்றி மட்டும்தானே..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!