புதன், 28 அக்டோபர், 2009

முதல் முதலாக

மலையாளத்தில் பல பாடல்கள் பாடியிருந்தாலும் சித்ரா தமிழில் அறிமுகமான படம் "நீதானா அந்தக் குயில்" என்ன பொருத்தம்? ஆனால் அவர் பிரபலமானது சிந்து பைரவி பாடல்களால். தேசிய விருது பெற்றுத் தந்தது அது அவருக்கு.

1977 இல் காமன் என்ற ஹிந்திப் படத்தில் முதல் பாடல் பாடிய ஹரிஹரன் கர்நாடக இசைப் பாடகி அலமேலு-மணியின் மகன். அது ஒரு கஜல் பாடல். உத்தரப்ப்ரதேச அரசின் விருதை பெற்றுத் தந்தது அது அவருக்கு.கஜல் ஆல்பங்கள் கொடுத்துப் புகழ் பெற்ற அவருக்கு முதல் தமிழ்ப் பாடல் ரோஜாவில் வரும் "தமிழா தமிழா" பாடல்.

K J யேசுதாசுக்கு (கட்டசெரி ஜோசெப் யேசுதாஸ்). முதல் குரு அவர் தந்தை அகஸ்டின் ஜோசப். பிறகு மியூசிக் அகடமியில் சேர்ந்து தங்க விருது பெற்றவர் செம்பையிடம் சங்கீதம் பயின்றார். தமிழில் அவர் முதல் பாடல் 'பொம்மை' படத்தில் வரும் "நீயும் பொம்மை நானும் பொம்மை" பாடல். ஹிந்தியில் அவர் திறமையை முழுதும் பயன் படுத்திக் கொண்டவர்கள் சலீல் சௌத்ரியும்,ரவீந்தர ஜெயினும். தமிழிலும்,ஹிந்தியிலும் ஏன் எல்லா மொழிகளிலும் பல மெலடிகளுக்குச் சொந்தக்காரர்.

த்வாரம் வேங்கடசாமி நாயுடு பிரின்சிபாலாக இருந்த விஜயநகரம் மியூசிக் காலேஜிலும், பின்னர் முசிறி சுப்ரமணிய ஐயர் பரின்சிபாலாக இருந்த சென்னை மியூசிக் காலேஜிலும் படித்த P. சுசீலா கர்நாடக இசை கச்சேரிகள் செய்தும் ஆல் இந்தியா ரேடியோவில் பாடியும் புகழ் பெற்றிருந்தார். தெலுங்கில் கன்னதல்லி என்ற படமும் தமிழில் 'பெற்றதாய்' என்ற படமும் அவர் பாடிய முதல் சினிமா பாடல்கள். தென்னகத்து லதா மங்கேஷ்கர் என்று அறியப் படுகிறார் இவர். இவர் குரலின் மேன்மைக்கு மயங்காதவரே இருக்க முடியாது.

வாணி ஜெயராம் தாயும் சேயும் என்ற படத்தில் பாடிய ஒரு பாடல் தமிழில் முதல் பாடலாகச் சொல்லப் பட்டாலும் '1973 இல் TMS உடன் அவர் பாடிய "ஓர் இடம் உன்னிடம்" என்ற பாடலே வெளிவந்த படத்தில் அவர் பாடிய முதல் பாடலாக அறியப் படுகிறது. அது அறியப் படாத பாடலாக இருந்தாலும் விண்ணுலகில் இருந்து, மல்லிகை ஏன் மன்னன் போன்றா பலப்பல நல்ல பாடல்கள் பாடி உள்ளார்.

ஸ்ரீபதி பாண்டிராத்யுல பாலசுப்ரமணியம். S. P. பாலசுப்ரமணியம். ஹரிகதா காலட்சேபம் செய்யும் S. P. சாம்பமூர்த்தி மகன். AMIE பட்டதாரி. 1966 ஆம் வருடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமுடு தெலுங்குப் படத்தில் முதல் பாடலைப் பதிவு செய்த SPB, தமிழில் முதலில் L R ஈஸ்வரியுடன் பாடிய "அத்தான் இப்படி இருந்து எத்தனை நாள்" என்ற 'ஹோட்டல் ரம்பா' பாடல் வெளிவராத போதும் 'சாந்தி நிலையம்' படத்தில் வரும் "இயற்கை என்னும்" பாடலே அவர் முதல் தமிழ்ப் பாடலாக அறியப் படுகிறது. பாடகர், இசை அமைப்பாளர், நடிகர், கமலுக்கு தெலுங்குப் பட வுலகில் டப்பிங் குரல் கொடுப்பவர், தயாரிப்பாளர், ரெக்கார்டிங் ஸ்டுடியோ சொந்தமாக வைத்துள்ளவர் ...பல முகங்கள் இவருக்கு.

எட்டு மொழிகளில் - தமிழ், தெலுங்கு, கன்னடா, உருது, ஹிந்தி, சமஸ்க்ரிதம், மலையாளம், ஆங்கிலம் - பாடல் எழுதவும் தெரிந்த P B ஸ்ரீநிவாஸ் குழந்தையாக இருக்கும்போது ரொம்பநாள் பேசாமலேயே இருக்க அவர் பெற்றோர்கள் வேண்டாத தெய்வமில்லையாம். 1951 இல் ஹிந்தியில் 'மிஸ்டர் சம்பத்' என்ற படத்தில் பாடினார். பின்னர் அது தமிழில் 'மிஸ் மாலினி'யாக வெளிவந்தது. தமிழில் அவர் நேரடியாக பாடிய முதல் படம் 'ஜாதகம்'. பின்னர் பிரேமபாசம் படத்தில் எல்லாம் பாடியிருந்தாலும் அவர் ஹிட் அடுத்த வீட்டுப் பெண் தான்.

மூன்று வயதில் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய S ஜானகி பாடிய முதல் தமிழ்ப் பாடல் 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில் - 1957 இல் அவரது பத்தொன்பதாம் வயதில்.

P. ஜெயச்சந்த்ரன் ஏசுதாசுடன் சேர்ந்து மலையாள உலகைக் கலக்கி இருந்தாலும் தமிழில் அவர் பாடிய முதல் பாடல் 'அலைகள்' திரைப் படத்தில் "பொன்னென்ன பூவென்ன கண்ணே.." பாடல். மிக இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.

மலேசியா வாசுதேவன். தமிழில் முதல் பாடல் டெல்லி டு மெட்ராஸ். பிறகு குமாஸ்தாவின் மகள் படத்தில் வரும் 'காலம் செய்யும் விளையாட்டு'. பாடல். மலேசியா வாசுதேவன் என்று அவரை அழைக்கத் தொடங்கியவர் A P நாகராஜன். பல படங்களில் நடித்தும் உண்டு. இசை அமைத்துள்ளார். ஒரு சில ஹிந்திப் பாடல்கள் பாடி உள்ளதாக தகவல். பாரதிராஜா இளையராஜா வந்தபிறகுதான் இவர் வாழ்வில் வசந்தம். ரசிகர்களுக்கும் பல இனிமையான பாடல்கள் கிடைத்தன.

2 கருத்துகள்:

  1. எஸ்.பி.பாலசுப்ரமணியம் AMIE முடிக்க வில்லை.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கங்களுடன் தேடல்.ஏன் வாணி ஜெயராமை நிகழ்ச்சிகளில் காணக் கிடைப்பதில்லை ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!