வியாழன், 28 டிசம்பர், 2017

வெய்யில் - ​தோசை வாங்கப் போனேன் - ரெண்டு இட்லி வாங்கி வந்தேன்..


தோசை  வாங்கப் போனேன் - ரெண்டு 
இட்லி வாங்கி வந்தேன்..
அதில் சட்னி சேர்த்துத் தந்தார் - அட
சாம்பார் என்ன ஆச்சு?  நான்... ( தோசை )


​டீக் க​டையில் கிடைக்கும் பஜ்ஜி
​சுவை ​
அள்ளிக் கொண்டு போகும் - அதில்
வழியும் சுட்ட எண்ணெய் -  நியூஸ்
பேப்பர் பிழிந்து எடுக்கும்   (  தோசை )


கையில் காசு புழங்கும் நேரம் 
பஜ்ஜி
​போண்டா ​
கிடைப்பதில்லை - அங்கு
பஜ்ஜி போடும் நேரம் - ​
கையில்
காசு இருப்பதில்லை - அவன்

காசு வாங்கிப் போனான்..
அந்தப் பையன் என்ன ஆனான்?  ( நான் தோசை )அந்தப் பையன் அப்பவே ஓடிட்டாண்ண்ணா 

===============================================================================================

இப்போ சுடச்சுட புதுசா எழுதிய ஒரு முயற்சி...

அகண்ட சாலைகளின் 
பரந்த வெறுமை வெளிகளை 
வெண்மையால்
நிரப்பிக் கொண்டிருந்த
வெயில்  
தரைகளால் தடுக்கப்பட்டு 
தாண்ட வழியின்றி 
பாதைகளில் 
வழிந்து ஓடுகிறது. 


தரையைத் 
தாண்ட முடியாத 
சூரியனின் கோபம் 
காலில் மிதிபடும் 
வெம்மையில் தெரிகிறது.
சுடச்சுட...!   ஹா.... ஹா... ஹா...  எசப்பாட்டு பாட ஏகாந்தன் ஸார் ரெடியா?!

======================================================================================================


வெய்யில் 


     பசி என்பது இவ்வளவு கொடுமையானதா?   பாஸ்கர் மறுபடி எழுந்து சென்று ஏதோ ஒரு கட்சிக்காரன் வைத்திருந்த தண்ணீர்ப்பந்தலிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் குடித்து வந்தான்.  மனதுக்குள் ஆயாசம், வெறுப்பு எரிச்சல் மண்டியது.  

     கடந்து செல்பவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.  தள்ளாடி நடக்கும் அதோ அந்தப் பெரியவர் கூட முதுமையினால் அப்படி நடக்கிறாரே தவிர, காலையில் வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் வந்திருப்பார்...   நேரத்துக்கு சாப்பிட்டு விடுபவர்கள் காலையிலிருந்து சாப்பிடாமல் பசியுடன் இருப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில்லை. அவர்களையும் எப்படி குறை சொல்ல?  யாசகர்கள் பெருகி விட்டதால் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது!


     காசில்லாத நேரங்களில் தனியாக வந்துவிடவேண்டும்.  கடைகள் இருக்கும் பக்கம் மட்டும் சென்றுவிடக் கூடாது.  நாசியைத் தாக்கும் பிரியாணி வாசனை, மற்ற உணவகங்களிலிருந்து வரும் உணவின் மணம் இன்னும் பசியைத் தூண்டி விடக் கூடியது என்பது அனுபவ உண்மை.

     தனது பசியைப் பற்றி இந்த உலகம் சற்றும் கவலைப்படவில்லை என்கிற நினைப்பு கோபமாக சுட்டது. 

     தெருநாய் ஒன்று பசியுடன் தரையை முகர்ந்தபடியே வந்து உள்ளே நுழைந்து இவனைக் கண்டு ஒரு நொடி தயங்கி, பின்னர் அங்கிருந்த நிழலைப் பார்த்தவுடன் அமர்ந்தது.   சிறிது நேரம் தலையைச் சாய்த்து அமர்ந்திருந்து விட்டு சாலை ஓரத்தில் கிடைக்கக் கூடிய உணவைத் தேடித் தன் பயணத்தைக் தொடர்ந்தது.  

     ப்ளஸ் டூ முடித்த பாஸ்கர் அவ்வப்போது ஒவ்வொரு வேலையில் இருந்து கொண்டு வந்திருக்கிறான்.  கம்பெனி ஒன்றில் வேலை சிலநாள், கூரியர் வேலை கொஞ்சநாள், தண்ணீர் கேன் போடும் வேலை..   எதுவும் ஏனோ நிரந்தரமில்லை.  

     இப்போது பதினைந்து நாட்களாய் வேலை இல்லை.  நண்பன் தங்கியிருக்கும் அறையில் இரவு படுக்க இடம் கிடைக்கும்.  அவனிடம் ஓரளவுக்கு மேல் உதவி எதிர்பார்க்க முடியாது.  அவனும்தான் எங்கு போவான்?  தங்க இடம் கொடுப்பதே பெரிது.  அப்படியும் அவனுக்கு கிடைக்கும் சொற்பத்தில் இவனுக்கும் அவ்வப்போது கொடுத்துதான் வருகிறான்.  ஒருவார காலமாய் அவனிடமும் காஞ்சப்பாடு.  இந்தப் பசி அனுபவம் அவ்வப்போது இவனுக்கு கிடைக்கும்.


     பஸ்ஸுக்கு காசு இருந்தால் ஒரு குறிப்பிட்ட இடம் செல்ல முடியும்.  அங்கு வீட்டின் வெளியில் வளர்ந்திருக்கும் கொய்யா மரங்கள் உண்டு.  அதிலிருந்து ஏதாவது பறித்துச் சாப்பிடலாம்.  அப்படியும் செய்திருக்கிறான்.

     காக்காய் ஒன்று கூரையில் அமர்ந்து குரல் கொடுத்தது.  "நானே பசியில் ஒன்றுமில்லாமல் இருக்கிறேன்.  ஏதாவது வீடு இருக்கும் இடத்துக்குப் போக வேண்டியதுதானே..."  

     இரைந்தே சொல்லி விட்டான் போல...

     இவனைப்போலவே இவன் அருகில் பசியில் வாடியபடி வயதான ஒரு கணவன் மனைவி அமர்ந்திருந்தனர்.  அவ்வப்போது இவனுடனும் உரையாடிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் இவனைப் பார்த்துப் புன்னகைத்தனர்.   பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழலும் பெஞ்சும் இவனைப்போலவே அவர்களுக்கும் புகலிடமாக இருந்தது.  ஒருமுறை தண்ணீர் குடிக்கச் சென்ற இவனிடம் அவர்கள் குவளையைக் கொடுத்து அதில் தண்ணீர் நிரப்பி வாங்கிவரச் சொன்னார்கள். அதற்குமுன் அந்த அம்மாள் "மோர்ப்பந்தலா அது?  கேட்டுப்பாருங்க தம்பி" என்றாள்.  "இல்லீங்க..  கட்சிக்காரங்க வச்சிருக்கற தண்ணிப்பந்தல்"  என்று சொம்பை வாங்கிச் சென்று தண்ணீர் வாங்கி கொடுத்தான்.  அதை வாங்கி ஒருவாய் குடித்த பெரியவருக்கு பசியாலோ என்னவோ  குமட்டிக் கொண்டு வந்தது.  அந்த அம்மாள் "மன்னிச்சுக்குங்க தம்பி" என்றாள் இவனிடம் சம்பந்தமேயில்லாமல்.

     பசியில் மயக்கமா, தூக்கமா என்று தெரியாமல் கண்ணைச் சுற்ற, இவன் எழுந்து மெல்ல சாலை ஓரமாகவே நடந்தான்.  சற்று தூரத்தில் தெரு திரும்ப,  திரும்பி இன்னும் மெல்ல நடந்தான்.  வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் வானம் தற்காலிக நிழல் போர்வை போர்த்தி இருந்தது.

      கொஞ்ச தூரத்தில் ஒரு வயதான பெண்மணி நின்றிருந்தாள்.  சாலையைக் கடக்க நிற்கிறாள் என்று தெரிந்தது.  சாலையைக் கடக்க சுரங்கப் பாதைக்குச் செல்லவேண்டுமானால் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும்.  அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்று இங்கேயே சாலையில் இருக்கும் ஒரு சிறு இடைவெளியில் சிலர் சாலையைக் கடப்பார்கள்.

     இந்தப்பெண்மணியும் அதே போல நிற்கிறாள் என்று தெரிந்தது.  கிடைக்கும் சிறு இடைவெளியில் ஓடி சாலையைக் கடக்க வேண்டும்.  இவள் கூட நின்றவர்கள் போக்குவரத்தைக் கவனித்தபடி, ஒரு கையை நீட்டி வாகனங்களை அவசரமாக நிறுத்தியோ, அல்லது கொக்குக்கு ஒண்ணே மதி என்று எதிர்சாலையைப் பார்த்தபடியே வாகன வாதிகளிடம் திட்டு வாங்கியபடி கடந்துகொண்டே இருக்க, கையில் ஒரு குச்சியுடன் இவள் கொஞ்சநேரமாகவே நின்றிருந்தாள்.

      'வயசான அம்மா...  ஜீரணம் ஆவதில் கஷ்டம் இருக்கும்..  இவங்கல்லாம் கொஞ்சம் சாப்பிட்டால் போதும்....' மனதுக்குள் சாப்பாட்டைப்பற்றியே யோசனை ஓடியது.

     அந்த அம்மாள் குச்சி வைத்திருப்பது ஊன்றி நடக்க இல்லை என்று தோன்றியது பாஸ்கருக்கு.  திடமாகவே இருந்தாள்.  நன்றாகச் சாப்பிட்டுவிட்டுதான் வெளியில் கிளம்பி இருக்கவேண்டும்.  பின் எதற்கு குச்சி கையில்?  யோசனையாக நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.  மனதில் அவள் அவசரப்பட்டு சாலையைக் கடந்து விபரீதமாகி விடக்கூடாதே என்ற கவலை இருந்தது.

      பிறகு மெல்ல அவள் அருகில் சென்றான்.

     "கிராஸ் செய்து அந்தப் பக்கம் போகணுமா அம்மா?"

      இவனைத் திரும்பிப் பார்த்தவள் பதில் பேசாமல் சாலையைப் பார்த்தபடி காத்திருந்தாள்.

     "இங்க தாண்டாதீங்கம்மா...  ரிஸ்க்கு...  அதோ...  அங்க சுரங்கப்பாதை இருக்கு.." 

     அவள் பதில் சொல்லாமல் மறுபடி சாலையிலேயே கவனமாக இருந்தாள்.  இவள் நடைக்குத் தகுந்த இடைவெளி கிடைக்க வாகனங்களை பார்த்தபடிக் காத்திருந்தாள்.

     இவனை மறுபடி திரும்பிப் பார்த்தவள், அவன் தன்னையே கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவள், மறுபடி சாலையைப் பார்த்துவிட்டு, திடீரென முடிவுக்கு வந்தவள் போல கிடைத்த சிறு இடைவெளியில் சாலையைக் கடக்க முற்பட்டாள். 


     தன்னைப் பார்த்து பயந்துதான் திடீர் முடிவில் சாலை கடக்கிறாள் என்று தோன்றியது பாஸ்கருக்கு.

     'என்னைப் பார்த்தால் அப்படியா இருக்கு?'  பாஸ்கருக்கு கோபம் வந்தது.

     வேகமாக வந்த ஒரு பைக் கிரீச்சிட்டபடி அந்த அம்மா மேல் மோதுவது போல் வர அந்த அம்மாள் திகைத்து நின்ற இடத்திலேயே மயங்கி நின்று போக்குவரத்தை மேலும் குழப்பினாள்.  வசவுகள் காதில் கேட்க, பாஸ்கர் எந்த வினாடி அவள் அருகில் போனான் என்று அவனுக்கே தெரியாத வேகத்தில் அருகில் விரைந்தவன், விழ இருந்தவளைத் தாங்கிப் பிடித்து நிறுத்தினான்.  வாகனங்களில் நின்றவர்களை முறைத்தபடி அவளை அழைத்துக் கொண்டு சென்டர் மீடியனுக்கு வந்தான்.  

     "என்னம்மா...  சொல்லிகிட்டே இருக்கேன்..  இப்படிப் பண்ணிட்டீங்களே..   என்னைப் பார்த்தா பயப்படற மாதிரியா இருக்கு?" என்றவன் சாலையின் அடுத்த பக்கமும் காத்திருந்து வாகனங்கள் கொடுத்த சிறு இடைவெளியில் கையை நீட்டி அவைகளை நிறுத்தியபடி சைகை செய்து கொண்டு அந்த அம்மாளை எதிர்ச் சாலையில் சேர்த்தான்.  சற்றே நின்று ஓய்வெடுத்தவள் இவனிடமிருந்து விலகி நடந்தாள். 

     ஏற்கெனவே பசி மயக்கத்தில் அரைநினைவாய் இருந்தவன், ஓரமாக நின்றுவிட்டான்.  எவ்வளவு நேரம் ஆனதோ தெரியாது...

     அந்த அம்மாள் இப்போது மறுபடி இவன் அருகில் வந்து நின்றாள் - மறுபடி சாலையைக் கடக்கத் தயாராய்!  அவள் கையில் அங்கே இருந்த ஷாப்பில் வாங்கிய சில மாத்திரைகள், அதனுடன் ப்ரெட், பிஸ்கட் பாக்கெட்டுகள், இரண்டு பிரியாணிப் பொட்டலம் ஆகியவை இருந்தன.

      "தம்பி...   என்னை மறுபடி அந்தப் பக்கம் விட்டுடேன்...   ஏற்கெனவே லேட்..  அவ பிசாசு  மாதிரி கத்துவா..."

      எவள் என்று கேட்கத் தோன்றவில்லை.  'முதலில் எனக்கு பயந்து ஓடிவந்தவள், இப்போது என்னையே மறுபடி உதவிக்குக் கூப்பிடுகிறாள்...'  மனதில் எண்ணங்கள் ஓட, கண்கள் அவள் கையில் இருந்த பிரியாணிப் பொட்டலத்தையே பார்த்தன.  வயிறு ஓலமிட்டது.  மனதில் மிருகம் புகத் தயாரானது.

     அதை அடக்கிக் கொண்டவன் அவள் கையைப் பிடித்து மறுபடி சாலையைக் கடந்து விட்டான்.

     திரும்பி நிழலைத் தேடி நடந்தவனை அவள் குரல் நிறுத்தியது.  

     "தம்பி...  இந்தா..."  அவள் கையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயம்.

     அவளை வெறித்துப் பார்த்தவன், அவள் கையில் இருந்த நாணயத்தைப் பார்த்தான்.  "இது எதற்குப் போதும்? ஒரு டீக்குக் கூட ஆவாதே..."  

     சே... செய்த உதவிக்கு கூலி எதிர்பார்ப்பதா...  அவள் ஏற்கெனவே என்னைத் தவறாக நினைத்தவள்...

     மனம் இப்படி நினைத்தாலும்  கண்கள் கட்டுப்பாட்டை மீறி பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்தன.  நாணயத்தை வாங்கக் கையை நீட்டினான்.  'இன்னும் எத்தனை பேருக்கு சாலையைக் கடக்க உதவினால் சாப்பாடு வாங்கும் அளவு காசு கிடைக்கும்?  ம்ஹூம்....'

     அவன் கண்களிலிருந்து அவள் அவன் பசியை உணர்ந்தாள்.  கையிலிருந்த ஒரு பிரியாணிப் பொட்டலத்தையும் ஒரு பத்து ரூபாய் நோட்டையும் அவனிடம் தந்துவிட்டு மெல்ல நடக்கத் தொடங்கினாள்.  பிரியாணி பொட்டல வாசனைக்கு அவள் பின்னால் தொடர்ந்த சில தெருநாய்களை அந்தக் குச்சியைக் காட்டி தூரத்தில் நிறுத்தியபடியே நடந்து மறைந்தாள்.

     அங்கேயே அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்தவன் நொடிகளில் காலி செய்தான்.  பத்து ரூபாய்க்கு தேநீர் ஒன்றைக் குடித்தவன்  பஸ்ஸ்டாப்பைத் தாண்டி நடந்தபோது இன்னும் அந்த வயதான ஜோடி பசியுடன் அங்கே அமர்ந்திருந்தது. "தம்பி..  எதுக்குக் காத்திருக்கீய?"
"சிறுகதை பற்றிய பின்னூட்டங்களுக்குத்தான்ண்ணா"


==================================================================================================


படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து....


112 கருத்துகள்:

 1. இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் :)

  பதிலளிநீக்கு
 2. அந்த ராமசேரி இட்லிய தானே சொல்றீங்க!!..

  பதிலளிநீக்கு
 3. ஹை இனிய காலை வணக்கம், ஏஞ்சல், துரை சகோ, ஸ்ரீராம்

  நான் ஆஜர்...பின்னர் வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்னிக்கும் தாமதம்!

  பதிலளிநீக்கு
 5. இனிய காலை வணக்கம் ஏஞ்சல். //வெற்றி.... // ஹா... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 6. ஏஞ்சல் வெற்றீ!!!!//ஹா ஹா ஹா நீங்க ஃபர்ஸ்டூஉஊஊஊஊஊஊஊஊ!!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. ஊத்தப்பம் இட்லியாகி எங்க பிளாக்கும் வந்திடுச்சா?..

  பதிலளிநீக்கு
 8. ஹாஹா :) அண்ணா செம காமெடி இன்னக்கு கீதா ரெங்கன் பழைய போஸ்டில் கமெண்ட்டிங் :)
  மூச்சிரைக்க ஓடிவந்தேன்

  பதிலளிநீக்கு
 9. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 10. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

  பதிலளிநீக்கு
 11. கீதாக்கா இனிய வியாழன் வணக்கம்!

  கீதா

  பதிலளிநீக்கு
 12. இனிய காலை வணக்கம் கீதா அக்கா. நீங்களும் சரியா போட்டிக்கு நிக்கறீங்க!

  பதிலளிநீக்கு
 13. காஃபி இன்னும் வரலே..

  அதுக்குள்ளே என்ன வெற்றீ..

  பதிலளிநீக்கு
 14. @கீதாக்கா :) நான் தான் சொன்னேனில்ல டேஷ்போர்ட்லருந்து டைரக்ட்டா வரணும் 6 மணிக்கு

  பதிலளிநீக்கு
 15. பூரி ஆக்கிப் பார்த்தேன். தொடர்வரிகள் இடித்ததால் இட்லியாகவே விட்டு விட்டேன் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 16. அண்ணா செம காமெடி இன்னக்கு கீதா ரெங்கன் பழைய போஸ்டில் கமெண்ட்டிங் :)
  மூச்சிரைக்க ஓடிவந்தேன்//

  ஹா ஹா ஹா ஹா ஆமாம் ஏஞ்சல் ...நேத்து எல்லாம் வெளிய இருந்தேன் புகுந்த வீட்டு.உறவினரின் வருகையால்...இன்றும் பெரும்பாலும் அப்படித்தான்...வெளிநாட்டவர்கள் இல்லையா ஸோ அவங்க இங்க வரும் போதுதானே அவங்களோடு நேரம் செலவழிக்க முடியும்..

  பதிலளிநீக்கு
 17. நான் போட்டிக்கெல்லாம் நிக்கலை..ப்பா!..

  ரெண்டு பேருமே 6.01...

  இடையில ஒரு நிமிஷத்த காணோம்..
  இது கண்டிப்பா வெளி நாட்டு சதி தான்..

  பதிலளிநீக்கு
 18. ஏஞ்சல் டேஷ் போர்டிலிருந்து பல சமயம் டைரக்டா வர முடியலை. அப்புறம் அப்படியே வந்தாலும் முதலில் வர முடியலை...இங்குள்ள இணைய வேகத்தினால்..இருக்கலாம்..

  கீதா

  பதிலளிநீக்கு
 19. ம்ம்ம்ம்ம் கதை நல்லா இருந்தது. பசியின் உணர்வு நன்றாக எடுத்துச் சொல்லி இருக்கீங்க. படிக்கும்போதே பாவம் என்னும் உணர்வு மனசில் வருது. பிரியாணிப் பொட்டலத்தைத் தான் அந்த அம்மா கொடுத்துட்டாங்களே, மறுபடியும் ஏன் நாய்களைத் துரத்திட்டே போறாங்க. நிறைய பிரியாணிப் பொட்டலங்களோ?

  பதிலளிநீக்கு
 20. கவுஜ எல்லாம் ஜூப்பரு. தோசை வாங்கியாச்சா இல்லையா?

  பதிலளிநீக்கு
 21. காஃபி இன்னும் வரலே..

  அதுக்குள்ளே என்ன வெற்றீ//

  ஹா ஹா ஹா ஹா அதானே!! அப்படிப் போடுங்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
 22. கீதா அக்கா... இரண்டு பிரியாணிப் பொட்டலங்கள் கையில் என்று நான் எழுதவில்லையா? மன்னிச்சுக்கோங்க. மனசில் நினைச்சதோட சரி போலிருக்கு. கதையைப் பாராட்டியதற்கு நன்றிகள்.

  கவுஜ பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. சதி, சதி, திட்டமிட்ட சதி! என்னை இங்கே உட்கார்த்தி வைச்சுட்டு ஶ்ரீராம் ரகசியமா வெளியிட்டு விட்டார். நானும் உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்துட்டு டாஷ்போர்டுக்கும் இந்தப் பதிவுக்குமா ஓட்டமா ஓடி, மூச்சிரைக்குது! அதுக்குள்ளே போட்டியாளர்கள் வரிசையா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 24. //ரெண்டு பேருமே 6.01...

  இடையில ஒரு நிமிஷத்த காணோம்..
  இது கண்டிப்பா வெளி நாட்டு சதி தான்.. ​//

  துரை செல்வராஜூ ஸார்..
  இந்திய சதி அல்ல. ஷெட்யூல் செய்யப்பட்டிருந்தது. ​ வேறெங்கோ நேரம் நின்று விட்டது!!!!

  பதிலளிநீக்கு
 25. கீதா அக்கா.. ​ டாஷ்போர்டு​லிருந்து வருவதை விட பிளாக்கை ரெப்ரெஷ் செய்தாலே போதுமே..​

  பதிலளிநீக்கு
 26. பசி கதை மனதை சுட்டது :(
  ஒரு நட்பு சீரடி சாய்பாபா சொன்னதாக இந்த பசியால் கையேந்துபவர் பற்றி ஒரு சம்பவம் சொன்னாங்க .அதிலேருந்து எதையும் வீண் செய்வதில்லை

  பதிலளிநீக்கு
 27. நாலுகால் செல்லங்களை எங்கே பார்த்தாலும் முந்தி பிஸ்கட் வாங்கி தருவேன் ஊரில் .இப்போ வசிக்கும் நாட்டில் பசின்னு யாரும் கேட்டதில்லை ..கொஞ்சம் காய்ந்த காய்கறிகளை கடைமுன்னே வச்சிடுவாங்க ஏழைகள் எடுத்துப்பாங்க

  பதிலளிநீக்கு
 28. @ஸ்ரீராம் :) நானா டாஷ்போர்டில் இருந்தே முதலில் வந்தேன் :)ஹாஹ்ஹா

  பதிலளிநீக்கு
 29. கதை பற்றிய அபிப்ராயத்துக்கு நன்றி ஏஞ்சல். அளவாக செய்தால் வீணாகாது என்று சொல்லலாம்.

  //கொஞ்சம் காய்ந்த காய்கறிகளை கடைமுன்னே வச்சிடுவாங்க ஏழைகள் எடுத்துப்பாங்க //

  இப்போ தமிழ்நாட்டில் கூட அன்புச்சுவர் என்று தொடங்குகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 30. //டாஷ்போர்டில் இருந்தே முதலில் வந்தேன் :)ஹாஹ்ஹா //

  அது கொஞ்சம் சிரமம்தான்! அரை நிமிடம், ஒரு நிமிடத்தைச் சாப்பிட்டு விடுமே...

  பதிலளிநீக்கு
 31. @கீதாக்கா நான் நினைச்சேன் இன்னிக்கு நீங்க செகண்ட் வருவீங்க ஸ்ரீராம் கிட்ட சொல்லி என் கமெண்டை தூக்கிட்டு உங்களை first ஆக்க :) ஆனா துரை அண்ணா வந்திட்டார்

  பதிலளிநீக்கு
 32. @ஸ்ரீராம் ..//அளவாக செய்தால் வீணாகாது என்று சொல்லலாம். //
  ஆமா அதெல்லாம் கத்துக்கவே பல வருஷமாகிடுச்சி :)

  பதிலளிநீக்கு
 33. //காலில் மிதிபடும்
  வெம்மையில் தெரிகிறது.//
  why வெம்மை ..ஸ்லிப்பர்ஸ் போடல்லையா :)

  பதிலளிநீக்கு
 34. //@கீதாக்கா நான் நினைச்சேன் இன்னிக்கு நீங்க செகண்ட் வருவீங்க ஸ்ரீராம் கிட்ட சொல்லி என் கமெண்டை தூக்கிட்டு//

  கீதா அக்கா இப்பவும் இவ்வளவு உற்சாகமா நம்மைப் போன்ற இளையவர்கள் மத்தியில் போட்டி போடுவது சந்தோஷமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 35. ஏஞ்சல்

  //ஆமா அதெல்லாம் கத்துக்கவே பல வருஷமாகிடுச்சி :)//

  நாங்க மட்டும் என்னவாம்? அப்பாவும் அப்பப்போ கனக்குத் தப்பிடும்!

  //why வெம்மை ..ஸ்லிப்பர்ஸ் போடல்லையா :) //

  இது நல்ல கேள்வி.. இப்படி எல்லாம் கேள்வி கேக்கப் படாது! இதை எப்படி சமாளிக்க! கவிதை (மாதிரி ஒன்று) எழுதினா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது!

  பதிலளிநீக்கு
 36. வருகைக்கும் ரசித்த கருத்துக்கும் நன்றி பாரதி.

  பதிலளிநீக்கு
 37. ஶ்ரீராம், இங்கேயும் தான் இருந்தேன். அதே சமயம் டாஷ்போர்டையும் திறந்து வைச்சிருந்தேன். என்னோட பதிவையும். 2,3 டாப்கள் திறந்து வைச்சிருந்தேன். இங்கே ஒரு செகண்ட் அப்படிப் போகிறதுக்குள்ளே வெளியிட்டுட்டீங்க. சதி இல்லாமல் என்ன?

  பதிலளிநீக்கு
 38. //கீதா அக்கா இப்பவும் இவ்வளவு உற்சாகமா நம்மைப் போன்ற இளையவர்கள் மத்தியில் போட்டி போடுவது சந்தோஷமா இருக்கு.

  அநியாயமா இல்லையோ? நான் இளைஞி தான், இளைஞி தான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 39. ஹாஹ்ஹா :) சரி தூங்கிட்டு நாளைக்கு வரேன் :) எங்களுக்கு ஸ்கூல் ஹாலிடேஸ் அதான் ஜாலியா நிதானமா எழுப்புவோம் .எல்லாருக்கும் டாட்டா பை பை :)

  பதிலளிநீக்கு
 40. //@கீதாக்கா நான் நினைச்சேன் இன்னிக்கு நீங்க செகண்ட் வருவீங்க ஸ்ரீராம் கிட்ட சொல்லி என் கமெண்டை தூக்கிட்டு உங்களை first ஆக்க :) ஆனா துரை அண்ணா வந்திட்டார் // ம்ஹூம், அதெல்லாம் வேணாம், நானாக முதல்லே வந்தால் தான் நல்லா இருக்கும். இந்த மாதிரி வந்தால் அதிலே என்னோட தனித்தன்மை என்ன இருக்கு?

  பதிலளிநீக்கு
 41. கீதா அக்கா.. நான் இதுவரை டாஷ்போர்ட மூலம் எங்கும் சென்றதில்லை. எனவே அதுபற்றி எனக்கு விவரம் தெரியாது. அங்கேயும் ரெப்ரெஷ் செய்யணும் இல்லையோ? நான் ஷெட்யூல் செய்து வைத்து விடுவேன். அப்பப்போ வெளியிடறது இல்லை!

  //நான் இளைஞி தான், இளைஞி தான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //

  இதை.... இதை.... இதைத்தான் எதிரார்த்தேன்!

  பதிலளிநீக்கு
 42. கீதாக்கா...

  //அதெல்லாம் வேணாம், நானாக முதல்லே வந்தால் தான் நல்லா இருக்கும். இந்த மாதிரி வந்தால் அதிலே என்னோட தனித்தன்மை என்ன இருக்கு? //

  ஆஹா.. அக்கான்னா அக்காதான்.

  பதிலளிநீக்கு
 43. பாட்டு - ஓகே. கவிதை? நான் அந்த விளையாட்டுக்கு வரல!

  கதை - மனதைத் தொட்டது. இப்படி நிறைய ஜீவன்கள் உண்ண உணவில்லாமல் தவிக்க, பலர் இருக்கும் உணவை வீணடித்துக் கொண்டு.....

  பதிலளிநீக்கு
 44. //பாட்டு ஓகே// - நன்றி.

  //கவிதை? //

  ஓகே ஓகே புரியுது... புரியுது.. நமக்குள் இருக்கட்டும் விடுங்க!!

  //கதை - மனதைத் தொட்டது//

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 45. தோசை பாட்டு பொருத்தமான வரிகள்.

  பதிலளிநீக்கு
 46. நான் இன்று காலையில் ஆறு மணிக்கெல்லாம் ஆஜர்!..
  நேற்றைய பதிவில் இன்றைய வருகை சாட்சி..

  அப்புறம், தோசை வாங்கப் போய் இட்லி வாங்கிய - ....

  ஆமாம் .. ரெண்டுக்கும் அடையாளம் தெரியாத அளவுக்கு என்ன ஆச்சு!?..

  பதிலளிநீக்கு
 47. //ஆமாம் .. ரெண்டுக்கும் அடையாளம் தெரியாத அளவுக்கு என்ன ஆச்சு!?.. ​//

  அது கிடைக்கவில்லை. இதுதான் கிடைத்தது என்று பாடுகிறார் பாடுநாயகன்!​

  பதிலளிநீக்கு
 48. ///சுடச்சுட! ஹா.... ஹா... ஹா... எசப்பாட்டு பாட ஏகாந்தன் ஸார் ரெடியா?!//

  ஏதோ வந்தது கொஞ்சம். எங்கள் ப்ளாகே தஞ்சம் :

  இம்மாம் பெரிய உலகை
  இறைவன் படைச்சுப்போட்டாரா
  காவலுக்குன்னு ரெண்டு பேர
  காலத்துக்கும் டூட்டில வச்சாரு
  பகல்லப் பாக்க சூரியன்
  ராத்திரின்னா சந்திரன்
  மறுபேச்சுன்னு எதுவுமில்ல
  மாத்தி எதயும் கேக்கல
  மனசில வஞ்சன இல்லவே இல்ல
  மாறி மாறிப் பாத்துக்கிட்டாங்க
  மாண்பு குலையாம காத்துக்கிட்டாங்க

  கடவுளெனும் மொதலாளி
  கலங்கம் மனசில இல்லாம
  காலத்துக்கும் வண்டி ஓடணும்னு
  கணக்குப் பாத்துத்தான் வச்சாரு..
  சூரியன்னா வெயிலு
  சந்திரன்னா குளிர்ச்சி
  சூரியன்னா டூட்டி லைட்
  சந்திரன்னா நைட் லாம்ப்
  மனுசனுக்கு இதெல்லாம் புரியறதில்லே
  மட்டிப்பய வெட்டிப்பேச்ச விடுறதில்லே

  **

  சிறுகதை ஒன்னு இருக்கா? பிற்பாடு வர்றேன்..

  பதிலளிநீக்கு
 49. //மறுபேச்சுன்னு எதுவுமில்ல
  மாத்தி எதயும் கேக்கல
  மனசில வஞ்சன இல்லவே இல்ல
  மாறி மாறிப் பாத்துக்கிட்டாங்க
  மாண்பு குலையாம காத்துக்கிட்டாங்க​//

  ஸூப்பர் ஏகாந்தன் ஸார்.​

  பதிலளிநீக்கு
 50. /கலங்கம் மனசில இல்லாம​//

  அது களங்கம் என்று வரணுமோ?

  பதிலளிநீக்கு
 51. //மனுசனுக்கு இதெல்லாம் புரியறதில்லே
  மட்டிப்பய வெட்டிப்பேச்ச விடுறதில்லே​//

  ஹா... ஹா... ஹா... மனுஷனுக்கு நல்லதா நடந்ததைவிட, நல்லதல்லாது நடந்ததுதான் நினைவில் நிற்கிறது... மனித பலவீனம்!

  சூப்பர் ஏகாந்தன் ஸார்.​

  பதிலளிநீக்கு
 52. இவனுடைய பசி தீர்ந்தாலும்
  அந்த வயதான தம்பதியருக்குத் தீர்ந்ததாகத் தெரியவில்லை..

  இந்தப் பசி தீர்ந்தால் இன்னொன்று.. அதற்கப்புறம் வேறொன்று..

  பசி தீர்ந்ததாக சரித்திரம் இல்லை!..

  இருந்தாலும், தங்களது கைவண்ணம் அருமை..

  பதிலளிநீக்கு
 53. >>> //மனுசனுக்கு இதெல்லாம் புரியறதில்லே
  மட்டிப்பய வெட்டிப்பேச்ச விடுறதில்லே​//<<<

  ஆஹா!..

  பதிலளிநீக்கு
 54. @ ஸ்ரீராம்:
  மேலே அந்தக் கவிதையை, உங்கள் கவிதைக்குப் பதில் கவிதையாக நினைத்துத்தான்
  விளையாட்டாக ஆரம்பித்தேன். அது தன்பாட்டுக்கு ஓடி, இப்படி வந்து நிற்கிறது !

  இதனை ஒரு தனிக்கவிதையாகவே பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 55. @ஸ்ரீராம்:

  மன்னிக்கவும். அது ‘களங்கம்’ என்றே வரவேண்டும். டைப்போ ஆகிவிட்டது!

  பதிலளிநீக்கு
 56. நன்றி துரை செல்வராஜூ ஸார்.. தன் பசியை உலகம் மதிக்கவில்லை என்று கோபப்படும், ஆதங்கப்படும் மனிதன் தனது பசி தீர்ந்ததும் அவனும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாகி விடுகிறான் என்கிற ஒரு வரியை நீட்டியிருக்கிறேன்! அதை நெருங்கியமைக்கு நன்றி.

  //இந்தப் பசி தீர்ந்தால் இன்னொன்று.. அதற்கப்புறம் வேறொன்று..

  பசி தீர்ந்ததாக சரித்திரம் இல்லை!..​//

  இது இன்னொரு பாதை, இன்னொரு கரு.

  பதிலளிநீக்கு
 57. ஏகாந்தன் ஸார்..

  //அது தன்பாட்டுக்கு ஓடி, இப்படி வந்து நிற்கிறது ! ​ ​இதனை ஒரு தனிக்கவிதையாகவே பார்க்கவும். ​//

  ஆம். தனித்து சிறப்பாக நிற்கிறது.​

  பதிலளிநீக்கு
 58. /மன்னிக்கவும். அது ‘களங்கம்’ என்றே வரவேண்டும். டைப்போ ஆகிவிட்டது! ​//

  கலக்கம் என்று கூட யோசித்துப் பார்த்தேன் ஏகாந்தன் ஸார்.​

  பதிலளிநீக்கு
 59. அந்த வயதான ஜோடி பசியுடன் அங்கே அமர்ந்திருந்தது. - கதை படித்துவிட்டு மனதில் வெறுமை சூழ்ந்துகொண்டது. ரமலான் மாதத்தில், இரவு உணவு உண்ணுவதற்கு முன்னால் (காலை 4 மணியிலிருந்து ஒன்றும் சாப்பிடமாட்டார்கள்), வீட்டின் வெளியே வந்து இரண்டு பக்கமும் பார்த்து, யாராவது பசியோடிருக்கிறார்களா என்று பார்க்கவும், அப்படி இருந்தால் அவர்களுக்குப் பசியாறவேண்டும் என்பது இறைத்தூதர் நபியின் மொழி என்று படித்த ஞாபகம் வந்தது. எத்தனைமுறை எல்லோரும் மற்றவர்கள் பசியாறிவிட்டார்களா என்பதை மனதில் இருத்தாமல் கடந்துவிடுகிறோம். எவ்வளவு உணவை வீணாக்குகிறோம். மிக நல்ல கதை ஸ்ரீராம். பாராட்டுக்கள்.

  அதிசயமாக, உங்கள் கவிதையையும் வாசித்தேன். வெயில் வழிந்தோடுவதையும், கோபத்தினால் தரையைச் சுட்டெரிப்பதையும் நன்றாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள். நன்றாக இருந்தது.

  சீரியசான பதிவில், முதலில் கொடுத்த பாடல்-Sync ஆகவில்லை. பல முறை கேட்டு Boreஅடித்த வெர்ஷன்.

  பதிலளிநீக்கு
 60. நன்றி நெல்லைத்தமிழன். சிறு இடைவெளிக்குப்பின் விளக்க விமர்சனம். ரமலான் மாதத்தின் அனுபவங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.


  //அதிசயமாக, உங்கள் கவிதையையும் வாசித்தேன்//

  அப்போ இத்தனை நாள் வாசித்ததே இல்லையா? அடக்கடவுளே!

  //சீரியசான பதிவில்//
  அப்படி நான் நினைக்கவில்லை. கதம்பமாகத்தான் கொடுக்க நினைத்தேன்.

  //பல முறை கேட்டு Boreஅடித்த வெர்ஷன். //

  ஏற்கெனவே கொடுத்து விட்டேனோ? மறந்து விடுகிறது நெல்லை! ஸாரி!

  பதிலளிநீக்கு
 61. ' காற்று வாங்கப்போனேன்' பாட்டு ஸ்டைலில் ' தோசை வாங்கப்போனேன் கவிதை!! அருமை! சிரிப்பை அடக்க முடியவில்லை!!
  கதையைப்படித்து பின்னர் வருகிறேன்!

  பதிலளிநீக்கு
 62. இட்லி வாங்கப் போனேன் - பெரும்
  தோசையாகத் தந்தார்
  என்னவாச்சு என்றேன் அது ராமசேரி என்றார் - நான் இட்லி வாங்கப் போனேன்

  இதுகூட உங்க பாட்டு மாதிரி சரியா வருதோ?

  பதிலளிநீக்கு
 63. ஸ்ரீராம் - ஏற்கெனவே கொடுத்து விட்டேனோ? மறந்து விடுகிறது நெல்லை! ஸாரி! - இந்த முதல் 4 வரிகள் பல வருடங்களுக்கு முன்னாலேயே கேட்டிருக்கேன் (ஒருவேளை லியோனி பட்டிமன்றப் பதிவுகளில் இருக்குமோ? ஆம் என நினைக்கிறேன்).

  பதிலளிநீக்கு
 64. ஏகாந்தன் பாட்டில் உள்ள அர்த்தம் அருமை! அநாயாசமாக வருகிறது கவிதை எல்லோருக்கும்! அதைப் பார்த்து ஆச்சரியத்துடன் உட்கார்ந்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 65. Thank you for sharing the good information ... Stay tuned to us for more information Tamilnadu Politics

  பதிலளிநீக்கு
 66. @நெல்லைத்தமிழன் ..

  :)
  நானே என்னோட ரெசிப்பியை மறந்தாலும் நீங்களும் மதுரை தமிழனும் மறக்கமாட்டீங்க போலிருக்கே :)

  பதிலளிநீக்கு
 67. இரண்டு சட்னி வேண்டும், சர்வரிடம் கேட்டேன் என்ற உல்டா பாடல் நினைவுக்கு வந்தது!!
  கவிதை மார்கழிப் பனியில் சுட்டது! :))
  கதை கனம்...

  பதிலளிநீக்கு
 68. @PaperCrafts Angel அது ஒரு fusion recipes ஆச்சே அதை எளிதில் மறந்துவிட முடியுமா என்ன?

  பதிலளிநீக்கு
 69. ஸ்ரீராம் பாடல் வரிகளில் தோசை வாங்கப் போய் வாங்கி வந்த இட்லி சுவையாகவே இருக்கிறது!

  காலில் பட்ட வெம்மையும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.

  கதை பசியின் கொடுமையை அழகாகச் சொல்லிட்டீங்க ஆனால் ஏன் தலைப்பு வெயில்..பசியைப் பற்றியே சொல்லிட்டு...தலைப்பும் பசி என்ற அர்த்தத்தில் வைத்திருக்கலாமோ....

  கீதா

  பதிலளிநீக்கு
 70. எனக்கு திரை இசைப் பாடல்களின் மெட்டுக்குப் பாடல் எழுதும் வழக்கமிருந்தது இப்போது இல்லை பசி பற்றி ஒருகட்டுரை எழுதீருந்தேன் சுட்டி இதோ படித்துப் பாருங்களேன்
  http://gmbat1649.blogspot.com/2011/11/blog-post.html

  பதிலளிநீக்கு
 71. பசியின் உக்கிரத்தைக் காட்டிச் சுடுகிறது கதை.

  மனிதன் எதனையும் கண்டுபிடிக்கலாம். காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். எதையாவது தினம் தொப்பைக்குள் தள்ளாவிட்டால், கண்ணிருள்வதையும், கால் சோர்வதையும் தடுக்கமட்டும் முடியாது!

  பதிலளிநீக்கு
 72. வேலை இல்லாத இளைஞனின் பசி தீர்ந்தது. உபகாரம் செய்ததால்.வயதானதம்பதிகளின் பசி எந்த ரகமோ. எப்படித் தீருமோ. பசியின் கொடுமை. கதை மனதில் உருக்கத்தை உண்டு பண்ணிவிட்டது. அன்புடன்

  பதிலளிநீக்கு
 73. இன்னிக்கு நிறைய பேர் கண் விழிச்சு இருக்காங்க :) ஆனாலும் நானா விடமாட்டேன் :)

  பதிலளிநீக்கு
 74. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 75. நன்றி மனோ சாமிநாதன் மேடம். கதை படித்தீர்களா?

  பதிலளிநீக்கு


 76. //இதுகூட உங்க பாட்டு மாதிரி சரியா வருதோ?//

  ம்ம்ம்.... வருகிறது நெல்லை...!

  பதிலளிநீக்கு
 77. // ஒருவேளை லியோனி பட்டிமன்றப் பதிவுகளில் இருக்குமோ? ஆம் என நினைக்கிறேன்). //
  மை காட்.... நெல்லை... அவர் சொன்னதை எடுத்து நான் போட்டிருக்கிறேன் என்கிறீர்களா? இல்லை நெல்லை. இது நான் எழுதியது.

  பதிலளிநீக்கு
 78. வாங்க கீதாக்கா....

  //ஏகாந்தன் பாட்டில் உள்ள அர்த்தம் அருமை! //

  உண்மை. அதை யாரும் குறிப்பிடவில்லையே என்று பார்த்தேன் (துரை செல்வராஜூ ஸார் தவிர)

  பதிலளிநீக்கு
 79. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

  பதிலளிநீக்கு
 80. வாங்க கீதா...

  //ஆனால் ஏன் தலைப்பு வெயில்..பசியைப் பற்றியே சொல்லிட்டு...தலைப்பும் பசி என்ற அர்த்தத்தில் வைத்திருக்கலாமோ....//

  ஏகாந்தன் ஸார் இதற்கு பதில் சொல்லி இருக்கார். வெயில் தரும் அயர்ச்சியும் வெம்மையும்....

  பதிலளிநீக்கு
 81. வாங்க ஜி எம் பி ஸார்... சுட்டிக்குச் சென்று பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 82. மீள்வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் நன்றி ஏகாந்தன் ஸார்.

  பதிலளிநீக்கு
 83. வாங்க ஏஞ்சல்... துண்டு போட்டு காத்திருக்கீங்க! எல்லோரும் கோவிலுக்குப் போயிருப்பாங்க...

  பதிலளிநீக்கு
 84. உங்கள் கவிதை, கதை இரண்டுமே சூப்பர்.
  டிசம்பரில் வெய்யில். அதுவும் நன்றாக இருக்கிறது.

  பசிக்கு முன்னால் எதுவும் நிற்காது.
  தன் பசிக்குப் பிரியாணி சாப்பிட்டவன்,
  அந்த வயோதிகர்களுக்குப்
  பத்துரூபாயைக் கொடுத்திருக்கலாம்.
  காலக் கொடூரம்.
  தனக்கு மிஞ்சி தான் தானம் என்று சொல்கிறானோ.
  இங்கே இந்தக் குளிரில் ரோட்டோரம் சிலர்
  கழுத்தில் மாட்டிய பதாகையுடன் நிற்பார்கள். அவர்களுக்குக் கொடுப்பதற்கென்றே பெண்ணூ
  ம்
  மாக்டி MC DI COUPAN 5 டாலர் அளவுக்குச் சாப்பிடக் கிடைக்குமாறு
  கொடுப்பாள்.
  அதைத்தவிர ஷெல்டர்ஸ் உண்டு.
  பசிக்கொடுமை பெருங்கொடுமை.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 85. அருமையான கதை. பசி குறித்த சிந்தனைகள் மற்றும் நிகழும் சம்பவங்களின் விவரிப்புகளில் ஆழ்ந்த அவதானிப்பு வெளிப்படுகிறது. கதையை முடித்த விதமும் நன்று.

  வெய்யில் கவிதைக்கும் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 86. பாட்டு நல்ல பாட்டு, ஆனா எனக்கு என்னமோ தெரியல்ல எம் ஜி ஆர் ஐப் பார்த்தாலே மூட் ஓஒஃப் ஆகிடும் ஹாஅ ஹா ஹா.. பிடிப்பதில்லை :).

  ///தரையைத்
  தாண்ட முடியாத
  சூரியனின் கோபம்
  காலில் மிதிபடும்
  வெம்மையில் தெரிகிறது.//

  ஆஹா அருமையான கற்பனை.. வாழ்க கவிஞர் ஸ்ரீராம்ம்ம்ம்... இதை நான் அன்று பார்க்க முடியாமல் போச்சே:).. சுடச்சுடக் கொமெண்ட்ஸ் போட்டிருப்பேன்:)..

  பதிலளிநீக்கு
 87. ///"தம்பி.. எதுக்குக் காத்திருக்கீய?"
  "சிறுகதை பற்றிய பின்னூட்டங்களுக்குத்தான்ண்ணா"
  ///
  ஹா ஹா ஹா இது ஸ்ரீராம் எழுதிய கதையோ.. அஞ்சு பக்கம் வெயில் எனப்போட்டு லிங் குடுத்தபோது நான் உங்கள் சனிக்கிழமைப் பதிவில் ஒன்றாக்கும் என்றுதான் நினைத்திருந்தேன்.. கதை நன்றாகத்தான் இருக்கிறது.. கே வா போ பகுதிக்கு அனுப்பியிருக்கலாமே ஸ்ரீராம்:))..

  பசி என்றதும் பபபபபபழைய பசி ப்படம் பார்க்கோணும் போல ஆவல் வருகிறது..

  பதிலளிநீக்கு
 88. //அங்கேயே அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்தவன் நொடிகளில் காலி செய்தான். பத்து ரூபாய்க்கு தேநீர் ஒன்றைக் குடித்தவன் பஸ்ஸ்டாப்பைத் தாண்டி நடந்தபோது.. //

  இவ்வளவு தூரம் இந்தக் கதையை நீட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. எதைச் சொல்லி கதையை நடத்திச் செல்கிறோமோ, அதற்கு ஒரு முடிவு கொடுக்காமல், முடிவைச் சொல்லாமல் சொல்லியோ, வாசகர் எதிர்பார்ப்புக்கு விட்டோ முடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அது தான் இவ்வளவு எழுதியதற்கான பலன். எழுத்தாளனின் வேலை எழுத ஆரம்பித்ததை சாங்கோபாங்கமாக முடித்து வைப்பதும் இல்லை. எழுதியதை தன் கற்பனையில் முடித்துக் கொள்ள இருக்கவே இருக்கிறான் வாசகன்.

  அப்படிப் பார்த்தால் இந்தக் கதையை எந்த இடத்தில் முடித்திருக்கலாம் என்று தேடிப் பார்த்தேன். அஞ்சு ரூபா கைக்கு வந்து சேர்ந்த இடத்திலா?.. ஊஹூம்.. புரிபடவில்லை. முடிப்பதிலேயே குறியாய் நீளும் கதையில் வெட்டி சீர் செய்ய சரியான இடம் கிடைக்கவில்லை.

  வெட்டறதை வெட்டி, சீர் செய்ய வேண்டியதை சீர் செய்து, நுழைக்க வேண்டியதை நுழைத்து --

  நீங்களே எடிட் பண்ணிப் பார்த்தால் தான் கச்சிதமாக அந்த வேலை முடியும்.

  பதிலளிநீக்கு
 89. இரண்டு கவிதை முயற்சிகளுமே நன்றாய்த் தான் இருக்கின்றன.

  தோசை வாங்கப் போனேன் வாலியே சிரிக்கும் அளவுக்கு ஜோர் என்றால், வெயிலின் படப்பிடிப்பு எதார்த்தம். மூன்றெழுத்துக்காரரின் கையசைப்பு தோற்றம் முதல் கவிதைக்கு முதுகெலும்பு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 90. நன்றி ஜீவி ஸார். கவிதையை விட கதைக்குத்தான் உங்கள் கருத்தை எதிர்பார்த்திருந்தேன்.

  கதையில் நான் சொல்ல நினைத்தது அடுத்தவர் பசியை உலகம் உணர்வது இல்லை. பசியால் அவதிப்பட்டவனே கூட உணவு கிடைத்ததும் கூட்டத்தில் ஒருவனாகி விடுகிறான் என்பதே.

  நன்றி, உங்கள் கருத்துக்கு. காத்திருந்தது வீண் போகவில்லை.

  பதிலளிநீக்கு
 91. அதிரா... கதையை கேவாபோ வுக்கு அனுப்புவதைவிட, வியாழனில் கேட்காமல் போட்டுவிடுவதே உத்தமம் என்று தோன்றியது!

  பதிலளிநீக்கு
 92. நன்றி வல்லிம்மா.

  நன்றி நண்பர் கலியபெருமாள், புதுச்சேரி.

  பதிலளிநீக்கு
 93. //கதையில் நான் சொல்ல நினைத்தது அடுத்தவர் பசியை உலகம் உணர்வது இல்லை. பசியால் அவதிப்பட்டவனே கூட உணவு கிடைத்ததும் கூட்டத்தில் ஒருவனாகி விடுகிறான் என்பதே.//

  அதுவும் சரியே. 11-வது பாராவில் அந்தப் பெரியவர்களின் அறிமுகம். இன்னும் நாலு பாரா தாண்டி அவர்களைப் பற்றி இன்னொரு குறிப்பு கொடுத்திருக்கலாமோ?..

  பதிலளிநீக்கு
 94. அப்போ கதை இன்னும் ஒரு பாரா நீண்டு விடுமே!

  :)))

  பதிலளிநீக்கு
 95. ஆங்.. இப்படி முடித்தால், என்ன?

  அங்கேயே அமர்ந்து பிரியாணி பொட்டலத்தைப் பிரிக்கும் பொழுது அந்த வயதான தம்பதிகளின் பரிதாப முகம் அவன் மனசில் நிழலாடியது. கையில் இருக்கும் பத்து ரூபாயையாவது அந்தப் பெரியவர்களுக்குத் தந்து விடலாம் என்று ஓடிய எண்ணத்தைப் புறக்கணித்தான்.

  பிரியாணி சாப்பிட்டவனுக்கு டீ குடிக்காமல் இருக்க முடியவில்லை. டீ ஆசையும் நிறைவேறியது.

  பஸ் ஸ்டாப்பைத் தாண்டி நடந்த பொழுது அனிச்சையாக பார்வை திரும்பியது.

  அந்த வயதான ஜோடியை அங்கே காணாதது ஆச்சரியமாய் இல்லை. 'அவர்களுக்கும் யாராவது கிடைத்திருப்பார்களோ?'..

  கிடைத்திருக்க வேண்டும் என்றே மனம் விரும்பியது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!