செவ்வாய், 19 டிசம்பர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : குடிகாரன் மனைவி - பரிவை சே. குமார்.



     இன்றைய கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் மனசு குமார் எழுதிய சிறுகதை வெளியாகிறது. 



=====================================================================


குடிகாரன் மனைவி
பரிவை சே. குமார்


     சாரதா மீன் அலசிக் கொண்டிருந்த போது அவ்வழியே வண்டியில் போன சொக்கன், "ஏக்கோவ்... உம்புருசன் சரக்கடிச்சிட்டு நம்ம பெருமாளு கடயில்ல... பெருமாளு கட... அதாண்ட விழுந்து கெடக்கார்...என்று கத்திக் கொண்டு போனான்.

     'சனியம் புடிச்சவனுக்கு வேற வேல... சரக்கடிச்சிட்டு விழுவுற நாயி நடுரோட்டுல கீட்டுல விழுந்தா காருக்காரனோ... லாரிக்காரனோ அடிச்சித் தூக்கிப் போட்டுட்டு போவானுல்ல... இதுவும் போயி சேந்திரும்.. நாங்களும் நிம்மதியா இருப்போம்... கெடந்து எந்திரிச்சி வரட்டும்...மனசுக்குள் அவனைத் திட்டியபடி வேக வேகமாக மீனை நறுக்ககையில் நறுக்கிக் கொண்டாள்.

     "ஆஆஆ.... ஸ்ஸ்ஸ்ஸ்.... எழவெடுத்த அருவாமன... இன்னும் பழவாமக் கெடந்துக்கிட்டு..." என அருவாமனையை தூக்கி வீசினாள். அது 'நங்'கென தூரத்தில் போய் விழுந்தது. கையை தண்ணீரில் கழுவி வாயில் வைத்துக் கொண்டாள்.

     சாரதா 'என்று அலறியதையும் அருவாமனை 'நங்என்று விழுந்ததையும் கேட்ட பெரியவள் கனகா வீட்டுக்குள் இருந்து  ஓடிவந்தாள்.

     "என்னம்மா ஆச்சு...?"

     "ம்.... கையில வெட்டிருச்சு..."

      "பாத்துப் பண்ணமாட்டியா...யாரு மேலயோ உள்ள கோவத்தை அருவாமனக்கிட்ட காட்டினா... நாந்தான் மீனலசித்தாறேன்னு சொன்னேனுல்ல... அதுக்குள்ள உனக்கென்ன அவசரம்...போ.. போயி... மொளகாத்தூளாச்சும் காபித்தூளாச்சும் வச்சிக்கட்டு..." என்றபடி அருவாமனையை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

     சாராத ஒன்றும் பேசாமல் வாய்க்குள் விரலை வைத்தபடி நகர, "அம்மோவ்... முத்த போயி அப்பாவை கூட்டியாரச் சொல்லு... அவரு அங்கன விழுந்து கெடக்கது யாருக்கு கேவலம்...நமக்குத்தானே..." என்றாள் மெல்ல.

     வாயிலிருந்து கையை எடுத்து சேலைத் தலைப்பால் அழுத்திப் பிடித்துக் கொண்டு, "நமக்கென்னடி கேவலம்... தெனந்தென விழுந்து கெடக்குற அந்த மனுசனுக்குத்தான் கேவலம்... போயி கூட்டியாந்துட்டாப்புல தொர சாயந்தரம் குடிக்க போகம இருக்கப் போவுதா...அதெல்லாம் அதுலயே சாகப் பொறந்ததுக... என்ன பண்றது காக்க வேண்டிய அரசு ஊத்திக் கொடுக்குது... வாழவேண்டிய நாம செத்துக்கிட்டு இருக்கோம்..." என்றாள்.

      "காசு வாங்கிட்டுத்தானே ஓட்டுப் போட்டிய... நல்ல அரசைத் தேர்ந்தெடுக்காத நாமளுந்தான் குத்தவாளி... அதை தெரிஞ்சிக்க.. சும்மா அரசியல் பேசிக்கிட்டு... நீ மொதல்ல கட்டுப் போடு... அவனப் போயி அப்பாவை தூக்கிட்டு வரச்சொல்லு..."

     "ஆமா... அவந்தானே... அவனெல்லம் எளந்தாரிப் பயடி... குடிச்சிப்புட்டு கெடக்க மனுசன போயி தூக்குவானா... அவனுக்கும் மானம்மருவாத இருக்கும்ல்ல... என்னது பிரா...பிராசு.. அது என்ன எழவுடி அது வருதுல்ல... நீங்கள்லாம் அடிக்கடி சொல்லுவியலே..."

     "அம்மா அது பிரஸ்டீஸ்....?"

     "ஆமா அதுதான்... அது அவனுக்கும் இருக்குமுல்ல... கட்டிக்கிட்ட பாவத்துக்கு நானே போய்த் தொலயிறேன்..."

     சாரதா பெருமாள் கடைக்கிட்ட போனபோது "வா சாரதா... உம்புருஷன் கெடக்கதைப் பாரு... நாங்கூட சோடாவெல்லாம் ஒடச்சி ஊத்திப் பாத்தேன்... ம்ஹூம்.... ஒண்ணும் முடியல... நம்ம சாதி சனம் வர்ற இடத்துல இப்புடிக் கெடந்தான்னா... ரெண்டு பொட்டப் புள்ளயவும் கட்டிக்கிட்டுப் போக எவன் வருவான்... கண்டிச்சி வய்யித்தா... பொண்டாட்டியால கண்டிக்க முடியாத புருசனுமா இருக்கான்..." என்றார்.

     "எங்கண்ணே... குடிச்சிப்புட்டு ரோட்டுல விழுகாம வீட்டுல வந்து விழுந்து கெடன்னு கூட சொல்லிட்டேன்.... ரெண்டு புள்ளக வெளஞ்சி நிக்கிதுகன்னு இந்தாளுக்குத் தெரியாதா..? பயலுகளும் இப்ப கர்புர்ன்னு நிக்கிறானுங்க... இது காலையிலயே தொடங்கிருது.... முடியலண்ணே... ஒருநா இல்லாட்டி ஒருநா நானும் எம்புள்ளைகளும் மருந்தக்குடிச்சிட்டு சாகப் போறோம்... அதுதான் நடக்கப் போவுது பாருங்க"  சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

     "ஏய் கழுத... என்ன பேசுறே...பேசாம நம்ம ராமசாமி அண்ணனுக்கிட்ட சொன்னா நாலு தட்டு தட்டிவிடும்..."

     "அட ஏண்ணே நீ வேற... அதெல்லாம் தட்டி... கேக்குற ஆளா இந்தாளு... இது மண்ட மண்ணுக்குள்ள போற வரக்கிம் திருந்தாது... சரி சோடாவுக்கு எவ்வளவு...?" என்றாள்.

     "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... போ...."

     "அட புடிண்ணே.... ஆனவெலயோ பூன வெலயோ உனக்கும் குடும்பம் இருக்குல்ல... இந்தா பிடி" என பத்துரூபாயை நீட்டினாள். சில சில்லறைக் காசை அவள் கையில் கொடுக்கவாங்கிக் கொண்டு கணவனருகில் சென்றாள்.

     வேஷ்டி விலகியிருக்கஉள்ளே போட்டிருந்த ஜட்டி தெரிந்தது... வாந்தி எடுத்து முகமெல்லாம் அப்பியிருக்கஅருகில் சென்றவளுக்கு அந்த நாற்றம் குடலைப் பிடிங்கியது. கடந்து சென்றோரெல்லாம் அவனை திட்டிக் கொண்டே சென்றனர். அவளுக்கு அழுகை பீரிட்டது.

     'நல்லவேளை மச்சான்.. இந்தாளு ஜட்டி போட்டுக்கிட்டு வந்து விழுந்து கிடக்கான்... இல்லேன்னா அன்னைக்கு கிருஷ்ணர் தெருவுல ஒருத்தன் படங்காட்டிக்கிட்டு  கிடந்தானே... அது மாதிரி ரோட்டுல போறவுகளுக்கு இலவச படம் காட்டியிருப்பான்..என்று பேசிச் சிரித்தபடி இருவர் சைக்கிளில் கடக்கவேகமாக அவனின் வேஷ்டியை சரி செய்தாள்.

     'பாவம்... இந்தப் புண்ணியவதி... இவனக்கட்டி நடுத்தெருவுல நிக்கிறா...என்றபடி கடந்தனர் இரண்டு பெண்கள். சாரதாவுக்கு பொங்கிக் கொண்டு அழுகை வந்தது. தன்னைக் கட்டுப்படுத்த முயற்சித்தாள்... ஆனால் அவளையும் மீறி கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.

     அவனை மல்லுக்கட்டி தூக்கிவேஷ்டியை இழுத்துச் சொருகி கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு நடக்கலானாள். அவனை இழுத்து நடப்பது பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஒரு வேகத்தோடு நடக்கலானாள். அவளின் நடை தள்ளாடியது... 'இப்ப குடிச்சிருக்கது... இந்தாளா... நானா...?'  அந்த நேரத்திலும் அவளுக்குள் இப்படித் தோன்ற அழுகையினூடே அவளுக்கு சிரிப்பு வருவது விரியும் உதட்டில் தெரிந்தது.

     'வீட்டுல பொம்பளங்க சரியா இருக்கமாட்டாளுங்க... அதுதான் ஆம்பளங்க குடிச்சிட்டு தெருவுல கிடக்கானுக...ஏதோ தத்துவத்தைப் பேசியது போல ஒரு பெருசு சத்தமாய்ப் பேசஇன்னொரு பெருசு அதை அமோதிப்பது போல ஆமாம் போட்டது. சாரதாவுக்கு சுள்ளென்று வந்தது.

     நடையை நிறுத்தி தோளில் சாய்ந்திருக்கும் புருஷனை நறுக்கென பிடித்துக் கொண்டு அந்தப் பெருசைப் பார்த்து  'யோவ் என்ன சொன்னே... வீட்ல பொம்பள சரியில்லயா.. வர்றீயா ஏ வீட்டுக்கு... பொம்பள சரியில்லயாமே பொம்பள... நீங்க குடிச்சிட்டு விழுந்து கெடப்பீக... உங்கள கட்டுன பாவத்துக்கு நாங்க நடுரோட்டுல நின்னு நாயிம் பேயிம் பேசுறதக் கேக்கணும்... இன்னைக்கி நேத்தில்ல இருபத்தஞ்சு வருசமா இந்தாள இப்படிச் சுமக்குறேன்... அக்கா மவன் கல்யாணமான சரியாயிருவான்னு எங்கப்பன் கட்டி வச்சிட்டுப் பொயிட்டான்... வயசு காலத்துல குடிச்சுட்டு வந்து அடிப்பான்... உதைப்பான்... குடி வெறியோட என்ன இழுத்துப் போட்டு.... அதையும் தாங்கித்தான் நாலு புள்ளப் பெத்தேன்... ஒவ்வொரு புள்ள பொறக்கும் போதும் இனி திருந்துவான்... இனி திருந்துவான்னு நெனச்சி நெனச்சி... நாந்தாய்யா தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கேன்... ரெண்டு பொட்டப்புள்ளக கல்யாண வயசுல... அதுகளுக்கு அப்பன் ரோட்டுல கெடந்தா அசிங்கம்ன்னு போயி கூட்டிக்கிட்டு வான்னு அழுவுதுக... அதெல்லாம் தெரிஞ்சா இவன் குடிப்பானா..?" என்ற வினாவோடு பேச்சை நிறுத்தி அவர்களைப் பார்க்க பெருசுகள் தலை குனிந்து நின்றனர்.

     "சாரதா நீ போ... வெறும்பயலுக என்ன வேணுமின்னாலும் பேசுவானுங்க..." என்று பெருமாள் அதட்ட "இருங்கண்ணே... இன்னும் பேச வேண்டியது பாக்கியிருக்கு..." என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்...

     "நீங்க குடிக்க எதாவது ஒரு காரணம் வேணும்... அதுக்கு வீட்ல பொம்பள சரியில்ல... புள்ள சரியில்ல... அப்படின்னு ஏதாச்சும் சொல்லிக்க வேண்டியது... அதுவுமில்லன்னா மனசு சரியில்லன்னு சொல்லி குடிக்க வேண்டியது... அறிவுகெட்டவனுங்களா குடிச்சே சாங்கடான்னுதானே அரசாங்கம் வீதிக்கு ஒரு கட தெறந்திருக்கு... அதுல வாழ்க்கய தொலச்சிட்டு விதிய நொந்துக்கிட்டு வீதியில நிக்கிற பொம்பளங்க எம்புட்டுப் பேருன்னு உங்க அரசுக்கு தெரியுமாய்யா... ஒரு பிரியாணிக்கும் சாராயப் பாட்டிலுக்குந்தானே வேவாத வெயில்ல கெடந்து செத்தானுக... வாயிக்கி வந்ததெல்லாம் பேசாதீக... குடிகாரனோட பொண்டாட்டிகளுக்கும் சொல்லிமாளாது... புரிஞ்சிக்கங்க... நல்லநா... கெட்டநா... எதுவுமில்ல எங்களுக்கு... சந்தோசமா கோயிலுக்குப் போக... தல நெறய பூ வச்சிக்கிட்டு எல்லாரு மாதிரியும் புருசங் கூட சினிமாவுக்குப் போக... எதுவுமே எங்களுக்கு கொடுப்பின இல்ல... சாயங்காலமான சின்ன வயசுல மாட்டை தேடி அலஞ்ச மாதிரி எங்க விழுந்து கெடக்கானுங்கன்னு தேடி அலயிறதுதான் எங்க பொழப்பு... ஐயா பெரியவுகளே... நீங்க பெரிய மனுசங்க... மத்தவங்களை வாயார புகழாட்டியும் நெஞ்சுல குத்தாதீக..." என்றவள் மீண்டும் கணவனை இழுத்துக் கொண்டு நடந்தாள்.


*****




தமிழ்மணம்.

50 கருத்துகள்:

  1. காலை வணக்கம் துரை சகோ அண்ட் ஸ்ரீராம்...
    பல பிரச்சனைகளின் நடுவில் வந்துவிட்டது....!!! உங்கள் இன்றைய பதிவு...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தளம் திறப்பதற்கு இத்தனை நேரம் ஆயிற்று..

    பரிதவித்து விட்டேன்..

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் பிரச்சனை நேற்று இருந்தது இப்போது வருகிறது...பின்னர் என்ன ஆகுமோ...என் கணினி டாக்டரர் கொஞ்சம் பிஸி...பார்க்கிறேன் என்றிருக்கிறார். அது வரை ஓட்ட வேண்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. துரை சகோ ஸ்ரீராமினாலும் அவர் தளத்திற்கு வர முடியலை..அதான்.....நானும் காத்திருந்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் குமார் அவர்களது கதை என்றால் சொல்லவும் வேண்டுமோ..

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  6. இப்படித்தான் பல பெண்களின் நிலை...குடிகாரக் கணவனுடன் மல்லுக்கட்டி....ம்ம்ம்ம்

    மீண்டும் வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நேரில் கண்ட காட்சிகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன..

    குடியை அவன் விட்டாலும்
    குடி அவனை விடாது..

    பதிலளிநீக்கு
  8. குமார் அருமையான கதை குமார்...அப்பெண்ணின் உணர்வுகள்...பாவம்...ரொம்ப நல்லாருக்கு குமார்..

    கீதா

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் கீதா. தளம் கடைசி வியாழனன்றிலிருந்து மிகவும் படுத்துகிறது. அன்று முதல் முகநூல் லிங்கிலிருந்து வருவேன். அப்படியும் தமிழ்மணப் பட்டை கண்ணுக்குத் தெரியாது. சமயங்களில் தமிழ்மணத்தை ஏஞ்சல் தரும் லிங்க் வைத்து வாக்களித்து பதிவிலும் பகிர்ந்தேன்.

    ஏகாந்தன் ஸாரும் நேற்று மெயில் செய்து அவருக்கும் எங்கள் ப்ளாக் திறக்கவில்லை என்று சொல்லி இருந்தார்..

    பதிலளிநீக்கு
  11. இது கதையல்ல! பல பெண்களின் நடைமுறை வாழ்க்கை இதுதான்.

    அரசை குறை சொல்லி என்ன செய்ய ? நமக்கு அறிவு இருந்தால் நல்லவனுக்கு ஓட்டு போடுவோம்.

    நண்பர் சே.குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. ஒரு சராசரி ஏழைகக் குடும்ப வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியது போல இருந்தது சொல்லி சென்றவிதம் அருமை

    என்னடா தையை படிச்சு கருத்து சொல்றான்னி பாக்குறீங்களா கதை மிகப் பெரியதாக இல்லாமல் மிக சுருக்கமாக இருந்ததனால் படித்துவிட்டேன் கொஞ்சம் பெரிதாக இருந்தால் அப்புறம் வந்து படிக்கலாம என்ரு ஒடிவிடுவேன்

    பதிலளிநீக்கு
  13. ஏழைக் குடும்ப வாழ்க்கையை சிறப்பாகக் காட்டியிருக்கிறார். பேச்சு வழக்கை இயல்பாகக் கொண்டுவந்துள்ள கதையாசிரியருக்குப் பாராட்டுகள்.

    'குடி'க்கு அரசை எப்படி குறை சொல்லலாம்? அரசு என்ன 'இலவசமா'வா விற்குது? எல்லாக் கடையிலும் எலி பாஷாணம் விற்கிறார்கள். அதை வாங்கி எல்லோரும் சாப்பிட்டுப் போனமாதிரி தெரியலையே. மக்கள் திருந்தாம அரசைக் குறை சொல்லி என்ன பயன்?

    பதிலளிநீக்கு
  14. பாவம் புண்யவதி இவனைக் கட்டிகிட்டு நடுத்தெருவில் நிக்கரா. உண்மை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. அப்படியே காட்சிகள். அருமை.அன்புடன்

    பதிலளிநீக்கு
  16. குமார் ரொம்ப அழகா இயல்பா சொல்லியிருக்கீங்க. அதுவும் மண்ணின் மணத்தில். யதார்த்தம் சொட்டும் கதை. சாரதா போன்ற பெண்கள் பாவம். மக்களிடம் பொறுப்பு வரணும். அரசு வித்தால் விற்கட்டும். நம் மக்கள் அதை ஒதுக்கினால் அப்புறம் அரசு தானாகவே மூடிவிடும் பின்ன லாபம் இல்லைனா..

    அருமையாகச் சொல்லிச் சென்றிருக்கீங்க...வாழ்த்துகள், பாராட்டுகள்!!

    பதிலளிநீக்கு
  17. சராசரி ஏழைப் பெண்ணின் புலம்பல் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  18. கதையில் மண் மணக்கிறது. சொல்லாடல் நன்றாயிருக்கிறது. புருஷனே பிரச்சினையாகிப்போனால் பெண்தான் என் செய்வாள்? ஊர்வேறு சிரிக்கிறது விவஸ்தையில்லாமல்.

    தமிழ்நாட்டில் பிரச்சினை டாஸ்மாக்கோ, அரசோ அல்ல. இம்மாதிரி குடிகாரத் ’தமிளர்கள்’ ஆம்பிளைகளாக இல்லை. புருஷன் புருஷனாக இருக்க யோக்யதை இல்லாதபோது பொண்டாட்டிவேறு தேவைப்படுகிறது இவர்களுக்கு. எந்த அரசு ஆள்கிறது, எந்தக் கடை , எங்கே திறந்திருக்கிறது, அதில் என்ன விற்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நீ ஒரு ஆண்மகனா, ஒரு குடும்பத்தலைவனா, ஒரு பெண்ணோடும் குழந்தைகளோடும் வாழத் தகுதியானவனா என்பதே கேள்வி இங்கே. அந்தக் கேள்வியை யாரும் தமிழ்நாட்டில் கேட்பதில்லை. கேட்டால் அரசியல் செய்யமுடியாதே.. அரசியல் அல்லவா இங்கே முக்கியம்!

    பதிலளிநீக்கு
  19. ரொம்ப நல்லா உங்க ஸ்டைல்ல எழுதியிருக்கீங்க, குமார். ரொமப்வே யதார்த்தம். அதுவும் இப்ப இருக்கற சூழல்..

    இப்படி எத்தனைப் பெண்கள் இருக்காங்க. தமிழ்நாட்டுல சமீபத்துல கூடப் பல பெண்கள் ஆர்பாட்டம் பண்ணினாங்க...அப்புறம் என்னாச்சுனு தெரியலை.

    மனைவி சொன்னா கேட்டுடப் போறானா அந்த ஆளு..அவனுக்கு அந்த உணர்வு, பொறுப்பு எல்லாம் வேணுமே..இது மாதிரி ஆளுங்களுக்கு கவுன்சலிங்க் எல்லாம் கொடுத்து மறுவாழ்வு கொடுக்கும் மையங்கள் இருக்கு. சில மையங்கள் காசு வாங்கறாங்கதான்... ஆனால் அது எவ்வளவு தூரம் பயன் தரும் நும் தெரியலை. அதுல மறுவாழ்வு பெற்றவங்களை நான் சந்திச்சதில்லை. அதனால சொல்லத் தெரியலை..மறுவாழு மையங்களைக் குறுத்து பெண்களுக்கும் இப்படியான அவேர்னெஸ் இருந்தால் நல்லது.

    முதல்ல அந்தப் பெண் அவனை விட்டுத் தனியாக வாழணும் அப்ப யாரும் இல்லாமல் அவனுக்குப் புத்தி தெளிந்தாலும் தெளியும்..தெளியலாம் அவ்வளவே.. தெளியும் என்று உறுதியாகச் சொல்ல முடியுமானும் தெரியலை...எங்க வீட்டுப் பக்கத்துல கூட இப்படியானப் பெண்கள் இருக்காங்க..பாவமா இருக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  20. அதிகம் அலட்டலில்லாத அழகான அளவான குட்டிக் கதை.. முதலில் அதுக்கு வாழ்த்துக்கள். குடிப்பவருக்கே சமுதாயமும் சப்போர்ட் பண்ணி, அவஸ்தைப்பட்டு வாழும் பெண்ணைத் திட்டுகிறார்களே... தட்டிக் கேட்கவேண்டிய சமுதாயமே இப்படிப் பேசினால் ஞாயத்திற்கு ஆரிடம் போவது...

    பறவாயில்லையே... அந்த வீட்டிலயும் அரசியல் பற்றி வோட் பற்றி நினைக்கிறார்களே... மக்களுக்கு ஞானம் வருகிறது என எண்ணத் தோணுது..

    பதிலளிநீக்கு
  21. ///மனைவி சொன்னா கேட்டுடப் போறானா அந்த ஆளு..அவனுக்கு அந்த உணர்வு, பொறுப்பு எல்லாம் வேணுமே..இது மாதிரி ஆளுங்களுக்கு கவுன்சலிங்க் எல்லாம் கொடுத்து மறுவாழ்வு கொடுக்கும் மையங்கள் இருக்கு. சில மையங்கள் காசு வாங்கறாங்கதான்... ஆனால் அது எவ்வளவு தூரம் பயன் தரும் நும் தெரியலை. அதுல மறுவாழ்வு பெற்றவங்களை நான் சந்திச்சதில்லை. அதனால சொல்லத் தெரியலை..மறுவாழு மையங்களைக் குறுத்து பெண்களுக்கும் இப்படியான அவேர்னெஸ் இருந்தால் நல்லது.///

    ஏகாந்தன் அண்ணன்... என்னைப்பொறுத்து, படிப்பறிவற்ற மக்கள்கூட, இப்போ “சொல்வதெல்லாம் நிகழ்ச்சி” பார்க்கிறார்கள்.... அதனாலயே இதுபற்றி தெரிஞ்சு நிறையப்பேர் பயன் பெறுகிறார்கள் என நினைக்கிறேன்... படிக்கத் தெரியாதோர்.. ரீ வி நிகழ்ச்சிகள்மூலம் தானே விசயங்களை அறிஞ்சு கொள்ள முடியும்...

    பலபேர் அந் நிகழ்ச்சியைத் திட்டினாலும்.. எனக்கென்னமோ.. ஏழைகளுக்கு ஏத்த எள்ளுருண்டை எனவே தோணும் அதைப் பார்க்க... எதிலும் நன்மை தீமை இருக்கத்தான் செய்யும்.. நன்மையை மட்டும் எதிர்பார்த்தால் ஒரு நிகழ்ச்சியோ.. படமோ எதுவும் வெளியிட முடியாது.

    குடியால் மீண்டு மறுவாழ்வு பெற்ற பலரும் அந் நிகழ்ச்சியில் வந்து அதுபற்றிப் பேசியிருக்கிறார்கள்.

    ஆனா என்னதான் இருப்பினும்.. திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  22. யதார்த்த சொல்லாடல் கொடிக்கட்டிப் பறக்கிற திறமை! வாழ்த்துக்கள், குமார்!

    பதிலளிநீக்கு
  23. @ கம்பபாரதி athira :

    //.. என்னதான் இருப்பினும்.. திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.//

    எக்கச்சக்கமாய் மின்னி முழக்கியபின் கடைசியாகப் பட்டுக்கோட்டையில் வந்து நின்றீர்கள். Nice !

    பதிலளிநீக்கு
  24. "காசு வாங்கிட்டுத்தானே ஓட்டுப் போட்டிய... நல்ல அரசைத் தேர்ந்தெடுக்காத நாமளுந்தான் குத்தவாளி... அதை தெரிஞ்சிக்க.."

    "எவன் யோக்கியம்? எல்லாந்தான் காசு கொடுக்கறானுங்க.. அல்லாருகிட்டேயும் காசு வாங்கலாம் தான். ஆனா ஒருத்தனுக்குத் தானே போட முடியறது.. எவன் வந்தாலும் இந்தக் கதை தான்.. சம்பாரிக்க வந்தவங்களுக்கும் கெலிச்சவுடனேயே நம்ம ஞாபகம் எங்கணே இருக்கப் போவுது?"

    "சும்மா அரசியல் பேசிக்கிட்டு... நீ மொதல்ல கட்டுப் போடு... அவனப் போயி அப்பாவை தூக்கிட்டு வரச்சொல்லு..."

    பதிலளிநீக்கு
  25. மன்னிக்காத, சகித்துப் போகும், சிறுமை கண்டு பொங்கும் சீதை. யதார்த்தம்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. // "சரி சோடாவுக்கு எவ்வளவு...?" என்றாள்.

    "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... போ...."

    "அட புடிண்ணே.... ஆனவெலயோ பூன வெலயோ உனக்கும் குடும்பம் இருக்குல்ல... "

    வெல்டன், குமார்! ஏழை பாழைகளின் நியாய சுபாவங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

  27. //..நடையை நிறுத்தி தோளில் சாய்ந்திருக்கும் புருஷனை நறுக்கென பிடித்துக் கொண்டு அந்தப் பெருசைப் பார்த்து 'யோவ் என்ன சொன்னே... வீட்ல பொம்பள சரியில்லயா.. வர்றீயா ஏ வீட்டுக்கு... பொம்பள சரியில்லயாமே பொம்பள... நீங்க குடிச்சிட்டு விழுந்து கெடப்பீக... உங்கள கட்டுன பாவத்துக்கு நாங்க நடுரோட்டுல நின்னு நாயிம் பேயிம் பேசுறதக் கேக்கணும்..."

    ஓ! இதோ பாருங்கள்.. இன்னொரு சின்ன ஜெயகாந்தன்!

    இந்த மாதிரி கதை படிச்சு எவ்வளவு நாளாயிடுத்து!.. அம்மாடி!.. என்ன எழுத்து? என்ன படப்பிடிப்பு!

    //சாயங்காலமானா சின்ன வயசுல மாட்டை தேடி அலஞ்ச மாதிரி எங்க விழுந்து கெடக்கானுங்கன்னு தேடி அலயிறதுதான் எங்க பொழப்பு... ஐயா பெரியவுகளே... நீங்க பெரிய மனுசங்க... மத்தவங்களை வாயார புகழாட்டியும் நெஞ்சுல குத்தாதீக..." என்றவள்..//

    என்ன முடிப்பு! ..

    நிறைய எழுதுங்கள், குமார்! .. அன்பனின் அன்பான வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  28. ஒரு பெண்ணின் பார்வையில் குடியால் வரும்கேடு நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள் குமார்

    பதிலளிநீக்கு
  29. ஒரு சிறிய கதையில் குடிகாரனை கட்டிக்கொண்ட பெண்ணின் வேதனைகளை இவ்வளவு துல்லியமாக பதிவு பண்ண முடியுமா?. இந்த மாதிரி பெண்கள் படும் வேதனைகளில் எல்லாம் பெரிய வேதனை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறவர்களின் பேச்சை கேட்பதுதான். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  30. //ந்தோசமா கோயிலுக்குப் போக... தல நெறய பூ வச்சிக்கிட்டு எல்லாரு மாதிரியும் புருசங் கூட சினிமாவுக்குப் போக... எதுவுமே எங்களுக்கு கொடுப்பின இல்ல//

    பாவம் இந்த சாராய பாட்டில்களை திருமணம் செய்த பெண்களின் நிலைமை :(

    பதிலளிநீக்கு
  31. எளியநிலை மக்களின் வாழ்வை குடியால் ஏற்படும் தடுமாற்றத்தை அவர்களின் உணர்வுகளை அழகாய் சொல்லிசென்றீர்கள் .வாழ்த்துக்கள் குமார்

    பதிலளிநீக்கு
  32. இன்றைய தமிழ்நாட்டு வாழ்க்கையை அதுவும் பெண்களின் வாழ்க்கையைப் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறீர்கள். உங்கள் திறமைக்குக் கேட்கணுமா? நச்சென்று தாக்கும் அருமையான சொல்லாடல்களால் கதை மேலும் பரிணமிக்கிறது. ஆனால் இவ்வளவெல்லாம் இருந்தும் இன்னமும் தமிழ்நாட்டு ஆண்கள் திருந்தவே இல்லையேனு நினைச்சால் தான்! வருத்தம் அதிகம் ஆகிறது.

    வெகு யதார்த்தமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் காட்டி விட்டீர்கள். காட்சிகள் கண் முன்னே விரிய வசனங்கள் தானாகக் காதில் விழுகின்றன. தேவையான இடத்தில் உரையாடலுடன் அருமையான முடிவும் கூட! சாரதா மனதில் நிற்கிறாள்.

    பதிலளிநீக்கு
  33. நல்ல கதை. பல குடிகாரர்களின் வீட்டில் இதே நிலை. அவர்களை மணம் புரிந்த பெண்கள் பாவம் தான்.

    பதிலளிநீக்கு
  34. கதை படிக்கிறோம் என்ற உணர்வு தோன்றாவண்ணம், இயல்பான வசனத்துடன் கூடிய யதார்த்தமான கதை. செய்வதெல்லாம் செய்துவிட்டு, எல்லாவற்றிற்கும் பெண்டாட்டியைக் குறை சொல்வதைச் சாரதா தட்டிக் கேட்கும் இடம் அருமை. குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்களுக்குச் சபிக்கப்பட்ட வாழ்க்கை தான். கதாசிரியர் குமாருக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  35. எங்கள் பிளாக்கில் எனக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்த ஸ்ரீராம் அண்ணாவுக்கு முதலில் நன்றி.

    கதை எதார்த்தமாய் இன்று வெளிவந்திருந்தாலும் இரு தினங்கள் முன்தான் குடியின் பிடியில் சிக்கிய அண்ணனை (பெரியம்மா மகன்) இழந்தோம்.
    எங்கள் கிளையில் ஒன்று முறிந்து விழுந்தது.

    சில பல காரணங்களால் அதிகம் எழுத முடிவதில்லை... கருத்து இட முடிவதில்லை.

    இங்கு வந்திருக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது எல்லாருக்கும் தனித்தனியே நன்றி சொல்வதே சாலச் சிறந்ததாகும்.

    இந்தக் கதையை அனுப்பும் போது சரிவருமான்னு பாருங்கன்னுதான் அனுப்பினேன்... கதைக்கு நல்ல கருத்துக்கள் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

  36. வணக்கம் துரை செல்வராஜூ ஐயா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **

    வணக்கம் துளசிதரன் அண்ணா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **

    வணக்கம் ஜெயக்குமார் அண்ணா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **
    வணக்கம் கில்லர்ஜி அண்ணா...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **

    வணக்கம் மதுரைத் தமிழன் அண்ணாச்சி...
    ஓடாமல் படித்ததற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    **

    வணக்கம் நெல்லைத் தமிழன் அண்ணாச்சி...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  37. வணக்கம் காமாட்சி அம்மா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **

    வணக்கம் சகோ. அசோகன் குப்புசாமி...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **

    வணக்கம் திருமிகு. ஏகாந்தன் ஐயா...
    உண்மைதான்... இங்கு அரசியல் பிழைப்புத்தான் முக்கியம்.
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **
    வணக்கம் கீதாக்கா...
    நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    **

    வணக்கம் சகோ. அதிரா...
    விரிவான பார்வை...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் ஜீவி ஐயா...
    முதலில் தங்களின் ஒரு வரிக் கருத்துப் பார்த்ததும் விரிவாக இல்லையே கதை நல்லாயிருக்கு என்பதாய் மட்டும் இருக்கே என்று நினைத்தேன்.
    கதை எப்படி... என்ன... என்பதை விரிவாய் பார்க்கும் பார்வையில் உள்ளதை உள்ளபடி தாங்கள் சொல்வதுண்டு. அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    மாலை பார்த்தால்.... விரிவாய் கருத்துக்கள்...

    எனது கதைகளில் ஒரு ஜீவன் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

    // ஓ! இதோ பாருங்கள்.. இன்னொரு சின்ன ஜெயகாந்தன்! //

    தங்கள் வாழ்த்துக்களில் சொல்லியிருக்கும் அளவுக்கு ஆஹா... ஓஹோன்னு எல்லாம் எழுதுறவனில்லை... ஆனாலும் எதார்த்தமாய் எழுதப் பார்ப்பேன். வாழ்க்கைக் கதைகளை எழுத வேண்டும் என்ற எண்ணமே அதிகம்.

    // நிறைய எழுதுங்கள், குமார்! .. அன்பனின் அன்பான வாழ்த்துக்கள்.. //

    கண்டிப்பாக ஐயா...

    தங்களின் வாழ்த்து எனக்கு மிகப்பெரிய வரம்.

    தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் மிடில்கிளாஸ் மாதவி அம்மா...
    தங்கள் கருத்துக்கு நன்றி.

    **

    வணக்கம் திருமிகு. பாலசுப்பிரமணியம் ஐயா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **

    வணக்கம் பானுமதி வெங்கடேஷன் அம்மா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **

    வணக்கம் சகோதரி ஏஞ்சல்...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் கீதா அக்கா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **

    வணக்கம் வெங்கட் நாகராஜ் அண்ணா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    **

    வணக்கம் சகோதரி கலையரசி...
    தங்கள் கருத்துக்கு நன்றி.

    **

    வணக்கம் ராமலெஷ்மி அக்கா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் ராஜி அக்கா...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  42. அன்பு குமார்,

    மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது உங்கள் நிதர்சனக் கதை. தெருவுக்குத் த்ரு நாம் கீழே பார்க்கும் நினைவிழந்தவர்களின் பின் நிற்கும் குடும்பம் மகா சங்கடம்.

    கணக்கெடுத்தால் யார் குடிக்கவில்லை என்ற கணக்கே கைவிட்டு எண்ணிவிடலாம். அடிமட்ட
    சமுதாயத்தில். அவர்கள் வேலைக்குப் போவதே குடிக்கத்தான்.

    மிக அருமையாகக் கண்முன் கொண்டு நிறுத்தி இருக்கிறீர்கள்.
    மனம் பதைக்கிறது. அவர்களாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் குடி அவர்களை விடப் போவதில்லை. சாரதைகளுக்கும் விடுதலை இல்லை.

    பதிலளிநீக்கு
  43. ஹூம், காத்திருந்து காத்திருந்து ஒண்ணும் வரலை! நோ புதிர்?

    பதிலளிநீக்கு
  44. இப்போ மணி ஏழரை..

    புதிருக்கும் புதிராகி விட்டது- புதன்..

    பதிலளிநீக்கு
  45. ஏழைகளின் இன்னொருபக்கம் தெளிவான நடையில் அவர்களின் பாணியில் காட்டியுள்ளது அருமை வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் வல்லிசிம்ஹன் அம்மா...
    தங்கள் கருத்துக்கு நன்றி.

    **

    வணக்கம் பூவிழி அக்கா...
    தங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!