செவ்வாய், 29 ஜனவரி, 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை ; நம்பிக்கை - ரஞ்சனி நாராயணன்


நம்பிக்கை 
ரஞ்சனி நாராயணன் 


தேர்திருவிழாக் கூட்டம் அந்த மருத்துவ மனையில்.  மக்கள் அலை அலையாக வந்து கொண்டும் போய்க் கொண்டும்  இருந்தனர். 

ஒவ்வொருவருக்கு  ஒவ்வொரு பிரச்சினை. 

என் கணவருக்கு இன்று அதிகாலை திடீரென சுகர் இறங்கி உடம்பெல்லாம் சில்லிட்டுப் போய்விட்டது. அவசர அவசரமாக ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். இப்போது அவர் ஐஸியூவில். நான் வெளியே கவலையுடன் உட்கார்ந்திருந்தேன் - போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கொண்டு பொழுது போகவேண்டுமே?

சின்ன வயது பெண் ஒருத்தி. விந்திவிந்தி நடந்து வந்து கொண்டு இருந்தாள். காலில் செருப்பு கூட இல்லை. நைட் பான்ட்,  டீஷர்ட் அணிந்து இருந்தாள். வலது காலில் சின்னதாக ஒரு கட்டு. காஸ் (gauze) துணியை வைத்து கோணாமாணவென்று சுற்றி இருந்தாள். முகத்தில் வலியைவிட கலவரம் அதிகமாகத் தெரிந்தது.

என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.  கூடவே அவள் கணவனும். காலை கீழே வைக்க முடியாமல் தவித்தாள்.
'காலைத் தூக்கி இன்னொரு சேர் மேல் வைத்துக் கொள்ளம்மா' என்றேன். 'வேண்டாம்,   கொஞ்சம் வெயில் படட்டும்னு தான் காலை நீட்டி கொண்டு  இங்கே உட்கார்ந்து  இருக்கிறேன்' என்றாள். 

'என்ன ஆயிற்றும்மா?' 

'காலில் சைக்கிள் விழுந்து விட்டது'

'நீ ஓட்டி கொண்டு இருந்தாயா?'

'இல்லை யில்லை. நின்று கொண்டு இருந்த சைக்கிள் கால் மேல் விழுந்து விட்டது.'

அடடா....!'

காலில் சுற்றியிருந்த கட்டை எடுத்து விட்டு காலை மடக்கி அவள் அமர்ந்திருந்த சேரின் மீது வைத்துக்கொண்டாள். நடுவிரலில் வெட்டுக்காயம் தெரிந்தது.

சற்று நேரத்தில் அந்தப் பெண்ணை கூப்பிட்டார்கள்.

'ஜோதி...!'

அந்த பெண் எழுந்து டாக்டர் அறைக்குள் சென்றாள்.

சற்று நேரத்தில் 'ஓ.......!' என்ற அலறல்.

டாக்டர் ஏதோ சொல்வது கேட்டது. 

கொஞ்சம் அமைதி.  மறுபடியும் அலறல்.

சிறிது நேரத்தில் அந்த பெண் அழுதுகொண்டே வெளியே வந்தாள்.

'என்னம்மா ஆயிற்று?'

'அந்தக் காலிலேயே ஊசி போடுவாங்களாம். அப்புறம் மூணு தையல் போடுவாங்களாம்....' அந்த பெண்ணின் கண்களிலிருந்து அருவி போல கண்ணீர். 

'ஐ கான்ட் டேக் இன்ஜெக்ஷன் ஆண்ட்டீ!'

'அலர்ஜியா?'

'ஊஹூம். எனக்கு ஊசின்னால் ரொம்ப பயம்...'

அந்த நிலையிலும்‌ எனக்கு சிரிப்பு தான் வந்தது.

'என்னம்மா இது நீ என்ன சின்னக் குழந்தையா?  நான் வேண்டுமானால் உன்னுடன் வந்து கையை பிடித்துக் கொள்ளட்டுமா?'

'வேணாம். நான் வீட்டுக்குப் போறேன்'

'உன் கணவர் எங்கே?'

'வெளியே போய் விட்டார். டாக்டர் அவரைப் பார்த்து சத்தம் போட்டார். அவர் ரொம்ப அப்செட் ஆயிட்டார்'.

'எங்கே போனாலும் இதே சிகிச்சை தான். டாக்டர் சொல்றபடி கேளு' என்றபடியே அந்த பெண்ணின் கணவர் வந்தார்.

சிறிது நேரம் மௌனம்.

'நான் ரெடி சிஸ்டர்' என்று அந்தப் பக்கம் வந்த நர்ஸைப் பார்த்து கண்ணைத் துடைத்துக் கொண்டு சொன்னாள் அந்தப் பெண்.

'எனக்குத் தெரியாது. நீங்களே போய் டாக்டர் கிட்ட சொல்லுங்க'.

போறபோக்கில் சொல்லி விட்டு போனார் அந்த சிஸ்டர்.  நான் அவரை நிறுத்தினேன்.  'சிஸ்டர்! சின்ன பொண்ணு. நீங்கதான் கொஞ்சம் சொல்லணும்...ப்ளீஸ்...' என்று நானும் என் பங்குக்குச் சொன்னேன்.

என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு 'ஏம்மா, ஊசி போட்டுக்க அந்தப் பொண்ணு என்ன ரகளை செஞ்சுது தெரியுமா? ஓன்னு அலறுது. ஊசின்னா கொஞ்சம் வலிக்கும் தான். அதுக்கு அலறுவாங்களா? நாங்க கையை பிடிச்சுக்கறோம்னா எங்கள கொலைகாரங்க மாதிரி பார்த்து 'ஆ' ன்னு கத்துது...! ஊர் ஒலகத்துல இல்லாத என்னா  பொண்ணுமா இது!....'

'ஐ கான்ட் டேக் இன்ஜெக்ஷன் ஆண்ட்டி...!'  மறுபடியும் அந்தப் பெண்ணின் கண்களில் அருவி.

செய்வது அறியாமல் நான் மௌனமானேன். 

அந்தப் பெண் விந்தி விந்தி நடந்துகொண்டே மருத்துவமனையை விட்டு வெளியேறினாள். நான் அவளையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

கூ.....கூ......கூ....... என்று சத்தம் போட்டு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வண்டி என் கவனத்தைத் திருப்பியது. குழந்தையை கையில் ஏந்தியபடியே இளம் வயது ஆண் அதிலிருந்து இறங்கி பரபரவென்று மருத்துவ மனைக்குள் நுழைந்தார். ஏற்கனவே தொலைபேசியில் சொல்லியிருப்பார்கள் போல. டாக்டர்களும் நர்ஸுகளும் தயாராக நின்றிருந்தனர்.

குழந்தையை ஐசியூவிற்குள் அழைத்துப் போனார்கள். அந்த இளம் தாய் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். பாவம், என்னவாயிற்றோ குழந்தைக்கு. 


இவர்களைப் பராக்கு பார்த்துக் கொண்டிருந்ததில் என் கணவரைப்பற்றிய கவலை சற்று குறைந்தாற் போல இருந்தது. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. கணவரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எப்படி இருக்கிறார் என்றால் stable ஆக இருக்கிறார் என்று பதில் வந்தது. 

பசிக்கிறாப் போல இருந்தது. இயந்திரம் போல எழுந்து காண்டீன் போய் சாப்பிட்டு விட்டு வந்தேன். 

காலை மாலையாயிற்று. மருத்துவமனையைச் சுற்றி நிறைய மரங்கள். சலசலவென்று பறவைகளின் கூக்குரல். ரசிக்கும் மனநிலை இல்லை. காலையிலிருந்து உட்கார்ந்து உட்கார்ந்து உடல் அசந்து போயிருந்தது. இரவு முழுவதும் இப்படியேதான் உட்கார்ந்து இருக்க வேண்டுமோ? தூக்கம் கண்ணை இழுத்தது.


நல்லவேளையாக நர்ஸ் ஒருவர் வந்து  'மாடில ஒரு பெட் கொடுக்கிறோம். படுத்துக் கோங்க' என்று சொல்லி அழைத்துக் கொண்டு போனார். அவர் காட்டிய படுக்கையில்  படுத்தது தான் தெரியும். காலையில் வெகு அருகில் குழந்தையின் குரல் கேட்டு விழித்துக் கொண்டேன். 

பக்கத்து அறையில் ஒரு குழந்தை.

நேற்று இரவு வந்த குழந்தையாகத்தான் இருக்க வேண்டும். அம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்து. அப்பாடா என்று இருந்தது. 

காலைவேளை மனதிற்கு எத்தனை நம்பிக்கையைக் கொடுக்கிறது என்று நினைத்துக் கொண்டே கணவர் இருந்த ஐஸியூ பக்கம் நடந்தேன்.


**************************************

பின்குறிப்பு :  ரஞ்சனி நாராயணன் எழுதி அனுப்பி இருந்த இந்தக் கதை படித்ததும் எனக்கு சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸாப்பில் வந்திருந்த இந்த வீடியோ நினைவுக்கு வந்தது.  அவருக்கு அனுப்பி பார்க்கச் சொன்னேன்.  "சிரித்து விட்டேன்.  இதை கதையுடன் இணைத்து விடுங்கள்" என்று சொல்லி இருந்தார்.   இணைத்து விட்டேன்.62 கருத்துகள்:

 1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! தொடரும் அனைவருக்கும்..
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை இன்று ரஞ்சனி அக்கா கதையா!!!! வருகிறேன் வேலை முடிச்சுட்டு...

   கீதா

   நீக்கு
 2. இனிய மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்...

  பதிலளிநீக்கு
 3. ஹிஹிஹி விவிசி, விவிசி, விவிசி. எங்க பெரிய பேத்தி இப்போவும் ஊசி, மருந்து, மாத்திரைகள் என்றால் இப்படித் தான் படுத்துகிறாள். எவ்வளவோ சொல்லியாச்சு. இதனால் போன மாதம் காலில் ஏற்பட் ட காயத்தினால் இன்ஃபெக்ஷன் ஆகி ரொம்பக் கஷ்டப்பட்டுப் பின்னர் ஒரு வழியாக மருந்து, மாத்திரைகள், ஊசி எனப் போட்டுக்கொண்டாள். ஆனாலும் இப்படித் தான் இரண்டு பேர் பிடித்துக் கொண்டு ! :)))) சின்னவா நேர்மாறாக ஊசியைக் குத்தியதும் துடைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே வருவாள்.

  பதிலளிநீக்கு
 4. நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்து நன்றாகச் சிரிக்க வைத்த ரஞ்சனிக்கு நல்வரவும், வாழ்த்துகளும். தொடர்ந்து வலைகளில் உலவி வரப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்வரவேற்பிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, கீதா. எனக்கும் தொடர்ந்து வலைகளில் உலவி வர விருப்பம் தான். முயற்சிக்கிறேன். வராமல் இருந்த என்னை இங்கு வரவழைத்த ஸ்ரீராம் தம்பிக்கும் எனது நன்றி.

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களின் எழுத்துக்கள் நான் வலைத்தளம் வந்த புதிதில் நிறையவே படித்திருக்கிறேன். மிகவும் அழகாக எழுதுவார். அவரின் அனுபவங்கள், குழந்தை வளர்ப்பு கலை என்று அனைத்துமே நன்றாக இருக்கும். இன்று அவர் எழுதிய கதையையும் படித்த பின் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன். என் எழுத்துக்களை பற்றி நல்ல கருத்துக்களைச் சொன்னதற்கு முதலில் நன்றி. இந்தக் கதையையும் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   நீக்கு
 6. மருத்துவமனை ஒரு போதி மரம்.
  என்ன.. வெளியே வந்ததும் மறந்து மனிதர்கள் பழையபடி ஆட்டம்..

  அருமையான கதை ஓட்டம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம், ரிஷபன் ஸார். இரண்டே வரிகளில் அருமையாக சொல்லிவிட்டீர்கள் வாழ்க்கையின் தத்துவத்தை. பாராட்டுக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. மருத்துவமனை கண் முன்னே விரிந்தது...

  எதற்கெடுத்தாலும் ஊசி என்றால்...
  மனதுக்குள் கலவரம் தான்....

  முதுகை வளைத்து தண்டுவடத்துக்குள் ஊசி குத்துவார்களாமே...

  நினைக்கவே பயமாக இருக்கிறது..

  போட்டுக் கொள்பவர்களுக்கு எப்படி இருக்கும்!?...

  மருத்துவமனைக்குச் சென்றறியாத
  தலைமுறையிடையே நாம் வாழ்ந்திருக்கின்றோம்...

  எல்லாருக்கும்
  ஆரோக்கிய வாழ்வருள்வாய் அம்பிகே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரைராஜ் ஸார்.
   ஆரோக்கியம் கெட்ட பிறகு தான் அதன் அருமை தெரிகிறது. உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை. மாறிய சாப்பாடு. மருத்துவமனைக்குச் செல்லாமல் என்ன செய்வது? என் பிரார்த்தனையும் அதேதான்.
   நன்றி.

   நீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 9. ரஞ்சனி நாராயணன் கதை மிகவும் அருமை.

  //தேர்திருவிழாக் கூட்டம் அந்த மருத்துவ மனையில். மக்கள் அலை அலையாக வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தனர். //

  உண்மை இப்போது மருத்துவமனைகள் அப்படித்தான் இருக்கிறது.

  //ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்சினை//

  என் அத்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்த போது ஒரு மாதமும் கண்ட காட்சிகள் மனகண்ணில் விரிந்தது.

  கதை சொல்லிய விதம் அப்படியே நேரே பார்ப்பது போல் இருந்தது.

  //அம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்து. அப்பாடா என்று இருந்தது. //
  நமக்கும் படிக்கும் போது மகிழ்ச்சி.

  நம்பிக்கைதான் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.
  ரஞ்சனி வாழ்த்துக்கள்.
  அடிக்கடி எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கோமதி.
   உங்கள் கருத்துரை படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நம்பிக்கைதான் - அதுவும் காலைவேளை தரும் நம்பிக்கை மருத்துவமனையில் இருக்கும்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அடிக்கடி எழுத வேண்டும் என்று தான் நினைத்துக் கொள்ளுகிறேன். முயற்சி செய்கிறேன்.
   நன்றி.

   நீக்கு
 10. அனைவருக்கும் காலை வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஞ்சனி நாராயணன் கதை! பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல கதை.... எனக்குக் கூட ஊசி போட்டுக் கொள்வதென்றால் கொஞ்சம் அலர்ஜி தான். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம், வெங்கட்.
   நிறைய பேர்களுக்கு அலர்ஜி தான்!
   பாராட்டுக்களுக்கு நன்றி.

   நீக்கு
 12. காணொளி பார்க்க முடியவில்லை.
  ஏன் என்று தெரியவில்லை.
  மறுபடி பார்க்க முடிந்தால் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. கதை படித்து ஒரு பக்கம் சிரிப்பு...மறுபக்கம் மருத்துவமனை தரும் பாடங்கள், என் நினைவுகள் என்று பல சுழன்றது. கதை நன்றாக இருக்கிறது ரஞ்சனிக்கா....மருத்துவனைக்குப் பலரும் செல்வது நம்பிக்கையுடன் தான். பல தெய்வங்களை/தன்வந்திரியை வேண்டிக் கொண்டாலும் அப்போதைய தன்வந்திரி தெய்வம் மருத்துவர்தானே எனவே அவரிடமும் நம்பிக்கை வைத்துத்தான் செல்கிறோம். நம்பிக்கைதானே வாழ்க்கை!

  அழகான கதை அக்கா. வாழ்த்துகள், பாராட்டுகள். மீண்டும் உங்களைக் காண்பது சந்தோஷம் அக்கா...

  காணொளி கண்டு சிரித்துவிட்டேன்...சிரிச்சு முடியலை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா. பாராட்டுகளுக்கு நன்றி. நானும் காணொளியை மிகவும் ரசித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த மாமி ஒருவர் ஊசியைப் பார்த்ததும் 'பெருமாளே! பெருமாளே!' என்று கத்துவார். இதில் தமாஷான விஷயம் அந்த மருத்துவரின் பெயரும் பெருமாள் தான்!

   நீக்கு
 14. இன்றைய சூழலில் மருத்துவமனை மனதில் கலவரத்தை உண்டு பண்ணுகிறது.
  காணொளி கண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கில்லர்ஜி. உண்மை. மருத்துவமனை என்றாலே கிலி தான் எனக்கும்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 15. அருமையான கதை ரஞ்சனி. அச்சு அசல் மருத்துவமனையில் உட்கார்ந்தது போல இருந்தது.
  அருமையான நெகிழ்வான நெகிழ்வுகள்.
  அந்தக் குழந்தை காலையில் சிரித்தது போல அனைவரின் வாழ்வும்
  மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.
  நிறைய கதை இங்கே கொடுங்கள் ரஞ்சனி.
  இனிய நாளுக்கான வாழ்த்துகள் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி. உண்மையில் மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டு தான் இந்தக் கதையை - உண்மை நிகழ்வு இது கதையல்ல - தட்டச்சினேன். என் கண் முன்னால் நடந்ததை அப்படியே எழுதினேன். ஸ்ரீராம் எழுதுங்கள் என்று சொன்னவுடன் அனுப்பிவிட்டேன். உங்களது பாராட்டு வாழ்த்துகள் எல்லாமே உற்சாகம் கொடுக்கிறது. நன்றி.

   நீக்கு
 16. காணொளி கண்டேன், கடைசிவரை ஊசி போடவே இல்லை போலவே!

  பதிலளிநீக்கு
 17. ஆமாம் ஒவ்வொரு காலைப் பொழுதும் விழிக்கும் போதும் கூட நம்பிக்கையுடன் தான் விடிகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா. இரவு எத்தனைதான் மன அழுத்தம் இருந்தாலும், காலையில் வெளிச்சத்தைக் கண்டவுடன் மனதில் புது நம்பிக்கை ஊற்றெடுக்கும். அதை சொல்லில் விவரிப்பது கடினம். நன்றி கீதா.

   நீக்கு
 18. பதில்கள்
  1. வணக்கம் தனபாலன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.

   நீக்கு
 19. பதில்கள்
  1. வணக்கம் பரிவை சே. குமார்.
   பாராட்டுரைக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 20. வணக்கம் சகோதரி

  நல்ல நிறைவான அருமையான கதை. நம்பிக்கை தந்த பலத்தில் எழுந்து கணவரை பார்க்க சென்றவருக்கு, டாக்டரிடமிருந்து தங்கள் கணவர் பூரண குணமடைந்தார் என்ற நற்செய்தி கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்.

  காணோளி நன்றாக உள்ளது. அவர் கடைசிவரை ஊசியிடமிருந்து தப்பித்துக் கொண்டேயிருக்கிறார். மருத்துவத்திற்கு சென்று விட்டால், அங்கு எல்லா பரிசோதனைகள், ஊசிகள், மருந்து மாத்திரைகள் என்று சந்திக்கத்தான் வேண்டி உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது போல மருத்துவத்திற்குச் சென்றுவிட்டால் எல்லாவிதமான சோதனைகளுக்கும் உட்பட வேண்டியது தான். நமக்குத் தெரியாத துறை அது. மருத்துவர் சொல்வதுதான் வேதவாக்கு.
   கதையைப்படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   நீக்கு
 21. சரளமான நடையில் நல்ல படைப்பு.
  //காலைவேளை மனதிற்கு எத்தனை நம்பிக்கையைக் கொடுக்கிறது என்று நினைத்துக் கொண்டே கணவர் இருந்த ஐஸியூ பக்கம் நடந்தேன்.//
  உண்மை, அதுவும் நாமோ, அல்லது நமக்கு வேண்டப்பட்டவர்களோ நோயுற்று இருக்கும் பொழுது விடியல் காலை தரும் நம்பிக்கையை அனுபவித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. அந்தப் பெண்மணியும் சற்று திடமான பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். பல சமயங்களில் நோயாளியை விட, அவர் கூட வருபவர்கள் படுத்தும் பாடு...! ஊசி குத்திக்கொள்ள படுத்துபவர்களை விட அதிகம் படுத்துவார்கள். என் கணவருக்கு ஸ்டென்ட் போட வேண்டி வந்த பொழுது, அவரை தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் சமயத்தில் தன் தந்தைக்கு மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஒரு வாலிபர் அழுத அழுகையைப் பார்த்து திடமாக இருந்த என் கணவர் பயந்து விட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி.
   உங்களால் இந்தக் கதையுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது பற்றி மகிழ்ச்சி. கூட இருப்பவர்கள் திடமாக இருக்க வேண்டும். உண்மை. பக்கத்து படுக்கையில் இருபவர்களிடம் கூட நான் அதிகம் பேசமாட்டேன். அவர்கள் தங்களது அனுபவத்தைச் சொல்லுகிறேன் அல்லது அறிவுரை என்று எதையாவது சொல்லி நம்மை இன்னும் பயமுறுத்துவார்கள்.
   நன்றி பானுமதி.

   நீக்கு
 23. நம்பிக்கைதான் வாழ்க்கை. மிக அருமையான கதை.

  காணொளி புன்னகைக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி.
   வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

   நீக்கு
 24. பதில்கள்
  1. வணக்கம் சொக்கன் சுப்பிரமணியன்.
   வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

   நீக்கு
 25. மருத்துவ மனை என்றில்லை, சொந்தத் துயர் நெருக்கும் சமயத்தில் வேறு எதிலாவது கவனம் சிதறும் பொழுது மனம் கொஞ்ச நேரத்திற்காவது விச்சிராந்தையாய் இளைப்பாறும்; அந்தக்கண டைவர்ஷன். அவ்வளவு தான்.

  கதாசிரியர் மருத்துவமனை நிகழ்வுகளோடு நம்மையும் ஒன்ற வைத்து மெயின் விஷயத்திலிருந்து கத்தரித்து போக்குக் காட்டியிருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.

  காணொளியின் கலகலப்பில் கதையில் சொல்ல வந்தது அமுங்கிப் போய்விட்டதாகவே உணர்ந்தேன்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜீவி ஸார்.

   சின்னச் சின்ன டைவர்ஷன் இருந்தால்தான் மருத்துவ மனையில் பலநாட்கள் தங்க வேண்டி வரும்போது சமாளிக்க முடியும். நீங்கள் சொல்வது போல அந்தக்கண டைவர்ஷன் தான்.
   //மெயின் விஷயத்திலிருந்து கத்தரித்து போக்குக் காட்டியிருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.// நீங்கள் எதை மெயின் விஷயம் என்று சொல்லுகிறீர்கள்? கணவரின் நிலை பற்றி எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அது ஒரு மனைவியின் புலம்பல் ஆகிவிடும்.

   கதைக்கும் காணொளிக்கும் இருக்கும் ஒரே சம்மந்தம் ஊசி போட்டுக்கொள்ள பயப்படும் நோயாளி மட்டுமே. கதையின் கனத்தை காணொளி குறைத்து விடுகிறது என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.
   வருகைக்கும், பளிச்சென்ற கருத்துரைக்கும் நன்றி ஸார்.
   நீக்கு
 26. விடியும் பொழுதுகள் எல்லாம் நம்பிக்கை தருவனவே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜிஎம்பி ஸார்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 27. கதை மிக நந்றாக இருக்கிறது. யதார்த்த நிகழ்வுகளைச் சொல்லியிருக்கும் விதமும், காலையில் நாம் பெரும்பான்மையோர் நம்பிக்கையுடன் எழுதுவதும் என்று அனைத்தும். நம்பிக்கைதானே வாழ்க்கை!

  வாழ்த்துகள்!

  கதைக்குப் பொருத்தமான காணொளி. நகைச்சுவையான காணொளி. சில குழந்தைகள் சிறு வயதிலும் சரி பெரியவர்கள் ஆனாலும் சரி ஊசி போடுவது என்றாலே ஊரைக் கூட்டுவார்கள். சிலர் மருந்திற்கும் கூட புலம்பிக் கொண்டோ அல்லது ஆ ஊ ஐயோ, என்று சொல்லிக் கொண்டே அதை முழுங்குவதற்குக் கூட சப்தம் எழுப்புபவர்களையும் கண்டதுண்டு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துளசிதரன்.
   வாழ்த்துகளுக்கு நன்றி.
   என் அக்கா, என் பெண் இருவருமே மாத்திரை சாப்பிடுவதற்குக் கூட பாடாய் படுத்துவார்கள். என் அக்கா முதலில் கொஞ்சம் நீர் குடித்துக் கொள்ளுகிறேன் என்பாள். ஒரு ஒரு மாத்திரையாகக் கொடு என்பாள். என் பெண் தலையை ஒரேயடியாக பின்னால் சாய்த்துக் கொண்டு மாத்திரையை தொண்டைக்குள் வைத்துக் கொள்வாள். பிறகு தண்ணீரை வாய் நிறைய விட்டுக் கொள்வாள். இரண்டு முறையாவது ஒக்காளிப்பாள். இருவரும் மாத்திரையை முழுங்குவதற்குள் நம் கண்ணில் நீர் வந்துவிடும். தமாஷாக இருக்கும்.

   நீக்கு
 28. காணொளி சூழ்னிலையின் தாக்கத்தைக் குறைத்தது.
  இப்படிக்கூட மனிதர்களா.ஹாஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வல்லி. அதனாலேயே கதை முடிவில் அந்தக் காணொளியை இணைக்கச் சொன்னேன்.

   நீக்கு
 29. பதில்கள்
  1. வணக்கம், அனுராதா.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 30. ஊசி போடுவதைப் பற்றி மிகவும் அழகான கதை பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அசோகன். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 31. நல்ல கலவரக் கதை! அந்தப் பெண்ணின் ஹஸ்பெண்டுக்காவது ஒரு ஊசி போட்டுவிட்டிருக்கலாம்.. இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்தது வேஸ்ட்டாப்போச்சே..!

  பதிலளிநீக்கு
 32. ரஞ்சனி மேடம்... பிறகு வந்து கதையைப் படித்து கருத்து சொல்றேன். இப்போ நேரமின்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன்.
   இரண்டாவதுமுறை வந்து கதையைப் படித்து கருத்துரை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்ட வேண்டும். நன்றி.

   நீக்கு
 33. உணர்வுகளைக் கதை சொல்கிறது. இதை என்னால் ரிலேட் பண்ண முடிகிறது.

  என் பெண் 3-4வது படிக்கும்போதுன்னு நினைக்கறேன் (இல்லை 1-2ம் வகுப்பாயுமிருக்கலாம்). குழந்தைகளுக்குள்ள தடுப்பூசிக்காக அவளை ஹெல்த் செண்டர் கூட்டிச்சென்றோம். நர்ஸ் ஊசி போட வந்தபோது அவள், 'நோ நோ.. உங்களுக்கு வேண்டுமானால் போட்டுக்குங்க. இட் இஸ் ஓகே. தாங்க் யூ எனக்குவேண்டாம்' என்று சரளமாக ஆங்கிலத்தில் அந்த நர்சிடம் சொல்லி எனக்குக் கலவரத்தை உண்டாக்கிவிட்டாள்.

  எப்போதும் அடுத்தவங்க கஷ்டம் பார்க்கும்போது நம்ம கஷ்டம் கொஞ்சம் மறக்கும். ஐசியூல நமக்கு நெருங்கினவர் இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் விடியும்போது கொஞ்சம் ஆறுதலா மனசுக்குத் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருத்துவமனை அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். எனக்குச் சற்று அதிகம். ஆயிரம் பக்கப் புத்தகம் எழுதும் அளவிற்கு அதிகம்!
   ஐஸியூ வில் பெரிய கஷ்டம் என்னவென்றால் பக்கத்தில் இருக்க முடியாது. அடிக்கடி பார்க்க முடியாது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வெளியே நாள் முழுக்கக் காத்திருக்க வேண்டும்.
   காலைப் பொழுது என்பது மிகுந்த ஆறுதலைக் கொடுக்கும்.
   கடைசியில் உங்கள் பெண் தடுப்பூசி போட்டுக் கொண்டாளா இல்லையா? காணொளி மாதிரியே சஸ்பென்சில் விட்டுவிட்டீர்களே!

   நீக்கு
  2. என் பெண்ணோட அப்பா ரொம்ப சாஃப்ட் டைப். கோபாமா மிரட்டியே காரியத்தை சாதித்துவிடுவார்.

   உங்கள் மறுமொழியைப் படிக்கும்போது உங்கள் சகோதரியைப்பற்றி நீங்கள் எழுதியிருந்தவை கண்ணில் விரிகின்றன.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!