செவ்வாய், 4 மார்ச், 2025

எடுத்துப் போடும் கதை : பொக்கிஷம் : வேப்ப மரம் - ந பிச்சமூர்த்தி

வேப்ப மரம்​ 
ந பிச்சமூர்த்தி 

நான் என்னவோ வேப்பமரந்தான். முன்பெல்லாம் காற்று அடிக்கும்; என் கிளைகள் பேயாடும். மழை பெய்யும்; வாசனை ஒன்றை விசிறுவேன். சித்திரை பிறக்கும்; என் மலர்கள் தேனீக்களை அழைக்கும். நான் வெறும் வேப்ப மரமாகத்தான் இருந்தேன்.

ஆனால் இப்பொழுது யோகம் அடிக்கிறது; நான் தெய்வமாகிவிட்டேன். எனக்கு வந்திருக்கும் பெருமையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாள் தவறாமல் யாராவது இங்கு வருகிறார்கள். மரக்கடை வியாபாரி ஒருவன் மட்டும் என்னை முறையாக அறுத்துப் பலகையாக்கினால் 20 பலகையாகும்; வியாபாரத்துக்கு அறுத்தால் 25 ஆகும் என்று சொல்லிக்கொண்டிருக் தான் இப்பொழுது வருபவர்கள் எல்லாம் என் உடம்பைச் சுற்றி மஞ்சள் பூசிக் குங்குமம் இடுகிறார்கள். சாம்பிராணிப் புகை போடுகிறார்கள். அகலில் நெய்விளக்கு வைக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைத்துக் கும்பிடுகிறார்கள். வெள்ளிக்கிழமைதான் கூட்டம் தாங்கவில்லை. ஏராளமாக மாவிளக்குப் படைக்கிறார்கள்.

இந்த யோகம் ஒரு மாதமாக அடிக்கிறது ஆனால் இந்தப் பங்களாக்காரருக்கு என்னால் தொந்தரவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. எப்போதுமே ஒருவிதம் இல்லாவிட்டால் ஒருவிதம் என்னால் தொந்தரவுதான். வேப்பம் பழத்தைத் தின்று காக்கை எச்சமிட்டதோ, சின்னச் செடியாய் முளைத்து நான் ஆளானதோ இப்பொழுது இருக்கிறவருக்குத் தெரியாது. அப் பொழுதெல்லாம் அவர் சின்னப் பையன். தகப்பனார் இருந்தார். பல் குச்சிக்கு வேப்பங் கிளையைத் தெருவில் போகிறவர்கள் ஒடிக்க ஆரம்பித்ததிலிருந்து வம்பு ஆரம்பித்து விட்டது.

வேப்பமரம் ஒன்று இருக்கிற விஷயம் நகரசபையார் வெளியிட்ட ஏல நோட்டீசைப் பார்த்த பிறகுதான் இவர் கவனத்துக்கு வந்தது. அதற்குப் பிறகு என் விஷயத்தில் இவருக்குத் திடீரென்று அக்கறை பிறந்தது. வக்கீல் வீட்டுக்குப்போய் நகரசபைக்கு ஆட்சேபணை நோட்டீஸ் ஒன்று கொடுத்தார். அதற்குப் பிறகு நகரசபை ஆணையாளரைப் பார்த்துப் பேசினார் முடிவாக, பிளான் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு அதிகாரி ஒருவர் வேலியோரம் வந்து அளந்து பார்த்தார். அவர் என்ன சொன்னாரோ என்னவோ, ஏலப் பேச்சு அதற்கு அப்புறம் அடங்கிப்போய் விட்டது.

ஆறு மாதத்துக்கு முன்பு மற்றொரு சங்கடம் முளைத்தது. எனக்கு அது சங்கடமாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவர்கள் அப்படி நினைத்தால்தானே? முளைப்பதும், இலை விடுவதும், கிளையாவதும், மலர்வதும் நாமாகச் செய்கிற காரியமா? அவை எல்லாம் தாமாக நடக்கின்றன. விரும்பினால்கூட, நம்மால் தடைப் படுத்த முடியாது. ரோட்டுப் புறமாகப் போகாதே என்று ஒரு கிளைக்குச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அது கேட்கவே இல்லை. அந்தக் கிளை பழுக்க ஆரம்பித்ததும் கவலையாகத்தான் இருந்தது.  என்ன பயன் ?  ஆனால் கவலைப்பட்டு நாளடைவில் கிளைபட்டுப் போய் விட்டது.

ஒருநாள் யாரோ பிச்சைக்காரன் மரத்தடியில் தகரக் குவளையையும் கழியையும் வைத்துக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தான். நல்ல வெயில் வேளை! பலமான காற்று ஒன்று அடித்தது. மளமளவென்ற ஓசையுடன் பட்டுப்போன கிளை திடீரென்று முறிந்து விழுந்தது.

கிளை விழுந்த ஒரு நிமிஷத்துக்குள் அங்கே பெரிய கும்பலும் கூக்குரலும் ஆகிவிட்டன. அந்தக் கலவரத்தில் முதலில் ஒன்றுமே தெரியவில்லை. பிறகு தலையில் காயமபட்ட ஓர் இளைஞனைத் தூக்கி ரிக்ஷாவில் ஏற்றிக் கொண்டு சிலர் சென்றபொழுதுதான் விஷயம் புரிந்தது. கீழே சென்றுகொண்டிருந்த இளைஞன் தலையில் கிளை விழுந்து, ஆபத்தை உண்டாக்கிவிட்டது! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததற்கோ, தெருப்புறம் கிளை நீண்டு சென்றதற்கோ நானா பொறுப்பு ? இந்தச் சின்ன விஷயம் அந்தக் கும்பலுக்குத் தெரியவில்லை. அடுத்தாற் போலப் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரனுக்கு ஒன்றும் நேரவில்லையே என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

ஒரே கும்பலாக விழுந்தடித்துக்கொண்டு பங்களா வுக்குள் நுழைந்தார்கள். பங்களாக்கார அம்மா பயந்து போய் முன் ஹாலுக்கு வந்தாள். ஆளுக்கு ஒருவராக, நெருப்புக் கக்க, தாறுமாறாகப் பேசினார்கள். "மரத்தை வெட்டிவிட்டு மறுகாரியம் பார்க்கிறீர்களா? இல்லை. நாங்கள் வெட்டி விடட்டுமா?" என்று அதட்டிக் கேட்ட போது அந்த அம்மாளுக்கு ஒன்றும் சொல்லத் தெரிய வில்லை. "ஐயா வந்தவுடன் சொல்லிச் செய்யச் சொல்லுகிறேன்" என்றாள். அதற்கு ஏற்றாற்போல, பங்களாக்காரர் நுழைந்ததும், கும்பல் அவர்மீது பாய்ந்தது. விஷயத்தை அறிந்துகொண்ட பங்களாக்காரர் இரண்டு நாளுக்குள் வெட்டி விடுவதாக உறுதி கூறியபின் கூட்டம் கலைந்தது. ஒருவன் மட்டும், "இப்பொழுதெல்லாம் வெட்ட வேண்டாம். ஓர் ஆளைக் கொன்ற பிறகு வெட்டலாம்” என்று அவருடைய உறுதிமொழியைக் கிண்டல் செய்துகொண்டே போனான்.

வீட்டுக்காரருக்கு ஒரே கோபம். மனத்துக்குள்ளாக என்மேல் பாய்ந்தார்; கும்பல்மேல் பாய்ந்தார்; இளைஞன் மேல் பாய்ந்தார். இரண்டு நாள் வரையில் இந்தப் பாய்ச்சல் ஓய வில்லை.

மூன்றாவது நாள் நகரசபையிலிருந்து மரத்தை வெட்டிவிடும்படி ஓர் அவசர உத்தரவு வந்தது. உத்தரவு வந்த பிறகு இந்தப் பாய்ச்சல் எங்கோ மறைந்து விட்டது. ஏலம் போடுகிற முயற்சி தோற்றுவிட்டதால் நகரசபையார் இந்த வேலையில் இறங்கிவிட்டதாக அவர் நினைத்துக்கொண்டார். பழையபடி வக்கீல் வீட்டுக்குப் போய், பதில் நோட்டீஸ் கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் வக்கீல் மட்டும் இதெல்லாம் பயன்படாதென்று சொல்லியும் இவருக்கு வீம்பு வந்துவிட்டது. என்ன ஆனாலும் வெட்டப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டார்.

நாளைக்கு நடப்பது இன்று யாருக்குத் தெரிகிறது?

அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கு பங்களாக்காரர் பங்களா முகப்பில் உட்கார்ந்திருந்தார். திடீரென்று ஒரு பெரிய கும்பல் பங்களாவுக்குள் ஆரவாரத்துடன் நுழைந்தது. உடனே அவருக்கு விஷயம் விளங்காமல் இல்லை. இருந்தாலும் ஊமையனைப்போல் கண்ணை உருட்டினார்.

"அந்தப் பையன் சாகவில்லை. யாராவது செத்தா லொழிய மரத்தை வெட்ட மாட்டீர்களாக்கும்!" என்று பலவாறாகக் கும்பல் இரைந்தது. "கோடாலிக்காரன் வரவில்லை. என்மேல் வஞ்சனை இல்லை" என்று ராஜ தந்திரத்தைக் கடைப்பிடித்தார்.

அவர் பேச்சு எடுபடவில்லை. கும்பலின் அட்டகாச மும் கொதிப்பும் ஏறிக்கொண்டிருந்தன. எந்த நிமிஷம் என்ன ஆகுமோ என்று அவருக்குத் திகிலாக இருந்தது. அந்தச் சமயத்தில் அத்தனை பேர் கவனத்தையும் இழுக்கக்கூடிய பெரிய சத்தம் தெருப்புறத்தில் கேட்டது.  கும்பல் முழுவதும் பறந்துவிட்டது. பங்களாக்காரரும் பின்தொடர்ந்தார்.

ஒரு பஸ் டைபாதை மீதேறி என்மீது முட்டிக் கொண்டு நின்றது. வண்டியை விட்டுப் பிரயாணிகள் கலவரத்துடன் இறங்கிக்கொண்டிருந்தார்கள், அதற்குள் இங்கிருந்து போன கும்பல், வீதிக் கும்பல் ஆக எல்லாமாகச் சேர்ந்துகொண்டு விட்டன. பத்து நிமிஷம் ஒரே குழப்பம்."இந்த மரம் மாத்திரம் இல்லாவிட்டால் என்ன கதியாகி யிருக்குமோ !" என்று ஜனங்கள் என்னைப் போற்றத் துவங்கிவிட்டார்கள். அதற்குப் பிறகுதான் விஷயம் விளங்கிற்று.

தெருவில் வந்துகொண்டிருந்த பஸ்ஸின் டயர் வெடித்துவிட்டது. பிரேக் பிடிக்கவில்லை. டிரைவர் ஏதோ கணக்குப் பண்ணி ஸ்டீயரிங்கை என்னை நோக் கித் திருப்பிவிட்டிருந்தான். என்மீது வண்டி மோதி நின்றுவிட்டது. நல்ல வேளை ! பஸ் பிரயாணிகள் 24 பேரில் ஒருவருக்கும் சொற்பக் காயங்கூட ஏற்பட வில்லை.

"மரத்தை வெட்டாததும் நல்லதாகத்தான் போச்சு. இல்லாவிட்டால் இத்தனை பேரும் எமப்பட்டணந் தானே?" என்று கும்பலில் பழைய சமாசாரத்தையும் இதையும் கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் என்ன, மரம் தானே ? பார்த்துக் கொண்டிருந்தேன்!

இது நடந்த பிறகு மரத்தை வெட்டவேண்டுமென்ற பேச்சை யாருமே எடுக்கவில்லை. ஆனால் பங்களாக்காரருக்கு மட்டும் என்னைப் பற்றிய நினைப்புத் தடித்து விட்டது. ஒரு சமயம் என்னை வெட்டி விடவேண்டு மென்று நினைப்பார்; மற்றொரு சமயம் கூடாதென்று நினைப்பார். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்,

ஆனால், இவ்வளவு குழப்பத்துக்கும் முடிவு ஏற்பட் டதே, அதுதான் அதிசயமாக இருக்கிறது, பஸ் வந்து. மோதிய மூன்றாம் நாள் மற்றொரு கிளையின் அடிப்புறத்திலிருந்து பால்விடாமல் வடிய ஆரம்பித்தது. இதை யார் கவனித்தார்களோ, எப்படித்தான் இந்த விஷயம் ஜனங்களிடையே பரவிற்றோ தெரியவில்லை - அன்று முதல் தெய்வமாகி விட்டேன்! தேங்காய் உடைத்துக் கர்ப்பூரம் ஏற்றும் பெருமை எனக்கு உண்டாகி விட்ட து. வெகு பக்தியுடன், வடிகிற பாலைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். பல் நோய்கள் குணமாவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள், பங்களாக்காரர் இதுவும் ஓர் ஆச்சரியமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒரு விஷயம்: இன்று உச்சிப் பொழுதுக்குப் பிறகு ஒரு விஞ்ஞானி இங்கு வந்தார். அவருடன் ஒரு மாணவனும் வநதிருந்தான். மரத்தில் பால் வடிவதை ஊன்றிப் பார்த்தார்கள்.

"உடம்பில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்வதைப் போல மரத்திலும் செடியிலும் ஜீவரசம் ஏறுவது இயற்கை. சிரங்கு வந்தால் சரீரம் பொத்துக் கொண்டு, ரத்தம் முதலியன வடிகின்றனவே, அதைப் போலவே மரத்தில் பொத்துக்கொண்டு ஜீவரசம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்' என்று விஞ்ஞானி மாணவருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

விஞ்ஞானி சொன்னது சரியா? ஜனங்கள் சொல்வது சரியா? எனக்குத் தெரியாது. 

நான் வெறும் வேப்ப மரந்தானே?

52 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. /// என் மலர்கள் தேனீக்களை அழிக்கும்.///

    என் மலர்கள் தேனீக்களை அழைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. ///என்மீது வண்டி மோதி வின்று விட்டது. ///

    என்மீது வண்டி மோதி நின்று விட்டது.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பு...

    தஞ்சை பட்டுக்கோட்டை சாலை விரிவாக்கத்திற்காக - சாலையோர மரங்கள் எல்லாம் அகற்றப்பட இருக்கின்றன..

    அவையனைத்தும் நூறாண்டுகளுக்கு மேற்பட்டவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தமிழகம் முழுவதும் பார்க்கும் காட்சி. முன்பு நான் வசித்த இடத்தில் சாலையில் இருபுறமும் மரங்கள் அணிவகுத்திருக்கும். 95 களில் சாலை விரிவாக்கம் என்று அத்தனையையும் சாய்த்து விட்டார்கள்.

      நீக்கு
    2. நான் அடிக்கடி நடைப் பயிற்சி செய்கின்ற பெங்களூர் பார்க் - 200 மீட்டர் சுற்றளவு கொண்டது. அந்தப் பார்க்கின் உள்ளே மொத்தம் 200 மரங்கள் உள்ளன! பெங்களூரு கார்டன் சிட்டி என்று அழைக்கப்படுவது சரிதான்.

      நீக்கு
    3. பெங்களூரில் நிறைய மினி ஃபாரஸ்ட் என்று சொல்லப்படுகிற இடங்கள் (70 மீட்டர் அகலம், 200-800 மீட்டர் நீளமுள்ள இடங்கள்) நிறைய உண்டு. அதற்குள் தினமும் நடைப்பயிற்சி செல்வதற்கான பாதை, சிறிய உடற்பயிற்சி செய்வதற்கான வசதி மற்றும் டாய்லெட் வசதிகள் உண்டு. இந்த இடங்களுக்குள் இருக்கும் மரங்கள் வெட்டப்படுவதில்லை. ஆனால் தற்போது பல இடங்களில் மெட்ரோ மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. கீதா மாமி அம்பத்தூர் வீட்டு வேப்ப மரம் என்று பின்னூட்டத்துடன் கட்டாயம் வருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... பின்னே அந்த நினைவு வராமல் இருக்குமா?!

      நீக்கு
    2. ஹூம், கிண்டலா இருக்கில்லையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உண்மையில் எங்க வீட்டு வேப்பமரம் தெருவை அடைத்துக் கொண்டு இருக்கும். வீட்டை விற்கும்போது கூட பில்டரிடம் கெஞ்சினோம், நான், மாமா, பெண், பையர் எல்லோருமே. அவர் கேட்கவில்லை. எனக்குப் பொழுது போக்கே அந்த வேப்பமரம் தான். இப்போதைக்கு அடுத்த தெருவில் அண்ணா வீட்டில் ஒரு வேப்பமரம் இன்னமும் இருக்கு. அதைப் பார்த்து ஆறுதல் அடையலாம், ஆனால் தெருவை அடைத்துக்கொண்டெல்லாம் இல்லை.

      நீக்கு
  7. எல்லாவற்றிர்க்கும் நம் மனதுதான் காரணம் என்பதை எவ்வளவு இலகுவாக இந்தக் கதை சொல்லிச்செல்கிறது.

    நமக்குப் பாதிப்பு என்ற எண்ணம் வரும்போதுதான் சென்டிமென்ட் அடிபடுகிறது. பக்கத்து இடத்தின் த்தென்னைமரம் நாங்கள் வாங்கியிருந்த இடத்தின் ஊடாகச் சென்றது. அப்போதுதான் அங்கு வீடுகட்டத் திட்டமிட்டிருந்தோம். இங்கெல்லாம் தென்னை தெய்வீகம். நீங்க வெட்டணும்னா வெட்டிக்கோங்க, நாங்க வெட்டமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். நாங்கள் வெட்டவேண்டியதாயிற்று.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய பொக்கிஷ பகிர்வாக வெளிவந்த வேப்பமரக்கதை நன்றாக உள்ளது. தன் அவஸ்தைகளை மரம் விளக்கிய முறை மனதை சங்கடப்படுத்தியது.

    வ. வே. சு அவர்கள் எழுதிய தமிழின் முதல் சிறுகதையான குளத்தங்கரை அரசமரத்தை இக்கதை நினைவூட்டியது. நானும் இம்மாதிரி ஒரு மரத்தைப்பற்றி ஒரு கதை எழுதியிருந்தேன். அதுவும் நினைவுக்குள் வந்தது.

    எங்கள் பிறந்த விட்டின் எதிரில் இருந்த பெரிய வேப்பமரம் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இருந்த மரம் (இப்போது இல்லை) காற்றில், மழையில், வெய்யிலில் என பல கதைகள் சொன்னது இன்றும் பசுமையாக மனத்துள் இருக்கிறது. அதன் உணர்வுகளை இக்கதையின் தெளிவாக விவரித்திருப்பது சிறப்பு.

    இன்று சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களின் தளத்திலும், வேம்பின் சிறப்பை விவரித்து இருக்கிறார். பொருத்தமாக அமைந்துள்ளது. இப்படியான மரங்களை நம் வசதிக்காக வெட்டுவது தவறுதான். இக்கதையின் முடிவில் தெய்வமே அதற்கு துணையாக நிற்பது நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இந்தக் கதையைப் படித்தபோது வ வே சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் நினைவுக்கு வந்ததது.  கூடவே நீல பத்மநாபனின் புளியமரம்!

      ஆம், நானும் செல்வாண்ணாவின் தளத்தில் வேம்பைப் பார்த்து வியந்து போனேன்.

      நீக்கு
    2. என் அப்பாவை அவர் அம்மா, சகோதரிகள், அதாவது என் பாட்டி, அத்தைகள் மற்றும் அப்பாவைச் சேர்ந்த உறவினர்கள் வேம்பு என்று அழைப்பார்கள்.

      நீக்கு
    3. ஶ்ரீராம்... உங்கள் அப்பா மூத்தவரா? அவருக்கு முன் பிறந்த குழந்தைகள் இறந்திருக்கிறதா அல்லது குழந்தை பிறக்க ரொம்ப வருடங்கள் ஆனதா?

      நீக்கு
    4. மூத்தவர்தான்.  முன் குழந்தைகள் பிறந்தனவா துன்று தெரியாது.  பாட்டி, அத்தைகள், அம்மாக்கள், அப்பா...  யாருமே இப்போது இல்லை!

      நீக்கு
    5. ஸ்ரீராம் - ஜ பிரதாபனுக்குத் தெரியுமா என்று கேட்கலாம். அவருடைய அத்தையின் குழந்தைகள் விவரம் அவருக்குத் தெரிந்திருக்கும்.

      நீக்கு
    6. பிரதாபனுக்கு நன்றாகவே என்னைத் தெரியும்.  ஆனால் இவ்வளவு விவரமாக இங்கு அதைச் சொல்ல வேண்டுமா என்ன என்று விட்டு விட்டேன். 

      நீக்கு
    7. என் அம்மாவின் பெயரும் வேம்பு. கடைசிக் குழந்தை. அவருக்குப் பிறகு பிறக்கக் கூடாது என்பதால் அப்படி வைத்ததாகச் சொல்லியதுண்டு. நம்பிக்கைகள் பலவிதம்.

      பிறக்கக் கூடாதென்று பிறந்ததால் வேம்பு - கசப்பு என்பதன் அடையாளமாகவும் வைத்ததாச் சொல்லியதுண்டு.

      கீதா

      நீக்கு
    8. எனக்கும் இந்தக் கதையைப் படித்தபோது வ வே சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் நினைவுக்கு வந்ததது. கூடவே நீல பத்மநாபனின் புளியமரம்//

      மீக்கும் நினைவுக்கு வந்தது ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    9. பிள்ளை முன்னவர்களைப் போல இல்லாமல் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காக பிச்சை, வேம்பு என்றெல்லாம் பெயரிடுவார்கள். கீதா ரங்கன் க்கா சொல்லியிருப்பது 'இதற்கு மேல் பெண் பிள்ள வேண்டாம்' என்பதற்காக இருக்கும் ஹா ஹா ஹா

      நீக்கு
  9. கம்ப்யூட்டர் கிராமம் என்று சுஜாதா ஒரு குறுங்கதை எழுதியிருக்கிறார். புளியமரம், அம்மன் என்றெல்லாம் கதை போகும். அக்கதையை இக்கதை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நினைவுக்கு வருகிறது.  மறுபடி எடுத்துக் படிக்க வேண்டும்.  அப்போதுதான் முழுசாக நினைவுக்கு வரும்!

      நீக்கு
  10. https://www.amazon.in/Computer-Gramam-Sujatha/dp/8184934580

    மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் நம்பிக்கைக்கும், புதிய விஞ்ஞான முயற்சிக்குமான முரண்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்களை திகைப்பில் ஆழ்த்துகின்றன சில வினோத நிகழ்வுகள். சரவெடி போல சுறு சுறுவென பற்றிச் செல்கிறது கதை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தொடர்-கதையாக கல்கியில் வந்த ‘கம்ப்யூட்டர் கிராமம்’ சுஜாதாவின் இஞ்சினியர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை என்னிடம் இருக்கும் தேடிப்பார்க்க வேண்டும்.  மறுபடி விலைகொடுத்து வாங்கவேண்டி இருக்காது!

      நீக்கு
    2. Kindle Unlimited
      Unlimited reading. Over 2 million titles. Learn more
      Read for Free

      நீக்கு
    3. கிண்டிலுக்கும் காசு கட்ட வேண்டும். கிண்டிலில் பல புத்தகங்கள் நான் படித்து வருகிறேன்.

      நீக்கு
  11. பெரிய எழுத்தாளர். என்றாலும் வீட்டு ஓனர் நினைத்ததை மரம் எப்படி அறிய முடியும் ? கதை சொல்கிறதே அது மட்டும் சாத்யமா என்று கேட்கிறீர்களா ? அது மரத்தின் பாஷை தெரிந்த எழுத்தாளர் நமது பாஷையில் நமக்கு சொல்வது என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலா மரம் காய்கள் அளிக்காமல் இருந்தால் அதனைத் திட்டுவதும், அடுத்த வருடம் நிறைய காய்கள் அளிப்பதுமான சம்பவங்கள் நடந்துவருவதைப் படித்திருக்கிறேன். திட்டியதால் பட்டுப்போன பழ பரத்தையும் நான்றிவேன்.

      நீக்கு
    2. மரங்கள் எல்லாமும் உயிருள்ளவை தானே எலுமிச்சை.நாரத்தை போன்றவை காய்க்கலைனால் பத்து வயதுக்குக் கீழுள்ள கன்னிக்குழந்தையைப் பௌர்ணமி அன்றிரவு வேர்ப்பாகத்தில் கீறி விட்டுச் செருப்பால் அடிக்கச் சொல்லுவாங்க. எங்க அம்பத்தூர் வீட்டில் எலுமிச்சை மரத்துக்கு என் அம்மா எங்க பெண்ணை வைச்சு இப்படிப் பண்ணினாங்க. பின்னர் பூப் பூக்க ஆரம்பித்ததும் புட்டுப் போட்டார்கள் அடுத்த பௌர்ணமியில். தென்னை மரம் பாளை விட்டாலும் புட்டுப் போடுவது உண்டு. தென்னையைத் தென்னம்பிள்ளை என்றே சொல்லுவார்களே! தெரியும் இல்லையா? இதெல்லாம் முன்னரே எழுதி இருக்கேனே.

      நீக்கு
  12. ஆனால் இப்பொழுது யோகம் அடிக்கிறது; நான் தெய்வமாகிவிட்டேன். எனக்கு வந்திருக்கும் பெருமையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.//

    ஹாஹாஹா ...இங்கு பல மரங்களும் குறிப்பாக அரசமரம், வேம்பு எல்லாம் நூல் சிவப்பு நூல் சுற்றப்பட்டு பல சாமி படங்களைக் கொண்டிருக்கும். விளக்கேற்றி பூஜை செய்யவும் செய்யறாங்க.

    இதில் ஒரு நன்மை உண்டு. இப்படியான மரங்களை வெட்டமாட்டாங்களே அட்லீஸ்ட் நம்பிக்கையின் பேரில் என்று தோன்றும். இங்கு மரங்களை ரொம்பவே கொண்டாடறாங்க.

    இப்ப மாநகராட்ச்சி ஒவ்வொரு பார்க்கிலும் தெருக்களிலும் உள்ள மரங்களில் நம்பர் எழுதி வைத்திருக்கிறார்கள்.

    இதெல்லாம் நல்லாருக்கு....ஆனால் மேம்பாலம் கட்ட மெட்ரோ ரயில் கட்ட வெட்டினாங்களே! அப்ப என்னாச்சு இது என்பது...முரண்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசாங்கத்துக்கு எல்லாமே லேட்டாக - பட்ட - பிறகுதான் புரியும்!

      நீக்கு
  13. ஆரம்பித்ததும் கவலையாகத்தான் என்ன பயன் ? இருந்தது.//

    கவலையாகத்தான் இருந்தது. என்ன பயன்?

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஒருநாள் யாரோ பிச்சைக்காரன் மரத்தடியில் தகரக் குவளையையும் கழியையும்//

    என் கீழே அல்லது என் கிளைகளின் நிழலில்/ என் அடியில் என்று சொல்லிருக்கணுமோ? மரம் தானே பேசுவது போலத்தான் என்பதால் கேட்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரமே சொன்னாலும் அப்படி சொல்லலாம் தவறில்லை.  என் கீழே என்று சொன்னால் சரியாக இருக்காது!

      நீக்கு
    2. ஓகே ஒகே....புரிந்து கொண்டேன்

      கீதா

      நீக்கு
    3. மரம் பேசுவதால் "என் நிழலில்" என்று மாற்றியிருக்கலாம்.

      நீக்கு
  15. மரங்களுக்கும் உணர்வுகள் உண்டு.

    அழகாக எழுதப்பட்ட கதை. மரத்தின் மூலம் மனித மனங்களை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்!

    மனிதர்கள் அப்படித்தான் தனக்கு நன்மை அளித்தால் ஒரு எண்ணம் ஏதாச்சும் ஆச்சுனா உடனே கெட்ட எண்ணம். இதுதானே மனித மனம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. இங்கும் சில வீடுகள் இருக்கின்றன வீட்டிற்குள் மரம் இருக்கும் ஆனால் அதை வெட்டாமல் நடுவில் வைத்து அதைச் சுற்றிக் கட்டியிருக்காங்க பழைய ஏரியாவில் பார்த்திருக்கிறேன். ஒரு வீட்ட்டில் அதை முற்றம் போல ஆக்கியிருந்தாங்க. மற்றொரு வீட்டில் அதை work area போல செய்துவிட்டிருந்தார்கள். சில கோவில்களில் கூட இப்படிச் செய்திருக்காங்க. எங்கள் ஏரியாவில் இருக்கும் ஆஞ்சு கோவிலில் அப்படி.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நான் வேப்ப மரம் தானே!!//

    ஆசிரியர் மிக அழகாக முடித்திருக்கிறார். அதில் பல விஷயங்கள் அடங்கி உள்ளன.

    வேம்பின் நன்மைகள் எவ்வளவு இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. யோசிக்க வேண்டிய விஷயத்தை எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்கிறார்! ந.பிச்சமூர்த்தியா கொக்கா? பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வேப்ப மரத்தின் சுயசரிதை நல்லதோர் கதையாக நன்று. பாலை வடியவைத்து வேப்பமரம் தப்பிவிட்டது.

    மரம் இருப்பதும் சில தடவை தொல்லை குப்பையை இறைக்கும் என்ற புலம்பல் வேறும் பற் பல.......
    இல்லாவிட்டால் 'வெயிலின் அருமை நிழலில் தெரியும்" கதைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்பதுதான் முதுமொழி.

      நீக்கு
  20. மிக அருமையான கதை. பிச்சமூர்த்தி அவர்களின் கதை முன்பு படித்து இருக்கிறேன்.

    மிக நேர்த்தியாக ஒவ்வொன்றாக சொல்லி கடைசியில் பால் வடிவதை சொல்லி அருமையாக நிறைவு செய்தார்.
    பகிர்வுக்கு நன்றி.

    கமலா அவர்களுக்கு நினைவு வந்தது போல "குளத்தங்கரை அரசமரம்" கதை எனக்கும் நினைவுக்கு வந்தது .

    மதுரையில் எங்கள் அம்மா வீட்டுப்பக்கம் இருக்கும் வேப்பமரங்களுக்கு வெள்ளிக்கிழமை என்றால் மஞ்சள், குங்குமம் வைத்து புடவை, அல்லது பாவாடை கட்டி ஊதிபத்தி காட்டுவார்கள். எங்கள் வீட்டை தவிர அந்த தெருவில் நிறைய வீடுகளுக்கு முன் வேப்பமரம் இருக்கும்.

    முன்பு அந்த மரங்களை படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்.
    அந்த வீட்டுக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலையில் ஊதுபத்தி காட்டி வணங்கி விட்டுதான் வேறு வேலை தொடங்குவார்கள்.


    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!