திங்கள், 10 மார்ச், 2025

"திங்க"க்கிழமை : சிக்கி - நெல்லைத்தமிழன்

 

 002- திங்கக்கிழமை .பதிவு சிக்கி - நெல்லைத்தமிழன்

 

இது என்னப்பா புதுப் பெயராக இருக்கிறது என்று யோசிக்காதீர்கள்.  நான் டயட் ஆரம்பித்த பிறகு, எப்போவாவது சாப்பிட வேர்க்கடலை வாங்கிவைத்திருப்பேன். வெறும் வேர்க்கடலை. பிறகு இந்த ஊரில் காங்கிரஸ் என்று சொல்லப்படும் மசாலாக் கடலையை வாங்கிவைக்க ஆரம்பித்தேன் (இது நம்ம ஊர் மசாலாக் கடலை கிடையாது. வேர்க்கடலையை எண்ணெய் விட்டு வறுத்து….இருப்பா..செய்முறையைச் சொல்லாதேஅதனை இன்னொரு திங்கப் பதிவுக்கு வைத்துக்கொள் என்று மனது சொல்வதால் இத்தோடு நிறுத்துகிறேன்) இன்னொரு ஐட்டம் உலர் திராட்சை. இரண்டையும் மிக அதிக அளவில் ஸ்டாக் வைத்திருப்பேன். 

இன்றைக்கு (7 ஜனவரி) திடுமென்று, நாமே கடலை உருண்டை செய்தால் என்ன? என்று தோன்றியது. அதற்காக வறுத்த கடலையில் தோலை நேற்று இரவு உரித்துவைத்திருந்தேன்.  இன்றைக்கு சமையல் அறைக்குள் நுழையும்போது, வெல்லத்துக்குப் பதிலாக ஜீனிப்பாகில் செய்தால் என்ன என்று தோன்றியது. 

தேவையான பொருட்கள்

தோலெடுத்து வறுத்த வேர்க்கடலை 1 கப்

ஜீனி ¾ கப்

¼ கப் தண்ணீர்

ஏலக்காய் பொடி 

செய்முறை

நான் நேற்று தோலெடுத்து வைத்திருந்த வேர்க்கடலை, இங்குள்ள கடும் குளிரால் கொஞ்சம் சவுக் சவுக் என்று ஆகிவிட்டதுபோலத் தோன்றியதால் முதலில் கடாயில் அதனைத் திரும்பவும் நன்கு சூடுபடுத்திக்கொண்டேன்.  (கிளறணும். இல்லைனா அடி பிடித்து கீழே உள்ள வேர்க்கடலை கறுத்துவிடும்) 

பிறகு ஒரு கடாயில் ஜீனியைப்போட்டு, தண்ணிரும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறணும். இல்லைனா, ஜீனி அடியில் தங்கி பாகு சரியாக வராது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு தடவை மைசூர்பாக் செய்யும் அவசரத்தில் அடுப்பை மீடியத்தில் வைத்து ஜீனியுடன் தண்ணிர் சேர்த்து, கிளறாமல் படம் எடுக்கும் அவசரத்தில் இருந்ததால் ஜீனிப்பாகில் கரையாத சர்க்கரையும் இருந்த தைப் பிறகு தெரிந்துகொண்டேன். 

நல்ல இரண்டு கம்பிப்பதம் வந்ததும்,  (அதாவது பாகின் ஒரு துளியைத் தண்ணிரில் விட்டுப் பார்த்தால் உடனே கெட்டியாகிவிடும்), அதில் ஏலக்காய் பௌடர் மற்றும் வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி தட்டில் கொட்டிவிட வேண்டியது தான். வெல்லப் பாகில் செய்தால் விரும்பிய ஷேப்பில் வெட்டிக்கொள்ளலாம். ஆனால் ஜீனிப்பாகில் செய்தால் அது வேர்க்கடலை வேர்க்கடலையாக உதிர்ந்துவிடும். இந்த ஜீனி வேர்க்கடலை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.












செய்து முடித்த பிறகு இதன் பெயர் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. மனைவியோ இதுதான் சிக்கிஎன்றாள். ஆனால் என் நினைவில் சிக்கி என்பது, நன்கு உடைத்த வேர்க்கடலையில் வெல்லப்பாகு சேர்த்துச் செய்வது. அதனைச் சிறிய சிறிய சதுரக் கேக் போன்று வெட்டி வைத்திருப்பார்கள். நம் ரெடி ரெக்கனர் கீதா ரங்கன் அக்காவிற்குப் போன் செய்து இதன் பெயர் என்ன என்று கேட்டதற்கு அவரும் சிக்கிஎன்றே சொன்னார். அதனால் பெயரில் தவறு இருந்தால் கீதா ரங்கனைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். நான் பொறுப்பில்லை. ருசிக்கு நான் பொறுப்பு.

செய்த சிக்கி பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணினேன்.

இது என்ன இவ்வளவு சுலபமான ஒண்ணை திங்கப் பதிவுக்கு எழுதியிருக்கிறாயே என்று யார் கேட்டாலும், கீதா சாம்பசிவம் மேடம் மாத்திரம் கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அவர் வெந்நீர் எப்படிப் போடுவது என்று ஒரு தடவை பதிவு போட்டவரல்லவா

23 கருத்துகள்:

  1. ​வெல்லம் போட்டு செய்தால்தான் சிக்கி. ஜீனி போட்டு செய்தால் அது ஜிக்கி.
    பீகார் மாட்டு புல் ஊழல் போல் மகாராஷ்டிரா சிறுவர் சிக்கி ஊழல் பற்றி தெரியுமா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... தமிழ்நாட்டுல லட்சம் கோடியை அடிச்சிருக்காங்களாம் இந்த 4 வருடத்தில் (அதற்கும் மேலே இருக்கும்னு சொல்றாங்க) அதில் ஒரு துறையில் ஃபேக்டரில இருந்து வரி கட்டாம சரக்கு கடைகளுக்கு 40 சதம் போகுதாம் அதுல நேரடியா ஆயிரம் கோடிக்கணக்கில் மாத வருமானமாம்னுலாம் செய்திகள் பார்க்கிறேன். இதுல லல்லு, மஹாராஷ்ட்ராலாம் ஜுஜுபி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி. நேற்று மிக அழகிய, அனேகமா சோழர் காலக் கோயிலைப் பார்த்தேன். நேற்றைய பயணம் மணலில் 4-5 கிமீ நடை, பல கோயில்கள் தரிசனம் என்று முடிந்தது.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில், தங்களது செய்முறையான சிக்கி (உதிரி இனிப்பு வேர்க்கடலை) நன்றாக வந்துள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பாலாஜியின் படம் கண்டு தரிசனம் செய்து கொண்டேன். அவரும் விருப்பமாக தாங்கள் செய்து படைத்ததை உண்டிருப்பார். நீங்களும் பொறுமையாக செயல்பட்டு நன்றாக செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ஆம். வெல்லப்பாகு என்றால் நம் விருப்பத்திற்கு ஓரளவு வளைந்து தரும். அதுவும் நம்முடன் சிறிது கோபித்துக் கொண்டால், போச்சு..! வெல்லப்பாகில் கடலைஉருண்டைகள் பிடிப்பது சுலபம். அதே வெல்லப்பாகில், நீளமாக செய்வதைதான் இங்கு "சிக்கி" என்கிறார்கள். கையில் எடுத்து உடைத்தால் சுலபமாக உடைந்து விடும்.

    நீங்கள் செய்த இதற்கு ஒரு பாகு (ஜீனி பாகு) முன்னதாக எடுத்திருந்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி கட் பண்ண வந்திருக்கும்..என நினைக்கிறேன். !

    "லட்டு" எனப்படுவதை உருண்டையாக வரும் போது, லட்டுருண்டை. அதே ஜீனிப்பாகு முதிர்ந்தால் "பூந்தியாகி" விடுகிறது. இந்தப் பெயர்கள் எல்லாம் நாம் வைப்பதுதான். அது போல் ருசிகளும் நம் நாக்கு வரைதான்.

    நேற்று காலை எங்கள் வீட்டில் காலை உணவு இந்த காங்கிரஸ்தான். கூடவே ராகி கஞ்சி. (சிறிதளவு வெல்லப்பொடியுடன் பால் விட்டு) வேர்க்கடலை தீடிரென அதிகமாக உண்டாலும், பித்தத்தை அதிகமாக்கும். (அது என்னளவில் அனுபவமான உண்மை. இன்றும் அது தொடர்ந்தது. ) ஆனால், தினமும் நாலு பருப்பு என எடுத்துக் கொண்டால் அது சத்துள்ள ஆகாரம்.

    தங்களின் இன்றைய அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.ஒரு நாள் நானும் இது போல் செய்து பார்க்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீனிப்பாகு (முற்றிய பாகு) வைத்துச் செய்தால் உதிர்ந்துவிடாது? வெல்லத்தில் முற்றியபாகு நெருக்கிவைத்துக்கொள்ளும். அந்தத் தன்மை ஜீனிக்குக் கிடையாது இல்லையா?

      ஓ..ஜீனிப்பாகு முதிர்ந்தால்தான் பூந்தியா? நான் லட்டா பிடிக்கலைனா பூந்தி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எனக்கு நல்ல கிராம்பு, பச்சைகற்பூரம் போட்ட பூந்தி ரொம்பப் பிடிக்கும்...யாராவது செய்துதருவார்களா என்று யோசிக்கிறேன். கடைகள்ல அவ்வளவு ருசி வருவதில்லை.

      நான் வேர்க்கடலை பைத்தியமாகிவிட்டேன் சில வாரங்களா (2-3 வாரங்கள்). அதாவது கடையில் வேர்க்கடலை (காய்ந்தது) கிலோ 130 ரூ வாங்கி, அதில் 1 டம்ளர் தினம் தண்ணீரில் ஊறவைத்து முழுவதையும் சாப்பிட்டுவிடுவது. பையன் சொல்றான், அதெல்லாம் கொலஸ்டிரால், வேண்டாம் என்கிறான். நான் புரோட்டீன் என்று சொன்னால், அதனால் பிரயோசனமில்லை என்கிறான்.

      நீக்கு
    2. நான் பல கடைகளில் 'காங்கிரஸ்' வாங்கிவிட்டேன். ஆனால் மிக ருசியாக, பெருங்காயம்லாம் போட்டுச் செய்யும் ஒரு கடையை ஸ்ரீநிவாசா நகரில் கண்டுபிடித்துவிட்டேன் (கிலோ 300 ரூ). அதற்காக ஆட்டோவில் போய் அங்கு வாங்கிவருவேன். இதை எழுதும்போதும் என்னிடம் 1 கிலோ ஸ்டாக் இருக்கிறது (1/4 கால் கேஜி பாக்கெட்டுகளாக்). மிக ருசி. இதைத் தவிர எனக்கு ஆக்ராவில் வாங்கின இதைப்போன்ற கடலை, உப்பு போட்டு தாளிதம் செய்தது மிகவும் பிடித்திருந்தது. என் கால்குலேஷன் மிஸ்டேக்கால், அரைகிலோ 100 ரூ என்று அவன் சொன்னதைத் தவறாக கிலோ 400 ரூபாயா என்று மலைத்து ஒரு அரைக்கிலோ மாத்திரம் வாங்கினேன். இரயில் பயணத்தின்போதுதான் அடடா சிறிய மிஸ்டேக், நிறைய வாங்காமல் இருந்துவிட்டேனே என்று தோன்றியது (எதை எடுத்தாலும் படம் பிடித்துக்கொள்வேனே.. அதையும் ஒரு நாள் பகிர்கிறேன்)

      நீக்கு
  4. இப்போதெல்லாம் கடைகளில்
    கூட ஜானி பாகில் தான் வேர்க்கடலை உருண்டை வேர்க்கடலை பர்பி செய்கிறார்கள். இது உடல் நலத்திற்கு நல்லது அல்ல.
    வெல்லப்பாகில்தான் செய்யவேண்டும்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சக்ரபாணி சார். அவங்க நிறைய குளூகோஸ் சேர்ப்பதைத்தான் நீங்க சொல்லியிருக்கீங்க. கடலை உருண்டை செய்வது சுலபம். கடைகளில் வாங்கி எதற்கு நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்?

      நீக்கு
  5. ஜீனிபாகு என்று படிக்கவும்

    பதிலளிநீக்கு
  6. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. சிக்கி நன்றாக இருக்கிறது. இனிப்பு சாப்பிடுவதை குறைத்து வருகிறேன் என்று சொல்லி கொண்டே இனிப்பு சாப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

    செய்முறையும் , படங்களும் அருமை. இங்கு கடைகளில் வேர்க்கடலையை பொடித்து வெல்லம் கலந்து செய்து கட்டம் கட்டமாக இருப்பதை சிக்கி என்றே போட்டு இருக்கும் கவரில்.

    முழுதாக வெல்லப்பாகில் போட்டு கட்ட கட்டமாக உள்ளதை கடலை மிட்டாய் என்று கவரில் போட்டு இருக்கும்.

    சாளக்கிராம பெட்டிகளா சுவாமி முன்னால்.?

    வறுத்த வேர்கடலை சாப்பிட்டவுடன் சிறிது வெல்லம் தருவார்கள் அம்மா. அப்போதுதான் பித்தம் வராது என்று.

    வெல்லபாகு வைக்காமல் நான் கடலை உருண்டை பிடிப்பேன், வறுத்த வேர்கடலை பொடியுடன் வெல்லபொடி சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஒரு சுற்று மிக்ஸியில் சுற்றினால் உருண்டை பிடிக்கலாம். அதிகமாக சுற்றினால் கடலை எண்ணெய் கக்கி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். இனிப்பு சாப்பிடுவதை மிகவும் குறைத்துவிட்டேன். இந்த சிக்கியில் ஓரிரு ஸ்பூன் சாப்பிட்டிருந்தாலே அதிகம். வீட்டு உதவியாளருக்குக் கொடுத்துவிட்டோம். செய்வதில் ஆசை.

      இப்போ கடலைமிட்டாயில் ஆசையில்லை. காரணம் அவங்க க்ளூகோஸ் போன்று கலப்படம் செய்யறாங்க. மனைவி செய்தால் இரு நாளைக்கு ஒருதரம் ஒரு உருண்டை சாப்பிடுவேன். தினமும் எடை பார்த்து நோட்டில் குறிப்பேன். உணவுத் தவறு மறுநாளே தெரிந்துவிடும்

      வேர்கடலை பொடி உருண்டை செய்ததில்லை

      நீக்கு
  9. சிக்கி அழகிய படங்களுடன் நன்றாக உள்ளது.
    பெருமாளுக்கும் படைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. சிக்கி நன்றாக உள்ளது...
    தெளிவான படங்கள்...

    ஆனாலும் ,
    இவற்றில் எல்லாம் விருப்பம் இல்லை இப்போது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்.. மற்ற இனிப்புகளில் விருப்பம் இல்லைனா புரிஞ்சிக்க முடியும். வேர்கடலை உருண்டை நல்லதாயிற்றே.

      நீக்கு
  11. வேர்க்கடலை உருண்டை அடிக்கடி பண்ணுவேன். இப்போதெல்லாம் பண்ண முடிவதில்லை. வில்லை மாதிரி வர வெல்லப்பாகிலேயே சேர்த்துக் கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிச் சமன் செய்து விட்டு வில்லை போட்டால் நன்றாகவே வரும். இங்கே மளிகைக்கடையில் கோயில்பட்டிக் கடலை மிட்டாய்ப் பாக்கெட் கிடைக்கும். மாசம் நாலைந்து வாங்கி வைத்துக் கொள்வேன். காலை மருந்து சாப்பிட்டதும், மத்தியானம் சாப்பாட்டின் பின்னர், இரவு மருந்துக்குப் பின் என எடுத்துப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். மீண்டும் தமிழரானதுக்கு வாழ்த்துகள் (ஹா ஹா ஹா..இப்போல்லாம் எப்போதாவது வந்தாலும் ஆங்கிலத்தில்தான் உங்கள் பின்னூட்டங்கள் பார்க்கிறேன்). நான் இதுவரை வில்லைபோலப் பண்ணியதில்லை. பண்ண ரொம்பவே ஆசை.

      நிறையபேர் (அதாவது 60+) இனிப்புகள் சாப்பிடுவதை விட்டுவிட்டோம் ஆனால் இனிப்புமேல் ஆசை வரும்போது கடலைமிட்டாய் ஒன்று சாப்பிடுவோம் என்கின்றனர். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது.

      அடுத்த முறை உங்களைப் பார்க்கவரும்போது நினைவாக நல்ல ஸ்வீட்கள் எடுத்துவரவேண்டும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!