தான் படித்த பள்ளியை பளபளப்பாக்கிய சென்னை தொழிலதிபருக்கு பாராட்டுகள்: ரூ.2.15 கோடி செலவழித்து அசத்தல்..
பெரம்பலுார் : தான் படித்த பள்ளிக்கு 2.15 கோடி ரூபாய் செலவழித்து, பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ள சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. பெரம்பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி, 61. சென்னை அசோக்நகரில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், 'வெரிடாஸ் பவுண்டேஷன்' என்ற நிதி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்தார். அப்போது, தான் படித்த லாடபுரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்றார். அப்போது, 1980ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும், பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், இதனால், 166 மாணவ - மாணவியரே தற்போது அங்கு படிப்பதையும் அறிந்தார். தொடர்ந்து தன் சொந்த செலவில், வெரிடாஸ் பவுண்டேஷன் வாயிலாக, 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு' பள்ளி திட்டத்தின் கீழ், தேவையான அடிப்படை வசதிகளை பள்ளிக்கு செய்து தர முடிவு செய்தார். சிதிலமடைந்த பள்ளி மேற்கூரை, சுற்றுச்சுவர், விழா மேடை, கலையரங்கம், குளிர்சாதன ஆய்வகம், கழிப்பறை, 'சிசிடிவி' கேமரா, கண்கவர் கார்டன், விளையாட்டு மைதானம், காய்கறி தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளார். இதற்காக, 2.15 கோடி ரூபாய் செலவழித்துள்ளார்......
==================================================================================================
==============================================================================================

இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். தாய் தந்தை உயிரிழந்த நிலையில், அத்தையின் அரவணைப்பில் குழந்தைகள் படித்து வந்தனர். இந் நிலையில் அவர்கள் வசித்து வந்த வீடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகள் கொட்டும் மழையில் தங்குவதற்கு கூட வீடின்றி தவித்து வந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனை அறிந்து காரைக்குடியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், நம்ம கோவிலூர் நண்பர்கள் சேர்ந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் தங்களின் நிதி பங்களிப்போடும், பிறரின் பங்களிப்போடும் தற்போது ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் குயில் கூடு என்று பெயரிட்டு ஒரு வீட்டை கட்டிக் கொடுத்துள்ளனர். தாய், தந்தையை இழந்து வீட்டையும் இழந்து தவித்த குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்தது ஊர் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
===========================================================================================
நான் படிச்ச கதை (JKC)
தூண்டில் புழுக்கள்
கதையாசிரியர்: இந்துமதி
ஆசிரியர்
பற்றிய விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இவர் பற்றிய செய்திகள் சில சில்லறையாக
கிடைத்ததை தருகிறேன்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்நர்மா என்னும்
ஊரைச்சேர்ந்த இவரது தாத்தா லட்சுமி நரசிம்மன் பெரிய ஜமீன்தார். அவருக்கு 860 ஏக்கர் நிலங்கள் இருந்தது. பாட்டி
பெயர் ராஜம்மாள். அம்மா பெயர்
அமிர்தவல்லி. கணவர் பெயர் ரங்கன்.
இந்துமதி
அவரது பெற்றோர் இட்ட பெயர் அல்ல. அவரது கடைசி தங்கை பெயர் இந்துமதி. அப் பெயரிலேயே இந்துமதி தனது படைப்புகளை
எழுதினார்.
முதன்
முதலாக 18 வயதில் பாவாடை தாவணியில் விகடன் ஆபிஸில்
மணியனைச் சந்தித்து அவருடைய கதையொன்றை பிரசுரத்திற்கு கொடுத்தார். கதையை எழுதியவர் பெயரோ, கதைக்கு தலைப்போ இல்லை. என்று மணியன் சுட்டிக்காட்ட புனைபெயராக கடைசி
தங்கை இந்துமதியின் பெயரை கூறினார் இந்துமதி. மணியன் தான் கதைக்கு பந்தம் என்று பெயர் சூட்டினார்.
கணவர் 2024 செப்டம்பரில் மறைந்தார்.
சத்ய சாய், பங்காரு
அடிகளார் ஆகியோரின் பக்தை. அதேபோல்
ஜெயலலிதா, துர்கா ஸ்டாலின்
ஆகியோர் இவரது நெருங்கிய தோழிகள். மூப்பனாருடனும்
பரிச்சயம் உண்டு.
இவரது எழுத்துலக தோழி சிவசங்கரி. இருவரும் சேர்ந்து ‘இரண்டு பேர்’ என்று ஒரு தொடர்கதை குமுதம் வார இதழில் எழுதினர்.
இவர் எழுதிய ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ மிகவும் பிரபலமான ஒன்று.
இவர்
திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.
அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக
இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத்
தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.
விபரீதமான எழுத்தாலும், செயலாலும் சர்ச்சைகளுக்கு உள்ளாவது இவரது
சிறப்பம்சம். பின்வரும் கதையும்
கண்டனங்களை பெற்ற ஒன்றே.
(பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு, மாலன் இவர் எல்லோரும் நெருங்கிய தோழர்கள். இவரது 'தரையில் இறங்கும் விமானங்கள்' சென்னைத் தொலைக்காட்சியில் தொடராக வந்ததது. ரகுவரன் நடித்திருந்தார். அதில் SPB குரலில் அழகிய பாரதியார் பாடல் துணுக்குகள் இடம்பெற்றிருந்தன. அவை கிடைக்குமா என்று எழுத்தாளர் இந்துமதியிடம் கேட்டிருக்கிறேன். பதில் இல்லை. தனது தி மு க ஆதரவு நிலைத் தகவல்களால் பேஸ்புக்கில் பலத்த எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறார். சென்ற வாரம் வியாழக்கிழமைப் பதிவில் இவர் சிலாகித்த கல்மண்டபம் (வக்கீல் சுமதி எழுதியது) பற்றி பகிர்ந்திருந்தேன். - ஸ்ரீராம்)
தூண்டில் புழுக்கள்
அன்று காலை சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது
அவளுக்கு. நேற்று ஞாயிற்றுக்கிழமையானதால் அலுவலகமில்லாதது நிம்மதியாக இருந்தது.
இன்று திங்கட் கிழமை போயாக வேண்டும்.
ஒன்பதரை மணிக்கெல்லாம் ரிஜிஸ்டரில் கையெழுத்து
போட்டாக வேண்டும். அதன் பின் மேனேஜிங்
டைரக்டர் எம்.சிவக்குமார் எனப் பெயர்
பலகையிட்ட அறைக்குள் நுழைய வேணடும். அதை நினைத்தபோதே அடிவயிறு சுருண்டது. உள்ளே அமிலம் சுரக்க ஆரம்பித்தது. அவளைக் கண்ட உடனே அவனது முகம் இறுகும். கண்களில் கோபம் எட்டி பார்க்கும். பேச்சு சுறுசுறுவென்று காந்த தொடங்கும்.
“ஏன் லேட்டு?”
“எங்க கரெக்டா வந்திருக்க? கடிகாரத்தப்பாரு… பத்து நிமிஷம் லேட்.”
“உங்க கடிகாரம் பத்து நிமிஷம் பாஸ்ட்டு சார்….”
“என் ரூம் கடிகாரத்தைப் பத்தி எனக்கே சொல்றியா…?”
என்று ஆரம்பித்து அரை மணி நேரம் நிற்க வைத்து
டியூஷன் எடுப்பான். பின் குறிப்பிட்ட
ஒரு பைலை கொண்டு வர சொல்வான். அதில்
ஆயிரம் தப்பு கண்டுபிடித்து முகத்தில் தூக்கி எறியாத குறையாக மேஜை மீது வீசுவான்.
அல்லது தரையில் விட்டெறிவான். சிதறிப் பறக்கும் காகிதங்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு
அவள் வெளியே வர வேண்டும். பின் மெதுவாக
அத்தனை காகிதங்களையும் அடுக்கி மீண்டும் பைல் பண்ணவேண்டும். பைல்கள் தான் மாறுமே தவிர நிகழ்ச்சிகள் மாறுவதில்லை.
நாள் தவறாமல் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
அவள் வேலையில் சேர்ந்து ஒரு மாதமாகிறது.
இந்த ஒரு மாதத்தில் முதல் பதினைந்து நாட்கள்
நல்லபடியாகத்தான் போயிற்று. மகா மகா
என்று வாய் நிறைய கூப்பிட்டான். சிரித்தவாறே
வேலை வாங்கினான். தப்பு செய்தால் மெதுவாக சுட்டிக்காட்டினான்.
“பார்த்துக்க மகா… அடுத்த முறை இந்த தப்பு நடக்கக்கூடாது.”
“நடக்காது சார்… பார்த்துக்கறேன்.”
“தட்ஸ் குட்… எல்லாத்தையும் ரொம்ப சீக்கிரம் புரிஞ்சுக்குற மகா… ”தட்டிக் கொடுக்காத குறையாக சிரித்தான்.
கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் இது போல்
நிம்மதியாகத் தானே போயிற்று….
அதன் பின் என்னவாயிற்று? ஏன் இவ்வாறு சிடுசிடுக்கிறான்? என்ன தப்பு செய்தோம். நினைத்து நினைத்து பார்த்தாள். ஒன்றும் பிடிபட வில்லை. யாரிடம் இதை பற்றி பேசுவது என்றும் தெரியவில்லை.
அலுவலகத்தில் பத்து ஆண்களுக்கிடையே மூன்றே
பெண்கள் தான் இருந்தனர். நான்காவதாக தான் இவள் போய் சேர்ந்தாள். இவளுக்கு அவனின் காரியதரிசி வேலை. ஜானகி டெலிபோன் ஆபரேட்டர். கிட்டத்தட்ட
இவள் வயதிருக்கும். குழந்தையாக இருந்த
போது போலியோ வந்து வலது கால் சூம்பி போனதால்
இழுத்து இழுத்து நடந்தாள். விஜயலட்சுமிக்கு
கம்ப்யூட்டரில் வேலை, நல்ல கறுப்பு. ஆனால் களையான முகம். திறமைசாலி
எனப் பேசிக் கொண்டார்கள். மூன்றாவது டெய்சி. உயரமும், வாளிப்புமாக ஜாதிக்குதிரை மாதிரி ஆபீஸை வலம் வருவாள்.
டெய்ஸி மேடம்,
டெய்ஸி மேடம் என்று எல்லோரும் அவளைச் சுற்றுவார்கள்.
எம்டி. யிடம் எது தேவை என்றாலும் சிபாரிசுக்கு டெய்ஸியிடம் தான் போவார்கள். என்ன மாயமோ? அவளிடம் கேட்டால் நடந்து விடுவதை இவளும் கவனித்திருக்கிறாள். இந்த மூன்று பேரிடமோ அல்லது அவர்களில் ஒருவரிடமோ
இது பற்றி பேசி விடுவது என்கிற முடிவுடன் தான் அன்று அவள் அலுவலகம் சென்றாள்.
அன்றும் அவனிடம் பைலெறி,
முகத்தடி எல்லாம் வாங்கி கொண்டு பகல் சாப்பாட்டு
நேரம் வரை காத்திருந்தாள். வழக்கமாக
தன் மேஜைலேயே லஞ்ச் சாப்பிட்டு முடிப்பவள். டிபன் பாக்ஸூடன் அவர்கள் மூவரையும் தொடர்ந்து சாப்பாட்டு அறைக்கு போனாள்.
அவர்களுடன் அமர்ந்து தன் சாப்பாட்டு டப்பாவை
திறந்தாள்.
“என்ன மகா… இன்னிக்கு எங்களோடு சாப்பிட வந்திருக்க?”
ஜானகி தான் முதலில் ஆரம்பித்தாள்.
“இல்ல.. உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்” என்று தயங்கினாள்.
“நீ என்ன கேக்கப்போறேன்னு எங்களுக்கு தெரியும்.
நீயா கேட்கணும்னு தான் இத்தனை நாள் நாங்களும்
பேசாமலிருந்தோம்.” விஜயலட்சுமி சொன்னாள்.
“நான் கேட்கப்போறது உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அட அதையெல்லாம் நாங்களும் அனுபவிச்சவங்க தானே”
இது டெய்ஸி.
“அப்படின்னா எம்.டி. உங்களை சிடுசிடுத்தாரா?”
“சிடுசிடுக்கிறது. பைல தூக்கி எறியுறது எல்லாம் எங்களுக்கும் தான்
நடந்திச்சு.”
“ஆனா இப்போ.. உங்க யார்கிட்டேயும் கோவம் காட்டலையே.”
“நாங்க ஆறின கஞ்சி பழங்கஞ்சி. நீ தானே இப்ப பால் பாயாசம்.”
“புரியலைப்பா..உஸ்”
“அவருக்கு தர வேண்டியத நீ இன்னும் தரல. அதான் சிடுசிடுக்குறாரு. தந்தா சரியா போயிடுவாரு.”
படம் உதவி Meta AI
“அவருக்கு தர என்கிட்ட என்ன இருக்கு? ஜானகி?” என்று அதிர்ந்தாள் அவள்.
“கால்நொண்டியான என்னைக்கூட விடல. கால்தானே நொண்டி. ஆனா உடம்பு நல்லாத்தானே இருக்குன்னு கேட்டாரு.
எந்த குறையுமில்லாம வேக வச்சு தோலுரிச்ச சேப்பங்கிழங்கு
மாதிரி வெள்ளை வெளேர்னு லட்சணமா இருக்குற நீ அவரை கண்டுக்காம இருந்தியானா விட்டுருவாரா?”
அவுள் மனது பதறிற்று.
உள்ளுக்குள் துடித்தது.
“அப்படியானால் அத்தனை கோபமும் அதற்காக? அதற்கு தானா…?”
“பின்ன வேற எதுக்கு? பார்க்க நல்லா இருக்கான். பணக்காரன் ஆபீசுக்கு சொந்தக்காரன். அப்படிப்பட்டவனை அவன்கிட்ட வேலை செய்யுற நீ கண்டுக்கலேன்னா
தாங்குவானா? ஈகோ விட்டுருமா?”
“ஆபீஸ் வேலை செய்யத்தானே வந்தேன்?”
“ஆபீஸ் வேலையில் இதுவும் அடக்கம்.”
“அப்படின்னா… நீங்கள்ளாம்?”
மருட்சியோடு முகம் வெளிற குரல் கரகரகக்க
கேட்டவளுக்கு டெய்ஸி பதில் சொன்னாள்.
“இதப்பாரு மகா… நாங்க மூணு பேருமே வித்தான், வித் அவுட் இல்ல. இந்த சிவகுமார்
மட்டுமில்ல மகா. ஆபீஸுக்கு ஆபீஸ் மகளிர்
மட்டும் நாஸர்கள் இருப்பாங்க. ஆனா
நாம ரேவதியோ, ஊர்வசியோ, ரோகிணியோ கிடையாது. அது படம். அவுங்களோடது நடிப்பு. ஆனா நம்முடையாது
நிஜம். எப்போதும் கசக்கும்.
சுடும்.” டெய்சியின்
குரல் இறங்கி தழுதழுத்ததை உணர்ந்தாள் அவள்.
“என்ன செய்யிறது மகா. வேலை அவசியம் தேவைன்னு தானே வர்றோம். வரும்போதே வீட்டு நிலைமையை கேட்டு தெரிஞ்க்கறாங்கல்ல…
நம்ம தேவையும், இயலாமையும் புரியும்போது அதை உபயோகிக்கப் படுத்திக்கறாங்க.”
வழி இல்லேன்னா விட்டுக் கொடுக்கணும்.
வழி இருந்திச்சுன்னா எட்டி உதைச்சிட்டு போகலாம்.”
“விட்டுக் கொடுக்கப் போறியா அல்லது எட்டி உதைக்கப்
போறியான்றது உன்னை பொறுத்த விஷயம் மகா…”
அன்று இரவு முழுதும் தூங்காமல் தவித்தாள்.
அவள் எப்படியாவது வேலையில் இருக்க வேண்டுமா
என்று தோன்றியது. ஏற்கனவே ஒரு வருடம்
வீட்டில் இருந்தாயிற்று. படிப்பிற்கு
சம்பந்தமற்ற நிறைய வேலைகள் செய்தாயிற்று. விற்பனைப் பெண் வேலையெல்லாம் கூடப் பார்த்தாயிற்று. அங்கெல்லாம் கூட சின்னச் சின்னதா இது போன்ற தொந்தரவுகள்
இருக்கத் தான் செய்தன. அவர்கள் யாரும்
முதலாளிகள் இல்லாத காரணத்தினால் முறைப்பிலும் அதட்டலிலும் அடக்க முடிந்தது.
ஆனால் இங்கு முதலாளியே இப்படி செய்கிறபோது?
அவனுக்கு இணங்கி வேலையில் இருக்கத் தான்
வேண்டுமா?
அம்மாவிடம் சொன்னால் அரண்டு போவாள்.
ஏற்கனவே பத்து மாத வீட்டு வாடகை பாக்கி.
சாமான்களை எடுத்து வெளியில் வைக்கிற நிலைமையில்
கிடைத்த வேலை. உடனடியாக வேலையை காரணம்
காட்டி வீட்டை தக்க வைத்து கொண்டாயிற்று. இப்போது வேலை இல்லை என்றால்? வீட்டின் சொந்தக்காரர் வாரி வெளியில் வீசத் தயங்க மாட்டார். ஜானகியும், விஜயலட்சுமியும், டெய்ஸியும்
கூட இது போன்ற சங்கடங்களுக்காகதான் பெரிதான சங்கடத்தை சகித்து கொண்டிருக்கிறார்களோ?
புது டெல்லியில் ஓடும் பஸ்ஸில் அந்த பெண்ணை
சிதைத்ததற்கு இது போன்ற சிவகுமார்கள் வெளியில் தெரிய வராமல் ஏசி அறைக்குள் சிதைப்பதற்கும்
என்ன பெரிய வித்தியாசம்? விழிகளின்
ஓரம் நனைந்து தலையணையில் வழிந்தபோது பக்கத்து போர்ஷன் கடிகாரத்தில் மணி மூன்றடிப்பது
கேட்டது.
மறு நாள் காலை முடிவு செய்ய இயலாத குழப்பத்துடனே
அலுவலகம் கிளம்பினாள். டிபன் பாக்ஸை புடவைத் தலைப்பால் துடைத்து அவளிடம் நீட்டிய அம்மா அவள் முகத்தை
பார்த்துக் கொண்டே சொன்னாள்.
“ரேஷன் அரிசி தீர்ந்துபோச்சு மகா. வீட்ல அஞ்சு பேர் சாப்பிடறோம். ஒண்ணாம் தேதிக்கு மேலதான் மறுபடியும் ரேஷன் அரிசி
கிடைக்கும். ஆபீஸ் போற போது நாடார்
கடைல பத்து கிலோ அரிசிக்கு சொல்லிட்டு போ. சம்பளம் வாங்கினதும் பணம் தர்றதா சொல்லு.”
அம்மாவை ஏறிட்டாள்.
“என்ன மகா… பார்க்கற…?”
ஒண்ணுமில்லம்மா.
கதவை தாள் போட்டுக்க. மளிகை கடைல சொல்லிட்டு போறேன். என்று கூறியபோது போராட்டம் நின்று ஒரு முடிவிற்கு
வந்தவளாக படியிறங்கி மெல்ல தெருவில் நடக்க ஆரம்பித்தாள் அவள்.
–
ஆகஸ்ட் 2013
பின்னுரை.
இக்கதைக்கு ‘தூண்டில் புழுக்கள்’ என்ற தலைப்பு சரியில்லை என்பது எனது கருத்து,
தூண்டில் புழுவானால் விழுங்கும் மீனுக்கும்
அல்லவா ஆபத்து காத்திருக்கிறது. வேண்டுமானால் தலைப்பை ‘வலையில் சிக்கிய புறாக்கள்’ என்று மாற்றலாம். வேடன் விரித்த வலையில் இருந்து தப்பிக்க முடியாத
நிலையில் அவதிப்படும் புறாக்கள் போல நான்கு பெண்களும் இருக்கின்றனர்.
பாலச்சந்தரின் ‘அரங்கேற்றம்’ திரைப்பட கதைக்கும் இந்தக்கதைக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாக கருதுகிறேன்.
கதையின் சுட்டி: =======> தூண்டிற் புழுக்கள்
காட்ட சாட்டமான இரு கண்டனங்கள்:
குமுதம் 21.08.2013 தேதியிட்ட இதழில் எழுத்தாளர் இந்துமதியின் ‘தூண்டில் புழுக்கள்’ என்ற கதை வெளியாகியிருக்கிறது. குமுதத்திற்கே உரிய படத்துடன்!
மிகவும் துணுக்குற வைத்த கதை. அலுவலகத்தில் ஏற்கனவே வேலை பார்க்கும் மூன்று பெண்களுடன் வேலைக்குச் சேர்கிறாள் மகா. அலுவலகத்தின் சொந்தக்கார இளைஞனின் அத்து மீறல். மற்ற மூன்று பெண்களை உணவு வேளையில் சந்திக்கிறாள். இது மகளிர் மட்டும் போன்ற சினிமா இல்லை. நிஜம் என்றும் குடும்ப நிலையால் ஒத்துப்போனதாகவும் மூவருமே சொல்கிறார்கள். குடும்ப நிலை நெருக்குகிறது. அவளும் புறப்படுகிறாள்.
பெண்களுக்கு நம்பிக்கைக் கீற்றை அளிக்க வேண்டிய மூத்த எழுத்தாளருக்கு இவ்வளவு மட்டமான கதை எழுதவேண்டிய தேவையென்ன? மனிதர்களிடம் நம்பிக்கையை விதைக்க வேண்டிய பொறுப்பு எழுத்தாளர்களுக்கு உண்டு. மனிதநேயமிக்க ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டிய எழுத்து.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
தமிழில் பிரபலமாக இருந்த பெண் எழுத்தாளர்களுக்கு ஒரே தீம்தான் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்”. இதையே வைத்துக் கொண்டுதான் காலம் காலமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கொண்டு வரும் மாபெரும் மாற்றம் எல்லாம் பத்தினிக்கு இன்னல் வரும் ஆனால் தீராது, இல்லாவிட்டால் கல்யாணம் ஆகாத இளம்பெண்ணுக்கு வரும் இன்னல் தீரும்/தீராது, ஏழைப் பத்தினிக்கு இன்னல் வரும், மேல்தட்டுப் பெண்ணுக்கு இன்னல் வரும் இந்த மாதிரிதான். இந்துமதி மேல்தட்டுப் பெண்களுக்கு இன்னல் வரும் என்ற template-ஐ வைத்து எழுதித் தள்ளி இருக்கிறார். நாயகிக்கு வெள்ளை நிறம் மிகவும் அவசியம். அவரது target audience எழுபதுகளின் பெண்கள். எண்பது தொண்ணூறுகளிலும் அதே target audience-ஐ குறி வைத்து எழுதிக் கொண்டிருந்தது ஏற்கனவே தண்டமாக இருக்கும் அவரது படைப்புகளை உலக மகா தண்டமாக்குகிறது. இவர் எப்படிப் பிரபலமானார் என்று எனக்குப் புரியவே இல்லை.
சிலிகான் ஷெல்ஃப்
=======>தினமணியில் இவரது பேட்டியின் சுட்டி<=======
காரைக்குடி - செய்தி நல்ல செய்தி. குழந்தைகள் பாவம். நல்லெண்ணம் கொண்ட மக்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குதிடீர் மாரடைப்பு செய்தியை க்ளிக் செய்ய முடியவில்லையே. போலீஸ்காரருக்குப் பாராட்டுகள்.
கீதா
தான் படித்த லாடபுரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வசதிகள் செய்து கொடுத்த தொழிலதிபருக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஆனால் பாருங்க இதுல நிறைய கேள்விகள் எழுகிறது இல்லையா? அரசுப் பள்ளி! அப்ப அரசு என்ன செய்கிறது? அரசிடம் நிதி இல்லையா என்ன? அரசுப் பள்ளிகளை எல்லாமே இப்படித் தனிப்பட்ட மனிதர்கள்தான் கவனிக்க வேண்டும் என்றால்?
கீதா
ஆனால் ஒன்று, இப்படி நல்ல மனிதர்கள் பள்ளிகளை மேம்படுத்த வைத்துக் கொள்ளுங்கள் என்று அரசிடம் நிதியைக் கொடுக்காமல் தாங்களே முன்னெடுத்துச் செய்வதும் நல்ல விஷயம்தான்.
நீக்குஅரசின் மேல் சுத்தமாக நம்பிக்கை இல்லை. அப்படி ஆக்கிப்புட்டாங்க ஒரு காலத்துக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள்.
கீதா
இந்துமதி அவர்களும் சிவசங்கரி அவர்களும் சேர்ந்து எழுதிய கதை ஏதோ கருத்து வேறுபாடுகளுக்கு உட்ப்பட்டது என்று அறிந்த நினைவு.
பதிலளிநீக்குகதை மனதை கனக்க வைத்த ஒன்று. யதார்த்தம்தான்.
இது போன்று எல்லாத் துறைகளிலும் நடக்கிறதுதானே.
கதையை வாசித்ததிலிருந்து மகளிர்மட்டும் படமும், தில்லி நிகழ்வும் நடந்ததற்குப் பின் எழுதியிருக்காங்க என்பது புரிகிறது. ...
கீதா
பெண்களுக்கு நம்பிக்கைக் கீற்றை அளிக்க வேண்டிய மூத்த எழுத்தாளருக்கு இவ்வளவு மட்டமான கதை எழுதவேண்டிய தேவையென்ன? மனிதர்களிடம் நம்பிக்கையை விதைக்க வேண்டிய பொறுப்பு எழுத்தாளர்களுக்கு உண்டு. எனக்கும் இக்கருத்து உண்டுதான். பெண்கள் ஏன் எதிர்க்கமாட்டேன் என்கிறார்கள் என்று. அது என் பார்வை.
பதிலளிநீக்குகருத்து சரிதான் என்றாலும் உண்மை அதுவல்ல. எத்தனையோ பேர் தைரியமான பெண்களைப் பற்றிச் சொல்லித்தான் வருகிறார்கள். பெண்கள் தைரியமாக இருக்க வேஆனால் மாற்றம் வந்ததா? பாலியல் பலாத்காரம் நின்றதா? எத்தனைப் பெண்கள் பலியாடு ஆகிறார்கள் வேறு வழியில்லாமல்? எல்லாத் துறைகளிலும் நடக்கிறதே.
கீதா
சிலிகான் ஷெல்ஃப் கருத்தை கொஞ்சம் ஆமோதிக்கலாம். பெண்கள் எழுதுபவற்றில் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி எழுதுபவர்கள் குறைவுதான் என்பதை. ஆனால் பெண்களின் வலியை அவர்கள் பேசாமல் யார் பேசுவார்கள்? அதுவும் உணர்வுபூர்வமாகச் சொல்ல?
பதிலளிநீக்குகீதா
கதை யதார்த்தம். ஆனால் பிடிக்கவில்லை. நல்லா இருக்கும் ஆண்களையும் ஏன் இப்படி இருக்கீங்க என்று குற்றம் சாட்டும் கதை
பதிலளிநீக்குபாசிடிவ் செய்திகள் பகுதியை மாற்றவேண்டும். காணாமல் போன பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் என்று பல செய்திகளும் பெயர் மாற்றி வெளியாகின்றன
பதிலளிநீக்குநல்லவங்க இருக்காங்கன்னா நம்ப மாட்டேங்கறீங்களே...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உதவும் மனிதர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகதை படத்துக்குப் சொல்லும்போது ......"விட்டுக் கொடுக்கப் போறியா அல்லது எட்டி உதைக்கப் போறியான்றது உன்னை பொறுத்த விஷயம் மகா…" நினைவில் வந்து உதைக்கத்தான் போகிறாள் மகா என்ற எண்ணத்தைத் தந்தது. இப்படியாக முடித்திருந்தால் கதை நன்றாக இருந்திருக்கும்.
ஆனால் மகாவின் குடும்ப நிலையை முன்வைத்து பெண்களின் இன்னல் தீராது என முடித்துள்ளார் போல் தெரிகிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. தொண்டுள்ளம் கொண்டு உதவியவர்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள். உயிருக்கு போராடிவரை காப்பாற்றிய டிராபிக் போலீஸ் காரருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. எழுத்தாளர் இந்துமதியை பற்றிய செய்திகளை தெரிந்து கொண்டேன்.
கதை மகளிர் மட்டும் என்ற படத்தை நினைவுபடுத்தியது. கதையிலும் எழுத்தாளரே அதை ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில், பொது விடயங்களில் பெண்களுக்கு வரும் சோதனைகள் ஏராளம். அதில் ஒன்றை திருமதி இந்துமதி அவர்கள் இங்கு விவரித்துள்ளார். எல்லாவிடங்களிலும் இது போலவே நடக்கிறதா வென்றால், சில இடங்களில் இது போலுள்ள ஆண்களும் இருக்கின்றனர் என்பதை கதை தெளிவாக சுட்டி காட்டுகிறது.
சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் இக்கதைக்கு வைத்த தலைப்பும், அதன் காரணமும் கதைக்கு பொருந்துகிறது. இன்று இங்கு இக்கதையை தந்ததற்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஜெ கே அண்ணா, எனக்கு முடிவு அவள் ஒரு முடிவோடு கிளம்புகிறாள் என்பதாகத்தான் இருக்கிறது. அதை நாம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தோன்றியது எனக்கு. அப்பெண் "தென்றல் ஒரு புயலானது " போன்றான முடிவும் கூட எடுக்கலாம்.
பதிலளிநீக்கு//தூண்டில் புழுவானால் விழுங்கும் மீனுக்கும் அல்லவா ஆபத்து காத்திருக்கிறது. //
அந்த ஆபத்து அந்த முதலாளிக்கும் வரலாம் அல்லவா? மகாவினால்! பூடகமான முடிவு. நாம் எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.
கீதா
புயலாக மாறுவாள் என்றால், வீட்டில் சாப்பிட அரிசி இல்லாமை, மளிகைக்கடை, அரிசி கடன் போன்ற விவரங்கள் தேவையில்லை.
நீக்குகதை 11 வருடங்களுக்கு முன் குமுதத்தில் வந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தற்கால பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை போலீஸிடம் கொண்டு செல்கிறார்கள்.. சிலர் போலி குற்றச்சாட்டுகளையும் முன் வைப்பதுண்டு.
பதிலளிநீக்குவெளிப்படையாக இல்லாமல் போனாலும் ஊகிக்கவைக்கும் முடிவு அன்றைய கால கட்டத்தில் வேறு வழியில்லை என்று பணியும் மனப்பான்மையே. ஆக இக்கதையை 'கதை' என்றே கொள்வோம்.
கதையைப் பற்றி கருத்து கூறியவர்களுக்கு நன்றி.
Jayakumar