திங்கள், 31 மார்ச், 2025

"திங்க"க்கிழமை   :  மத்தூர் வடை  -  ஜெயக்குமார் சந்திரசேகர் ரெஸிப்பி 

 

 த்தூர் வடை (JKC)

கர்நாடக ஸ்பெசல் 

தேவையான பொருட்கள்.

பச்சரிசிமாவு (பொடி)  1 கப்

மைதா அல்லது கோதுமை மாவு 1 கப்

ரவை ½ அல்லது 1 கப்

வெங்காயம் பொடியாக நறுக்கியது ½ கப்

பச்சைமிளகாய் 2 அல்லது 3. பொடியாக நறுக்கியது.

கொத்தமல்லி தழை கொஞ்சம்

கருவேப்பிலை கொஞ்சம்

இஞ்சி சின்ன துண்டு துருவிக்கொள்ளவும்

பெருங்காயப்பொடி கொஞ்சம்

தேங்காய் துருவல் விருப்பம் இருந்தால்.

நிலக்கடலை உடைத்தது கொஞ்சம் விருப்பம் இருந்தால்.

உப்பு தேவையான அளவு. 

இவை எல்லாவற்றையும் கலந்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

சிறிது நேரம் ஊறினால் நல்லது


உருண்டைகள் பிடித்து வடைபோல் தட்டிக்கொள்ளவும். 

அடுப்பை பற்றவைத்து வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானவுடன் வடைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

த்தூர் வடைக்கு நடுவில் துளை கிடையாது. ஆனால் பாஸ் ஆஞ்சநேயர் வடை மாலை வடை போல் தட்டிப் பொரித்தார். 

இதற்கு மத்தூர் வடை என்ற பெயர் எப்படி வந்தது என்பது புரியவில்லை. 

ஒன்று மட்டும் சரி. இது மற்ற வடைகளைக் காட்டிலும் வித்தியாசமானது. வடையில் பருப்பு வகையறா இல்லை. மிகவும் மொறுமொறுப்பாக அதே சமயம் பல்லை உடைக்காமல் இருந்தது.   

கொஞ்சம் ஆலோசித்தபோது யுரேகா இது ரவா தோசை மாவை கட்டியாக பிசைந்து வடை தட்டுவதுஎன்று  கண்டுபிடித்தேன். 

இந்த வடை திடீர் விருந்தாளிகளுக்கானது. சுட்டால் உடனே சுடச்சுட சாப்பிட வேண்டும். இல்லையேல் நமத்துப் போகும். பருப்பில்லாதது என்பதே இதன் சிறப்பு. தொட்டுக் கொள்ள ரோமாட்டோ சாஸ் வைக்கலாம்.

20 கருத்துகள்:

  1. நான் செய்துபார்க்கணும் என்று நினைத்திருந்த வடை இது.

    கர்நாடகாவில் மத்தூர் பகுதியில் முதல்முறையாகச் செய்தார்களாம். அதனால் மத்தூர் வடை.

    ரவா என்பதால் எண்ணெய் குடிக்கும். இந்த வடையை முதன் முதலாக்க் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்ட கடையில் நானும் கீதா ரங்கன் அக்காவும் இதனைச் சாப்பிட்டோம். ஒரு வடை இருபத்தைந்து ரூபாய். செய்யும்போது உடைந்த அல்லது வட்ட வடிவமாக வராத வடைகளை கிலோ 150ரூபாய்க்கு விற்றார்கள். அன்று என் மனைவி வந்திராத்தால் அவருக்கு இரண்டு வடை பார்சல் வாங்கியிருந்தேன். நல்லவேளை உடைந்த வடைகளை வாங்கவில்லை. ரொம்ப எண்ணெய் குடித்திருக்கிறது, விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  2. அந்தக் கடையில் கொஞ்சம் மெத்துமெத்தாக நீங்கள் செய்துள்ளதுபோல இருந்த வடையை, வெளியிடங்களில் அனுமார் வடைபோல, ஆனால் ஓட்டையில்லாமல், தட்டை போல விற்கிறார்கள் (பெங்களூரிலும்). அது இன்னும் பெட்டராக இருக்குமா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நல்வரவு. வடை செய்து பாருங்கள். வடை எண்ணெய் குடித்தால் தண்ணீர் ஊற்றி கரைத்து ரவா தோசை ஆக்கி விடுங்கள்.

      Jayakumar

      நீக்கு
    2. நெல்லை பெங்களூரில் தட்டை போலதான் விக்கறாங்க பல கடைகளிலும் ஹோட்டல்க்களிலும் கூடவே தேங்காய்ச்சட்னி. ஆனால் கடைகளில் விற்கப்படுவதில் அவ்வளவு எண்ணை இல்லை. காரணம் அரிசி மாவு, மைதா கூடுதல்..
      நாம சாப்பிட்ட ஹோட்டலில் அது எனக்குத் தெரிந்து ஒரிஜினல். நன்றாக இருந்தது ஆனால் எண்ணைய் குடித்திருந்தது. ரவை மேலில் தெரியும் படி நல்ல க்ரிஸ்பா அதே சமயம் உள்ளே கொஞ்சம் சாஃப்டா நல்லாருந்துச்சு. இன்னும் வெங்காயம் போட்டிருக்கலாம்னு தோணிச்சு ஹிஹிஹி

      வீட்டில் செய்திருக்கிறேன். ரெண்டு வித அளவில். ஓகே....ஆனால் ஒரிஜினல் அளவு என்னன்னு தெரிஞ்சுக்க ஆசை. வாய்ப்பு கிடைச்சா மத்தூர் அந்த ஹோட்டலில் அளவு கேட்டுப் பார்க்கணும்!!!!!!!!, வெங்கடேஷ் பட் அளவு செய்து பார்க்க வேண்டும்.

      அந்த ஹோட்டல் வடையில் கடலை, எள்ளு எதுவும் போட்டிருந்தாங்களா ? யோசிக்கிறேன்.

      வெங்கடேஷ் பட் இதெல்லம் போட்டுச் செய்திருந்தார்.

      இங்கு மங்களூர் க்டையில் விற்பதில் கடலை எள்ளு போட்டிருப்பதில்லை. ஆனால் வேறு கடைகளில் விற்பதில் கடலை எள்ளு எல்லாம் போடுறாங்க..

      கீதா

      நீக்கு
    3. ஜெ கே அண்ணா, இது ரவா தோசைக்கான கலப்பில் கெட்டி வடிவம் என்றாலும், நான் அதிலும் ரவா அரசிமாவு சம அளவு மைதா ஜஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது கோதுமை மாவு...ஒரு டேபிள் ஸ்பூன் அது பைண்டிங்க்கிற்கு...அவ்வளவுதான். தோசை நல்லா வரும்.

      கீதா

      நீக்கு
    4. மத்தூர் வடைக்குக் கோதுமை மாவு சரியாகாது, அண்ணா.

      கீதா

      நீக்கு
    5. உங்க வடையிலும் ரவை மேலே தெரிகிறதே...அப்ப உங்க வடை கண்டிப்பா மத்தூர வடையேதான்!!!!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  3. // வடையில் பருப்பு வகையறா இல்லை. மிகவும் மொறுமொறுப்பாக அதே சமயம் பல்லை உடைக்காமல் இருந்தது. //

    அன்றொருநாள் இங்கே தளத்தில் நான் பகிர்ந்திருந்த உருளைக்கிழங்கு வடையும் இப்படிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​உருளை வடையை மீள்பதிவு செய்யலாமே

      Jayakumar

      நீக்கு
    2. ​கட்லெட்டிற்கும் உருளை வடைக்கும் என்ன வித்தியாசம் என்று அறிய விரும்புகிறேன்.

      நீக்கு
    3. அண்ணா இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. வடை பொரிக்கணும்....கட்லெட்டில் மசாலா அப்புறம் பிரெட் பொடியில் உருட்டி எடுப்பது எல்லாம் உண்டே...shallow frying.

      கீதா

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையாக வந்த மத்தூர் வடை செய்முறை விளக்கமும் படமும் நன்றாக உள்ளது.

    இந்த மத்தூர் வடையின் மூல கூறுகளாக என்னென்ன சேர்ப்பது என்பதைப் பற்றி இன்று தெரிந்து கொண்டேன். இப்படி ஒருநாள் செய்து பார்க்க வேண்டும். பார்க்கிறேன்.

    நாங்களும் குடும்பத்துடன் ஸ்ரீ ரங்கபட்டிணம் சென்று விட்டு ஒரு தடவை மத்தூர் வழி வரும் போது, இந்த வடையை அந்த ஊரின் ஸ்பெஷல் என்பதால், (சகோதரர் நெல்லைத் தமிழர் குறிப்பிட்ட இடமென நினைக்கிறேன்.) வாங்கி சாப்பிட்டு காஃப்பியும் அருந்தி வந்தோம். சுவை நன்றாக இருந்தது. மேலும் நாங்கள் இங்கு வந்தது முதற்கொண்டு இங்கு (பெங்களூரில்) இந்த வடையை பலவிடங்களில் ருசி பார்த்திருக்கிறோம் . இதன் அளவு சரிவர தெரியாததால் இன்று வரை வீட்டில் முயற்சி செய்யவில்லை.

    நீங்கள் கூறுவது போல், எண்ணெய் அதிகம் குடித்தால், கரைத்து தோசையாக்கி விடலாம். நல்ல யோசனை...! இன்றும் எங்கள் வீட்டில் காலை டிபனுக்கு இந்த கரைத்த மாவு தோசைதான்.இதோ.. மாவு கரைக்க வேண்டும். வாரம் ஒருமுறை இந்த டிபன் வந்து விடும். சின்ன குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. இன்றே வடைக்கும் முயற்சி செய்யலாமென்றால், நேற்றுதான் (ஆமவடை- பருப்பு வடை) வடைகளாக தட்டி சாப்பிட்டுள்ளோம். (அப்பாடா சந்தடி சாக்கில் உ(யு)காதிக்கு வீட்டில் செய்த ஒரு ஸ்பெஷல் உணவை சொல்லியாகி விட்டது.:)). ) இன்னொரு நாள் கண்டிப்பாக தாங்கள் தந்த அளவு விகிதப்படி செய்து பார்க்கிறேன்.

    இன்றைய மத்தூர் வடை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. அருமையான இந்த பகிர்வுக்கு தங்கள் பாஸுக்கும் என் நன்றியை தெரிவியுங்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​விரிவான கருத்துரைக்கு நன்றி. இப்படி கொஞ்சம் புதியதாக செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

      Jayakumar

      நீக்கு
  6. பருப்பு இல்லாமல் வடை புதுமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. அண்ணா மத்தூரில் இது முதலில் செய்ததால் மத்தூர் வடை. அந்த ஊரின் பாரம்பரிய வடை. நம்ம திருநெல்வேலி அல்வா போல....எப்படித் திருநெல்வேலி அல்வா இப்ப எல்லா ஊர்களிலும் திர்ன்னவேலி இருட்டுக்கடை அல்வான்னு சொல்லி விக்கறாங்களோ அப்படி மத்தூர் வடையும் இங்கு பெங்களூரிலும் கிடைக்கின்றன. ஆனால் அதில் ரவையைக் காண முடியாது. தட்டை போல இருக்கு

    மைதா நிறைய சேர்க்கறாங்க. மத்தூர் வடை இங்கு வாங்குவதென்றால் மங்களூர் கடையில் பரவால்ல நல்லாருக்கும்.

    நீங்க செய்திருப்பது நல்லா வந்திருக்கு பார்க்கப் போனா. என்ன நீங்கள் சொன்னது போல ஓட்டை போட்டிருக்காங்க அக்கா. அவ்வளவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. மத்தூர் வடை ஒரிஜினல் கொஞ்சம் எண்ணை குடிக்கும். இங்கெல்லாம் செய்வது அதிகம் எண்ணை குடிக்காமல் நீங்க போட்டிருப்பது போல் அரிசி மாவு ரவை கிட்டத்தட்ட ஒரே அளவு போட்டுச் செய்கிறாங்க மைதாவும் சம அளவு நீங்க போட்டிருபப்து போல்.

    ஆனால் ஒரிஜினலில் மைதா கம்மிதான்.

    வெங்கடேஷ் பட் கூடப் போட்டிருக்கிறாரே. அரிசி மாவு ஒரு பங்கு, ரவையும் மைதாவும் அரிசி மாவில் பாதி...கிராம் கணக்கில் 100 கிராம், அரிசி மாவு, ரவையும் மைதாவும் ஒவ்வொன்றும் 50 கிராம் என்று...

    இதற்கு வெங்காயம் அதிகமாகப் போட வேண்டும் அப்பதான் டேஸ்டே...

    ரவை மேலில் தெரியும்படி இருந்தால் நல்லது. வடை இது சரியா செய்யலைனா கடிக்க முடியாது.

    நீங்க சொன்ன டெக்சர் தான் உள்ளே கொஞ்சம் சாஃப்ட் வெளியே கரகரன்னு..

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மத்தூர்வடை நன்று.

    படத்தில் கோயில் வடைபோல் உள்ளது.

    பதிலளிநீக்கு
  10. மத்தூர் வடை செய்முறை விளக்கமும் . வடை படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  11. மத்தூர் வடை பெங்களூரிலிருந்து சென்னை வரும் பொழுது டபுள் டக்கர் ட்ரெயினில் முதல் முறையாக சாப்பிட்டேன். கர்நாடகா யாத்திரையின் பொழுது சிருங்கேரி சேன்று விட்டு திரும்பும் வழியில் பஸ் டயர் பஞ்சராகி விட்டது. டயர் மாற்றும் நேரத்தில் பக்கத்தில் இருந்த காபி/டீ ஷாப்பில் அருமையான மத்தூர் வடை சாப்பிட்டோம்.
    ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்று யூ ட்யூபெல்லாம் பார்த்தேன். அவைகளை விட இந்த செய்முறை சுலபமாக இருக்கிறது. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!