வியாழன், 13 மார்ச், 2025

காதலில் விழுந்தேன்.

நான் ஒழுங்காக படிக்காமல் போனதற்கு பாடல்களும் ஒரு காரணம்.  சினிமா பாடல்கள்தான்.  

பாடல்கள் ஒரு கால இயந்திரம்.  அதை நாம் உணர்ந்தும் உணராமல் இருக்கிறோம்!

எவ்வளவு சுலபமாக வருடங்களைக் கடந்து பின் செல்ல முடிகிறது...  ஆனால் இந்த யந்திரத்தில் கடந்த காலத்துக்கு மட்டுமே செல்ல முடியும்!

நமக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கும்போது, அவற்றை நாம் முதலில் கேட்ட காலத்துக்கு, கேட்ட இடத்துக்கு சென்று விடுகிறோம்.  மனதளவில் அந்த இடத்தில உலாவுகிறோம்.

நினைத்தாலே இனிக்கும் பாடல்களை நேற்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

சினிமா எடுக்க பாலச்சந்தர் சுஜாதாவிடம் ஒரு கதை கேட்டாராம்.  ஏற்கெனவே எழுதிய கதையாய் இல்லாமல் புதிதாக இருந்தால் நல்லது என்றாராம்.

சுஜாதா தன் பாணியில், தன் வழக்கப்படி ஒரு கடத்தல், மர்மக் கதையை எழுதிக் கொடுத்தாராம்.

பாலச்சந்தர் அந்த பின்னணியை மட்டும் எடுத்துக் கொண்டு அதை  காதல் கதையாக மாற்றி விட்டாராம்.  சுஜாதா அச்சு ஊடகக் காரர்.  பாலச்சந்தர் காட்சி ஊடகக்காரர்.  அவரவருக்கு அவரவர் இடத்தின் சூட்சுமங்கள் தெரியும்.

கதை அப்படி மாற்றப்பட்டதற்கு சுஜாதா மனதளவிலாவது வருத்தப்பட்டாரா, தெரியவில்லை.  ஏனெனில் அதற்கு முன் அவர் அனிதா இளம் மனைவி, ப்ரியா, ஜன்னல் மலர் போன்ற படங்கள் எடுக்கப்பட்டபோது அதிருப்தி அடைந்து  போனார்.

ப்ரியாவுக்கு அப்புறம் அவர் எழுதிய கதையில் ப்ரியா எடுத்தவர்கள் மேல் கேஸ் போட வேண்டும் என்று வஸந்த்தைப் பேச வைத்து கணேஷை பதில் சொல்ல வைத்தார்.  'காரே மூரே என்று ஒரு கதை எழுதுகிறேன், இதை எப்படி படம் எடுக்கக் கேட்கிறார்கள் பார்க்கிறேன்' என்று சொல்லியே உன்னைக் கண்ட நேரமெல்லாம் கதையும், மேற்கே ஒரு குற்றம் கதையும் எழுதினார்.

சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன்.




இந்த படப்பாடல்களில் 'எங்கேயும் எப்போதும்' பாடலில் ஜெயப்ரதா ஒரு இளநீலநிற காபி ஷர்ட்.. அதாங்க டீ ஷர்ட் (அட நாம் அதை Y ஷர்ட் என்று கூட சொல்லலாமோ...  ஒரே மாதிரி சொல்லாமல்)  அணிந்து வருவார். இந்தப் படம் பார்த்தபோது என் முதல் க்ரஷ் பாடல்கள்.  அடுத்து கமல் என்று சொல்ல வேண்டும்.  ஆனால் அந்த இடத்தை ஜெயப்ரதா பிடித்தார்.  அப்புறம்தான் கமல்.

படம் பார்த்து விட்டு அதே நினைவுகளுடன் *மறுபடி மறுபடி 7 நாட்கள்  7 முறைகள் தொடர்ந்து பார்த்தேன்!) 

குடியிருந்த ஹௌசிங் யூனிட்டில் அலைந்து கொண்டிருந்த போது என் 'தூரத்து நண்பர்களி'ல் ஒருவனான வாசு ஒரு நாள் இந்த பனியன் அணிந்து வந்தான். நன்றாக இருந்ததது.  

"எங்கேடா வாங்கினே" என்று கேட்டேன்.

'வளநாடு சில்க்ஸ்' - அதுதான் அப்போது தஞ்சையில் ஃபேமஸ் - என்று சொல்வான் என்று எதிர்பார்த்தேன்.  ஆமாம் என்றால் உடனே போய், நாமும் ஒன்று வாங்கி விட வேண்டியதுதான்!

ஆனால் அவனோ, ரொம்ப கெத்தாக "என் மாமா மலேசியாவிலிருந்து வாங்கி வந்தார்" என்று என் நினைப்பை உடைத்தான். நான் எங்கே போவது மலேஷிய மாமாவுக்கு!  விட்டு விட்டேன்,.  ஆனாலும் அவன் கெத்தை உடைக்க மனம் பரபரத்தது.

நான் மட்டும் சும்மா இருப்பேனா?

"ஏண்டா...  பொம்பளைங்க டீ ஷர்ட் டா இது.,.  இதை நீ போட்டிருக்கே..." என்றேன்.

"யார்றா சொன்னா?"

"யார் சொல்லணும்.  அருள் தியேட்டருக்கு போ...  நினைத்தாலே இனிக்கும் பாரு..  ஜெயப்ரதா இந்த ஷர்ட் போட்டு நடிச்சிருக்கறதைப் பார்க்கலாம் "

அவன் அதனால் பாதிக்கப்பட்டதாக  தெரியவில்லை.

வாசுவைப்பற்றிச் சொல்லும்போது இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.  ஒன்று சொல்லக்கூடியது.  வைஷ்ணவப் பையனான அவன் சிவப்பாக, எங்கள் வயதுக்கு அப்போது  கொஞ்சம் உயரமாக இருப்பான்.  அப்பாவி முகம்.  

ஆனால் அவன் செய்யும் குறும்புகள் தெரிந்து செய்கிறானா, தெரியாமல் அப்பாவியாய் செய்கிறானா என்று சந்தேகப்பட வைக்கும்.  முக்கியமான தருணங்களில் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அப்போது வந்த ஒரு பாடலை பாடுவான்.  அது நக்கல் என்று புரிந்தாலும் நிரூபிக்க முடியாது.  அப்படி இருக்கும் அவன் முக bhaaவம்.  அந்தப் பாடல் எதுவென்று யோசித்துப் பார்க்கிறேன், நினைவுக்கு வரவில்லை!

ஆனால் இன்னொன்று நினைவுக்கு வருகிறது.  நாங்கள் சீரியஸாய் ஏதாவது காரசாரமாய் பேசிக் கொண்டிருப்போம்.  அல்லது கேமுக்கு நடுவே சீரியஸான கட்டமாய் இருக்கும்.  இவனுக்கு அப்படி எல்லாம் பதட்டம் இருக்காது.  பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் நடுவே வந்து "மல்லிகைப்பூ ..." என்று என்று கொஞ்சலாக அபிநயம் பிடிப்பான்.  சமயங்களில் எங்களுக்கு செம கோபம் வரும்.  துரத்தி கொண்டு போவோம்.  சமயங்களில் சிரிப்பு வரும்!

ஏனென்று கீழுள்ள காணொளியைக் காணுங்கள்.


அந்த T Shirt அவன் மலேசிய மாமா வாங்கித் தந்ததாய் சொன்னானா - 

பார்த்தால் அப்புறம் தஞ்சையில் நிறைய பேர் மலேசிய மாமா வைத்திருந்தார்கள் போல, நிறைய பேர் அந்த இளநீல பனியன் சட்டை அணிந்து வலம் வந்ததைப் பார்த்தேன்.

அப்புறம் இதே படத்தில் வரும் இதே ஜெயப்பிரதா போட்டிருக்கும் இன்னொரு டிரஸ் சம்பந்தமாக இன்னொரு விஷயம்..  ஆனால் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.. படிச்சுட்டு இங்கேயே மறந்துடுங்க..

'இனிமை நிறைந்த உலகம் இருக்கு' என்று க்ளைமேக்ஸ் பாடல் வரும்.  அதில் இரண்டாவது சரணத்தில் ஜெயப்பிரதா இந்த ட்ரஸ் போட்டுக் கொண்டு வருவார்.

தஞ்சையில் கடைத்தெருவில் அது மாதிரி அதே கலரில் ட்ரெஸ் போட்டுக் கொண்டு ஒரு பெண்ணைப் பார்த்தேன்.   காதல் கொண்டேன்.  பார்த்த இடத்தில் அடுத்த மூன்று நாட்கள் அதே நேரம் சென்று காத்திருந்தேன்.  கண்ணில் படவில்லை.  

ஆனால் அவள் அப்புறம் என் கண்ணில் பட்டபோது நெஞ்சு குலுங்கிப்; போனது.  அவள் நான் இருந்த அதே ஹௌசிங் யூனிட்டிலேயே இருந்தாள்.  அவளை நான் எங்கேயோ டவுனில் சென்று தேடி இருக்கிறேன்...

எப்படி இருந்திருக்கும்...

அதைவிட நான் பார்த்தபோது அவள் இருந்த டிரஸ்...   அதுவும் ஜெயப்பிரதா போட்ட டிரஸ்.


காதலில் விழுந்தேன்.

===========================================================================================

ச்சும்மா.....   ஜாலி....

திருமண வரவேற்பு ஒன்றுக்கு செல்லும் வழியில் எடுத்த புகைப்படம்.  

டாக்டர் செல்போனுடனே உட்கார்ந்து போனை நோண்டிக்கொண்டிருப்பாரா, செல்போனில் அழைத்தால் டாக்டர் வருவாரா..  இல்லை, செல்போன் போல சைசில் ரோபோ டாக்டரா....

இல்லை, கீழே விளக்கி இருக்கிறார்கள்.  நோயுற்ற செல்போன்களுக்கு மருத்துவம் பார்க்கும் மனை!  அட்மிஷன் பெசிலிட்டியும் உண்டு போல....!


====================================================================================================================

படித்து வியந்ததைப் பகிர்கிறேன்...




மரணத்தை ஏமாற்ற உங்களை உறைய வைக்கிறேன் (freeze people to cheat death’)
Skip if you know about this before)
மரணத்தை தள்ளிப்போடுவதில் இறைவனுக்கும்-விஞ்ஞானத்திற்குமான நேரடி மற்றும் மறைமுக ஆடு புலி ஆட்டங்கள் ஒரு பக்கம் உலகெங்கும் நடந்து கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் மரணத்தை ஏமாற்ற உங்களை உறைய வைக்கிறேன் ‘I freeze people to cheat death’ என்ற செய்தியை வாசிக்கும் போது வினோதமாக உணர்ந்தேன்
மூன்று வயது கூட ஆகாத நிலையில் மூளை புற்றுநோயால் இறந்து போன மாதெரின் நவோவரத்போங் என்ற சிறுமியை இழந்த தாய்லந்தின் சஹாடோர்ன் மற்றும் நரீரத் நவோவரத்போங் மருத்துவப் பொறியாளரான இருவரும் (medical engineers) தங்கள் சொந்த உடல்களை கிரையோஜெனிக் முறையில் பாதுகாத்து தங்கள் புதிய வாழ்க்கையில் மீண்டும் மாதெரின் நவோவரத்போங் சந்திக்க காத்து இருக்கிறார்கள்.
இது எப்படி இறந்து போன மகளை சந்தக்க முடியும்?
கிரையோபிரசர்வேஷன் Cryopreservation is the process of storing living cells, tissues, and organs at very low temperatures to preserve them), செல்கள், முட்டை அணுக்கள், விந்தணுக்கள், திசுக்கள், கருப்பை திசுக்கள், பொருத்தப்படுவதற்கு முந்தைய கருக்கள், உறுப்புகள் போன்ற உயிரியல் பொருட்கள் மிகவும் குளிர்ந்த வெப்பநிலையில் செல்லை பாதிக்காமல் வைத்து பராமரிக்கப்படும் நடைமுறை.
இதன் இன்னொரு முறையாக இன்றைய மருத்துவத்திற்கும் நாளைய மருத்துவத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் முயற்சி என்றால் தப்பில்லை அதாவது மருத்துவ ரீதியாக - இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, உடலில் செயற்கை உயிர் ஆதரவு சாதனங்கள் பொருத்தப்பட்டு, இரத்தம் பாதுகாப்புப் பொருட்களால் மாற்றப்பட்டு, உடல் "கிரையோபுரோடெக்டன்ட்கள்" எனப்படும் 16 வைகயான ரசாயனங்களால் நிரம்பி செல்களை -120Cக்கு குளிர்விக்கின்றன,இது பனி உருவாகாமல், விட்ரிஃபிகேஷன்(vitrification) என்ற முறையில் உடல் திரவங்களை அகற்றி,
பின்னர் உடல் -196C க்கு மேலும் குளிர்விக்கப்பட்டு திரவ நைட்ரஜனில் காலவரையின்றி சேமிக்கப்படுகிறது.- இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர்களின் உடலை அல்லது மூளையை என்ற மிகக் குறைந்த வெப்பநிலைக்கு குளிர்வித்து பாதுகாத்து மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்படும் அசாதாரண முன்னேற்றங்களால் மீண்டும் உயிர்ப்பிக்கவும், அல்லது அதன் மூலம் ஒரு புதிய உடலை உருவாக்கவும் விஞ்ஞானக் கடவுளை நம்புகிறார்கள்!
இதைச் செய்ய சில தன்னார்வ Alcor Life Extension Foundation நிறுவனங்களும் இருக்கிறது.அதல்லாது சேவைகளைப் பொறுத்து $28,000 முதல் $200,000 அல்லது அதற்கு மேல் செலவு செய்தும் பாது காக்கலாம்.
ஒருவேளை Natalie Wood, George Reeves, David Carradine, and Brittany Murphy போன்ற உடல்கள் பாதுகாக்கப்பட்ட்டு இருந்தால் அவர்களின் மர்மமான இறப்புக்கு காரணமான முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு இருக்கலாமோ?

- Krishna Moorthy - FaceBook

====================================================================================

Lepa Svetozara Fought Against The Nazis Till Her Last Breath

Born on December 19, 1925, in Gašnica, Bosnia and Herzegovina, Lepa Svetozara Radić came from a Bosnian Serb family. At just 15, she joined the Communist Party of Yugoslavia. She was captured during the resistance against the 7th SS Volunteer Mountain Division Prinz Eugen. The Germans offered her life in exchange for information on Communist Party leaders, but she fearlessly refused, vowing her comrades would avenge her death. At 17 years, she met her fate in a courageous public execution. This snapshot speaks volumes about that fatal moment.

==============================================================================================

நியூஸ் ரூம் 

-  நேபாளத்தின் ஜனக்பூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.45 மணியளவில் புத்தா ஏர் என்ற விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது விமானம் மேலே எழும்பி சென்றபோது, அதன் முன் சக்கரம் கழன்று கீழே விழுந்துள்ளது. ஆனால், விமானிகளின் கவனத்திற்கு அது செல்லவில்லை. பயணத்தின்போது, அதற்கான அடையாளங்களை விமானமும் வெளிப்படுத்தவில்லை. இந்த சூழலில், திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் மாலை 5.10 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை விதிகளில் மாற்றம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால், எச்1பி விசா வைத்துள்ள பெற்றோருடன் குழந்தையாகச் சென்று, தற்போது 21 வயதை கடந்த ஒரு லட்சம் இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புதுடில்லி,'நீண்ட காலமாக, 'லிவ் இன்' எனப்படும் திருமணமின்றி சேர்ந்து வாழும் வாழ்க்கையில் இருந்த பெண், பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கூறுவது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுடெல்லி :- இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பாகுபலிக்கே சவால் விடும் வகையில், அதனை தூக்கி தோள் மீது வைத்து ரெயில்வே கிராசிங்கை கடந்து மறுபுறம் செல்கிறார். இதனை மற்றொருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

டெக்சாஸ்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சோதனை முயற்சியாக நேற்று செலுத்திய 'ஸ்டார்ஷிப் பிளைட் டெஸ்ட் 8' எனும் ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக நேற்று வெடித்துச் சிதறியது.

சென்னை: மது ஆலைகளில் இருந்து, 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேரடியாக மதுபானங்கள் வினியோகம் செய்து, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வில்லி சூன் என்ற மலேசியா நாட்டைச் சேர்ந்த, ஹார்வர்டு பல்கலை. வானியற்பியல் விஞ்ஞானி, கடவுள் இருக்கிறார் என்பதை சில கணித வழி முறைகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் மேற்கோள்காட்ட விளக்கியிருக்கிறார்.  இந்த கண்டுபிடிப்புகள் இன்னமும் முழுமையடையாத நிலையில், அவர் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கான பல்வேறு ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

புதுடில்லி: நிலவில் பனிப்படிவுகள் இருப்பதை சந்திரயான்-3 விண்கலம் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சென்னை: 'கோவில் வளாகத்துக்கு வெளியே, சடங்குகள் மற்றும் மந்திரங்களை நன்கறிந்த புரோகிதர்கள், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதை தடுக்கக்கூடாது' என, அறநிலையத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாஜ்பூர்: ஹரியானாவில் திருமண ஊர்வலத்தின் போது வாரி இறைக்கப்பட்ட பணம் கூரையில் விழுந்ததை அடுத்து, அதை எடுக்கச் சென்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால், அந்த தம்பதிக்கு  50,000 ரூபாய் வெகுமதி வழங்குவேன் -  ஆந்திர பிரதேச எம் பி அப்பால நாயுடு. ஆண் குழந்தையாயிருந்தால் ஒரு பசு, பெண் குழந்தையாயிருந்தால் 50,000 ரூபாய் என்று சொல்லியுள்ளார்.  

ராகுல் காந்தி உதவியால் புதிய காலணி ப்ராண்டைத் தொடங்க உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளி.  தன் செருப்பை அவர் கடையில் தைத்தபோது தானும் தைக்காக கற்றுக்கொண்டதோடு அவரை தன் வீட்டுக்கும் வரவழைத்திருக்கிறார் ராகுல்.

மும்பை: மஹாராஷ்டிராவின் சதாரா தொகுதி பா.ஜ., - எம்.பி.,யும், சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலுமான உதயன்ராஜே போஸ்லே, மஹாராஷ்டிராவில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.


- திருமண வரவேற்பு, விருந்து நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை- கேரள உயர்நீதிமன்றம் யோசனை. 

- சமீபத்தில் வெளியான சாவா என்னும் ஹிந்தி படத்தில் பர்ஹான்புரில்(ம.பி.) முகலாயர் காலத்தில் தங்கம்,வெள்ளி நாணயங்கள் அச்சிடும் ஆலை இருந்ததாக சில காட்சிகள் இடம் பெற்றிருந்ததாம். இதனால் அங்கு புதையல் இருக்கலாம் என்று கருதும் மக்கள் இரவில் மண்வெட்டி, கடப்பாறை போன்ற ஆயுதங்களோடு அங்கு வந்து மண்ணை வெட்டி புதையல் வேட்டை நடத்துகிறார்களாம்.

- செயற்கை நுண்ணறிவின் உதவியோடு தங்க கடன் வழங்கும் ஏ.டி.எம். மிஷினை தெலுங்கானாவில் இருக்கும் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியாவிலேயே முதன் முறையாக நிறுவியுள்ளது.

- சக பள்ளி மாணவியிடம் காதலை தெரிவித்ததற்காக பட்டியில் இன பிளஸ் ஒன் படிக்கும் மாணவருக்கு கத்தி குத்து.

- கண்ணூர்,கேரளா: எடையைக் குறைக்க ஆறு மாதமாக எதுவும் சாப்பிடாமல் வெந்நீர் மட்டும் அருந்தி வந்த 24 வயது பெண் மரணம். அனோரெக்ஸியா என்று பெயர். இறந்து போன ஸ்ரீநந்தா என்னும் பெண் உணவு சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்ற பயப்படும் அனோரெக்ஸியாவால் பாதிக்கப் பட்டிருந்தாராம். 

- பெங்களூரு: பெங்களூருவில் 'பாஞ்சஜன்யா' என்ற பெயரில் டிராவல்ஸ் & டூர்ஸ் நடத்தி வந்த ராகவேந்திர ராவ் என்பவர் கும்பமேளா சமயத்தில் 14 நாட்கள் பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட புனித தலங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் ஒருவருக்கு ரூ.49000 கட்டணம் என்றும் வசூல் செய்து, பணம் கட்டியவர்கள் முதலில் விமானத்தில் புக் பண்ணி, பிறகு அதை ரத்து செய்து விட்டார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கும்பமேளாவும் முடிந்து விட்டது. ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் பெயரில் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதியவர்களை குறிவைத்த ராகவேந்திர ராவ் ரூ. 70 லட்சம் சுருட்டியிருக்கிறார். 

- ஏர்-இந்தியா குறித்து இரண்டு செய்திகள்: மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்ட ஏர்-இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த மிரட்டல் கடிதத்தால் விமானம் மீண்டும் மும்பைக்கே திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டு,அங்கு அது ஒரு பொய்யான மிரட்டல் என்பது கண்டுபிடிக்கப் பட்டது.

- அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட ஏர்-இந்தியா விமானத்தின் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டதால் பயணிகள் தவிக்க, பத்து மணி நேரம் பறந்த விமானம் மீண்டும் சிகாகோ திரும்பி தரையிறக்கப்பட்டது.

- புது டில்லி: உலக அளவில் காற்று மாசு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் உலகின் அதிக மாசுள்ள 20 நகரங்களில் 14 இந்தியாவில் உள்ளன. மேகாலயாவில் பிரினிஹாட் முதலிடத்தில் உள்ளது. 

- ராஜ்கோட்: இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 52 வயது மகனை 76 வயது தந்தை சுட்டுக் கொன்றார். 

- சென்னை: எஃப்.ஆர்.எஸ் எனப்படும் செயலியின் உதவியுடன் கடந்த ஆறு மாதங்களில் 550 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

========================================================================================

தேவகோட்டை ஜி பாணியில் வித்தியாசமான பெயர்களில் இருந்த சில கடைகளை படமெடுத்தபோது....







========================================================================================
மெட் ரிகுலேஷன் தேர்வில் காந்தி பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு:

  • English 89/200
  • Gujarati 45-5/100
  • Mathematics 59/175
  • General Knowledge 54/150
  • Total, 247.5 marks out of 625, 40%

ஜஸ்ட் பாஸ்!

ஜே.எம். உபாத்யாயா என்பவர் காந்தியின் பள்ளிக் கல்வியை, அவர் ஒவ்வொரு வகுப்பிலும் பெற்ற தேர்ச்சியை புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். காந்தி முதன்மை மாணாக்கர் அல்லர், ஆனால் பாஸாகிவிடுவார் என்று தெரிகிறது.

புத்தகத்தைப் படிப்பது கஷ்டம்தான். ஆனால் ராமச்சந்திர குஹா அதைப் பற்றி எழுதி இருக்கும் கட்டுரை படிக்க சுலபமானது!

சிலிக்கான் ஷெல்ப் தளத்திலிருந்து 

===============================================================

எழுத்தாளர் சுமதி எழுதிய கல்மண்டபம் நாவல் பற்றி இங்கே கொஞ்சம்.  நான் இந்தப் புத்தகம் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்...

இது எழுத்தாளர் இந்துமதியின் பேஸ்புக் பக்கத்தில் வந்ததது...


கல் மண்டபம்:-

முன்பு வெறும் 56 பக்கங்கள் மட்டுமே படித்து விட்டுத் தாங்க முடியாததன் காரணமாக அரைகுறையாக ஒரு பதிவு போட்டிருந்தேன். இப்போது முழு புத்தகத்தையும் படித்த பின்னர் மூடி வைத்து விட்டு கனத்த இதயத்தோடு கண்களை மூடி அமர்ந்தபோது கரகரவென்று கண்ணீர் வழியத் தொடங்கியது.தாங்க முடியாத துயரமும் வேதனையும் நெஞ்சை அழுத்திற்று. 

ஏன் அத்தனைத் துக்கம், ஏன் இவ்வளவு கனம், அப்படி கல்மண்டபத்தில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், நான் அனுபவித்ததை நீங்களும் அப்படியே அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது இந்தப் பதிவு.

நமக்குப் பிடித்த பாடலை நாள் முழுவதும் நாம் முணுமுணப்பதில்லையா...?  நமக்குப் பிடித்த திரைப்படத்தை இரண்டு மூன்று முறை பார்ப்பதில்லையா?
நமக்குப் பிடித்த நண்பர்களிடம் அடிக்கடி பேசுவதில்லையா..?

அதுபோலத்தான் கல் மண்டபம் பற்றி மீண்டும் சொல்ல விழைகிறேன்.  நான் ஊனக் கண்களால் பார்த்ததை சுமதி ஞானக் கண் கொண்டு பார்த்திருக்கிறார்.

இந்தக் கல் மண்டபம் மிகவும் விசாலமானது.

மிக மிக உயரமானது.

இதனுள் எழுந்தருளியிருப்பவள் சாட்சாத் கூத்தனூர் சரஸ்வதி.அவளின் அருளின்றி, கடாட்சமின்றி இந்த எழுத்து சாத்தியமே இல்லை.

ஏற்கனவே நான் சொன்னது போல காளிதாசனுக்குக் காளி வரம் கொடுத்த மாதிரி
கண்ணதாசனுக்குக் கண்ணன் வரம் கொடுத்த மாதிரி சுமதிக்குக் கூத்தனூர்க்காரி வரம் கொடுத்திருக்கிறாள்.

பரிபூரணமாக ஆசீர்வாதம் செய்திருக்கிறாள்.  அல்லையன்ஸ் ஸ்ரீநிவாசன் தன் பதிப்பாளர் உரையில் ' ராமாயணம் இதயத்தைத் தொடும்.  மகாபாரதம் மூளையைத் தொடும்.  ஆனால் இந்தக் கல் மண்டபம் மனத்தைத் தொட்டு மூளையையும் ஆரவாரிக்கிறது என்கிறார்.

இப்படித்தான் ஜெயகாந்தனின் சிறு கதைகள் ஆரவாரித்தன.

துணிச்சலான பல விஷயங்களை எடுத்துச் சொன்னவர் அவர். தவறுகள் குற்றங்களல்ல என்று நிரூபித்தவர். உன்னைப் போல் ஒருவன் இருந்திருந்தால் என் வாழ்க்கை இவ்வாறு தடம் புரண்டிருக்காது என்று தாயை தன் சிறு வயது மகனிடம் கூறவைத்தவர்.

மகன் மருமகள், மகள் மருமகன் என எல்லோரும் இருக்க கர்ப்பமுற்ற வயதான பெண்மணி மூலம் 'வேர் பலாதான் பழுத்துச் சுவை கொடுக்கும் என்றும் அது தவறே அல்ல.குற்ற உணர்ச்சி தேவையற்றது என்று முரசறைந்தவர். வாழ்க்கையின் சிக்கல்களை, உளவியல் உண்மைகளை, அவர் போல உச்சி மீது நின்று உரக்கச் சொன்னவர்கள் இல்லை. ஆனால் அவரும் கூட கல்மண்டபத்தில் சுமதி பார்த்த விஷயத்தைப் பார்த்தவரில்லை. அமானுஷ்ய சக்ரவர்த்தியாக புகழப்பட்ட இந்திரா சௌந்தர்ராஜனாலும் தொடப்படாத விஷயம் இது.

இவ்வளவு ஏன்? மரணம் ஆன்மா பற்றியெல்லாம் கருட புராணமும் யோக வாசிஷ்டமும் நிறைய சொல்லியிருக்கின்றன. பஜகோவிந்தமும் மாத்ரு பஞ்சகமும் எழுதிய ஆதிசங்கரரும் கூட சமஸ்காரம் செய்ய உதவுபவர் களைப் பற்றி எழுதவில்லை. சமஸ்காரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமஸ்காரம் செய்து வைப்பவர்களும்.

ஸம்ஸ்காரா என்றொரு கன்னடத் திரைப்படம் வந்தது. அப்போதெல்லாம் கன்னடம்,தெலுங்கு , மலையாளம், பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளில் வித்தியாசமான மிக நல்ல திரைப்படங்கள் வந்தன. வறுமையைப் பற்றி பதேர் பாஞ்சலி,அஷானி ஷங்கட், பசி போன்ற படங்கள் உச்சம் தொட்டன. அவை தொட்டவை நலிந்த எளிய மக்களின் வறுமை. குறிப்பிட்ட வர்க்கத்தினரின் வறுமை அல்ல.

ஆனால் மரணத்திற்குப் பின் தகனம் முடித்து கல் ஊன்றுவது, ஒன்பது நாட்கள் நித்யவதி செய்வது வரையிலும், செய்து வைப்பவர்களது மன, உடல், வேதனைகளையும், பொருளாதார சிக்கல்களையும், அவர்களின் வாழ்வாதாரம் அந்தரங்கத்தில் தொங்குவதையும் இது வரை எந்த off beat திரைப்படமோ, இலக்கியமோ விவரித்ததே இல்லை. எந்த மொழியிலும் எழுதப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

முதல் முதலாகத் தமிழ் மொழியில் எழுதப் பட்டிருக்கிறது. இது தமிழுக்குப் பெருமை. தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை. தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பெருமை.
அதுவும் எழுதப் பட்டிருக்கும் விதம் இருக்கிறதே, உள்ளத்தையும் உணர்வுகளையும் தொட்டு நம்மைக் கண்கலங்க வைக்கிறது. அந்த நிஜம் நெஞ்சை உலுக்குகிறது. நிறைய இடங்கள் கனத்துப் போய் கரகரவென்று கண்ணீர் விட வைக்கிறது.

கல் மண்டபம் என்பது இறந்த மனிதர்களுக்குக் கல் எடுத்து நினைவுச் சின்னமாக வைத்து ஸமஸ்காரம் செய்யும் இடம். வாழ்வு முடிந்து போன மனிதர்களுக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இறுதிச் சடங்கு செய்யும் இடம்.
எனக்கும் இந்த இறுதிச் சடங்குகளைச் செய்யும் மனிதர்களை அறிமுகப்படுத்தி வைத்தது சுப்பிரமணிய ராஜு என்கிற மேன்மையான மனிதன்தான்.சவஸம்ஸ்காரங்களில் ஈடுபடும் இந்த மனிதர்களை மேற்கு மாம்பலத் தெருவிற்குக் கூட்டிப் போய் காட்டியும் இருக்கிறார். கும்பகோணம் துக்காம்பாளையத்தெரு தி.ஜானகிராமனால் பிரசித்தி பெற்ற மாதிரி இந்தக் கல் மண்டபம் சுமதியால் பிரசித்தி பெற்றிருக்கிறது.

எல்லா மதத்தினருக்கும் எல்லா சாதிகளிலும் இறந்தவர்களுக்கான ஸம்ஸ்காரங்கள் உண்டு. மதத்திற்கு மதம் சாதிக்கு சாதி ஸம்ஸ்காரங்கள் மாறுபடும் என்றாலும் கூட ஸம்ஸ்காரங்களில் ஈடுபட்டு நிகழ்த்தி வைப்பவர்கள் கடை நிலையாகத்தான் இன்னும் கருதப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் பிணம் தூக்குபவர்கள் எனும் தோள் போடுபவர்கள் உண்டு.மட்டை என்பார்கள். இப்போது அதற்கு வாகனங்கள் வந்து விட்டன. ஆனாலும் சவுண்டி, வைதீகம் செய்து வைக்கும் வாத்தியார் சமையல்காரர் காய்கறி நறுக்கிக் கொடுப்பவர்கள், பத்து பாத்திரங்கள் மேய்ப்பவர், எச்சில் இலை எடுப்பவர்கள் என்று ஒரு பெருங் கூட்டம் இன்றும் இன்னமும் நலிவடைந்து சொந்த சாதிக்குள்ளேயே மதிக்கப் படாத மரியாதையற்ற குழுவாக நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருமணம் செய்து வைக்கும் புரோகிதருக்கான மரியாதை, பிறந்த குழந்தைக்கு புண்ணியஜனம் செய்யும் வாத்தியாருக்குத் தருகின்ற மரியாதை, ஆஸ்பத்திரிகளில் உயிருக்குப் போராடுபவர்களை கவனிக்கும் மருத்துவருக்குண்டான மரியாதை இந்த சவஸம்ஸ்காரர்களுக்குக் கிடைப்பதுமில்லை, தரப்படுவதில்லை.
தரப்படாவிட்டாலும் கூடப் பரவாயில்லை.ஆனால் அவர்கள் எவ்வளவு இழிவாக நடத்தப் படுகிறார்கள் , அவர்களின் வாழ்வாதாரம் அந்தரங்கத்தில் தொங்குவதையும், சோமாலியாவின் பஞ்சம் போல் பசி பசி என்றலையும் இவர்களின் மரண அவஸ்தைகளையும் சுமதி தன் கழுகுப் பார்வை கொண்டு பார்த்து உள் வாங்கி தான் உள் வாங்கினதை அப்படியே நமக்குள்ளும் கடத்தும் மந்திர வித்தையைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கூடு விட்டுப் பாய்ந்த கூட்டிற்குள் நம்மையும் கூடு விட்டுப் பாய வைத்திருக்கிறார். ஆங்காங்கே பாலகுமாரனின் சாயல் இருப்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் அவரே பாலகுமாரன் தன் குரு என்று ஒப்புக் கொடுத்து விட்ட பின் நாம் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

ஜெயகாந்தனால் எப்படி பாதிக்கப் பட்டேனோ --

லா.ச.ராவினால் எப்படி பாதிக்கப் பட்டேனோ --

தி.ஜானகிராமனால் எப்படி பாதிக்கப் பட்டேனோ -
-
அசோகமித்திரனால் எப்படி பாதிக்கப் பட்டேனோ --

வண்ணதாசனால் எப்படி பாதிக்கப் பட்டேனோ

வண்ண நிலவனால், விக்ரமாதித்தனால், நகுலனால் மற்றும் பிறரால் எவ்வாறெல்லாம் பாதிக்கப் பட்டேனோ ---

அதே அளவு பாதிப்பு இந்தக் கல்மண்டபத்தாலும் எனக்கு ஏற்பட்டது.

ராமான்ஜி தேசு மது மாமா, பட்டண்ணா எல்லோருமே எனக்குப் பரிச்சயமானவர்களாகவே தெரிந்தார்கள். 

ஏன் அந்த டைகர் கூட அறிமுகமானவனாகத்தான் இருக்கிறான். சௌந்திரம் சில விஷயங்களில் அலங்காரத்தம்மாவை ஞாபகப் படுத்தினாள். கல்யாணி கதா பாத்திரத்தின் மூலம் ருக்மிணி, டொக்கி, புவனா, யமுனா என ஜானகிராமனின் புத்திசாலிப் பெண்கள் நினைவுக்கு வருகிறார்.

ஆனால் சத்தியமாகச் சொல்கிறேன். வெங்கடம்மாவும், மணிசங்கர் ஐயரும் நாம் பார்த்தே அறியாத இன்றைய தலைமுறையின், காலகட்டத்தில் காணக்கிடைக்காத அபூர்வமான உன்னதப் பிறவிகள்.

கல் மண்டபம் இலக்கியச் சிந்தனையின் பரிசு பெற்றிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். ஆனால் என் ஆதங்கம் ஏன் சாகித்திய அகாதமி கண்களிலோ, ஞான பீடம் கண்களிலோ படவில்லை என்பதுதான். பட்டிருந்தால் நம் இந்த வழி முறைகளும், நீத்தார் கடன்களும், ஸவஸம் காரணங்களும், அதனைச் செய்கின்ற முறைகளும், அவர்களின் வறுமைப் போராட்டங்களும் மற்ற மொழிகளுக்கு மிகச் சுலபமாக சென்றடைந்திருக்கும் . ஒருவேளை நல்ல திரைப்பட கலைஞர்கள் கையிலோ, மாற்றுத் திரைப்படங்கள் எடுக்கும் மலையாள திரைப்பட வல்லுனர்கள் கையிலோ கிடைத்திருப்பதால் பதேர் பாஞ்சலி மாதிரி, ஸம்ஸ்காரா மாதிரி இன்றளவும் பேசப்படும் திரைப்படமாகியிருக்கும் அருமையான வாய்ப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.

அபூர்வமான ஒரு விஷயத்தை அழகான நடையில், சிக்கலான உணர்வுப் போராட்டங்களைக் கூட எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் மிகத் தெளிவாக, துல்லியமாக எழுதப் பட்ட இந்தக கல் மண்டபம் மிகப் பெரிதான வெற்றியையோ, பரிசுகளையோ பெறாதது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. இது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. என் மரமண்டைக்குப் புரியாத எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று...


===========================================================================

பொக்கிஷம்  : 

1983 கல்கி ஜோக்ஸ்...   சிரிக்கணும்னு கட்டாயமில்லை.  அடிக்காமல் இருந்தால் சரி!








34 கருத்துகள்:

  1. ​//நான் ஒழுங்காக படிக்காமல் போனதற்கு பாடல்களும் ஒரு காரணம். சினிமா பாடல்கள்தான். //

    ​இது யார்? நீங்களா? அடி பலமில்லை. விதிப்படி எல்லாம் சரியே எனலாம்.

    கந்தசாமியை கைவிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு தாவிட்டீங்க. facebook இல்

    காந்திஜி மார்க் ரிப்போர்ட் மோடிஜியின் மார்க் ரிப்போர்டுக்கு பதிலா? நேரு போய் காந்தி வந்துவிட்டார்? உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

    புதிய பகுதி படங்கள் அட்டகாசம். படங்கள் நீனால் எடுத்தவையா?

    பொக்கிஷம் ஜோக்ஸ் கண்டேன்.
    அப்பாடா பதிவு முடிகிறது. பரவாயில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ​நீனால் நீங்கள் என்று மாற்றிக்கொள்ளவும்

      நீக்கு
    2. // இது யார்? நீங்களா? அடி பலமில்லை. விதிப்படி எல்லாம் சரியே எனலாம். //

      ஹிஹிஹி  நானேதான்..  நானேதான்...   நன்றி.

      கந்தசாமி என்ன எந்த சாமியுமே நிரந்தரமில்லை!!  யார் சுவாரஸ்யமாய் பகிர்கிறார்களோ, நாமும் அதை லவட்டி விட வேண்டியதுதானே...   உங்களுக்கும் படிக்கக் கொடுக்கிறேன்!  ஆனால் அவர்கள் பெயரையு 


      .இல்லை..  மோடிக்கு பதில் எல்லாம் இல்லை..  இது சிலிக்கான் ஷெல்பில் வந்தது.  அங்கு அப்படி எல்லாம் செய்வது கிடையாது.

      புதிய பகுதி, வித்தியாசமான கடைப் பெயர்கள்தானே?  நான் எடுத்ததுதான்.

      அப்பாடா பதிவு முடிகிறது...   ஹிஹிஹி  கொஞ்சம் பெரிசாக இருக்கிறதோ....  கல்மண்டபம் பற்றி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லையே நீங்கள்...

      நீக்கு
  2. உங்களுக்குச் சினிமா பாட்டு காரணம்னு சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்...
    எனக்கு வேறு பல காரணங்கள்...இந்த சினிமா பாட்டு கேட்க முடிந்திருந்தால் ஒரு வேளை நான் இதில் இறங்கியிருப்பேனோன்னு ஹிஹிஹி...இப்படி நிறைய ஒவ்வொன்றுக்கும் கனவு விரியும்...அதாவது ...புத்தகம்னா, ஒரு வேளை எழுத்தில்? புகைப்படம் என்றால்...ஒரு வேளை ஃபோட்டோகிராஃபர்? படம் வரைதல்னா....ஒரு வேளை ஒவியர்? இல்லைனா ஒரு வேளை டீச்சர்?

    இப்படி ஒவ்வொரு சமயமும் ஹிஹிஹி...கடைசில குண்டுசட்டிக்குள்ள குதிரை ஓட்டிக் கொண்டு நுனிப் புல் மேயுந்து கொண்டு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. ஆனால் அப்போது அதற்கெல்லாம் வாய்ப்புகள் கம்மி.

      நீக்கு
  3. பாலச்சந்தர் அந்த பின்னணியை மட்டும் எடுத்துக் கொண்டு அதை காதல் கதையாக மாற்றி விட்டாராம். சுஜாதா அச்சு ஊடகக் காரர். பாலச்சந்தர் காட்சி ஊடகக்காரர். அவரவருக்கு அவரவர் இடத்தின் சூட்சுமங்கள் தெரியும்.

    கதை அப்படி மாற்றப்பட்டதற்கு சுஜாதா மனதளவிலாவது வருத்தப்பட்டாரா, தெரியவில்லை. //

    அதைப் பத்தி எதுவும் வரவில்லையோ? நீங்கள் சொல்லியிருக்கும் அவர் கதைகள் படமான போது வருத்தப்பட்டதை வாசித்த நினைவு.

    கதையையே மாற்றினால் வருத்தப்படமால் இருப்பாரா? பாலச்சந்தர் அப்படிச் செய்தது சுஜாதாவிடம் கேட்டுச் செய்தாரா? எங்கேனும் வந்திருக்கிறதா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதாவோடு கலந்தாலோசித்துதான் செய்திருப்பார்.  நினைத்தாலே இனிக்கும் பற்றி சுஜாதா ஒன்றும் சொன்னதில்லை.  திரைப்படத்துக்கென்று சுஜாதா எழுதிக் கொடுத்த தனிக்கதை, முதல் கதை.

      நீக்கு
  4. ப்ரியா படம் அவரை ரொம்ப நொந்து கொள்ள வைதத்து தெரியும்...

    ஆனால் அதன் பின்னான விஷயங்கள் தகவல்..//'காரே மூரே என்று ஒரு கதை எழுதுகிறேன், இதை எப்படி படம் எடுக்கக் கேட்கிறார்கள் பார்க்கிறேன்'//

    சிரித்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வரிகள் இருக்கும் புத்தகம் என்னிடம் இருப்பதாகவே நினைக்கிறேன்.  முடிந்தால் அடுத்த வியாழனில் அல்லது அப்புறம் கிடைக்கும்போது பகிர்கிறேன்.

      நீக்கு
  5. படம் பார்த்து விட்டு அதே நினைவுகளுடன் *மறுபடி மறுபடி 7 நாட்கள் 7 முறைகள் தொடர்ந்து பார்த்தேன்!) //

    ஆஆ!!!

    வாசு வோடான உரையாடல் - சிரித்துவிட்டேன் நீங்களும் செம கெத்து காட்டியிருக்கீங்க!!

    பார்த்தால் அப்புறம் தஞ்சையில் நிறைய பேர் மலேசிய மாமா வைத்திருந்தார்கள் போல, நிறைய பேர் அந்த இளநீல பனியன் சட்டை அணிந்து வலம் வந்ததைப் பார்த்தேன்.//

    முதல் பகுதி செமயா சிரித்துவிட்டேன்...

    இந்த ஜெயப்பிரதா ட்ரெஸ் எங்க ஊர்லயும் பணக்காரப் பெண்கள் போட்டிருப்பாங்க ஸ்கூல்ல்ல...எங்களுக்குக் கலர் ட்ரெஸ் போட்டு வரப்ப போட்டு வருவாங்க. இதுக்குன்னே ஹை ஹீல்ஸ் வேற...அப்பவே ஹை ஹீல்ஸ் உண்டு..கெத்தா நடப்பாங்க...அதுவும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு....மிடி ட்ரெஸ்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் போட்டா பரவாயில்லை.. நம்ம வாசு உட்பட நிறைய பசங்க போட்டிருந்தாங்க...

      அசிங்கமா இல்ல...?!!

      எனக்கு மட்டும் கிடைக்கல...!!

      நீக்கு
  6. காதலில் விழுந்தேன்.//

    யார் மேல!!!!!!!!!!!!!!!!!!!!!
    பாஸ் தானே? அது சரி அவங்க அப்ப இந்த மிடி போட்டுட்டிருந்தாங்களோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..   என்ன கீதா இதை எல்லாம் கேட்கறீங்க...   இது என்னோட முதல் காதல்..  பேதைக்காதல்... பெதும்பைக்காதல்...  இதற்குப் பிறகு பல வருடங்களுக்குப் பிறகுதான் பாஸை சந்தித்தேன்.

      ஆமாம் பேதையாவது பரவாயில்லை, பெதும்பை என்றால் என்ன அர்த்தம்?  ஜீவி ஸாரைக் கேட்கணும்.

      நீக்கு
    2. (காதல்) போதையில் விளையாடி விட்டு பேதை என்று பிதற்றுகிறீர்கள்.

      நீக்கு
    3. ஹிஹிஹி  அப்படியெல்லாம் சொல்லப்பிடாது!

      நீக்கு
    4. முன்னாலேயே படித்தது சட் என்று முழுதும் நினைவுக்கு வராத்தால் தேடினேன். பெண்கள். 1-8 பேதை, 9-11 பெதும்பை, 12-14 மங்கை, 15-19 மடந்தை, 20-24 அறிவை, 25-29 தெரிவை, 30 க்கு மேல் பேரிளம்பெண். ஹாஹாஹா. எந்த வயதில் மாமி, கிழவி என்றெல்லாம் ஆராயணும். ஆணுக்கு ஆனால் 12 வயது இடைவெளி ஒவ்வொரு பருவமும் கடக்க (பெண்ணுக்கு ஐந்துக்கும் குறைவு) பாலகன், விடலை, காளை, மீளி, மறவோன், திறவோன், முதுமகன்.

      நீக்கு
    5. ஓ..  மை காட்...   சூப்பர் நெல்லை.   அப்போ நான் இங்கு பெதும்பை என்று சொல்லி இருப்பது பொருந்தாத!  அடடா..  வாட்ஸாப் மாதிரி அழிக்கவும் முடியாதே...

      நீக்கு
    6. நான் எட்டு, 13, 14, 17, 23, 24 வயதுகளில் காதலில் விழுந்த கதையையெல்லாம் (அவை காதல் என நினைத்துக்கொண்டு) நினைக்கும்போது எந்த வயதுப் பெண்களை விட்டிருக்கிறேன் என யோசித்தால் தெரிவை, அதற்கு மேல் என்றுதான் தோன்றுகிறது ஹிஹிஹி

      நீக்கு
  7. ரசனையான செல்ஃபோன் கடை. கண்டிப்பா அடிமிஷன் இல்லாம இருக்குமா சிலது ஒரு நாள் டைம் கேப்பாங்களே...அதுக்கும் சேர்த்து சார்ஜ் போடாம இருந்தா சரி. ஐசியு, அது இதுன்னு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) இல்லாம இருக்குமா?  அப்புறம் அவங்க எப்படி பொழைக்கறது!

      நீக்கு
  8. ஹப்பா இரண்டு பகுதி முடித்துவிட்டேனா....

    சரி அப்பால இடையிடையேதான் தலை காட்டுவேன்....வேலை முடிலை சாமி! செம டைட்..

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மல்லிகைப்பூ பாடலை மிகவும் ரசித்தேன் ஜி.

    ஒரு காலத்தில் கே.பாக்கியராஜ் திரைப்படங்களில் போடும் டி.சர்ட் பிரபலம்.

    பெயர்ப் பலகைகள் சூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எனக்கும் பிடிக்கும் ஜி..  

      வாசு அந்த அபிநயத்தோடு எங்களுக்குள் புகுந்து சொல்லி விட்டு ஓடுவான்!

      //ஒரு காலத்தில் கே.பாக்கியராஜ் திரைப்படங்களில் போடும் டி.சர்ட் பிரபலம். //

      ஆமாம்.. ஆமாம்... ஆமாம்... நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  10. ஆயா கடை எனது சேகரிப்பில் இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  அப்படியா?  பழமையைக் குறிக்கும் இன்னொரு கடை பெயர்ப்படம் வைத்திருந்தேன், அதை எங்கு வைத்தேன் என்று நினைவில்லை!

      நீக்கு
  11. பதிவை கதம்பத்தை முழுவதுமாகப் படித்தால் மனதில் என்ன தங்குகிறது என யோசித்துப் பிறகு கருத்திடுவேன், பெரும்பாலும்.

    இன்று மனதில் தவ்கிய இரண்டு விஷயங்கள், அபரகாரியங்கள் செய்பவர்கள் மற்றும் சட் சட் என காதலில் விழும் ஆண்கள் மனோபாவம் (என்னையும் நண்பர்களையும் வைத்துத்தானே சொல்லமுடியும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொல்ல நள்கை.   

      கல்மண்டபம் மனதில் நின்றது மகிழ்ச்சி.

      தேவதைகளைக் கண்டால் காதலில் விழுவது ஒரு வயசு...  - 'ஒரு வயதிலேவா' என்று கடிக்க மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையுடன்....

      நீக்கு
  12. நான் புகைப்படம் எடுத்த வித்தியாச கடை பெயர் நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது. பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. நம்மைச் சேர்ந்தவர் இறந்த பிறகு இந்த அபரகாரியத்தைச் செய்பவர் யார் என நம் வீட்டுக்குத் தொடர்புடைய வாத்தியார்/வீட்டு நற்காரியங்களைச் செய்துகொடுப்பவர் சொல்லுவார். அதன்படி அபரகாரிய வாத்தியார் சொல்வதை, அவர் கேட்கும் பணம், பொருள்களைக் கொடுப்போம். அதில் சிலர் அந்த அபரகாரிய பன்னிரண்டு நாட்களும் நமக்கு உணவைக் கொண்டுவந்து கொடுக்கும் கேடரிங் தொடர்போ, இல்லை அவர் மனைவி, உறவினர்கள் இதனைச் செய்வதோ நடக்கும். எல்லாக் காரியங்களும் முடிந்த பிறகு, அவரைத் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பமே வராது. எந்த நற்காரியங்களுக்கும் அவரைத் தொடர்புகொள்வதில்லை.

    நம் வீட்டு வாத்தியார் ஒரு நிகழ்வு நடத்தித்தர 10.000 கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். நாம் இன்னும் சிலரிடம் விசாரித்து, பணம் அதிகமா குறைவா என்று பார்க்கும் சந்தர்ப்பம், வேறு ஒருவரை வைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் உண்டு. அபரகாரியத்தில் இது சாத்தியமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டு வாத்யார் என்று ஆனபின் அவர் கேட்பதுதான்.  நேற்று அம்மாவின் திதி.  ரேட் ஏறி இருந்தது.  ஒன்றும் சொல்லவில்லை.  கொடுத்து விட்டேன்.  அதில் ஒரு சம்பவம் வேறு...

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதி ஸ்வாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள். அப்போது இந்த "குடிபான" ஷர்டுக்கள் பிரபலம். ஆண்களுக்கு வெறும் அரைக்கை சட்டை, முழு நீளக்கைசட்டை என்பது போரடித்தின் நடுவே, இந்த டீஷர்ட் நன்றாக பவனி வந்தது. அதுவும் பெண்கள் அணியும் டீஷர்ட். இதெல்லாம், அப்போது நாங்களும் சினிமாக்களில் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டதோடு சரி..! இப்போது எங்கும் சகஜமாகி வியாபித்து நிற்கிறது.

    ஜெயப்பிரதா இந்த படத்தில் அந்த டீஷர்ட்டுடன் அழகாக இருப்பார். உங்கள் நண்பரின் கெத்தையும், பதிலுக்கு உங்கள் நண்பருக்கு நீங்கள் தந்த கெத்தான பேச்சுக்களையும் ரசித்தேன்.

    அந்த "மல்லிக்கைப்பூ" பாடல் நானும் நிறைய தடவை கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் கேட்டு ரசிப்பதற்கு கூட வீட்டில் பயங்கர தடைகள் வரும்.

    அதுசரி..! காதலில் விழுந்தீர்கள். அந்த காதல் ஒரு வழியாக நிறைவேறியதா இல்லையா? :))

    இந்த வாரம் கவிதை ஏதும் இல்லையே..! காதலில் விழுந்ததில் கவிதை மறந்து விட்டதோ.? ஹா ஹா ஹா.
    நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!