திங்கள், 24 மார்ச், 2025

"திங்க"க்கிழமை : சேமியா அல்வா - நெல்லைத்தமிழன்

 

 003- திங்கக்கிழமை பதிவு சேமியா அல்வா - நெல்லைத்தமிழன்

 

இந்தச் செய்முறையை இணையத்தில் பார்த்து என் நோட்டில் குறித்துவைத்திருந்தேன். அன்றொரு நாள் எங்கள் சம்பந்தி வீட்டிற்கு வருவதாகக் முந்தைய நாள் இரவு சொல்லியிருந்தார்.  என்னுடைய மகள் வீட்டில் வைத்திருந்த ஒரு பெட்டியை (அதில் கிறிஸ்மஸ் மரம் செய்வதற்கான எல்லாப் பொருட்களும், அதனை அலங்காரம் செய்ய பல்வேறு ஜோடனைப் பொருட்களும் இருந்த ன) வாங்கிச்செல்வதற்காக அவர் வந்தார். எனக்கு அவர்களுக்கு ஏதாவது ஒரு இனிப்பு செய்துதரணும் என்று ஆசை. 

அவர்களுக்கும் இனிப்பில் அவ்வளவு விருப்பம் இருந்ததில்லை. இருந்தாலும் வருபவர்களுக்கு ஒரு இனிப்பு செய்யணும் என்று நினைத்து என் குறிப்பு நோட்டைப் பார்த்ததும் இது கண்ணில் பட்ட து. 

காலையில் 5 மணிக்கு எழுந்திருக்கும் நான், ஒன்றேகால் மணி நேரம் நடைப்பயிற்சி (அல்லது 10,000 ஸ்டெப்ஸ்), பிறகு ஒரு மணி நேரம் ஜிம் என்றெல்லாம் ஒரு ஒழுங்குமுறை சமீப காலமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் இந்த இனிப்பை 1 மணி நேரத்துக்குள் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். 

தேவையான பொருட்கள்

சேமியா (வெள்ளை நிறம், ரோஸ்ட் செய்யாத து) 200 கிராம் (இதனை கிச்சடிச் சேமியா என்று சொல்வார்கள்)

ஜீனி 500 கிராம்

முந்திரி 50 கிராம்

உலர் திராட்சை 50 கிராம்

ஏலப்பொடி 1 சிட்டிகை

நெய் 100 மி.லி

கேசரி நிறப் பொடி சிறிது 

செய்முறை

50 கிராம் நெய் விட்டு, கடாயில் முந்திரி திராட்சையைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். 

பக்கத்திலேயே ½ லிட்டர் தண்ணீர் சூடுபடுத்திக்கொள்ளவும். 

கடாயில் வறுத்தவற்றுள் முந்திரியை மாத்திரம் எடுத்துவைத்துக்கொள்ளவும். திராட்சையுடன் சேர்த்து சேமியாவைப் போட்டு வறுக்கணும். திராட்சையும் உப்பவேண்டும். 

பிறகு சூடு தண்ணீரை கடாயில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 

சேமியா நன்கு வேகணும். தண்ணீர் போனதும், நிறமியைச் சேர். இந்தக் கலவை கெட்டியாக ஆகும். சேமியா நன்கு வெந்திருக்கணும். தொட்டால் mash ஆகணும். இப்போது ஜீனியைச் சேர்க்கணும். 

ஜீனி சேர்ந்ததும் இளகும். கொஞ்ச நேரம் கிளறினால் திக்காக ஆகும். பிறகு கடைசியில் 50 கிராம் நெய் சேர்க்கணும். பிறகு ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறணும். 

அல்வா பதம் வந்த தும், அடுப்பை அணைத்துவிட்டு, முந்திரியை மேலே சேர்க்கவும். 

வாழை இலையில் சேமியா அல்வாவைப் பரிமாறணும்.






நான் படங்கள் எடுக்கும் அவசரத்தில், அடுப்பை சேமியாவில் சுடுநீர் சேர்த்ததும் சிம்மில் வைக்க விட்டுப்போய்விட்டது. இன்னும் கொஞ்சம் அதிக நீர் சேர்த்திருந்திருக்கலாம். சேமியா இன்னமுமே குழைவாக வெந்திருக்கணும் என்று தோன்றியது.

நான் சாப்பிட்டுப் பார்க்கவில்லை. நான் டயட்டில் இருக்கிறேனே  (ஷுகர் சம்பந்தப்பட்டது, அரிசிச்சாதம், பால் பொருட்கள் எதையும் சாப்பிடக்கூடாது. இதுபற்றி இன்னொரு வாரத்தில் எழுதுகிறேன்)

எங்கள் பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணினேன்.   இன்னொரு வாரத்தில் இன்னொரு செய்முறையுடன் உங்களைச் சந்திக்கிறேன்.



23 கருத்துகள்:

  1. ​சேமியா அல்வா சேமியா கட்டி பாயசம் போல் இருக்கிறது. வீட்டில் இனிப்பு செய்வதை எப்பொதே விட்டாயிற்று. எப்போதாவது சேமியா பாயசம் செய்வோம்.

    ஒரு கையால் கிளறிக்கொண்டு, மறுகையால் போட்டோ எடுத்துக்கொண்டு என்று இடைஞ்சல்களை சமாளித்து கொண்டு கிண்டி இருக்கிறீர்கள். கூடவே சம்பந்தி அதை வாயில் வைத்து சுவைக்கும் போது எடுத்த போட்டோவையும் போட்டிருந்தீர்களானால் சுவை பற்றிய உண்மை தெரிய வாய்ப்பிருந்தது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். என்ன சேமியா கட்டிப் பாயசமா? இப்படி எழுதி நவீன நளனை குறைத்து மதிப்பிட்டுட்டீங்களே

      நீக்கு
    2. அல்வாவின் குறையைக் குறிப்பிட்டிருக்கிறேனே.

      நீக்கு
    3. அல்வாவின் குறையைக் குறிப்பிட்டிருக்கிறேனே.

      நீக்கு
  2. ​சமையல் குறிப்பில் சில மாற்றங்களை கூற விரும்புகிறேன்.
    பயன்படுத்தப்பட்ட சேமியா உப்புமா சேமியா போல் உள்ளது. நீள குச்சிகள் போன்ற பாயச சேமியா தான் அல்வாக்கும் நன்றாக இருக்கும்.

    அல்வாக்கு திராட்ச்சை (கிஸ்மிஸ்) உபயோகிக்கக்கூடாது. முந்திரி போதும்.
    நீங்கள் நெய் நிறைய உபயோகிக்கிறீர்கள். அளவுக்கு அதிகமான நெய்யை வடிகட்டிவிடலாம்.

    பெயர் அல்வா ஆனால் காட்டியது சேமியா கேசரி.
    இது போல் அவல் கேசரியையும் செய்யலாம்.

    கேரளாக்காரர்களுக்கு அல்வா என்றால் கட்டியாக கத்தியால் துண்டு போடும் பதத்தில் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேமியாவின் குறை சரிதான். சம்பந்திக்குச் செய்ததால் நெய் அதிகம். பெண்ணுக்கு கிஸ்மிஸ் பிடிக்கும் பையனுக்கு முந்திரி பிடிக்கும் என்பதால் எப்போதுமே இரண்டையும் உபயோகிப்பேன்

      கேரளாக்காரர் செய்யும் அரிசி அல்வா தவிர மற்ற பாறை போன்ற அல்வாக்கள் பிடிப்பதில்லை

      நீக்கு
  3. நெல்லை, அல்வா நல்லா வந்திருக்கு.

    நீங்களே சொல்லிருப்பது போல், ஹல்வாக்கு கொஞ்சம் இன்னும் வெந்திருந்தால் நல்லாருக்கும்தான்.

    அல்வாக்கும் கிஸ்மிஸ் உண்டா? ஓ சம்மந்தின்றதுனால போட்டீங்களோ?

    கேசரிக்குத்தானே கிஸ்மிஸ். அல்வாக்கு பல வித பருப்புகளையும் போடலாம்.

    சமைத்துக் கொண்டே ஃபோட்டோ எடுக்கறது சிரமம். கூடவே மொபைல் கேமரா அல்லது மற்ற கேமரா எதிலுமே லென்ஸில் ஆவி புகை அடித்தால் கெட்டுப் போய்விடும் அபாயமும் இருக்கு.

    நான் ரொம்பவே சிரமப்படுவேன் செய்து கொண்டே எடுக்க. அதனாலதான் இப்பலாம் எதுவும் எடுக்கறதும் இல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. எனக்கு சிலசமயம் மனைவி உதவி உண்டு, படங்கள் எடுக்க

      நீக்கு
  4. ஏலப் பொடி, கேசரி பௌடர் எல்லாம் போட்டால் கேசரி போலதானே? அல்வாக்கும் கேசரிக்கும் வித்தியாசம் இல்லாமல் போகுமே? என்ன நெய் கூடுதல் விடுவோம் அல்வாக்கு ஆனால் சுவை ஏலப்பொடி எல்லாம் மாற்றி விடுமே, நெல்லை?

    நான் செய்யும் முறை கொஞ்சம் வேறு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மனுசன் புதுசா முயற்சித்தால் கேசரிக்கும் இந்த அல்வாக்கும் ஆறு வித்தியாசங்கள் கேட்கறீங்களே

      ஒவ்வொரு வீட்டிலும் செய்யும் கேசரிக்கு இடையிலுமே ஆறு வித்தியாசங்கள் பார்க்கலாமே

      நீக்கு
  5. நேபாள் ஜனக்புரி யிலிருந்து எழுதுகிறேன். இனி இரண்டு நாட்களில் இந்தியாவுக்குள் வந்துவிடுவேன் பதிலெழுதுவதில் சிரமம் இருக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது பிரயாணம் சிரமமில்லாது நல்லபடியாக சென்று கொண்டுள்ளதா ? ஜனக்புரியில் என்ன கோவில்கள், இடங்கள் பார்த்தீர்கள்.? விரைவில் பதிவில் நீங்கள் இங்கு பார்த்த இடங்கள், கோவில்கள் இடம்பெறுமென நம்புகிறேன்.தங்களது தல யாத்திரை பயணம் வெற்றிகரமாக இனிதே தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ஜனக்புரி ஜனகர் பிறந்து ஆட்சி செய்து சீதையை வளர்த்து இராமர் தனுசை வளைத்து சீதையைத் திருமணம் செய்துகொடுத்த இடம். இப்போ தங்கியிருக்கும் சீதாமாரியில் (இன்னொரு ஊர்) சீதையை ஜனகர் எடுத்த இடம்

      நீக்கு
    3. நல்லது. சென்ற இடங்களை குறித்து உடன் விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி சகோதரரே. நானும் ஜனக்பூர் என்றால், ஜானகி வளர்ந்த இடமா என கேட்க நினைத்தேன். நீங்களும் விளக்கமாக சொல்லி விட்டீர்கள். எங்களுக்காகவும், எல்லாவிடத்திலும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனை நல்லவிதமாக பலிக்க வேண்டுமென நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி சகோதரரே.

      நீக்கு
    4. ஒன்று சொல்ல விட்டுப்போய்விட்டது. ஜனக்புரி நேபாளம். சீதாமரி பீஹார்

      நீக்கு
  6. சேமியா அல்வா வித்தியாசமான முறையில் இருக்கிறது.

    இன்று கேசரியா ?அல்வாவா? என்ற சர்ச்சை போகிறது போல் தெரிகிறது.:))

    நெல்லை கூறியது அல்வாதானே . சமையல் அவரவர் கைபக்குவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். கேசரியோ அல்வாவோ.. எல்லாமே தொண்டையைத் தாண்டும் வரைதான்.. இல்லையா

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான சேமியா அல்வா நன்றாக உள்ளது.

    படங்கள் செய்முறை அனைத்தும் மிக அருமையாக உள்ளது. இது போல் நானும் ஒரு தடவை செய்து,. எ. பியிலோ, என் தளத்திலோ பகிர்ந்துள்ளேன் சேமியா கேசரி என்ற பெயரோடு.

    அல்வாவுக்கு கேசரியை விட சிறிது கூடுதலாக கிண்ட வேண்டும். நெய் தடவிய தாம்பாளத்தில் கொஞ்சம் திக்காக கொட்டி, ஆறியவுடன் சற்று பெரிதான வில்லைகள் போட்டு விட்டால், அது அல்வா பெயருக்குள் வந்து விடும். அதற்கு முன்பான பதத்தில் கிளறி வைத்தால் அது கேசரி பதத்தில் அமர்ந்து விடும். நெய்யும், சர்க்கரையும் அதிகமாக சேர்த்திருப்பதால் இவ்விதம் சொன்னேன். அதில் ஆறியவுடன் கக்கும் நெய்க்கு இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாக கிளறியிருக்கலாம். முழுதான அல்வா பதத்தை எட்டியிருக்கும் என நினைக்கிறேன்.

    பொறுமையாக படங்கள் எடுத்தவாறே இனிப்பு செய்து, பெருமாளுடன் பகிர்ந்து, வந்த சம்பந்திக்கும் தந்து உபசாரம் செய்து கொண்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரரே. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது.. சேமியா கேசரியா? ஹாஹாஹா.

      நான் கொஞ்சம் அதிகமாகக் கிளறிட்டேன் என நினைத்தேன். சிலமணி நேரத்தில் எடுப்பதே கஷ்டமாகிவிட்டது

      நீக்கு
    2. கேசரியோ, அல்வாவோ பெயர் நாம வைக்கிறது தானே! நான் முதல் முதலாகக் கேசரி கிளறும்போது கொஞ்சம் முறுகிவிட்டது. எங்க அம்மா இப்படித்தான் எடுக்கச் சொல்லுவாங்கனு சமாளிப்ஸ். அதோடு சொஜ்ஜி அப்பத்துக்காகக் கெட்டியா வேணும்னு எடுத்தேனாக்கும்னு சொல்லிட்டேன்.

      நீக்கு
  8. சேமியா அல்வா செய்வதை படி படியாக காட்டி இருப்பது நன்றாக இருக்கிறது. முக்திநாத் தரிசனம் நல்லபடியாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்திநாத்துக்கு இது எத்தனாம் தரம்? 108 புண்ய நீரிலும் குளிச்சீங்களா? நாங்கல்லாம் சும்மா ப்ரோக்ஷணம் தான். எதிர் விட்டு மாமி குளிச்சுட்டுப் புடைவை கட்டிக்க முடியலையாம். கைகளெல்லாம் உறைந்து போய் இன்னொரு மாமி புடைவை கட்டி விட்டாலும் நடக்க முடியாமல் சிரமப்பட்டு! கிட்டத்தட்டப் படுக்கையிலே வந்து சேர்ந்தாங்க. ஆறு மாசம் ஆனது உடம்பு நிலைக்கு வர.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!