சனி, 8 மார்ச், 2025

பள்ளிக்கு சொந்த செலவில் கழிப்பறை மற்றும் நான் படிச்ச கதை

 

பெயரில் மட்டுமா தங்கம்; உள்ளமும் தான் தங்கம்!

தென்காசி: புளியங்குடியில் ரோட்டில் கிடந்த பையில் இருந்த ரூ 5 லட்சத்தை விவசாய தம்பதி, உரியவரிடம் ஒப்படைத்ததை போலீசார் பாராட்டினர்.  தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுக்குடியை சேர்ந்தவர் தங்கசாமி 50. விவசாயி. மனைவி ஜோதி. இருவரும் விவசாய பணிக்கு செல்லும் போது ரோட்டில் ஒரு மஞ்சள் துணிப்பை கிடந்தது. அதில் ரூ 5 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. பையை எடுத்துப் பார்த்த தங்கசாமி அங்கிருந்தவர்களிடம் யாராவது தொலைத்து விட்டார்களா என விசாரித்தார். யாருமே உரிமை கொண்டாடாததால் புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில் புளியங்குடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் 44, என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் அடகு நகைகளை மீட்க டூவீலரில் சென்றபோது தவற விட்டிருந்தார். எனவே போலீசார் பாலமுருகனை அழைத்து தங்கசாமி கையினாலேயே அதை ஒப்படைத்தனர். தங்கசாமி, ஜோதி தம்பதியை தென்காசி எஸ்.பி அரவிந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் ஷ்யாம் சுந்தர் பாராட்டினர்.

=====================================================================================================

பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை

உடுமலை; பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் கனிமொழி.  திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பூலாங்கிணர் பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி. எம்.ஏ., - பி.எட்., பட்டதாரியான இவர், தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தார். தற்போது இவர்,தமிழகத்தின் முதல் ஆம்னி பஸ் பெண் டிரைவராக மாறியுள்ளார். பொள்ளாச்சி முதல் சென்னை வரை, தன் சொந்த ஆம்னி பஸ்சை ஓட்டி வருகிறார்.

இது குறித்து கனிமொழி கூறியதாவது: பள்ளி பருவம் முதலே சாதிக்க வேண்டும் என்ற நோக்கில், கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பெற்றுவந்தேன். குடும்ப வாழ்விற்கு வந்ததும், பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய நிலையில், பி.இ., படித்து, சுய தொழில் செய்த கணவர் கதிர்வேலுக்கு உதவியாக நிறுவனத்தை கவனித்து வந்தேன். தொலைதுாரத்துக்கு வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் இருந்ததால், திருச்செந்துார் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றபோது, நானும், கணவரும் மாறி மாறி கார் ஓட்டி வந்தோம்.  வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் அதிகரித்த நிலையில், கணவருக்கும் ஆம்னிபஸ்கள்இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால், இருவரும் 'ஹெவி டிரைவிங் லைசென்ஸ்' பெற்று, இரண்டு ஆம்னி பஸ்களைவாங்கினோம். 'அழகன் டிராவல்ஸ்' என்ற பெயரில், ஜனவரி முதல்எங்கள் பஸ்கள் இயக்கப்படும் நிலையில், மாற்று டிரைவருக்கு பதில் அவ்வப்போது ஆம்னிபஸ் ஓட்டினேன். கடந்த 15 நாட்களாக முழுமையாக ஓட்டி வருகிறேன்.  பஸ்சில், 50 பயணியர் வரை இருக்கும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உணர்ந்தும், சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தது. எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், துணிச்சலும் இருந்ததால், சிரமம் தற்போது பெரிதாக தெரியவில்லை.  சாலையில் செல்லும் போது, பயணியர் வரும் பஸ் என்பதை உணராமல், சிலர் வேண்டுமென்றே மது அருந்திவிட்டும், சாகசம் செய்வதற்காக பைக், கார் உள்ளிட்டவற்றை தாறுமாறாக இயக்குவதும் தான் வருத்தமாக உள்ளது.  ஒரு பெண் பஸ் இயக்குவதை பார்க்கும் பயணியர் சிலர், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களை வைத்துள்ளனர். இரவு முழுதும் இயக்கும் போது, பஸ்சில் பயணம் செய்தவர்கள் இறங்கி செல்லும் போது, நான் டிரைவிங் சீட்டில் இருப்பதை ஆச்சரியமாக பார்த்து, என்னை பாராட்டியும்செல்கின்றனர்.  எங்களுக்கு 8 மற்றும் 4 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களை, 'மிஸ்' பண்ணுகிறேன். என் கணவர், பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் உற்சாகம் அளித்து வருகின்றனர். எந்த துறையிலும், ஆண், பெண் பேதமில்லை. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

=============================================================================================

அரசுப்பள்ளிக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிய ஆசிரியர்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதி செய்யக்கோரி பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் தனது சொந்த செலவில் கழிப்பறை வசதி செய்துள்ளார்.  திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. 62 மாணவர்கள் படிக்கின்றனர். நுாறு ஆண்டுகளை கடந்த இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை வசதி, குடிநீர் வசதியில்லை. இது குறித்து தலைமை ஆசிரியர் கதிரவன், பள்ளி மேலாண்மை குழு சார்பில் அதிகாரிகளை சந்தித்து வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை.  கழிப்பறை வசதியில்லாமல் மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனால் தலைமை ஆசிரியர் கதிரவன் தனது சொந்த பணம் ரூ.65 ஆயிரத்தில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தார்.

இது குறித்து கதிரவன் கூறியதாவது: கழிப்பறை வசதி செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியும் பயனில்லை. மாணவிகள் கழிப்பறை செல்லாமல் இருக்க தண்ணீர் குடிக்காமல் இருந்தனர். இதனால் அவர்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டது.

இதனால் சொந்த செலவில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தேன் என்றார். தலைமை ஆசிரியர் கதிரவனை திருவாடானை மக்கள் பாராட்டினர்.

==============================================================================

மதுரை: தவிட்டுச்சந்தையைச் சேர்ந்த சரவணக்குமார் 56, ஆட்டோ ஒன்றில் தெப்பக்குளம் சென்ற போது 15 பவுன் நகை, அலைபேசி அடங்கிய பையை தவற விட்டார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.  சிறிது துாரம் சென்றபின்ஆட்டோவில் கைப்பை இருப்பதைப் பார்த்த கோச்சடையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகேந்திரன் 52, சரவணக்குமாரை இறக்கிவிட்டப் பகுதி போலீஸ் ஸ்டேஷன் சென்று பையை ஒப்படைத்தார்.  அங்கு பொருட்கள் சரிபார்க்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.  ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டிய கமிஷனர் லோகநாதன், ரூ. ஆயிரம் வழங்கினார்.


======================================================================================================================

சொல்வதெல்லாம் கதை அல்ல உண்மை

JKC 

 

ஒரு சின்ன சங்கதி எவ்வளவு பெரிய குழப்பத்தை உண்டாக்கும் என்பது தான் பின் வரும் கதை/செய்தியின் சுருக்கம். இது எந்த பத்திரிக்கையிலும் வெளி வராதது. நிகழ்ச்சியை நான் நேரில் காணவில்லை. கண்டவர்கள்  சொல்லக் கேள்வி. 

முன்னுரையாக சில குறிப்புகள். 

நான் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணி புரிந்து  பணி நிறைவில் ஒய்வு பெற்றவன் என்பது உங்களுக்கு தெரியும். சம்பவம் ஸ்ரீ ஹரிகோட்டா வில் உள்ள  சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்தது. அங்கு தான் பெரிய ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்தும் வசதி உள்ளது 

ஒரு ராக்கெட் ஏவுதல் மற்றும் உபக் கிரகத்தை சரியான செயல்பாட்டில் கொண்டு வருதல், என்பது பலருடைய கூட்டு முயற்சி ஆகும். இந்த முயற்சியை mission என்று கூறுவோம். ஒவ்வொரு mission க்கும் தேதி, நாட்கள் அடிப்படையில் ஒரு செயல் திட்டம் உண்டு, அந்த திட்டத்தின் கடைசி படி தான் launching எனப்படும் ஏவுதல் நிகழ்ச்சி. இந்த ஏவுதல் நிகழ்ச்சிக்கு படிப்படியாக செல்வதை count down என்று சொல்வோம். ஏவுதற்கு நிச்சயிக்கப்பட்ட நேரம், தேதிக்கு சுமார் 2 தினங்களுக்கு முன், திரவ எரிபொருள் நிரப்புதல், மற்றும் checkout எனப்படும் கடைசி நேர சோதனை போன்றவற்றை கம்ப்யூட்டர் ஏற்றெடுத்து அவ்வப்போது முடிந்த, முடிக்கப்பட்ட  விவரங்களை அறிவிக்கும். இதன் கண்காணிப்பாளர் mission director எனப்படுவார். அவருக்கு mission ஐ போதிய காரணங்களுடன் இடை நிறுத்த அதிகாரம் உண்டு. 

Chairman ISRO,  mission இல் ஈடுபட்ட மையங்களான  VSSC, LPSC, SDSC SHAR, URRSAC, ஆகிய மையங்களின் இயக்குனர்கள், mission இயக்குனர். ராக்கெட்டின் sub assembly  ஒவ்வொன்றுக்கும் பொறுப்பானவர்கள் என்று பலரும் control centre கட்டிடத்தில் இருந்து அவரவருக்கு முன் இருக்கும் கம்ப்யூட்டர் திரையில் அவரவர் சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  செலுத்தப்படும் உபக்கிரகத்தின் மூலம்  பயன்களை அனுபவிக்கப் போகும் user குழுவும் அமர்ந்திருப்பர். MCF Hassan மற்றும் ISTRAC விஞ்ஞானிகள் தொலை தொடர்பில் இருப்பர். ஏதாவது குழப்பம் என்று தோன்றினால் அதைக்  கவனித்தவர்  mission இயக்குனருக்கு அதை  தெரியப்படுத்துவார். count down நிறுத்துவது, அல்லது தொடர்வது பற்றி அவர் தீர்மானிப்பார். 

இது தவிர பொதுவான பெரிய டிவி திரைகளில் ராக்கெட்டின் தற்போதைய தூர்தர்சன் ஒளிபரப்பு படம், plot board எனப்படும்  ராக்கெட்டின் பாதை, மற்றும், sequence of events காட்டும் திரை முதலியன இருக்கும். 

Notes:  VSSC Vikram Sarabhai Space centre. திட எரிபொருள் ராக்கெட் பொறுப்பு.

 LPSC  Liquid propulsion Systems centre . திரவ எரிபொருள் ராக்கெட் பொறுப்பு.

 SDSC  Sathish Dhawan Space centre. ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பொறுப்பு.

 URRSAC U R  RAO Satellite centre. உபக்கிரக பொறுப்பு.

 MCF Master control facility உபகிரகங்களை சுற்று வட்டப்பாதையில் நிறுத்தும் பொறுப்பு, நியந்தரணம்.

ISTRAC ISRO Telemetry, Tracking and Command Network 

இனி சம்பவத்தை பார்ப்போம். 

PSLV ராக்கெட்டும், மூன்று கோடுகளும்.   

வழக்கமான PSLV launch தான். ராக்கெட் ஏவு தளத்தில் புறப்பட தயார் நிலையில் நிற்கிறது. கம்ப்யூட்டர் checkout சோதனைகளில் இதுவரை யாதொரு பிழையும் கண்டு பிடிக்கப்படவில்லை. Count down தடங்கல் இல்லாமல்  சென்று கொண்டிருக்கிறது. Launch Window எனப்படும் முஹூர்த்த நேரம் உறுதி செய்யப்பட்டது. எல்லாம் ரெடி. 

ஆனால் திடீரென்று “hold the count down. I see some abnormal marks near Ist stage separation on the vehicle”  என்று ஒரு அறிவிப்பு.

 

(கீழே நிற்கும் ஆளின் உயரத்தைக் கொண்டு ராக்கெட்டின் மொத்த  உயரத்தை கணக்கிட முடிகிறதா?) 

PSLV போன்ற பெரிய ராக்கெட்டுகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளவை அல்ல. அவ்வப்போது ஓரொரு mission க்கும் ஏற்ப தயாரிக்கப்படுபவை. கடைசியாக எல்லா பாகங்களும் flight certification செய்யப்பட்டு launch pad இல் assemble செய்யப்படும். இந்த assembly சில சமயம் மாதக்கணக்கில் நடைபெறும்.  

(படத்தில் தூரத்தில் தெரிவது MST (Mobile service tower) எனப்படும் சேவை டவர். முன்பில் உள்ள launch pad  இல் PSLV.)

 படங்கள் உதவி:  இணையம். 

MST நம்முடைய அண்ணா சாலை LIC கட்டிடம் அளவுக்கு உயரம் உள்ளது. அது தண்டவாளங்கள் வழியாக launch pad க்கு கொண்டு வரப்பட்டு ராக்கெட் assembly  and integration  செய்வார்கள். அது பூரி ஜகந்நாதர் தேர் போல் அசைந்தாடி  வருவதற்கே பல மணி நேரம் பிடிக்கும். வேலை முடிந்த பின் திரும்பப் போய்விடும். 

சரி நம்முடைய கதைக்கு திரும்புவோம். அரங்கம் பரபரப்பானது. டிவி க்ளோஸ் அப் ஜூம் செய்து பார்த்தார்கள். மேலே படத்தில் காட்டிய இடத்தில் விரிசல் போன்று மூன்று கோடுகள் காணப்பட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. விரிசல் என்றால் ராக்கெட் வெடிக்கும் அபாயம் உள்ளது. 

பக்கத்தில் சென்று பார்க்க நேரமோ, வாய்ப்போ இல்லை. MST கொண்டு வரவேண்டும். திரவ ராக்கெட் திரவ எரிபொருட்களை நீக்க வேண்டும். திட ராக்கெட் motor களை disarm செய்ய வேண்டும். பலருக்கும் மாறுதலை அறிவிக்க வேண்டும்.  இப்படி பல தொல்லைகள். ஏவுதல் பல நாட்கள் தாமதமாகலாம். ரேடியேஷன் டெஸ்டுக்கு உட்பட்டு ஓகே செய்யப்பட்ட  first ஸ்டேஜ் தான் pad இல் இருப்பது. விரிசலாக இருந்தால் அது assemble செய்யும்போது மட்டுமே ஏற்பட்டிருக்க முடியும், விரிசல் அப்போதே தெரிய வந்திருக்கும்.    

தொலை நோக்கி, பைனாகுலர் ஆகியவற்றை எடுத்து கொண்டு எவ்வளவு அடுத்து செல்ல முடியுமோ அவ்வளவு அடுத்து சென்று பார்த்தார்கள். பார்த்ததில் அந்த வரைகள் பால் பாயிண்ட் பேனா கொண்டு வரைந்தவையாக புலப்பட்டது. assemble  செய்ய ஏதுவாக தச்சர்கள் தையல்காரர்கள் செய்வது போன்று இரண்டு பகுதிகளிலும் alignment கோடுகள் வரைந்து கொண்டு பின்னர் assemble செய்திருக்கிறார்கள். Assembly முடிந்தது, ஆனால் பேணா வரைகளை அழிக்க மறந்தது தான் தவறு. 

பின் என்ன. Count down விட்ட இடத்தில் இருந்து துவக்கப்பட்டது. ராக்கெட்டும் அதனுடைய பாதையில் நேராக சென்றது. எல்லாம் சுபம்.

பேனாவில் வரையப்பட்ட மூன்று கோடுகள் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது 

பின்னுரை. 

பிடித்திருந்தால் இது போன்ற வேறு ஒரு சம்பவத்தையும் சுட்டியில் சென்று வாசியுங்கள். இது பத்திரிகைகளில் வந்தது. 

https://blog.aerospacenerd.com/p/slv-3e2-launch 

SLV-3 E2 Launch | India's First Orbital Flight

 சரி இவ்வளவு வக்கணையாக எழுதுகிறாயே, உனக்கும் PSLV க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? ஒரு சம்பந்தமும் இல்லை. நம்முடைய வேலை கணக்கு வழக்கு. கொஞ்சம் technical ஆக கம்ப்யூட்டரில் அதுவும் பெரிய கம்ப்யூட்டரில் (main frame) அதை செய்தேன் என்பது மாத்திரமே வித்தியாசம்

24 கருத்துகள்:

  1. ​" சொலவதெல்லாம் உண்மை" எழுதியபோது தெரியவில்லை. மீண்டும் படித்து படங்கள் சேர்க்கும் போதும் தெரியவில்லை, இந்த கட்டுரை/கதை சொல்லப்பட்ட விதம் சரியில்லை என்பது. Construction சரியில்லை. இது கட்டுரையும் இல்லை, கதையும் இல்லை செய்தி அவ்வளவே.

    சாதாரணமாக தலைப்புக்கேற்ற கட்டுரை/கதை என்றால் தலைப்பின் பொருள் பிரதானமாக விளங்க அதனை சுற்றி அதற்கு முக்கியத்துவம் தந்து கதை/கட்டுரை அமையவேண்டும். இச்செய்தியில் அது இல்லை. கரு ஒரு வாக்கியத்தில் ஒளிந்து விட்டது.

    இது எனக்கு ஒருபாடம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் JKC ஸார்...

      // உண்மையில் இவ்வார சனிக்கு நான் ஒரு கதை/கட்டுரை அனுப்பியிருந்தேன். அது நிராகரிக்கபட்டதால் இது. //

      மாற்றி அமைக்கக் கேட்டேன்.  சென்ற வார சனிக்கிழமைப் பதிவில் உங்கள் இந்த பதிலால் அப்படியே, அதுவும் சனிக்கிழமையிலேயே வெளியிட்டு விட்டேன்!

      நீக்கு
    2. பரவாயில்லை ஜெஸி ஸார்.
      எழுத எழுதத் தான் கதை எழுதும் கலை கைவசப்படும்.
      உங்கள் அளவுக்கு கட்டுரையாக ஒரு விஷயத்தை வடித்துத் தரும் கலை, மற்றவர்களுக்கு வசப்படாதது போலத் தான் இது.
      இதே போலவான வாழ்க்கையில் குறுக்கிடும் சொந்த அனுபவத்தைக் கதையாக்கும் அடுத்த முயற்சியை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். தங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. இன்றைய இஸ்ரோ பதிவு சிறிய விஷயமானாலும் சுவாரசியமாகவே சென்றது. நன்று

    பதிலளிநீக்கு
  3. வேலைக்கு ஆண் பெண் பேதமில்லை. ஆனால் பெண்ணால்தான் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கமுடியும்.

    பதிலளிநீக்கு
  4. திருவாடானை என் அப்பா பணிபுரிந்த ஊர். என் நினைவு சரியென்றால் என் Pre KG ஹா ஹா ஹா.. மற்றும் ஒன்றாம் வகுப்பு அந்த ஊரில்தான். பிறகு ரெண்டாப்பு, மூணாப்பு பரமக்குடியில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரமக்குடி என்றால் கமல் நினைவுக்கு வருவது போல திருவாடனை என்றால் ஏன் எதுவும் நினைவுக்கு வரவில்லை? இது தான் காலத்தின் கோலம். அரசியலிலிருந்து அடிமட்டம் வரை சினிமாவின் ஆக்கிரமிப்பின் கொடுமை!

      நீக்கு
    2. திருவாடானையில் பெரிய சிவன் கோயிலும், நாங்கள் இருந்த வீட்டின் அருகே கோயில் குளம் மிகப் பெரிதாக இருந்தது நினைவுக்கு வருது. நான் மார்கழியில் காலை ஐந்து மணிக்குள்ளாக கோயிலுக்குச் சென்று பிறகு பிரசாதம் (வெண்பொங்கல்) வாங்கி வந்தது நினைவுக்கு வருது. சகோதர்ர்கள் அவ்வளவு சீக்கிரம் எழுந்த நினைவுல்லை, நான் தனியாகச் சென்றதுதான் நினைவுக்கு வருது அல்லது பக்கத்து வீட்டின் அக்கா (அவ மூணாப்பா இருக்கும்) கூடப் போயிருக்கிறேன். அந்த ஊரில் ஐயனார் கோயிலிலிருந்து ஏதோ ஒரு தினத்தில் கழுத்தில் மணி, கடா மீசை பொட்டு விபூதி தார்பாய்ச்சிய வேட்டியோடு கையில் அருவாளோடு ஊர்வலம் ஆவேசமா வருவார் (நல்ல தாட்டியானவர்). சாமி வருது சாமி வருது என்பதைக் கேட்டு சாமி இப்படித்தான் இருக்கும் என நினைத்தேன். அப்பா ஒருமுறை பஞ்சாலைக்குக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டியதும், அவர்கள் முழு ப்ப்பாளிப் பழத்தை அப்பாவிடம் கொடுத்ததும் நினைவில் இருக்கு. ப்ப்பாளியைக்கூட சாப்பிடுவாங்களா என எனக்கு அப்போதுதான் தெரியும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அப்பா, மொந்தன் பழம், அதாவது வாழைக்காய் பழம் குலையுடன் வீட்டில் இருக்கும். தினமும் காலையில் ஒரு பழம் தேன் விட்டு அப்பா தருவார்.

      நீக்கு
    3. அற்புதம் நெல்லை. ராமர், கிருஷ்ணர் அவதாரங்களோடு சம்பந்தப்பட்ட சிவபெருமான் கோயில். திருஞான சம்பந்தர்
      பாடல் பெற்ற தலம்.
      இறைவன் திரு நாமம் ஆதிரத்தினேஸ்வரர். இறைவி
      சிநேகவல்லி தாயார்.
      பழம் பெருமை வாய்ந்த தலம்
      திருவாடானைத் திருத்தலம்.
      அந்த ஊரோடு உங்கள் நினைவுகள் சம்பந்தப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சி நெல்லை.

      நீக்கு
  5. அதுசரி, ஜெஸி ஸார்... இஸ்ரோ
    (Indian Space Research Organisation)
    ஹிந்தி பெயரில் நாமகரணமிட்டு அழைக்கப்படும் இன்றைய வழக்கத்திலிருந்து இன்றும் தப்பித்திருக்கிறதா, என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா கிடந்த சங்கை ஊதியாச்சா? இனி உங்களுக்காகவே ஏர்போர்டில் இறங்கியவுடன் கொடுக்கும் டிக்ளரேஷன் பார்ம் ஹிந்திலதான் தரப் போறாங்க. நோ இங்கிலீஷ்.

      நீக்கு
    2. भारतीय अंतरिक्ष अनुसंधान संगठन

      நீக்கு
    3. இந்தப் பெயரைத் தமிழில் எழுதி எங்களுக்கும் அறிமுகப்படுத்துவது தானே?
      ஏன் திருப்பித் திருப்பி இஸ்ரோ என்றே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. சொந்த செலவில் கழிப்பறை கட்டிய தலைமை ஆசிரியர் கதிரவன் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  8. இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு. தலைமை ஆசிரியர் கதிரவன் - பாராட்டுகளுக்கு உரியவர்.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய பெண்கள் தினத்தில் ஒரு அழகான பாசிட்டிவ் செய்தி...ஆம்னி பஸ் ஓட்டும் கனிமொழி! வாழ்த்துகள்.

    சொந்தச் செலவில் கழிப்பறை கட்டிய தலைமை ஆசிரியர் கதிரவன் அவர்கள் பற்றிய செய்தியும் சூப்பர். பாராட்ட வேண்டிய ஒன்று

    பாசிடிட்டிவ் அனைத்தும் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மூன்று கோடுகள் - கடைசில எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பி எஸ் எல் வி பாய்ந்ததே!!! சுவாரஸியமான சம்பவம்.

    அந்த இணைப்பில் உள்ள செய்தியும் வியக்க வைத்த ஒன்று, ரிஸ்க் எடுத்த Bapiah சூப்பர். இவருக்குப் பரிசு ஏதாச்சும் கொடுத்தாங்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்ஜுனா விருது எல்லாம் கொடுக்கறாங்களே அப்படியான விருது!

      கீதா

      நீக்கு
  11. பணத்தை பொலீசில் ஒப்படைத்தவர், பெண் ஓட்டுனர், தலைமையாசிரியர், ஆட்டோ ரைவர் அனைவருக்கும் பாராட்டுகள்.

    இஸ்ரோ சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. தான் கண்டெடுத்த பணத்தை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்த தங்கசாமி அவர்களை பாராட்டுவோம்.

    ஆம்னி பஸ்ஸை நன்றாக கவனத்துடன் ஓட்டும் பெண் ஓட்டுனருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    தன் சொந்த செலவில் பள்ளிக்கு கழிப்பறை வசதி செய்து தந்த தலைமை ஆசிரியர் கதிரவன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ராக்கெட் விண்ணில் புறப்பட்ட நிகழ்வு சூப்பராக இருந்தது. படங்கள் அற்புதம். படித்து ரசித்தேன். PSLV ராக்கெட்டும், மூன்று கோடுகளும். என்ற உண்மை நிகழ்வாக இன்றைய கட்டுரையை வடிவமைத்திருக்கும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    மகளிர் தினத்தில் ஆம்னி பஸ் ஓட்டும் பெண் பற்றி வந்தது மகிழ்ச்சி.

    PSLV ராக்கெட்டும், மூன்று கோடுகளும் கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
  14. //கழிப்பறை வசதியில்லாமல் மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனால் தலைமை ஆசிரியர் கதிரவன் தனது சொந்த பணம் ரூ.65 ஆயிரத்தில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தார்.//

    இன்னும் இது மாதிரி கழிப்பறை வசதி இல்லா பள்ளிகளை நினைத்து வேதனை பட வேண்டும், வெட்கப்பட வேண்டும். பள்ளிகளில் இருந்தாலும் அவை சுத்தமாக இல்லை என்று கழிப்பறை செல்லவே பயப்படும் நிலையும் சில பள்ளிகளில் உள்ளது என்று கேள்வி படுகிறோம். இந்த நிலை இனியாவது மாறவேண்டும்.

    தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துகள், வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!