வெள்ளி, 9 அக்டோபர், 2009

அனில் கும்ப்ளே

சாமிநாதன் வேகமாகக் கிளம்பிக் கொண்டிருந்தான். 'அரை மணி நேரத்துல அங்க இருந்தா தப்பிச்சிடலாம்.' மனசுக்குள் சிந்தனை ஓடினாலும் கைகள் தன்னிச்சையாய் ஷூ லேசை வேகமாக சரி செய்தன.
****
கோவிந்த் சுற்றுமுற்றும் பார்த்தவன் சட்'டென துப்பாக்கியைத் தூக்கி இடுப்பில் செருகினான். 'இன்று விளையாடிட வேண்டியதுதான்...நான் யார்னு காட்டறேன்...' ஜெர்கினை எடுத்துப் போடும்போது மனதுக்குள் ஒரு வன்மம் பரவியது...'அன்னிக்கி நீ என்னை ஏமாற்றப் பார்த்தே...இன்று....?'
******
சாமிநாதன் சாலையை அடைந்தபோது அந்த வித்யாசத்தை உணர்ந்தான்...எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை வெறிச்சோடி இருந்தது...'பந்த்தா..?'
********

இன்ஸ்பெக்டர் பிரேம் சற்று அசுவாரச்யமாகத்தான் கிளம்பினார். என்னமோ இன்று கிளம்பவே பிடிக்கவில்லை அவருக்கு...என்ன செய்ய? கடமை என்று ஒன்று என்று இருக்கிறதே...
*********
கோவிந்த் சாலைக்கு வந்தான். வெறிச்சோடி இருந்த சாலை அவனுக்கு மகிழ்ச்சியை உண்டாகியது. 'யார் தொந்தரவும் இருக்காது'
*********

சாமிநாதன் பின்னால் பார்த்தான். ஜெர்கின் போட்ட உருவம் கண்ணில் பட்டு மறைந்தது வேறு விதமாகப் படவில்லை. அங்கு வந்த ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தி ஏறிக் கொண்டான். 'இன்னும் பதினைந்து நிமிஷம் இருக்கிறது...'
******************

பிரேம் வெளியே வந்து பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்தார். அரைவட்டம் அடித்து சந்தைக் கடந்து சாலையை அடைந்தார். எதிரே தெரிந்த ஷோ ரூம் டீவியில் அனில் கும்ப்ளே பந்து வீசத் தயாராகிக் கொண்டிருந்தார்.
********
அலுவலகத்துக்குள் நுழைந்த சாமிநாதனும் ரிசெப்ஷன் டீவியில் கும்ப்ளேயைப் பார்த்தான். ஓ...இன்று மேட்சா? வேகமாக உள்ளே நுழைந்தவன் மேனேஜர் இருக்கையைப் பார்த்தான். 'நல்ல வேளை! இன்னும் வரலை... தப்பிச்சேன்...அப்பாடி...
*************

பிரேம் போய் விட்டார் என்று நிச்சயப் படுத்திக் கொண்ட கோவிந்த் அவர் வீட்டினுள் நுழைந்தான். ரோல் கேப்பை எடுத்து ஒளித்துவைத்துக் கொண்டிருந்த அவன் நண்பன் திரு திருவென முழித்தான். கோவிந்த்,'டேய் வாடா தெருவில் யாருமே இல்லை, விளையாடலாம்!' என்றான். 'இன்னிக்கி உன் இன்னொரு நண்பனுக்கு முன்னாடியே வந்துட்டேன் பாரு' என்றான். பிரேம் மகன், இவன் நண்பன், டிவியைக் காட்டினான்...'மேட்ச் இருக்குடா...இன்று விளையாட வேண்டாம்' கோவிந்த் ஏமாற்றத்துடன் டிவியைப் பார்த்தான்.

அனில் கும்ப்ளே பந்தில் ஸ்பின் இருக்கும் என்று நம்பி விளையாடிய பேட்ஸ்மேன் மட்டையை வீச வழக்கம்போல பந்து நேரே சென்று ஸ்டம்பை சாய்த்தது!

3 கருத்துகள்:

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!