திங்கள், 3 செப்டம்பர், 2018

"திங்க"க்கிழமை 180903 : மட்டர் பனீர் - சப்பாத்தி/பரோட்டா சைட் டிஷ் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


பஹ்ரைனுக்கு மார்ச் மாதத்தில் என் மனைவி வந்திருந்தபோது செய்த டிஷ் இது. எனக்கு ஹோட்டலில் நான், ரோட்டி வாங்கினால், எப்போதும் மட்டர் பனீர்தான் சைட் டிஷ் ஆகச் சொல்லுவேன். பொதுவா ஒன்று பிடித்துவிட்டால், நான் மற்றதை முயற்சிப்பதில்லை. சென்னைலகூட, சங்கீதாவில், மதியம், நான் + ஒரு சைட் டிஷ், 50-60 ரூபாய்க்கு உண்டு. அதில், மட்டர் மசாலா இல்லைனா, பனீர் மசாலா கொடுப்பார்கள். எனக்கு இரண்டில், மட்டர் மசாலா பிடித்துவிட்டது. 


இதுவரை சாப்பிட்ட மூன்று முறையும் அதே சைட் டிஷ்தான். எப்போவாவது, இரண்டாவது சைட் டிஷ் ஆர்டர் பண்ணணும்னா, கடாய் வெஜிடபிள்ஸ் சொல்லுவேன். கல்லூரிக் காலங்களில், மலாய் கோஃப்தா எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இப்போதெல்லாம் அதில் இஷ்டமில்லை.

நார்த் இண்டியன் சைட் டிஷ் செய்ய, முதலில் நம் சுவைக்கு ஏற்ற மசாலா (பிராண்ட்) வாங்கிக்கணும். எல்லோருக்கும் எல்லா மசாலாவும் பிடிக்காது. ஒரு பிராண்டிலும், எல்லா வகையான மசாலாக்களும் நல்லா இருக்கும்னு சொல்லமுடியாது. நான் டேஸ்ட் செய்து பார்ப்பதற்காக, பாத்ஷா என்ற பிராண்ட் மசாலா வாங்கியிருந்தேன். (அதுவும் சன்னா மசாலா). அதைவைத்துத்தான் மட்டர் பனீர் செய்தது.

தேவையான பொருட்கள்

தக்காளி 2
வெங்காயம் 3
பனீர் ½ பாக்கெட் (100 கிராம்)
பச்சைப் பட்டாணி 1 டம்ளர்
மஞ்சப்பொடி 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி ¾ மேசைக்கரண்டி அல்லது தேவைப்படும் அளவு
மசாலா பொடி (சன்னா மசாலா) 1 மேசைக் கரண்டி
தேவையான அளவு உப்பு

இதில் கிரீம் போடலாம். நாங்கள்  உபயோகப்படுத்தவில்லை.

பச்சைப் பட்டாணிக்குப் பதில், நாங்கள், உறைந்த பட்டாணி பாக்கெட் உபயோகித்தோம். சுலபமாகக் கிடைக்கும். புதிய பட்டாணி எல்லாக்காலங்களிலும் வராது. காய்ந்த பட்டாணியை ஊறவைத்து உபயோகப்படுத்தினால் அந்த ருசி கிடைக்காது.

செய்முறை

உறைந்த பட்டாணியையும், பனீரையும் தேவையான அளவு எடுத்து தனித் தனித் தட்டில் வைத்துவிடவும். தேவை என்றால், பனீரின் சைஸைச் சிறிதாக்கிக்கொள்ளலாம்.

பொடி வகைகளை தனித் தட்டில் எடுத்துவைத்துவிடவும். இல்லைனா, கொதிக்கும்போது தேடணும், அவசர அவசரமாக எடுத்துப்போடணும்.
வெங்காயத்தைத் தோலுரித்து, பெரிய துண்டுகளாகக் கட் செய்து, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். ஓரளவு வதங்கியபிறகு, ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.

தக்காளியைத் தோலுரிக்கலாம். நாங்கள் உரிக்கவில்லை. அதை கட் செய்து, மிக்சியில் அரைத்து தனி பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
இப்போ வெங்காயம் ஆறியிருக்கும். அதை மிக்சியில் போட்டு அரைத்து, விழுதை எடுத்துவைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, சூடானபின்பு, அதில் ஜீரகம் போட்டு வெடிக்கவிடணும்.

அதில், தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவைக்கவும்.

பச்சை வாசனை முழுமையாகப் போனபிறகு, அதில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து கொஞ்சம் சூடாக்கவும்.

அத்துடன் வெங்காய விழுது, பிறகு மசாலப்பொடியையும் சேர்த்துக் கலக்கவும். இந்த ஸ்டேஜில் உப்பு, காரம் சரியா இருக்கான்னு டேஸ்ட் பார்த்துக்கோங்க.

இப்போ பட்டாணியைச் சேர்த்து கொதிக்கவைக்கவும். உறையவைத்த பட்டாணி சுலபமா வெந்துவிடும். மற்ற பட்டாணியை உபயோகப்படுத்தினால், இன்னொரு பாத்திரத்தில் அதனை அரை/முக்கால் வேகவைத்து, அதனைச் சேர்க்கவும்.  இப்போ பட்டாணி வெந்துவிட்டதான்னு பார்த்துக்கோங்க. (பேஸ்ட் மாதிரி வேகக்கூடாது. முக்கால் வெந்தாலே போதும்)

பிறகு பனீர் துண்டுகளைச் சேர்த்து கொஞ்சம் கொதிக்கவைங்க.
பிறகு எல்லாவற்றையும் ஒரு தடவை கலந்து, அடுப்பை அணைத்துவிட்டு, வெட்டி வைத்த கொத்தமல்லித் தழையை அலங்காரத்துக்கும், வாசனைக்கும் சேர்க்கவும்.

அவ்ளவுதான் விஷயம். மட்டர் பனீர் ரெடி.













ஹோட்டல்ல உள்ளதுபோல் வரணும்னா, 5 முந்திரியை பாலில் அரைத்து பட்டாணி சேர்க்கும்போது சேர்த்துவிடலாம். இறக்கியபின்பு, கிரீம் சேர்க்கலாம். இது இரண்டும் ருசியை அதிகமாக்கும். அதைச் சாப்பிட்டுட்டு கூட ரெண்டு கிலோமீட்டர் நடக்கவேண்டாம் என்பதால், நாங்கள் சேர்க்கவில்லை.

இதுக்கு நான் அல்லது ரோட்டி ரொம்ப நல்லா இருக்கும். நாங்கள் சப்பாத்தி செய்தோம்.

நீங்களும் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

பஹ்ரைனில் கிடைக்கும் ‘நான்’ (அரபிக் நான், ரோட்டி) பற்றி தனியே ஒரு ஞாயிற்றுக் கிழமைக்கு எழுதி அனுப்பறேன். (ஸ்லாட் இருக்க சான்ஸ் இருக்கு. இப்போதான் சிக்க்க்க்கிம்லேர்ந்து இறங்கிவந்து, தாராசுரம் வந்தாச்சே)

அன்புடன்

நெல்லைத்தமிழன்

64 கருத்துகள்:

  1. இன்னிக்குக் கிருஷ்ண ஜயந்தி சிறப்புப் பதிவு, திங்கறதுக்கு நெ.த.வோட சமையல் குறிப்பா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா அக்கா.. எங்க கிருஷ்ண ஜெயந்தி நேற்று நிறைவு பெற்றதே....!!!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்களுக்கும் தான், நேத்துப் பதிவே போட்டாச்சு, ராத்திரியே, நீங்க பக்ஷணம் சாப்பிட்ட அலுப்பிலே வரவே இல்லை!

      நீக்கு
    3. சரியா பாருங்க அக்கா... நான் நைட்டே கமண்ட்ஸ் போட்டாச்சு...

      நீக்கு
    4. வெங்கட், கோமதி ஆகியோருடைய கருத்துத் தவிர்த்து யாரோடதும் ஸ்பாமிலே கூட இல்லை. :(

      நீக்கு
    5. கீதா சாம்பசிவம் மேடம்.... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்னு இந்தத் தடவை இடுகை போடலை போலிருக்கு. இது நான் பஹ்ரைனில் இருந்தபோது மனைவி செய்தது.

      நீக்கு
    6. தெரியும் நெ.த. இது ஸ்ரீஜயந்தி சிறப்புப் பதிவு இல்லைனு! சும்ம்ம்ம்ம்ம்ம்மாக் கேலி செய்தேன்.

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. பனீர்.. பனீர்..

      வளைகுடா நாட்டிற்கு வந்த பிறகு மிகவும் பிடித்தது பனீர் தான்...

      இதைப் போலத்தான் நானும் செய்வேன்...

      ஆனாலும் இருந்து எழுதிட நேரமில்லை...

      நல்லதொரு குறிப்பினை வழங்கிய நெ.த. அவர்களுக்கு நன்றி...

      நீக்கு
    3. வாங்க துரை செல்வராஜு சார்... வளைகுடா நாட்டில் சுத்தமான உணவு வகைகள் கிடைக்கும்போது (இந்தியாவை விட) கவலை என்ன இருக்கு? துருவின தேங்காய், பனீர் போன்ற எல்லா ஐட்டங்களும், சிக்கலில்லாத மின்சாரம், ஒழுங்காக வேலை செய்யும் மின் கருவிகள்.... சமையல் அங்கு சுலபம்தான். அதுவும்தவிர, டக் என்று வெளியில்கூட சப்பாத்தி வாங்கிக்கொள்ளலாம் சைட் டிஷ் பண்ணிட்டோம்னா. அங்க இருக்கும் சுகம் இங்கு வருமோ?

      நீக்கு
  3. அலுத்துப் போன சைட் டிஷ், :) நான் என்னமோ எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. அதுவும் ஓட்டலில் செய்வது! வீட்டில் செய்தால் கொஞ்சம் சாப்பிடலாம். கிருஷ்ண ஜயந்தி பக்ஷணங்களை எதிர்பார்த்தால் நெ.த. ஏமாத்திட்டாரே! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு 'நான்', 'ரோட்டி' எல்லாம் ரொம்பப் பிடிக்கும். இப்போதானே எல்லாரும் மைசூர்பாக், தவலடை, கராச்சி அல்வா என்று பதிவிடறீங்க.. மறுபடியும், அப்பம், சீயன், இனிப்புச் சீடைன்னு பதிவிட்டால் நல்லா இருக்குமோ?

      உங்க தளத்துல போட்டிருந்த படங்கள் (பட்சணப்) அருமை. இதுக்கே இப்படீன்னா, தீபாவளிக்கு என்னல்லாம் செய்யப்போறீங்களோ. நாங்கள் லட்டு செய்ததை தி.பதிவுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பறேன் (அது ஒருவேளை தீபாவளி ஸ்லாட்டில் வரலாம்.... அவ்வளவு கியூ இருக்கும் எங்கள் பிளாக்கில்..ஹாஹாஹா)

      நீக்கு
    2. கீசா மேடம்... எனக்கு அலுத்துப்போகாத சைட் டிஷ் இந்த மட்டர் பனீர். எப்போ ஹோட்டலுக்குச் சென்றாலும் (நான், ரோட்டி ஃபுல்கா சாப்பிட), எனக்காக ஆர்டர் செய்வது இதுதான். இது இல்லை என்று சொன்னால் மட்டுமே கடாய் வெஜ் ஆர்டர் செய்வேன். மத்தவங்க (பசங்க, மனைவி) அவர்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்துகொள்வார்கள்.

      இந்தத் தடவை தாம்பரம் மார்க்கெட்டில், பட்டாணி பாக்கெட் (புதிய பட்டாணி) 5 ரூபாய் வீதம் 5 பாக்கெட் வாங்கினேன். பெண்ணுக்கு டிபன் பாக்சில் கொடுக்க உருளைக்கிழங்கு மசாலா நான் செய்தபோது, பட்டாணியையும் சேர்க்க, தனியாக தண்ணீர்ல் உப்பு போட்டு இதனைக் கொதிக்கவைத்தால், 20 நிமிடங்களில் பச்சைக் கலர் தண்ணீர் தனியாக வந்தது. பட்டாணில பச்சைக் கலரைச் சாயம் போட்டிருக்காங்க. என்ன அநியாயம் பாருங்கள். பிறகு மிஞ்சி இருந்த பட்டாணிப் பாக்கெட்டுகளைத் தூரப்போட்டேன்.

      நீக்கு
    3. //இதுக்கே இப்படீன்னா, தீபாவளிக்கு என்னல்லாம் செய்யப்போறீங்களோ. //அதெல்லாம் மாமனார் காலத்தோடு மலை ஏறியாச்சு நெ.த. அப்போல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னரே பக்ஷணத் தொழிற்சாலை ஆரம்பிக்கணும். நவராத்திரியிலே ஆரம்பிச்சுத் தேடித் தேடி சாமான்கள், எண்ணெய், சர்க்கரை எல்லாம் சேகரிப்பேன். கைச் சேமிப்பு எல்லாம் கரையும் பக்ஷணங்களாக! எல்லாம் அந்தக் காலத்தில் சீருக்கு வைக்கிறாப்போல் தான் பண்ணணும். இப்போ நான் பண்ணுவதை எங்க மாமியார் இருந்து பார்த்தால் சிரிப்பாங்க! சொன்னால் நம்புவீர்களோ மாட்டீங்களோ நல்லா சாப்பிடவும் செய்வாங்க! மாமனார் ஒரு நேரத்தில் தேன்குழல், ஓமப்பொடி, ரிப்பன் பகோடா, மிக்சர் எல்லாம் சாப்பிடுவார். ஸ்வீட்டும் அப்படித் தான் நாலைந்து செய்யணும். இப்போ ஒரு ஸ்வீட் செய்தாலே பெரிய விஷயம்! தேன்குழல் ஏதேனும் ஒண்ணு! அநேகமா அதோடு நிறுத்திடுவேன். எப்போவானும் மிக்சர் கொஞ்சம் போல! பொண்ணு, பிள்ளை எல்லாம் அடுப்பில் வெந்தது போதும். கடையில் வாங்கி வைனு சொல்றாங்க! மனசு கேட்பதில்லை!

      நீக்கு
    4. பட்டாணி எல்லாம் புதுசா வாங்கணும்னா தமிழ்நாட்டில் அந்தப் பருவத்தில் தான் கிடைக்கும். இங்கே ஃப்ரோசன் கிடைப்பதாய்த் தெரியலை. நான் யு.எஸ்ஸில் மட்டும் ஃப்ரோசன் நம்புவேன். நீங்க சொல்லும் தாம்பரம் மார்க்கெட்டுகள், மாம்பலம் மார்க்கெட்டுகளில் பாக்கெட்டுக்களில் விற்கும் பட்டாணியைத் திரும்பிக் கூடப் பார்த்தது இல்லை. அதுக்குப் பச்சைப் பட்டாணி ஊற வைச்சு வேக வைச்சு மடர் பனீர் செய்துடுவேன்.

      நீக்கு
    5. //பொண்ணு, பிள்ளை எல்லாம் அடுப்பில் வெந்தது போதும். கடையில் வாங்கி வைனு சொல்றாங்க!// - கீசா மேடம்.. நான் இதனை என் மனைவிகிட்ட பல வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரைல ஓரிரு ஐட்டம் செய்தாலே போதுமானது.

      ஏதாவது ஒரு ஐட்டம் செய்வது சிரமமாக இருக்காது. நிறைய செய்வது தேவையில்லாத வேலை என்பது என் அபிப்ராயம். சாப்பிடுவது உடம்புக்கும் கெடுதல், நின்றுகொண்டே இத்தனை செய்வது காலுக்கும் கெடுதல். வண்டியை எத்தனை காலம் உபயோகப்படுத்தணும்னு தெரியாது. முடிந்த அளவு சரியான நிலைல வச்சுக்கவேண்டாமா?

      நீக்கு
  4. கிருஷ்ணன் தான் பனீர் - எல்லாம் சாப்பிட்டிருக்கின்றானே!...

    இதுவும் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு நிவேத்யம் ஆகி இருக்கிறது...

    ஆகவே க்ருஷ்ண ப்ரசாதம் தான்..
    எடுத்துக் கொள்ளுங்கள்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை துரை செல்வராஜு சார்... எல்லாம் அவன் படைத்தது. அதனை நாம் சமைத்து உண்ணப்போகிறோம். அதை அவனுக்கு நைவேத்தியம் செய்து (நாங்க 'கண்டருளப்பண்ணுவது', 'அமிஸ்யை செய்வது' என்று சொல்வோம்) பிறகுதானே உண்ணமுடியும்?

      நீக்கு
    2. ஓகே துரை! அவசர வேலை பின்னர் வரேன்.

      நீக்கு
  5. இன்றைய காலை டிஃபன் ஸூப்பராக முடிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கில்லர்ஜி... இதை காலை டிபனாகச் சாப்பிடமுடியுமோ? நமக்கு இட்லி, பொங்கல், தோசைதான் ஹாஹா.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. மட்டர் பனீர் நன்றாக இருக்கிறது. செய்முறை படங்களுடன் அருமை.
    இரண்டு மூன்று நாட்களுக்கு முன் செய்தேன். தக்காளி, வெங்காயம் இரண்டையும் ஒன்றாக அரைத்து விட்டேன் அது மாறுதல், மசாலாதூள் மாறுதல்.
    கீதா, யசோதாவும் கண்ணனும் வந்து விட்டார்கள். சாப்பிடும் யாவும் கண்ணனுக்கு சப்பாத்தி மட்டர் பனீர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம்... எதைச் செய்தால் என்ன... அவனுக்கு அப்புறம்தான் நமக்கு.

      எல்லா மசாலா தூளும் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன். நீங்கள் நிறைய பிரயாணிப்பவர். அங்க அங்க ஹோட்டல்கள்லதான் உணவு. எப்படிச் சமாளிக்கிறீங்களோ.

      நீக்கு
  9. பனீர் மட்டர் நன்றாக வந்திருக்கிறது. வெங்காயம் சேர்த்த உணவுகளையும் கண்டருள செய்வீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு 'பதில்' சொல்வது கொஞ்சம் கடினம். பொதுவா எங்கள் வீடுகளில் வெங்காயத்துக்குத் தடா உண்டு. எப்போதாவது வெங்காயம் உபயோகப்படுத்தினால், அதற்குரிய பாத்திரங்கள்தான் உபயோகத்துக்கு வரும். ஆனால் நான் பஹ்ரைனில் உபயோகப்படுத்துவேன். (என்னுடைய கான்சப்ட் என்னன்னா, எதை உண்டாலும் முதலில் கண்டருளப்பண்ணிவிட்டுத்தான் சாப்பிடுவேன். அது எதுவானால் என்ன? அதேபோல் நான் இன்னொன்றும் செய்வேன். உணவு தயாரிக்கும்போது டேஸ்ட்-உப்பு, காரம், இனிப்பு போன்றவற்றிர்க்கு, பார்ப்பேன். நான் நினைப்பது, அவனுக்கு என்றாலும் அதுவும் ருசியாக இருக்கவேண்டாமா? அவனுக்கு அருளப்பண்ணியபிறகு, நம் டேஸ்டுக்காக எதையும் சேர்க்கக்கூடாது என்பது என் கட்சி. ஆனால் என் இந்த கான்செப்டை மனைவி ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவங்க வைணவ கான்சப்டை 'சிக்கெனப்' பிடித்துக்கொண்டிருப்பவர்.ஹாஹா.)

      நீக்கு
  10. மட்டர் என்றால் பட்டாணி என்று தெரிகிறது ஒரு வேளை பட்டாணி என்று சொன்னால் சுவை குறையுமா பல பதிவுகளில் இம்மாதிரி மொழி மாறி வருகிறது அதுதான் ஃபாஷனோ எனக்கும் பட்டாணி பன்னீர் பிடிக்கும் என்மனைவி நன்றாகச் செய்வாள் நெதவுக்கு சமையல் பணி தொடர்கிறதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவா ஹோட்டல்ல பட்டாணி பனீர் மசாலா என்று சொல்றதில்லை. வழக்கமா உபயோகப்படுத்தற பெயர்தானே. அதுவும் தவிர, இந்த உணவெல்லாம் தமிழகத்துக்கு, நமக்கு அந்நிய உணவல்லவா (வட இந்திய உணவு).

      எனக்கு சமையல் பணி ஒரு சில நாட்களைத் தவிர தொடர்வதில்லை. சமையல் உள்ளுக்குள் கறிகாய் திருத்தித் தரவோ அல்லது அபூர்வமாக ஏதேனும் உதவி கேட்டாலொழிய, எனக்கு அனுமதியில்லை..ஹாஹா. இரு நாட்களுக்கு முன், என் பெண், என்னவோ டேஸ்ட் வித்தியாசம் என்று அவள் அம்மாவிடம், யார் செய்தது என்று கேட்டாள். அம்மா சமையலில் முன்னப் பின்ன இருந்தாலும் ஒத்துக்குவாங்க போலிருக்கு. பசங்களுக்கு அவங்க அம்மா சமையல்தான் வேணும் என்று சொல்லிட்டாங்க..

      நீக்கு
  11. கிருஷ்ணன் பிறந்தநாள் அவரவர் சௌகரியப்படி கொண்டாடலாம் சீடை முறுக்கு என்று செய்தால் என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி. சார்... சீடை, முறுக்கு, விளாம்பழத்தில் வெல்லமிட்டது, அப்பம், தட்டை என்றெல்லாம்தான் மனைவி செய்தாள் (நான் இதெல்லாம் எதுக்கு வேண்டாத வேலை.. ஒரு காரம் ஒரு ஸ்வீட் பண்ணினால் போதாதா என்று வேறு சொன்னேன்). இந்த இடுகையே நான் தயார் செய்து மாதங்களாகிவிட்டன. செய்தது பஹ்ரைனில்.

      நிறையபேர் சொல்லியிருப்பதால், ஸ்ரீராம் இனி, பண்டிகை நாளன்று இனிப்பு இடுகையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

      நீக்கு
  12. காலை வணக்கம்.

    ஆஹா.... இன்னிக்கு நெ.த. அவர்களின் மட்டர் பனீரா? நல்லது.

    வடக்கே இருப்பதால் இதெல்லாம் அடிக்கடி சாப்பிடுவது. வீட்டிலும் செய்வதுண்டு.

    முந்திரி, க்ரீம் இரண்டும் சேர்ப்பது சுவை கூட்டும்.

    பெரும்பாலான வட இந்திய சப்ஜிகளுக்கு க்ரேவி தான் முக்கியம். ட்ரை சப்ஜி என்றாலே இவர்களுக்கு அத்தனை இஷ்டமில்லை - சூக்கா சப்ஜி யா என மூஞ்சி சுளிப்பதுண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி வெங்கட். எங்களுக்கெல்லாம் வட இந்திய உணவுவகைகள் அபூர்வமா சாப்பிடறதுனால பிடிக்கும், வட இந்தியர்களுக்கு இட்லி, தோசை பிடிப்பதுபோல்.

      பஹ்ரைனில் நான், ரோட்டி என்று கடைகளில் வாங்கலாம். தில்லியில் இவைகளை மட்டும் கடையில் (அதாவது இதற்கென்றே இருக்கும் கடைகளில், அங்கு சப்ஜி செய்யமாட்டார்கள். அவர்களிடம் இதனை வாட்டுவதற்கான அடுப்புகள் மட்டும்தான் இருக்கும்) வாங்கும்படி கடைகள் உண்டா?

      நீக்கு
  13. படங்கள் வெகு தெளிவு இன்று படிப்படியாக ..

    எனக்கும் பிடித்த உணவு...

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    தாங்கள் செய்முறையுடன் விளக்கிய மட்டர் பனீர் சூப்பராக இருக்கிறது. படிப்படியாக படங்களுடன் மிகவும் அற்புதம். உணவகங்களில் விதவிதமான சைட் டிஷ் சாப்பிட்டிருந்தாலும், நம் வீட்டில் அதே மணத்துடன் நம் விருப்பபடி செய்து சாப்பிடுவது ஒரு தனி சுகமல்லவா.. மிகவும் நன்றாக உள்ளது. எங்கள் வீட்டில் சப்பாத்தி வகையறாக்களுக்கு வெவ்வேறு மாதிரி காய்கறிகளுடன் செய்தாலும், இது போல் ஒரு நாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கமலா ஹரிஹரன் அவர்கள். நீங்கள்தான் எல்லாம் செய்திருப்பீர்களே... நான் ஒரு நாள் ஆசைக்குச் செய்ததை இங்கு இடுகையாக அனுப்பியிருந்தேன்.

      நீக்கு
  15. அஹா எனக்குப் பிடித்த ரெஸிப்பி . ஆனா இன்னிக்கு காலிஃப்ளவர் குருமா இல்ல செய்யபோறேன் ரொட்டிக்கு. ஹ்ம்ம்.

    பதிலளிநீக்கு
  16. பெண் அடிக்கடி செய்யும் சிற்றுண்டி.
    நாஆஆஆன் +மட்டர் பனீர் நல்ல காம்பினேஷன்.
    எனக்கு பனீர் பிடிக்காது அதனால் நான் சாப்பிட மாட்டேன்.

    அன்பு நெல்லைத்தமிழன் படங்கள் அத்தனையும்
    சூப்பர்.
    இங்கே வெங்காயம் சேர்ப்பதில்லை.
    நான் சமைக்கும்போது மட்டும் சேரும்.
    உங்கள் பதிவை பெண்ணுக்குப் படித்துக் காட்டுகிறேன்.
    அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
    இங்கே அப்பா தோசை மாஸ்டர். நான்ன்
    ஃஃப்ரோசன் கிடைக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் உண்டு,.
    நேற்று கண்ணன் வந்து கோலம் பார்த்து அருளிவிட்டுப் போனான்.
    2 மணிக்கு ஆரம்பித்த தயாரிப்புகள் முடிய 8 மணி ஆச்சு. கணினி திறந்து பார்க்கவில்லை.
    தாமத வருகைக்கு மன்னிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. ஏன் உங்களுக்குப் பனீர் பிடிப்பதில்லை? எனக்கு ரொம்பவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. முன்பே சொல்லியபடி, நான் ரொம்ப வருஷமா இந்த மாதிரி உணவுகள் (அதாவது டிபிகல் தமிழ்நாடு உணவைத் தவிர) சாப்பிடவே மாட்டேன். வெஜிடபிள் பிரியாணியை ஏற்றுக்கொள்ளவே பல வருடங்கள் (திருமணமாகி) ஆனது. வருகைக்கு நன்றி.

      எனக்கு நானை விட ரோட்டி பிடிக்கும் (அது மைதா என்பதால்).

      நீக்கு
  17. நானும் இதேமாதிரிதான் செய்வேன். ஆனா, பட்டர் சேர்ப்பதில்லை. ஆல்ரெடி கொழுப்பு அதிகமா இருக்குல்ல. அதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராஜி. எனக்கும் பட்டர் சேர்ப்பது பிடிக்காது. கடையில் ஆர்டர் செய்யும்போதும் மேலே பட்டர் சேர்க்கவேண்டாம் என்று சொல்லுவேன்.

      நீக்கு
  18. பார்த்தாலே சாப்பிட தோன்றுகிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  19. சூப்பரான சைடிஸ்....பனீர் பட்டர்,பனீர் மட்டர் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை.வரிசையாக படங்கள்,செயல் முறை விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி உமையாள் காயத்ரி. அடிக்கடி வாருங்கள்.

      நீக்கு
  20. மட்டர் பனீர் சூப்பராக இருக்கிறது ஆனால் இது வரை அதை சுவைத்து பார்த்தது இல்லை.....எங்கள் வீட்டில் தமிழகத்து சமையல் மட்டும் செய்வதுண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி குத்தூசி. நானும் இளமைக்காலத்தில் இவற்றையெல்லாம் சுவைத்ததில்லை. வட இந்திய உணவுவகைகளும் நன்றாக இருக்கும். சாப்பிட்டுப்பாருங்கள்.

      நீக்கு
  21. உடல்நலக் குறைவால் நேற்று கணினிக்கு வரமுடியில்லை. மன்னிக்கவும். மட்டர் பன்னீர் ருசியாக இருக்கிறது. எங்கள் வீட்டில் மருமகள்கள் செய்வதில் சிறிது ஒருவருக்கொருவர் வித்தியாஸம் தெரியும். வெங்காயம் பச்சையாக அரைத்து வதக்குவார்கள். புளிக்காய்ச்சல் மாதிரி இவைகள் எண்ணெய் பிரிய வதங்கும். நான் முதலில் பன்னீர் பிடிக்காது என்ற நிலையில்தான் இருந்தேன். இப்பாதும் அதை சற்று வதக்கினால்தான் பிடிக்கும். பஞ்சாபி முறையில் மட்டர் பன்னீர் தயாரிப்பில் சற்றுப் பெரிய துண்டங்களான பன்னீரை எண்ணெயில் வறுத்து, வென்னீரில் ஊறவைத்துத்தான் சேர்க்கிரார்கள். மொத்தத்தில் ருசி வேண்டியிருக்கிரது. உங்களின் செய்முறை அழகாக விவரமாக இருக்கிறது. என்னுடயது தாமத புராணம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  22. வாங்க காமாட்சி அம்மா. உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தாமதம் என்றெல்லாம் கிடையாது. அடுத்த வார திங்கக் கிழமை பதிவு வரை நேரம் இருக்கே...

    நீங்கள் எழுதியுள்ளதைப் படித்தபிறகுதான், அட ஆமாம்... பஞ்சாபி உணவகங்களில் பனீர் கொண்டு செய்யும் சைட் டிஷ்களில் பனீர் மெத் மெத் என்று சாஃப்டா இருக்குமே என்று யோசித்தேன்.

    எனக்குச் சிறுவயதில், சப்பாத்தி, dதால், இல்லைனா குழம்பு என்றுதான் தொட்டுக்கொண்டுள்ளேன். பூரி பண்ணினால், பூரி மசாலா செய்வார்கள். இப்போதான் சப்பாத்திக்கு வித விதமான சைட் டிஷ்கள் தேவையா இருக்கே.

    உடல் நலம் குறையில்லாமல் இருக்க ப்ரார்த்திக்கிறேன்.

    ஆமாம் உங்கள் சிறு வயதில் கொண்டாடிய கோகுலாஷ்டமி பற்றிய நினைவுகளை உங்கள் தளத்தில் எழுதியிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  23. நெல்லை செம ரெசிப்பி!!

    கிட்டத்தட்ட இதே ரெசிப்பிதான் நான் கடையில் மசாலா பொடி வாங்கினால் எவெரெஸ்ட் அல்லது பாத்ஷா பொடிகள் தான். பெரும்பாலும் வீட்டில் செய்து விடுவதுண்டு எப்போது செய்கிறோமோ அப்போது.

    நான் எப்போதுமே வெங்காயம் தக்காளி வதக்கிவிட்டுத்தான் பின்னர் மேலும் வதக்குவது. பச்சையாக அரைத்து வதக்கினால் நிறைய நேரம் எடுக்கும் எண்ணையும் கூடுதல் செலவாகும் என்பதால். அப்புறம் நெல்லை நான் முந்திரி அல்லது கசகசா அரைத்துச் சேர்ப்பதை வெ த அரைத்து வதக்கும் போது கொஞ்சம் வதங்கியதும் சேர்த்துவிடுவேன். அப்போது இன்னும் ரிச்சாக இருக்கும் என்று தோன்றியதால். கடைசியில் தான் க்ரீம். முந்திரி கசகசா க்ரீம் எல்லாம் சேர்த்தால் பல வட இந்திய க்ரேவிஸ் செமையா இருக்கும், சில ரெசிப்பிஸ் சர்க்கரை இல்லா கோவா கூட சேர்த்துச் செய்வதுண்டு.

    வீட்டில் அரபிக் நாண் ஆஃப்கானி நாண் மற்றும் ரோட்டி, கிட்டத்தட்ட அரபி, ஆஃப்கானி, பாகிஸ்தானி னாண் எல்லாம் ஒரே போல் தான். அது போன்று ரோட்டியும். செய்ததுண்டு ரொம்ப நன்றாக ஸாஃப்டாக வரும்.

    காஷ்மீரி நாண் ரோட்டியும் செய்ததுண்டு அதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்பார்கள். பாகிஸ்தான் காஷ்மீர் சைடில் உள்ள பகுதியில் செய்வதில் முட்டை சேர்ப்பார்கள் நாணில். நாம் அதைத் தவிரித்துச் செய்யலாம்.

    உங்க படம் செமையா இருக்கு நெல்லை யும்மி!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். உங்கள் யோசனைகள் உபயோகமானவை.

      இந்த ஊரில் எனக்கு அலர்ஜி வந்ததே கிடையாது. சென்ற வாரம் பேல் பூரி ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிட்டது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது கொஞ்சம் காரமாக இருந்தது. அதனால் மசாலாப் பொடியில் கொஞ்சம் கேர்ஃபுல்லாக இருக்கணும்னு தோன்றியது.

      'காஷ்மீரி நான்' என்பதைப் படித்ததும் எனக்கு 1989ல் நடந்தது நினைவுக்கு வந்தது. அப்போ கம்பெனி செலவுல உட்லண்ட்ஸில் தங்கியிருந்தேன். அப்போ ஒரு நாளைக்கு 500 ரூ செலவழிக்கலாம் (என்று நினைவு). அதற்காக நான் காஷ்மீரி நான் ஆர்டர் செய்தேன். வந்தபிறகுதான், காஷ்மீரி நான் என்றால், நானின் மீது முழுவதும் பழங்களைப் போட்டிருக்கும் என்று புரிந்துகொண்டேன். பழங்களை மட்டும் சாப்பிட்டேன். வேறு என்ன செய்ய. ஹாஹா

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!