ஞாயிறு, 29 டிசம்பர், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – மனைவியுடன் யாத்திரை – பகுதி 12 நெல்லைத்தமிழன்

 

ஐந்து ரதங்கள் பகுதியைப் பார்த்த பிறகு நாங்கள் கடற்கரை கோயில் பகுதிக்குச் சென்றோம்.  இப்போது நாம் பார்க்கும் கோயிலைப் போன்று ஏழு கோயில்கள் இருந்ததாகவும் அவற்றைக் கடல் கொண்டுவிட்டதாகவும் படித்திருக்கிறேன்.  (இதை எழுதும்போது, 2050ல் கடல் மைலாப்பூர் வரை வந்துவிடும் என்று ஒரு அறிவியல்பூர்வமான கட்டுரையைப் படித்த திலிருந்து, என் OMR வீடு-Flat இருக்கும் பகுதியே கடலில் மூழ்கிவிடுவதாக க் கற்பனை செய்து, ரொம்பவே கவலைப்பட்டிருக்கிறேன். பஹ்ரைனில், அது ஒரு தீவு, பெரும்பாலான பகுதியில் கடற்கரையிலிருந்து நடந்தே 100 மீட்டர்கள் கடலுக்குள் சென்றுவிட முடியும். இடுப்பளவுதான் தண்ணீர் இருக்கும். அலையும் ஏரியின் அலையைப் போன்றே இருக்கும். நான் 1995ல் அங்கு சென்றபோது, பல இடங்களில் அவர்கள் தண்ணீரில் கான்க்ரீட் பாறைகளைப் போட்டு, தண்ணீரின் பாதையைத் திருப்பி பிறகு அந்த இட த்தை நிலப்பகுதியாக மாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்படி நிலமாக ஆக்கப்பட்ட இடங்கள் ஏராளம். நம்ம ஊரில் கடல் மிக ஆழமானது, ஆக்ரோஷமானது. அதனால் கடல் பொங்கி இடங்களைக் கபளீகரம் செய்யும் வாய்ப்புதான் அதிகம். பூம்புகார் போயிருந்தபோது, தற்போது கடல் இருக்கும் இடத்திலிருந்து 200-300 மீட்டர் உள்ளேதான் கடல் 1900களில் இருந்தது என்று சொன்னார்கள். அது பற்றி இன்னொரு பதிவில்)

இந்த மாதிரி பதிவு எழுதும்போது இணையத்தில் தேடி பழைய புகைப்படங்களையும் நான் சேர்த்துக்கொள்வேன். நான் 1990ல் பார்த்தபோது கடல் அலைகள் கடற்கரைக் கோயிலின் மதிளில் மோதிக்கொண்டிருந்த தைக் கண்டிருக்கிறேன். அந்தப் பகுதியில் ஏராளமாகக் கற்களை/பாறைகளைப் போட்டிருப்பார்கள். ஆனால் தற்போதோ கடற்கரை கோயில் கொஞ்சம் தள்ளி இருப்பதைப் போன்று தோன்றியது.

13ம்நூற்றாண்டில் மாமல்லபுரத்திற்கு வந்திருந்த மார்கோ போலோ (ஐரோப்பிய வியாபார்), இந்த இடத்தை ஏழுகோயில் இடம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இது ஒருவேளை கடற்பயணிகளுக்கு ஒரு குறிப்பிட த்தக்க இடமாக இருந்திருக்கவேண்டும். 2004ல் சுனாமி வந்தபோது கடல் உள்வாங்கியது. அப்போது கடலுக்குள் இன்னும் கோயில்களின் அமைப்பும், சில பல சிற்பங்களும் (நந்தி போன்று)  வெளியே தெரிந்த து. பலரும் இந்தக் கடற்கரை கோயிலைப்போன்று ஏழு கோயில்கள் இருந்த து என்றும் அவற்றில் ஆறு கோயில்களை கடல் கொண்டுவிட்ட து என்று நம்புவதும், அதற்கு ஏற்றவாறு மார்கோபோலோ ஏழு கோயில்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் பொருந்துகிறது.  இதற்கு முன்பே நாம் பார்த்தோம், தற்போது உள்ள தலசயனப் பெருமாள் கோயிலை 14ம் நூற்றாண்டில் கட்டினார்கள் என்று. அதன் ஒரிஜினல் கோயிலும் கடலுக்குள் சென்றிருக்கலாம்.

இந்தக் கடற்கரைக் கோயில் 7-8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.  கடலினால் மூழ்கடிக்கப்பட்ட மற்ற ஆறு கோயில்களில் கடைசியான 7வது கோயில் இது.

கடற்கரைக் கோயிலையொட்டி பரந்த புல்வெளி.

இந்தக் கடற்கரைக் கோயில்கள் 700-730ம் வருடங்களில் பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்தில் கட்டப்பெற்றனவாம். கிழக்குப் பகுதியில் உள்ள கோயில் க்ஷத்திரியசிம்ஹேஸ்வரம், மேற்குப் பகுதியில் ராஜசிம்ஹேஸ்வரம். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் சயன கோலத்தில் விஷ்ணு இருக்கும்படியான பகுதி உள்ளது.  சைவம் வைணவம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் பல்லவர்கள் சிவனைத் தொழுதவர்கள் என்பது தெளிவு.

கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் உள்ள சிற்பங்கள் நீரினால் அரிக்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. அதனால் மிகத் தெளிவாக இல்லை. ஆனால் மேல் மாடங்களில் உள்ள சிற்பங்கள் இன்னும் தெளிவாக இருக்கின்றன.



நிறைய நந்திச் சிற்பங்கள் கோயிலைச் சுற்றி இருக்கின்றன. இதுபோலத்தான் மற்ற கோயில்களிலும் இருந்திருக்கவேண்டும்.

 

இந்த மாதிரி தடுப்பு போட்டிருந்ததால் உள்ளே சென்று புகைப்படங்கள் எடுக்க இயலவில்லை. இரண்டாம் படத்தில் உள்ளே இருக்கும் சன்னிதியில் தெரியும் சிற்பத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

சிவன், உமை மற்றும் ஸ்கந்தா.. இது சோமஸ்கந்தா சிற்பம் என்று அழைக்கப்படுகிறது (இணையம்)


கடற்கரை கோயிலில் சிற்பங்கள் இந்த அளவு தெளிவாக இல்லை (இணையப் படம்). ஒருவேளை, நிறைய இடங்களில் Work in Progress என்று போட்டிருந்ததால், நான் அருகில் சென்று கூர்ந்து கவனிக்கமுடியவில்லையோ என்னவோ.

இந்தச் சிறிய கோயிலை 1990ல் அகழ்வாராய்ச்சி செய்யும் நிறுவனம் கண்டுபிடித்தது. இதில் பூவராகர் உருவமும் அடங்கும். இது நரசிம்மவர்மன் காலம். இந்தச் சிறிய கோயிலும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.

இந்தக் கோயிலுடன் கிணறு ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள்.

இங்கிருக்கும் கல்வெட்டு, ராஜராஜன் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. ஊர் நிர்வாகிகளும் நகரத்தாரும் இணைந்து ஜலசயனதேவர் கோயிலுக்குத் தெற்கே பூந்தோட்டம் அமைக்க நிலம், வீட்டுமனை மற்றும் பொன்னை தானமாகக் கொடுத்ததைச் சொல்கிறது.

நந்திச் சிற்பங்கள் தெரிகின்றனவா?


இந்தக் கல்வெட்டு ராஜராஜன் மெய்கீர்த்தியுடன் துவங்குகிறது. க்ஷத்ரியசிம்ம பல்லவ ஈஸ்வர ர் கோயில் அல்லது ஜலசயனர் கோயில், ராஜசிம்ஹ பல்லவ ஈஸ்வரர் கோயில், பள்ளிகொண்டருளிய கோயில் ஆகிய கோயில்களுக்கு நகரத்தாரும் ஊர்நிர்வாகிகளும் பத்தொன்பது கழஞ்சு பொன்னும் நிலமும் தானமாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது.  (ஒருகழஞ்சு என்பது 5.4 கிராம். அதாவது சுமார் 100 கிராம் பொன்னை தானமாக வழங்கியிருக்கிறார்கள்)

 

இந்தக் கல்வெட்டுகளிலிருந்து ராஜராஜ சோழன் காலத்திலும் (10ம் நூற்றாண்டு) இந்தக் கோயில்கள் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டன என்பது தெரிகிறது.

 

தண்ணீரினால்தான் கீழ்ப்பகுதி சிற்பங்கள் உருவம் சிதைந்திருக்கின்றன என்று தோன்றுகிறது.

இந்த இடம் (மூன்று கோயில்கள் இருக்கும் இடம்) அகழ்வாய்வு செய்து மீட்கப்பட்ட து. இந்தப் பகுதியை (மூன்றுகோயில் தொகுதி) ஜலசயனம் என்று அழைத்தனர். விஷ்ணுவின் சயனக் கோலம் தண்ணீரில் இருந்த தால். இந்த விஷ்ணு கோயிலில் கல்வெட்டொன்று, நரபதிசிம்ஹ பல்லவ விஷ்ணு க்ரஹா என்று குறிப்பிடுகிறது. நரபதிசிம்ஹ என்ற பட்டப்பெயர் ராஜசிம்ஹ பல்லவனுடையது.


 

சிறிய கோயிலும் கடற்கரை மூன்று கோயில் தொகுதி அருகிலேயே இருக்கிறது.


ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிங்கம் கோயில் வளாகத்துக்குள்ளேயே எழுப்ப ப்பட்டுள்ளது.  இதில் சிறிய அளவில் துர்கை சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. துர்கையை மஹிஷாசுர மர்தினி என்று குறிப்பிட்டுள்ளார்கள். 






இந்தப் பகுதியெல்லாம் மீட்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். தொல்லியல் துறை ஓரளவு சிறப்பாகவே வைத்துக்கொண்டுள்ளது.

 

எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் கடற்கரையைப் படம்பிடித்துக்கொண்டேன்.  எனக்கு இந்த கடற்கரைக் கோயிலையொட்டி இருந்த கடல் இப்போது எப்படி கொஞ்சம் தள்ளிப்போனது போல் இருக்கிறது என்று புரியலை.




 

 

வளாகத்திலிருந்து வெளியே வந்து நாங்கள் வந்த காரை நோக்கி நடந்தோம். காலை பத்து மணி ஆகிவிட்டது. மஹாபலிபுரத்தில் ஹோட்டல் எதையும் தேடி நேரத்தைக் கடத்த வேண்டாம், அடுத்த கோயிலுக்குச் செல்வோம், மதியம் காஞ்சீபுரத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தீர்மானித்தோம். அதனால் உடனேயே பொன்விளைந்த களத்தூர் நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். 6ம், 7ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட இடங்களை முழுவதுமாகப் பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதில் எனக்கு மிகுந்த திருப்தி.  அடுத்தடுத்த கோயில்களுக்கு நேரமாகிவிடக் கூடாது என்பதற்காக மனைவியும் காலை உணவைத் தியாகம் செய்துவிட்டார்.  பயணத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

 (தொடரும்) 

18 கருத்துகள்:

  1. ​இவ்வளவு விவரமாக மஹாபலிபுரம் பற்றியும், சிற்பங்களை பற்றியும் யாரும் எழுதவில்லை. நல்ல கட்டுரை தொகுப்பு. நன்றி. தொடரட்டும் பயணங்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். பாண்டிய நாடு, மலைநாடு திவ்யதேச யாத்திரை முடிந்து (31+ விஷ்ணு கோயில்கள் தரிசனம்) இப்போது திருவல்லிக்கேணி நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். இரவு பெங்களூர் அடையத் திட்டம். அதற்குமுன் தமிழக தோசை சாம்பார் சாப்பிடணும்

      நீக்கு
  2. மாமல்லபுரம் சிற்பங்களை, கடற்கரை கோயிலை மிக அழகாய் படங்கள் எடுத்து பல சரித்திர விவரங்களையும் தந்து பயணக்கட்டுரை மிக அருமை.
    தொல்லியல்துறை சிறப்பாக வைத்து இருக்கிறது கோயிலை.

    கடற்கரை கோயில் அருகே மழை நீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.

    //ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிங்கம் கோயில் வளாகத்துக்குள்ளேயே எழுப்ப ப்பட்டுள்ளது. இதில் சிறிய அளவில் துர்கை சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. துர்கையை மஹிஷாசுர மர்தினி என்று குறிப்பிட்டுள்ளார்கள். //

    இந்த படத்தில் சிங்கம் சிலைக்கு அருகே நாய் காலை மடித்து படுத்து இருப்பது போல ஒரு சிலை முகம் தெரியவில்லை சிங்கமா?

    கடல் உள்வாங்கி உள்ளது போல இருக்கிறது. திருச்செந்தூரிலும் கடல் உள் வாங்கி உள்ளது என்று சொல்கிறார்கள்.

    அடுத்து "பொன் விளைந்த களத்தூர் " பார்க்க , படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். அதுவும் சிங்கம்தான். கடல் உள்வாங்கியிருப்பதுபோல எனக்கு அன்று தோன்றவில்லை. நன்றி

      நீக்கு
  3. விவரணம் மிகவும் சிறப்பாக உள்ளது தமிழரே....

    படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ஆம் நெல்லை க்டற்கரைக் கோயில் தள்ளி இருப்பதாகத்தான் எனக்கும் தோன்றியது. நிறைய பாறைகள் காணாமல் போனது போலவும் தோன்றியதுண்டு. பல வருடங்களுக்கு முன்னர் பார்த்தப்ப நீங்க சொல்லிருப்பது போல் அதாவது 90 களில்தான், அலை கடற்கரைக் கோயில் அருகில் மோதியதைக் கண்டதுண்டு. அதன் பின் 2000 த்தில் அந்த வருடங்களில்பார்த்தப்ப வித்தியாசமாக இருந்தது . அதன் பின் நிறைய மாற்றங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. ஒருவேளை கடலுக்கே தண்ணீர் பிரச்சனையோ

      நீக்கு
  5. மார்கோபோலோ விஷயம் சுனாமி வந்து போனப்ப பேசப்பட்டது. அப்ப தெரிந்து கொண்டது இப்படி 7 கோயில் என்பது.

    ஒரு வேளை கடல் சில சமயங்களில் உள் வாங்கும் போது நிலப்பரப்பாக்கியிருப்பாங்களோன்னு தோன்றியதுண்டு. ஏனென்றால் அப்போது இந்தப் புல்வெளி இருந்ததாக நினைவில்லை கடற்கரை தான் இருந்தது. தண்ணீர் மோதிக் கொண்டு.

    பார்த்தீங்கனா பல சிற்பங்கள் முகங்கள் தெளிவு எல்லாம் மழு மழுன்னு ஆகியிருக்கு இல்லையா...தண்ணி அடிச்சு அடிச்சு இருக்கும் என்றுதான் நீங்கள் சொல்வது போல் ...

    படங்கள் விவரங்கள் எல்லாம் அட்டகாசம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ விட இப்போ குளோபல் வார்ம் பிரச்சனைனால கடல் தண்ணீர் அதிகமாகியிருக்குமோ?

      நீக்கு
  6. கிணறு போல / நீச்சல் குளம் போன்று!!! உள்ள படங்கள் வெவ்வேறு சமயத்தில் எடுத்தவையோ...ஒன்றில் நீர் இல்லை மற்றொன்றில் நீர் இருக்கிறது மழை பெய்த சமயம் போலும் இல்லைனா சுனாமி விசிட் அடித்த சமயமோ!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை எல்லாம் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டவைதான் கீதா ரங்கன்

      நீக்கு
  7. நிஜமாகவே நிறைய படங்கள் அழகா திருப்தியா எடுத்திருக்கீங்க நெல்லை.

    எனக்குப் பல இடங்களுக்கும் போன போதெல்லாம், இப்ப குறைவு...அப்படியே போனாலும், நின்று நிதானமாக எடுக்க முடிவதில்லை. எடுக்கும் விதத்திலான கேமராவும் இல்லை என்பது வேறு விஷயம்! ஹிஹிஹி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். ஆர்வம்தான் நல்ல படங்களுக்கு அடிப்படை

      நீக்கு
  8. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பள்ளியில் கூட இத்தனை செய்திகளைப் பயிற்றுவித்ததில்லை..

    விவரமான அழகான படங்களைக் காட்டி கற்பித்ததில்லை...

    மகிழ்ச்சி..

    நெல்லை அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. மார்க்கோபோலோவுக்கு முன்னரே கல்வியிலும் கலைத் திறமையிலும் மேம்பட்டிருந்த இந்நாட்டைக் காப்பாற்றிக்கரை சேர்ப்பதற்குத் தான் ஆப்கானிய ஐரோப்பிய ஆங்கிலேயக் கூட்டங்கள் வந்ததாக இங்கே உளறிக் கொண்டு இருக்கின்றதுகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உளறுவது என்று ஆரம்பித்துவிட்டால் அதற்கு எல்லையே இல்லை. நம் இந்திய கல்விமுறைக்கும் அறிவுத்திறனுக்கும் எல்லையே இருந்ததில்லை. சொந்த அறிவு இல்லாதவர்கள்தாம் வெளிநாட்டினின்று இங்கு வந்து கல்வி கற்பித்தார்கள் என்று சொல்லுகின்றன

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!