திங்கள், 23 டிசம்பர், 2024

"திங்க"க்கிழமை   : டிகிரி காபி - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 டிகிரி காபி

*** *** *** ***
தஞ்சாவூர், கும்பகோணத்தில் அந்தக் கால வீடுகளில் டிகிரி காபி போடப்பட்டது எப்படி!?

டிகிரி என்பது காஃபிக்கு அல்ல.. காஃபியுடன் கலக்கப்படுகின்ற பாலுக்கு!.. 

டிகிரி பால் என்பது தண்ணீர் கலக்கப்படாத பால் என்பது அந்தக் காலத்தில் மக்களின் நம்பிக்கை..

இன்று அப்படியெல்லாம் இல்லை.. எத்தனையோ வகையான பால்!..

கறந்த பாலில் தண்ணீர் கலக்காமல் வீட்டில் தயாரிக்கப்பட்ட காஃபியே டிகிரி காஃபி எனப்பட்டது..


அக்காலத்தில் தரமான காபிக் கொட்டையை வாங்கி வீட்டிலேயே  பதமாக வறுத்து கையால் சுழற்றுகின்ற இயந்திரத்தின் மூலம் அரைத்து வைத்துக் கொள்வர்...

அக்ரஹாரத்தில் வசதி உடையோர் வீடுகளில்  காபிக் கொட்டை அரைப்பதற்கான இயந்திரம் கண்டிப்பாக இருக்கும்.. 

மெல்ல மெல்ல வசதியுடைய அனைவரது வீடுகளுக்கும் பரவி ஏதோ ஒரு சூழ்நிலையில் வழக்கொழிந்து போனது..

அந்த காலத்தில் தஞ்சை பேருந்து நிலையம் அருகில் மங்களாம்பிகா,
ரயிலடி ஆரியபவன், ஆனந்த பவன், ராஜ வீதியில் காஃபி பேலஸ்..

கும்பகோணத்தில் லக்ஷ்மி காபி கிளப் வெங்கட ரமணா ஹோட்டல் - மயிலாடுதுறையில் காளியாகுடி ஹோட்டல் என்பவை  பிரசித்தம்.. 


தஞ்சை நகரின் ராஜ வீதிகள் மற்றும் பல பகுதிளில் காபிக் கொட்டையை வறுத்து அரைத்துக் கொடுப்பதற்காகவே கடைகள் இருந்தன.. 

இன்றும் தஞ்சையில் கீழராஜ வீதி, ஐயங்கடைத் தெரு, ரயிலடி - இங்கெல்லாம் ஒரு சில கடைகள் உள்ளன..

காஃபி தயாரிப்பதற்கென பிரத்யேக பித்தளைப் பாத்திரம் Coffee Filter.. அதன் கொள்கலனில் வீட்டில் அரைத்தெடுத்த காஃபித் தூளை நிரப்பி அதனுள் கொதி நீரை அலுங்காமல் குலுங்காமல் ஊற்றுவர்.. அதுவே ஒரு தனிக்கலை..

ஐந்து நிமிடங்கள் கழித்து பார்க்கும் போது (Filter) பில்டரில் வெந்நீர் குறைந்திருக்க  மீண்டும் வெந்நீர் ஊற்றி நிரப்புவர்..

இதையடுத்து, அந்தக் காலத்து வழக்கப்படி அதிகாலையில் கொல்லைப் புற தொழுவத்தில் - லச்சுமி, லக்ஷணா, கமலா விமலா எனும் பசுக்களிடம் கறக்கப்பட்ட பால் இளஞ்சூட்டுடன் அடுக்களைக்கு வரும்...

சில வீடுகளில் கறந்த பாலை  சற்றே சூடாக்குவதும்  உண்டு..

இந்நேரத்தில் டிகாஷன் தயாராகி இருக்கும்..

பளபளப்பாகத் துலக்கப்பட்டிருக்கின்ற  பித்தளை டவரா - டம்ளரில் தேவையான அளவுக்குச் சர்க்கரை போட்டு, தேவைக்கேற்ப டிகாஷனை ஊற்றி, அதன் மீது இளஞ்சூடான பாலை ஊற்றி ஒரு ஆற்று ஆற்றி நுரைத்ததும்  - ஆகா அதுவல்லவோ சொர்க்கம்!..

அன்றைக்கு கல்யாண வீடுகளில் பரிமாறப்படுவதும்
மறுநாள் வெட்கத்துடன் புது மணப்பெண் கணவனுக்கு வெள்ளிக் குவளையில் கொடுப்பதும்  - இப்படியான காஃபியைத் தான்!..

காஃபியில் சிக்கரி  கலக்கப்படும்போது சற்றே கசப்புச் சுவை ஏற்படும். இந்த சுவைக்கே பலரும் வசப்பட்டனர்.. 

காஃபித் தூளுடன் சிக்கரி கலப்பதுதான் குடும்ப ரகசியம்..

இன்றைய சூழலில் தஞ்சாவூர் நகருக்குள்ளும் பிரதான சாலைகள் பலவற்றில் கும்பகோணம் டிகிரி காபி என பற்பல கடைகள்.. ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை..

காஃபியை அளவுடன் அருந்தி வளமுடன் வாழ்ந்தவர்கள் பலர்..

நிரந்தர சுவை என்பது அவரவர்க்கே தெரிந்திருக்கும்..

கறக்கப்பட்ட பாலே கண்ணில் படாத போது டிகிரியாவது காப்பியாவது!..


இருந்தாலும் - 
வாழ்க காஃபி!..

= = = = = = =

11 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் டிகிரி காப்பியை பற்றிய விபரங்கள் அருமையாக உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் விளங்கும் தரமான காப்பி கடைகளை தெரியபடுத்தியமைக்கு நன்றி. இப்போது எங்கும் பாக்கெட் பால் யுகம். அம்மா வீட்டில் இருக்கும் போது பால் பண்ணைக்குச் சென்று அங்கு கறந்த பால் வாங்கி வந்து காப்பியை ருசித்த காலங்கள் இப்போது நினைவில் மட்டுந்தான். பிறகு நாங்கள் சென்னையில் வசித்த ஒரு இடத்திலும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு மேலாக கறந்த பால்தான் வாங்கி பயன்படுத்தினோம். இங்கு வந்த பின் பாக்கெட் பால்தான். கறந்த பாலை தேடி அமர்த்திக் கொள்ள வேண்டும். தேடினால் கிடைக்கும். ஆனால், என்னவோ இந்த காப்பி காலை, மாலையில் அதற்கான நேரம் தாமதமானாலும் குடிக்க மனது ஆசைப்படுகிறது. அதை தவிர்க்க இயலவில்லை. இங்கு காலைக் காப்பி இனிதான். இப்போது உங்கள் பதிவில் காப்பியை ருசித்து விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..
      நலம் வாழ்க...

      நீக்கு
  3. காஃபி பிரியர்கள் ரசிக்கும் பதிவு

    காஃபி ஆசை இல்லாமலேயே எங்கள் வீட்டில் எல்லோரும் இருந்துவிட்டோம்

    பதிலளிநீக்கு
  4. கும்பகோணத்தில் இன்பா காஃபி கடை மற்றும் தாராசுரம் பகுதியில் ஒரு ரெஸ்டாரென்டில் இன்றும் அருமையான காஃபி கிடைக்கும் என்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.,
      இன்றும் நல்ல காஃபியுடன் சில உணவகங்கள் இயங்குகின்றன..

      மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  5. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  6. ஆத்தூர் முசிறி அரியலூர் இவை பால் வளம் மிக்க ஊர்கள்...

    இவற்றுள் அரியலூரில் மட்டும் காஃபியின் சுவை அறிவேன்...

    பதிலளிநீக்கு
  7. காலை எழுந்தவுடன் நல்ல காஃபி!!!!

    காஃபி தயாரிப்பு பற்றி மணமான பதிவு.

    நம் வீட்டில் சிக்கரி கலக்காத காஃபிதான் பயன்பாட்டில். இப்ப காஃபி கொட்டை அரைத்து தந்து கொண்டிருந்த இரு கடைகளும் மூடிவிட்டன. அதனால் வேறு வழி இல்லாமல் கும்பகோணம் காஃபி பேக்கட்டுகளை வாங்கும்படி ஆகியிருக்கிறது. அதிலும் ஒரு சில பேக்கட்டுகளில் தான் சிக்கரி குறிப்பு கொடுத்திருக்காங்க. ஒன்றில் சிக்கரி பத்தி கொடுக்காம ஆனா கும்பகோணம் டிகிரி காபின்னு சொல்லியிருப்பதை வாங்கிப் பார்த்தோம். செம திக்காக டிகாக்ஷன். பார்த்தால் சிக்கரி கலந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ஏன் இப்படிக் குறிப்பிடாமல் விக்கிறாங்கன்னு தெரியலை. KDC ப்ராண்ட்.

    இங்கு கர்நாடகாவிலும் கோத்தாஸ் பிராபல்யம் ஆனால் சிக்கரி கலக்காத பாக்க்ட்டுகள் (அரைத்து விற்கும் கடைகளில் அவங்களே பேக்கர் போட்டுவிடுகிறார்கள்) கிடைப்பதில்லை.

    காஃபிடே நன்றாக இருந்தது ஃப்ரெஷ்ஷாகப் பொடித்து தருவாங்க. சிக்கரி கலக்காம வாங்க முடியும். ஆனால் இப்ப அருகில் கடைகள் இல்லை. கொஞ்சம் தேட வேண்டும் ஏரியாவில் எங்கு இருக்கிறது என்று,.

    கர்நாடகா காஃபிக்குப் புகழ்பெற்ற மாநிலம் "குடகு" மலைகளில் விளைவதால். சிக்மகளூர், ஹஸ்ஸன், ஷிமோகா பகுதிகளிலும்.

    இங்கு பொதுவாகவே காஃபி நன்றாக இருக்கும் பல உணவகங்களிலும். சிக்கரி கலந்ததுதான். 12 ரூ ஒரு கோப்பை விலை என்று கிடைக்கிறது. ஒரு சில உணவகங்களில் 18 - 20 ரூ

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!