செவ்வாய், 31 டிசம்பர், 2024

சிறுகதை : பொக்கிஷம் - ஊமைக்காயம் - நா பார்த்தசாரதி

 

அவளுடைய நூறாவது படவிழாவைக் கொண்டாட  ஊரெல்லாம் ஆளுயர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பத்திரிகைகளில் அவளுடைய படங்கள். திரை உலக வரலாறு, துணுக்குகள், பெட்டிச் செய்திகள் எல்லாம் பெரிதாக அமர்க்களப் பட்டன.

நகரின் எல்லாத் திரையரங்குகளிலும் அவள் நடித்த படங்களில் ஏதாவது ஒன்று சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. எங்கும் அவள் மயமாயிருந்தது.

அந்த ஞாயிறன்று டெலிவிஷனில் சிறப்பு நிகழ்ச்சியாக அவள் நடித்த மிகச் சிறந்த படங்களின் தொகுப்புச் சித்திரம் ஒன்றை ஒளிபரப்ப ஏற்பாடு நடந்தது.

தினசரிகளும், வார இதழ்களும், கவர்ச்சியாய்க் காட்சி அளித்த சினிமா இதழ்களும் டீப்பாயில் குவிந்து கிடந்தன . எல்லாவற்றிலும் அவள் படங்கள், புகழ்மாலைகள், சிறப்புக் கட்டுரைகள். சாதனையின் பெருமிதத்தில் மகிழ்ச்சி பொங்கித் ததும்பியது. அவள் களிப்பின் நிறைவில் இருந்தாள்.

"நடிகையர் ரத்தினம் குமாரிக்குத் திருமணம் ஆகவில்லை என்றாலும் அவர் கலையையே மணந்து வாழ்க்கைப் பட்டிருப்பது, அவர் நடித்திருக்கும் இந்த நூறு படங்களிலிருந்து நிதரிசனமாகத் தெரிகிறது!" என்றும் அவள் மணத்தையே மறந்து வாழ்கிறாள் என்றும் விளக்கி எழுதியிருந்தது ஒரு பத்திரிகை, அவளே அதைப் படித்துச் சிரித்துக்கொண்டாள்.

''அம்மா. ஜூஸ் தயார்." வேலைக்காரி செல்லம்மாள் அழகிய பூ வேலைப்பாடு அமைந்த கிளாஸ் நிறைய ஆப்பிள் ரசத்துடன் தட்டைக் கொண்டுவந்து வைத்தாள் கதாநாயகி நடிகை கலாதேவி ரசத்தைப் பருகி முடிக்கவும் வேலைக்காரி செல்லி விடைபெற்றுக் கொண்டு போக வந்து நிற்கவும் சரியாயிருந்தது .

 'வரேன்ம் மா! தயிர் 'பிரிஜ்'லே இருக்கு. மத்த வேலையெல்லாம் முடிஞ்சிது."

"ஏண்டி செல்லம்மா. என்னமோ இப்பத்தான் கல்யாணமான சின்னஞ் சிறிசு மாதிரி புருஷனுக்குப் பயந்து நடுங்கி வீட்டுக்குஓடறியே! ஒரு நாள்தான் கொஞ்சம் தாமதமாப் போபேன்; குடியா முழுகிடும்?

"ஐயோ. என் புருஷன் பொல்லாது..   அடிச்சுக் கொன்னுடும். வூட்லே என்னைக் காணாட்டித் திரும்பவும் போயிச் சாராயக் கடையிலே பூந்துடும்."

செல்லம்மாளின் குரலிலும் முகத்திலும் தெரியும் நடுக்கத்தையும் பயத்தையும் பார்த்துக் கலாதேவிக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. சிரிப்புக்கூட வந்தது.

நிலையான வருமானம் இல்லாத, மனைவியின் சம்பாத்தியத்தில் காசு திருடிச் சாராயக் கடைக்குப் போகக் கூடிய ஒரு புருஷனுக்கு அத்தனை தூரம் அவள் நடுங்கிச் சாவதைப் பார்த்துக் கலாதேவி சிந்திக்கத் தொடங்கினாள்.  பரிதாபங்கூடப் பட்டாள். 'கல்லானாலும்' கணவன், புல்லானாலும் புருஷன்' என்ற பழமொழி பெண்ணடிமைத்தனத்தை வளர்க்க விரும்பியவர்கள் இந்நாட்டில் உண்டாக்கியது என்று அவளுக்குத் தோன்றியது..  சராசரி இந்தியப் பெண்களும் இந்தப் பழமொழிக்கு ஏற்பத்தான் நடந்துகொள்கிறார்கள் என்று  எண்ணினாள் கலாதேவி.  புருஷன் குடும்பம், குழந்தை, குட்டிகள் எதுவுமே இல்லாமல் புகழும் பணமுமாக  உயர்ந்து வாழும் தன்னையும் செல்லம்மாளையும் மனத்துக்குள் பார்த்த பங்குக்கு ஒப்பிடத் தொடங்கினாள் அவள்.

செல்லம்மாளை விடத் தான் பல மடங்கு புகழோடும் பணத்தோடும் செல்வாக்கோடும் வாழ முடிந்திருக்கிறது. அதற்குப் புருஷனோ குடும்ப வாழ்க்கையோ தனக்கு இல்லாதது எந்த விதத்திலும் தடையாக இருக்க நேர்ந்தது இல்லை. ஒருவேளை தான் இந்தக் கலைத் துறைக்கு வராமல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கணவனுக்கு அடங்கிய மனைவியாக இருந்திருந்தால் இப்படிப் புகழ் பெற்றிருக்க முடியாது; நட்சத்திரமாக ஜொலித்திருக்க முடியாது என்பதை எல்லாம் கூட அவள் நினைத்தாள்.

தன்னையும் தன் வேலைக்காரி செல்லம்மாளையும் பெண் என்ற பொது அடிப்படையில் மனத் தராசில் நிறுத்தும் போது சுலாதேவிக்குத் தன் எடை கூடியிருப்பது தெரிந்தது. 

இன்று வானத்து நட்சத்திரங்களை விட என் ஆற்றல் அதிகம். அந்த நட்சத்திரங்கள் இரவில் மட்டுமே ஜொலிக்க முடியும், நானோ இரவில் மட்டும் அல்லாமல் பகலிலும் ஜொலிக்க முடிந்தவள். அந்த அப்பாவிப் பத்திரிகைக்காரன் திறமையாகக் கற்பனைச் செய்து எழுதுவதாக எண்ணிக் கொண்டு நான் கலையையே மணந்து கொண்டு வாழ்வதாக எழுதியிருந்தான். அப்படியானால் கலை எனக்குக் கணவனா? இல்லை; கலை என்னை ஆளவில்லை; நான் கலையை ஆளுகிறேன். அப்பாவி வேலைக் காரி, செல்லம்மாளைப் போலவோ அவளை விடச் சமூகத்தின் மேல் தட்டைச் சேர்ந்த வேறு ஒரு குடும்பத் தலைவியைப் போலவே நான் ஒரு சாதாரணப் பெண்மணி அல்ல. பிற பெண்கள் பின்பற்ற ஆசைப்படும் லட்சிய அழகி நான்; பிற ஆண்களைக் கனவு காணவைக்கும் கவர்ச்சிக்காரி.

'பாவம், செல்லம்மாள்! கேவலம் குடும்பம் என்கிற மாட்டுத் தொழுவத்தில் தாலி என்கிற கயிற்றால் சுட்டப்பட்டவள் அவள். எனக்கு இருக்கும் இந்த அளவற்ற சுதந்தரம் அவளுக்குக் கிடையாது.'

இப்படி நினைத்து விட்டு நோக்கியபோது வேலைக்காரி செல்லம்மாள் சாராயக் குடிகாரனாகிய சுணவனிடம் அடிபடும் ஒரு புழு போலத் தென்பட்டாள். குடித்து விட்டு வீடு திரும்பும் கணவனிடம் கண் மண் தெரியாமல் அடிபட்டு அடிபட்டுச் செல்லம்மாளின் உடம்பெல்லாம் காயமாயிருப்பது போல் அப்போது அவளுக்கு நினைக்கவும் கற்பனை செய்யவும் தோன்றியது.

கலா தேவிக்குச் செல்லம்மாள் மேல் அநுதாபம் பொங்கியது. அவளுக்காக இரக்கப்பட்டாள். பட்டுப் போல மென்மையும் தந்தம் போல் வெளேரென்ற நிறக் கவர்ச்சியும் உள்ள தன் மேனியழகையும் அம்மை வடுக்களும் காயங்களும் நிறைந்த செல்லம்மாளின் முற்றிய உடம்யையும் மனக் கண்ணில் ஒப்பிட்டுப் பார்த்தாள் அவள். அந்த ஒப்பீட்டில் செல்லம்மாளைப் பற்றிப் பெருமைப்பட எதுவுமே இல்லை.

"நல்லவேளை! யார் செய்த புண்ணியமோ, வாழ்க்கைத் தொழுவத்தில் சிக்காமலே புகழ் ஏணியின் உச்சியில் இருக்கிறேன். இன்று ஏதோ தேர்த் திருவிழா கொண் டாடுவது போல் எனது நூறாவது படவிழாவை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

பொழுது விடிந்ததும் செல்லம்மாள் வேலைக்கு வந்தபோது அவள் முகம் முதல் நாள் இரவு முழுவதும் அழுது அழுது வீங்கினாற் போல் இருந்தது. கலாதேவி அவளைக் கேட்டாள்: '"என்னடீது? ராத்திரி உம் புருஷனோட ஏதாவது சண்டையா?"

"சாராயமும் சண்டையும் இல்லாத நாளே கெடையாதும் மா:"

"அப்படியாவது அந்தப் புருஷனுக்காக ஏன்டீ உயிரை விடறே? 'டைவர்ஸ்' பண்ணிக்கிறதுதானே?"

"ஐயே! அதெப்பிடீம்மா முடியும்?"

"ஏன் முடியாது?"

''ஆயிரம் இருந்தலும் அது எம் புருசனாச்சே?''

"அப்படியானா உனக்கு வேற வழியே இல்லே; திண்டாட வேண்டியது தான்."

"இன்னிக்கி விழாவுக்கு அதுகூட வரணும்னிச்சு. உங்க யஜமானியம்மா கிட்டச் சொல்லி ஒரு பாஸ் வாங்கியாந்து குடுன்னு கேட்டிச்சும்மா." 

"சாயங்காலமானால் சாராயக் கடைக்குப் போறவன் நூறாவது படவிழாவுக்கு எங்கேடி வரப்போறான்? வந்தாலும் குடிச்சுட்டுக் கலாட்டாப் பண்ணாம இருப்பானா?"

"அதெல்லாம் ஒண்ணும் பண்ணாதும்மா! உங்க நடிப்புன்னா அதுக்குப் பிரியம்.. அடிபட்டு உதைபட்டு மாடாகத் தேய்ந்தாலும் செல்லம்மாளுக்குத் தன் குடிகாரப் புருஷன் மேலுள்ள பிரியத்தின் மர்மத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறினாள், திருமணமாகாத நட்சத்திரம் கலாதேவி. மணவாழ்க்கையால் பெண் அடிமைப்படுகிறாள் என்பதே அந்த விநாடிவரை மண வாழ்க்கையைப் பற்றி அவள் கணிப்பாயிருந்தது. அதற்கு மேல் 'புருஷன்' என்ற வார்த்தையின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை.

அன்று மாலை அவளுடைய நூறாவது படவிழா ஆடம்பரமாகத் தொடங்கியது; பயங்கரமான ரசிகர்கள் கூட்டம்.

கூட்டத்திலும் ஜனநெருக்கடியிலும் சிலர் நசுக்குண்டு மிதிபட்டு இறந்துபோய் விடுவார்களோ எண்ணுமளவு ஒரே மக்கள் வெள்ளம்:

விழா நாயகி நடிகையர் ரத்தினம் கலாதேவிக்கு துணையாக வேலைக்காரி செல்லம்மாளும் சென்றிருந்தாள்.  வேறு பல நடிகைகள் நடிகர்கள் திரளாக வந்திருந்ததால்  எல்லாரையும் ஒரு சேரக் காணலாம் என்ற ஆவலில் கூட்டம் அலைமோதியது.  விழா மேடைக்குப் பின்னால் கையில் வீட்டிலேயே போட்டுப் பிளாஸ்கில் எடுத்துச் சென்றிருந்த காபி பிளாஸ்குடன் அடக்க ஒடுக்கமாக நின்றிருந்தாள் செல்லம்மாள். கலா தேவிக்கு அவுட் டோர் ஷூட்டிங் நாட்ளில் காபி, சிற்றுண்டி. சாப்பாடு எல்லாமே வீட்டிலிருந்து செல்லம்மாள்தான் எடுத்துச் செல்வாள். அதே போல்தான் இன்று விழாவுக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். விழா மேடையில் அழகுராணியாக வீற்றிருந்த கலாதேவி கூட்டத்தைக் கம்பீரமாக நிமிர்ந்து பார்த்தாள்.

தனக்கு எதிரே தெரிந்த அந்தப் பறட்டைத் தலையும், களையிழந்த முகமும் கூடிய பல ஆண்களில் ஒருவன் தான் யாராவது ஒரு  செல்லம்மாளின் கணவனயிருக்க வேண்டுமென்று ஏளனமாகத் தன மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள் கலாதேவி. 

நிலைகொள்ளாமல் மோதும் பெரிய கூட்டத்தில் மின்சாரத் தடங்கலால் ஒரு நிமிஷம் திடீரென்று இருள் சூழ்ந்தது. இருட்டில்  மேலும் தடுமாறவே. கலாதேவி முதலிய பெண் நட்சத்திரங்கள் அமர்ந்திருந்த மேடை சரிந்து விட, ஒரே அமளி. கூச்சல், குழப்பம் உண்டாயிற்று. விளக்குத் திரும்ப வந்தும் கூடச் சந்தடி சாக்கில் நடிகைகள் மேல் ரசிகர்கள் மோத ஆரம்பித்துக் கூக்குரல் எழுந்தது. பரபரப்பிலும் குழப்பத்திலும் நடிகை கலாதேவியே கூட்டத்தில் சிக்கிக் கீழே தடுமாறி விழுந்து விட, அவளைத் தூக்க வேலைக்காரி செல்லம்மாள் ஓடிவந்தாள். செல்லம்மாளையும் முத்திக்கொண்டு வேறு இரண்டொரு ரசிகர்கள் சுலாதேவியைத் தூக்கிவிட ஓடி வரவே, செல்லம்மாளும் - அவர்களும் எதிரெதிராக மோதிக் கொள்ளும்படி நேரிட்டு விட்டது.

செல்லம்மாள் மேல் மோதியவர்கள் ஆண் பிள்ளைகளாயிருப்பதைப் பார்த்தபடி - தூரத்தில் நின்றிருந்த அவள் கணவன், "إني யார்ரா பேமானி! கீச்சுப் புடுவேன் சீச்சு" என்று கத்தியோடு கூட்டத்தில் அவர்கள் மேல் பாய்ந்தாள். "கண்ட கஸ்மாலம்லாம் கையைப் புடிச்சு இஸ்துக்கினு போக இது சினிமா எக்ஸ்ட்ரான்னு நெளைச்சியா?  இது என் பொஞ்சாதிடா ஜாக்கிரதை !"  என்று அந்த ஆண்களை எச்சரித்து மிரட்டிவிட்டுச் செல்லம்மாளை மட்டும் ஒதுக்கி அழைத்துச் சென்றான் அவள் கணவன்.

தடுமாறிக் கீழே விழுந்து விழா நாயகியாகிய தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், தனக்கு உதவ வந்த ஆண்கள் செல்லம்மாளைத் தீண்டி விட்டார்கள் என்பதற்காகவே அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டும் அந்த முரட்டு குணம் கலாதேவியை ஒரு கணம் பிரமிக்கச் செய்துவிட்டது. 

"யார்ராவன்? விழா நாயகியே இங்கே கீழே விழுந்துட்டாங்க?  நீ என்னடான்னா யாரோ ஒரு அம்ம வடு விழுந்த பொம்பளையைத் தொட்டுப் புட்டோம்னு கத்தியைக் காட்டி...."  என்ற பெரிய இரண்டு சினிமா உலகப் பிரமுகர்கள் பக்கம் திரும்பி, “இந்தய்யா! அதெல்லாம் வேற இடத்துல வச்சுக்க! நம்ப கையில வாண்டாம். சினிமாக்காரியை  என்ன வேணா பண்ணிக்க. இது குடும்பப் பொண்ணு, எம் பொஞ்சாதி. எவனாவது தொட்டே கொடலை உருவிடுவேன்" என்று மீண்டும் கத்தியைக் காட்டிச் சீறினான் செல்லம்மாளின் புருஷன்.- பாதி குடிபோதை வேறு.

அந்தக் கணத்தில் மின்வெட்டுப் போல் கலா தேவியின் மனத்தில் ஒரு பொறி தட்டியது.

சதா சாராயத்தையே கட்டிக்கொண்டு அழும் அந்தக் குடிகாரக் கணவனைச் செல்லம்மாள் விடாமல் கட்டிக் காத்துப் பணி விடை செய்யும் மர்மமும் இரகசியமும் கலா தேவிக்கு இப்பொது புரிவது போல் இருந்தது.

இந்த அளவு முரட்டுப் பிரியத்தைத் தருகிற ஓர் ஆண்பிள்ளையிடம் ஒரு பெண் எத்தனை தடவை அடிபட்டாலும் அவனால் தன் உடல் முழுவதும்  காயமானாலும் அவனை விட்டுப் பிரிய மாட்டாள் என்று தோன்றியது. 

யாரோ வந்து சமாதானப்படுத்தி அவனைத் தனியே அழைத்துக் கொண்டு போனார்கள். செல்லம்மாளும் கூட வந்தால்தான் போவேன் என்றான் அந்த முரடன்.

செல்லம்மாள் தயக்கத்தோடு எஜமானி கலாதேவியின முகத்தைப் பார்த்தாள். எஜமானி பிளாஸ்கை வாங்கிக் கொண்டு, 'நீ போ, பரவாயில்லை' என்பது போல் அவளுக்கு உத்தரவு கொடுத்தாள். அவள் கணவனோடு போனாள்.

குடித்து விட்டு வீடு திரும்பும் முரட்டுக் கணவனிடம் அடிபட்டு அடிபட்டுச் செல்லம்மாளின் உடம்பெல்லாம் காயம் பட்டிருப்பதாகத்தான் முன்பு கற்பனை செய்திருந்த காயங்களை விட ஆழமான. ஆனால் வெளியே தெரியாது ஊமைக் காயம் ஒன்றைத் தானே தாங்கி நிற்பது போல் அத்தக் கணத்தில் விழா நாயகியான நடிகையர் ரத்தினம் கலாதேவிக்குத் தோன்றியது.

"சினிமாக்காரியை இன்னா வேணாப் பண்ணிக்க; இது குடும்பப் பொண்ணு, எம் பொஞ்சாதி!" என்ற அந்த முரட்டுக் - குடிகாரக் கணவனின் கொச்சை வார்த்தைகள், அவன் உருவி நீட்டிய கத்தியையும் விடக் கூராயிருந்தன.  அந்தக் கூர்மை தொலைவிலிருந்தே எங்கோ அவளைக் காயப்படுத்தியிருந்தது. 

********

- 1987 - கலைமகள் தொகுப்பு -

16 கருத்துகள்:

  1. ​சினிமாக்காரி என்றால் ஒழுக்கத்தில் கீழானவள் என்ற எண்ணம் என்றுமே நிலையானது போல் இருக்கிறது.
    நா பார்த்தசாரதியின் கதை நன்றாக இருந்தாலும் அவ்ருடைய standard க்கு சாதாரணம் என்பது எனது கருத்து.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. ​இங்கு கேரளத்தில் மேடை சரிந்து கீழே விழுந்த எம் எல் ஏ உமா ஆசுபத்திரியில் வென்டிலேட்டரில் என்று நேற்று செய்திகளில். அதே போல் இக்கதையும்.

    பதிலளிநீக்கு
  3. https://english.mathrubhumi.com/news/kerala/uma-thomas-mla-suffers-head-lung-spinal-injuries-1.10205925

    பதிலளிநீக்கு
  4. பொதுப்பார்வையிலான கதை இது. பரவாயில்லாமல்தான் இருந்தது.

    சென்னையில் எங்களுக்கு உதவியாளராக இருந்தவர் சுறுசுறுப்பாகப் பல வீடுகளில் பணி செய்து சம்பாதித்து, குடிகாரக் கணவனையும் காப்பாற்றுவது நினைவுக்கு வந்தது. இதுபோலப் பலர் வாழ்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  5. கதாநாயகிகள் மின்மினிகள். அவர்கள் பளிச்சிடும் காலம் முடிந்தபின் ரசிகர்கள் குறைந்துவிடுவர். பெரும்பாலும் பணம் இருக்கும்வரை உறவினர்கள் ஒட்டிக்கொண்டிருப்பர் என்பதும் உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  6. கதை நன்றாக இருக்கிறதுதான் ஆனாலும்.....

    பொதுவாக சமூகத்தில் அன்றிலிருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லை செல்லம்மாள் போன்ற பெண்களின் மன நிலையில் என்பது தெரிகிறது, கொஞ்சம் முற்போக்குச் சிந்தனைகளை எழுத்தில் வெளிப்படுத்தம் நாபா இதிலும் அப்படி ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றும் தோன்றியது.

    வாசித்து வரும் போதே, முடிவில் கலா தேவியின் எண்ணம் இப்படியாகத்தான் முடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் - மனதிற்குள் ஒரு லேசான எதிர்பார்ப்பு முடிவு வேறாக இருக்குமோ என்று - ...ஆனால் ஊகித்த முடிவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கணவன் எப்படி இருந்தாலும் கணவன் தான்.....என்ற சராசரி முடிவு.

    இப்பவும் கூட கணவன் குடிப்பழக்கத்துடன், 3, 4 மனைவிகள் அல்லது வேறு விதமாகப் பெண்களுடன் தொடர்பு, செல்லுதல், ரௌடித்தனம் செய்தல் என்றாலும் என் புருஷன் என்று வாழும் பெண்களை என்னவென்று சொல்வது? மேல்தட்டிலும் இருக்கு அடித்தட்டிலும் இருக்கு.

    முற்போக்குச் சிந்தனைகளைக் கதைகளில் எழுதிய நா பாவின் இக்கதையில் சொல்லியிருக்கும் முடிவை யதார்த்தத்தைதானே எழுதியிருக்கிறார் என்று சொல்ல நினைத்தாலும், அக்கருத்தை நியாயப்படுத்தியிருக்கிறாரோ கலா தேவியின் எண்ணத்தின் மூலம் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  9. இன்றைய வாசகர் கருத்துக்கு நா.பா வந்து பதில் எழுதுவார் என்று எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. //"கண்ட கஸ்மாலம்லாம் கையைப் புடிச்சு இஸ்துக்கினு போக இது சினிமா எக்ஸ்ட்ரான்னு நெளைச்சியா? இது என் பொஞ்சாதிடா ஜாக்கிரதை !" என்று அந்த ஆண்களை எச்சரித்து மிரட்டிவிட்டுச் செல்லம்மாளை மட்டும் ஒதுக்கி அழைத்துச் சென்றான் அவள் கணவன்.//

    கதையின் கருத்து நன்றாக உள்ளது . ஆனால் தன் மனைவியை காப்பாறி விட்டு அவர் போய் இருக்கலாம். நடிகைகளை காயப்படுத்தும் அந்த வார்த்தைகள் அதிகப்படி என்று தோன்றுகிறது.

    அந்தக் காலத்தில் சர்ச்சையாக ஆகவில்லையா இந்த கதை என்று தெரியவில்லை.

    //இந்த அளவு முரட்டுப் பிரியத்தைத் தருகிற ஓர் ஆண்பிள்ளையிடம் ஒரு பெண் எத்தனை தடவை அடிபட்டாலும் அவனால் தன் உடல் முழுவதும் காயமானாலும் அவனை விட்டுப் பிரிய மாட்டாள் என்று தோன்றியது. //

    குடிகார புருஷனாக இருந்தாலும் தன் மனைவி அழகு குறைந்தவளாக இருந்தாலும் யாரும் அவளை தீண்ட கூடாது தனக்கு உரியவள் என்று சீறியது கண்டு கலா தனக்கு என்று இப்படி அன்பான புருஷன் துணையாக இருந்தால் இந்த மாதிரி சமயம் தன்னை பாதுகாத்து இருப்பார் கலாதேவி நினைப்பதாக கதையை நிறைவு செய்து இருக்கலாம்.

    வீட்டு வேலைக்கு வரும் பெண்களின் கதையை கேட்டால் பெரும்பாலும் கணவன் குடிகாரன், முரடன், பொறுப்பு இல்லாதவர் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அவருக்கும், குடும்பத்திற்கும் சேர்த்து உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். உங்களின் அன்பான பின்னூட்டங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்று காலை நான் எழுந்ததே தாமதம். அதில் இன்றும், நாளையுந்தான் சின்ன குழந்தைகளுக்கு விடுமுறை நாள். அடுத்த வருடம் 2 ம் தேதி பள்ளி திறப்பு. காலை வேலைகள் சமையலுடன் நேரம் சரியாக போய் விட்டது. கதையை படித்து விட்டு வருகிறேன். அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. என்றைக்கும் உள்ள விஷயம்...

    அந்தக் காலத்தில் வெகுவாகப் பேசப் பட்டிருக்கும்..

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய பொக்கிஷ கதை பகிர்வு நன்றாக உள்ளது. கணவன் என்றொரு கட்டுக்கோப்பை உணரும் கலாதேவியின் எண்ணங்கள் இயற்கையானதுதான். அதுபோல், முரட்டு கணவனின் அன்பையும், பரிவோடு பாசத்தையும் செல்லம்மாள் முழுமையாக உணர்ந்திருந்த விதமும் சிறப்பு. ஆனாலும் , செல்லம்மாளின் கணவன் தன்னுடைய பிடித்த அபிமான நடிகை என்ற ரீதியில் கீழே விழுந்த கலாதேவியை சற்று அக்கறையோடு கவனிக்காவிட்டாலும் ஒரு மனித உயிர் என்ற முறையிலாவது சற்று மரியாதையுடன் பேசியிருக்கலாம். அதற்கும் அந்த குடி போதை இடம் தரவில்லை என ஆசிரியர் முடித்து விட்டார். அவரவருடைய எண்ணங்களின்படி கதை நன்றாக நகர்ந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!