மாற்றி யோசித்து அந்த சிந்தனைக்கு 'முயற்சி' என்ற உரமிட்டால் போதும் எங்கும், எந்த சூழலிலும் சாதனை என்ற செடி மலர்ந்து மரமாகி பயன் தரும் என்பதில் மாற்றம் இல்லை என்கிறார், பெண் தொழில்முனைவோராக சாதிக்கும் மதுரையை சேர்ந்த ராமலட்சுமி. இவர் நடத்தும் 'ஹோம் சேல் பொட்டிக்' தொழிலுடன், தொழில்முனைவோராக விரும்பும் இளம் பெண்களுக்கு கை கொடுக்கும் வகையில் தன் சக்சஸ் மந்திரத்தையும் இலவசமாக ஆன்லைனில் கற்றுத்தரும் இவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம்...
படித்தது எம்.ஏ., எம்.பில்., அரசு பணிக்கு செல்ல பெற்றோர் ஆசைப்பட்ட போதும் எனக்கு பிசினஸில் சாதிக்கவே ஆசையாக இருந்தது. ஆனாலும் குடும்பம், குழந்தை என வீட்டிற்குள் அடங்கிக் கிடக்கும் வாழ்க்கை தான் அமைந்தது. என் மனதில் தகித்த 'பிசினஸ்' என்ற ஆர்வத்தை கணவர் தெரிந்து சுதந்திரம் கொடுத்தார். அப்போது சிறிய அளவில் துவங்கியது தான் 'ஹோம் சேல் பொட்டிக்'. ஆனால் மாற்றி யோசிக்கும் சிந்தனையால் சிறிய பிசினஸ் என்றாலும் மும்பை, ஆமதாபாத் சென்று, தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தே 'பர்சேஸ்' செய்யும் முடிவு தான் எனக்கு கை கொடுத்தது. ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் வித்தியாசம், தரமான கலெக் ஷன்கள் ஆன்லைன் ஆர்டர் போன்ற முயற்சிகள் கை கொடுத்தன. இன்று ஆண்டுக்கு பல லட்சம் வருவாய் தரும் தொழிலாக மாற்றியுள்ளேன். நான் நடத்தும் யுடியூப் வழியே வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்கின்றன. இந்த வெற்றிக்கு பின்னணி, எனக்குள் இருந்த 'பெண்' என்ற தயக்கத்தை துாக்கியெறிந்தது தான்! தொழிலில் சாதிக்க நினைக்கும் பெண்கள், என்போல் வெற்றியாளராக வேண்டும் என்பதற்காக நான் கடந்து வந்த பாதையை ஆன்லைனில் இலவசமாக சொல்லி கொடுக்கிறேன். இளம்பெண்கள் ஆர்வத்துடன் இணைகின்றனர். அதனை பின்தொடர்ந்து பலர் சாதித்து வருகின்றனர். சக்சஸ் மந்திரத்தை பகிர்வதால் எனக்கு மனதிருப்தி கிடைக்கிறது என்கிறார் இவர். இவரை 87785 06979ல் தொடர்புகொள்ளலாம்.
=================================================================================================
டேராடூன்: மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கபிலன், வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட போதிலும், விடாமுயற்சியுடன் போராடி வென்று, ராணுவத்தில் அதிகாரியாக உயர்ந்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில், பயிற்சி முடித்த 456 புதிய ராணுவ அதிகாரிகள் அணிவகுப்பு நடந்தது. அப்போது ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. அதன் விபரம் வருமாறு: மதுரைக்கு அருகிலுள்ள மேலூரில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கபிலன். பெற்றோர் கூலி வேலை பார்த்து வந்தனர். அரசு பள்ளியில் படித்த கபிலன், தன் முயற்சியால் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அவருக்கு ராணுவத்தில் அதிகாரியாக சேர வேண்டும் என்பது தீராத வேட்கை.
அதற்காக தொடர்ந்து முயற்சித்தார். ஒவ்வொரு முறையும் அவருக்கு சோதனைகள் வந்து கொண்டே இருந்தன. அவரது தாயாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் உயிரிழந்தார். கூலி வேலை பார்த்து வந்த தந்தைக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார் தந்தை. அவருக்கு சிகிச்சை அளிப்பதுடன், குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் கபிலன். இப்படி பலப்பல சோதனைகளையும் எதிர்கொண்ட அவர், அனைத்தையும் வெற்றி கொண்டு ராணுவ சேர்க்கை தேர்வில் வெற்றி பெற்றார். டேராடூன் ராணுவ அகாடமி பயிற்சி நிறைவு விழாவில், சக்கர நாற்காலியில் வந்திருந்த தந்தை, இறந்து போன தாயாரின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படத்துடன் தன் வெற்றியை கொண்டாடினார் கபிலன். இது குறித்து, லெப்டினன்ட் கபிலன் கூறியதாவது: தைரியம் என்னை ஊக்குவிக்கிறது. நான் பல முறை தோல்வியுற்றேன். ஆனால் நான் ராணுவத்தில் சேர வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன். நான் அதைச் தற்போது செய்தேன். இது எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; இது இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. தினமும் 100 ரூபாய் சம்பாதித்த ஒரு தினக்கூலித் தொழிலாளியின் மகனான என்னைப் போன்ற ஒருவரால் அதைச் செய்ய முடியும் என்றால், அனைவராலும் முடியும். நான் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைக்குச் செல்வேன், வீடு திரும்பிய பிறகு, மாலை 6 முதல் இரவு 10 மணி வரை படிப்பேன். இவர் அவர் கூறினார். அதுமட்டுமின்றி கபிலனின் இளைய சகோதரர், இனியவன், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
============================================================================================
அச்சாயன் என்பவர், 100 வயதை கடந்த பின்னரும் இளமையாக இருக்கிறார். வீட்டில், சோம்பி உட்கார்ந்திருக்கவில்லை. கடந்த, 50 ஆண்டுகளாக, தன், 'பிரிமியர் பத்மினி' காரில், ஊர் சுற்றி வருகிறார். இந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி கூட பயன்படுத்தாமல் வெகு துாரம் கார் ஓட்டுகிறார்.
===========================================================================================
நான் படிச்ச கதை (JKC)
வேர்கள்
கதையாசிரியர்:
பா.ராமானுஜம்
கதை சிறுகதைகள்.காம் தளத்தில் இருந்து பெறப்பட்டது. .
பார்த்தேன், படித்தேன், பகிர்கிறேன். என்னுடைய கருத்துக்களை பின்னூட்டத்தில் கூறுவேன்.
சுட்டி இங்கே ====> : வேர்கள்
‘அய்யிரு செத்துப் போனதிலிருந்து
ஆறு மாசமா பெருமாளு பட்டினிதான், சாமி.
புள்ளாகோவுல்லாம் தெனப்படி நடக்குது.
பெருமா கோவுலை உட்டுட்டாங்களே!’ என்று அங்கலாய்த்தான் அளவுகார ராமசாமி நாயக்கன்.
தாத்தா வரதாச்சார், கொள்ளுத் தாத்தா சடகோபாச்சார் மற்றும் ஆசூரி பரம்பரையே
பட்டாச்சார்களாக இருந்து கைங்கர்யம் பண்ணிவந்த கருமாணிக்கப் பெருமாள் கோயிலை மூடிவிட்டார்கள்.
அர்ச்சகம் பண்ண ஆள் இல்லை. ஊரில் இருக்கும் பிராமணர்களுக்கு மனதில்லை;
வெளியிலிருந்து யாரும் வந்து செய்வதற்கும்
முன்வரவில்லை. ஏனென்றால், கோயிலுக்கு வரும்படி ஒன்றும் அதிகம் கிடையாது.
ஆகவே கோயிலை இழுத்து மூடிவிட்டார்கள்.
அவன் சாதாரண விஷயமாகத்தான் சொன்னான். நானும் சாதாரணமாகத்தான்
அசட்டையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அது விசுவரூபம் எடுத்து ஒரு பிரச்னையாக எனக்குத் தோன்றிக்கொண்டு
இருந்தது. மயூரம்பட்டி ரொம்பதான் மாறிவிட்டது.
இந்தக் கருமாணிக்கப் பெருமாளுக்கு ஒரு காலத்தில்
நடந்த சேவை என்ன, சாற்றுமறை என்ன!
சிங்கப் பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கும்,
குடைகளும் சாமரங்களும் வரும். சாற்றுமறைக்குப் பட்டு பட்டாச்சார் வருவார்.
ஆசார்யன் முதலியாண்டான் ஸ்வாமியும் எழுத்தறுளியிருப்பார்.
அப்பாவும் ராகவாச்சாரும் தடபுடல் பண்ணுவார்கள்.
தூப தீபங்கள் என்ன, வானவேடிக்கைகள் என்ன, வேதபாராயண கோஷ்டிகள் என்ன, மடைப்பள்ளியில் இருந்து புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் பிரசாதங்களின் மணம் என்ன…..!
பின்னால் திவ்யப்பிரபந்த கோஷ்டியுடனும்,
முன்னால் அங்கப்பனின் கம்பீரமான நாதஸ்வர முழக்கத்துடனும்,
உத்ஸவர் பார்த்தசாரதி பெருமாள் ஜாம் ஜாம்
என்று வீதி உலா வருவார்.
இதையெல்லாம் நான் ஏன் இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்? நான் இப்போது இங்கு வந்ததே
அனாவசியம். எனக்கு இங்கே என்ன இருக்கிறது?
அப்பா வைத்து விட்டுப்போன இந்த இடிந்து விழுந்துகொண்டிருக்கும்
வீட்டைப் பார்க்க வந்ததே அசட்டுத்தனம். கலிபோர்னிய பல்கலைக்கழகப் பேராசிரியர் மயூரம்பட்டியில் இருக்கும் தன்னுடைய சொத்தான
இந்த இடிந்துகொண்டிருக்கும் வீட்டைப் பார்க்க வந்திருப்பதை ஊர்க்காரர்கள் கூட கேலி
பண்ணிக் கொண்டு இருப்பார்கள். ஆனாலும்
இப்போதெல்லாம் எனக்கு பைத்தியக்கார எண்ணங்கள் நிறையவே தோன்றிக் கொண்டிருக்கின்றன.
அப்பா செத்துப்போன பிறகே இந்த மாதிரிதான்.
கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். முள்ளும் புதருமாக உள்ளே
நுழையவே முடியாதபடி இருந்தது. காம்பவுண்டுச்
சுவர் ஒரு பக்கம் இடிந்து விழுந்து விட்டிருந்தது. மடைப்பள்ளிச் சுவர் வீறல் விட்டு எப்போது விழலாம் என்று காத்துக் கொண்டிருந்தது.
கூடவே வந்து தொணதொணத்துக் கொண்டிருந்தான்
மருது வீராசாமி நாயக்கன். கேசவாச்சார்
போய் விட்டார்; அவர் ஆம்படையாள் கோதை
மாமிதான் இப்போது இருக்கிறாளாம். மாமா
போன பிறகும் சொந்தப் பயிர்தானாம்; கோபாலன்
வாரம் இருமுறை காரில் வந்து பயிர் பச்சையைப் பார்த்துக் கொள்கிறானாம். ஊர் தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டாகிவிட்டது. அக்ரஹாரத்தில்
கண்டவர்களும் வீடு கட்டுகிறார்களாம். தெய்வ நிந்தனை வேறு. ரங்குடு
பெருமாள் நாயக்கன் பெண்ணோடு குடும்பம் நடத்துகிறான்; கேட்பார் கிடையாது. யாருக்கும் ஊரைப் பற்றியோ கோவிலைப் பற்றியோ அக்கறை
கிடையாது…. வீராசாமி நிறுத்தமாட்டான்
போலிருக்கிறது.
எனக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? இன்னும் ஒரு வாரம். அப்புறம் நான் இந்திய மண்ணிலேயே இருக்கப் போவதில்லை. அப்பா வருஷாப்தீகத்தை முடித்துவிட்டுப் போக வேண்டியதுதான். அப்புறம் நான் உண்டு, சோயிங்கா, அரபிந்தோ, ஏ. கே. ராமானுஜன், மற்ற காமன் வெல்த் இலக்கியங்கள் உண்டு.
மருது வீராசாமி நாயக்கன் தான் இப்போது கோவிலுக்கு ‘பிட் பர்ஸன்’ முன்பெல்லாம் ‘தர்மகர்த்தா’ என்று சொல்வார்களே, அந்தமாதிரி போல் இருக்கிறது. தமிழில் தன்னை ‘தக்கார்’ என்று சொல்லிக் கொள்கிறான். கோவிலைத் திறந்து ‘சாமி’ யைக் காண்பிக்காமல் என்னை விடமாட்டானாம். திறக்கிறான்.
அதே பழைய பூட்டு தான். இந்தப் பூட்டை நானும் தினமும் திறந்ததுண்டு. பதினைந்து, பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இருக்குமா? அப்போது நான் சென்னையில் படித்துக் கொண்டு இருந்தேன். வெகேஷனுக்கு ஊருக்கு வருவேன். அப்பாதான் கோவில் அர்ச்சகர். அப்பா அர்ச்சகர் ஆனதும் தற்செயலாக நிகழ்ந்ததுதான். ஏற்கெனவே கோவில் பண்ணிக் கொண்டிருந்த ராகவாச்சார் திடீரென்று காலமாகி விட்டார். இப்போது தோன்றுகிறது, எய்ட்ஸ் மாதிரி ஏதாவது இருக்கலாம் என்று ; அவ்வளவு பிரக்யாதி அவருக்கு. அப்போது அதெல்லாம் யாருக்குத் தெரியும்? நன்றாக இருந்தவர் திடீரென்று போய் விட்டார்; பார்த்தசாரதி கூப்பிட்டுக் கொண்டான். ‘உயர்வற உயர் நலம் ….’ என்று சீமாச்சு பெரியப்பா தஸாஸிகத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆக, போய்விட்டாரா, கோவில் மூடி இருக்கக் கூடாது என்று அப்பா பண்ண ஆரம்பித்தார். பிறகு வேறு யாரும் கிடைக்காததால் அவரே நிரந்தரமாகப் பண்ண வேண்டி இருந்தது. ‘வெகேஷனில் இரண்டு மாதமும் நான் தான் கோவிலைத் திறப்பேன்; அப்பா நேரடியாக மடைப்பள்ளிக்குப் போய்விடுவார். இந்தக் கருமாணிக்கப் பெருமாளைச் சுற்றி எப்போதும் நல்ல பாம்பு உண்டு. ஆனால் எங்களுக்கு அதெல்லாம் பழக்கமாகி விட்டிருந்தது. திருப்பள்ளியெழுச்சி சொல்லிக் கொண்டு கையைத் தட்டிக் கொண்டே போய் சன்னதியைத் திறப்பேன்.
சன்னதியைத் திறக்கும்போது வீராசாமிக்கு ஏன் இப்படி கைகள் உதறுகின்றன? பயம். ஒரு சமயம் அப்பா திருவாராதனம் பண்ணிக் கொண்டு இருக்கும்போது ஏழுமலை நாயக்கன் கோவிலுக்கு வந்திருந்தானாம். அவன் தான் அப்போது பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டு. அப்பா பெருமாளுக்குக் கர்ப்பூர ஹாரத்தி பண்ணிக் கொண்டு இருக்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்துக் கொண்டிருப்பதை ஏழுமலை நாயக்கன் பார்த்துவிட்டான். இப்போது ஆழ்வாராதிகளுக்குக் கர்ப்பூரஹாரத்தி; அப்பா முன்னால் வந்து கொண்டிருக்கிறார். பாம்பும் படம் எடுத்துக் கொண்டே பின்னால் வந்து கொண்டு இருக்கிறதாம். இதோ முட்டியளவு படம் எடுத்து நிற்கிறது. ஏழுமலைக்கு வாய் வரவில்லை. வெளியில் ஓட நினைக்கிறான் ; கால்கள் எழும்பவில்லை. வேர்த்து விறுவிறுத்து அவன் சட்டை நனைந்துவிட்டது. இப்போது பலிபீடத்துக்குப் பிரசாதம் எடுத்துக் கொண்டு அப்பா சன்னதியை விட்டு வெளியே வருகிறார். பாம்பும் பின்னாலேயே வருகிறது. எப்படியோ அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வருகிறான் ஏழுமலை. துவஜஸ்தம்பத்தண்டை நின்று கொண்டு ‘பாழு …. பாம்.’ என்று உளறிக் கொட்டுகிறான். அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘உள்ளே வா’ என்று சைகை காண்பித்துவிட்டுப் பிரசாதத்தைப் பலிபீடத்தில் வைத்துவிட்டு அவர் உள்ளே போகிறார். “சாமி, பாம்பு … பாம்பு ….. வெளியே ஓடி வாங்க”, என்று சுதாகரித்துக் கொண்டு கத்தினானாம். அப்பா திரும்பிப்பார்க்கிறார்; அவர் கண்ணுக்குப் பாம்பும் தெரியவில்லை, தேளும் தெரியவில்லை. ஏழுமலை பார்க்கிறானாம், வேஷ்டிக்குப் பக்கத்தில் படம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறதாம். அதற்கப்புறம் அவன் பெருமாள் கோவில் பக்கமே வந்ததில்லை. அப்பாவிடமும் அதற்கப்புறம் பத்து அடி தள்ளி நின்று பயத்துடன் பேசுவான்.
வீராசாமி உடம்பு உதறலுடன் சன்னதியைத் திறந்து விட்டான். ஆறு மாதமாகத் திறக்காத சன்னதி. முன் பெல்லாம் நிலம், நீர் என்று வாழ்ந்து கொண்டு இருக்கும்போது கிடங்குள் முழுவதும் கதவைத் திறக்க முடியாத அளவுக்கு நெல் கொட்டியிருப்பார்கள். ஏணி போட்டு ஏறி மேலே உள்ள அந்தச் சின்னக் கதவைத் திறந்தவுடன் ‘நொய்ய்…’ என்று ஒரு சுணையும் புழுக்கமும் வந்து தாக்கும். அந்த மாதிரி ஒரு புழுக்கம் வந்து முகத்தைத் தாக்கியது. பார்த்தசாரதி தாயார்கள் சகிதம் சேவை சாதித்துக் கொண்டு இருந்தான். வஸ்திராபரணங்கள் அப்பா போவதற்கு முன்பு அணிவித்தவையாக இருக்க வேண்டும். வலது பக்கம் கண்ணன் காளிங்க நர்த்தனம்; பஞ்சலோக விக்ரகம். அதற்கப்புறம் சக்கரத்தாழ்வார், சாளக்கிராமங்கள். பின்னால் பூஞ்சைக்காளான் பூத்து மூலவர் கருமாணிக்கப் பெருமாள். ‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்…ஆச்சர்யம்; பதினெட்டு வருடங்களுக்குப் பிறகும் எனக்கு இந்தப் பழக்கம் போகவில்லை!
கோவிலைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தோம். நெருஞ்சி முட்கள் காலைக் குத்தின. அளவுகார கேசவ நாயகன் வீட்டு மண் திண்ணையில் வம்பளந்து கொண்டிருந்த கூட்டம் எழுந்து நின்று அமெரிக்காவுக்கு மரியாதை கொடுத்தது. கோதண்டம் ஓடி வந்தான். முண்டாசை அவிழ்த்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கும்பிடு போட்டான். அவன் தான் இப்போது பள்ளக் கழனியைப் பயிரிடுகிறானாம். அந்த ஒரு நிலம்தான் அப்பா வைத்து விட்டுப் போனது; மற்றதையெல்லாம் விற்று ‘தாம் தூம்’ பண்ணிவிட்டுருந்தார். விஜயந்தாளடி, தொட்டாச்சார் மானியம், ஏழாம் மேடு, மணியாரர் கழனி இவையெல்லாம் பொன் விளையும் பூமி; எல்லாம் போய்விட்டது. கோதண்டம் பள்ளக்கழனியைப் பார்க்க வருமாறு கூப்பிட்டான். பார்க்க வேண்டிய இடம்தான்; அதன் விளைச்சலில் தான் அப்பா இருந்தவரை கருமாணிக்கப் பெருமாளுக்கு நித்தயப்படி நடந்து கொண்டிருந்தது.
“அந்தப் பக்கம் வழியில்லை, சாமி; இப்படி…” கோதண்டம் முன்னே நடந்தான்.
கோடியாத்து ரங்குவின் காய்கறித் தோட்டம் இருந்த இடத்தில் இப்போது ஒரு வீடு எழும்பி இருந்தது. அந்த வீட்டைத்தாண்டி , ஒற்றைத் தெருக் கோடியைக் கடந்து, பஜனைக் கோவிலைப் பிரதிட்சணமாக வந்து, முழங்கால் அளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் தொப்பக் கால்வாயைக் கடந்து வரப்பில் ஏறினவுடன் ஏரிக்காற்று ‘ஜில்’ என்று வந்து உடம்பைக் கவ்விக் கொண்டது. கண்ணுக் கெட்டின தூரம் வரை பசுமை. ஏரிப் பாய்ச்சல், மூன்று போகம் விளையாத நிலம் அங்கு கிடையாது. தொண்டானையும் சாலையும் வைத்துக் கொண்டு ‘கவலை’ இறைக்கும் அந்தப் பழைய காட்சியைக் காணோம்; எங்கு பார்த்தாலும் பம்ப் செட்டுகள்.
அது யார் அது கீழண்டை வயலில் அண்டை கட்டிக் கொண்டிருப்பது? அம்மங்காளா அது? அவளே தான்! வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு ஒயிலாக எழுந்து நின்று உற்றுப் பார்த்தாள். பிறகு கலீரென்று சிரித்தாள். என்னத்தைக் கண்டு இப்படிச் சிரிக்கிறாள்? “என்ன வேண்டியிருக்கிறது, எப்பப் பார்த்தாலும் ஒரு தேவடியாச் சிரிப்பு சிரிச்சுண்டு!” என்று எச்சம்மா பாட்டி இவளைக் கரித்துக் கொட்டுவது ஞாபகம் வருகிறது. எச்சம்மா பாட்டி ஆயுளில் ஒரு தடவையாவது சிரித்திருப்பாளா? அது என்ன எச்சம்மா என்று ஒரு பெயர்? நாற்பத்தைந்து வயது இருக்குமா இவளுக்கு? இருக்கும். நாற்பத்தைந்து வயதில் இவள் தலையில் ஒரு முடி கூட நரைக்கவில்லை. எனக்கு முப்பது வயதில் தலை தும்பையாகி இருக்கிறது. தேக்கில் இழைத்தால் போல மழமழவென்று கால்களும் கைகளும். கருப்பு, கருப்பு, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கருப்பு. அந்தக் கருப்பில் ஒரு மினு மினுப்பு வழுக்கிக்கொண்டு ஓடியது. உடம்பிலும் அந்தப் பழைய கட்டுக்கோப்பு அப்படியே இருந்தது. ராகவாச்சாரியாரைப் பைத்தியமாக ஆட்டி வைத்த உடம்பு அல்லவா அது! கருமாணிக்கப் பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணியவர்களில் இவளிடம் மயங்கிப் போகாதவர்கள் யார்? இவளும் அதைக் கைங்கர்யமாகப் பண்ணிக்கொண்டிருந்தாளோ என்னமோ! எனக்கு ரொம்ப நாளாகத் தெரியாது. “வேட்டைக்காரத் தேவடியாளுக்கு அக்ரஹாரத்து ஆம்பிளைகள் எல்லாரிடமும் என்ன ஸ்வாதீனம் பார்!” என்றெல்லாம் அக்ரஹாரத்துப் பெண்கள் வயிற்றெரிச்சலுடன் சொல்லிக் கொள்வார்கள். அதெல்லாம் அவ்வளவாக விவரம் தெரியாத வயது. பின்னால் நேரடியாக ஒரு நாள் தொட்டாச்சார் கொல்லையில் மாங்காய் பறிக்கப் போனபோது கண்ணாலேயே பார்த்துவிட்டேன். அலறியடித்துக் கொண்டு ஓடப் போனேன். கலீர் என்று கையைக் கொட்டிக் கொண்டு சிரித்தாள். அதே சிரிப்புதான் இப்போதும் சிரிக்கிறாள்; மனது விட்டுச் சிரிக்கிற சிரிப்பு, அந்த பழைய சம்பவத்தை நினைத்துக் கொண்டாளோ என்னமோ!
“சின்னய்யிரு புள்ள பெரிசும்மே! இன்னா, மலைச்சுப் போய் அப்படிப் பாக்குறே?” என்றான் கோதண்டம்.
“எனக்குத் தெரியாதாக்கும்! அவங்க தாத்தாவே வரப்பலான்னா இருந்தது!”
கண்கள் சிட்டுக்குருவி போல மேலும் கீழும் பறந்து கொண்டிருக்க, முகத்தில் குறுகுறு என்று சந்தோஷம் பொங்கிக் கொண்டிருந்தது. எங்கிருந்து இவளுக்கு இவ்வளவு சந்தோஷம் வருகிறது?
“கண்ணாலம் கட்டிக்கிலையா, கண்ணு?” என்று புன்முறுவலுடன் கேட்டாள். ‘இல்லை’ என்று தலை அசைத்தேன்.
அகன்று விரிந்து குறுகுறுத்த அந்தக் கண்கள் திடீரென்று சிறுத்து மங்கி எங்கோ தூரத்தில் பார்த்தன. முகம் விகசித்து ஒரு சமயம் அழுது விடுவாளோ என்று தோன்றியது. பரந்து எழுந்த மார்பகம் விம்மி அடங்கி ஓர் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டது.
“அய்யிரு தெய்வமா வாழ்ந்துட்டுப் போயிட்டாரு. பெருமாளெ நெனக்காத நேரம் கெடயாது. செத்துப்போன ஒரு வாரத்துக்கெல்லாம் அந்த ரெண்டு நாகமும் எரை எடுக்காமக் கோயிலை சுத்திச் சுத்தி வந்து மடப்பள்ளி எதிரே உயிரை உட்டுதே! அந்த அதிசயம் எங்கு நடக்கும்!” பல பலவென்று கண்ணீர் உகுத்தாள்.
அம்மங்காளும் பெருமாளுக்கு நிறைய சேவை செய்திருக்கிறாள். பார்த்தசாரதிக்குப் புஷ்ப கைங்கர்யம் பண்ணுவாள். நந்தியாவட்டைக்கும், அரளிக்கும், பாரிஜாதத்துக்கும் தண்ணீர் ஊற்றுவாள். கோவிலைச் சுற்றியும் சுத்தம் செய்வாள். தனுர் மாதம் வந்து விட்டது என்றால் விடியற்காலையில் எழுந்து பெருக்கிக் கோலம்போட வந்து விடுவாள். வரக் கொஞ்சம் தாமதமாகி விட்டால், “இந்த … யை எங்கே இன்னும் காணோம்?” என்று செல்லமாக வைது கொண்டே கேட்பார் ராகவாச்சார். கார்த்திகைக்கு விளக்குக்குத் திரி திரிப்பாள். ஏரியில் விடும் தீபகலசத்துக்கு செங்கல் பொடி பண்ணிக் கொண்டு இருப்பாள். அவளை ‘வேண்டாம்’ என்று யாரும் சொன்னது கிடையாது; சொன்னாலும் அவள் கேட்கிற ஜென்மம் இல்லை. “இந்த ஊர்லே கேட்பார் பொடைப்பார் கிடையாதா? எந்த வேளையும் ஒரு வேட்டைக்காரியைக் கோவில்ல வெச்சுண்டு!” என்று கோடியாத்து வேதம் பாட்டி அரற்றிக் கொண்டு இருப்பாள். இப்போது ஒருவருடமாக அதெல்லாம் இல்லாமல் இவள் என்ன பண்ணிக் கொண்டிருப்பாள்?
“என்ன, கண்ணு, என்னமோ ரோசனை பண்ணிக்கினு இருக்கியே?”
திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தேன். “அம்மாவை நல்லா கவனிச்சுக்க, சாமி. விசாரிச்சதா சொல்லு.” சொல்லிவிட்டு மீண்டும் ஒரு புன்னகையை வீசினாள்.
கால்வாயில் சலசல வென்று ஒரே சீராக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. மோழையிலிருந்து ஒரு நீர்க்கத்தான் குட்டி வெளியே வந்து உடம்பை வளைத்து வளைத்து நீந்திக் கொண்டிருந்தது. ஒரு நண்டு அதன் பக்கத்திலிருந்து ஓர் அரைவட்டம் அடித்து விலகிச் சென்று கொண்டிருந்தது. தவிட்டுக்குருவி ஒன்று டக்கென்று ஓடும் நீரில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு உயரப் பறந்து சென்றது. நான் மேலே நகர்ந்தேன். மனது. இப்போது ஏதோ சங்கல்பம் செய்து கொண்டுவிட்டாற்போல் பிரச்னைகள் இன்றி லேசாக இருந்தது. மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது என்பது எல்லோருக்கும் வந்துவிடாது; சிலருக்குத்தான் அதைக் கடவுள் பிரசாதமாகக் கொடுத்திருக்கிறான்.
ராகவாச்சார் வேதம் படித்தவர்; நாலாயிரமும் தெரிந்தவர். அப்பாவுக்கும் நாலாயிரமும் பாடம்; கூட ஆங்கிலமும் படித்திருந்தார். வெண்கல மணியின் ‘டாண்…டாண்’ சப்தத்துடன் கலந்து, அவர்கள் இருவரும் கணீர் என்ற குரலில் பிரபந்தங்களைச் சொல்லிச் சேவை பண்ணும்போது மற்றவர்களுடன் சேர்ந்து பார்த்த சாரதியும் மெய்மறந்து நிற்பதுபோல இருக்கும்.
அப்பேர்ப்பட்டவர்கள் இந்த வேட்டைக்காரியிடம் என்னத்தைக் கண்டிருப்பார்கள் என்று நான் ஆச்சர்யப் பட்டதுண்டு. அதற்கெல்லாம் வயது வேண்டும்; நேரடி அனுபவம் வேண்டும்; கற்பனாசக்தி வேண்டும். அப்பாவும் ராகவாச்சாரும் அனாவசியமான சிந்தனைகளால் வாழ்க்கையைப் பிரச்சினை ஆக்கிக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்து சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போனவர்கள். இந்த முப்பது வயது வரை நான் கண்டது என்ன? அனுபவங்கள் இன்றிப் புத்தகங்கள் படித்துக் குழம்பிய தெளிவற்ற சிந்தனை; மேலும் சிந்தனை; குழப்பம். இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்குப் போட்டு வாழ்ந்த கொடுமையான வாழ்க்கை. அப்பாவும் ராகவாச்சாரும் தவறுகள் புரிந்து கொண்டு, சாதாரண மனிதர்களாக வாழ்ந்து கொண்டு, பார்த்தசாரதியிடம் முறையிட்டுக் கொண்டு சந்தோஷமாக இருந்தவர்கள்.
சம்பந்தம் இல்லாமல் கலீன் மக்கெல்லோவின் ‘தி தார்ன் பேர்ட்ஸ்’ ஞாபகம் வருகிறது. பிரம்மசர்யப் பிரமாணத்தை மீறிய ஜேசுவிட் பாதிரி ரால்ப், கார்டினல் விட்டோரியாவிடம் வந்து ‘கன்பெஸ்’ பண்ணுகிறார். விட்டோரியா அழகாக ஆறுதல் சொல்கிறார். “நாம் பிறக்கும்போது பாதிரிகளாகவா பிறந்தோம்? நாம் முதலில் மனிதர்கள்; பிறகுதான் எல்லாம். நீ தவறு செய்யாதவரை ‘தான்’ என்ற கர்வமும் அகம்பாவமும் உன்னிடம் இருந்தது. உன்னுடைய கர்வத்தால் லூஸிபர் ஆசைப்பட்ட அந்த இடத்தை நீயும் அடைய நினைத்தாய். இப்போது உன்னிடம் பணிவு வந்திருக்கிறது; மண்டியிட்டு இதயம் திறந்து கடவுளிடம் வருகிறாய். எல்லாம் இறைவனின் லீலா விநோதங்கள்!
“இங்க உக்காரு சாமி. ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்.” வீராசாமி படலைத் திறந்துவிட்டு தொழுவத்தை நோக்கிச் சென்றான்.
நாற்காலியில் சாய்ந்து கொண்டு தோட்டத்தைத் தாண்டி பார்வையைச் செலுத்தினேன். பெரிய குளத்து மேட்டிலிருந்து இறங்கிய மாடுகள் இரண்டும் மூன்றுமாக உள்ளே வந்து கொண்டிருந்தன. நெற்றி வெள்ளையுடன் கூடிய ஒரு கறுப்புப்பசு ‘அம்ம்….மா’ என்று குரல் கொடுத்துக் கிணற்றங்கரைக் கொட் டிலில் இருந்த தன் கன்றை நோக்கி ஓடியது. அதை அதட்டி தொழுவத்துக்கு ஓட்டிக் கட்டினான் வீராசாமி. ‘அம்பே…’ என்று அந்தக் கன்றுக் குட்டி அலறிக் கொண்டு கயிற்றை எம்பி இழுத்துக் கொண்டிருந்தது.
மனது ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி, இது என்ன வாழ்க்கை ? செய்யும் தொழிலில் மனதுக்குத் திருப்தி வேண்டும்; சந்தோஷம் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் அயலான் பாஷையில் கஷ்டப்பட்டு அரையும் குறையுமாகத் தங்களை வெளிப்படுத்திக் கொண்டதை நான் மேலும் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். ஆங்கிலத்தில் நாம் எழுதுவதே போலி; அதை மேலும் ஆங்கிலத்தில் விமர்சனம் செய்வது இன்னும் போலி. இந்த வாழ்க்கை இன்னும் எவ்வளவு நாளைக்குத் தொடர வேண்டும்?
ராமானுஜ யதிராஜ ஜீயரிடம் இன்று காலை பேசிக் கொண்டிருந்தேன். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு பரிபூரணமான, மனதுக்குத் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். முப்பது வருட அரசாங்க சேவையும், அமைதியான குடும்ப வாழ்க்கையும் கொடுக்காத நிறைவை, “இதுவோ பெரும்புதூர்? இங்கு பிறந்தோ யதிராஜர் எம்மை ஆட்கொண்டார்?” என்று பாடிக்கொண்டு ஹரிஜனங்களுக்கும் சமாஷ்ரயணம் பண்ணிக் கொண்டு, ராமானுஜரின் திருவவதாரச் சேவையை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் இந்தத் திருப்பணி இதமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
மனது அலைபாய்ந்தது. அமெரிக்காவை வெறுக்க வேண்டும் என்றால் அமெரிக்காவை அனுபவித்தாக வேண்டும் போலிருக்கிறது. அந்த வெறுப்புதான் கருமாணிக்கத்திடம் என்னைத் திருப்புகிறதா? ஜே.கே. சொல்வது போல, ஒரு பிசாசிடம் இருந்து தப்பி ஓடி இன்னொன்றிடம் சரண்புகுவது போல! ஆனால் இந்தக் குளிர்ச்சியும், இதமும், மனதைத் தொடுகின்ற தண்மையும் இதுவரை அனுபவித்திராத உணர்ச்சிகள். ரூட்ஸ்! ரூட்ஸ்! அவை கட்டாயம் இருக்கின்றன. ரூட்லஸ்னஸ் என்பது என்னுடைய லெக்சர்களில் நான் இதுவரை கேலி செய்துகொண்டிருந்த ஒரு வார்த்தை….ஆனால் வேர்களை இழக்கும்போதுதான் வேர்களின் அவசியத்தை உணர முடிகிறது. இழக்கவில்லை; இழந்திருக்கமுடியாது. இப்போதுதான் வேர்கள் மறு உயிர் பெற்று மண்ணில் பரவி இறுகப் பற்றி… சரி, இவற்றுக்கெல்லாம் வார்த்தை வடிவம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பானேன்? கருமாணிக்கம், அப்பா, அம்மங்காள், இவற்றோடு கூட நெற்றி வெள்ளையுடன் கூடிய அந்தக் கருப்புப் பசுவும் கன்றும் தோன்றித் தோன்றி மறைகின்ற காட்சிகள். “எஸ்கேபிசம்…’ ‘கம்பேக்’ என்ற பெயர்களுக்கு பயப்படுவானேன்? என் மனதுக்குத் திருப்தியான காரியத்தைத் தான் நான் செய்யப் போகிறேன். அது என்னுடைய சொர்க்கமோ, நரகமோ எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். வாழ்க்கையில் முதல் முறையாக சுதந்திரமாக எடுக்கும் முடிவு. பிராய்டு சொன்னது உண்மைதான்: “யு காண்ட் பி எ மேன் அன்டில் யுவர் பாதர் இஸ் டெட்!”
“அம்மா …மா!
நெற்றி வெள்ளையுடன் கூடிய அந்தக் கறுப்புப் பசு கிணற்றங்கரைக் கொட்டிலில் கட்டியிருந்த தன் கன்றைப் பார்த்துக் குரல் கொடுத்து அலறியது. கயிற்றை ஜிம்பி இழுத்துப் போராடிக் கொண்டிருந்த அந்தக் கன்றை அவிழ்த்துவிட்டான் வீராசாமி அது வாலைத் தூக்கிக் கொண்டு நான்கே எட்டில் பாய்ந்து வந்து தன் தாயின் மடியை முட்டிக் குடிக்க ஆரம்பித்தது.
நான் எழுந்திருந்தேன்.
– கணையாழி, செப்டம்பர் 1989
பா.ராமானுஜம்
பா.ராமானுஜம் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதுபவர்; சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை இரண்டு மொழிகளிலும் செய்தவர். இவரது படைப்புகள் கணையாழி, ஆனந்த விகடன், சொல்வனம், திண்ணை ஆகிய தமிழ் இதழ்களிலும், ஸ்பான், இந்தியன் லிட்டரேச்சர் (சாஹித்ய அகாதெமி) தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியன் ரெவியூ, டெக்கன் க்ராநிக்கல் ஆகிய ஆங்கில இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
தெலுங்கு-ஆங்கிலம் மொழிபெயர்ப்புகளுக்கு (நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு) பதிப்பாசிரியராகவும், பல வருடங்கள் ஓர் ஆங்கில நாளிதழுக்கு பத்தியாளராகவும் இருந்திருக்கிறார்.
ஆங்கிலத்தில் 23 புத்தகங்களும், 500க்கும் மேற்பட்ட பத்திரிகைக் கட்டுரைகளும் ஏராளமான ஆராய்ச்சிக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
ஆந்திரா லயோலா கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து 2013ல் ஒய்வு பெற்ற இவர், பதினோரு வருடங்களாக வேறு ஒரு கல்லூரியில் இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த நாற்பது வருடங்களாக விஜயவாடாவில் வசித்து வருகிறார்.
மின்னஞ்சல் : partharamanujam@gmail.com
வலையகம்: https://partharamanujam.weebly.com/
நன்றி : sirukathaigal.com
women empowerment ற்கு உதாரணம் முதல் செய்தி.
பதிலளிநீக்குகபிலன் அவரது வீடியோவைப் பார்த்திருக்கிறேன். ஈசன் டெல்டா ஸ்க்வாட் சானல் - அவர் பெயர் டக்கென்று நினைவுக்கு வரலை....இவரும் இராணுவத்தில் பணி புரிந்தவர் இப்ப பயிற்சி கொடுத்துவருகிறார். அவரது சானலில் கபிலன் பற்றி பார்த்தேன். அதில் கபிலன் சொல்லியிருந்த ஒரு விஷயம், நம்ம தமிழ்நாட்டு இளைஞர்கள் ஏன் இப்படி இருக்காங்கன்னு தோன்றியது.
கீதா
அச்சாயன் அவரைப் பற்றிய செய்தி வியப்பும் பிரமிப்பும்
பதிலளிநீக்குகீதா
கதை எழுதிய விதம் பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் வேலை செய்யும் மகன் தன் தந்தையின் மரணச் சடங்குகளைச் செய்ய வந்திருப்பவனின் பழைய நினைவுகள், தற்போதைய வாழ்க்கையையும் ஊரின் வாழ்க்கையையும் நினைத்து எண்ணங்கள் ஓடுவதை கதாசிரியர் அழகா சொல்லியிருக்கிறார்.
பதிலளிநீக்குஇடையில் கொஞ்சம் சுஜாதா எட்டிப் பார்க்கிறாரோ?
ஆனால் என்னவோ மிஸ்ஸிங்க். ஜஸ்ட் கதாபத்திரத்தின் எண்ணங்கள் மட்டும் விவரிக்கப்பட்டிருக்கிறது. கடைசியில் கதாபாத்திரம் என்ன முடிவு செய்கிறார் என்ற கேள்வி? மீண்டும் ஊருக்குத் திரும்பிவிடலாம் என்றா?
இப்படி வெளிநாட்டில் வாழ்பவர்கள் ஒரு சிலருக்கு, லீவிலோ, ஏதேனும் காரியத்திற்காகவோ ஊருக்கு வரும் போது இப்படியான சஞ்சலங்கள் ஏற்படுவதுண்டு.
கதையில்.....
//அப்பேர்ப்பட்டவர்கள் இந்த வேட்டைக்காரியிடம் என்னத்தைக் கண்டிருப்பார்கள் என்று நான் ஆச்சர்யப் பட்டதுண்டு. //
அப்பாவும் ராகவாச்சாரும் தவறுகள் புரிந்து கொண்டு,//
தவறு செய்வது என்பது மனித இயல்பு. இயல்பான தவறுகள். ஆனால் முதல் வரி எதையோ சொல்கிறதோ? கைங்கர்யம் செய்பவர்கள்? மறைமுகமாகச் சொல்லியிருக்கிறாரா?
கீதா
“எஸ்கேபிசம்…’ ‘கம்பேக்’ என்ற பெயர்களுக்கு பயப்படுவானேன்? என் மனதுக்குத் திருப்தியான காரியத்தைத் தான் நான் செய்யப் போகிறேன். அது என்னுடைய சொர்க்கமோ, நரகமோ எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். வாழ்க்கையில் முதல் முறையாக சுதந்திரமாக எடுக்கும் முடிவு. //
பதிலளிநீக்குதிரும்பிச் செல்லப் போகிறாரா? அவருக்குப் பிடித்ததைச் செய்வதாக வாசகர்களின் ஊகத்திற்கு விட்டிருக்கிறாரோ?
//பிராய்டு சொன்னது உண்மைதான்: “யு காண்ட் பி எ மேன் அன்டில் யுவர் பாதர் இஸ் டெட்!”//
அறிந்த வரி. இது எனக்கு மிகவும் பிடித்த வரி.
அப்பா தனக்குப் பிடித்ததைச் செய்தது போல கதாபாத்திரமும் செய்ய நினைக்கிறார் போலும் ஆனால் அது என்ன என்பது வாசகர்களின் ஊகத்திற்கு என்றே தோன்றுகிறது.
மன சஞ்சலங்களை அதுவும் ஊரோடான நம் உணர்வுகளினால் தவிப்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
கீதா
கதையை வாசித்து வரும் போதே ஆசிரியரின் வாசிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியதோடு ஆசிரியர் பற்றிய குறிப்பைப் பார்த்த போது புரிந்தது. ஆங்கில இலக்கிய ஆசிரியர் என்பது. குறிப்புகள் பிரமிப்பை ஏற்படுத்தியது.
பதிலளிநீக்குகீதா
அது என்ன எச்சம்மா என்று ஒரு பெயர்?//
பதிலளிநீக்குதெரியவில்லை என்றோ அல்லது இதற்கான ஒரு சிறு வரி இருக்கும் என்று பார்த்தால், அம்மங்காளுக்குச் சென்றுவிட்டார்...
கீதா
லட்சுமி-எச்சுமி, லட்சுமியம்மா- எச்சம்மா என்று கூப்பிடுவது வழக்கம்
நீக்குஅச்சாயன் கார் ஓட்டுவது பற்றி.
பதிலளிநீக்குஅச்சாயன் என்பது ஒரு பொது விளிப்பெயர். பாட்டா என்பது போல. கோட்டயத்தில் ரோட்டில் அச்சாயா என்று கூவினால் 5 பேராவது திரும்பிப் பார்ப்பார்கள்.
புதுப்பிக்காத டிரைவிங் லைசென்ஸ் வைத்துக்கொண்டு கார் ஓட்டுவது தவறு. 70 வயதிற்கு லைஸென்ஸ் புதுப்பிக்க நிறைய கண்டிஷன் உண்டு.
Jayakumar
அச்சாயன் என்பது மலையாள இலக்கியத்திலும் எழுத்துகளிலும் (குறிப்பாக கேரளத்தின் மத்திய பகுதில்) சினிமாக்களிலும் அதிகம் வரும் சொல் என்பதோடு அது ஒரு தரவாட்டில் பரம்பரை பரம்பரையாக ஒரு அதிகாரத்தில் இருக்கும் ஆளுமையான பெரியவரைக் (patriarchy) குறிப்பிடுவது இல்லையா....கூடவே அச்சாயன்ஸ் என்று ஒரு க்ரைம் த்ரில்லர் படமும் வந்ததே வருடம் மறந்து விட்டது...மற்றொரு பழைய மலையாளத் திரைப்படம் அச்சமக்குகுட்டியுடெ அச்சாயன் நகைச்சுவைப்படம் உண்டே.
நீக்குகீதா
கீதா
தொழிலில் முன்னேற்றம் கண்டவர்களை வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குநூறு வயதில் கார் ஓட்டுபவர் இவ் வயதிலும் திடகாத்திரம் அதிசயிக்க வைக்கிறார்.
கதை நன்றாக உள்ளது. ஊரைக் பார்த்ததும் அவரின் மனநிலை மீண்டும் செல்வதா ?இங்கேயே தங்கி விடுவதா ?என்ற கேள்விக்குறிகள் எல்லோருக்கும் ஏற்படுவது போல.
ஆசிரியரின் எழுத்து நடை நன்றாக உள்ளது. நல்லதோர் கதைப் பகிர்வு.
பதிலளிநீக்குஜீவி15 டிசம்பர், 2024 அன்று 4:53 AM
//கதையை எபி வாசகர்களுக்கு வாசிக்க முதலில் கொடுத்து விட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் வாசிப்பு அனுபவத்தில் தாங்கள் நினைப்பதைச் சொல்லலாம் இது அவர்கள் தனித்த வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும். அப்பப்போ அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் அவர்கள் பின்னூட்டங்களில் உங்கள் கருத்தைச் சொல்லி கலந்து கொள்ளலாம்..நீங்கள் கதையை வெளியிடும் போதே உங்கள் தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை வெளியிடும் பொழுது அவர்கள் தனித் தனியே கதையில் ஆழும் தனித்த ஈடுபாடு தவிர்க்கப் படுகிறது. சனிக்கிழமை கதை வாசிப்பு ஒரு பயிற்சிக் களமாக எபி வாசகர்களுக்கு இருக்கும் என்கிற என் நல்லெண்ணம் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது.
நானும் பேசாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். இருந்தாலும் ஆடத்தெரிந்த கால்களுக்கும் பாடத்தெரிந்த வாய்க்கும் பாட்டோசையைக் கேட்டால்
சும்மா இருக்க முடியாது வெளிப்பட்டு விடுகிறது. .
இனி என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி.//
இந்த கருத்தை இன்று இப்பதிவில் செயல்படுத்தினேன். கீதா ரங்கன், மாதேவி தவிர யாருமே எட்டிப்பார்க்கவில்லை, ஜீவி சார் உட்பட. நானும் ஒன்றும் சொல்லவில்லை.
ஆக இன்றைய கதை பதிவு சோ சோ. உப்பு காரம் இல்லாதது.
Jayakumar
வணக்கம் சகோதரரே
நீக்குஇதோ நானும் வந்து கொண்டேயிருக்கிறேன். காலை வழக்கப்படி வர இயலாமல் கண்களில் இந்த அதிகப்பனியினால் வலி வேதனையாக இருந்தது. பிறகு சில வீட்டு வேலைகள் கைகளை கட்டி விட்டன. மதியம் கண்களின் உபத்திரவத்தால் சிறிது அதிகப்படியான ஓய்வு எனப் போய் விட்டது. இப்போதுதான் கைப்பேசியை எடுத்து வைத்துக் கொண்டுள்ளேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. நல்ல உள்ளமும், நல்ல முயற்சிகளும் செய்து பலனடைந்த நல்லவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
இன்றைய கதைப் பகிர்வு மிக நன்றாக உள்ளது. மார்கழி மாதத்திற்கு உகந்த பெருமாள் கதை. கோவில் மூடியிருந்தாலும், கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அந்த பெருமாளை மானசீகமாக நினைக்க வைக்கும் கதை.
கதாசிரியரின் ஒவ்வொரு வரிகளும், அந்த கிராமத்தையும், அழகான பாரம்பரியமான கோவிலையும், அதன் நிலைப்பாடுகளையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. அருமையான கதை ரசித்துப் படித்தேன்.
செய்யும் செயலில் மனதை ஒருமுகப்படுத்துவது கடினமான காரியம். ஆனால், அதை ஒழுங்காக செய்தால் மனதிற்கு இறுதி வரை இனம் புரியாத ஆனந்தம் கிடைக்கிறது. அந்த சந்தோஷத்திற்கென்ற ஒரு எல்லையை இறைவன் ஒருவனால்தான் எவருக்கும் தர முடியும். அதைப் பெறும் பாக்கியமும் சிலருக்குத்தான் கிடைக்கிறது. அதுதான் பூர்வ ஜென்ம புண்ணியம். இவைதான் வாழ்வியலின் நிதர்சனங்கள். இறுதி முடிவை கதாசிரியர் தாயையும் கன்றையும் உதாரணமாக காட்டி நம் மனதிற்கே புரிய வைக்கும்படி தந்த விதம் நன்றாக உள்ளது. நல்லதொரு இன்று கதையை படிக்கத்தந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
பதிலளிநீக்குசக்சஸ் மந்திரம் தொழில் செய்ய நினைக்கும் அனைத்து பெண்களுக்கும் உதவும்.
பதிலளிநீக்குஇராணுவத்தில் விடாமுயற்சியால் சேர்ந்த கபிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் ஒரு கதை இருக்கும், இவரின் வாழ்க்கை குறிப்பு அனைவருக்கும் பாடம்.
100 வயதிலும் கார் ஓட்டி செல்லும் முதியவரின் மன உறுதி பாராட்டபடவேண்டிய விஷயம்.
மேலை நாட்டில் சக்கர நாற்காலியில் வருபவர்களும் தனியாக கார் ஓட்டி வருகிறார்கள்.
கதை நன்றாக இருக்கிறது சந்திர சேகரன் சாருக்கு நன்றி.
பதிலளிநீக்குகதை எண்ணஓட்டத்தில் இருக்கிறது.
அந்தக்கால பெரியவர்களை விமர்சனம் செய்கிறது.
கோவில் , ஊர் , ஊர் மக்கள் என்று அனைவரை பற்றியும் சிந்தித்து கொண்டு இருக்கிறார். அவர் மன நிலை சொந்த ஊரில் தங்கி விடுவார்போல தெரிகிறது.
ஆசிரியர் குறிப்பும் படித்து ஆசிரியரைபற்றி தெரிந்து கொண்டேன்.