திங்கள், 2 டிசம்பர், 2024

"திங்க"க்கிழமை   : ஷாஹி துக்கடா - மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

 ஷாஹி துக்கடா

பிரெட்பால்சர்க்கரைநெய் கலந்த வட இந்திய இனிப்பு இது!! மொகலாய அரசவைகளில் இது பரிமாறப்பட்டதால் royal bite என்ற பொருள் கொண்ட SHAHI THUKDE என்று அழைக்கப்பட்டது.. iஉத்தரப்பிரதேஷ் மாநிலத்தின் பிரபலமான இனிப்பு என்றாலும் மொகலாய அரசர் பாபரால் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் ஹைதராபாத் மாநிலத்திலும் பாகிஸ்தான் நாட்டிலும் முக்கியமான தருணங்களில் இந்த இனிப்பு செய்து கொண்டாடுகிறார்கள். இதை இங்கே அதிகமாக யாரும் செய்வதில்லை. ஆனால் இப்போது தமிழ் நாட்டிலும் இந்த இனிப்பு பரவி விட்டது. ஆனாலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட இதை முறையாக செய்வதில்லை. கவனமாக செய்து விட்டால் இதைப்போல் சுவையான இனிப்பு வேறெதுவும் இல்லை. இப்போது செய்முறைக்கு போகலாம்!!

தேவை;

பிரெட் ஸ்லைஸ்கள்-6

பால்- 1 லிட்டர்

ஏலப்பொடி- 1 ஸ்பூன்

குங்குமப்பூ எஸ்ஸென்ஸ்- சில துளிகள்

குங்குமப்பூ- அரை ஸ்பூன்

சீனி-300 கிராம்

நெய்- 200 கிராம்

பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு துகள்கள்-2 மேசைக்கரண்டி

செய்முறை:







பிரெட் துண்டுகளை ஓரங்கள் நறுக்கி பின் குறுக்காக நறுக்கி வைக்கவும்.

ஒரு அகன்ற குழியான தோசைக்கல்லில் ஓரளவு நெய் ஊற்றி சில பிரெட் துண்டுகளை போட்டு இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது போல நெய் ஊற்றி ஊற்றி எல்லா பிரெட் துண்டுகளையும் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.

கண்டென்ஸ்ட் மில்க் போல கெட்டியாக அரை லிட்டர் பாலை சுண்டக்காய்ச்சவும்..

அதில் ஏலப்பொடியும் சில துளிகள் குங்குமப்பூ எஸ்ஸென்ஸையும் கலந்து வைக்கவும்.

சீனியை கம்பிப்பாகு காய்ச்சவும்.

பாக்கியுள்ள அரை லிட்டர் பாலை குங்குமப்பூ சேர்த்து 10 நிமிடங்கள் காய்ச்சி ஓரளவு சுண்டியதும் சில துளிகள் குங்குமப்பூ எஸ்ஸென்ஸ் சேர்த்து சூடாக வைத்திருக்கவும்.

உயரம் குறைவான ஒரு அகன்ற மைக்ரோவேவ் கண்ணாடி பாத்திரத்தில் பிரெட் துண்டுகளை நன்கு பொருந்துமாறு அடுக்கி வைக்கவும்.

பிறகு அதில் குங்குமப்பூ பாலை பரவலாக ஊற்றி சில நிமிடங்கள் HIGHல் மைக்ரோவேவ் செய்யவும். பாலை முழுவதுமாக பிரெட் துண்டுகள் உறிஞ்சிக்கொள்ளும் வரை இடைவெளி விட்டு விட்டு சூடாக்கவும்.

இதற்கு மைக்ரோவேவ் அவனில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் HIGHல் வைகக் வேண்டியிருக்கும்.

இப்போது பிரெட் மீது பரவலாக சீனிப்பாகை ஊற்றி 5 முதல் 6 நிமிடங்கள் வரை பிரெட் பாகை முழுவதுமாக உரிஞ்ச HIGHல் வைத்து சமைக்கவும். சில சமயம் மேலே பிரவுன் கலராக மாறினால் ஒரு தோசை திருப்பியால் பிரெட் துண்டுகளை திருப்பிப்போட்டு சமைக்கவும்.

இப்போது வெளியே எடுத்து கெட்டியான பாலை பரவலாக சமமாக ஊற்றி பிஸ்தா துகள்களைத்தூவி மீண்டும் உள்ளே வைத்து HIGHல் ஒரு நிமிடம் சமைக்கவும்.

ஆறிய பிறகு துண்டுகள் செய்யவும்.

சுவையான ஷாஹி துக்கடா தயார்!!

12 கருத்துகள்:

  1. மனோ அக்கா சூப்பரான குறிப்பு அருமையா வந்திருக்கு. நீங்க சொல்லியிருப்பது போல் கவனமா கரெக்ட்டாசெய்தால் குழையாமல், பீஸ் எடுப்பது போல் நன்றாக வரும்.

    இன்றைய திங்க தலைப்பைப் பார்த்ததுமே drooling மற்றும் நான் செய்த அனுபவங்கள் பழைய நினைவுகள். இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் வந்தது அதில் ஷாஹி துக்கடாவும் இருந்தது. எனக்கு உடனே செய்யலாமா என்ற ஆசை வந்தாலும் வேண்டாம் யாரும் வீட்டில் இனிப்பு சாப்பிடுவதில்லை. சமீப வருடங்களில் செய்யாததால் இப்ப மீண்டும் உங்கள் குறிப்பு பார்த்ததும் நினைவுக்கு வந்தது மனதை அடைக்கி வைத்துக் கொள்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பல வருடங்களுக்குமைக்ரோவேவ் இருந்த காலத்திலும் செய்ததுண்டு. முதல் முறை செய்தப்ப பால் கொஞ்சம் அதிகமாகி, சுவை நன்றாக இருந்தாலும் துண்டுகளை எடுப்பது சிரமமாகிவிட்டது. அதன் பின் சரியாக வந்தது.

    மைக்ரோவேவ் பழுதடைந்த பின் வாங்கவில்லை. அகலமான கொஞ்சம் அடிகனமான பாத்திரம் அடுப்பில் வைத்துச் செய்திருக்கிறேன், ஆனால் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் அடுப்பில் செய்யும் போது. கொஞ்சம் பிரச்சனையாக இருந்தது. அடிப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம்

    எனவே நன்றாக நெய்யில் டோஸ்ட் செய்த ப்ரெட் வடிவங்களை சர்க்கரைப் பாகில் தோய்த்து தட்டில் பரத்தி அதில் இந்தக் கெட்டிப் பாலை (ராப்ரி என்றும் சொல்வாங்களே) அதன் மேல் விட்டு பருப்புகளை மேலே தூவியும் செய்ததுண்டு.

    நீங்க சொல்லியிருப்பது போல் ஹைதராபாதில் இதைச் செய்கிறார்கள் பெரும்பாலான இப்படியான செய்முறைகள் ஹைதராபாத் செய்முறைகளில் பார்க்கலாம்.

    ஹைதராபாத் கராச்சி பேக்கரியில் இதைப் பார்க்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. படிக்கும்பொழுதே நாவெல்லாம் திதிக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
    ஒரு மாதம் காணாமல் போனவள் திரும்பி வந்து இருக்கிறேன், எல்லோரும் நலமா?
    இனி தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஷாஹி துக்கடா செய்முறை நன்றாக இருக்கிறது. பார்க்கவும் அழகு.
    ருசியும் அருமையாக இருக்கும். படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. இன்றைக்கு எனது குறிப்பை வெளியிட்டுளதற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!!

    பதிலளிநீக்கு
  7. இனிய கருத்துரைகள் அளித்து பாராட்டியும் பின்னூட்டமளித்ததற்கு அன்பு நன்றி கீதா!
    நானும் வீட்டில் எல்லோருமே இனிப்பு அதிகம் சாப்பிடுவதில்லை! பிறந்த நாள், திருமண நிறைவு நாள் இப்படி வரும்போது அவசியம் இனிப்பு செய்வதுண்டு. அப்போது தான் இந்த ஷாஹி துக்கடா, ரச மலாய், குலோப்ஜாமூன், பால் கொழுக்கட்டை இதெல்லாம் செய்வேன்!!

    பதிலளிநீக்கு
  8. இனிப்பாய் பின்னூட்டம் அளித்ததற்கு அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!

    பதிலளிநீக்கு
  9. ரசித்துப்பாராடியதற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

    பதிலளிநீக்கு
  10. மிக அழகாக, ஈசியான ரெசிப்பியாக இருக்கிறது ஷாஹி துக்கடா... மனோ அக்கா...

    பதிலளிநீக்கு
  11. அழகிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி அதிரா!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!