சனி, 14 டிசம்பர், 2024

Positive மற்றும் நான் படிச்ச கதை

 

லண்டன்: இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் சிறுவன் கிரிஷ் அரோரா, 10 வயதில், அறிவியல் மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் நுண்ணறிவு திறனை (ஐ.க்யூ) விட அதிகம் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  அறிவியல் மேதைகளாக கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங் ஆகியோரின் நுண்ணறிவு திறன் (ஐ.க்யூ) அளவீட்டு எண் 160 ஆக இருக்கும். இதனை மிஞ்சும் விதமாக பிரிட்டன் நாட்டின் மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 10 வயதே ஆன இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் சிறுவன் கிரிஷ் அரோராவின், ஐ.க்யூ., அளவீட்டு எண் 162 ஆக அளவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.   



இவ்வளவு ஐ.க்யூ அளவீட்டை பெற்றதால் கிரிஷை அறிவாளிகள் மட்டுமே படிக்கும் மென்சா பள்ளியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பிரிட்டனில் மிகவும் உயர்ந்த பள்ளியாகக் கருதப்படும் ராணி எலிசபெத் பள்ளியிலும் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக கிரிஷ் அரோரா கூறுகையில், ''ஐ.க்யூ தேர்வுகளில் நடத்தப்பட்ட 11க்கும் மேற்பட்ட தேர்வுகள் எளிதாக இருந்தன. புதிய பள்ளியில் சேர்ந்து படிக்க ஆர்வமாக இருக்கிறது. அங்கு எனக்கேற்ற பாடங்கள் இருக்கும் என நம்புகிறேன்.  எனக்கு ஆரம்பப் பள்ளி சலிப்பாக இருக்கிறது. அங்கு நாள் முழுக்க எளிமையான கணக்கு அல்லது சும்மா ஒரு பத்தி (பாரா) மட்டும் எழுதச் சொல்கிறார்கள். அது போர் அடிக்கிறது. எனக்கு அல்ஜீப்ராவில் தான் அதிக விருப்பம். புதிய பள்ளியில் அதைச் செய்ய முடியும் என நம்புகிறேன்'' என்றார்.  இசையிலும் 'கில்லி'  கிரிஷ் அரோரா, படிப்பு மட்டுமல்லாமல் இசையிலும் அலாதி பிரியமாக இருந்துள்ளார். வெறும் 6 மாதங்களில் நான்கு கிரேடுகளை முடித்து, டிரினிட்டி இசைக் கல்லூரியின் 'ஹால் ஆப் பேம்'ல் இடம் பிடித்துள்ளார். தற்போது பியானோவில் 7 கிரேடுகளை முடித்துள்ளார்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

கப்பலை காப்பாற்ற துணிச்சலான செயல்பாடு: இந்திய கேப்டனுக்கு சர்வதேச விருது!

லண்டன்: சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ.,) சார்பில் வழங்கப்பட்ட, அசாதாரண துணிச்சலுக்கான விருதை, இந்திய கேப்டன் அவிலாஷ் ராவத் பெற்றுக் கொண்டார்.  நேற்று ( 3-12-24) மாலை லண்டனில் உள்ள ஐ.எம்.ஓ., தலைமையகத்தில் இந்த விருது வழங்கப்பட்டது.  மர்லின் லுவாண்டா என்ற வணிக கப்பலின் கேப்டனாக அவிலாஷ் ராவத் பணியாற்றி வந்தார்.இந்த கப்பல், ஜனவரி மாதம் 84 ஆயிரம் டன் நாப்தா பாரம் ஏற்றிக்கொண்டு செங்கடல் வழியாக சென்றபோது, பயங்கரவாதிகளால் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலின் சரக்கு இருப்பு பகுதியில் தீப்பற்றிக் கொண்டது.  தீயை அணைக்கவும், கப்பலை காப்பாற்றவும், அவிலாஷ் ராவத் தலைமையிலான கப்பல் பணியாளர்கள், நான்கரை மணி நேரம் கடலில் போராடினர். அதன்பிறகே, அவர்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் கடற்படை கப்பல் உதவி கிடைத்தது.  உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், கப்பலை காப்பாற்ற போராடிய குழுவினரை கவுரவிக்கும் நோக்கில் இந்த விருது அவிலாஷ் ராவத்துக்கு வழங்கப்பட்டது.  இந்த கப்பலின் பாதுகாப்புக்காக விரைந்து செயல்பட்ட இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் குழுவின் கேப்டன் பிரிஜேஷ் நம்பியார் உள்ளிட்டோருக்கும் பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பேசிய அவிலாஷ் ராவத், ஆபத்தில் உதவிய இந்தியா, பிரான்ஸ், அமெரிக்க கடற்படைகளுக்கு நன்றி தெரிவித்தார். செங்கடல் வழியாக கப்பல் அனுப்புவதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

=======================================================================================

அரசு பள்ளி மாணவியின் கோரிக்கை ஏற்று இலவச பஸ் இயக்கி வைப்பு

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்ஷிணி. இவர் அனந்தமங்கலம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர், சமீபத்தில் தனியார் 'டிவி' பாட்டு போட்டியில் பங்கேற்றபோது, பள்ளிக்கு சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என தெரிவித்தார்.  இது முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதன் பேரில், அம்மனம்பாக்கம் - அனந்தமங்கலம் இடையே இலவச அரசு பஸ் இயக்க உத்தரவிட்டார்.  அதையடுத்து நேற்று அம்மனம்பாக்கம் - அனந்தமங்கலம் இடையே பஸ் போக்குவரத்தை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அமைச்சர், மாணவியுடன் அனந்தமங்கலம் அரசு பள்ளி வரை பஸ்சில் பயணித்தார்.  விழுப்புரம் வடக்கு தி.மு.க., செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஓலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் உடனிருந்தனர்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


சிங்கப்பூர்: செஸ் உலகின் இளம் சாம்பியன் ஆகி சாதனை படைத்தார் இந்தியாவின் குகேஷ். உலக சாம்பியன்ஷிப் தொடர் கடைசி சுற்றில் டிங் லிரெனை வீழ்த்தினார்.  இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 55. ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் (2000, 2007, 2008, 2010, 2013) பட்டம் வென்றார். தற்போது ஆனந்துக்குப் பின் உலக சாம்பியன் ஆன இரண்டாவது இந்தியர் ஆனார் குகேஷ்.  கடைசி சுற்றில் வெற்றி பெற்றதும், சிறிது நேரம் அமைதியாக இருந்தார் குகேஷ். பின் உலக சாம்பியன் ஆன உற்சாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார் குகேஷ். செஸ் போர்டை தொட்டு வணங்கினார். பின் அங்கிருந்த தனது தந்தையை கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 

நான் படிச்ச கதை (JKC)

 

வேட்டை- யூமா வாசுகி

(படத்திலிருப்பவர்  JKC அல்ல).

ஆசிரியர் யூமா வாசுகி பற்றிய குறிப்பு 

இயற்பெயர் தி. மாரிமுத்து. புனை பெயர் யூமா வாசுகி. பிறப்பு திருவிடைமருதூர் (1966). சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். கும்பகோணம் நுண் கலைக் கல்லூரியில் (fine arts college) ஐந்தாண்டு பட்டய படிப்பு. 

கவிஞர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், ஓவியர், சிறுவர் இலக்கிய படைப்பாளர், பதிப்பாளர், இதழாளர், என்று  பலதுறைகளில்  பணியாற்றியவர். இரண்டு சாஹித்திய அகாடமி விருதுகள் பெற்றவர். 

ஓ வி விஜயனின் கசாக்கின்ற இதிகாசம் என்ற நாவலை தமிழில் மொழி பெயர்த்தமைக்கு 2017 இல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். சிறார் இலக்கியப்படைப்புக்காக 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி பாலபுரஸ்கார் விருது பெற்றார். சாகித்ய அகாதமிக்காக மலையாளச் சிறுகதைகளை மொழியாக்கம் செய்து 'ஸ்ரீராமன் கதைகள்' என்ற பெயரில் வெளியிட்டார். 

கணையாழி, தாமரை, புதிய பார்வை, சொல் புதிது, ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இருந்தவர். தினமணி ‘சிறுவர் மணி’ வார இதழின் பொறுப்பாசிரியர்.  ‘உங்கள் நூலகம்’ மாத இதழ் மற்றும் ‘வண்ண நதி’ என்ற சிறார் மாத இதழின் பொறுப்பாசிரியர். மேலதிக விவரங்களுக்கு

முன்னுரை 

பலரும் அறியாத சமுதாயங்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றை நன்றாக கற்று அவற்றின் அடிப்படையில் கதை எழுதியவர்கள் ஒரு சிலரே. இருதயநாத்,  ராஜம் கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக  யூமா வாசுகி யையும் இவ்வரிசையில் சேர்க்கலாம். குடகு மலை வாழ் மக்களாகிய கொடவர்கள் பற்றிய கதை தான் ‘வேட்டை’ என்ற இச்சிறுகதை.  கொடவர்கள் வீரம் மிக்கவர். வேட்டை பிரியர். மதுப் பிரியர். பன்றி இறைச்சியில் விருப்பம் உள்ளவர். தன்மானம் மிக்கவர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 

‘வேட்டை’ என்ற இச்சிறுகதை ஒரு ஒருதலைக்காதல் கதையாகும்.  கதை நிறைய கொடவர்களின் குணம், பழக்க வழக்கங்கள் போன்றவை, ஒரு கல்யாணம் மூலம் விவரமாக சொல்லப்படுகிறது. ஆனால் கதையின் எதிர்பாராத கடைசி முடிவு தான் திகில் ஊட்டுகிறது. அந்த காரணத்தினால் தான் எஸ்ரா இக்கதையை சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக தேர்ந்திருக்கிறார் என்பது என் அனுமானம். 

கதை நீண்ட கதை. கதையின் சுட்டி கீழே தந்திருக்கிறேன். அழியா  சுடர்கள், மற்றும் சிறுகதைகள்.காம் ஆகிய தளங்களில் உண்டு. 

இங்கு கதையின்  முக்கிய நிகழ்வுகள் விடுபடாமல் கதை சுருக்கமாக தரப்பட்டிருக்கிறது  முழுக் கதையையும் சுட்டியில் சென்று வாசிப்பது நன்று. 

குறை சொல்லாவிட்டால் எப்படி விமரிசகன் ஆவேன்? . ஆசிரியர் கதைப்போக்கை நிகழ், மற்றும் கடந்த சம்பவங்களைக் கலந்து எழுதி  சில பல குழப்பங்களை உண்டாக்குகிறார். கதையை படிக்கும் போது எது பிளாஷ் பேக் எது தற்சமயம் என்பதை வேறுபடுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே சில பிளாஷ் பேக்குகளை சுருக்கத்தில் விட்டு விட்டேன். சிலவற்றை உரிய இடத்தில சேர்க்க முயற்சி செய்துள்ளேன்.  கதையை முழுதும் வாசிக்கச் செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை.

வேட்டையூமா வாசுகி  கதை சுருக்கம்


உஸ்மானி ஒரு கொடவா பிரமுகர். தன்வந்தர்.  அவருக்கு ஒரே மகன் பொனாச்சா

பினு அவருடைய தங்கை. அவளது கணவர் ராசய்யா. அவர்களுக்கு ஒரே மகள் ஷகிலா. அத்தை மகளை  ஒருதலையாக காதலிக்கிறான் பொனாச்சா. ஆனால் ஷகிலா படிக்க சென்ற இடத்தில சுகிர்த் என்ற இளைஞனை  காதலிக்கிறாள். சுகிர்த் ஒரு கூர்க் மேலும் பணக்காரன். அவனுடைய அப்பா துணி மில் முதலாளி.  ஆகையால் ஷகிலாவின் தந்தையும் தாயும் காதல் கல்யாணத்திற்கு சம்மதிக்கிறார்கள். படிப்பு முடிந்து கல்யாணத்திற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உஸ்மானி கல்யாணத்திற்கு வர சம்மதித்தார். ஆனால் மனைவியும் மகனும் அவருடன் செல்ல மறுத்து விட்டார்கள். இனி  சுருக்கத்தை வாசியுங்கள். 

மகனே பொனாச்சா

“----------------”

இன்னும் குழந்தையாகவே இருக்கிறாயே மகனே. உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்கணும், ஏன் சாகணும். உனக்காகத்தானே என்னைக் காப்பாத்திட்டு இருக்கேன். மனம் பொறுக்கலைடா எனக்கு, சாகற அளவுக்கா துணிஞ்சிருக்கே. போயிடலாம். எங்கே போகலாம்னு நெனக்கறயோ அங்கே போயிடலாம். உன்னைவிட முக்கியமானது எனக்கு என்ன இருக்கு. போயிட வேண்டியதுதான்... தூங்கு அமைதியா. தூங்கிடு பொனாச்சா. எல்லாம் நல்லபடியாகும்.” ஆஜானுபாகுவான தன் மகனை வெகுநேரம் தட்டிக்கொண்டிருந்துவிட்டு விளக்கை அணைத்தார். ஜன்னலைத் திறந்ததும் குப்பென்று முகத்திலறைந்தது குளிர். தூரத்து மலைமுகடுகளின் விளிம்புகள் லேசாகத் தெரிந்தன. ரேடியோ நிலைய கோபுரத்தின் உச்ச விளக்கு பனியில் மறைந்து மங்கலான செம்புள்ளியாயிருந்தது.

சீக்கிரம் வந்துவிடுவேன். வீட்டிலேயே இரு. குடிக்கறதானா கொஞ்சம் சாப்பிட்ட பிறகு குடி, உடம்பு தாங்காது.” கெட்டுச் சீரழிந்து கொண்டிருக்கிற மகனது உடல் நிலைக்காக வெளிப்பட்ட பெருமூச்சுடன் உஸ்மானி படியிறங்கினார்.

உஸ்மானி நுழைவுத் தோரணத்தைத் தாண்டும்போது ஓட்டமும் நடையுமாக வந்து எதிர்கொண்டார் ராசையா.

குனிந்து உஸ்மானியின் பாதங்களை மூன்று முறை தொட்டு நெஞ்சில் ஒற்றிக்கொள்ள, தன் இடதுகையை மார்பில் வைத்து மேலே முகமுயர்த்தி ராசையாவின் சிரத்திற்குமேல் நீண்ட வலக்கரத்தால் ஆசிர்வதித்தார் உஸ்மானி. பவ்யமாக உள்ளே அழைத்துச் செல்லப்படுகையில் ராசையாவின் கருப்பு அங்கியை உரிமையுடன், சரிப்படுத்திவிட்டு எல்லாம் முறைப்படிதானே ராசையாஎன்றார் லேசான அதிகாரத் தோரணையில்.

ஆமாம். ஷகீலாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான்தான் சொல்லிப் புரியவச்சேன். சிறுசுகள் சொல்லுதேன்னு வம்ச பழக்கத்தையெல்லாம் விட முடியுமா...”

விடக்கூடாது ராசையா. கூடாது. ரொம்ப காலம் வெளியே போய் படிச்சவள்ளே, மாறிப்போய்ட்டாள். எவனையோ இழுத்துக்கிட்டு வராம ஒரு கூர்க்கா பாத்து காதலிச்சாளே - அதுவரைக்கும் சந்தோஷம்.”

உஸ்மானிக்கு அருகே பினு வந்து நின்று மண்டியிட்டாள். எழுந்து நின்று ஆசி வழங்கி பக்கத்து இருக்கையைக் காட்டினார். மறுத்து தரையிலேயே காலருகில் உட்கார்ந்த தங்கையின் சிரத்தை பரிவுடன் தொட்டன விரல்கள்.

ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து... ம், சௌக்கியம்தானே. நீயும் கிழவியாயிட்டு வரே போலிருக்கு. தலையில் பாதி நரைச்சாச்சு. ராசையாவிற்கு அக்கா மாதிரியிருக்கேஅண்ணனுக்கு மட்டும் கேட்கும் மெதுவான குரலில், “நீங்க கல்யாணத்துக்கு வர மாட்டீங்கன்னு நெனச்சேன்என்றாள். உஸ்மானி சற்றுக் குனிந்து செவிமடுத்துக் கொண்டார்.

அப்படியெல்லாம் ஏன் நினைக்கிற பினு. யார் வராவிட்டாலும் நான் வராமல் இருக்க முடியுமா? நாம் எதிர்பார்க்கிறபடியா எல்லாம் நடக்குது. யாரைக் குத்தம் சொல்றது இதுக்கெல்லாம்... சரிதான்னு ஏத்துக்க வேண்டியதுதான்.” பினுவின் கண்களிலிருந்து நீர் உதிர்வதைக் கண்டு பதட்டமாய் அழாதே! அழாதே பினு. பொண்ணுக்கு அம்மா நீ. யாரும் பாத்துடப் போறாங்க, நீ என்ன செய்வே பாவம். உம்மேலே எனக்கொண்ணும் வருத்தமில்லே. வருத்தப்பட்டிருந்தா இங்கே வந்து உட்கார்ந்திருப்பேனா. ஷகிலாக்குட்டிக்கு இது சந்தோஷம்னா எனக்கும் தான்கனிந்து குழைந்தது குரல்தொனி. தலை மூடிய துணியை இழுத்து பினு கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.

காதலிச்சவனை கல்யாணம் பண்ணலேன்னா செத்துப்போவேன்னு மிரட்டுகிறாள் அண்ணா இவள். திமிர். ரொம்பப் படிக்க வச்சிட்டோம் பாருங்க அந்தத் திமிருதான்.”

அவளைத் திட்டாதே. அப்போதெல்லாம் ராசையா கூடத்தான் ஷகிலாவை பொனாச்சாவிற்காகத்தான் பெத்திருக்கேன்னு அடிக்கடி சொல்லிட்டிருப்பான். அவனே சம்மதப்பட்டு செய்யும்போது நீ என்ன பண்ண முடியும்... சரி போகட்டும். மாப்பிள்ளைப் பையன் யாருன்னு தெரியலையே. இன்னும் மண்டபத்துக்கு அழைத்து வரவில்லையா....”

வெளியே ஆட்டக்காரர் மத்தியில் மதுப்புட்டியுடன் தள்ளாடுபவனை பார்வையில் சுட்டினாள்.

“பெரிய வசதிக்காரனோ...”

“அவங்கப்பா துணிமில் வச்சிருக்காருண்ணா.”

”சரிதான்! நான் வீட்லேர்ந்து இவ்வளவு தூரம் நடந்தே வரேன். என் வீட்டுக்கு வந்தா என் மருமகளும் இப்படித்தான் இருக்கணும்.... பணக்காரனாக் கெடச்சது ஷகிலாவுக்குப் பாக்கியம்.”

மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க, “என்னை மன்னிச்சுடுங்கண்ணா” என்றாள் பினு. “மன்னிக்கறதாவது! எங்கேர்ந்து கத்துக்கிட்ட இப்படியெல்லாம் பேச, சரி எழுந்துபோ. போய் ஆகவேண்டியதைப் பாரு. நான் இருந்து நெறயக் குடிச்சிட்டு தின்னுட்டுதான் போவேன். பை கொண்டு வந்திருக்கேன் பாத்துக்க....” எடுத்து வைத்திருந்த ரப்பர் பிளாடரை வெளியே உருவிக் காண்பித்ததும் அமைதியாகச் சிரித்து பினு அகன்றாள்.

உஸ்மானி எழுந்து மறைவாக கழிப்பறைப் பக்கம் சென்று ரப்பர் பிளாடரை தொடையிடுக்கில் சரியாகப் பொருத்திக்கொண்டு வந்தார். அழகான பெரிய டிரேக்களில் விஸ்கி நிரம்பிய கண்ணாடிக் குவளைகளைச் சுமந்து வரிசையாக விநியோகித்து வந்தார்கள். ததும்பி தரை விரிப்பில் தெறித்தது மது. சிறுக சிறுக சுவைத்துப் பருகினார் உஸ்மான்.

பிடித்து வைத்திருந்த காவேரியம்மனுக்கு சில பெரிய உயர்ரக மதுப்புட்டிகளை வைத்து வணங்கி வாளை உயர்த்தி சில சம்பிரதாய வார்த்தைகளை உச்சரித்து முடிந்ததும் - மணமக்களை எதிரெதிரே இருந்த இரண்டு தனியறைகளுக்கு அலங்கரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். கூட மத்தியில் ஒரு பீப்பாயை வைத்து அனைத்துவகை மதுவையும் கலந்து காக்டெயில் தயாரிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. குடியில் மயங்கி விழுந்த தம் சிறார்களை அம்மாக்கள் தூக்கிச் சென்று யாருக்கும் இடையூறு இல்லாதபடி சுவரோரங்களில் கிடத்தினர். போதை உந்த அனாயாசமாய் நடனமாடும் தங்கள் பிள்ளைகளை வாத்ஸல்யத்துடன் மகிழ்ந்து பார்த்தனர் சிலர்.

அலங்காரம் பூர்த்தியாகி மாப்பிள்ளையும் பெண்ணும் அருகருகே அமர்த்தப்பட்டிருந்தார்கள். எதிரே வெள்ளித்தட்டில் குழைந்த மருதாணி. இருவருக்கும் மருதாணியிடுகையில் “ஒரு கூர்க் தம்பதிகளா வாழணும் மக்களே....” என வாழ்த்தி வந்து மீண்டும் உஸ்மானி மதுவைத் தொடர்ந்தார். கையை விரித்து மணமகன் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு கணம் பொனாச்சா இருந்து மறைந்தான்.

மாப்பிள்ளை பெண்ணுக்கு கருகமணி கட்டியாயிற்று. இருவரையும் ஒன்றாய் உட்காரவைத்து கழுத்திலிருந்து முழங்கால்களை மறைக்கும் விதமாக பட்டுத்துணியைக் கட்டினார்கள். 

அருகிலேயே பெரிய பாத்திரத்தில் அரிசி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே வரிசையமைந்தது. வரிசையில் வருபவர்கள் பாத்திரத்திலிருந்து எடுத்த கொஞ்சம் அரிசியை மணமக்களின் பட்டு விரிப்பிலிட்ட பிறகு அன்பளிப்புகளைக் கொடுத்துச் சென்றனர். உஸ்மானியின் முறை வரும்போது தன் மோதிரத்தைக் கழற்றி மணமகனுக்கு அணிவித்தார். தன் விரலுக்குப் பொருந்தாமல் பெரிதாயிருந்த தங்க மோதிரம் கழன்று விழாமலிருக்க மணமகன் கையை மூடிக்கொண்டான்.

விருந்தில் பன்றியிறைச்சியும் காக்டெயில் மதுவும் பரிமாறப்பட்டன. கூடுதலாக பருப்பு நீரும் கோதுமை ரொட்டியும். எதிர்வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷகிலாவிடம்  - மணமகனுக்கு இறைச்சி ஊட்டிவிடச் சொல்லி ஜாடை செய்து உஸ்மானி பலமாகச் சிரித்தார். சிரிப்பின் வேகத்தில் வாயிலிருந்து இறைச்சித் துணுக்குகள் வெளிவந்து விழுந்தன.

ஐம்பது அடி தொலைவில் மண்டபத்தைப் பார்த்தபடி ஷகிலா நிறுத்தி வைக்கப்பட்டாள். பாதி நிரம்பிய பன்னீர்ப் பானையை தலையில் வைத்துப் பிடித்திருந்தாள். பானைக்குள் ரோஜா இதழ்கள் மிதந்தன.

 

அவள் பின்னால் தோழி சஷீவ். ஷகிலாவிற்கு எதிர்ப்புறமாய் மூன்றடி தூரத்தில் மணமகனின் தம்பி ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தான்.

சாக்கடையில் விழுந்துவிட்ட மாப்பிள்ளையின் நண்பன் ஒருவனுக்கு போதை தெளிவதற்கான சிச்ருஷைகளைச் செய்துவிட்டு சிறுநீர்ப்பை அசைய நடந்துவந்த உஸ்மானி போகட்டும் விடு. எவ்வளவு நேரம்தான் தலையில் பானையுடன் நிற்பாள் பாவம்என்றார்

தலைவெட்டப்பட்ட வாழைமரங்கள் போதுமான இடைவெளியில் வரிசையாக ஊன்றப்பட்டிருந்தன. அன்றுதான் வெட்டப்பட்ட செழுமையான மரங்கள். அதன் வட்டமான மேற்தளத்தில் குச்சி செருகி சுற்றப்பட்டிருந்தது பூச்சரம். மரங்களைச் சுற்றிலும் நீர் தெளித்து தரை துப்புரவாக்கப்பட்டிருந்தது. மரங்களைச் சூழ்ந்தது கூட்டம். மாப்பிள்ளையின் தாய்மாமன் முறைக்கு ஒருவர் வந்தார். நீளமான வாளொன்று கொடுக்கப்படவும் - வாளின் முனையால் தாம் வெட்டுவதற்குரிய மரங்களின் உச்சியிலுள்ள பூச்சரத்தை அகற்றிப்போட்டார். விளிம்பின் கூர்மையில் ஒளிமிளிரும் வாள் மந்திர உச்சாடனங்களுடன் பின்னோக்கி உயர்ந்தது. பிறகு அரைவட்டமாய்ச் சுழன்று மரத்தைத் துண்டித்தது. பறையோசையும் உணர்ச்சிக் கூவலும் கீழே - பள்ளத்தாக்கின் வீடுகளையும் தொட்டெழுப்பின. ஒவ்வொரு மரமும் வெட்டப்படும்போது மேல்ஸ்தாயிக்குத் தாவியது பேரோசை. மரங்களின் அருகிலேயே நின்று - தடையில்லாமல் வெட்டுண்டு விழ வேண்டுமென மணமகன் பார்த்திருந்தான். மாப்பிள்ளை தரப்பு மரங்கள் வெட்டுப்பட்டு முடிவதற்குக் காத்திருந்து வாளை உஸ்மானி பெற்றுக் கொண்டார் பெண்ணுக்குத் தாய்மாமனாய்.

இரண்டு கைகளாலும் வாளை உயர்த்தி மந்திரம் சொல்வதற்கு அதிக நேரமானது. உச்சிப்பூச்சரத்தை நீக்கிய பிறகு அவரது வாள்வீச்சில் துண்டாகி விழுந்தது மரம். அவரது வேக அசைவில் அதிர்ந்தாடும் சிறுநீர்ப்பந்து எங்கும் சிரிப்பைத் தூவியது. அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் சிரித்தார்கள். உடைத்துக்கொண்டு பீறிட்ட சிரிப்பால் பறையடிப்பவர்களாலும் இசைக்க முடியவில்லை. குழலூதுபவன் குழலைத் தரையில் ஊன்றி அதன்மேல் நெற்றியை முட்டுக்கொடுத்து மறைவாகச் சிரித்தான். பினு தர்மசங்கடமாக அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தாள். உஸ்மானியும் சிரித்துக்கொண்டுதான் மரம் வெட்டினார். ஒவ்வொரு மரத்தையும் வெட்டி நிமிரும்போது மணமகன் நிற்கும் இடத்தை கவனித்துக் கொண்டார்.

 

இன்னும் ஒரே ஒரு மரம். இதோடு திருமணம் முடிந்தது. மணமகன் நிற்கும் பக்கத்தில் வாகாக தள்ளி நின்றுகொண்டார். முகத்தில் சிரிப்பில்லை. போதையின் அலைக்கழிப்பில்லை. சர்வ கவனமாய் கூர்ந்த விழிகளில் வேட்டைக்களை. வாளை பக்கவாட்டில் ஓங்கினார் உஸ்மானி. சுவாசம் திணறியது. கடைசி மரமும் சாய்ந்தவுடன் தீவிர இசை முழக்கத்திற்கு சமிக்ஞை கொடுப்பதற்காக ஒரு கையை உயரே தூக்கியிருந்தான் மணமகன். இறுதி முறையாக வீசப்பட்ட வாள் மின்னல் தெறிப்பாய் வந்து மணமகனின் அடிவயிற்றில் ஆழப்பதிந்து நின்றதை, புலன் குவியப் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.

கதையின் சுட்டிகள்

  =========>வேட்டை- யூமா வாசுகி | அழியாச் சுடர்கள்<======

=======>வேட்டை சிறுகதைகள்.காம்<========

இக்கதையைப் பற்றி வேறு ஒருவர் செய்த விமரிசன கட்டுரையின் சுட்டி இதோ ======>இங்கே<=======


28 கருத்துகள்:

  1. இன்றைய கதைப் பகிர்வு நன்று.

    உஸ்மானிக்கு, தன் வீட்டுக்கு மருமகளாக வரவேண்டியவனைக் கொத்திக்கொண்டு போகிறானே என்ற ஆழ்மனது வெறுப்பு பரவிக்கிடந்திருக்குமோ? கதையை எப்போதோ படித்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான், நெல்லை...எதிர்பார்ப்பின் ஏமாற்றம்....அதிலும் தன் மகன் படும் அவஸ்தை....

      கீதா

      நீக்கு
  2. செஸ் உலக சாம்பியன் பட்டத்தை மிக இள வயதில் வென்ற இந்தியர் பாசிடிவ் செய்திகளில் இடம் பெற்றிருப்பார் என நினைத்தேன்.

    இதற்கு முன் ஐக்யூவில் சாதித்த புத்திசாலிகள் பிற்பாடு என்னவாக மிளிர்ந்தார்கள் என்பதற்குத் தரவுகள் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயம்தான். இணைத்து விட்டேன்.

      நீக்கு
    2. இதற்கு முன் ஐக்யூவில் சாதித்த புத்திசாலிகள் பிற்பாடு என்னவாக மிளிர்ந்தார்கள் என்பதற்குத் தரவுகள் உண்டா?//

      நெல்லை, நீங்க சொல்றது, சும்மா ரேங்க் ஹோல்டர்ஸ் அவங்க பின்னாளில் ஷைன் பண்ணினாங்களான்னு கேட்டா அபூர்வம்.

      ஆனால் இப்படியான அறிவுத் திறன் (மதிப்பெண்ணில் முன்னணியில் இருப்பதற்கும் அறிவுத்திறனும் வேறு) உள்ளவர்கள் புதிதாக ஏதேனும் செய்யும் போது கண்டுபிடிக்கும் போது இந்த உலகம் ஏற்கும் ஏற்காது என்று போகும் அதை எல்லாம் தாங்கும் சக்தி முதலில் வேணும். இல்லைனா காணாமல் போவாங்க. அப்படித்தான் காணாமல் போனவங்க நிறைய. அல்லாமல் அவங்க சாதிக்கலைன்னு சொல்ல முடியாது நெல்லை. எனவே தரவுகள் கிடைக்காது.

      கீதா

      நீக்கு
    3. ​புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
      வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

      நீக்கு
  3. கடற் கொள்ளையர்களை திருப்பிச் சுட்டுக் கொல்லக் கூடாது என்று ஏன் சட்டங்கள் இருக்கின்றன? எப்படி கொள்ளையடிப்பது என்பதற்கு எத்தியோப்பியாவில் (அல்லது சோமாலியாவில்) பயிற்சிக் கூடங்கள் நடத்துகிறார்கள் என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கிரிஷ் அரோரா - குழந்தையை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோரின் கவனம் மிக மிக முக்கியம். கூடவே உலகமும் புறம் தள்ளிவிடக் கூடாது பின்னாளில். உலகம் வெற்றியாளரைத் துரத்தித் துரத்திக் கொண்டாடும். ஒரு சின்ன விஷயத்தில் அந்த வெற்றி வரலைனதும் தூக்கிப் போட்டுவிடும். Chapter closed என்பது போல். பள்ளி பெரிய பள்ளி என்று சொல்லப்பட்டிருக்கிறது. பள்ளியின் சூழலும் வீட்டுச் சூழலும் குழந்தைக்குத் தோல்வி ஏற்பட்டால அதை ஏற்றுக் கொள்வதற்கும் மன உறுதியை வளர்ப்பதற்கும் உதவ வேண்டும். இப்படியான குழந்தைகளை உலகம் கூர்ந்து பார்க்கும். அந்த அழுத்தம் அக்குழந்தையின் மீது விழும். பல மேதைகளின் வாழ்வு நமக்குத் தெரியுமே!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. குகேஷ் செய்தி மகிழ்ச்சி அளித்த ஒன்று. குகேஷுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! அவரது கடும் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. நான் செய்தியில் பார்த்தேன்....

    பெற்றோருக்கும் வாழ்த்துகள். ஏனென்றால் அவங்க இந்த அளவு ஊக்கப்படுத்தியிருக்கலைனா? இப்படியானதற்கு எவ்வளவு கஷ்டங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கும் என்பது தெரிவதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. (படத்திலிருப்பவர் JKC அல்ல).//

    சிரித்துவிட்டேன். ஆமாம் டக்கென்று ஜெ கே அண்ணாவோ என்று தோன்றும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குக் கூடத் தோன்றும் -- வாராவாரம் இவ்வளவு கதைகளுக்கு வக்கணையாக விமரிசனம் எழுதறாரே, இவர் எபி செவ்வாய்க்கு ஒரு சிறுகதையை எழுதக் கூடாதோ என்று.

      கேள்வி கேட்பது ஈஸி அதற்குத் தகுந்த பதில் சொல்வது தான் கடினம் என்கிற மாதிரி, கதைகளை விமர்சனம் செய்வது வேறு, ஒரு கதையை எழுதிக் காட்டி சாதிப்பது வேறு என்று எனக்கு நானே
      நினைத்து மெளனமாகி விடுவேன்.

      நீக்கு
    2. //குறை சொல்லா விட்டால் எப்படி விமர்சகன் ஆவேன்?//

      விமர்சனம் என்றால் இன்னொருத்தர் வேலை மெனக்கெட்டு படைத்த படைப்பை
      இப்படின்னா எப்படி?
      அப்படின்னா எப்படி?
      என்று மாற்றுச் சிந்தனையில் வழி மாறிப் போவதில்லை.
      இரட்டை மாட்டு வண்டி மாடுகள் போல ஒத்த சிந்தனையில் எழுதியவரோடு சேர்ந்து பயணிப்பது.
      எழுதியவர் வந்து இந்தப் பதிவைப் பார்த்து பதில் சொல்லப் போகிறார்?
      அது இல்லை என்று தெரியும் பொழுது வாசிப்பவர்களுக்கும் கதையை எழுதிய எழுதிய எழுதிய எழுத்தாளனும் குறுக்கே நிற்காமல் வாசகர்கள் அவர்களது நேரடி வாசிப்பில் கதையை வாசித்து ரசித்து விட்டுப் போகட்டும் அல்லது தங்கள் வாசிப்பில் விளைந்த அனுபவ உணர்வை இங்கு பின்னூட்டங்களாகப் பகிரட்டுமே என்று தான் தோன்றுகிறது. இதுவே எழுத்துக்குச் செய்யும் மரியாதையும் ஆகும்.

      நீக்கு
    3. ** வாசிப்பவர்களுக்கும் கதையை எழுதிய எழுத்தாளனுக்கும் குறுக்கே -- என்று திருத்தி வாசிக்கக் கோறுகிறேன்.

      நீக்கு
    4. ஜீ வி அண்ணா, நீங்க இதை இப்படி யோசித்துப் பாருங்க....

      விமர்சனம் வேறு, கதை எழுதுவது என்பது வேறு.

      அடுத்து விமர்சகர்கள் எல்லோரும் ஏதேனும் படைப்பாளியாக இருக்க வேண்டும் என்பது நியதி இல்லையே. வாசிப்பதற்கும் அதை ஆராய்ந்து எழுதுவதும் கூட ஒரு திறமைதானே. கூடவே விமர்சகர்கள் ஒவ்வொருவரும் அவர்களது கண்ணோட்டத்தில் தானே எழுதுவார்கள்? பிறரது கண்ணோட்டத்தில் எழுதினால் அல்லது படைப்பாளியின் கண்ணோட்டத்தில் எழுதினால் அது விமர்சனம் என்று சொல்ல முடியாதே.

      திரைப்படத்தை விமர்சிப்பவர்கள் (critique) திரைப்படம் எடுப்பதில்லை (99,9%) கர்நாடக இசைப்பாடகர்களைக் கீறு கீறுன்னு கீறிய சுப்புடு இசைக்கச்சேரி செய்ததில்லை. இத்தனைக்கும் நல்ல ஞானம் உள்ளவர்.

      இதில் சாதிப்பது என்பது கூடத் தேவையில்லை. கதை எழுதி சாதிப்பவர்கள் எத்தனை பேர்? பலரும் நன்றாக எழுதினாலும் கூட வெளியில் தெரியாமல் போவதுண்டு. அதனால் அவங்க நன்றாக எழுதவில்லை என்றோ சாதிக்கவில்லை என்றோ அர்த்தமாகிவிடாது இல்லையா.

      கீதா

      நீக்கு
  7. இன்றைய கதைப்பகிர்வு மிக அருமையான கதை. கூர்கிக்கள் சமூகத்தின் வாழ்வியலைச் சொல்லும் கதை.

    உஸ்மானி என்னதான் வெளியில் சந்தோஷமாக இருப்பது போலவும், தெரிந்தாலும்....அடிமனதில், கதையின் தலைப்பு இருக்கத்தான் செய்கிறது. அதை கதையினூடே தெரிந்துவிடுகிறது முடிவும் அனுமானிக்க முடிகிறது.

    கதையின் உஸ்மானி சொல்கிறாரே கூர்கிகளின் பழக்கங்கள் மாறினாலும் மூதாதையரின் வேட்டை புத்தி மட்டும் அவ்வப்போது வெளிவருகிறது என்றும்....வருத்தப்படுவது போல் மேலோட்டமாகத் தெரிந்தாலும் அடிமனதில் இருக்கிறது

    //மனம் பொறுக்கலைடா எனக்கு, சாகற அளவுக்கா துணிஞ்சிருக்கே. போயிடலாம். எங்கே போகலாம்னு நெனக்கறயோ அங்கே போயிடலாம். உன்னைவிட முக்கியமானது எனக்கு என்ன இருக்கு. போயிட வேண்டியதுதான்... //

    உஸ்மானி நல்லவராகவே இருந்தாலும் கூட அடிமனதில் இருக்கும் தன் மகன் மீதான அதீத பாசம், மற்றும் தன் தங்கை மகள் வேறொருவனை விரும்பிய அந்தப் பையனின் மீதான காழ்ப்புணர்ச்சி கல்யாணத்தில் நேரில் பார்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அடிமனதில் வளர்ந்து டக்கென்று ஒரு நொடியில் நிகழ்த்திவிடுகிறது வேட்டையை.

    அருமையாக எழுதியிருக்கிறார் கதாசிரியர். எழுத்து ரொம்பப் பிடித்திருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஆசிரியர் பெயர் புதியதோ என்று தோன்றினாலும் மனதிற்குள் தெரிந்தது போன்ற உணர்வு,.

    வேறு கதைகள் என்ன என்று பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. கதையைப் படித்ததும் மனதில் தோன்றியது 

    "அட கொலைகாரா...."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. அதுவும் சூது வாது எதுவுமில்லாதபடிக்கு சொந்தங்கள் முன்பு தன்னை காட்டிக் கொண்டு, கொலை செய்யும் சாமர்த்திய கொலைகாரன்.

      நீக்கு
    2. மதுரை காதல் சம்பவத்தில் இருவருக்கும் திருமணம் செய்வதாக மதுரைக்கு ஜீப்பில் கொண்டுவந்து பழி வாங்கும் படம் நினைவுக்கு வரவில்லையா?

      நீக்கு
  11. அண்ணா தன் முன்னுரையில் சொல்லியிருக்கும் ராஜம் கிருஷ்ணன், தன் கதைக்காக அதில் வரும் களம், பாத்திரங்களுக்காக நேரடியாகச் சென்று பார்த்து எழுதியவர். அப்படித்தான் யூமா அவர்களின் கதையும் தோன்றுகிறது. அப்படியே அச்சமூகத்தின் பழக்க வழக்கங்கள் எல்லாம் கல்யாண நிகழ்வுகள் மூலமாகவே சொல்லியிருக்கிறார்.

    முடிவு யூகிக்க முடிகிறது, அண்ணா. இந்தச் சடங்கின் மூலம் என்று யூகிக்க முடியலைனாலும்....

    சடங்கில் ஏதேச்சையாக நிகழ்வது போல அவர் வெட்டி வீழ்த்தும் முன்

    //இரண்டு கைகளாலும் வாளை உயர்த்தி மந்திரம் சொல்வதற்கு அதிக நேரமானது. //

    மனம் தயாராகிறது. இந்த சான்ஸை எப்படி உபயோகிக்கலாம் என்று

    // மணமகன் நிற்கும் பக்கத்தில் வாகாக தள்ளி நின்றுகொண்டார். முகத்தில் சிரிப்பில்லை. போதையின் அலைக்கழிப்பில்லை. சர்வ கவனமாய் கூர்ந்த விழிகளில் வேட்டைக்களை. //

    கூர்கிகள் பழைய கலாச்சாரத்தை விடுவது பற்றிய உஸ்மானியின் ஆதங்கம் மனதுள் இருன்து கொண்டிருக்கிறது.

    //“விடக்கூடாது ராசையா. கூடாது. ரொம்ப காலம் வெளியே போய் படிச்சவள்ளே, மாறிப்போய்ட்டாள். எவனையோ இழுத்துக்கிட்டு வராம ஒரு ‘கூர்க்’கா பாத்து காதலிச்சாளே - அதுவரைக்கும் சந்தோஷம்.”//

    இதில் மறைமுகமாக உஸ்மானியின் அடி மனது உணர்வு. ராசையா மீதும் கோபம், பண்டு தன் பையனுக்குத்தான் ஷகிலா என்று சொல்லிக் கொண்டிருந்த ராசையா இப்ப மாறிவிட்டார்

    முன்னும் பின்னுமாய் உஸ்மானியின் மனம் போய் வரும் போதான வரிகளும் உடையாடல்களும் கொஞ்சம் கொஞ்சமாக உஸ்மானியின் அடி மனதைப் புலப்படுத்துகிறது மறைமுகமாய். hidden in lines, reading in between the lines என்பது போன்று.

    இதுவும் கிட்டத்தட்ட ஆணவக் கொலை போன்ற ஒன்றுதான் என்றாலும் இதில் உஸ்மானியின் மகன் மீதான பாசமும், ஆதி நாளிலிருந்து அவனுக்கு இவள் என்பது சொல்லப்பட்டு தன் மகன் படும் பாடு எல்லாம் வெளிப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பல குடும்பங்களில், சமூகங்களில் இப்படி அத்தை மகன் மகள்/மாமன் மகள் மகன் அல்லது உறவு விடக் கூடாது என்று சிறு வயதிலேயே இப்படிப் பேசி குழந்தைகளின் மனதில் விதைப்பது ஒரு சிலருக்கு அது பின்னாளிலும் வொர்க்கவுட் ஆகலாம் ஆனால் குழந்தைகள் வயதாக ஆக அவர்களின் எண்ணங்கள் மாறும் போது இதெல்லாம் மாறிவதற்கும் சான்ஸ் உண்டே. இப்படிச் சொல்லி வளர்ப்பது நல்லதல்ல.

    கதை உளவியல் சார்ந்த ஒன்று

    தற்கொலை செய்து கொள்பவர்களில் சிலர் கடைசி நிமிடம் வரை சிரித்துக் கொண்டுவிட்டு டக்கென்று அடுத்த நொடி செய்து கொள்வது போல கொலை செய்பவர்களிலும் உண்டு. அமெரிக்காவில் கொலையாளிகளின் உளவியலை அவர்கள் ஆராய்ச்சி செய்த போது குறிப்பிட்டிருந்த விஷயம். அது சீரீஸாகவும் வந்ததாம் மகன் சொல்லியிருக்கிறான்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஒரு சின்ன சடங்கு, திருமணம் முடிகிறது என்பதை அறிவிக்கும் சடங்கு அதாவது மணமகன் மணமகள் இருவரின் தாய்மாமன்கள் வந்து வாழை மரத்தை வெட்டுவது....அந்த நிகழ்வையும், சமூகத்தின் ரத்தத்தில் ஊறிய வேட்டை உணர்வையும் வைத்து அழகாகப் பின்னியிருக்கிறார் ஆசிரியர். சின்ன சடங்கு....ஆனால் கதையே கனமாகிவிடுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வு நன்றாக உள்ளது. சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் கதை குறித்த தெளிவான விமர்சனமும், முன்னுரையும் நன்றாக உள்ளது. கதையை முழுதாக ஒரு வரி விடாமல் படிக்கும் ஆவலைத் தூண்டியது. சுட்டிக்குச் சென்று முழுக்கதையையும் படிக்கையில், இந்தக் கதையை ஏற்கனவே படித்த நினைவு வந்தது. ஆனாலும் இப்போதும் இறுதி வரை படித்தேன்.

    தன் மகனின் கனவுகள் நனவாகாமல் போகும் போது, அவர் மேல் நிறைய பாசம் வைத்திருக்கும் அந்த தந்தையின் மனதில், தன் தங்கையையும், தன் தங்கை குடும்பத்தின் மகிழ்ச்சியையும் கண்ட பிறகும், இப்படி ஒரு வன்மம் தோன்ற வேண்டுமா? கொடுமைதான்..!

    மனித மனங்கள் எப்போதுமே வித்தியாசமானவைதான். நல்லதும் கூட...! ஆனால், எப்போது அது நல்லவை, அல்லது கெட்டவையாக மாறும் என்பதை சட்டென அவர்களாலேயே புரிந்து கொள்ள இயலாதவையாகப் போய் விடும் தன்மை கொண்டது.

    மனித மனதில் இருக்கும் நல்ல குணங்களாகிய உன்னதமான பாசங்கள், அன்புகள் திசை திரும்பி, எவ்வளவுதான் உறவுகளால் ஏற்படும் அவமான உணர்வுகளை , சகித்து கொண்டாலும் சமயங்களில் அவை ஒரு கொடிய விஷமாக மாறும்.. இல்லை, மன்னிப்பை நல்கும் என புரிந்த கொள்ள இயலாதது தான். ஆனால், கதையின் ஒவ்வொரு வார்த்தைகளும், வரிகளும் அருமையாக இருந்தது. ஆசிரியர் கதையை எழுதும் போது, நன்றாக அனுபவித்து கதை எனும் சிற்பத்தை தன் வார்த்தைகள் என்ற உளியால், செதுக்கி தந்திருக்கிறார். பாராட்டுக்கள்.

    இப்படி நல்லதொரு கதை பகிர்வுகளை பொறுமையுடன் தேர்ந்தெடுத்து தரும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

  15. ​கதையைப் படிக்கும்போது எனக்கு தோன்றும் உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படையாக கூறுகிறேன். மற்றபடி கதை எழுதியவருடன் வாதிப்பதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பிரபல எழுத்தாளன் அல்ல. இக்கதையை வாசித்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். ஆனால் நான் எ பி யில் எழுதிய இக்கட்டுரையை வாசிப்பவர்கள் 50 பேர் கூட வராது. நான் ஒரு மிகவும் சாமானிய ரசிகன் தான். நான் யாருக்கும் குறுக்கே நிற்கவில்லை. தலைப்பு "நான் படிச்ச கதை". ஆக நான் எழுதுவது ஒரு ஆற்றுப்படை மட்டுமே.

    மாற்று கருத்துக்களுக்கு நன்றி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை எபி வாசகர்களுக்கு வாசிக்க முதலில் கொடுத்து விட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் வாசிப்பு அனுபவத்தில் தாங்கள் நினைப்பதைச் சொல்லலாம் இது அவர்கள் தனித்த வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும். அப்பப்போ அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் அவர்கள் பின்னூட்டங்களில் உங்கள் கருத்தைச் சொல்லி கலந்து கொள்ளலாம்..நீங்கள் கதையை வெளியிடும் போதே உங்கள் தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை வெளியிடும் பொழுது அவர்கள் தனித் தனியே கதையில் ஆழும் தனித்த ஈடுபாடு தவிர்க்கப் படுகிறது. சனிக்கிழமை கதை வாசிப்பு ஒரு பயிற்சிக் களமாக எபி வாசகர்களுக்கு இருக்கும் என்கிற என் நல்லெண்ணம் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது.

      நானும் பேசாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். இருந்தாலும் ஆடத்தெரிந்த கால்களுக்கும் பாடத்தெரிந்த வாய்க்கும் பாட்டோசையைக் கேட்டால்
      சும்மா இருக்க முடியாது வெளிப்பட்டு விடுகிறது. .
      இனி என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி.

      நீக்கு
  16. //உலக சாம்பியன் ஆன இரண்டாவது இந்தியர் ஆனார் குகேஷ்.//
    குகேஷ்க்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. கதை படித்து கொண்டு வரும்போதே இப்படி ஏதாவது நடக்க போகிறது என்று நினைத்தேன், அப்படியே நடந்து விட்டது.

    எவ்வளவு நடிப்பு பேச்சில் . மனதில் வஞ்சம், உதட்டில் சிரிப்பு .
    கதை பகிர்வுக்கு நன்றி.

    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!