வெள்ளி, 20 டிசம்பர், 2024

உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டேன் கருணை இல்லாதோர் தோழமை வேண்டேன்

 

இந்த தனிப்பாடலுக்கு விளக்கம் தேவையா என்ன?

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே



==============================================================================================


வாழ்த்துங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 

சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சந்திரகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

திரைக்கதை, வசனம், பாடல்களை தெல்லூர் மு. தருமராசன் எழுதியுள்ளார்.   இப்படத்தில் இடம் பெற்ற அருள் வடிவே பாரம் பொருள் வடிவே, பூந்தேரே சின்ன சின்ன போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றன.  இசை எல் வைத்தியநாதன்.  கே ஜெ யேசுதாஸ் குரலில் இனிமையான, இல்லை இல்லை மகா இனிமையான பாடல்.  இந்தப் பாடல் வரிகளை எ பி வாட்ஸடாப் க்ரூப்பில் பகிர்ந்திருந்தேன்.

அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே

அருள் வடிவே பரம்பொருள் வடிவே…

அவனன்றி வேறோர் அணு அசையாதே……..
அருந்தவ மேலோர் நூல் பிழையாதே
வருவதை நீதான் அறிந்திடுவாயே
வழித்துணை நீயே காத்திடுவாயே

நினைவினில் நிறைந்திட

நிதம் உனை தொழுவேன்

நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே

துணையென்று சேர்ந்தால் கணை
தொடுத்தாரே
துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே
அலை துரும்பானேன் ஆதரித்தாயே
உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டேன்
கருணை இல்லாதோர் தோழமை வேண்டேன்

மனை இருள் மறைந்திட
தினம் உனை பணிந்தேன்
மாசிலா மாமணி மனங்கனிந்தருள்வாய்

அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
ஆனந்தமே அருளே பொருளே புகழே


37 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. பாடல்கள் மிகவும் சிறப்பானது ஜி

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன் என்பதை விட உருகியிருக்கிறேன். சீர்காழி அவர்களின் குரல் என்றுமே எனக்கு பிடித்தமானது. அவரின் தெய்வீகமான குரல் வளமும், ராக பாவங்களும் நம்மை அந்த தெய்வங்களின் அருகிலேயே கொண்டு நிறுத்தி விடும். மிகவும் ரசித்துப் பாட்டு இது.

    இரண்டாவது பாடல் இடம் பெற்ற படமும் பாடலும் இது வரை கேள்விப்பட்டதில்லை. . ஆனால், இப்போது கேட்டு ரசித்தேன். பாடல் வரிகளும் பாடலும் நன்றாக உள்ளது. கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலினிமைக்கு கேட்கவா வேண்டும். அருமையான பாடல் இப்போது கேட்டு ரசித்தேன். இன்றைய நல்லதொரு பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா... கே ஜே யேசுதாஸ் பாடல் மிகவும் இனிமையானது. ஒருமுறை கேட்டுவிட்டால் அன்று முழுவதும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

      நீக்கு
  5. தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
    துன்பமில்லாத வாழ்வும்...

    இவற்றை விட வேறென்ன வேண்டும்?..

    பதிலளிநீக்கு
  6. எனக்கொரு உம்மெ தெரிஞ்சாவணும் சாமியோவ்...

    அருள் வடிவே என்கிற பாடல் மிஸ்நரியோட பாட்டுன்னு சொல்றாவளே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். முத்துராமன் இதில் பாதிரியாராக வருவார் என்று நினைவு.

      ஆனால் வரிகளில் ஏதாவது குறிப்பிட்ட மதம், கடவுள் பற்றி இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி ஒன்றும் கண்ணில் படவில்லை.

      நீக்கு
    2. குறிப்பிட்ட மதம், கடவுள் பற்றி இருக்கிறதா என்று

      அப்படி ஏதும் இல்லையே...

      ஒருசில கூச்சல்கள்..
      அதனால் கேட்டேன்...

      திருக்குறள் கூட பிறத்தியார் வந்து சொல்லிக் கொடுத்தது என்றொரு கருத்தும் நம்மிடையே இருக்கின்றது.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    /ஒருமுறை கேட்டுவிட்டால் அன்று முழுவதும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்./

    ஆம்.. இன்னொரு பாடல் இது போலவே உண்டு. அது தனிப்பாடல் என நினைக்கிறேன். நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது. எத்தனை யோசித்தும் அது நினைவுக்கு வராமல் "அருள் புரிவாய் கருணைகடலே.." என்ற பாடல்தான் நினைவுக்குள் வட்டமடிக்கிறது. அது தெய்வாதீனமாக நினைவில் வந்தால் குறிப்பிடுகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்' பாடல் இல்லையே...?!

      நீக்கு
    2. அது இல்லை. இது அம்மன் அருள் என்ற திரைப்படத்தில் வரும் பாடல் அல்லவா..? அது வேறொரு பாட்டு. ஆரம்ப வரிகள் இன்னமும் நினைவ் வந்த பாடில்லை. அன்பு என வரிகளுடன் பொதுவாக வருமென்ற நினைவு. . ஆனால் அன்பு என்ற வரிகளுடன் பாடல்கள் பல நினைவுக்கு வந்து ஓடுகின்றன. ஹா ஹா ஹா. யோசிக்கிறேன்.

      நீக்கு
    3. இப்போது இந்த பல்லிடை பாக்கு சங்கடம் உங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ எனக்கு வந்து சேர்ந்து விட்டது. அது என்ன பாடல் என்று அறியும் வரை பாக்கு பற்களுக்கிடையில்தான்!

      நீக்கு
    4. யேசுதாஸ் பாடும் 'உன்னையன்றி எனைக் காக்க எனும் தனிப்பாடலோ?!

      நீக்கு
    5. கமலாக்கா, சரணம் வரும் போது ஏழு ஸ்வரங்களுள், காதலில் தீபமொன்று ஏற்றினாளே, குறுக்குச் சிறுத்தவளே.....இன்னும் இருக்கு இந்த ராகத்தில் அதோ மேக ஊர்வலம், அன்பு நடமாடும் பாடல்கள் போல இருக்கும்....இன்னும் இருக்கு...

      கீதா

      நீக்கு
    6. அன்பு என வரிகளுடன் பொதுவாக வருமென்ற நினைவு//

      அன்பு நடமாடும் கலைக்கூடமே....அதுவா அக்கா?

      கீதா

      நீக்கு
    7. /இப்போது இந்த பல்லிடை பாக்கு சங்கடம் உங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ எனக்கு வந்து சேர்ந்து விட்டது. அது என்ன பாடல் என்று அறியும் வரை பாக்கு பற்களுக்கிடையில்தான்!/

      ஹா ஹா ஹா. அடாடா.. நானும் குழம்பி உங்கள் இருவரையும் குழப்பி விட்டேனோ..? எனக்கும் காலையிலிருந்து இதே யோசனைதான் தலைக்குள் ஓடிக் கொண்டேயுள்ளது.. ..!

      /அன்பு நடமாடும் கலைக்கூடமே அந்த பாடலோ..!!/
      இல்லை சகோதரி...! . அதுதான் அன்பு வரிசைகளில் வந்து வந்து முன்னாடி நிற்கிறதே..! .

      பரவாயில்லை. நினைவுக்கு வரும் போது வரட்டும். விட்டு விடலாம். எப்போதாவது தீடிரென நினைவுக்குள் வரும். அப்படி வந்தவுடனே கூறுகிறேன்.

      பல்லிடை பாக்கை இப்போதைக்கு அப்புறப்படுத்தி விடுங்கள்.பற்களை உபத்திரவபடுத்திக் கொள்ள வேண்டாம். :)) .

      நீக்கு
  8. முதலாவது பாடல் கேட்டிருக்கிறேன்.

    இரண்டாவது பாடல் இன்று வெள்ளிப் பகிர்வில்தான் அறிகிறேன். இனிமையான பாடல் .
    பாடல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. முதலாவது பாடலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!

    சீர்காழியின் கணீர் குரலில் தொடங்கும் போதே மனதில் பதிந்துவிடும்! என்ன ஒரு குரல்.

    ரசித்துக் கேட்டுக் கொண்டே தட்டுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துங்கள்னு ஒரு படமா? அட! இப்பதான் தெரிகிறது.

    பாட்டும் கேட்டிருக்கிறேன் அருமையான பாடல்.

    வாசந்தி ராகம் என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரணம் வரப்ப வாசந்தி ராகம்னு தோணுது.

      கீதா

      நீக்கு
    2. வாசந்தி ராகமா! இந்துமதி, சிவசங்கரி என்றெல்லாம் கூட ராகம் இருக்குமோ!

      நீக்கு
    3. ஒருவேளை வசந்தியாக இருக்குமோ...!

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது.
    அதில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.

    அடுத்த பாடல் நன்றாக இருக்கிறது. பாடல் வரிகளும், யேசுதாஸ் குரலும் நன்றாக இருக்கிறது. இந்த பாடலின் காணொளியும் அருமையாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பாடல் மிகவும் இனிமையானது. ஆனால் பாடல் காட்சி இதன் ஒரிஜினல் பாடல் காட்சி அல்ல என்பதை நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள். இதை யாரோ அந்த பாடலை சேர்த்து இணைத்து இருப்பது. ஆனாலும் நன்றாக தான் இருக்கிறது. நான் கூட இதை போனவாரம் கார்த்திகைக்கு வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!