புதன், 18 டிசம்பர், 2024

இரட்டையாக ஒட்டிக்கொண்டிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள் பிறக்கும் - சரியா ?

 

ஜெயக்குமார் சந்திரசேகரன் : 

​திரை நடிகர்களை நட்சத்திரம் (star, super star) என்று குறிப்பிடுவது ஏன்?

# கைக்கு எட்டாத தூரம், பார்ப்பதிலே ஆர்வம், எளிதில் மங்கிப் போகிற இயல்பு இது எல்லாமே நடிகர்களுக்கும் நட்சத்திரத்திற்கும் பொருத்தம்தானே.

​அச்சு புத்தகம், கிண்டில் புத்தகம் இரண்டில் எது வாசிப்பிற்கு சிறந்தது?

# கிண்டில் வாசிப்பு என் போன்ற மூத்தோருக்கு வசதியாக இருக்கிறது.

& எனக்கும் கிண்டில் பிடிக்கும். உட்கார்ந்தபடி, நின்றுகொண்டு, நடந்துகொண்டு, படுத்துக்கொண்டு கூட - அதிக பக்கங்கள் உள்ள புத்தகங்களை அலட்டிக்கொள்ளாமல் சுலபமாகப் படிக்கலாம்.   

மதவெறி மிகுந்தது ஏன்? அடுத்த உலகப்போர் மதத்தை முன் நிறுத்தி நடத்தப்படுமா?

# மத போதனைகளை சரிவர யாருமே கடைப்பிடிப்பது கிடையாது. ஆனால் மத நம்பிக்கைகளை முன்வைத்து கொள்ளை, கொலை, கலவரம்,  போர் எல்லாமே நடந்ததாக வரலாறு சொல்லுகிறது. இதற்கான நியாயங்கள், இதற்கான உண்மையான காரணங்கள் நம் அறிவுக்கு எட்டாதனவாகத்தான் இதுவரை இருக்கிறது. இதற்கு மேல் இது பற்றி விவாதித்தால் அது விபரீதத்தில் கொண்டு விடும்.


கே. சக்ரபாணி சென்னை 28:

1. சில நாட்களில்  நாம்  காலையில்  எழுந்தது முதல்  அன்று  அடிக்கடி  ஒரேமாதிரியான  நிறமே அதிகம் கண்ணில் படும். 

. உதாரணமாக  சிகப்பு நிற கார்  சிகப்பு நிற ஆடை அணிந்தவர்கள்  என்று. இதுபோன்று தங்களுக்கு  ஏதேனும்  அனுபவம்  உண்டா? 

# ஒரே நிறம் அதிகம் கண்ணில் படும் என்பது சரியில்லையோ என்று தோன்றுகிறது.  நம் கவனம் அந்த ஒரு நிறத்தைக் கவனித்துப் பதிவு செய்து கொள்கிறது என்று இருக்கலாம்.  நாங்கள் இருக்கிற இடத்திலிருந்து பக்கத்திலுள்ள பெருவழிப் பாதையை எளிதாகப் பார்க்கலாம். அதில் ஒரு குறிப்பிட்ட மாதிரியான வண்டி சிவப்பு நிற மஞ்சள் பச்சை விளக்குகளை கொண்ட பெரிய லாரி என்று வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அதிகமாக கண்ணில் படுவதாக எனக்குத் தோன்றும். அது உண்மையாகவும் இருக்கலாம்.

& நானும் அந்த வகையில் சில கவனிப்புகள் செய்தது உண்டு. நீங்கள் சொல்வது போலவே ஏதேனும் ஒரு நிறம் கண்ணில் பட்டால் - அதற்குப் பின் அதே நிற உடை அணிந்தவர்கள், அதே நிற கார்கள் போன்று கண்ணில் படும். ஆனால் ஒருவேளை நம்முடைய மனம் ஒரு நிறத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டால் அதற்குப் பின் மற்ற நிறங்கள் கண்ணில் பட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறதோ என்னும் சந்தேகமும் வருகிறது. 

இன்னொரு விஷயமும் ஞாபகம் வருகிறது. நான் சென்னை வந்த புதிதில், என் ஒன்றுவிட்ட சகோதரி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள் - அவளுக்கு நெருங்கிய தோழிகள் இருவர். அவர்கள் மூவரும், முதல் நாளே தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு, மறுநாள் என்ன நிறத்தில் பாவாடை, சட்டை, தாவணி ( பாருங்க - அந்தக் காலத்தில் பா ச தா - உடை ! இந்தக் காலத்தில்??) அணிவது என்று தீர்மானம் செய்து அவ்வாறே அணிந்து கல்லூரி செல்வார்கள். இந்த மாதிரி தெருவில் செல்வோர் எல்லாம் மறுநாள் என்ன நிற உடை அணிவது என்று ரகசிய கூட்டறிக்கை தயார் செய்து அதன்படி உடை அணிவார்களோ! 

2. இரட்டையாக  ஒட்டிக்கொண்டிருக்கும்  வாழைப்பழம்  சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள்  பிறக்கும் என்று சொல்கிறார்களே  அதுபோன்று  தங்களுக்கு  தெரிந்து  யாருக்கேனும்  ஆகியிருக்கிறது என்று  கேள்விப்பட்டிருக்கிறீர்களா.

# ஒட்டியிருக்கும் வாழைப்பழம் பற்றிய நம்பிக்கையில் உண்மைக்கு வாய்ப்பே இல்லை.

& அப்படிப் பார்த்தால் நான் அசோக் லேலண்ட் காண்டீனில் இதுவரை சாப்பிட்ட இரட்டைப் பழங்களின் அடிப்படையில் எனக்கு குறைந்தபட்சம் 724 இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கவேண்டும்! 

இங்கே படத்தில் என்னுடன் இருக்கும் இரட்டைப் பையன்கள் எனக்கும், என் மனைவிக்கும் சொந்தம். மனைவியின் அத்தையின் (மாமியார் அல்ல) கொள்ளுப் பேரன்கள். இந்தப் பையன்களின்  அப்பாவுக்கு இரட்டைப் பழம் சாப்பிடும் வழக்கம் உண்டா என்று தெரியவில்லை! 

மேலும் ஒரு கொசுறு தகவல். 

என் அம்மாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 

என்னுடைய தங்கைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 

அந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 

ஆக, இரட்டைக் குழந்தைகள் குடும்ப ஜீன்ஸ் என்று மட்டும் சொல்லலாம். அம்மா, மகள், மகள் என்று தொடரலாம். 

என்னுடைய சித்தப்பா குடும்பத்தில், அண்ணனின் சம்பந்திக்கு இரட்டைப் பையன்கள். அந்த இரட்டைப் பையன்களில் ஒருவரை மணந்த அண்ணனின் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள்!  

3. .சில வருடங்களுக்கு முன்  எல்லோர் வீட்டிலேயும் ஃபோல்டிங் சேர் என்று ஒன்று இருந்தது.  வேண்டும் போது போட்டுக்கொள்ளலாம் வேண்டாத போது மடக்கி ஓரமாக வைத்துவிடலாம். இப்போது அதை காணவில்லையே? 

# மடக்கு நாற்காலி இரும்பாலானது. நாளடைவில் துருப்பிடித்துப்  பயனற்றுப் போகும். அந்த துருப்பிடித்த காட்சி நினைவில் பசுமையாக இருப்பதால் அதை மீண்டும் வாங்க மறுக்கிறோம். இப்பொழுது வசதி வாய்ப்பு அதிகமானதால் மலிவான இரும்பு நாற்காலிக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. (ஒரு காலத்தில் அதை வாங்குவதற்காக சீட்டுக் கட்டிப் பணம் சேர்த்த  ஆள் நான்.)

& எங்கள் வீட்டில் கூட நான்கு ஃபோல்டிங் சேர் இருந்தன. குறைந்த காலத்திலேயே துரு பிடித்து,  அங்கங்களை ஒவ்வொன்றாக இழந்து, காணாமல் போய்விட்டன. 

= = = = = = =
KGG பக்கம் :
= = = = = = = = 

வியாழக் கிழமைகளில், ஸ்ரீராம் அவருடைய நிகழ்கால அனுபவங்களை சுவையாகப் பதிவு செய்து வருவதைப் படித்ததும், எனக்கு, 'கடந்த கால அனுபவங்களை நான் எழுதினால் என்ன?' என்று தோன்றியது. 

அதன் விளைவுதான் புதன்கிழமை KGG பக்கம். 

அப்படி கடந்த கால அனுபவங்களை எழுதும்போது, அதை காலக் கிரமமாகப் பிரித்து எழுதுவது என்று தீர்மானித்தேன். 

கிட்டத்தட்ட என்னுடைய சுயசரிதை போன்ற ஒரு அமைப்பு என்று உருவகம் செய்து வைத்திருந்தேன். ஒரு வேடிக்கை என்ன என்றால், நான் ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல் படித்த காலத்திலேயே - (1965 - 68) என்னுடைய அனுபவங்களை பல வருடங்கள் கழித்து எழுதப் போகிறேன் என்று ஓர் உள்ளுணர்வு அடிக்கடி வந்து மனதில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தது. 

அந்தக் காலத்தில், TV, mobile, internet, blog எதுவும் கிடையாது. அப்படி இருந்தும் அந்த உள்ளுணர்வு எனக்கு எப்படி தோன்றியது என்று தெரியவில்லை! அந்த காலத்திலிருந்து கிட்டத்தட்ட 55 வருடங்களுக்குப் பிறகு இப்படி அனுபவங்களை எழுதிப் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது அதிசயம்! 

விவரம் அறிந்த வயதிலிருந்து நான் கண்டது, கேட்டது, அறிந்துகொண்டது, என்னுடைய உணர்வுகள் என்று தொடங்கி, நாகப்பட்டின வாழ்க்கை, பின் சென்னை வாழ்க்கை (திருமணத்திற்கு முன்) அலுவலக வாழ்க்கை, திருமண வாழ்க்கை - ஓய்வுக்குப் பின் வாழ்க்கை என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டு திட்டம் போட்டு வைத்திருந்தேன். 

இவற்றில், அலுவலக வாழ்க்கை பற்றி ஏற்கெனவே 'அலேக் அனுபவங்கள்' என்ற தலைப்பில், 2012 ஆம் ஆண்டு 30 பதிவுகள் எழுதி பகிர்ந்துகொண்டுவிட்டேன். 

ஆனால் - இப்படி எல்லாம் ஒரு பாலத்தில் நின்று யோசனை செய்து, வாராவாரம் ஒரு பதிவு இட்டுக்கொண்டிருந்த வேளையில்  பாலத்தின் கீழே நிறைய தண்ணீர் பிரவாகமெடுத்து ஓடி விட்டது. 

kgs அவர்களின் மரணம், (14.8.24), மனைவியின் மரணம் (28.11.24) என்று நிகழ்கால அதிர்ச்சிகள் என்னை கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு இழுத்து வந்துவிட்டன. 

இனிமேலும் நிகழ்காலத்தை லட்சியம் செய்யாமல் - பழைய கால அனுபவங்களை எழுதிக்கொண்டு இருப்பதில் மன நிறைவு இருக்காது. 

அதனால் இனிமேல் - ஒரு வகையில் Random Thoughts பகிர்வுதான் இங்கே KGG பக்கங்களில் இருக்கும். 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கருத்துகளை எழுதுங்கள். 

= = = = = = = = = = = =

55 கருத்துகள்:

  1. ​வயதாலும் நடந்த சம்பவங்களால் தளர்ந்து போய் தவிக்கும் நீங்கள் வாரம் ஒரு பதிவு எழுதுவது பெரிய காரியம். உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். "எண்ணங்கள்" கீசா மேடம் ஆட்சேபிக்க மாட்டார்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கங்கள்
    கிண்டில் புத்தகம் என்பது என்ன என்று எனக்கு தெரியவில்லை. தயவுசெய்து
    என்ன என்று சொல்லமுடியுமா

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    திரைப்பட நடிகை, நடிகர்களை நட்சத்திரமாக நினைபதற்கான பதில் நன்றாக உள்ளது. பலர் வானத்து நட்சத்திரமாக நம் மனதிலும் மறையாமல் இருந்து விடுகிறார்கள் என்பது உண்மை.

    ஒட்டியுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டால் இரட்டைக்குழந்தைகள் பிறக்கும் என்பதை நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டுள்ளேன். இன்று வரை அதை கடைப்பிடித்து வருகிறோம். நானும் இப்போது அப்படித்தான் வரும் வாழைப்பழங்களை எப்போதாவது சாப்பிடுகிறேன். ( இரட்டைப்பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிடுவது வயதில் பெரியவர்களுக்கு வந்த அதிர்ஷடமோ என வீட்டில் பிறர் நினைக்கவும் கூடும்.:)))
    (ஒரு பழத்திற்கே சுகருக்காக தடா என்று மருத்துவர் சொல்லியிருக்கும் போது இரட்டையை சாப்பிட்டால் என்னவாகுமோ ..? என்ற அச்சம் வேறு நமக்கு வரும். :)) )

    குடும்ப ஜீன்ஸ் என்பதை விட இப்போது மருத்துவ மாற்று உலகத்தில் இது இப்போது சகஜமாகி விட்டது. அந்த காலமென்றால் குடும்ப ஜீன்ஸ் என்று சொல்லலாம். அப்போது மருத்துவம் அவ்வளவாக முன்னேறவில்லை என்பது என் கருத்து.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. கௌதமன் அவர்களே
    நீங்கள் எப்போதும் போல்
    உங்கள் கடந்தகால. நகழ்கால
    வருங்கால. போன ஜென்ம
    நிகழ்வுகள் மற்றும் நினைவு களை தாராளமாக. எப்போதும்
    போல் பகிருங்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட துயரசம்பவங்கள் கடவுளின்
    செயல். வருத்தமாகத்தான் இருக்கும்.மனதைதளரவிடாமல் தொடருங்கள். உங்கள் ஞாபகசக்தியை பாராட்டுகிறேன்.
    தொடரட்டும் உங்கள்
    எங்கள் ப்ளாக்பணி.

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  7. கௌதம் ஜி

    எப்போதும் போல
    பழைய . நிகழ்வுகளை நினைவுகளை
    இயல்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.. மனதிற்கும் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும்

    இது எளியேனின் விருப்பம்..

    எல்லாவற்றுக்கும் மேலாக உங்களது சூழ்நிலையையும் பார்த்துக் கொள்ளவும்..

    பதிலளிநீக்கு
  8. ஆ!! கௌ அண்ணா, இரட்டைக் குழந்தைகள் பத்தி சொன்னத வாசித்ததும் என் கண்ணுல ரெண்டு ரெண்டா தெரியுதே!!!!! தலை கறங்குது! ஹாஹாஹா உறவு முறைகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. Come on, கௌ அண்ணா, கடந்த காலம் அலேக் மற்றும் இங்கும் கூட எழுதியிருக்கீங்களே உங்க பள்ளி, கல்லூரி சென்னைக்கு வந்தது பத்தி எல்லாம்....இன்னும் சுவாரசிய சம்பவங்கள் இருந்தால் எழுதலாமே.

    நிகழ்காலமும் எழுதுங்க,

    ஏன் எதிர்காலம் கூட எழுதலாமே சுவாரசியமா...ஒரு fiction!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயல்பா, தலை சிறிது நரைத்துள்ளதுபோல ஒரு புகைப்படம் பகிர்ந்தால், உடனே சாமியார் ரேஞ்சுக்குக் கற்பனை செய்துகொண்டு எதிர்கால ஜோசியம்லாம் எழுதச் சொல்றீங்களே கீதா ரங்கன்(க்கா)

      நீக்கு
  10. //இரட்டையாக ஒட்டிக்கொண்டிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால்// இயல்பான நிலையிலிருந்து வேறுபட்டிருக்கும் எதுவுமே ஜீனில் கோளாறு காரணமாக வருவது. அதனால் அவற்றைத் தவிர்ப்பது நமக்கு நல்லது. இப்படியெல்லாம் சொல்லாமல் 'இரட்டைக் குழந்தை' பிறக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். (பெண்ணைத் தொட்டால்-வெறும்ன தொட்டால் காது அறுந்துவிடும் என்று பயமுறுத்தியிருப்பதுபோல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் இருக்குமோ? ஆனால் நான் பள்ளியில் படித்த நாட்களில் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே ' ஆம்பளைப் பசங்க கூட பழகினா காதறுந்து போகும் என்று சொல்லி பயமுறுத்தியிருந்தனர் - இது என்னுடனும் நண்பன் நாராயணனுடனும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து வந்த விஜயலட்சுமி அப்போது சொன்ன தகவல்.

      நீக்கு
  11. //எல்லோர் வீட்டிலேயும் ஃபோல்டிங் சேர் என்று// நாகரீகம் என்ற பெயரில் பல பொருட்கள் காணாமல் போய்விட்டன. இன்னொன்று சாய்வு நாற்காலி. என் மாமனார், எங்கள் வீட்டில் ஒன்று வாங்கிவைத்துக்கொள்வீர்களா (அவர் வந்தால் உபயோகப்படும் என்ற எண்ணத்தில்) என்று கேட்டபோது, வீட்டின் இண்டீரியருக்கு செட் ஆகாது சார் என்று சட்னு சொல்லிவிட்டது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  12. //இதற்கான நியாயங்கள், இதற்கான உண்மையான காரணங்கள் நம் அறிவுக்கு எட்டாதனவாகத்தான்// நொண்டிக்கு சறுக்கினது சாக்கு. மனித மனமே அடுத்தவர்களை அடக்குமுறை செய்யும் எண்ணம் நிரம்பியது. அதனால் ஏதோ ஒரு காரணத்தால் குழுவாகச் சேர்ந்துகொள்வதும், ஏதோ ஒரு சாக்கை வைத்து மற்றவர்களை எதிரியாகப் பார்ப்பதும் தொடர்கிறது. (இந்திய மண்ணை உபயோகித்துக்கொண்டு, சீனாவுக்கு வால் பிடிக்கும், அதே சமயம் இந்த மண்ணின் பாரம்பர்யத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியை எதிர்க்கும் கம்யூனிசக் கொள்கையுள்ள நாட்டின் எதிரிகள்தாம் எனக்கு சட்னு மனதில் தோன்றுகிறது)

    பதிலளிநீக்கு
  13. //முதல் நாளே தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு,// நீங்க வேற.. இப்போதும் ஏதோ ஃபங்க்‌ஷனுக்கு கூடுவதற்கு முன்னால், சில பெண்கள், நாளை இந்த நிற ஷேடில் உடை உடுத்திவாருங்கள் என்று சொல்வதும் நடக்கிறது. எனக்கு இவற்றையெல்லாம் கேட்கும்போது எரிச்சலாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. //அச்சு புத்தகம், கிண்டில் புத்தகம் இரண்டில் எது// என் அனுபவத்தின்படி, அச்சுப் புத்தகத்தை மூளை உள்வாங்குவது போல கணிணித் திரையிலிருந்து உள்வாங்குவதில்லை (மொபைல், கிண்டில்....)

    பதிலளிநீக்கு
  15. //கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு// எனக்கு கடந்த சில வாரங்களாக வாழ்க்கையைப் பற்றி (பயணங்களோடு இருக்கும் படங்களோடு) எழுதலாமா என்று தோன்றிவருகிறது. ஆனால் வாழ்க்கைப் பாதையில் சில பகுதிகளை திரும்ப நினைக்கத் தோன்றுவதில்லை.

    பதிலளிநீக்கு
  16. முதல் முறையாக உங்கள் முகத்தை காட்டியிருக்கிறீர்களோ? எ.பி. ஆசிரியர்களும் ஒருவரான ஸ்ரீராம் தன் பேரன்களோடு என்று யாராவது புரளியை கிளம்பலாம். அது சரி, ஸ்ரீராம் ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேனென்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நோட் திஸ் பாயிண்ட்!

      நீக்கு
    2. ஒரு கல்யாண வீட்டுக்கு போறோம்னு வைங்க...  நம்மை எதிர்கொண்டு அழைப்பவர்கள்,

      "வாங்க...  வாங்க...   ஏன் வொய்ஃபை அழைச்சுட்டு வரலியா?  அம்மா   வரல்ல?  குழந்தைங்க வரலையா" என்றெல்லாம் ஆளாளுக்கு கேட்பார்கள்.  

      வந்த நம்மை இவர்கள் விரும்பவிலையோ என்று எண்ண வைத்து விடுவார்கள். 

       அது போல.... :))

      நீக்கு
    3. புரிந்துவிட்டது. பா வெ மேடம் - என் முகத்தைப் பார்த்த பின் 'ஸ்ரீராம் முகம் காட்டமாட்டேன் என்கிறாரே' என்றால், என் முகத்தை காட்டியதை பா வெ விரும்பவில்லை என்று நினைக்கிறாரோ என்று நான் நினைக்கக்கூடும் என்று ஸ்ரீராம் நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    4. ஆள விடுங்க, நான் வரலை இந்த விளையாட்டுக்கு.

      நீக்கு
    5. ஆள விடுங்க, நான் வரலை இந்த விளையாட்டுக்கு:))

      நீக்கு
    6. :)))) கொளுத்திப் போட்டுவிட்டு இப்படி ஓடுகிறாரே!

      நீக்கு
  17. உங்கள் அனுபவங்களை நீங்கள் விரும்பும் வண்ணம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. இரட்டை குழந்தைகள் பிறப்பது பரம்பரை வழக்கம்.

    பதிலளிநீக்கு
  19. கேள்வி பதில்கள் சுவாரசியம்.

    திரு.கெளதமன் அவர்கள் உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள் படிக்க காத்திருக்கின்றோம்.

    மனதைதேற்றிக். கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி பதில்கள் அருமை
      இரட்டை வாழைபழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும் என்று எங்கள் வீட்டு பெரியவர்களும் சொல்லி இருக்கிறார்கள். வாழை பழம் மட்டும் அல்ல, வாழைக்காய் கூட சமைக்க மாட்டோம் வீட்டில். என் சின்ன மாமியாருக்கு இரட்டை குழந்தை பிறந்து இறந்து விட்டது என்று சொல்வார்கள்.

      கெளதமன் சார், நீங்கள் உங்கள் மனநிலை சரியானதும் என்ன எழுத நினைக்கிறீர்களோ அதை எழுதுங்கள்.
      எழுத்து ஒரு ஆறுதல் தரும் விஷயம் அதை விட வேண்டாம்.




      நீக்கு
  20. இன்று மூன்றாவது நாளாகக் காய்ச்சல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      உங்களுக்கு காய்ச்சல் என படித்ததும் வருத்தமாக உள்ளது. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். சுக்கு, மிளகு, நறுக்குமூலம் சித்தரத்தை (சித்தருக்கு அத்தையா என கேட்பார் நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள். :)) ) சேர்த்து கஷாயம் வைத்து குடியுங்கள்.

      எனக்கும் இங்கு ஒரு மாதமாகவே ஜலதோஷம் என்னை விட்டு செல்வேனா என்கிறது. போன வாரம் காய்ச்சலும் தொடர்ந்து இருந்து இப்போது குணமாகி விட்டது. எல்லாம் இந்த விடாது பெய்யும் மழையும் குளிர்காற்றுந்தான் காரணம். தை பிறந்தால் சரியாகி விடும். விரைவில் தங்கள் உடல்நலம் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. சித்தருக்கு அத்தை -

      இது நல்லாருக்கே!

      நீக்கு
    3. காய்ச்சல் என்பது உடலில் உள்ள வேண்டாத பொருள் எதையோ வெளியேற்ற நம் உடல் நடத்தும் போராட்டம். கொஞ்சம் பத்தியம் இருந்து, எளிதில் ஜீரணிக்கக்கூடிய திரவ உணவு எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.

      நீக்கு
  21. வணக்கம் கௌதமன் சகோதரரே

    இன்று உங்கள் பக்கம் நன்றாக உள்ளது. உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள். எந்த காலமானாலும் உங்கள் பகிர்வுகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். புதன் தோறும் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆவலாக இருக்கிறோம். உங்கள் புகைப்படமும், இரட்டையர்களான பேர குழந்தைகளையும் பார்த்துக் கொண்டேன். படம் அழகாக வந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக மூலிகை வைத்தியம் தான்...

    இதன் வழி சர்க்கரை குறைபாட்டில் இருந்து விடுபட்டிருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!