செவ்வாய், 24 டிசம்பர், 2024

சிறுகதை - தங்கக் கூண்டு :: சியாமளா வெங்கட்ராமன்

 

ஷீலா தன் தோட்டத்தில் உள்ள செடிகளை, ஒவ்வொன்றாக தொட்டு அதன் தளிர் இலைகளையும் மிருதுவான பூக்களையும் தடவிக் கொடுத்தவாறு  வலம் வந்தாள், ரோஜா செடியின் அருகே வந்ததும் அதில் பூத்திருக்கும் ரோஜாவை தொட்டுப் பார்த்து ஆனந்தம் அடைந்தாள்.

 ஆனால் அதே சமயம் அவளை அறியாமல் ஒரு பெருமூச்சும் கண்களில் நீரும் வந்தது. 

அவள் கணவன் ராம்  அதை வாங்கி வந்து நட்டு, ஒரு குழந்தையைப் போல் வளர்த்ததை எண்ணிப் பார்த்தாள், அவள் கணவன் ராம் அவளை விட்டு போய்  இரண்டு வருடங்களுக்கு மேல் ஆயிற்று. அந்த செடியைப் பார்த்ததும்  அவன் நினைவு தன்னை பழைய நிகழ்ச்சிகளை அசை போட வைப்பதை நினைத்தாள். அந்த ரோஜாவை தொடும் பொழுது ராம் தன்னை தொடுவது போன்ற உணர்வு உடலில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்த தன்னை மறந்து சிரித்தாள்.

அப்போது வெளியே வந்த காவேரி "என்ன மாமி தனியாக நின்று சிரிக்கிறீர்கள்?"எனக் கேட்டாள். காவேரி அவர்கள் வீட்டின் ஒரு பகுதியில்  குடியிருப்பவள்.

 உடனே ஷீலா  "ஏதோ பழைய நினைவு" எனக் கூறி சமாளித்தாள்.

"ஓ...... நாளைக்கு பிள்ளை வீட்டிற்கு போவதால் செடிகளுக்கு 'குட் பை' சொல்கிறீர்களா? "எனக் கூறி சிரித்தாள்.  "ஆமாம் இவைகளை விட்டுப் போக மனமில்லை. ஆனால் கீதா சொன்னதிலிருந்து, 'போகாமல் இருப்பது தவறோ?' என்று தோன்றுகிறது "

"உங்கள் சிநேகிதி என்ன சொன்னாள் அப்படி?"  

"நேற்று கடைத் தெருவில் என் சிநேகிதி கீதாவைப் பார்த்தேன். அவள் தன் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பதாகக்  கூறினாள்.  'நீ ஏன் தனியாக இருக்கிறாய்? உன் மகன் வீட்டிற்குப் போய் அவர்களுடன் இரு; அதுதான் நமக்கு சந்தோஷம்' என்றாள். அதுதான் சரி என்று எனக்குப் பட்டது. ஆனால் என் செல்லப் பிள்ளைகளான செடிகளை விட்டு பிரிய மனமில்லை.."  எனக் கூறினாள்.

மறுநாள் காலை மகன்  மற்றும் பேத்தி ஸ்வேதா இருவரும் காரில் வந்து ஷீலாவை அழைத்துக் கொண்டு போனார்கள். ஷீலா போவதற்கு முன் காவேரியிடம் தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிப் பாதுகாக்கும் படியும் வீட்டை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளும் படியும் கூறினாள். வீட்டை விட்டு அரை மனதுடன்  பிள்ளை வீட்டிற்கு சென்றாள்.

பிள்ளை வீட்டு வாசலில் மருமகள் துர்கா சிரித்த முகத்துடன் "ஒரு வழியாக இங்கு வர சம்மதித்தீர்களே..... நீங்கள் இங்கு வந்தது உங்கள்பேத்தி ஸ்வேதாவிற்கு  பரம சந்தோஷம்" என்று கூறி வரவேற்றாள்.

அனைவரும் உட்கார்ந்து காலை டிபனை சாப்பிடுவது, ஸ்வேதாபள்ளிக்குச் செல்வது, துர்கா மற்றும் குமார் வேலைக்குச் செல்வது என அனைத்தும் ஷீலாவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மாலையில் ஸ்வேதா பள்ளி விட்டு வந்ததும், அவளுடன் விளையாடுவதும் கதை சொல்வதும் என ஷீலாவிற்கு பொழுது சந்தோஷமாக கழிந்தது. ஸ்வேதாவின் பழக்கவழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமா மாறுவதை கண்ட துர்கா ஸ்வேதாவை கொஞ்சம் கொஞ்சமாக பாட்டியிடம் இருந்து  பிரிக்க ஆரம்பித்தாள்.

 ஷீலாவிற்கு, அவள் அறையில்  டிவி கதை புத்தகங்கள்  வாங்கி வைத்து அவள் அறையை விட்டு வராமல் தனிமைப்படுத்த   ஆரம்பித்தாள்.  சாப்பிடும் நேரம் தவிரமற்ற நேரங்களில் ஷீலா தன் அறையிலேயே இருக்கும்படி செய்தாள் துர்கா.


 ஷீலா ஒரு நாள்மாலை கோவிலுக்கு சென்றாள். அங்கு அவள் சிநேகிதி கீதாவை பார்த்தாள். கீதாவின் முகம் வாடி இருப்பதைக் கண்டு "ஏன் என்னவோ போல் இருக்கிறாய்? உடம்பு சரியில்லையா? அமெரிக்காவில் இருந்து ஏன் வந்தாய்? " சரமாரியாக ஷீலா கேட்க..... "குழந்தைகளை வளர்க்க அப்போது நான் தேவைப்பட்டேன். குழந்தைகள் வளர்ந்து விட்டதால் இனி நான் அவர்களுக்குத் தேவையில்லை எனவே யூ எஸ் இல் இருந்து என்னை அனுப்பி விட்டார்கள் எனக்கூறி   வருத்தப்பட்டாள். துர்கா அவளை ஒரு ஒருவழியாக  சமாதானம் செய்தாள். அன்று இரவு முழுவதும் ஷீலாவிற்கு  தூக்கமே வரவில்லை. கீதாவின்  வாடிய முகமும் அவள் கூறிய வார்த்தைகளும் மனதில் வந்து கொண்டே இருந்தது.

காலை எழுந்ததும் டிபன் சாப்பிடும்போது குமாரிடம், "நான் வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. அங்கு வீடு எப்படி இருக்கிறதோ.... நான் அப்பா கட்டிய வீட்டிற்கு போகிறேன் இன்று நீ ஆபீஸ்க்கு போகும்போது என்னை அங்கு கொண்டு விட்டு விட்டு செல்" என்று கூறினாள். குமார் அதற்கு ஏதும் மறுப்பு கூறாமல் "சரிம்மா...  நீ ரெடியாக இரு." என கூறினான்.

 ஷீலா தன் வீட்டிற்கு வந்து கதவைத் திறந்ததும் தன்மேல் சுதந்திரக் காற்று பரவுவது போன்ற உணர்வு ஏற்பட உள்ளே வந்தாள். என்னதான் அனைத்து வசதிகள் பிள்ளை வீட்டில் இருந்தாலும்  நான் *தங்கக் கூண்டில் இருந்த கிளிதான்.* இனி நான் * சுதந்திரமாக பறக்கும் சாதாரண கிளி* எனக்கூறி சந்தோஷமாக தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க சென்றாள் ஷீலா!!


= = = = = =

12 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை நன்று. படங்கள் நன்றாக உள்ளது. இறுதிபடம் மிக அழகு. ஆனால் கூண்டுகிளி வயது முதிராமல் உள்ளதே..?

    ஒருவரின் சுதந்திரங்கள் பாதிக்கப்படும் போது தங்குமிடங்கள் அவருக்கு கூண்டாக தோன்றுவது உண்மைதான். முதலில் அம்மா தனியாக இருக்கிறாள் என்று அக்கறையாக விருப்பப்பட்டு அழைத்தவர்கள், பிறகு அம்மா சொன்னவுடனே அவசரப்பட்டு அவளை கொண்டு வந்து பழைய வீட்டிலேயே விடுவது இக்காலத்தின் சகஜகுணங்களாக ஆகி விட்டது. மனித மனங்களை புரிந்து கொள்ள மனித மனம் காட்டும் தயக்கந்தான் இந்த வேறுபாடுகளுக்கு காரணம். .

    "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.." கண்ணதாசனின் வரிகள் இக்கதையைப்படித்ததும் ஏனோ நினைவுக்குள் வருகிறது. எனினும் கதை மனதை பாரமாக்கி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து. இந்தக் கதையில், ஷீலாவின் மருமகள் துர்காவின் அணுகுமுறைதான் தங்கக் கூண்டு உருவானதின் காரணம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. கதை ஒன்றை சொல்கிறது. கமலா சொல்வது "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் "" என்பது போல அவர்கள் பாத்திரத்தின் தன்மையை புரிந்தும் கொள்ள வேண்டும்.

    //மாலையில் ஸ்வேதா பள்ளி விட்டு வந்ததும், அவளுடன் விளையாடுவதும் கதை சொல்வதும் என ஷீலாவிற்கு பொழுது சந்தோஷமாக கழிந்தது. ஸ்வேதாவின் பழக்கவழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமா மாறுவதை கண்ட துர்கா ஸ்வேதாவை கொஞ்சம் கொஞ்சமாக பாட்டியிடம் இருந்து பிரிக்க ஆரம்பித்தாள்.//

    ஸ்வேதாவின் பழக்க , வழக்கங்கள் மாறுவது தான் துர்காவிற்கு பயம்.
    தன்னிடம் பேசும் நேரங்கள் குறைவது வருத்தமளிக்கிறது. அவர்கள் சொல்லும் மளவே பாட்டிமார்கள் பேரன் பேத்திகளிடம் உரிமை எடுத்து கொள்ள வேண்டும். நம் குழந்தைகளை நம் இஷ்டம் போல் வளர்த்து விட்டோம், அவர்கள் பிள்ளைகளை அவர்கள் இஷ்டபோல வளர்க்க வழி விட்டு விலக கற்றுக் கொள்ள வேண்டும்.

    நம்மிடம் பிள்ளைகளை விடும் போது கொஞ்சி கொள்ள வேண்டும், நம்மிடம் விளையாட , பேச அனுமதிக்கும் போது பேசிக் கொள்ள வேண்டும்.

    ஷீலா , கீதாவிற்கு எல்லாம் வீடு இருந்தது வந்து விட்டார்கள், வீடு , மற்றும் வருமானம் இல்லாதவர்கள் பிள்ளைகளை நம்பி இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?

    படம் நன்றாக இருக்கிறது, காலத்துக்கு ஏற்றார் போல ஷீலா இளமையான கூண்டுகிளியாக இருக்கிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தற்சமயம் தங்கள் கால் வலி குறைந்துள்ளதா? இன்றைய கதைக்கு நல்ல கருத்தாக சொல்லியுள்ளீர்கள் சகோதரி. பெரியவர்கள் ஆகும் போது மனம் பக்குவபட வேண்டும் என்பது உண்மைதான். . ஆனால், நமக்கென்று வயதான பின் யாருமேயில்லையோ என்ற எண்ணம் பெரியவர்களுக்கிடையே அடிக்கடி உருவாவதுதான் இந்த உறவு சிக்கல்களுக்கு அடித்தளம். அதனால்தான் அந்த பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன என குறிப்பிட்டேன். ஆனாலும் எல்லோரும் அந்த நிலைக்கு எளிதில் வர இயலுமா என்றால், அதுவும் முடியாது. தாங்கள் சொல்வது போல் வீடென்ற ஒன்று இல்லா தவர்களின் மனப் புழுக்கம் முதியோர் இல்லம் என்ற ஜன்னலை திறக்க வழி வகுக்கிறது. எல்லோருக்கும் அந்த ஜன்னல் காற்று கிடைக்குமா என்றால் அதுவுமில்லை. மனப் புழுக்கங்களை சமாளித்து வாழ்ந்து வருபவர்களும் உண்டு. அதில் மேலும் புழுங்கி சுகவீனம் அடைபவர்களும் உண்டு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இறுதியில் இறைவன் அவரவர்களுக்கென்று அமைத்தப் பாதைதான் வழித்தடமாக என்றும் மாறாது இருக்கிறது என்பதை அந்த மேற்சொன்ன பக்குவங்களில் ஒரு பாடமாக எடுத்துப் பயில இறைவனே ஒரு ஆசிரியராக அமைய வேண்டும்.🙏.

      தங்கள் கருத்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. // ஷீலா , கீதாவிற்கு எல்லாம் வீடு இருந்தது வந்து விட்டார்கள், வீடு , மற்றும் வருமானம் இல்லாதவர்கள் பிள்ளைகளை நம்பி இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?// அட்சர லட்சம் பெறும் கேள்வி.

    பதிலளிநீக்கு
  7. இன்றைக்குப் பல இடங்களிலும் இப்படித்தான்..

    நிதர்சனம்..

    கதை நன்றாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!