'இளைஞர்கள் வேலை தேடுபவராக இருக்கக்கூடாது. வேலை தருபவராக இருக்க வேண்டும்' என ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன் சொன்ன வார்த்தை எனக்கு வேதவாக்காக தெரிந்தது. அப்போது நான் கல்லுாரி மாணவர். கல்லுாரி படிப்பு முடிந்ததும் இளைஞர்களுக்கு வேலை வாங்கித்தர முடிவு செய்து 2008ல் ஆரம்பித்தேன். இந்த 16 வருஷத்தில் 5600 பேருக்கு வேலை வாங்கித்தந்துள்ளேன் என நினைக்கும் போது ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது. இதற்கு தினமலர் சண்டே ஸ்பெஷலில் என் சேவை குறித்து வந்த கட்டுரையும் ஒரு காரணம்' என மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் 38 வயதான சிவசங்கரன்.
மதுரை அண்ணாநகரில் ஐ.டி., நிறுவனம் நடத்தி வரும் இவர், வேலை தேடும் இளைஞர்களுக்கு அவர்களின் படிப்பிற்கேற்ற வேலையை பெற்றுத்தருவதை சேவையாக செய்து வருகிறார். இதற்காக வேலை தேடுபவரிடமோ, வேலை தருபவரிடமோ எந்த கமிஷனும், பணமும் பெறுவதில்லை என்கிறார் சிவசங்கரன். சண்டே ஸ்பெஷலுக்காக சந்தித்தோம். '' என் சேவை குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷலில் வெளியான கட்டுரையை படித்து பல நிறுவனங்கள், இளைஞர்கள் என்னை தொடர்பு கொண்டனர். இதன்மூலம் நுாற்றுக்கணக்கானோருக்கு வேலை வாங்கித்தர முடிந்தது. என்னால் வேலை கிடைத்த சிலர், தங்கள் கிராமங்களில் சண்டே ஸ்பெஷல் கட்டுரையை மந்தை, கோயில் பொது இடங்களில் ஒட்டியுள்ளதை பார்த்தது சந்தோஷமாக இருந்தது. பலர் வேலையில் சேரும்போதும், நிறுவனங்கள் வேலை தரும்போதும் எனக்கு அனுப்பும் மெசேஜை படிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கும். நம்மைச்சுற்றி ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. வேலை கேட்டு வரும் விண்ணப்பங்களை ஆராய்ந்து, நேர்முகத்தேர்வு நடத்தி, தேவைப்பட்டால் எழுத்து தேர்வும் வைத்து ஆட்களை தேர்வு செய்து தகுதியானவர்களாக நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறேன். ஐ.டி., அக்கவுண்டன்ட் பணிக்கு ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். அதற்கேற்ற திறமை பலருக்கு இல்லை. படிப்புக்கேற்ற அறிவோ, ஆங்கில புலமையோ இருப்பதில்லை. திறமையானவர்கள் கிடைத்தாலும் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவர்கள் இருப்பதில்லை. பணியில் சேர்ந்தவுடனே சலுகை எதிர்பார்க்கிறார்கள். பணி நேரத்தை கணக்கிட்டு மட்டுமே உழைக்கிறார்கள். அதை தாண்டி சிந்திப்பதில்லை. ஆரம்பத்தில் நான் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி, இறங்கி 'உங்களுக்கு ஆட்கள் தேவையா' எனக் கேட்டு, ஆட்களை அனுப்பிவைத்தேன். இன்று அவர்களாகவே எங்களுக்கு இவ்வளவு ஆட்கள் தேவை என அழைப்பு விடுக்கும் அளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருக்கிறேன். ரோட்டரி மூலம் சில சமூகப்பணிகளையும் செய்து வருகிறேன். கடந்தாண்டு மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியரை விமானத்தில் சென்னை அழைத்துச்சென்றேன். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். 14 பொது கழிப்பறைகளை ரோட்டரி சார்பில் கட்டிக்கொடுத்துள்ளேன். என் அடுத்த இலக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதுதான்'' என்றார்.
இவரை வாழ்த்த 99449 74003
=============================================================================================
தமிழ் கல்விக்கு உதவும் அமெரிக்கா மென் பொருள் பொறியாளர்-_ எழுத்தாளர்
'வாஷிங்டன் டி.சி பகுதியில் உள்ள வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் போட்டிக்கு 2008 ல் நடுவராக இவரை அழைத்திருந்தார்கள். நண்பர் வேல்முருகன் இதைத் துவங்கி நடத்தி வரும் இது முழுக்க தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வார இறுதிகளில் தமிழ் கற்றுத் தருவதைப் பற்றியும் அப்போதுதான் அறிந்து அலுவல் பணிக்குப் பின் எழுத்துப் பணியையும் மேற்கொள்ளுவதால் அது முடியாமல் போய்க் கொண்டிருக்க, மனைவி கவிதா அங்கே தமிழாசிரியையாக தனது சேவையை அளித்து வருகிறார். அப்பள்ளி தமிழ் கற்றுத் தருவது மட்டுமல்லாமல் தமிழுக்கு அங்கிருக்கும் அமெரிக்க பள்ளிகளில் செகண்ட் லாங்வேஜ் அந்தஸ்து வாங்கித் தந்திருக்கிறது, பொங்கல் பண்டிகையை வர்ஜீனியா மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட விழாவாக ஆக்கியிருக்கிறது. இங்குள்ள ஒரு தெருவுக்கு வள்ளுவன் பாதை என்று பெயரிட முயற்சி எடுத்து வெற்றி கண்டுள்ளது. அமெரிக்க அரசு நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது இப்படிப் பலப்பல முன்னெடுப்புகள். இதற்கு சத்யா பாஸ்கர் குமார் போன்ற நண்பர்களின் கடும் முயற்சிகளுக்கும், வெற்றிக்கும் ஆதரவு அளித்து வருகிறார்.......
=====================================================================================
சிங்கப்பூரில் இந்திய இசைக் கலைஞருக்கு அரசின் உயரிய விருது
பன்முகத் தன்மையுடன் மிளிரும் சிங்கப்பூரின் கலை, கலாச்சாரச் சூழலுக்கு சிறப்பான பங்களிப்பு நல்கிய சிங்கப்பூரின் புகழ் பெற்ற இந்தியக் குழலிசைக் கலைஞர் முனைவர் கானவினோதன் ரத்தினத்திற்கு சிங்கப்பூரின் மிகச் சிறப்பு வாய்ந்த கலை இலக்கிய விருதான கலாச்சாரப் பதக்கம் வழங்கி அதிபர் தர்மன் சண்முகரத்னம் கவுரவித்தார். நாட்டின் மதிப்புமிகு கலாச்சாரப் பதக்கத்தைத் தமது 63 ஆவது வயதில் பெற்ற செய்தியறிந்து ஆனந்தக் கண்ணீர் விட்ட விருதாளர் இவ்விருதை மறைந்த தம் பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக நெஞ்சுருகத் தெரிவித்தார். ஏறத்தாழ நாற்பதாண்டுத் தொடர் முயற்சிக்குக் கிடைத்த விருதாகக் கருதுவதாக அறிவித்தார். பல்வேறு வகையில் தமக்கு உதவிய நல்லுள்ளங்கள், ஆதரவளித்த சமூகம், உடன் பயணித்த சக கலைஞர்கள் என அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தேசியக் கலைக் கூடத்தில் நவம்பர் 27ஆம் தேதி மாலை நடைபெற்ற சிங்கப்பூரின் கலைத் துறைக்குத் தனித்துவமிக்க பங்களிப்புகளை நல்கிய கலைஞர்கள் அறுவருக்கு கலாச்சாரப் பதக்கமும் இசைக் கலைஞர் விருதும் வழங்கப்பட்டன. முனைவர் கானவினோதன், சியு ஹொக் மெங் ஆகியோருக்கு கலாச்சாரப் பதக்கமும் வயலின் இசைக் கலைஞர் ஆலன் சூ ஸீ ஹோ- இசையமைப்பாளர் இவான் லோ ஜீன்பெங், திரைப்படத் தயாரிப்பாளர் டான் சி என் அச்சுச் சிற்பி ஸாங் புமிங் ஆகியோர் இளம் கலைஞர் விருது பெற்றனர். கலாச்சாரப் பதக்கம் 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வரை 137 பேர் இப்பதக்கம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
==========================================================================================================
நான் படிச்ச கதை (JKC)
கண்கள்-ஆர்வி
படம் நன்றி ஜீவி சார். (பூவனம்)
என்னுரை.
பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளே, மற்றும் எல்லோருக்கும் முதற்கண் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று ‘நான் படிச்ச கதை’ பகுதியில் இடம் பெறும் இக்கதை மறைந்த எழுத்தாளர் ஆர்வி என்ற புனைபெயர் கொண்ட ஆர். வெங்கட்ராமன் (1918-2008) அவர்கள் எழுதிய “கண்கள்” என்ற சிறுகதை. ஆர் வி யை பற்றி அறிமுகப்படுத்த, நான் சொல்வதை விட அவரைப் பற்றி நன்கு அறிந்த, அவருடன் பழகிய ஜீவி சார் எழுதிய ஒரு பதிவின் சுட்டி தருகிறேன்.
அன்று ஜீவி சார் எழுதியது கிட்டத்தட்ட ஒரு இரங்கற்பா ஆகிவிட்டது. பதிவு ஏப்ரல் 2008இல். ஆர்வி யின் இறப்பு ஆகஸ்ட் 2008 இல். ஜீவி சாரின் பதிவு அவருடைய “பூவனம்” தளத்தில் இல்லை என்றாலும் ஆர்ச்சிவில் இருக்கிறது. சுட்டி இதோ ஆர்வி
‘கண்கள்’ என்ற தலைப்பை பார்த்ததும் சுப்ரமணியபுரம் திரைப்பட பாடல் கண்கள் இரண்டால் நினைவில் தோன்றியது. கண்கள் இரண்டால் காதலாகிய ஒரு பெண்ணின் முக்கோணக் காதல் கதை தான் ‘கண்கள்’. பழைய கால திரைப்படங்களில் எடுத்தாளப்பட்ட ஒரு “காதல்” சப்ஜெக்ட்.
ஆயிஷா, அஜீஸ், அப்துல் முக்கிய பாத்திரங்கள். கதையின் வித்தியாசமான முடிவுக்குப் பொருந்தும்படி பாத்திரங்களை முஸ்லீம் சமுதாயத்தினராகச் சித்தரித்து, அப்துல், அஜீஸ் என்ற இரட்டை சகோதரர்களையும் படைத்து குறை சொல்ல முடியாத நிலையில் கதையை நகர்த்துகிறார் ஆர்வி. கதைக்கு மேலும் மெருகூட்ட அன்றே (1954) ல் இருந்த கதைகளுக்கு உரிய பாரம்பரிய இலக்கண சுத்த தமிழைத் தவிர்த்து உருது கலந்த பேச்சுத் தமிழில் கதையை எழுதி இருப்பது மேலும் சிறப்பான ஒன்று.
இன்று, இங்கு கதை முழுதும் தரப்படவில்லை. கதை கலைமகளில் 1954 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது. சிறுகதைகள்.காம் தளத்தில் இருந்து பெறப்பட்டது. கதைச் சுருக்கம் ஆசிரியர் வாக்குகளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. கதையின் போக்கை சிறிது மாற்றி அமைத்து சுருக்கத்தைத் தந்திருக்கிறேன். ஆகவே ஒரிஜினல் கதையை சுட்டியில் சென்று வாசியுங்கள். சுட்டி இதோ
=======>கண்கள்<=======
கதையின் தலைப்பு ‘கண்கள்’ என்பதை விட ‘மீண்ட காதல்’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து.
கண்கள்-ஆர்வி
அப்துல்லும் அஜீஸும் இரட்டையர்கள் பெற்றோர் இல்லை. அவர்களைப் பிறந்தது முதல் பார்த்து வரும் கிள்ளி மேட்டு மக்களுக்கே தினசரி ஆள்மாறாட்டம் ஏற்படுவதுண்டு. உருவத்தில்தான் அவர்கள் ஒரே அச்சு என்றால் குரல், குணம் ஆகிய எல்லாவற்றிலுமே அவர்கள் ஒரே அச்சுத்தான். தன்மையிலே நுணுக்கமான வேறுபாடு இருக்கலாம்.
கிள்ளிமேட்டு வாசிகள் அப்துல் என்று நினைத்துக்கொண்டு அஜீஸுடன் பேசுவார்கள். அஜீஸ் என்று எண்ணி அப்துலிடம் ஏமாறுவார்கள். இது தினசரி நடக்கிற காரியந்தான்.
ஒரு நாழிகை முன்னால் பிறந்த அப்துல், அண்ணன்; சற்றுப் பொறுத்துப் பிறந்த அஜீஸ், தம்பி; அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு ஈடு இணையே கிடையாது.
ஊரிலே அந்த ஒரு வீடுதான் தனிக் குடும்பம்.
அப்துல் பண விஷயத்திலே பலே சூரன். அஜீஸ் காரியம் எதையும் கருத்தாகச் செய்து முடிப்பதிலே சூரன். சிறு சிறு குத்தகைகளை யெல்லாம் ஏலம் கேட்டு, எடுத்து நடத்துவது பரம்பரைப் பாத்தியமாய்ச் செய்து வந்த தொழில். ரோட்டுக் குத்தகை, முடைசல் குத்தகை, வாய்க்கால் வெட்டு, சாலைக் குளங்களின் பாசிக் குத்தகை – ஐந்நூறு, ஆயிரம் என்று சிறு சிறு கைமுதல் போட்டுச் சம்பாதிப்பார்கள். சொற்ப நிலமும் உண்டு.
—--------------------------------------------------------------------
ஆயிஷாவின் தந்தை காதர் பாட்சா.
காதருக்குத் ஒரே பெண் ஆயிஷா; தாயில்லா பெண்... கோஷா முறை கட்டி வராது அங்கெல்லாம். கிராமத்திலுள்ள மற்றப் பெண்கள் மாதிரித்தான் ஆயிஸாவும்.
ஆயிஷா பீவிக்கு நல்ல கட்டு மஸ்தான உடம்பு.
நிறத்தில் ஆயிஷா பாரஸீகத்து ரோஜாவல்ல; அராபியப் பாலையிலே பழுத்த பேரீச்சையின் நிறந்தான். அதாவது மாநிறத்திலும் சற்று மட்டான நிறந்தான். இருந்தாலும் நீண்ட கண்களும் வண்டான விழிகளும் அவளுடைய தளதளப்பான மேனிக்கு அழகு முத்திரை வைத்திருந்தன.
—---------------------------------------------------------------------------------------
கிள்ளிமேட்டிலிருந்து கீரங்குடிக்கு நாலு மைல், சாலைக்குக் கப்பி போடும் வேலையை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அண்ணனும் தம்பியும் மாறி மாறி வேலையை மேற்பார்வை பார்க்கப் போவார்கள்.
அன்று தம்பிக்காரன் அஜீஸ் போனான். கூலி வேலை செய்பவர்களுக்கு அன்றாடம் கூலி போட்டுவிடுவது வழக்கம். அஜீஸ் மடி நிறைய அணாச் சில்லறைகளைக் கட்டிக்கொண்டு கீரங்குடிக்கு வந்து சேர்ந்தான். கும்பலாகக் கூடி நின்ற ஆண் பெண்களுக்கெல்லாம் சிரித்த முகம் மாறாமல், சிணுங்கு முகம் காட்டாமல் அஜீஸ் கூலி போட்டு முடித்த அழகே தனி.
இந்தச் சந்தடியையும் அஜீஸையும் வேலி ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆயிஷா.
அஜீஸ் தலை நிமிர்ந்து பார்த்ததை அவள் நெஞ்சு மறக்கவில்லை. அந்தக் கண்கள் தாம் எப்படி அவளைப் பார்த்தன! ஆயிஷா உடலைச் சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். எப்படிப் பார்த்தாளோ அவளுக்கே இன்று தெரியாது. இதற்கு முன் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறாளே; நாணம் என்பது நாண்போல் எழுந்து அவள் உள்ளத்தில் எங்கேயோ போய்ப் பாய்ந்தது. அவள் தலையைக் குனிந்து கொண்டு விட்டாள்.
ஆயிஷாவின் தந்தை காதர் பாட்சா அஜீஸின் வயசுக்கு மீறிய சாமர்த்தியத்தை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். ஆயிஷாவை விட அஜீஸ் மனங் குழம்பிப் பம்பரக் கிறுகிறுப்பிலிருந்து மீண்டு, “காக்கா! கொஞ்சம் தண்ணி வேணுமே! கொண்டாரச் சொல்றியளா?” என்றான்.
காதர் பாட்சா எழுந்திருக்கப் போனார்.
“நீங்க வாணாம், வாப்பா. இதோ வாரேன்” என்று இரண்டு துள்ளலில் ஓடினாள் ஆயிஷா.
“தம்பி, குந்திருந்து தண்ணி வந்தாக் குடிங்க. இதாலே வந்துட்டேன்” என்று போனார்.
ஆயிஷாவுக்கு வெட்கத்துடன் சிரிப்புப் பொத்துக்கொண்டுதான் வந்தது. அஜீஸ் தண்ணீரைப் பருகாமல் ஆயிஷாவின் கண்ணைப் பருகிக் கொண்டிருந்தான்.
“தாகமிண்டீங்களே!”
“ஆமா ஆமா, தாகந்தான்!”
“பின்னே, குடிக்கலாமே”.
காதர் பாட்சா வந்ததும், “வாரேன் காக்கா! இன்னும் மூணு நாளைக்கு இங்ஙனேதான் வேலை” என்று சொல்லி அஜீஸ் விடை பெற்றுக் கொண்டு போனான். கோணிப் படுதா அசைந்தது. அதில் இருந்த ஓட்டையிலே இரண்டு வண்டுகள் சுழன்றன.
மறுநாள் மயங்கி வந்தது. இன்று அஜீஸுக்குப் பதிலாக அப்துல் சில்லறையைக் கட்டிக்கொண்டு வந்தான். ஆனால் ஆயிஷா அவனை அஜீஸாகவே எண்ணிக்கொண்டுவிட்டாள். வருஷ வருஷங்களாய்ப் பார்த்தவர்களே தடுமாறும்போது, அசைப்பில், அரைப் பார்வையில், அந்தப் படபடப்பில் பார்த்த ஆயிஷா…
கிட்டத்தட்ட அஜீஸ் கண்ட நிலையிலேயே அப்துல் இன்று ஆயிஷாவைப் பார்த்தான். ஆயிஷாவின் இளநகை தெரிந்தும் தெரியாமலும் அரும்பி நிற்பதைக் கண்டு பிரமித்தான்.
கீரங்குடியில் இன்னும் இரண்டு நாள் வேலை இருந்தது. அப்துல் தம்பியைப் பார்த்து, அஜீஸ், “நீ இரண்டு நாளைக்குக் காளவாய் வேலையைப் பார்த்து முடித்து விடு. நான் ரோட்டு வேலையைப் பார்க்கிறேன்!” என்று எப்போதும் வேலையைப் பங்கிட்டுக் கொள்வது போலச் சாதாரணமாகச் சொன்னான்.
மறு நாள் அப்துல் சீக்கிரமாகவே கீரங்குடிக்குப் போய்விட்டான். கடை வாசலில் கிடந்த கட்டிலில் போய் உட்கார்ந்தான். கடை மூடிக் கிடந்தது. ..அப்துலைக் கண்டதுமே அவள் கையும் மெய்யும் தம் வசமிழந்தன. தொப்பென்று ஆட்டுக் குட்டியைக் கீழே போட்டு விட்டுத் தலைப்பினால் உடம்பை இழுத்து மூடிக்கொண்டாள். சிரிக்கும் கண்கள் குமிழியிட்டன.
அப்துல் கூச்சத்துடன், “காக்கா எங்கிட்டுப் போயிக்கிறாக? கடையைப் பூட்டுப் போட்டிக்கிறாகளே!” என்றான்.
“வாப்பா சந்தைக்குப் போயிக்கிறாக! வந்துடுவாக!” என்று ஆயிஷா துள்ளியோடிய ஆட்டுக் குட்டியைத் தூக்கிச் சென்றாள்.
அவன் போன பிறகு, அன்றிரவு காதர் பாட்சா ஆயிஷாவைக் கூப்பிட்டு, “கிள்ளிமேட்டுத் தம்பி எப்படிக்கிறாக?” என்று நாத் தழுதழுக்கக் கேட்டார்.
ஆயிஷா தன் முகத்தைக் கைகளால் மூடி மறைத்துக்கொண்டாள். காதர் பாட்சாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. “அடுத்த மாசம் நிக்காஹ்! தம்பிக்குக் கண்டிராக்டுப் பணம் கைக்கு வந்துடணுமில்லே!” என்றார்.
ஆயிஷா இப்போதும் முகத்தை மூடிக்கொண்டு கட்டிலில் திரும்பிப் படுத்தாள்.
—----------------------------------------------------------------
அஜீஸ் புகையும் விறகோடு போராடுவதைக் கண்ட அப்துல், “தம்பி, எத்தினி நாளைக்கு இந்த வம்பு? நிக்காஹுக்கு ஏற்பாடு செய்திட்டேன்” என்றான்.
அஜீஸ் அவனை ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தான், ‘எப்போது, ஏது’ என்பது போல.
அப்துலுக்கு அதற்குமேல் சொல்ல முடியவில்லை. வெட்கம் வந்து தடுத்தது. அண்ணனும் தம்பியும் கூடிப் பேசி முடிவு கட்டாத காரியம் முதல் முதல் இதுதானே?
“ஆமா தம்பி, கீரங்குடிக் காக்கா காதர் பாட்சா ஈக்கிறாகள்ளே, அதுக மகதான்-“.
“என்னது, கீரங்குடியா?’”
அப்துல் தலையை ஆட்டி அதை உறுதிப்படுத்தினான்.
‘கீரங்குடியிலே அந்த ஒரு பொண்ணுதானா? எத்தினியோ பொண்ணு!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அஜீஸ் சமாதானம் கொள்ளப் பார்த்தான்.
“தம்பி, நாளைக்குச் சாங்கிசன் ஆன பணத்தைக் கசானாவிலே போய் வாங்கியாந்து, அவுக்கிட்டே பத்து நோட்டிலே ஒரு நோட்டைக் கொடுத்திட்டு வந்திரு. உன்னைக் கொணாந்து கொடுக்கச் சொல்றேன்னிண்டு வந்திக்கிறேன். நீயுந்தான் அவுகளைக் கண்டுக்கிணமில்லே?”
அஜீஸ் எப்படிப் பேசினான்! இன்னும் அவனுக்குத் தானும் வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்பது தெரியாது. ஒரு சிறு மயிரிழையில் தொங்கிய ரத்தினத்தை மகாசமுத்திரத்தில் நழுவ விட்டுவிட்டோம் என்பது தெரியாது.
“இந்த ஊரிலே காதர் பாட்சா அப்படீண்டு ஈக்கிறாகளாமில்லே?”
“ஆமா..”.
“எங்கிட்டு?”
“இங்கிட்டுத்தான்…”-ஒரு விம்மல் சத்தம் படுதாவுக்குள்ளிருந்து கேட்டது.
மின்னலும் இடியும் கண்ணையும் காதையும் பறித்துக்கொண்டு போனதுபோல் அப்படியே விறைத்துப்போய் நின்றான் அஜீஸ். பொட்டையன் பார்வைதான்! செவிடன் காதுதான்!
“இங்கிட்டா, இங்கிட்டா?” என்று திருப்பித் திருப்பிக் கேட்டான். அருகில் கிடந்த கட்டிலில் தொப்பென்று விழுந்துவிட்டான்.
அந்தக் குரலும் பார்வையும்!
“நீங்களா, நீங்களா… தெரியலியே, தெரியலியே!” ஆயிஷா முகத்தைத் திரையினால் மூடிக்கொண்டு அழுதாள்.
அல்லாவின் ஆணை!
—--------------------------------------------------------------
அப்துலுக்கும் ஆயிஷாவுக்கும் ‘நிக்காஹ்’ நடந்த அன்று அஜீஸ் சிங்கப்பூர் போகும் கப்பலில் ஏறிவிட்டான். இரட்டைப் பறவையிலே ஒரு பறவை பறந்தோடிவிட்டது. அந்த இடத்திலே இந்தப் பேடை வந்து சேர்ந்தது.
இரண்டு வருஷங்கள் துன்பமாய் நெளிந்தன. அப்துலுக்கும் கசந்து விட்டது. அஜீஸ் காரியத்தைச் செய்து முடிப்பதில் கைகாரன். பண விஷயத்தில் அப்துல் கருத்தானவன். பணத்தாசை தங்கிவிட்டது; அதைச் செய்து முடிக்கும் சக்திதான் பறந்து விட்டதே!
எடுத்த குத்தகையெல்லாம் நஷ்டம்; செய்த வேலையெல்லாம் இரட்டிப்பு வேலை. காண்ட்ராக்டு கொடுக்கவே யாரும் முன்வரவில்லை. கையைக் கையைப் பிசைந்துகொண்டு அப்துல் நின்றான். சொற்ப நிலந்தான் மிச்சம்.
அப்துலுக்கு அஜீஸின் ஞாபகம் வந்தது. தனக்குள்ள பங்கை உடனே விற்றான். ஆயிஷாவின் கையிலே ஒரு பகுதிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, “நானும் சவரு போகப்போகிறேன்” என்றுகிளம்பினான்.
ஆயிஷாவுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. காதர் பாட்சா ஓடி வந்து, எனக்கு ஒரே மக. அதைத் தவிக்க விட்டுட்டுப் போகாதீங்க, தம்பி!” என்று காலைப் பிடித்துக்கொள்ளாத தோஷமாய்க் கதறினார்.
சும்மாண்டு இரிங்க. கப்பலுக்குப் போனவங்க கை நிறையக் கொண்டாந்தாக்கா சரியாப் போயிரும். இங்ஙனே இருந்திக்கிட்டு என்னாண்டு செய்யர்” என்று புறப்பட்டுவிட்டான் அப்துல்.
அதே ஏக்கம். மகளுடைய ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாமலே காதர் பாட்சா படுக்கையில் விழுந்து, அதற்குப் பிறகு எழுந்திராமலே இரண்டு வாரத்தில் ‘மவுத்’தாகிவிட்டார்.
ஆயிஷா அன்றுமுதல் தனியானாள். அதற்குப் பிறகுதான் அவள் அத்தை மகன் ஹனீபாவைக் கூத்தாநல்லூரிலிருந்து அழைத்து வந்து வயிறு வளர்க்கக் கடையை நடத்தி வந்தாள்.
நோஞ்சல் பூனை போல ஆறு வயசில் வந்த ஹனீபா, இந்த எட்டு வருஷத்தில் கொழுகொழுவென்று வளர்ந்துவிட்டான். ஆயிஷாவுக்கு அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு பெருமை; ஆறுதல். ஊட்டி வளர்த்த பெருமை; உள்ளூற அரித்து வந்த உள்ளத்துக்கு மருந்தாக அவன் இருப்பதில் ஆறுதல்.
ஹனீபா வந்ததிலிருந்து அவள் எல்லாவற்றையும் மறந்துவிட நினைத்தாள். அல்லாவின் மீது அசையாத நம்பிக்கையால் ஓரளவு வெற்றியும் கண்டாள். ஹனீபாதான் அவளுக்குத் துணை; ஆறுதல்; அதனால் தான் அவளுக்குப் பெருமை, பற்றுதல் எல்லாம். அவன் வந்தது வேறொரு காரியத்துக்குச் சௌகரியமாக இருந்தது. அவனைப்பற்றி விசாரித்து வருஷத்துக்கு இரண்டு முறையாவது ஊரிலிருந்து ஆயிஷா பீவிக்குக் கடிதம் வரும்.
எட்டு வருஷங்கள் ஆகிவிட்டன. அப்துல் போய்த்தான் சேர்ந்தானோ, போகாமலே தான் இருந்தானோ, ஆயிஷாவுக்கு ஒரு வரி எழுத வேண்டுமே! எழுதவே இல்லை. செப்பாலே அடித்த ஒரு காசு அனுப்ப வேண்டுமே! அனுப்பவே இல்லை. ஏன் என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். மற்றவருக்குத் தெரியாது.
ஹனீபா தன் தாய் வீட்டுக்குப் போகப் போகிறான். தந்தையை இழந்த அவன், தாய்க்குத் துணையாக இருக்க வேண்டியவன். அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவளுக்குப் பெற்ற தாயைவிட, துக்கம் பீரிட்டுக்கொண்டு வந்தது.
—---------------------------------------------------------------
“பீவி, பீவி!” வெளியிலிருந்து வாண்டையார் வீட்டு ஆச்சியின் குரல் வந்தது. எழுந்து பார்த்தாள். இருள் வந்துவிட்டது. முகத்தைத் தண்ணீரை விட்டுக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.
“ஏதோ பஸ்ஸு வந்து நிக்கிது, பாரு!”
வாண்டையார் வீட்டு ஆச்சி சந்தேகப்பட்டுத்தான். கூப்பிட்டாள். கண்டக்டர் பஸ் மீது ஏறினான். புழுதிப் படலத்தைக் கிளப்பிவிட்டு வந்த பஸ் தன்மீதே அது கவிந்து விடுவதைப் பொறுத்துக்கொண்டு நின்றது. .
புழுதிப் படலம் பஸ்ஸைத் திரையிட்டு மறைத்தது. ஆயினும் கோயிந்தி சொல்லிவிட்டாள்: “ஒரே பிரம்புப் பெட்டிங்களாக இல்லே வரிசை இறங்கறாப்பலே இறங்குது!”
“கப்பலுக்குப் போன மனுசன் தாண்டி வர்றாருடியோவ்!” என்று கூவினாள் ஆச்சி.
எத்தனை தினுசான பெட்டிகள்! சாமான்கள்! பாய்கள், தலையணைகள் கூடவா?
கோயிந்தி, “எப்படித்தான் இத்தினியும் பஸ் கொண்டுச்சு? ஆயிஷா வூடு அடங்காதே?” என்றாள்.
ஆயிஷாவுக்கு மார்பு படபடவென்று அடித்துக்கொண்டது. பூமி, பஸ், கடை, சாமான்கள், வீடு, ஆச்சி, கோயிந்தி – எல்லாம் ‘கிர் கிர்’ என்று காலோடு தலையாகச் சுற்றின.
பஸ், ‘புர்’ ரென்று சத்தம் போட்டுக்கொண்டு புறப்பட்டது; ஆச்சி அவசர அவசரமாகச் சாலைக்கு ஓடினாள்.
சில்க் கைலி, சில்க் சட்டை, சில்க் கோட்டு, சில்க் டை, சிங்கப்பூர் ஸில்க் குடை; அழகான தொப்பி, பூட்ஸ், தங்கத்திலே செயின் போட்ட கடிகாரம், பத்து விரலுக்கும் கல் பதித்த மோதிரங்கள், தங்கத்திலே பித்தான்கள், ஊக்குகள் – எல்லாம் தகதகவென்று டால் வீசின.
வாண்டையார் வீட்டு ஆச்சி பிளந்த வாயுடன், “வாங்க ஐயா. வாங்க! சவரு போய் வாரீங்களா?” என்றாள்.
“காதர் பாட்சா வூடு இது தானே?”
“ஆமாங்க. தெரிஞ்சுதான் கூப்பிட்டேன். அம்மா, ஆயிஷா! வந்திட்டாக! வந்திட்டாக!” என்று ஆச்சி அங்கிருந்தபடியே கூப்பாடு போட்டாள். “ஏலே, இங்ஙனே வாடா! இந்தச் சாமான் பெட்டியை யெல்லாம் கொண்டுபோய் வையிடா. ஐயா காசு கொடுப்பாக!” என்று மாட்டுக்காரப் பையன் ஒருவனைப் பார்த்துச் சிபாரிசு செய்தாள்.
‘சரக், சரக், சரக், சரக்’ என்று கால் பூட்ஸ் கட்டியங் கூற, காலடிச் சத்தம் வீட்டு நடையேறி அருகில் வந்தது. அத்தர் நெடி அதற்கு முன்னே வந்தது.
“யாரு வூட்டுலே?”
“ம்ம்…” முனகல் குரலைத் தவிர வேறு பதில் சத்தம் கேட்கவில்லை.
“ஒரே இருட்டாக் கெடக்குதே! வூட்டிலே யாருமில்லியா?”
கோட்டுப் பையில் கைவிட்டு எடுத்து, ‘சக்’கென்று தீக்குச்சி கிழிக்கும் சப்தம் ‘புஸ்’ என்று விரிந்தது.
விரிந்த இரண்டு விழிகள் எதிரே இரண்டு விழிகளை மட்டும் பார்த்தன.
ஆயிஷா குச்சி எரியுமட்டும் அந்தக் கண்களைக் கூர்ந்து பார்த்தாள். குச்சியைப் பிடித்த கை மீண்டும் ஒரு குச்சியை எடுத்துக் கிழிக்கப் போயிற்று. அவள் அந்தக் கையை அசைய வொட்டாதபடி இறுகப் பற்றிக்கொண்டாள்.
இன்ப வாடை ஒன்று வீசியது.
“என்னைத் தெரியுதா? நான் யாருண்டு தெரியுமா, பீவி?’ என்று அந்த மின் அலை அவள் இருதயத்திலே பரவிப் பாய்ந்தது; கிசு கிசு வென்று மெல்லக் கேட்டது.
ஆயிஷாவின் மற்றொரு கை அவன் வாயை வேகமாகப் பொத்தியது. “பேசாதிரிங்களேன், பேசாதிரிங்களேன்!” என்று ஆயிஷா மூச்சு முட்டத் தடுமாறினாள்.
மெளனம்; அமைதி.
“அண்ணாச்சி ‘மவுத்’தாயிட்டாக, தெரியுமா?”
“…”
“அவுக இங்கிட்டிருந்து வந்த மறு மாசமே மவுத்தாயிட்டாகளாம். எனக்குப் போன மாசந்தான் சேதி தெரிஞ்சிச்சு, ஆயிஷா…உடனே மறு கப்பல்லே கிளம்பிட்டேன்.”
“நான் அஜீஸ், ஆயிஷா!”
பொழுது விடிந்தது.
கீரங்குடி மக்கள் எல்லாம் அக்கரைச் சீமைக்குப் போய் வந்திருக்கும் அப்துலை வரவேற்று உபசாரம் சொல்லக் கூடினார்கள்.
—----------------------------------------------------------------------------------------------------------------------------
====>ஆர். வெங்கட்ராமன் (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா<=====
எனக்கு எழுதக் கற்பித்த ஆசான்களில் ஒருவர்.
பதிலளிநீக்குபடம். நன்றி.. ஹி..ஹி..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிரு. சிவசங்கரன் பணிக்கு
பதிலளிநீக்குதலைவணங்குகிறேன்.
இதேபோல் பல சிவசங்கரன்கள் உருவாகவேண்டும்.
தகவலுக்கு நன்றி
கே. சக்ரபாணி
உதவிக்கரம் சிவசங்கரன் சேவை போற்றுதற்குரியது.
பதிலளிநீக்குதமிழுக்கு உதவும் மென்பொருள் பொறியாளர் வாழ்த்துக்கு உரியவர்.
கானவிநோதன் ரத்தினம் பாராட்டுவோம்.
கதை நீங்கள் கூறியதுபோல 'மீண்ட காதல் "என தலையங்கம் இருந்திருக்கலாம்.முடிவு அதைத்தானே சொல்கிறது.
மூன்று செய்திகளுமே அருமையான செய்திகள்.
பதிலளிநீக்குசிவசங்கரன் அவர்களின் சேவை சூப்பர். போற்ற வேண்டிய ஒன்று
அமெரிக்காவில் தமிழ் வளர்ப்பவர்களுக்கு வாழ்த்துகள்
சிங்கப்பூரில் உயரிய விருதைப் பெற்ற கானவினோதன் ரத்தினம் அவர்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்
கீதா
கதை - ஜெ கே அண்ணா சொல்லியிருப்பது போல் கண்கள் தலைப்பு ஓகே என்றாலும் கூட மீண்ட காதல் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். கதையில் சொல்லப்பட்டிருப்பது போல் அந்தக் கண்கள்தானே இரட்டையரை வித்தியாசப்படுத்தி அஜீஸின் கண்களை வைத்து அஜீஸ் என்பதை ஆயிஷாவிற்கு அடையாளப்படுத்துவதால் அபப்டி தலைப்பு வைத்திருபார் ஆசிரியர் என்றும் தோன்றுகிறது.
பதிலளிநீக்குகதைக் கருவும் கதையும் நன்றாக இருப்பதோடு முடிவு ஓரளவு யூகிக்க முடிகிறது....ஊருக்கு அவன் அண்ணன்...ஆயிஷாவிற்கு அஜீஸ்....முடிவின் ஊகம் ....அண்ணன் கப்பலேறியதும் ஓரளவு தெரிந்து விடுகிறது. ....சமூகம், அதன் வழக்குப் பேச்சு உரையாடல்கள். மிகவும் யதார்த்தம்.
ஆனால் ஏனோ வாசிக்கும் போது என்னவோ மிஸ்ஸிங்க் என்பது போலத் தோன்றியது. பொதுவாக நான் வாசிக்கும் போது ஆழ்ந்துவிடுவேன் அப்படியான தருணம் இதில் கிட்டவில்லை. வாசிக்கும் போது இடையில் ஏதேனும் தடுத்தால் 'ஹையோ ஆழ்ந்து வாசிக்கும் போது குறுக்கீடுன்னு' தோன்றும். அப்படி இதில் தோன்றவில்லை.
சுட்டிக்குச் சென்று முழுக்கதையும் வாசித்தேன்.
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. இன்றைய செய்திகளில் நல்ல மனது படைத்த அனைவரையும் மனதாற வாழ்த்துவோம். பாராட்டுவோம்.
இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. கொஞ்சம் "வாலி" திரைப்படத்தை நினைவூட்டியது. தலைப்பை நீங்கள் சொல்வது போல் மாற்றியிருந்தாலும், பொருத்தமாக இருக்கும். நல்ல, நல்ல கதைகளை தன் சிரமம் பாராமல் இங்கு பகிர்ந்தளித்து வரும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி
நீக்குபாஸிடிவ் செய்திகள் எல்லாம் அருமை.நல்ல மனம் படைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகதையின் முடிவு , அஜீஸ் அப்துலாக மாறியது கீரங்குடி மக்களுக்கு தெரியாத வரை மகிழ்ச்சி. உருவ ஒற்றுமை நல்ல உள்ளங்கள் சேரதுணைபுரிந்து விட்டது.
பதிலளிநீக்கு