புதன், 3 மார்ச், 2010

பதின்ம வயது...தொடர் பதிவு

பதின்ம வயது...


அந்த வயதின் விசேஷங்கள் இன்று உணரப் படுவது போல் அன்று உணரப் பட்டனவா? எனக்குத் தெரியாது. நான் உணர்ந்ததில்லை. இன்று அதற்கு விசேஷ அர்த்தங்களும் கவனிப்பும் தந்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உபதேசங்கள் கிடைக்கின்றன..அன்று கவனிக்கப் படாமல் கடந்து போன நாட்கள் அவை.

என்பதாலேயே, என்னென்ன நடந்தது என்று நினைவில் கொண்டு வருவது சிரமமாயுள்ளது. நன்றி ஹேமா, எங்களை/என்னை இந்தத் தொடர் பதிவில் அழைத்ததற்கு..

சைக்கிள் ஓட்டும் அனுபவங்களை பின்னோக்கி தன் பக்கங்களில் கொஞ்ச நாள் முன்பு சொல்லியிருந்தபோது எனக்கும் அந்த நினைவுகள் வந்தன. பெரிய சைக்கிளில் கால் எட்டாது என்பதால் என் உயரமே இருந்த ஒரு சைக்கிளை எடுத்து ஓட்டி, ஓட்டி கீழே விழுந்து மெல்ல,மெல்ல சைக்கிள் பழகியது இந்தப் பருவத்தில்தான்...பழகியதும் விமானம் ஓட்டும் அனுபவத்தை விடப் பரவசப் பட்ட நினைவு...பழகும் முன் பள்ளியிலிருந்து நடந்து வரும்போது சைக்கிளில் செல்வோர் என்னை அழைத்துச் செல்ல மாட்டார்களா என்று ஏங்கி, நாம் சைக்கிள் பழகினால் நடந்து போவோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற லட்சியம் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டவுடன் இனிதே மறைந்தது...

நண்பர்களோடு வீட்டு வசதிக் குடியிருப்பிலிருந்து நடந்தே கிளம்பி பள்ளியை அடையும் வரை தீபாவளிக்கு/பொங்கலுக்கு பார்த்த படத்தின் கதையை சொல்லியபடியே நடந்த நாட்கள்..(கார்த்தி : "நேற்று நான் இந்தப் படத்தைப் பார்த்துட்டேன்...நீ சொன்ன இந்த சீன்ஸ் அதுல வரவில்லையே...? நான் : "கட் பண்ணியிருப்பாண்டா..") கதை விடும் உத்தி தெரிந்து கொண்ட நண்பர்கள், வீட்டு வசதிக் குடியிருப்பில் மாதம் ஒருமுறை ஓசியில் பார்க்கும், அவர்களும் பார்த்து விட்ட, படத்தின் கதையைக் கூடக் கேட்பார்கள்.

அம்மாவுக்கு திடீரென காது கேட்காமல் போன போது என்னென்ன வகையில் உதவிகள் செய்யலாம் என்று யோசித்து, யோசித்து செய்த வேலைகள்,

வெளியிலிருந்து வீடு வந்தால் காலிங் பெல் மேலே கயிறு கட்டி, அந்தக் கயிற்றின் இன்னொரு முனையில் சோடா மூடிஇணைத்து, அம்மாவின் கை மணிக் கட்டில் லூசாகக் கட்டி, ஒரு முறை இழு பட்டால் அண்ணன், இருமுறை என்றால் நான், மும்முறை என்றால் தங்கை என்று ரகசிய கோட் தயார் செய்து..

நேசித்த பெண் பின் யோசிக்க வைத்தாள். உருப்படாமல் போனதால் உண்மைக் காதல் இல்லை என்ற முடிவுக்கு வந்தது,

நூலகர் அவ்வப்போது 'ஓபி' அடித்து வெளியில் போக உதவி செய்து, 'நூலகராய்' இருந்தது, அந்த உதவியை பயன் படுத்தி...

கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியது, கதைகள் கையாலேயே எழுதியது, பத்திரிகையில் வந்த பிரபல ஓவியர்களின் படங்களின் அவுட்டரை வரைந்து முகம் வரைந்து நூலகரின் உதவியுடன் நூலகத்தில் வைத்தது, படித்தவர்கள் கருத்தை அங்கேயே கேட்டு அடுத்த இதழில் 'பிரசுரித்தது',

மழை பெய்ய ஆயத்தமாகும் பகல் பொழுதின் கருமேக நிழல் மனதில் இனம் தெரியா பரவசம் ஒன்று ஊட்ட, சைக்கிளில் ஆளில்லா தெருக்களில் கன்னா பின்னா என்று ஓட்டி சுற்றுவது, முதல் மழைத் துளி முகத்தில் எப்போது விழும் என்று பரவச எதிர்பார்ப்பு,

நேசித்த பெண்ணின் முன் வீரம் காட்ட, சுதந்திர தின விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கபடியில் களையிழந்து வழிந்தது,

கிரிக்கெட்டில் சேர்த்துக் கொள்ளச் சொன்னபோது சேர்த்துக் கொண்ட நண்பர்கள் பந்து பொறுக்கிப் போட மட்டும் உபயோகப் படுத்திக் கொண்டது,
பதின்மங்களின் பெரும் முற்பகுதி தஞ்சையிலும், சிறு பிற்பகுதி மதுரையிலும்...

பழகிய ஊரை விட்டுப் பிரிந்த சோகத்தில் பள்ளி செல்லாமல் உருப்படாமல் போனது,

என்ன காரணம் என்றே தெரியாமல் தஞ்சையிலும் மதுரையிலும் நினைத்தாலே இனிக்கும் படத்தை திரையிட்ட நாட்கள் எல்லாம், திரையிட்ட இடங்கள் எல்லாம் பார்த்து, அத்தனை டிக்கெட்டையும் சேர்த்து வைத்தது,

வீட்டை விட்டு அவ்வப் போது ஓடிப் போகும் நண்பனின் தந்தை கோர்ட்டில் வேலை செய்ததால் எங்களை மிரட்டியே அவனை எங்களை விட்டே தேட வைத்து வீட்டில் சேர்க்க வைத்தது,

வாண்டையார் வீட்டிலும், ஜட்ஜ் வீட்டிலும் மாங்காய்கள் திருடியது, மாட்டிக் கொண்டு ஒரு பகல் பூரா மோட்டார் ரூமில் சிறை வைக்கப் பட்டது,

சலுகை விலையில் தைத்துத் தரப் படும் ஏழுமலை டெய்லரின் தொள தொள டிராயரை அணிந்து கொண்டு முதலில் கூச்சத்துடன் பின்னர் மரத்துப் போய் பள்ளி சென்று வந்தது,

ஒரு தீபாவளிக்கு திடுக்கிடும் திருப்பமாய் யாகப்பா தியேட்டர் அருகே இருந்த நவ நாகரீக 'பாரத்' டெய்லர்க் கடையில் இறுக்கமாக டிராயர்கள் தைக்க ஆரம்பித்தது,

சனிக்கிழமை காலைக்காட்சி , அருள் தியேட்டரில் லாரல் ஹார்டி படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது எட்வின், ஸ்வார்ட்ஸ் வாத்தியார்களால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிடித்துக் கொண்டு வரப் பட்டு வகுப்பில் விடப் பட்டது,

தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று முயற்சி செய்த நண்பனை காப்பாற்ற முயற்சிக்காமல் 'உண்மை நண்பனாய்' அவனுக்கு அந்த முயற்சியில் உதவியது,

சுவாரஸ்யமாய் ஒன்றும் இல்லை,

உருப்படியாயும்....

நானும் எழுதி விட்டேன் பதின்ம வயது நினைவுகள், கேட்டுக் கொள்ளப் பட்டதற்காக..

மேலும் தொடர யாரை அழைப்பது...யார் யார் எழுதி விட்டார்கள் என்றும் தெரியாததால் யார் யார் விரும்புகிறார்களோ அவர்கள் தொடரலாம்...

எங்கள் சாய்ஸ்..இதயம் பேத்துகிறது ஜவர்லால், ஆதிமனிதன், மாதவன்,

உங்கள் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். 

23 கருத்துகள்:

  1. இதை விட சுவாரசியமாய் என்ன இருந்துவிட முடியும்:)

    பதிலளிநீக்கு
  2. ரசித்தேன்:)!

    அம்மாவுக்கு உதவிய விதம் நெகிழ்வு.

    நண்பனுக்கு உண்மையாய் இருக்க முயன்ற விதம் வயதுக்கே உரிய அறியாமையின் உச்சம்.

    பதிலளிநீக்கு
  3. சுவாரச்யமாய்த்தானே இருக்கிறது உங்கள் பால்யமும், அதன் பதிவும்...

    பதிலளிநீக்கு
  4. நினைத்தாலே இனிக்கும் படத்தை காரணமே இல்லாமலா பார்த்தீர்கள். தேனிசை மழையை மறக்க முடியுமா.

    பதிலளிநீக்கு
  5. //தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று முயற்சி செய்த நண்பனை காப்பாற்ற முயற்சிக்காமல் 'உண்மை நண்பனாய்' அவனுக்கு அந்த முயற்சியில் உதவியது,//


    நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய..

    பதிலளிநீக்கு
  6. //தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று முயற்சி செய்த நண்பனை காப்பாற்ற முயற்சிக்காமல் 'உண்மை நண்பனாய்' அவனுக்கு அந்த முயற்சியில் உதவியது,
    //

    ஆஹா..இதுவல்லவோ நட்பு..

    பதிலளிநீக்கு
  7. சுவராசியமாய் இருக்கிறது, பொதுவாக இது அனைவருக்கும் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. சுவாரசியம் தான் உங்கள் எழுத்தில் உள்ளதே.

    பதிலளிநீக்கு
  9. பார்த்தேன் வாசித்தேன் ரசித்தேன்


    அம்மாவுக்கு உதவி நல்ல பிள்ளை போலும் நீங்க

    பதிலளிநீக்கு
  10. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது
    நான் சைக்கிள் கற்றுக்கொள்ளும்
    பொழு து போலீஸ் காரரை பார்த்த
    பயத்தில் ,brake பிடிக்க மறந்து , அவர்
    கால் இடுக்கிலேயே
    சைக்கிளை கொண்டு மோதி, திட்டு
    வாங்கியது நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  11. சனிக்கிழமை காலைக்காட்சி , அருள் தியேட்டரில் லாரல் ஹார்டி படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது எட்வின், ஸ்வார்ட்ஸ் வாத்தியார்களால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிடித்துக் கொண்டு வரப் பட்டு வகுப்பில் விடப் பட்டது,

    ஹா ஹா ஹா.. அருமையான பகிர்வு.. நீங்க எழுதிடீங்கனு நெனச்சேன் ஸ்ரீராம்.. sorry..

    பதிலளிநீக்கு
  12. //Mali said...

    மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது
    நான் சைக்கிள் கற்றுக்கொள்ளும்
    பொழு து போலீஸ் காரரை பார்த்த
    பயத்தில் ,brake பிடிக்க மறந்து , அவர் கால் இடுக்கிலேயே சைக்கிளை கொண்டு மோதி, திட்டு வாங்கியது நினைவிற்கு வருகிறது.//

    படாத இடத்தில் பட்டு இருக்குமே மாலி சார் !

    பதிலளிநீக்கு
  13. ஆஹா...!!!!மிகவும் அருமை....
    ஒவ்வொரு அனுபவமும்...ஒரு கவிதைக்கான....ஒரு சிறுகதைக்கான....Theme இருக்கிறது...அவ்வளவையும்...மிகவும்சாதரணமாக சொல்லிவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  14. மிக்க நன்றி வானம்பாடிகள்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி ரோஸ்விக்.

    உண்மைதான் தமிழ் உதயம்,
    நன்றி.

    நன்றி வசந்த்.

    நன்றி இராமசாமி கண்ணன்.

    நன்றி தேனம்மை.

    நன்றி புலிகேசி.

    நன்றி சைவகொத்துபரோட்டா.

    நன்றி தியா.

    நன்றி ரோமியோ.

    நன்றி சிவசங்கர்.

    நன்றி மாலி.

    நன்றி திவ்யாஹரி.

    நன்றி சாய்.

    நன்றி Hussai Muthalif.

    பதிலளிநீக்கு
  15. மிகச் சிறப்பான பதிவு! என்னால் இவ்வளவு சிறப்பாக எழுத முடியுமா தெரியவில்லை. முயற்சிக்கிறேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். சில நூல்கள் எழுதும் வேலை அழுத்துகின்றது. இரண்டொரு நாட்களில் அல்லது ஒரு வாரத்தில் எழுத முடியுமா பார்க்கிறேன். என்னுடைய தொடர் பதிவு அழைப்பை நீங்கள் இன்னும் ஏற்கவில்லை என்பது நினைவில் இருக்கட்டும்.

    http://kgjawarlal@yahoo.com

    பதிலளிநீக்கு
  16. ஜவஹர் - நீங்க திரு சொக்கன் பதிவில் எழுதியிருந்ததைப் படித்தோம். ஆனால், அந்தப் பதிவில், உங்களுடைய அந்த யோசனையை திரு சொக்கன் என்டார்ஸ் செய்யவில்லை (எங்களை அந்தத் தொடர் பதிவு தொடரலாம் என்று ) என்பதால் நாங்க மௌனவிரதம் இருந்து வருகிறோம். இதில் வேறு மர்மங்கள் எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம்...அத்தனையுமே வாழ்வில் பின்னிப்பிணைந்த மறக்கவே முடியாத சுவாரஸ்யமான அனுபவக் குறிப்புகள்.ரசிக்கவும் மனதை நெகிழ வைத்து இன்றைய வாழ்வை நகர்த்த உதவும் அன்றைய நிகழ்வுகள்.
    அருமை ஸ்ரீராம்.அம்மாவுக்கு நீங்க செய்த உதவி மனதைத் தொட்டது.

    இதைவிட பதின்ம நினைவுகளை எப்படிச் சொல்ல முடியும்.நன்றியும் கூட எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு.
    என் அழைப்புக்கு இசைந்து எழுதியமைக்கும் நன்றி.பிந்திய பின்னூட்டத்திற்கு மன்னிப்போடு....!

    பதிலளிநீக்கு
  18. //// சைக்கிள் பழகியதும் விமானம் ஓட்டும் அனுபவத்தை விடப் பரவசப் பட்ட நினைவு... /////

    ஆம். உண்மை. அந்த பரவசம் இன்று முதிர்ந்த பின் வருவதே இல்லை. ஒரு கடலை மிட்டாயில் கிடைத்த சந்தோசம் இன்று காயலான் கடையில் அல்லவா கிடக்கிறது.

    மிக அருமையான பழசை கிண்டி விட்ட பதிவு.

    கலக்குங்க தோழரே...

    பதிலளிநீக்கு
  19. அன்பின் மாதவன்

    அருமை அருமை - பதின்ம வயது - கொசு வத்தி சுத்த வச்சீட்டிங்க - பலே பலே

    நல்வாழ்த்துகள் மாதவன்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  20. // cheena (சீனா) said...
    அன்பின் மாதவன்

    அருமை அருமை - பதின்ம வயது - கொசு வத்தி சுத்த வச்சீட்டிங்க - பலே பலே

    நல்வாழ்த்துகள் மாதவன்
    நட்புடன் சீனா//

    நன்றி சீனா சார்,
    ஆனால் யார் அந்த மாதவன் என்பதை மட்டும் எங்கள் காதோடு சொல்லிவிடுங்க!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!