ஞாயிறு, 19 ஜனவரி, 2025

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 03 நெல்லைத்தமிழன்

 

இந்த வாரமும் அதைத் தொடர்ந்த வாரங்களும் நாங்கள் சென்றிருந்த சோழர் காலக் கோவில்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். உங்களில் பலர் சென்றுவந்த கோவில்கள்தாம். இருந்தாலும் நாங்கள் சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்களுடன் தொடர் வெளியாகிறது.

சென்ற ஆகஸ்டில் நாங்கள் கும்பகோணம் சென்றிருந்தோம். கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கோவில் பிரதேசங்கள் என்றால் மிகையாகாது.  

கும்பகோணத்தில் தடுக்கி விழுந்தால் ஒரு கோவில் படிக்கட்டில்தான் விழவேண்டும். அதனால்தான் அதற்குக் கோவில் நகரம் என்ற பெயர் ஏற்பட்டது.  

நான் முதன் முதலில் கும்பகோணம் சென்றது 91 மகாமகத்தின்போதுதான். அப்போது நான் மேட்டூரில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். அலுவலக நண்பர்கள் ஒரு குழுவாக மகாமகத்திற்குச் சென்றபோது, என்னையும் உடன் வரச்சொன்னார்கள். நான் அப்போது Bபேச்சலர் மற்றும் அவர்கள் எல்லோருக்கும் பிடித்த மாதிரி டிஸிப்பிளினுடன் கூடிய நல்ல பையன்அந்த மகாமகப் பயணத்தின்போது மகாமகக் குளத்தில் நீராடினோம் மற்றும் திரும்பும்போது  குணசீலம் கோவிலுக்குச் சென்றிருந்தோம். அந்தச் சமயத்தில்தான் கும்பகோணத்தில் இருந்த கூட்டத்தினால் எங்கள் வேன் நிறுத்திய இடத்திலிருந்து மகாமக க் குளத்திற்கு நிறையதூரம் நடந்தோம். (ஒரு சில கிமீ). அந்த மகாமத்தின்போதுதான் ஜெயலலிதா மகாமகக் குளத்திற்கு நீராட வந்தது அதைத் தொடர்ந்த அசம்பாவிதங்கள் நடந்ததுநாங்கள் வெகுசீக்கிரமே குளித்துவிட்ட தால்அலுவலக நண்பன் வீட்டில் நடந்த அன்னதானத்தைப் பார்த்துவிட்டு, அப்படியே எங்கள் வேனை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதுதான் வானத்தில் ஹெலிகாப்டரைப் பார்த்தோம். அப்போதுதான் முதல்வர் மகாமகக் குளத்திற்கு நீராட வருகிறார் என்று சொன்னார்கள்…. சரி சரி.. சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு கதை எங்கேயோ போகிறது.

இந்தியா திரும்பியதும் பல முறை கும்பகோணம் சென்றிருக்கிறேன். அங்கிருக்கும் கோயில்களைப் பலமுறை தரிசனம் செய்திருக்கிறேன் (றோம்). ஒவ்வொரு முறையும் புதிய கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். அவற்றைப்பற்றியெல்லாம் படங்களுடன் எழுதணும் என்பது என் எண்ணம்நான் இங்கு புராணக் கதைகளையோ மற்றவற்றையோ அலசுவதில்லை என்பதால் திவ்யதேசக் கோயில்களாக இருந்தாலும் படங்கள் நிறைய எடுக்கவில்லை என்றால் அவற்றைப் பற்றி எழுதுவது கடினம்.

சமீபத்தில் (அதாவது ஆகஸ்டில்) கும்பகோணம் சென்றிருந்தபோது மூன்று முக்கியமான கோவில்களுக்குச் சென்றிருந்தேன். அவற்றைப் பற்றி சில வாரங்கள் படங்களுடன் பகிரலாம் என்று நினைத்திருக்கிறேன்

சோழர் வரலாற்றுச் சுருக்கம்

சோழர் குலம் (குறைந்த பட்சம் 200 ஆண்டுகளுக்கு) மஹோன்னதமாக விளங்கியது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  200-250 ஆண்டுகள் என்பது ஒரு குலத்துக்கு மிக நெடிய காலம். அவ்வளவு வருடங்கள் எதிரிகளை அண்டவிடாது அடங்கியிருக்கச் செய்திருக்கவேண்டும் என்றால் 5-6 அரசர்களாவது மிக வலிமையுள்ளவர்களாக இருந்திருக்கவேண்டும். ஒரு மகோன்னத அரசனால் 30-40 வருடங்கள் வேண்டுமென்றால் மிகச் சிறந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும். ஆனால் தொடர்ந்து சோழர் குலத்தில் அரசர்கள் பெரும் வீரர்களாகத் திகழ்ந்தமையால்தான் ஒரு பேரரசாக உருவானது. கிபி 850 களில் விஜயாலயச் சோழன் காலத்திலிருந்து கிபி 1250-மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலம் வரையில் சோழர் சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருந்தது.

இங்கு சோழர் காலச் சரித்திரத்தைச் சுருக்கமாக எழுதத் தோன்றுகிறது.

கிபி 850க்கு முன்பு சோழர் குலம், பல்லவப் பேரரசுக்கு அடங்கிய சிற்றரசாகவே இருந்த து. சோழச் சிற்றரசர்கள் தஞ்சைப் பகுதியில் பழையாறை, உறையூர், திருவாரூர் போன்ற இடங்களில் அரண்மனை அமைத்து வாழ்ந்து வந்தனர். அந்தப் பகுதிகளையெல்லாம் ஆண்டுவந்த சிற்றரசர்களாக அவர்களைக் கருதலாம். 850ல் விஜயாலயச் சோழன் உறையூர் அரசுக்கட்டிலில் ஏறினான். அவனும் சிற்றரசனாக பல்லவருக்கு அடங்கியவனாகவே இருந்தான். அந்தச் சமயத்தில் பாண்டியர்கள் வலிமை பெற்று விளங்கினர் (அவர்கள் பகுதியில்).  அடிக்கடி பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் போர் நடைபெற்றது. அப்படிப்பட்ட ஒரு போரில், (862), ஸ்ரீமாறன் என்ற பாண்டிய மன்னனின் மகனான இரண்டாம் வரகுண பாண்டியன் பல்லவ மன்னனுடன் போருக்குச் சென்றான்பல்லவ மன்ன் அபராசித பல்லவன், தன்னுடைய பாட்டனான கங்க நாட்டு அரசன் பிருதிவீபதியுடன் வந்து கடும் போர் புரிந்தான். அந்தச் சமயத்தில் விஜயாலச் சோழன் பல்லவன் பக்கம் நின்று போர் புரிந்தான். அப்போது தஞ்சையை முத்தரையர் (இவர்களை களப்பிரர் மரபினர் என்று சொல்கின்றனர்) ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர். முத்தரையர் பாண்டியர் பக்கம் நின்று போர் புரிந்தனர்இந்தப் போரில் பிருதிவீபதி தோற்றான். ஆனாலும் பாண்டியர் தோற்றோடினர். பல்லவ மன்னன் அபராசித பல்லவன் வெற்றி பெற்றான். வென்றவர் பக்கம் நின்றதால் தஞ்சைப் பகுதி விஜயாலய சோழன் வசம் வந்ததுஇந்தப் போருக்குப் பிறகுதான் விஜயாலய சோழனுக்கு தன் ஆட்சியாண்டைக் குறிக்கும் உரிமை வந்தது. ஆனாலும் அவன் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு அடங்கியிருந்தான்.

880 களில், திருப்புறம்பியம் போரில்தான் விஜயாலயச் சோழனின் மகனான ஆதித்த சோழன் வீரம் வெளிப்பட்டதுஅந்தப் போரில்தான் கங்க மன்னன் பிருதிவீபதி இறந்தான்திருப்புறம்பியம் போரின் வெற்றிக்குப் பின்னால், ஆதித்த சோழன்  சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு உரியவன் ஆனான். அதற்கு முன்பே தொடர்ந்து தெள்ளாறு, அரிசிலாறு போன்ற போர்களில் தோற்றிருந்த பாண்டிய மன்னர்கள், திருப்புறம்பியம் போரின் படுதோல்விக்குப் பின்னால் மதிப்பிழந்தனர்திரும்ப எழுச்சி பெற இயலாதவாறு பாண்டியப் பேரரசு ஆகிவிட்ட து. இந்தச் சமயத்தில், வடக்குப் பகுதியில் இராட்டிரகூடர்கள் மற்றும் மேலைச் சாளுக்கியர்களுடனும் தொடர்ந்த போர்களாலும், மேலும் பாண்டிய மன்னர்களுடனான தொடர்ந்த போர்களாலும், பல்லவப் பேரரசு ஆட்டம் காண ஆரம்பித்ததுபல்லவப் பேரரசின் வட பகுதியை இராட்டிரகூடர்களும், தென் பகுதியை மெதுமெதுவாக ஆதித்த சோழனும் கைப்பற்றினர். 890களில், ஆதித்த சோழன், ஒரு போரில் அபராசித பல்லவனைத் தோற்கடித்து தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினான்அந்தப் போரில் யானை மீது அமர்ந்து போர் செய்துகொண்டிருந்த அபராசிதவர்மன் மீது பாய்ந்து ஆதித்த சோழன் கொன்றான் என்று பட்டயங்கள் சொல்கின்றன.

விஜயாலயச் சோழன் பிற்காலச் சோழ அரசின் முன்னோடி. ஆனால் அவன் பல்லவப் பேரரசுக்கு அடங்கியிருந்தான். அவன் மகன் ஆதித்த சோழன், தன் வீரத்தினால் பல்லவ அரசனை முறியடித்து தொண்டை மண்டலத்தையும் கைப்பற்றி, சோழப் பேரரசை ஸ்தாபித்தவன் என்று சொல்லலாம்

ஆதித்த சோழன் தஞ்சாவூரில் முடிசூட்டிக்கொண்டாலும், தன் ஆட்சி காலத்தில் கொங்கு நாட்டையும் கைப்பற்றினான்இந்தக் கொங்கு நாடு, ‘தலக்காடுஎன்று தற்போது கர்நாடகாவில் வழங்கும் இடம் வரை பரவியிருந்தது. இதனை சோழப் பேரரசோடு அவன் இணைத்துக்கொண்டான். ஆதித்த சோழன், காவிரியாற்றின் கரை முழுவதும் பல சிவன் கோவில்களைக் கட்டினான்பல்வேறு இடங்களை வென்று அதன் மூலமாகப் பொருளீட்டி, தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்குப் பொன்வேய்ந்தான்.

இவன் வரிவசூலை வாங்கிச் செல்வதற்காக திருக்காளஹஸ்தி அருகே பொக்கிஷம்பாளையம் என்ற இடத்திற்கு வந்தபோது (தற்போது இது பொக்கசம்பாளம் என்று அழைக்கப்படுகிறது, ஆந்திரப் பகுதி) காய்ச்சலினால் இறந்தான். 907ம் வருடம் இது நிகழ்ந்ததுஆதித்த சோழன் மகன் முதலாம் பராந்தகன், தன் தந்தை மறைந்த இடத்தில், அவனது அஸ்தியின் மீது ஒரு கோயிலை எழுப்பினான்இதுவே அடையாளம் காணப்பட்ட முதல் பள்ளிப்படைக் கோயில்.   (இது போல 13 பள்ளிப்படைக் கோயில்கள் இருந்ததாகச் சொல்கின்றனர். அவற்றில் மூன்றைத்தான் தெளிவாக அடையாளம் கண்டிருக்கிறார்களாம், அங்கிருந்த கல்வெட்டுகள் மூலம். அதில் ஒன்றுதான் பட்டீஸ்வரம் அருகில் உள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்)

அது சரி, வரிவசூல் செய்ய திருக்காளஹஸ்திக்கு அருகே ஏன் செல்லவேண்டும் என்று எண்ணுபவர்களுக்காக. ஆதித்த சோழன் காலத்திலேயே சோழப்பேரரசை மண்டலங்களாகப் பிரித்து வைத்திருந்தனர். அதில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின்  (தொண்டைமண்டலம்) வருவாய்ப்பிரிவு ஊராக, கஜானாப் பகுதியாக பொக்கிஷம்பாளையம் இருந்துள்ளது. வரிவசூலில் அரசனின் நேரடிக் கண்காணிப்பு இருந்துவந்துள்ளது தெரிகிறது.

ஆதித்த சோழனின் பள்ளிப்படைக் கோயில், காளஹஸ்தி அருகே (இணையம்)

ஆதித்த சோழனின் பள்ளிப்படையின் தென் பகுதிச் சுவற்றில் உள்ள தக்ஷிணாமூர்த்தியின் வடிவம். (இணையம்)

விஜயாலயச் சோழன் தஞ்சையில் துர்க்கைக்குக் கோயில் கட்டினான். அவனுடைய மகன் ஆதித்த சோழன், காவிரி நதிக்கரையில் பல சிவாலயங்களை எழுப்பினான் (சுமார் 50 கோயில்கள் என்று சொல்கின்றனர்). ஆனால் ஆதித்த சோழன் மகன் முதலாம் பராந்தகச் சோழனோ, தன் தந்தைக்கே கோயில் (பள்ளிப்படை) எழுப்பினான். இதுவே மிகச் சிறப்பாக எனக்குப் படுகிறது. நிற்க, சோழர்கள் சைவ சமயத்தைச் சார்ந்திருந்தனர். அவர்கள் பிற சமயங்களுக்கு எதிரிகளாக இல்லை என்றாலும் (இதற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு. பிறகு பார்ப்போம்), சைவ சமயத்தைப் பேணியதில் அவர்கள் பங்கு மகத்தானது.

என்னப்பாஞாயிறு பட உலாவுக்காக வந்தால் சரித்திரப் புத்தகத்தைப் படித்த உணர்வு வருகிறதேபடங்கள் எங்கே என்று கேட்பவர்களுக்காக….. சோழர் தலைமுறையில் 18ம் தலைமுறையான இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலின் படங்கள்தாம் ஒரு சில வாரங்கள் வரும். சோழர் காலத்தின் முக்கியமான கோயில்களின் படங்களுடன் சோழ வரலாறும் நாம் யாவரும் தெரிந்துகொள்வதற்காகப் பகிர நினைத்திருக்கிறேன்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வெளிப்புற மதிற்சுவர்

கோவிலின் எதிரே பரந்த புல்வெளி, மரங்கள் (அப்புறம் என்ன கல்லூரிக்கு, பள்ளிக்கூடத்திற்கு கட் அடித்து விட்டு வரவேண்டியதுதான்)

ஐராவதீஸ்வரர் கோயில் நுழைவாயில் எதிரே உள்ள நந்தி. இங்குள்ள படிகள் தட்டினால் ஒவ்வொரு ஸ்வரம் எழுப்பும். அதனைப் பார்வையாளர்கள் உடைத்துவிடக் கூடாது என்பதற்காக இப்போது தடுப்புப் போட்டு வைத்திருக்கிறார்கள்.


தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் கோயில் இது.




சிறிய சிறிய சிற்பங்களைக் கூர்ந்து பாருங்கள். அழகு புலப்படும்.


தூண்களில் செதுக்கியுள்ள சிற்பங்கள். தூணின் அலங்காரத்தைப் பாருங்கள். 

நுழைவாயிலைத் தாண்டியதும் த்வஜஸ்தம்பம், அதற்குப் பின் மண்டபம்.

நர்த்தனமாடும் அழகி, சிங்கத்துடன் சண்டையிடும் வீரன். 

மிகச் சிறிய அளவில் எவ்வளவு அழகிய சிற்பம். வீரனின் உடை

கீசா மேடம் இதன் புராணக் கதையைச் சொல்லுவார்களா?


மிருதங்கமும் ஜால்ராவும் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது

ஆரம்பச் சோழர் காலப் பள்ளிப்படையுடன் ஆரம்பித்து 18ம் தலைமுறையில் கட்டப்பட்ட தாராசுரம் கோயில் படங்களுடன் முதல் பகுதி நிறைவு பெறுகிறது. அடுத்த வாரம் தொடர்வோம்.

 (தொடரும்) 

33 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கந்தன் நம் எல்லோரையும் காக்கட்டும். கும்பகோணத்திலிருந்து

      நீக்கு
  2. தஞ்சையில் பிரம்மாண்டத்தின் பேரழகு எனில் தாராசுரத்தில் நுண்மையின் தண்ணழகு..

    வாழ்க சோழ தேசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். தாராசுரம் சாளுக்கியச் சோழனால் கட்டப்பட்டது . பெரியகோயில் சோழனால் கட்டப்பட்டது

      நீக்கு
  3. ​சோழர் சரித்திரமும் சொன்னது நன்று. தாராசுரம் சென்றிருந்தாலும் இவ்வளவு நுணுக்கமாக சிற்பங்களை நிதானமாக கவனித்ததில்லை.

    மஹாபலிபுரம் போன்று வெளிநாட்டினரின் சுற்றுலா பகுதியாக திகழ்வது ஐராவதீஸ்வரர் கோயில். உள்ளூர் மக்கள் எட்டிப் பார்ப்பதில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். நிஜமாகவே ஒவ்வொரு கோயிலையும் ஊன்றிக் கவனிக்க அதன் பல சிறப்பம்சங்கள் எனக்குப் புலப்படுகிறது. நிறைய எழுதணும் மறுமொழியா. ஆனால் பயணத்தில்

      நீக்கு
  4. ஆதித்த சோழன் தன்னுடன் நட்பு பூண்டிருந்த அபராஜிதனை நண்பன் என்றும் பாராமல் கொன்றான் என்று படித்த நினைவு. சோழ ராஜ்யத்தை சாம்ராஜ்ஜியமாக்க அதெல்லாம் தேவையாய் இருந்திருக்கும்.

    தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் எவ்வளவு புகைப்படங்கள் எடுத்தாலும் திருப்தி இருக்காது. இன்னும் பழையாறை போன்ற இடங்களிலும் அப்படியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். சோழர் வரலாறு படிக்கும்போது பல விஷயங்கள் புலப்படுகின்றன. உறவு என்பதையும் தாண்டி பல அரசர்கள் சோழ அரசனின்மீது கோபத்துடனும் வாய்ப்புக்குக் காத்திருந்ததையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

      நீக்கு
  5. கீதா அக்கா இணையம் பக்கம் வருவதையே மறந்து விட்டார்கள். அவர்கள் எங்கே இதை எல்லாம் பார்க்கப் போகிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அவர்களுக்கு பல்வேறு முன்னுரிமைகள் இருக்கின்றன என்று தோன்றுகிறது

      நீக்கு
  6. அனைவரும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. 92 ம் வருடம் கும்பகோணம் மகா மகம் குளத்தில் ஏற்பட்ட அசம்பாவித சமயம் மாட்டிக் கொள்ளாமல் உறவினர்கள் தப்பி வந்து கதை கதையாக சொல்லி கொண்டு இருந்தார்கள்.
    நல்லவேளை நீங்கள் விரைவில் கரை யேறி விட்டீர்கள். முதல்வர் வந்த சமயம் குளத்தில் நீராடி கொண்டு இருந்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.

    சோழர் கால சரித்த வரலாறு மிக அருமை. முன்பு சகோ துரைசெல்வராஜூ அவர்கள் ஒரு பதிவில் நீங்கள் இந்த பள்ளி படை பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.பட்டீஸ்வரம் அருகில் உள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் படத்தோடு பகிர்வு செய்தீர்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அரசு மேடம். பள்ளிப்படைகள் மற்றவற்றையும் திரும்ப பதிவு செய்வேன் சோழர் வரலாறு கிடைத்த கல்வெட்டுகளைக் கொண்டு அனுமானிக்கப்படுவது

      நீக்கு
  8. தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் படங்கள் அழகு. சபதஸ்வரங்கள் ஒலிக்கும் படிக்கு வேலி அமைத்து விட்டார்களா? முன்பு கல்லை வைத்து ஒருவர் வேறு பட்ட ஒலிகளை ஒலிக்க செய்து காட்டினார். அந்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது.
    ஒரு சிலையில் காதில் உள்ள துளையில் குச்சியை விட்டு காட்டுவார்கள். இன்னொரு சிலையில் ஏதோ காட்டினார்கள் மறந்து விட்டது. சிற்பங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கும். அவை அடுத்த வாரம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராசுரம் பலப்பல வாரங்களுக்குத் தொடரும் என நினைக்கிறேன்

      நீக்கு
  9. கீசா மேடம் இதன் புராணக் கதையைச் சொல்லுவார்களா?//

    அரசர் நடன பயிற்சி பெற்ற மங்கைக்கு தலை கோல் கொடுத்து கெளரவ படுத்தும் நிகழ்ச்சியை குறிக்கும் சிற்பமோ!

    பதிலளிநீக்கு
  10. கங்க நாட்டு அரசன் என்பதைப் பார்த்ததும், அட இங்குள்ள, நாகேஷ்வர/பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் , 9, 10 ஆம் நூற்றாண்டில் கோவிலில் இருக்கும் இரண்டு லிங்கங்கள் கங்க வம்ச மன்னர்களால் நிறுவப்பட்டது என்றும் அதன் பின்னர் 3 லிங்கங்கள் சோழர்களால் நிறுவப்பட்டது என்றும் வரலாறு சொல்கிறது. அதனால் ஒரு லிங்கேஸ்வரர் பெயர் சோளீ/ழீஸ்வரர். பண்டு கட்டப்பட்ட முதல் கோவிலுக்குள் விதானத்திலும் தூண்களிலும் கன்னட, தமிழ் ஸ்க்ரிப்ட் பார்க்கலாம். அங்கிருந்த தூண் ஒன்றில் முதலாம் குலோத்துங்கனின் உருவம் என்று சொல்லப்படுவதைப் பார்த்து நான் எடுத்தப்ப உடனே வந்து எடுக்கக் கூடாது என்று அவர்கள் முன்னிலேயே அழிக்கச் சொன்னார்கள் அதை உறுதிப்படுத்தியும் கொண்டார்கள். எனவே வெளியில் உள்ளது மட்டுமே எடுக்க முடிந்தது.

    ஆனா பாருங்க நெட்டில் கோவிலின் தெய்வ உருவங்கள் அத்தனையும் இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. ஏமாந்தவர்களிடம் கோயிலில் படங்களை எடுக்க விட மாட்டார்கள். சாளுக்கிய சோழர்கள் மற்றும் அவர்கள் காலம் முடிவு எல்லாமே இன்டரெஸ்டிங்

      நீக்கு
  11. இந்தக் கொங்கு நாடு, ‘தலக்காடு’ என்று தற்போது கர்நாடகாவில் வழங்கும் இடம் வரை பரவியிருந்தது. //

    ஆமாம்...அக்கோயில்கள் 9ல் காவிரி ஆற்றின் கரையில் இருப்பவை மணலில் அமிழ்ந்து விட்டன (மைசூர் ராணியின் சாபத்தால் என்று!) அப்படி அதை மீட்டெடுத்து இப்ப நிறுவுவதாகவும் வாசித்தேன். என் லிஸ்டில் இருக்கும் இடம். ஆனால் பேருந்தில் செல்வதற்கு 3-31/2 மணி நேரம் ஆகும். எபடியும் ஒரு நாள் முழுவதும் தேவைப்படும். என்பதால் அப்படியே அந்த எண்ணம் இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடங்கள் பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டால் நான் செல்லும்போது அவைகளையும் சேர்த்துக்கொள்வேன்

      நீக்கு
  12. அப்புறம் என்ன கல்லூரிக்கு, பள்ளிக்கூடத்திற்கு கட் அடித்து விட்டு வரவேண்டியதுதான்//

    ம்ஹூக்கும் நாங்க கோவிலுக்குல்லா பக்தி ச்ரத்தையோட வந்தோம் இப்படிச் சொல்லுதீய!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராசுரம் கோவில் வெளிப்புற புல் மைதானம் மற்றும் சுற்றுப்புறங்களில் இதுதான் நிலைமை. நம் காலத்தில் இருவரும் சேர்ந்து போவதே வாய்ப்பில்லாதது. யார் பார்த்தாலும் விரட்டிவிடுவார்கள் பெற்றோர் காதிவ் போட்டுவிடுவார்கள்

      நீக்கு
  13. படங்கள் எல்லாம் அட்டகாசம் நெல்லை. சின்ன சின்னதாக இருப்பவை கூட எப்படிச் செதுக்கியிருக்காங்கன்னு வியப்பு. மினியேச்சர்லையும் கூட உருவம் தெளிவாகத் தெரியுமாறு செதுக்கியிருப்பது வியப்பு!

    அவர்களி திறமை அபாரம். தூண்கள் என்ன அழகு வேலைப்பாடுகளுடன் சிற்பங்களுடன்...

    விவரங்களுடன் படங்களுமாகச் செமையா இருக்கு நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மினியேச்சர் சிற்பங்கள் 900 வருடங்களுக்குப் பிறகு இவ்வளவு அழகு என்றால் அப்போது?

      நீக்கு
  14. ஐராவதீஸ்வரர் கோவில் தரிசிக்க முடியவில்லையே என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. த்ரீ டீயில் கோவில் பார்த்து மகிழ்ந்ததுண்டு.

    உங்கள் பகிர்வு படங்கள் மூலம் அழகிய சிற்பங்கள் பலவும் கண்டோம்.. தூண்சிற்பங்கள் செய்வது கடினம் வியக்க வைக்கின்றன.

    சரித்திரங்களும் மீண்டும் மீண்டும் படித்து நினைவில் கொள்ளலாம்.

    கீதா மடம் இதன் புராணக் கதையை சொல்வார்களா?அவர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் அவரும் நேரமின்றி உள்ளாரே.
    கருவூர்தேவர் சிற்பம்போல் தெரிகிறதே சரிதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள்.தாராசுரம், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய மூன்றும் நிச்சயம் காணவேண்டிய இடங்கள்

      நீக்கு
  15. அருமையான படங்களுடன் விளக்கங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  16. சுவாரஸ்ய தகவல்கள் சார் .. வழக்கம் போல படங்கள் அழகு .

    தாராசுரம், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய மூன்றும் நிச்சயம் காணவேண்டிய இடங்கள்... தஞ்சை முன்பே பார்த்துள்ளோம் , இதில் போன ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் பார்த்தாச்சு ...இன்னும் இங்கு மட்டும் செல்ல வில்லை நீங்கள் பகிர பகிர வாய்ப்பு வரும் பொழுது பார்த்துவிடலாம் .

    அட ‘தலக்காடு’ என்று தற்போது கர்நாடகாவில் வழங்கும் இடம் வரை பரவியிருந்தது.... இங்கு 2023ல் சென்று வந்தோம் .

    அருகில் தான் கீர்த்தி நாராயண பெருமாள் கோவில் , அங்கு செல்லும் வழியில் எல்லாம் மணல் பரப்பு அவ்வழியிலே 4 சிவபெருமான் கோவில்களும் உண்டு ,அருமையான இடம் ..அடுத்த மாதம் அப்படங்களையும் , தகவல்களையும் பகிர்கிறேன் சார்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!