வியாழன், 9 ஜனவரி, 2025

கீரியும் பாம்பும்

 

மேலே உள்ள காணொளி பார்த்தீர்களா?  நடுவில் நிறுத்தி விட்டீர்களா?  கடைசி வரை பார்த்தீர்களா?  என்ன ஆச்சோ...  அது மாட்டியதா, தப்பியதா என்று ஆர்வம் வந்ததா?  நீங்கள் அல்லது உங்கள் மனம் இந்தக் காணொளி பார்க்கும்போது யார் பக்கம் நின்றது?  பாம்பின் பக்கமா, கீரியின் பக்கமா?

இரண்டுமே உயிரைக் காக்கும் ஓட்டம்தான்.

கீரியும் பாம்பும் ஒன்று துரத்த ஒன்று ஓடுமா​?  அதுவும் பாம்பு கீ​ரியை துரத்துமா​?  கீரி ஓடுமா​?  தலைகீழாக இருக்கிறது இல்லை​?  இதில் ஏதோ செய்தி இருப்பது போல இல்லை​?  கீரிதான் பாம்பை சுற்றி சுற்றி வந்து வம்பு இழுக்கும்​.  பாம்பு தப்பி ஓட​ப் பார்க்கும்​.  முடிந்தவரை தப்பி ஓடப் பார்க்கும்​.  இங்கு நாம் பார்க்கும் காணொளி ஒரு உண்டாக்கப்பட்ட​ காணொளி  போல தெரிகிறது​ இல்லை​? உயிருக்கான போராட்டமா​?   ஓடிப் பிடித்து விளையாட்டா​?

எப்போதுமே நாம் துரத்தப்படும் ஜீவன் பக்கம்தான் நிற்போம்.  நம் இரக்கப் பார்வை அதன் மீதுதான் பாயும்.  சரியா?  நீங்களும் கீரி தப்பித்து விடவேண்டும் என்றுதான் நினைத்திருப்பீர்கள்.  உங்கள் உள்மன ஆசை அதுவாகத்தான் இருந்திருக்கும்.  பாம்புக்கு பசிக்கும் அதற்கு உணவு வேண்டுமே என்று இரக்கம் வந்திருக்காது.  ஒரு உணவுக்காக அது இவ்வளவு தூரம் ஓட வேண்டியிருக்கிறதே என்று யாருக்காவது தோன்றியதா?  பாம்பு விஷமுள்ள ஜந்துவாகவும், கீரி விஷமில்லாத ஜந்துவாகவும் மனதில் படியும்.

எத்தனை பாம்புகள் துரத்துகின்றன நம்மை?  நாமும் கீரி போல எத்தனை பாம்புகளை விட்டு விலகி தப்பி ஓட முயல்கிறோம்?  கீரி பாம்பைத் துரத்தாதா?  ஏன் இங்கு கீரி மட்டும் ஓடுகிறது?  அதன் பக்கம் நியாயம் இல்லையோ...

சமயங்களில் எது நியாயம் எது அநியாயம் என்று அறியாமல் நம் மனம் சாயும் பக்கம் நிற்போம்.  சரியா?  சினிமாக்களில் கொள்ளை காரனையும், கொலைகாரனையும் ஹீரோவாக ஏற்கும் மனோபாவம்.

​சமயங்களில் அந்த கீரி லூசு மாதிரி மறுபடி வளைந்து திரும்பி பாம்பின் அருகிலேயே வருகிறதே என்றும் பதறுகிறது.  யானைக்கு முன் ஓடும்போது வளைந்து வளைந்து ஓடவேண்டும், பாம்பு துரத்தும் நேராக ஓடவேண்டும் என்பார்கள்.  இது நேராகத்தான் ஓடுகிறது.  ஆனால் பாம்பு வளைவதே தெரியாமல் அவ்வளவு வேகமாக துரத்துகிறது.  நிஜமோ, பொய்யோ...  சமயங்களில் இரண்டும் சமமாக அருகருகே ஓடுகின்றன.  சப்வே சர்ஃப்  விளையாட்டு போல இருக்கிறது.  எப்படி இருந்தாலும் ஒரு சுவாரஸ்யத்தில் காணொளி முடியும் வரை பார்க்கத்தான் தோன்றுகிறது -  கடைசியிலும் எதுவும் முடிவு இருக்காது என்னும் எண்ணத்தையும் மீறி!

அவ்வளவு அருகில் சென்றும் பாம்பு கீரியைக் கவ்வவில்லையே என்றும் தோன்றும்போது இரண்டும் ஓடிப்பிடிச்சு விளையாடுகிறதோ என்றும் தோன்றுகிறது!  'திடீரென்று பாம்பு 'ஏ...ய்  நான் உன்னைத் தொட்டு விட்டேன்..  இப்போ நீ என்னைத் தொடு ' என்று சொல்லி திரும்பி ஓடத்தொடங்குமோ என்றும் மனதில் ஒரு எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

மேடு மாதிரி வரும்போது 'ஏய் லூசு மேட்டில் ஏறு' என்று எம் ஜி ஆர் படம் பார்க்கும் பாட்டி போல குரல் கொடுக்கத் தோன்றுகிறது.  மனிதன் தேவலாம்.  உணவுக்காக இப்படி டவேண்டாம், உயிரைக் காத்துக் கொள்ளளவு இப்படி ஓடவேண்டாம்.

==========================================================================================================

நியூஸ் ரூம் 


-   ''டில்லியில் நான் வெற்றி பெற்றால், காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கன்னங்கள் போன்று சாலை அமைக்கப்படும்,'' என பா.ஜ., வேட்பாளர் ஒருவர் அளித்த வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அவருக்கும், பா.ஜ.,வுக்கும் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

-  சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த , வைத்திருந்த கருப்பு நிற பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் அதை பாதுகாப்பு பிரிவு போலீசார் வாங்கி வைத்துக் கொண்டு அனுமதித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னரே கருப்பு நிற பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. 

-  டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பையை, முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் (ஆஸி.,) வழங்கினார். அப்போது சிட்னி மைதான பவுண்டரிக்கு அருகே இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் சக வர்ணனையாளர் இர்பான் பதான் உடன் பேசிக் கொண்டிருந்தார். அவரை கோப்பை வழங்க மேடைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அழைக்கவில்லை.

-  கொடைக்கானல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறை பனி நீடித்து வரும் நிலையில் தென் மாவட்ட சமவெளிப்பகுதிகளை பனியின் தாக்கம் போர்வை போல் மூடிய ரம்மியமான சூழலை காலை நேரத்தில் கோக்கஸ்வாக்கில் நின்றபடி பயணிகள் ரசித்தனர்.

-  அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல வாரங்களாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இன்டியானா, கெண்டகி, வெர்ஜினியா உள்ளிட்ட பல மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-  சென்னை : வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஞாயிற்றுக்கிழமையும் பதிவு செய்வதற்கான வசதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

-  முந்தைய நாளில் மதிப்பீடு செய்த அளவுடன் ஒப்பிடும்போது மின் நுகர்வு, 250 மெகா வாட் குறைவாக அல்லது கூடுதலாக இருக்கலாம். அதற்கு மேல் சென்றால், மத்திய மின் துறைக்கு அபராதம் செலுத்த வேண்டும்.  எனவே, மின் நுகர்வை கணக்கீடு செய்வதற்கு, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், 2023ல் அறிமுகமானது. இதன் வாயிலாக, அடுத்த நாள் மின் நுகர்வு விபரம், முந்தைய ஆண்டுகளின் அனுபவத்தின் அடிப்படையில், மிக விரைவாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

-  மதுரை; மதுரை அருகே புல்லட்டிற்கு 'ஓசி'யாக பழுது நீக்கி தராத மெக்கானிக்கிற்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

-  சென்னை: எச்.எம்.பி.வி., வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக, பொது இடத்தில் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

-  பெங்களூரு: இன்ஜினியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய கோரி மனைவி உட்பட மூன்று பேர் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

-  மும்பை: நீங்கள் எனக்கு ஓட்டு அளித்தீர்கள். ஆனால் எனக்கு நீங்கள் முதலாளி அல்ல என தொண்டர்களை கோபத்தில் மஹா., துணை முதல்வர் அஜித் பவார் திட்டினார்.

-  புதுடில்லி : 'எந்த வேலையும் செய்யாதவர்களுக்கு இலவசங்களை கொடுக்க அரசுகளுக்கு பணம் இருக்கிறது; நீதிபதிகளுக்கு ஊதியம் மற்றும் பென்ஷன் வழங்கும்போது மட்டும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக கூறுகின்றனர்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

-  சென்னை : 'மணல் கடத்தல், போலி மது, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் சட்ட விரோத கும்பல்களுடன் கைகோர்த்துள்ள போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர், மாநில லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளார்.


=======================================================================================================


பொதுவாக ஒரு படத்தை கிண்டல் செய்தோ அல்லது அதற்கு எதிரான கதை கொண்ட படங்களை 'ஸ்பூப் வகை' படம் என்பார்கள். ஹாலிவுட் படங்களில் இதுபோன்ற கதைகள் வருவதுண்டு. ஆனால் தமிழில் அரிது.

மன்னர்களை வீரர்களாகவும், புத்திசாலிதனமானவர்களாகவும் சித்தரித்த கதைகளுக்கு இடையே மன்னரையே கோமாளியாக சித்தரித்த படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. பல தமிழ் படங்களின் கதைகளை கிண்டல் செய்து வந்த படம் மிர்சி சிவா நடித்த 'தமிழ் படம்' இப்படி அவ்வப்போது நிகழும்.  அதேபோல 80 வருடங்களுக்கு முன்பு என் எஸ் கிருஷ்ணன், மதுரம் நாயகன், நாயகியாக நடித்த படம் 'சந்திரஹரி' பொய்யே பேசாத ஹரிசந்திர மகாராஜா, நாடு, மனைவி, மக்களை இழந்த கதை திரைப்படங்களாக வந்து கொண்டிருந்தபோது, ஹரிச்சந்திரா என்கிற பெயரை திருப்பி போட்டால் வரும் 'சந்திரஹரி' என்ற பெயரில் படம் உருவானது.  முனிவர் ஒருவரிடம் 9 ஆயிரம் பொற்காசு இருக்கும். இன்னும் ஒரு ஆயிரம் பொற்காசு தாருங்கள் மன்னா என்னிடம் 10 ஆயிரம் பொற்காசுகளாகிவிடும் நான் நல்ல முறையில் வாழ்வேன் என்று அந்த முனிவர் சந்திரஹரியிடம் போய் நிற்பார், களஞ்சியத்தில் பொற்காசுகள் குவிந்து கிடகுக்கும் நிலையிலும் தன்னிடம் காசு இல்லை என்று பொய் சொல்வான் சந்திரஹரி வாழ்க்கையில் உண்மையே பேசாமல் பொய்யை மட்டுமே பேசுகிற மன்னனை பற்றியது இந்த படம் பொய் பேசுவதால் அவன் பெற்றது என்ன? கற்றது என்ன என்பது படத்தின் திரைக்கதை

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகத்தை அதே பெயரில் தயாரித்து நடித்தார் என்.எஸ்.கிருஷ்ணன். இந்த படத்தை கே.எஸ்.மணி என்பவர் இயக்கினார். எல்.நாராயணராவ், காக்கா ராதாகிருஷ்ணன், கமலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் இந்த படம் சிறிய படம் என்பதால் இத்துடன் 'இழந்த காதல்' என்ற பெரிய படம் இணைக்கப்பட்டது. இந்த படமும் நாடகத்தை தழுவி உருவானதுதான்.

தினமலர் பிளாஷ்பேக் பகுதியிலிருந்து....

============================================================================================

ஜனவரி ஒன்றாம் தேதிக்கு நான் நண்பர்களுக்கு எழுதி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துக் கவிதை.

உடைந்த பானையாய் 
தூக்கி எறிவோம் 
கடந்த கால துன்பங்களை
நடந்த நல்லவைகள் என்றும் 
நிலைத்து நிற்க
வாங்கி வந்த சாபங்களால் 
வந்தமர்ந்த 
தீங்குகள் யாவும் நீங்கி விட 
ஓங்கு தமிழ் மொழியினிலே உரைக்கின்றேன் 
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை.  

===========================================================================================================

அக்டோபர் 12 ஆம் தேதி நான் எடுத்து வைத்த குறிப்பு ஒன்று.....   ஒரு நல்ல கதைக்கான கரு இந்தச் செய்தியில் உள்ளது.....



================================================================================================


இணையத்தில் ரசித்த உயிர்ச்சிலைகள்.....


==================                                                                                                     =======================

=======================================================================================================


எம் டி வாசுதேவன் நாயர் பற்றி ஜெயமோகன் 

ஓர் உரையாடலை நினைவுகூர்கிறேன். என் அம்மா தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். 'அசுரவித்து' என்னும் எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவலைப் பற்றிய விவாதம்.  அதன் மையக் கதாபாத்திரமான கோவிந்தன்குட்டி தன் குடும்பத்திலுள்ள அனைவராலும் 'அசுரவித்து' என அழைக்கப்பட்டவர். அந்த பெரிய குடும்பம் செல்வத்தையும் அதிகாரத்தையும் இழந்து அழிந்து கொண்டிருந்தது. அதற்கான காரணங்கள் பல. நிலவுடைமைச்சமூகம் இல்லாமலாகிக் கொண்டிருந்தது முதல் குடும்பத்தின் தலைவர்களின் ஊதாரித்தனமும் நீதிமன்ற வழக்குகளும் என. ஆனால், எல்லாமே கோவிந்தன்குட்டி பிறந்தமையால் என்று குடும்பத்தினர். முடிவுகட்டுகின்றனர். குடும்பத்தை அழிப்பவன் என்னும் பொருளில் 'அசுரவித்து' என்னும் வசைப்பெயர் அமைகிறது.

க்ஷத்ரிய குடிகளில் ஓர் அசுரனின் குருதித்தொடர்பு உருவானால் அதில் பிறக்கும் குழந்தை அக்குடியை அழிக்கும் என்பது ஒரு வைதிக நம்பிக்கை. கிருஷ்ணனின் குடியில் அசுரனின் ரத்தத்தால் பிறந்த சாம்பன் அக்குடி அழியக் காரணமானான் என்பது புராணத்துக்கான வைதிக விளக்கம்.  கோவிந்தன்குட்டியின் வாழ்க்கையே அந்தப் பெயருக்கு எதிரான அவனுடைய எதிர்வினைதான். அது வீம்புக்காக தன்னை ஒரு பொறுக்கியாக ஆக்கிக் கொள்வதில் முடிகிறது. ஒரு கட்டத்தில் கோவிந்தன் குட்டி இஸ்லாமியராக மதம் மாறுவதில் நாவல் முடிகிறது.

அந்த மதமாற்றம் சரியா என்பதுதான் அம்மாவும் தோழிகளும் விவாதித்தது. பங்கஜவல்லி அத்தை சொன்னாள். "நம்ம வீட்டுக்குள்ள முளைச்ச அசுரவித்தை நாம பிடுங்கி பக்கத்து தோட்டத்திலே போடுறது மாதிரில்லாடீ அது?""என் அம்மா சொன்னார். "நமக்கு அசுரவித்து அவங்களுக்கு அமிர்தவித்தாக இருக்கலாமே? தோட்டத்திலே நாவல்மரம் நின்னா பிடுங்கி வீசுவோம். ஆற்றங்கரையிலே நிக்குற அந்த நாவல்மரம் ஆயிரம் லெட்சம் பக்ஷிகளுக்கு அமிர்தமாக்குமே? ஆற்றங்கரையில் நின்றிருக்கும் அந்த மாபெரும் நாவல்மரத்தைப் பார்க்கையில் எல்லாம் நான் சொல்லிக்கொள்வேன். அமிர்த மரம்".  1992-இல் எனக்கு 'ஜகன்மித்யை' என்னும் கதைக்காக கதா சம்மான் என்னும் தேசியவிருது கிடைத்தது. அதே விருது மலையாளத்துக்காக எம்.டி.க்கு அவருடைய 'கொச்சு கொச்சு பூகம்பங்கள்' என்னும் கதைக்காக கிடைத்தது. குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா அவ்விருதை வழங்கினார். அதைப் பெறுவதற்காக தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றிருந்தபோதுதான் நான் எம்.டி.யை நேரில் சந்தித்தேன். அன்று அம்மாவைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது என் அம்மா உயிருடன் இல்லை.

கோவிந்தன்குட்டியின் வெவ்வேறு வடிவங்கள் என எம்.டி.யின் கதைமாந்தரைச் சொல்ல முடியும். மேலோட்டமான விமர்சகர்கள் அவருடைய கதைகள் பழைய நிலவுடைமைச் சமூகத்தின் அழிவின் சித்திரங்கள் என்பார்கள். அது எளிய வரையறை.  அவருடைய கதைமாந்தர் அந்தக் காலகட்டத்தின் அடிப்படையான பிரச்னைகள் இரண்டை எதிர்கொண்டவர்கள். ஒன்று, நிலவுடைமைச் சமூகம் அழிந்து, இன்னொன்று உருவாகும் காலகட்டத்தில் தங்களை வரையறை செய்துகொள்ளுதல். இரண்டு, தங்கள் தந்தையரிடமிருந்து எதைப் பெற்றுக் கொள்வது என முடிவுசெய்தல்.

அவருடைய கதைமாந்தர்கள் பலர் அந்தப் போராட்டத்தில் உடைந்தழிந்தவர்கள். அந்த வீழ்ச்சியின் கசப்பு நிறைந்து தனித்து வாழ்ந்தவர்கள்.  எம்.டி. வாசுதேவன் நாயரின் தீவிர வாசகியாக இருந்தவர் என் அம்மா. என் அம்மாவும் எம்.டி.யின் ஒரு கதைமாந்தரைப் போலத்தான் அடையாளமின்மையின் கசப்பும், புறக்கணிப்பின் தனிமையுமாக வாழ்ந்தார். அக்கசப்பின் உச்சியில் அம்மா தற்கொலை செய்து கொண்டார்.

கோவிந்தன் குட்டி தப்பிச்சென்றது போன்ற ஒரு வழியை அம்மா கண்டடையவில்லை. அவர் பெண் என்பதனால் அவருக்கிருந்த வெளியேறும் வழி சாவு மட்டுமே  அம்மா அளவுக்கு எவர் எம்.டி.யை ஆழ்ந்து அறிந்திருக்க முடியும்?  என்றேனும் தன் மகன் எம்.டி.யை நேரில் சந்திப்பான் என எண்ணியிருந்திருப்பாரா? எம்.டி.யிடம் சொல்ல அவருக்கு ஏதேனும் இருந்ததா?

அன்று எம்.டி. ஒரு தமிழ் எழுத்தாளரான என்னிடம் மிக மரியாதையுடன் பேசிக் கொண்டிருந்தார். இரண்டாம் நாள் என் தாய்மொழி மலையாளம் என்று தெரிந்ததும் இயல்பாக 'டா' போட்டு அவருடைய பையை எடுத்து காரில் வைக்கச் சொன்னார். எனக்குக் கிடைத்த மாபெரும் ஏற்பாக அதை நான் கொண்டேன்."

"என் கதைகளைப் படித்திருக்கிறாயா?" என்று எம்.டி.கேட்டார்.

"அச்சிடப்பட்ட எல்லா வரிகளையும் படித்திருக்கிறேன்" என்று நான் சொன்னேன்.

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் வட்டத்தில் ஆனக்கல் பஞ்சாயத்திற்குள் வரும் கூடல்லூர் என்னும் சிற்றூரில் ஜூலை 15, 1933-இல் புன்னயூர்க்குளம் டி.நாராயணன் நாயருக்கும் மாடத்து தெக்கேப்பாட்டு அம்மாளு அம்மாவுக்கும் பிறந்த மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் மலையாள எழுத்தாளர்களின் முதன்மையான மூன்று நட்சத்திரங்களில் ஒருவர். வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளை இருவருக்கும் பின் மலையாளத்தில் மிக அதிகமாக வாசிக்கப்பட்டவர் அவரே.

1953-இல் தன் இருபதாம் வயதில் எழுதிய 'ரக்தம் புரண்ட மண்தரிகள்' (குருதி படிந்த மண்துகள்கள்) என்னும் முதல் சிறுகதையில் தொடங்கிய இலக்கியப் பயணம் எழுபதாண்டுகள் நீடித்தது.  1958-இல் வெளிவந்த 'நாலுகெட்டு' என்னும் நாவல் மலையாளத்தின் பெரும்படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதிக் கொண்டே இருந்தார். எம்.டி.யின் நடை, அகவய உரையாடல் போன்ற இயல்பான கவித்துவம் கொண்டது. தன் கதைமாந்தர்களின் அக ஓட்டத்தை நீண்ட தன்னுரையாடலாக எழுதிச் செல்வது அவருடைய பாணி.

அவருடைய சொல்தேர்வு எளிமையானது, உரையாடல்கள் வள்ளுவநாடு எனப்படும் பகுதியின் வட்டார வழக்கு கொண்டவை. ஆனால், மொத்தமாக ஒரு கற்பனாவாத அழகு அவருடைய கூறுமுறையில் உருவாகிக் கொண்டே இருக்கும். அது மூன்று தலைமுறைக்காலமாக மலையாள இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்திய ஒன்று.  எம்.டி. வாசுதேவன் நாயர் 1965-இல் அவருடைய 'முறப்பெண்ணு' என்னும் சிறுகதைக்கு திரைக்கதை வடிவத்தை எழுதிக்கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தார்.மலையாள திரையுலகின் முதன்மையான திரைக்கதையாசிரியர் அவரே. அவருடைய மிகப் பெரும்பாலான திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியை அடைந்தவை. மூன்று தலைமுறை நடிகர்கள் அவற்றின் வழியாக உருவாகி வந்திருக்கிறார்கள்.

மலையாள இடைநிலை திரைப்படமே எம்.டி.யால் உருவாக்கப்பட்டதுதான். அவரே இயக்கிய 'நிர்மால்யம்' மலையாளத்தின் முதன்மையான கலைப்படங்களில் ஒன்று.  தன் சொந்தப் பணத்தாலும் நண்பர்கள் கொடையாலும் எம்.டி. உருவாக்கிய 'துஞ்சன் பறம்பு' என்னும் பண்பாட்டு அமைப்பு மலையாள மொழியின் தந்தை எனப்படும் துஞ்சத்து எழுத்தச்சனின் நினைவைப் போற்றும் பேரியக்கமாக இன்று உள்ளது.

முப்பதாண்டுக் காலம் மாத்ருபூமி மலையாள வார இதழின் ஆசிரியராக இருந்த எம்.டி. கண்டடைந்து வளர்த்த படைப்பாளிகளே அடுத்த மூன்று தலைமுறைக்காலம் மலையாள இலக்கியத்தை முன்னெடுத்தனர்.  ஒவ்வொரு வரியும் சுவாரசியமாக எழுதியவர் எம்.டி. ஈடுபட்ட எல்லா துறைகளிலும் வெற்றியை மட்டுமே அடைந்தவர். தன் காலகட்டத்தில் இணைசொல்ல இன்னொருவர் இல்லாதபடி செல்வாக்கைச் செலுத்தியவர். எவர் முன்னாலும் தலைவணங்கியவர் அல்ல. எந்த அதிகாரபீடமும் தன் முன் வணங்க வேண்டும் என எதிர்பார்த்த அபாரமான 'ஆணவம்' கொண்ட படைப்பாளி. அவ்வண்ணமே கேரளம் அவர் முன் பணிந்தும் இருந்தது.

எம்.டி.யின் தொண்ணூறாவது பிறந்தநாளை கேரளமே அரசு விழாவாகக் கொண்டாடியது. அந்த விழாவில் முதல்வர் செய்யும் ஆடம்பரச் செலவுகளை அவர் முன்னிலையிலேயே கண்டித்துப் பேசினார். அதுதான் மலையாள எழுத்தாளனின் நிமிர்வு.

எம்.டி.யைப் பற்றி நான் தமிழிலும் மலையாளத்திலும் நிறையவே எழுதியிருக்கிறேன். 2023- இல் அவருடைய 90-ஆவது பிறந்தநாள் துஞ்சன் பறம்பில் கொண்டாடப்பட்டபோது நான் ஒரு பேச்சாளன். அவரை நான் முதலில் சந்தித்ததைப் பற்றி அன்று எம்.டி. நினைவுகூர்ந்தார்.  அறையில் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் கோவிந்தன்குட்டி பேச்சில் வந்தார். என்னுடைய ஒரு தாய்மாமாதான் அவர்"என்று எம்.டி. சொன்னார். நல்ல மனிதர். அவரை வெறுத்தவர்களை அவர் வெறுத்தார். ஆனால், தான் கொண்ட அவ்வெறுப்பே தன்னுடைய விலங்கு என கண்டுகொண்டு அதை துறந்ததும் விடுதலையானார்.

நான் என் அம்மாவைப் பற்றி அவரிடம் அப்போதும் சொன்னேன். எம்.டி. பேசாமல் அமர்ந்திருந்தார்.

எம்.டி. மிகப் பெரும்பாலான தருணங்களில் பேசாமல் அமர்ந்திருப்பார். அவருடைய மௌனம் புகழ்பெற்றது. அப்போது தோன்றியது, அம்மாவுக்கும் எம்.டி.யிடம் சொல்ல ஒன்றுமிருந்திருக்காது, அந்த மௌனம் தவிர. அது அத்தலைமுறையின் மௌனம் எம்.டி. அந்த மௌனத்தை எழுதிய மாபெரும் இலக்கியவாதி.

========================================================================================

பொக்கிஷம்  : 









64 கருத்துகள்:

  1. கீரியும் பாம்பும் விவரிப்பு அருமை.
    உளவியல் பார்வை உன்னதம். 'எப்பவுமே நாம் துரத்தப்படும் ஜீவன் பக்கம் தான் நிற்போம்' என்ற ஒரு வரி எழுதுசதற்கே நிறைய மனம் சார்ந்த அனுபவ உணர்வு பெற்றிருக்க வேண்டும். சமீபத்தில் ஒரு ரயில்வே டிராக்கில் ஒரு குஞ்சுக் கோழியை பாம்பு ஒன்று துறத்தும் விடியோ காட்சியைப் பார்த்து நானும் இப்படித் தான் பதைபதைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து அனுபவித்து ரசித்ததற்கும், ஒத்த கருத்தைப் பெற்றிருப்பதற்கும் நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  2. நியூஸ் ரூமின் முதல் செய்தி தேர்தல் பகடையாட்டத்தில் மேடை பேச்சு லாவண்யங்களில் தெற்கிற்கும் வடக்கிற்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்று நினைக்க வைத்தாலும்.... வைத்தாலும்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நினைக்க வைத்தாலும்.... வைத்தாலும்?.. //

      இவர்களெல்லாம் கொஞ்சம் நாகரீகம் கற்றுக் கொள்ளலாம்.  பணமும் பதவியும் செல்வாக்கும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனப்போக்கு மாறவேண்டும்.

      நீக்கு
  3. ​கீரி பாம்பு ஓட்டம் AI கொண்டு உருவாக்கியது போல் தோன்றுகிறது. காரணம் இந்தக் காணொளி ஆப்பிரிக்க சவன்னாவில் சிறுத்தை beast எனப்படும் மாட்டை துரத்தி செல்லும் காட்சி போல் அமைந்திருக்கிறது. இந்த வீடியோ செயற்கையே என்று கூறலாம். எதுவானாலும் ஒரு அரைப்பக்க கட்டுரைக்கு மேட்டர் ஆகி விட்டதில் வியப்பு.

    அந்த காலத்தில் பொங்கல் வாழ்த்துக்கள் பிரபலம். போட்டி போட்டு புதிது புதிதாக எழுதுவார்கள். . அதுபோல் அமைந்தது புத்தாண்டு வாழ்த்துக்கள் பா. வாழ்த்துகளுக்கு பஞ்சம் இல்லை. எல்லா வாழ்த்துக்களும் நிறைவேறினால் .... ஹூம்.

    ஜெ மோவுக்கு எதையும் சுருங்கச் சொல்லத் தெரியாது. எங்கேயாவது அம்மா பற்றி குறிப்பிட்ட வேண்டி வந்தால் அவர் தற்கொலையையும் சேர்த்துச் சொல்வார்.

    இரண்டு சிற்பங்களும் மேலை நாட்டினருக்கு வேண்டுமானால் சிறப்பானதாக தோன்றலாம். நம்மூர் கோயில் சிற்பங்களுக்கோ, புத்தர் போன்ற திறந்த வெளி சிற்பங்களுக்கோ இவை ஈடாகவில்லை.

    ஓட்டை உடைசலை தூக்கி போட
    இடம் இன்றி தவிக்கின்றேன்.
    இன்னும் இருப்பது சில நாள் மட்டுமே என்ற
    இச்சையில் ஒதுக்கிவிட்டு வாழ்கிறேன்.
    கிடைத்த வாழ்த்துக்களை வைக்க
    இடம் போத வில்லை.

    இந்த வார நியூஸ் ரூமில் படம் எதுவும் காணவில்லை.

    பல்சுவை பொக்கிஷம் நன்றாக இருந்தது என்றாலும் பொங்கலில் குறு மிளகாய் தட்டுப்படும் ஜோக்குகள் இல்லாதது ஒரு வருத்தமே.
    .
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே அது செயற்கையாக உருவாக்கபப்ட்டிருப்பதோ என்று சொல்லி இருக்கிறேன் JKC ஸார்...  அது எந்த காரணத்துக்காக உருவாக்கப்பட்டதோ..  அதைப் பார்க்க ஆரம்பிக்கும்போது நாம் அதை பாதியில் விட்டு வரும் மனம் பெறாதவர்களாயிருக்கிறோம்.

      உண்மைதான்.  நிறைவேறாத வாழ்த்துகளும், ஆசைகளும்தான் மனதில் நிற்கின்றன.  நிறைவேறியிருந்தால் அதை எப்போதோ மறந்திருப்போம்!

      நீக்கு
    2. ஜெமோ  -  என் கருத்து வாசிக்க பொறுமை வேண்டும்தான்.  விஷ்ணுபுரம் இன்னும் பத்து பக்கம் தாண்டவில்லை.  ஆர்வத்தில் வாங்கி பத்து வருடங்கள் ஆகின்றன!

      சிற்பங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரிதான்.  இருந்தும் இவற்றை அங்கு பார்த்தபோது கொஞ்சம் ரசனையாகத்தான் இருந்தது.  நிஜமோ பொய்யோ என்று எண்ண வைத்தது.

      நீக்கு
    3. உடைந்த பானை உவமை சொல்லும் உண்மைகளை எந்த மனிதனாலும் தூக்கிப் போடுவது சிரமம்தான்.  குழந்தைக்கு விளையாட்டு காட்டுவது போல அதைத் தூக்கி  'காக்கா ஓஷ்' என்று சொல்லி தூரமாக எறிவது போல செய்வோம், நடிப்போம்;முயற்சிப்போம்.  ஆனால் அது நம் முதுகுக்குப் பின்னாலேயே மறைத்துக் கொள்வோம். 

      ஆழ்மனதில் புதைந்து மறைந்திருக்கும்!!  எனவேதான் வாழ்த்துகளை வைக்க இடமில்லை, மனமில்லை!!

      நீக்கு
    4. நியூஸ் ரூமுக்கு இரண்டு படச்செய்திகள் வைத்திருந்தேன், இணைக்க மறந்து விட்டேன்!

      //பொங்கலில் குறு மிளகாய் தட்டுப்படும் ஜோக்குகள் இல்லாதது ஒரு வருத்தமே. //

      பகிரப்பப்பட்டிருக்கும் ஜோக்ஸ் வேலைக்காகவில்லை என்கிறீர்களா?

      நீக்கு
  4. நடிகையர் திலகத்தின் முக நளின அழகே அலாதி தான். 'எனக்கு நிகர் யாரே' என்கிற மாதிரி ஒரு அலட்சிய பாவம் தூக்கலாகத் தெரியும். என்ன சொல்கிறீர்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரைப்பற்றி கணிக்க என்னால் முடியாது.  நான் சின்னப்பையன்!

      நீக்கு
    2. ஆனால் அவர் செயல்கள் விகாரமாகி முக அழகைப் பணாலாக்கியதைப்பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

      நீக்கு
    3. சாவித்ரி பற்றி ஜெமினியின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் சொன்னதை படித்திருக்கிறீர்களா?

      நீக்கு
  5. போக்கிஷம் முதல் தமாஷின் தொடர்ச்சி:

    " நீங்க கில்லாடி ஸார்! சேர்த்த இவ்வளவு பணத்தையும் என்ன செய்யப் போகிறீங்க?"

    "குதிரைகள் வாங்கி ரேஸில் விடப்போறேன்! ரேஸுக்கு போகாம சேர்த்த பணம் என்ற ஞாபகார்த்தமா!.."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எப்படி இருக்கிறதென்றால் வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி பணம்  சேர்த்து பின்னாளில் அதை ஆஸ்பத்திரியில் செலவழிப்பது போல உள்ளது!

      நீக்கு
  6. ரேஸுக்கு போகாமல் சேர்த்த பணம் போல் சிகெரட் குடிக்கநினைத்து குடிக்காமல் சேர்த்த பணம், மது குடிக்காமல் சேர்த்த பணம், சினிமா போகாமல் சேர்த்த பணம் என்று வகை வகையாக சேமித்து வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. 

      சிகரட் குடிப்பவனிடம் நாள் கணக்கு, வாரக் கணக்கு, மாதாந்திரக் கணக்கு எல்லாம் கேட்டு எவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்று ஒருவர் அறிவுரை சொல்வார்.  பதிலுக்கு அவர் இவரிடம் அப்படி குடிக்காமல் நீங்கள் எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பார்.

      நீக்கு
  7. நஜனின் 'தெரிந்த பெயர் - தெரியாத விவரம் பத்தமடைப்பாய் மூலமாக நாம் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் நிறைய.

    இப்பொழுது மாநில அரசு என்று அழைப்பது அப்பொழுது ராஜ்ய அரசாங்கம் என்றிருந்திருக்கிறது.
    இதே மாதிரி இன்றைய ஒன்றிய அரசு அழைப்பு நாளை என்ன ஆகுமோ தெரியவில்லை.

    'அழகான பத்தமடைப் பாய் ஒன்று பிரிட்டிஷ் ராணியின் சென்னை விஜயம் பொழுது பரிசாக அளிக்கப் பட்டது'. ... பிரிட்டிஷார் நம்மை அடக்கி ஆண்டவர்கள் என்றே உணர்வே இல்லாமல் அரசின் செயல்பாடுகளும் ஒரு பக்கம் நடந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தெரிந்த பெயர் - தெரியாத விவரம் பகுதியில் நிறைய சுவாரஸ்ய விஷயங்கள் இடம்பெற்றிருந்திருக்கின்றன.  நான் கொஞ்சம் எடுத்து தனியே சேமித்து வைத்திருந்தேன்.  இப்போது காணோம்!  இது ஒன்றுதான் அகப்பட்டது.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. சென்னை புத்தகத் திருவிழாவில் மலையாள சிறுகதைகள் தொகுப்பு வாங்கியிருக்கிறீர்கள். எம்.டி. வாசுதேவன் நாயர் பற்றி அழகான விவரிப்பு ஒன்றை இங்கு தொகுத்துப் போட்டிருக்கிறீர்கள்.

    இந்த மாதிரியான இலக்கிய பூர்வமான விஷயங்கள் வியாழனில் தொடரட்டும். இவை எபிக்கு பதிவுலகில் தனி அந்தஸ்தைக் கொடுக்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியான தங்கள் எண்ணங்களை ரசித்தேன். எத்தனை கேள்விகள்...! அத்தனையும் இந்த காணொளி பார்க்கும் அனைவரின் மனதிலும் எழுவதுதான். துரத்தல் என்று வரும் போது துரத்துகிறவன் நமக்கும் வில்லனாகிறான். துரத்தப்படுகிறவனை பார்த்து மனம் பதைத்துத்தான் போகிறது. இத்தனைக்கும் துரத்துகிறவனின் இயற்கையான பலவீனம் அறிந்ததால் மனது துரத்தபடுகிறவனின் மேல் லேசான கோபமும் கொள்கிறது.

    இன்றைய தங்களின் முதல் பகுதியை படித்ததும் பரமபத விளையாட்டு நினைவுக்கு வருகிறது. ஆடும் போது ஏணி ஏறும் வாய்ப்பு வந்து விட்டால், சந்தோஷபடும் நம் மனது பாம்பின் தலையில் நம் காயின் வந்து விட்டால் கவலை கொள்கிறது. நம்முடன் ஆடும் எதிராளிக்கு நாம் பாம்பின் வழியாக கீழே இறங்குவது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இதுதான் மனித உணர்வுகள். ஒருவன் வெற்றியடைவதை சட்டென ஏற்காத மனித மனது. அதுபோல் இன்று கீரியும், பாம்பும் போடும் போராட்டத்தை மனது ஏற்காமல் தவிக்கிறது.

    /எத்தனை பாம்புகள் துரத்துகின்றன நம்மை? நாமும் கீரி போல எத்தனை பாம்புகளை விட்டு விலகி தப்பி ஓட முயல்கிறோம்?/

    உண்மை. நமக்கென ஏற்பட்டிருக்கும் விதியைப்பார்த்து "இது எல்லோருக்கும் அமைவதுதான்" என தெரிந்தும் எப்படி கோபப்படுகிறோம். ஆனால், நம் மதி கொண்டு அதனிடம் தப்பிக்க இயலாது என தெரிந்தும், தப்பித்திருக்கலாமோ எனவும் நம் மனதுடன் போராட்டமிடுகிறோம்.

    நிறைய யோசிக்க வைத்தது. தங்களின் முதல் பகுதி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நாம் ஏன் நம்மை துரத்துகிறவனாக கற்பனை செய்து கொள்வதில்லை?  ஹீரோ ஆகா எண்ணமில்லையா?  அல்லது ஆதை கொடூரம் என்கிறோமா?

      பரமபதம் விளையாட்டு நினைவுக்கு வருவது பொருத்தம்தான்!

      நன்றி கமலா அக்கா..  எண்ணங்களில் கூடவே வந்ததற்கு!

      உங்கள் தளத்தில் நான்கு பின்னூட்டம் இட்டேன்.  நழுவி கீழே விழுந்தது போக இப்போதைக்கு இரண்டு மட்டும் நிற்கிறது!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      /ஆனால் நாம் ஏன் நம்மை துரத்துகிறவனாக கற்பனை செய்து கொள்வதில்லை? ஹீரோ ஆகா எண்ணமில்லையா? அல்லது ஆதை கொடூரம் என்கிறோமா?/

      இது நல்ல கேள்வி. இது மனிதருக்கு மனிதர் மனதில் ஏற்படும் நற்சிந்தனைகளைப் பொறுத்து வருவது. எல்லோரையும் ஒன்று போல் உடல் அங்கங்களுடன் படைத்த இறைவன் மனதை மட்டும் வெவ்வேறாக படைத்து விட்டானே..! (தமோ குணம், சாத்வீக குணம், ரஜோ குணமென்று பிரித்து அமைத்ததும் "அவன்" தானே..!) சிலருக்கு நீங்கள் சொல்வது போல் எண்ணத் தோன்றாலாம். பலருக்கும் முதலில் தோன்றுவது "சீக்கிரம் துரத்துகிறவனை விட்டு விலகி ஓடு" எனத்தான் எண்ணத்தோன்றும். ஆனால், இந்த மனநிலை இப்போதைய காலகட்டத்தில் சற்று மாறி வருவதால், கலி காலம் முத்தி விட்டதென கூறுகிறோம்.

      என் பதிவுக்கு வந்தளித்த தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களின் நழுவிய கமெண்ட்களை எங்கேயுள்ளது என தேடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. இதில் இன்னொன்று சொல்ல விட்டுப் போயிருக்கிறது.  பாம்பு என்றும் கீரியைத் துரத்தாது.  கீரிதான் பாம்பை உண்டு இல்லையென்று செய்யும்.  அப்படி பாவமான பாம்பு ஹீரோ ஆவது போல இருக்கும் இந்த காணொளியில் கூட பாம்புக்கு ஆதரவில்லை.  யோசித்துப் பார்த்தால் கீரியால் மனிதனுக்கு ஆபத்தில்லை.  பாம்பால் உண்டு.  மனிதனுக்கு கீரியைவிட பாம்பைக் கண்டு பயம்.  எனவே அது அவன் மனதில் வில்லனாகி விடுகிறது!

      நீக்கு
  11. கீரி பாம்பு துரத்துவது எந்தப் பக்கம் வெற்றியோ என நினைக்கத் தோன்றும்.

    நியூஸ்ரைம் நன்று.

    பொக்கிசம் ரேஸ்கோஸ் புத்திசாலி மனிதர்.

    பக்கற் ரேடியோ....ஹா....ஹா.

    சாவித்திரியின் அந்தக்கால மேடை படம் பொக்கிசம்.

    பதிலளிநீக்கு
  12. முதல் பகுதி - ஸ்ரீராம் நீங்கள் சொல்லியிருப்பதேதான். கீரி இப்படி ஓடுமா என்ன? பாம்பும் இவ்வளவு ஸ்பீடஆ?

    ஆனால் ஒன்று இது நீங்கள் சொல்லியிருப்பது போல் வாழ்க்கைப் பாடம்.

    வாழ்க்கையில் நாம் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒன்று, ஒரு பாயிண்டுக்கு மேல் தளர்ச்சி வந்துவிடும் தான்...ஒரு சிலரால் மட்டுமே அதை நிறைவு செய்ய முடிகிறது.

    இந்தத் துரத்திலில் இருந்து விடுபடத்தான் நிறைய நல்ல போதனைகள் சொல்லப்படுகின்றன...ஹூம் நாம எங்க அதைக் கேக்கறோம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் துன்பங்கள் நம்மை பிடித்து விடுவது போல அருகில் வந்தாலும் பிடித்து விடுவதில்லை என்பதும் பாடம்தான்!  ஹிஹிஹி..

      நீக்கு
  13. உருவாக்கப்பட்ட காணொளி. கடைசி வரை பார்த்தேன்.

    ஒரு சிலர் துரத்தப்படுவதற்குள் சிக்கிக் கொண்டு உழல்கிறார்கள் அது ஒரு டென்ஷன் என்றால், இப்படி ஓடிக் கொண்டே இருப்பதும் நம்மை மூச்சிரைக்க வைக்கும். வயதான காலத்திலும் பொருள் ஈட்டும் நிலையை எண்ணிப் பாருங்க! நித்ய வாழ்க்கை துரத்துகிறதே. ஓடிக் கொண்டே இருப்பதும் சரி சிக்கிக் கொள்வதும் சரி இரண்டுமே கஷ்டமான நிலைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் ப்குதியை ரசித்தேன் ஸ்ரீராம் நீங்க சொன்ன விதம். இன்னொன்று துரத்தப்படுபவற்றைப் பார்த்து நாம பதைபதைப்போம்...

      நம்மைப் பார்த்து யாருங்க அனுதாபப்படப் போறாங்க? கோடானு கோடிக்கணக்கு மக்களில் நாமளும் ஒருத்தர்...

      யார்தான் ஒடலை? துரத்தப்படலைன்னு!!!

      கீதா

      நீக்கு
    2. நாயை விடாமல் துரத்திக்கொண்டு போனோமானால் ஒரு எல்லைக்குமேல் சட்டென நின்று திரும்பி உறுமும் பார்த்திருக்கிறீர்களா?  அதனுடைய ஏரியா என்றில்லை, அதைத் தாண்டி ஓடியிருக்கும் அது.  ஆனாலும் எவ்வளவுடா ஓடுவது என்று கேட்பது போல இருக்கும்!

      நீக்கு
  14. 'ஏய் லூசு மேட்டில் ஏறு' //

    அதைச் சொல்லுங்க....இப்படி நமக்கு வாய்ப்புகள் எத்தனையோ நம் கண் முன் இருந்தும் அதைப் பற்றிக் கொள்ளாமல் எதையோ நம்பிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். இல்லை சுழலில் சிக்கிக் கொள்கிறோம்.

    உணவுக்காக இப்படி போடவேண்டாம், உயிரைக் காத்துக் கொள்ளளவு இப்படி ஓடவேண்டாம்.//

    யெஸ் அதே தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. '' உணவுக்காக இப்படி போடவேண்டாம் ''

      திருத்தி விட்டேன் கீதா!

      நீக்கு
  15. அனைத்தும் நன்று. பாம்பு - கீரி காணொளி பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  16. அந்த வேட்பாளர் பேசியது அசிங்கம்.

    கருப்புநிற ம் செண்டிமென்டா?

    சில வருடங்கள் முன் வானிலை கணிப்பில் சொல்லப்பது இப்படி தெற்கில் கொஞ்சம் கொஞ்சமாகப் உறை பனி வரத் தொடங்கும் என்று.

    வைரஸ் பரவலுக்கு மாஸ்க் போட இங்கும் சொல்வதாகப் பேச்சு அடிபட்டது.

    உச்ச நீதிமன்றம் சொன்னது சரிதான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியூஸ் ரூம் பற்றி ஒரு கமெண்ட் வருமென்று பார்த்தேன்...!

      நீக்கு
  17. தினமலர் ஃப்ளாஷ்பேக் சுவாரசியமான தகவல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ஓங்கு தமிழ் மொழியினிலே உரைக்கின்றேன்
    ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை. //

    வாழ்த்துக் கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம். இந்த வரியை ரசித்தேன்..சிரித்தும் விட்டேன்...வாழ்த்து அன்று சொன்னப்ப இது சொல்ல விட்டுப் போச்சு....ஓங்கு தமிழில் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. நடிகர் டி பி மாதவனின் செய்தி நீங்க சொல்லியிருப்பது போல் கதைக்கரு இருக்கு.

    கடைசி வரி யோசிக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் மகன், தன் தந்தையை ஒரு 2 முறை பார்த்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். மொத்தம் 4 முறைன்னும் செய்தி ஒன்று சொல்கிறது. விவாகரத்து. அம்மா தான் பிள்ளைகளை வளர்த்துள்ளார்....என்றும் மகன் பேசியதில் தெரிகிறது.

      கீதா

      நீக்கு
    2. இதை வைத்தே இரண்டு லட்ச ரூபாய்க்கு முயற்சிக்கலாமோ.....!!

      நீக்கு
  20. கீரி எப்போதும் பாம்பை விளையாட்டு காட்டி அயர்வடைய வைத்து பிறகு கவ்வும்.

    மனித மனம் எப்போதுமே ஏதிலிகள் அல்லது வலிமை குறைந்தவர்கள் பக்கமே நிற்கும். Aus vs Zim cricket ல் Zim மிக நன்றாக விளையாட ஆரம்பித்தால் அது வெற்றி பெறணும் என்றே தோன்றும். அபிமன்யூ கௌரவர்களைப் புரட்டியதில் ஏற்பட்ட மகிழ்ச்சி, அவனை வென்று கொன்றவர்களிடம் நமக்கு ஏற்படாது. சல்லியன் வீரனாக இருந்தாலும் கர்ணனை அவனுக்கு தேரோட்டும்போது அதைரியப் படுத்தியதை அவமானப்படுத்தியதை பாதியில் கடமையைவிட்டு அகன்றதை நம் மனம் ஏற்காது, அதனால் பாண்டவர்களுக்கு நன்மை என்றபோதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  

      உண்மை..  அதைதான் சொல்ல முயன்றிருக்கிறேன்!

      நீக்கு
  21. சிலை வடிவம் அழகா இருக்கு. அதற்குள் நான்கு அறைகளா!! அட! அழகான வடிவமைப்பு.

    இரண்டாவது வடிவமும் செமையா இருக்கு. நல்ல கற்பனை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதற்குள் நான்கு அறைகளா! //

      நான்கு என்று சொல்லப்பட்டிருக்கிறதா என்ன...  சில அறைகள் என்றுதானே சொல்லி இருக்கிறது?

      நீக்கு
  22. எம் டி பற்றி ஜெமோ பகுதியை ரசித்தேன். நல்ல பகிர்வுக்கு நன்றி. எழுத்தாளனைப் போற்றும் மலையாளச் சமூகம் அறிவுடைத்தா இல்லை நடிக நடிகைகளின் காலில் அல்லது அதற்குக் கீழே விழுந்துகிடக்கும் தமிழ் சமூகம் உயர்வானதா என்பதை ஜிவி சார் மற்றும் எபியின் ஆசிரியர் குழுவில் பெரியவர்களுக்கான புதன் கேள்வியாக வைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் போற்றப் படுவதில்லை என்கிறீர்களா?

      நீக்கு
    2. இல்லவே இல்லை. அப்படியே சிலாகித்தாலும் (போற்றுதல் இல்லை), ஓ.. நீ அவர் ஜாதி அதனால்தான். என்று கடந்துவிடுவார்கள். புதுமைப்பித்தனுக்கு ஒன்றரை ஓட்டு, யோகிபாபுவுக்கு அவர் நிற்கும் தொகுதியில் மூவாயிரம் ஓட்டு என்பது தமிழக நிலைமை

      நீக்கு
  23. ஜெமோவின் பகுதியும் நிறைய சுவாரசியமான தகவல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. குரு தட்சிணை... பணம் சம்பாதிக்க திறமை (professional) மாத்திரம் போதுமா? அதற்கு மேலும் சில தகுதிகள் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு 'நானும் ரௌடிதான்' படக்காட்சி நினைவுக்கு வரவில்லையா?  விஜய்சேதுபதி, ஆனந்த்ராஜ்...

      நீக்கு
  25. குதிரைப் பந்தய ஜோக் என்பதை விட ஒரு கருத்து அதில்.

    குரு தட்சிணை! புன்னகைக்க வைத்தது.

    பத்தமடைப் பாய் ரொம்ப பிராபல்யம். எங்க ஊர்ப்பக்கங்களில் கல்யாணத்துக்கு இதைத்தான் வாங்குவாங்க! சிலர் பாய்ல இந்த மாதிரி டிசைன் வேணும்னு சொல்லியும் போட்டு வாங்குவாங்க. அதுல பெண், மாப்பிள்ளை படங்களைக் கூடப் போட்ட்டு வேயப்படும். கோரைப் புற்களினாலேதான்.

    சாவித்திரிமாமி அசத்தல்.

    கீதா




    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!