சனி, 11 ஜனவரி, 2025

ரோடு ரோலர் ஓட்டும் ரிபா மற்றும் நான் படிச்ச கதை


பெண்கள் வீட்டில் அடைபட்டிருந்த காலம் போய், இன்று நாட்டை ஆளும் காலமே வந்துவிட்டது. இருப்பினும் பெண்களை பலவீனமான பாலினமாக நினைக்கும் பலர் உள்ளனர். இவர்களின் நினைப்பு பொய்த்து போகும் வகையில், கனரக வாகனங்களை ஓட்டி பலத்தை நிரூபித்து உள்ளார், 14 வயது சிறுமி.  மைசூரு என்.ஆர்., மொஹல்லா பகுதியை சேர்ந்தவர் ரிபா தஸ்கின். 14 வயதான இவர் ஓட்டாத வாகனங்களே இல்லை என சொல்லலாம். இவரது தந்தை தாஜூதின் 'பைக் ரேசர்'. அப்பாவிற்கு பைக்கின் மீது இருந்த ஆர்வத்தை பார்த்த, ரிபா தஸ்கின் தனது தந்தை போல ஒரு பைக் ரேசர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு உள்ளார்.  7 வயதில்  :  அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு, முயற்சிகள் செய்ய துவங்கினார். இதற்கு அவரது தந்தையின் உதவியை நாடினார். அவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, வாகனங்கள் ஓட்ட கற்று கொடுக்க ஆரம்பித்தார். தனது 7 வது வயதிலேயே டூ வீலர் ஓட்ட கற்றுக் கொண்டார். இத்துடன் நிற்காமல், ஆட்டோ, கார் போன்றவையும் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டார்.


இவரது திறமையை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் அசந்தனர். இதன் மூலம் தனது 7வது வயதிலேயே இந்தியன் புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்தார். கார், பைக், ஆட்டோ ஓட்டினால் மட்டும் போதுமா; டிராக்டர், லாரி, பஸ் என எல்லா வாகனங்களையும் ஒரு கை பார்த்தார். அப்பா பைக் ரேசர் என்பதாலோ, இவருக்கும் வாகனங்கள் ஓட்டுவது மிக எளிமையாக இருந்து இருந்தது.  இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று, ரோடு ரோலரை, ஒற்றை கையால் ஓட்டும் அளவிற்கு திறமையை வளர்த்து கொண்டார். பல விருதுகளை வாங்கி குவிக்க ஆரம்பித்தார். வீட்டு அலமாரி முழுதும் விருதுகளால் நிரம்பி உள்ளன. மொத்தம் 25 வகையான வாகனங்களை ஓட்டி அசத்துகிறார்.  ராணுவம்  :  ரிபா தஸ்கின் கூறுகையில், ''லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களை ஆண்கள் ஓட்டும் போது, பெண்களால் ஓட்ட முடியாதா. இதை நிரூபித்துக் காட்டவே வாகனங்களை ஓட்ட கற்று கொண்டேன். எதிர்காலத்தில் நமது ராணுவத்தில் பணிபுரிவதற்காக காத்திருக்கிறேன்,'' என்றார்.  சாதிக்க வயசு முக்கியமில்லை; தைரியமும், திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதனையாளர் ஆகலாம் என இவரது வாழ்க்கை உணர்த்துகிறது.

==========================================================================================



பனியர்' என்ற பழங்குடியின சமுதாயத்தினர், கர்நாடகா, தமிழகம், கேரளா மலை பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். கர்நாடகாவில் இச்சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மொத்தமே 495 பேர் மட்டும் தான். இவர்கள், கூலி தொழிலாளியாக மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.  



இவர்களில் மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள செபினகோலி ஹட்டியை சேர்ந்தவர் திவ்யா, 29. இவரே, இச்சமுதாயத்தின் பிஎச்.டி., பெற்ற முதல் பெண்.


==================================================================================================




இவருக்கு வயது 35 மட்டுமே. இந்த இளைய வயதில் முதியோர் தொடர்பான உபாதைகளுக்கு 'ஸ்பெஷலிஸ்ட்' ஆகி, மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வீடு தேடி சென்று மருத்துவ சிகிச்சை பார்க்கிறார் டாக்டர் சுவாமிநாதன்.  இதற்காகவே மதுரை பொன்மேனியில் தனது சியாமளா ெஹல்த் கிளினிக்கில் ''டாக்டர் ஆன் வீல்ஸ்'' என்ற அமைப்பை அறக்கட்டளை மூலம் நடத்துகிறார். இதோ அவரது பேட்டி:  நான் எம்.பி.பி.எஸ்., மற்றும் முதியோர் (Geriatric) தொடர்பான முதுநிலை பட்டத்தை முடித்ததும் சில கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரிந்தேன். அப்போது மருத்துவமனைக்கு பிரச்னைகளுடன் வரும் முதியோர்களைப் பார்க்கும்போது மனது கஷ்டமாக இருக்கும். அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கே உடல் ஒத்துழைக்காது. அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன் விளைவாக 2019ல் ஆரம்பித்தது தான் டாக்டர் ஆன் வீல்ஸ்.  கொரோனா காலத்திற்கு முன்பே அதை ஆரம்பித்ததால் கோவிட் காலத்தில் மட்டும் 700 முதியோருக்கு வீட்டுக்கே சென்று கொரோனாவை சரி செய்தேன். கடந்த 5 ஆண்டுகளில் 30 ஆயிரம் முதியோருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்த்துள்ளேன்.  ஏழை முதியவர்களுக்கு இலவச மருத்துவம் தவிர, வசதி உள்ளவர்களிடம் நியாயமான கட்டணம் வாங்கிக்கொண்டு சிகிச்சை அளிக்கிறேன். இதுவரை 500 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி உள்ளேன்.  தினமும் அதிகாலை 2:00 மணிக்கு புறப்பட்டு, மதுரை நகரம், சுற்றி உள்ள திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் மதுரை வந்து காலை 9.30 மணிக்கு மருத்துவமனை பணியை ஆரம்பிப்பேன். ஒரு நாளைக்கு துாங்குவது 3 மணி நேரம் மட்டுமே.  அன்னை மீனாட்சி மீது அதிக பக்தி உண்டு. அதனால் தான் மீனாட்சி கோயில் பணியாளர்கள் யாராக இருந்தாலும் 50 சதவீத கட்டண சலுகையில் சிகிச்சை அளிக்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்டாகிராமில் தனது பக்கத்திலும் மருத்துவ ஆலோசனைகளைக் கூறி ரீல்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்.

இவரை தொடர்புகொள்ள 70943 12185

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஷார்ஜா: ஷார்ஜாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்த ஹாரித் முஹம்மது படித்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.  ஷார்ஜாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஷேக் சுல்தான் விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஷார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி விருது வழங்கி கௌரவித்தார். மேலும் பல மாணவர்களும் இந்த விருதினை பெற்றனர். விருது பெற்ற தமிழக மாணவருக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மாணவரின் தந்தை முஹம்மது அபுபக்கர் அமீரக தொலை தொடர்பு நிறுவனத்திலும், தாயார் ஜாஸ்மின் இல்லத்தரசியாகவும் இருந்து வருகிறார்.

=============================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

ஒரு திருணையின் கதை - மு. சுயம்புலிங்கம்

ஆசிரியர் சுயம்புலிங்கம் பற்றிய விவரங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் வேப்பலோடை என்ற ஊரில் 1944இல் பிறந்தவர். கரிசல் காட்டு இலக்கிய கர்த்தாக்களில் ஒருவர்.

கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கல்குதிரை என்ற சிற்றிதழில் ஆரம்பக் காலங்களில் எழுதி வந்தார்.

முன்னுரை

ஒரு புளிய மரத்தின் கதை என்ற சுந்தர ராமசாமியின் நாவல் பிரசித்தி பெற்ற ஒன்று.  இந்தக்கதை அத் தலைப்பால் கவரப்பட்டு “ஒரு திருணையின் கதை” என்ற தலைப்பை கொண்டுள்ளது என நினைக்கிறேன். இது ஒரு மைக்ரோ கதை.

திருணை என்பது திண்ணை என்பதின் திரிபு ஆகும், பாட்டி  காலத்தில் உளுந்து உடைக்க, மாவு திரிக்கப்  பயன்படும்  திருகை அல்ல.

பின்வரும் “கதையில்” கதை என்று ஒன்று இல்லை. ஆசிரியர் கவிதைகள் படைப்பவர். ஒரு கவிதை இங்கு கதை (செய்தி?) ஆகிறது. தத்துவ தர்க்கத்தைத் தூண்டுகிறது. 

“இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்.” இதுதான் தத்துவம்.

இந்த தத்துவம் பல சிந்தனைகளை தூண்டுகிறது. உயிர் என்பது யாது? உயிரில்லாப் பொருட்கள் என்று நாம் கூறும் பலவும் காலப்போக்கில் அழிவதைக் காண்கிறோம். உயிர் போனால் உடல் அழிகிறது. அதே போல் உயிரில்லா கல் மண் போன்றவையும் உரு மாறுவது ஏன்?

எல்லாம் மாயை.

எஸ்ரா இந்தக் கதையையும் அவருடைய 100 சிறந்த கதைகள் பட்டியலில் உட்படுத்தியிருக்கிறார். ஆகவே நான் படிச்ச ஒன்றாக இங்கு இக்கதை இடம் பெறுகிறது.

====>ஒரு திருணையின் கதை - மு. சுயம்புலிங்கம்<====


பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை அவள் கண்ணில் இடித்தது. பார்வை போய்விட்டது. கண்ணு தெரியாத பாட்டி இந்தத் திருணையைக் காத்துக் கிடந்தாள்.


தாத்தா ரொம்ப காலம் இந்தத் திருணையில்தான் படுத்துக் கிடந்தார். அவர் முதுகுப்புறம் சதையில் புண் வைத்தது. புண்களில் புழு நெளிந்தது. தட்டைப் பாரம் ஏற்றிய மாட்டு வண்டியைத் தாத்தா ஓட்டி வந்தார். ஒரு ஓடையில் வண்டி கவிழ்ந்தது. தாத்தாவை இன்னும் ஒரு வண்டியில் தூக்கிக்கொண்டு வந்து இந்த திருணையில்தான் கிடத்தினார்கள். உடைந்த எலும்புகள் தாத்தாவுக்குச் சேரவே இல்லை.

அம்மாவையும் இந்தத் திருணையில்தான் கிடத்தினார்கள். அவள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அப்பா விற்றபொழுது அம்மா சகித்துக் கொண்டாள். அவள் காதில் அழகாகத் தொங்கிக்கொண்டிருந்த நகையை அப்பாவிடம் கழற்றிக் கொடுத்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை. மூளிக் காதோடு அவள் எப்படி ஊருக்குள் நடப்பாள். மோட்டுவளையில் ஒரு சுருப்பாங்கணியில் தூக்கில் தொங்கிய அம்மையை இந்தத் திருணையில்தான் கிடத்தினார்கள்.

அப்பா இந்தத் திருணையில்தான் எப்போதும் படுப்பார். குளிர் அன்றைக்கு அதிகமாக இருந்தது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை நல்லா மூடிப் படுத்திருந்தார். சீக்கிரம் எழுந்துவிடுகிறவர் அப்பா. அப்பா மேல் வெயில் அடிக்கிறது. அப்பா அப்பா என்று கூப்பிட்டு எழுப்பினேன். அப்பாவைத் தொட்டு உருட்டிப் போர்வையை எடுத்தேன். அப்பா தலை துண்டிக்கப்பட்டு தனியே கிடக்கிறது.

திருணை மழையில் கரைந்து தரையோடு தரையாய் ஆகிவிட்டது.

இடிந்து கிடக்கிற இந்தத் திருணையையும் வீட்டையும் நாங்கள் கெட்டுவோம்.

*********>கதையின் சுட்டி<********* 

திருணையின் குரல் (JKC)

இறந்தவர் பலர்

கிடந்தது என்மேல்

இன்று

நான் இறக்கின்றேன்

இனி எதன் மேல் கிடப்பேன் ??

17 கருத்துகள்:

  1. ரிபா தஸ்கினுக்கு வாழ்த்துகள். அவரது சாதனைகளுக்கும் திறமைக்கும்.

    இப்படி ஓட்டுவதற்கு உரிமம் பெற வேண்டுமா இல்லை, தன் திறமையை நிரூபிக்கவும் சாதனைக்காகவும் செய்யலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  2. திவ்யாவையை மனதாரப் பாராட்டுகிறேன் வாழ்த்துகளும்! நல்ல உதாரணம்.

    மருத்துவர் சுவாமிநாதனையும் மனதாரப் பாராட்டுகிறேன். அருமையான சேவை. தற்காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்றும். அவரது சேவை சிறக்க வாழ்த்துவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஹாரித் முகமதுவுக்கும் வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஜெ கே அண்ணா சொல்லியிருப்பது போல் கதையில் எதுவும் இல்லை.

    நான் பொதுவாகவே கதைகள் கட்டுரைகள் வாசிக்கும் போது ஆழ்ந்து வாசிப்பதுண்டு. அப்படி வாசிக்கும் போது READING IN BETWEEN LINES என்பதை உட்படுத்துவதுண்டு. அது பலவற்றைச் சொல்லும் தாக்கத்தைக் கூட ஏற்படுத்தும். அல்லது தத்துவங்கள் மறைந்திருக்கிறப்பதையும் உணர்ந்ததுண்டு.

    ஆனால் இக்கதையில் ஜெ கே அண்ணா சொல்லியிருக்கும் தத்துவம் எனக்கு எதுவும் படவில்லை. அப்படியான ஓர் உணர்வை இது தரவில்லை. எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​தொடர்கதையாக நிகழும் ஒரு வீட்டின் சோக நிகழ்வுகள்!

      நீக்கு
  5. ஒரு நெடுங்கதை அல்லது சிறு கதையாகக் கூட அல்லது குறு நாவலாகக் கூட எழுதலாம் அப்படியான கரு இது என்று எனக்குத் தோன்றியது. அப்படி எழுத எழுதி வைத்திருக்கும் குறிப்புகள் போலத் தோன்றியது.

    நான் இப்படிக் கதைக்கான குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வதுண்டு. மறந்துடக் கூடாதே அப்பதானே கதையை எழுதும் போது அதற்குள் புகுந்து செல்ல உதவும் என்பதால். சமையல் செய்யறப்ப, நடக்கறப்ப பல தோன்றும் மனதில் அதைக் குறித்து வைக்க முனைவேன். பல சமயங்களில் குறிக்க நினைக்கும் போது மறந்துவிடும் என்பது வேறு விஷயம்!!

    எஸ் ரா இக்கதையை 100 சிறந்த கதைகள் பட்டியலில் உட்படுத்தியிருப்பது தெரிந்ததும்….
    இதைப் பார்த்ததும், மனம் கொஞ்சம் ஒரு சில நிமிடங்கள் வருத்தமானது உண்மை. வருத்தத்திற்குக் காரணம் கதை அல்ல.

    நாங்கலாம் எழுதும் கதைகள் கதைகளே இல்லையோ அத்தனை தரமற்றவையாகவா இருக்கின்றன? என்றும் எண்ண வைத்தது. அதற்கும் ஒரு மச்சம் வேண்டும் போல! அது எங்களுக்கு வாய்க்கவில்லை என்று தோன்றியது.

    எஸ் ரா எங்கள் கதைகளை வாசிக்க வேண்டும் என்றோ, தேர்ந்தெடுக்க வேண்டும் என்றோ, ஜெமோ நம் கதைகளைப் பற்றிக் கதைக்க வேண்டும் என்பதான எண்ணங்கள் துளியும் இல்லை. அதனால் வந்த கருத்து இல்லை மேலே சொன்னது. ஆனால் பொதுவாகக் கதைகளைப் பற்றி வரும் கருத்துகளின் அடிப்படையில் வந்த எண்ணமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ்ரா தேர்ந்தெடுத்தால்தான் உண்டா?  அவர் தான் தேர்ந்தெடுக்கும் கதைகளை எங்கிருந்து தேர்ந்தெடுக்கிறாரோ...   எல்லாவற்றையும் அவரால் பார்க்க முடியாது.  கண்ணில் பட்ட வரை தொகுத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!

      நீங்களே நேற்று பேசும்போது சொன்னமாதிரி ஆளாளுக்கு தங்கள் தெரிவில் பத்து கதைகள், பனிரெண்டு கதைகள் என்று தேர்ந்தெடுத்து புத்தகம் போடுகிறார்கள். 

      திலகவதி ஐ பி எஸ் முத்துகள் பத்து எனும் தலைப்பில் கந்த சஷ்டி கவசம் புத்தகம் போல கொஞ்சம் சிறிய வடிவில் சில புத்தகங்கள் வெளியிட்டார்.  நிறைய நல்ல கதைகள் அதில் கிடைத்தன.

      நீக்கு
  6. பளியர் என்பதுதான் பழங்குடி இன வகை. பனியர் அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தினமலரிலிருந்து அப்படியே காபி பேஸ்ட் செய்யப்பட வரிகள்.  எனவே ஒருவேளை இப்படியும் ஒன்று இருக்குமோ என்கிற சந்தேகத்தில் விட்டு விட்டேன்!

      நீக்கு
  7. டாக்டர் ஆன் வீல்ஸ்.... மிகப் பெரிய தொண்டு. யாரும் misuse செய்து இத்தகைய சமூகத் தொண்டாளர்களை அதைரியப்படுத்திவிடக்கூடாது. மக்கள் எதிர்பார்ப்பது எளிய மருத்துவம். எல்லாவிதமான டெஸ்டுகளை எடுக்கச் சொல்லி பணம் பிடுங்கும் தொழிற்சாலைகளை அல்ல.

    பதிலளிநீக்கு
  8. திருணை கதையில் என்ன இருக்கிறதென்று சிறந்த கதைகளில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது?

    வயதாகி அனாதையாக்க் கஷ்டப்பட்டு, பிச்சையெடுத்தோ, சாலைகளில் வீழ்ந்தோ, இல்லை மனநிலை சரியில்லாமல் வாழ்பவர்கள், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு அலக்கழிக்கப்படுபவர்கள் போன்றவர்களைக் காணும்போது, இவர்கள் பிறக்கும்போதும் பெற்றோர்கள் உறவினர்களால் கொஞ்சப்பட்டு வசந்தகாலத்தை அனுபவித்திருப்பார்களே, இந்த நிலையில் இவர்கள் பெற்றோர் கண்டால் அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்ற எண்ணம் எனக்குள் எழும்.

    இடிந்துகிடக்கும், உருக்குலைந்த பழங்காலக் கட்டிடங்கள் கோவில்கள் போன்றவற்றைக் காணும்போதும் இந்த எண்ணம் எழும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரெங்கன் சொன்னதுபோல அவர் பெரிய நாவல் வடிவத்தில் அல்லது ஒரு சிறுகதையாகவேனும் எழுத எடுத்து வைத்திருந்த குறிப்புகளை மட்டுமே ஒரு படைப்பாக்கி விட்டாரோ என்றுதான் எண்ண வைக்கிறது!

      என் உறவில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு மனித மனங்களை பற்றி என்னை நிறைய யோசிக்க வைக்கிறது.  அப்படியும் இருக்கலாமோ, அல்லது இப்படி இருக்குமோ, அல்லது எதுவுமே இருக்காதோ என்கிற ஊசலாட்டத்துடன் எண்ணங்கள் பின்னிப் படர்கின்றன!

      நீக்கு
  9. திண்ணைக்கு ஒரு பாரம்பர்யம்!  

    பரம்பரை பரம்பரையாக ஒவ்வொருவராக அதில் கிடத்தப் படுகிறார்கள்...  சரி..  கடைசியில் தலை துண்டிக்கப்பட்டதுதான் புரியவில்லை!  ஏன்?  எப்படி?  

    தான் கட்டிய வீட்டில் தானே கேட்பாரற்று கிடப்பது புழுவில் உழல்வது கொடுமை.  , தான் புழங்கிய வீட்டின் திண்ணையில் தானே நாதியற்று கிடப்பது கொடுமை.  தானாகத் தீரும்வரை அனுபவிக்கப்படும் கொடுமை.  

    நகையில் தன் கௌரவத்தை வைத்த அம்மா தானும் அங்கு இடம்பிடித்தது சோகம்.  திண்ணை வரலாறுகளின் சிசுருஷையில் மனம் பேதலித்திருக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!