சனி, 25 ஜனவரி, 2025

மிளகு எலுமிச்சை மற்றும் நான் படிச்ச கதை

 

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பார்வையற்ற வீராங்கனை

சிக்கமகளூரில் உள்ள பாலுகுடனஹல்லி எனும் கிராமத்தில் 2001ம் ஆண்டு பிறந்தார் ரக்ஷிதா ராஜு, 24. இவருக்கு பிறவியிலே கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டு உள்ளது. ரக்ஷிதா ராஜு, தனது 2 வயதில் தாயை இழந்தார். 10 வயதில் தந்தையை இழந்தார். ஆனால், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. இதன்பின், அவருடைய பாட்டி தான் அவரை வளர்த்து உள்ளார். சிக்கமகளூரில் உள்ள அஷாகிராணா பார்வையற்றோர்க்கான பள்ளியில் படித்தார். அப்போது, பாலகிருஷ்ணா எனும் ஆசிரியர் இவருக்கு ஓட்டப்பந்தயத்தை அறிமுகம் செய்தார். ஓடுவதற்கு பயிற்சி அளித்தார். சவுமியா என்பவர் இவருக்கு பயிற்சிகள் அளித்து உள்ளார்.

இதனால், ரக்ஷிதாவிற்கு படிப்பில் இருந்த ஆர்வத்தை விட, ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக பள்ளி படிப்பின் போதே ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு, பரிசுகளையும் பெற்று உள்ளார். படிப்படியாக முன்னேறி தன்னுடைய திறமையை, மாவட்டம் தாண்டி மாநிலம் வரை அறிய செய்தார். கடந்த 2016ம் ஆண்டு, டில்லியில் நடந்த பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான ஓட்டப்பந்தய போட்டியில் கர்நாடகா சார்பில் கலந்து கொண்டார். இதில் 400 மீட்டருக்கான போட்டியில் வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டில் நடந்த உலக அளவிலான பாரா தடகள போட்டியில், 1500 மீட்டர், 800 மீட்டர் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பத்தகம் வென்றார். பின், 2018 மற்றும் 2023ல் ஆசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில், ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் பங்கு பெற்று வெற்றி பெற்றார். இவரின் வாழ்க்கையில் மைல் கல்லாக, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் பங்கு பெற்றார். பார்வையற்றோருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4வது இடத்தை பிடித்தார். பதக்கங்கள் ஏதும் பெறவில்லை என்றாலும், வரும் போட்டிகளில் பதக்கங்கள் பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

=========================================================================================

ஓட்டப்பந்தயத்தில் 4 பதக்கம் 56 வயது ஆசிரியர் அசத்தல்

சாதிப்பதற்கு வயது தடையாக இருப்பது இல்லை. சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆறு வயதிலும் சாதிப்பர். 60 வயதிலும் சாதிப்பர். இதற்கு உதாரணமாக 56 வயது ஆசிரியர் ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் நான்கு பதக்கங்கள் என்று அசத்தியுள்ளார்.


மங்களூரில் கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மூன்று நாட்கள் கடலோர மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான ஓட்டப்பந்தய போட்டி நடந்தது.  இந்தப் போட்டியில் பெரும்பாலும் 40 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களே அதிகம் பங்கேற்றனர். ஆனால் 56 வயதான பாஸ்கர் நாயக் என்ற ஆசிரியரும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார்.  இவருக்கு தான் வயதாகி விட்டதே. ஓட்டப்பந்தயத்தில் எப்படி ஓடுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இளம் ஆசிரியர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பாஸ்கர் நாயக் செயல்பாடுகள் இருந்தன. அதாவது 1,500, 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்தை தட்டி தூக்கினார். அவரைப் பார்த்து அனைத்து ஆசிரியர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.  இதுகுறித்து பாஸ்கர் நாயக் கூறியதாவது:
எனக்கு 56 வயது ஆனாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துவேன். தினமும் காலை வாக்கிங், ஜாக்கிங் செய்கிறேன். ஓட்டப்பந்தய போட்டியில் இரண்டு தங்கம் உட்பட 4 பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.  வரும் நாட்களிலும் நிறைய போட்டிகளில் கலந்து கொள்வேன். என்னால் முடியும் வரை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பேன். சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்று சொல்வதை முழுமையாக நம்பும் நபர் நான்.  இவ்வாறு அவர் கூறினார்.

===============================================================================================

கே.கே., நகர், கோடம்பாக்கம மண்டலம், கே.கே., நகர் 137 வது வார்டில், ஒப்பந்த துாய்மை பணியாளராக பணி செய்து வருபவர், இருதயமேரி, 49. இவர் நேற்று முன்தினம் இரவு, கே.கே., நகர் அண்ணா பிரதான சாலையில், சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, சாலையோரம் தங்க செயின் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து, அந்த தங்க செயினை, உயர் அதிகாரிகளிடம் இருதயமேரி ஒப்படைத்தார். அதன்பின், கே.கே., நகர் போலீசாரிடம் ஒரு சவரன் தங்க செயின் ஒப்படைக்கப்பட்டது.
சாலையில் கிடந்த செயினை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருதயமேரியை போலீசார் பாராட்டினர். செயினை தொலைத்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

===================================================================================

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள கூடப்பாக்கத்தைச் சேர்ந்த 36 வயதான விஞ்ஞானி ஒருவர், 18 மாதங்களில் அதிக மகசூல் தரும் தனித்துவமான எலுமிச்சை சுவை கொண்ட மிளகு ரகத்தை உருவாக்கியுள்ளார். விஞ்ஞானியின் குடும்பப் பண்ணையில் இயற்கை மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய ரகத்தை புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் சனிக்கிழமை வெளியிட்டார்.
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், வேளாண் ஆராய்ச்சியாளருமான வெங்கடபதி ரெட்டியார் அவர்களின் மகளான விஞ்ஞானி ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடபதி கூறுகையில், செடி 15 அடி வரை வளரும், பாரம்பரிய மிளகு போல் இல்லாமல், செடியின் உச்சியில் மட்டுமே வளரும் கொடிகள் மேலிருந்து கீழாக வளரும். விளைச்சலுக்கு முன் 25 அடி வரை. “புதிய ரகம் ஐந்து முதல் ஆறு வருடங்களில் 5 கிலோ வரை காய்ந்த மிளகு மகசூல் தரும். காய்கள் மற்றும் இலைகள் ஒரு தனித்துவமான எலுமிச்சை நறுமணத்தை வெளியிடுகின்றன மற்றும் பல்வேறு காரமானவை," என்று அவர் கூறினார்.

Thank you JKC Sir.

======================================================================================================


 

நான் படிச்ச கதை (JKC)

பகல் உறவுகள் - ஜெயந்தன்

ஜெயந்தன் (பெ. கிருஷ்ணன்) (ஜூன் 15,1937-பிப்ரவரி 7,2010) சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், இதழாளர். ஜெயந்தன் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் வருவாய்த் துறையில் பணியாற்றினார். கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்குப்பின் கால்நடை மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். 

ஜெயந்தன் 'கோடு' என்ற சிற்றிதழை நடத்தி வந்தார். ஜெயந்தன் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட 'நித்யா' என்னும் அறிவியல் புதினத்தை எழுதிக்கொண்டிருக்கையில், அது முடியும் முன்னே பிப்ரவரி 7, 2010 அன்று காலமானார்

மணப்பாறையில் ஜெயந்தனின் மகன் சீராளன் நடத்தும் செந்தமிழ் அறக்கட்டளை’, அவர் நினைவாக சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்வு செய்து 2011 முதல் விருதுகள் வழங்கி வருகிறது.

முன்னுரை 

அழியா சுடர்களில் இக்கதையை கண்டேன். கொஞ்சம் நீண்ட கதை தான். ஒரு யதார்த்தமான கணவன் மனைவி கதை. 

காதலித்து மதம் மாறி மணம் செய்து கொண்ட, ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் கணவன், மனைவி பற்றிய ஒரு நாள் கதை. பகலில் இருக்கும் சுபாவம் இரவு ஆனதும் எப்படி மாறுகிறது என்பதை விவரிக்கும் கதை. 

மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள பொதுக் குணம் பெண்ணின் மேல் ஆணின் ஆதிக்கம் (possessiveness), மற்றும் பெண் அந்த ஆதிக்கத்தை கணவனிடம் எதிர்பார்ப்பது. 

பெண்கள் எளிதில் ஆண்களின் எண்ண ஓட்டங்களை படித்து விடுவார்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்கிறான் என்றால் அவன் எந்த எண்ணத்துடன் அவளைப் பார்க்கிறான் என்பதை கண்டு பிடித்து விடுவார்கள். 

கணவன் அடித்தாலும் உதைத்தாலும் கூட மற்றவர்கள் முன் கணவனை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். 

மதம் மாறினாலும் ஜாதி மறைவதில்லை. 

இப்படி பல சங்கதிகள் அடங்கிய ஒரு உளவியல் கதை தான் பகல் உறவுகள். சிறந்த சிறுகதையாக சிலரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

கதை பெரியது. சுருக்கப்பார்த்தாலும முடியவில்லை. ஆனாலும் முடிந்தவரை சுருக்கியிருக்கிறேன்

கதையின் சுட்டி.

 >>>>>பகல் உறவுகள் - ஜெயந்தன்

காலை மணி ஒன்பது. கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில் இறங்கினார்கள். அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அது தினசரி வழக்கம்.

டெரிகாட்டன் பேண்ட், டெரிலின் சட்டை, கூலிங்கிளாஸ், மிடுக்கான நடை இவையோடு அவனும். கலர் மேச் ஆகின்ற உல்லி உல்லி சேலை, ஃபுல்வாயில் ஜாக்கெட், செருப்பு, கைப்பை இவையுடன் அவளும். அந்த ஜோடி நடை  தினம் வேடிக்கைப் பார்க்கப்படுகின்ற ஒன்று. கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் அப்படித்தான் புறப்படுகிறார்கள், வந்து சேருகிறார்கள் என்றாலும் சிலரது கவனத்தை இன்னமும் ஈர்க்கத் தவறாத ஒன்று.

அவர்கள் இருவரும் அரசு ஊழியர்கள்.அங்கிருந்து ஐந்து மைலில் இருக்கும் முத்துப்பட்டி பஞ்சாயத்து யூனியனில் வேலை பார்க்கிறார்கள். அவன் கேஷியர். அவள் டைப்பிஸ்ட், வீட்டு வசதிக்காக இங்கே தங்கித் தினம் பஸ்ஸில் போய் வந்தார்கள்.

அவர்கள் கிறிஸ்துவர்கள். அவள் ஆதி கிறிஸ்துவச்சி. அவன் பாதியில் கிறிஸ்துவனானவன். அதாவது இவளைக் கட்டுவதற்காக அப்படியானவன்.

ஒன்பது இருபது பஸ் ஒன்பது நாற்பதுக்கு வந்தது. வரும் போதே அது நிறைந்து ஸ்டாண்டிங்கிலும் நிறைய ஆட்கள் நின்று கொண்டு வருவது அதன் கண்ணாடி வழியாகத் தெரிந்தது.

 பஸ் நின்றபோது நெருக்கியடித்து முண்டி ஏறப் போய், 'யாரும் ஏறாதீங்க' என்ற கண்டக்டரின் கண்டிப்பான கட்டளையால் தயங்கி ஏறாமல் அண்ணாந்து கொண்டு நின்றது.

பஸ்ஸிலிருந்து நான்கைந்து பேர் இறங்கினார்கள். அவர்கள் இறங்கியதும் கண்டக்டர் இடக்காலை நீட்டி வாசலைக் குறுக்காக அடைத்துக்கொண்டு, "எடமில்லே" என்றான். பின்பு, பின்னால் திரும்பி கண்ணாடி வழியாகப் பார்த்தபடி, "என்னா எறங்கியாச்சா?" என்றான். மேலே டாப்பில் எதையோ போட்டுவிட்டு ஒரு ஆள் ஏணி வழியாக இறங்கிக் கொண்டிருந்தான்.

பின்புறம் ஏணியிலிருந்து இறங்கிய ஆள் வந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டதும் கண்டக்டர் அவளைப் பார்த்து, "நீங்க ரெண்டு பேரும் வாங்க"என்றான்.

அவர்கள் அலுவலக காம்பவுண்டிற்குள் நுழைந்தபோது வராந்தாவில் நின்று சில ஸ்டாப்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவர்களைக் கண்டதும் ஏதோ பேசிவிட்டுப் பிறகு சிரித்தார்கள். இவர்களைப் பார்த்தே சிரித்தார்கள். இவன் வந்து படியேறியபடியே, “என்னா?”என்றான். அட்டெண்டர் கிருஷ்ணன் சிரித்தபடியே, “இப்ப எங்களுக்கு ஒரு சந்தேகம் சார். இப்ப இவங்கஎன்று அவளைக் காட்டி, “நம்ப ஆபிஸ் டைபிஸ்டா; இல்ல மிஸஸ் கேஷியரான்னுஎன்றான். புருஷனும் மனைவியும் வெறுமனே சிரித்தார்கள். டெப்போ கிளார்க் ஜகந்நாதன், “நான் சொல்றேன், டைப்ரைட்டர் முன்னால் உக்காந்திருக்கப்ப டைபிஸ்ட், எந்திருச்சுட்டா மிஸஸ் கேஷியர்என்றான்.

எஸ்டாபிளிஸ்ஷ்மெண்ட் மகாலிங்கம் உடனே, “ஆனா அதே சமயத்தில் இவரு cash-ல்உக்காந்திருக்கணும். இல்லேனா மிஸஸ் ராஜமாணிக்கம் ஆயிடுவாங்கஎன்றான். எல்லோரும் சிரித்தனர். பிறகு அவர்கள் ஒரு பெண்ணை அவள் கணவன் பெயரைச் சொல்லி, இன்னார் மிஸஸ் என்று சொல்லும்போது ஓர் ஆணை அவன் மனைவியின் பெயரைச் சொல்லிஇன்னாருடைய மிஸ்டர் என்று ஏன் சொல்லக்கூடாது? ஆணை மட்டும் ஏன் சுயம்புவாக மிஸ்டர் என்று சொல்லவேண்டும் என்று வாதித்தார்கள். அவளை ஏன் மிஸ்டர் பிலோமினா என்று கூப்பிடக்கூடாது என்று கேட்டார்கள். இவர்கள்சிரித்தபடியே உள்ளே போனார்கள். அவர்கள் இருவரும் மானேஜர் மேஜைக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடவும் அங்கே மானேஜர் வரவும் சரியாக இருந்தது. அவள் தன் மேஜைக்கும் அவன் தன் அறைக்கும் சென்றார்கள்.

அவளுக்கு எதிரே இரண்டு மேஜை தள்ளி அந்த ஹாலில் கடைசியாக உட்கார்ந்திருக்கும்டெஸ்பாட்ச் கிருஷ்ணன் இரண்டொரு முறை அவளைப் பார்த்தான். அவள் அந்தஅலுவலகத்தில் ஐந்து வருஷங்களுக்கு முன்பிருந்த பிலோமினாதானா என்று சந்தேகம் வந்தது.

இவள் மூன்று வருஷங்களுக்கு முன் இருந்த அந்த பிலோமினாஅல்ல. அவளாக இருந்திருந்தால் அவளும் இவர் களோடு சேர்ந்து ஜோக் அடித்திருப்பாள். கலகலவென்று சிரித்திருப்பாள். அப்போதெல்லாம் அவள் முகத்தில் அலாதியான களையின் துள்ளல் இருக்கும். அப்போது ராஜமாணிக்கம் இந்த அலுவலகத்தில் வேலை பார்க்க வில்லை. சாயக்காடு யூனியனில் இருந்தான்.

அவன் இங்கு மாற்றலாகி வந்ததுந்தான் இருவரும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார்கள்….

சுமார் மூன்று மாதங்களுக்கு முன் அவளுக்கும் பிலோமினாவுக்கும் ஈவோ க்கள் ஹாலில் நடந்த சண்டையும், அதில் ராஜமாணிக்கமும் கலந்து கொள்ள, முடிவு மிகவும் அசிங்கமாகிப் போனதையும் அவன் நினைத்துக் கொண்டான்.

அன்று நடந்த சம்பவம். : ஒரு மூலையில் நான்கைந்து மெட்டர்னிட்டி அஸிஸ்டெண்டுகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் போவூர் மங்களமும் ஒருத்தி. அவர்கள் பிலோமினா வந்ததைக் கவனிக்கவில்லை. அவர்களுக்கு ஏதோ பயணப்படி Cash ஆகி வந்திருந்தது. அதை வாங்க வந்திருந்தார்கள்.

ராஜமாணிக்கம் பொதுவாக மனிதர்களை மதிக்காதவன். இவர்கள் போய்ப் பணம் கேட்டபோது, "அப்புறம்" என்று சொல்லிவிட்டான். பேசிக் கொண்டிருந்தவர்களிடம் புதிதாக வந்த ஒருத்தி, "என்னா பணம் வாங்கியாச்சா?" என்றாள். அதற்கு இந்தப் போவூர் மங்களம், "அந்தக் கடயன் அதுக்குள்ள குடுத்துடுவானா?அவங்க அப்பன் வீட்டுப் பணத்தை அதுக்குள்ள வெளியே எடுத்துடுவானா?" என்றாள். அவர்கள் மெதுவாகச் சிரித்தார்கள்.

இதைக் கேட்ட பிலோமினா உடனே சட்டென்று முகம் சிவக்க "மரியாதையா பேசுடி. நீ நெனச்ச ஒடனே குடுக்க நீயா சம்பளம் குடுத்து வச்சிருக்கே?" என்றாள். அவளை அங்கே கண்ட அவர்கள் திகைத்தார்கள். இருந்தாலும் மங்களம் லேசுபட்டவள் அல்ல. அவளுக்குப் பட்டப் பெயர் போவூர் ரௌடி. சண்டை சச்சரவுகள் அவளுக்கு மிக்ஸர் காராபூந்தி மாதிரி. எதையும் லேசில் விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் விறைப்பாக, "ஒண்ணும் மோசம் போயிடல. அவரும் எங்களக் காணாதப்ப அவளக் கூப்பிடு, இவளக் கூப்பிடுன்னு தான் சொல்லிக்கிட்டு இருக்காரு" என்றாள்.

வாக்குவாதம் நடந்து கொன்டிருந்தபோது விஷயம்தெரிந்து ராஜமாணிக்கம் வேகமாக வந்தான். வரும் போதே என்ன ஏதென்ற நிதானம் இல்லாமல், "தூக்கிப் போட்டு மிதிச்சா ரௌடிப் பட்டமெல்லாம் பறந்து போயிரும்" என்று சொல்லிக் கொண்டே வந்தான். இதைக் கேட்டு மற்றவர்கள் எல்லாம் என்ன நடக்குமோவென்று பயந்துவிட்ட போதிலும் மங்களம் மட்டும் எதிர்த்து, "எங்கடா, மிதி பார்க்கலாம்" என்று முன்னே வந்தாள்.

இது சில பெண்களின் துருப்புச் சீட்டு. ஓர் ஆணைப் பார்த்து 'அடா' என்று சொல்வதோடு 'அடிடா பார்க்கலாம்' என்றும் சொல்லி விட்டால் சரியானபடி அவமானப்படுத்தியதாகவும் இருக்கும். அதோடு நாளைக்கு நாலு பேர்," என்னா இருந்தாலும் பொம்பள மேல கைவக்கலாமா?" என்றுகேட்பார்கள் என்று யாரும் அடிக்கப் போவதும் இல்லை. பொதுவாக இந்த இடத்தில் எல்லா ஆண்களும் திகைத்துப் போவார்கள். ஏதோ பெரிதாக ரத்தத்தைக் குடிக்கிற மாதிரி செய்ய வேண்டும் போல் இருக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

அவள் சொன்னவுடன் ராஜமாணிக்கத்துக்கும் ஒரு கணம் அப்படித் தான் இருந்தது. ஆனாலும்அடுத்த நொடி சமாளித்து இவளை அடித்த பின் உண்டாகக்கூடிய அவமானத்தைவிட இப்போது அடிக்காமல் விடுகிற அவமானம் ஒன்றும் குறைந்ததல்லவென்று, "என்னாடி செஞ்சுடுவே?"என்று முன்னால் வந்து அவள் கன்னத்தில் அறைந்தான்.

இதை மங்களம் எதிர்பார்க்கவில்லை. அறை வாங்கிய ஒரு கணம் திகைத்துப் போனாள். ஆனால் அதன் பிறகு அவனையும் அலுவலகத்தையும் சாக்கடையாக்கி அடிக்க ஆரம்பித்தாள். வார்த்தைகளை, " டேய் அடிச்சுட்டியா? என் தம்பிகளைவுட்டு ஒன் கைய முறிக்கச் சொல்லல, போலீசில சொல்லி ஒன் முட்டிய முறிக்கச் சொல்லலிருந்து அவனைப் பற்றிய அசிங்கமான வர்ணனைகள், அர்ச்சனைகள் வரையில் கொட்ட ஆரம்பித்தாள்.

இதைத் தடுக்க அவன் மேலும் அவளை அடிக்க முனைய வேண்டியிருந்தது. ஆனால் மற்றவர்கள் ஒருவழியாக அவர்களைப் பிரித்து விட்டார்கள். அது கமிஷனர் வரை போய் அலுவலகத்தின் மானத்தைக் காப்பாற்றப் போலீசுக்குப் போக வேண்டாமென்று அவர் அவளைக் கேட்டுக்கொண்டதோடும், அவரது அறையில் வைத்து இவர்கள் இருவரும் பரஸ்பர மன்னிப்புக்கேட்டுக் கொண்டதோடும் முடிந்தது.

==============================================================================

காலையில் நின்றுகொண்டும் இடிபட்டுக் கொண்டும் வந்த பிரயாணிகளுக்கு நஷ்டஈடுசெய்வதுபோல் பஸ் ஹாயாகக் கிடந்தது. மொத்தமே நான்கைந்து பேர்தான் இருந்தார்கள். இவர்கள் இருவரும் ஏறி ஒரு சீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். ஊர் வந்ததும் காலையில் போலவே ஜோடியாக வீடு வந்தார்கள். பூட்டைத் திறந்தார்கள்.

பூட்டைத் திறந்ததும் காலை ஒப்பந்தம் தானாக முறிந்தது. அவன் சென்று சட்டையைக் கழற்றிவிட்டு முகத்தைக் கழுவி யாரோ வரப்போகிறவனை அடிக்கக் காத்திருப்பவனைப் போல இடுப்பில் கையை வைத்துக்கொண்டு நின்றான். அப்புறம் உள்ளும் வெளியுமாக நடந்தான்.

அவள் நேராக அப்படியே, சேலைகூட மாற்றாமல் போய் ஈஸிச்சேரில் சாய்ந்து கண்ணைமூடிக்கொண்டாள். இருவரும் வெகுநேரம் பேசவில்லை. பொது எதிரி போன்ற ஒருவனோடு இருவரும் இணைந்து சண்டை போட்டு வந்திருக்கும்போது சாதாரணமாக உண்டாகியிருக்கக்கூடிய ஒரு பற்றுதல் கூட அங்கே இல்லை.

ஒரு அரைமணி நேரத்தில் பால்காரப் பெண் வந்து பால் வைத்துவிட்டுப் போனாள். அரு ஒரு கால்மணி நேரம் வைத்த இடத்திலேயே இருந்தது.

இவன் முடிவாக உள்ளே வந்து வேறு திசையில் பார்த்துக் கொண்டு, "சோறு ஆக்கலியா?"என்றான். அவள் மெதுவாக, கண்ணைத் திறக்காமல், "ஆக்கலாம்" என்றாள். அவன் கடிகாரத்தைப் பார்த்தபடியே, "எப்ப ஆக்கறது? எப்ப திங்கறது?" என்றான்.

அவள் அதே பழைய நிதானத்தோடு, "என்னா செய்யறது? எனக்கு மட்டும் கையும் காலும் இரும்பாலயா அடிச்சுப் போட்டிருக்கு?" என்றாள். அவன் முகம் இறுகியது. பழையபடி உள்ளும் வெளியுமாக நடக்க ஆரம்பித்தான்.

மேலும் சுமார் பத்து நிமிஷம் சென்றதும் அவள் எழுந்து அடுப்படிக்குப் போனாள். ஸ்டவ்வைப் பற்றவைத்து அது பிடித்ததும் காற்றடித்துப் பால் பாத்திரத்தை வைத்தாள். பால் காய்ந்ததும் அதை இறக்கிவிட்டு ஸ்டவ்வில் உலைப் பானையை வைத்தாள். பிறகு அரிசி களையஆரம்பித்தாள். அப்போது அவன் அங்கு வந்து நின்றான். அவள் காபி போட்டுத் தருவாள் என்றுஎதிர்பார்த்தான் அவளோ அரிசி களைந்தபடியே, "பால் காஞ்சுடுங்க, புரூ போட்டுக் குடிங்க" என்றாள். அவன் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு ஒரு டம்ளரில் பால் ஊற்றி எடுத்துக்கொண்டு சர்க்கரையும் புரூவும் எங்கேயிருக்கின்றன என்று பார்த்தான்.

உலையில் அரிசி போட்டதும் அவள் ஒரு டம்ளரில் பால் ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலுக்குவந்து படியிறங்க ஆரம்பித்தாள். அவன், அவள் பின்னால் இவளை வெட்டலாமா குத்தலாமா என்பது போல் பார்த்துக்கொண்டு நின்றான். இருந்தாலும் அவனால் அதைத் தடுக்க முடியாது. தடுக்க முனைந்த ஒன்றிரண்டு சமயங்களில் வாசலில் ஊர் கூடியதுதான் மிச்சம்.

அந்தத் தெருவில் மூன்று வீடு தள்ளி அவள் அக்காள் இருக்கிறாள். அக்காக்காரி சீக்குக்காரி. சமீபத்தில் ஒரு மாதமாக அவள் ஆஸ்பத்திரியில் இருந்தாள். அவள் புருஷனுக்கு ஹோட்டல்சாப்பாடு. அவனுக்கு இரவில் பால் காய்ச்சிக் கொடுக்கும் பொறுப்பை மட்டும் இவள் ஏற்றுக் கொண்டிருந்தாள்.

ஒரு தடவை இவன் கத்தினான். ஏன், "யாராச்சும் பசங்க கிட்ட எடுத்து வுடக்கூடாதா ?" அவளும்பதிலுக்குக் கத்தினாள். " நான் போனா அக்காவப் போய்ப் பாத்தீங்களா, எப்பிடியிருக்குனு ரெண்டுவார்த்த கேட்டுட்டு வருவேன்."

அவள் சென்று பதினைந்து நிமிஷம் கழித்துத் திரும்பி வந்தாள். அது வரை இங்கே இவன் சட்டியில் விழுந்த அரிசியாய் உள்ளே பொரிந்து கொண்டிருந்தான். அவள் வந்துசமையற்கட்டுக்குள் நுழையப் போனபோது, " கள்ளப்புருஷனோட கொஞ்சிட்டு வந்தாச்சா?"என்றான்.

அவள் நின்று திரும்பி ஒரு கணம் நிதானித்துவிட்டு அடக்கிய ஆத்திரமாக, " ஆமடா பயலே"என்று அவன் பிறந்த ஜாதியையும் சேர்த்துச் சொன்னாள், பலமாக. இது அவளது சமீபத்திய பழக்கம். அவனை அடிப்பதற்குரிய பெரிய ஆயுதமாக இதை அவள் கண்டு பிடித்திருந்தாள்.

அவன் ஜாதிகள் இல்லையென்று நினைப்பவனோ அல்லது தன் ஜாதி வேறு எதற்கும் சளைத்தது அல்லவென்று நிமிர்ந்து நின்று குரல் எழுப்புபவனோ அல்ல. ஏதோ ஒன்றின் நிழலில் தன்னை மறைத்துக் கொண்டால் போதுமென்று நினைப்பவன். அதன் காரணமாகத்தான் ஆண்டி என்ற தன் இயற்பெயரைக் கூட ராஜ மாணிக்கம் என்று மாற்றியிருந்தான். பிற்பாடு அவள் காரணமாக மதம் மாற வேண்டி வந்தபோது, அவனுக்கு உண்டான இன்னொரு பெரிய சந்தோஷம் தன் ஜாதிப்பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கிறது என்பது.

அவன் துள்ளி எழுந்து பாய்ந்து வந்து அவள் தலைமயிரை வலது கையால் பலமாகப்பற்றிக்கொண்டு, "ஆமாடி .... பயதான் ஏண்டி கட்டிக்கிட்டே?" என்றான்.

"சரிதான் விடுடா."

அவன் முடியை இடக் கைக்கு மாற்றிக்கொண்டு வலக்கையால் அவள் கன்னத்தில் அறைந்தான். "சொல்லுவியோ?" என்று கேட்டான். இரத்தம் தெறிக்கும் அந்த அடியை வாங்கிக்கொண்டு அவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகம் சிவந்து கன்னி நின்றது. அது அவனைக் காட்டிக் கொடுத்தது. தான் அடித்த அடியும் சாதாரணமானதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது.ஆகவே அந்த அஸ்திரத்தையே திரும்பவும் செலுத்தினான். அழுத்தம் திருத்த மாகச் சொன்னாள்: "....பயலே!"

அவன் பின்னும் ஆத்திரத்துடன் அவள் தலையைக் கீழே அழுத்தி முதுகில் அடித்தான்.

"சொல்லுவியா?"

"பயலே!"

குத்தினான்.

"...பயலே!"

அவள் முடியை இழுத்து ஆட்டி அங்குமிங்கும் அலைக்கழித்தான். மீண்டும் மீண்டும் அடித்தான்.குத்தினான். அவள் அவனது ஒவ்வொரு செயலின் போதும் அதையே விடாமல் சொல்லிக்கொண்டிருந்தாள். கையாளும் சொல்லாலும் என்ற இந்தப் போர் சில நிமிஷங்கள் நீடித்தது. என்னஆனாலும் சரி, இந்தப் போரில் தான் தோற்கப் போவதில்லையென்று அவள் உறுதி எடுத்து விட்டதாகத் தெரிந்தது. அவன் அடிகளுக்குத் தகுந்த மாதிரி அவள் குரலும் உயர்ந்துகொண்டேபோயிற்று. கடைசியில் அவனுக்குத் தான் பயம் வந்தது. இனிப் பயனில்லை, ஊரைக்கூட்டிவிடுவாள். கூட்டி அவர்களிடம் இதைச் சொல்லுவாள் என்று பயந்தான். ஆகையால் களத்திலிருந்து தானே வாபஸாக நினைத்து அவளை ஒரு மூலையில் தள்ளிவிட்டு முறைத்துக் கொண்டு நின்றான். அவள் தள்ளாடிப் போய்த் தொப்பென்று விழுந்தாள்.இருந்தாலும் எழுந்து உட்கார்ந்துக்கொண்டு தலையைத் தூக்கிச் சொன்னாள்: "பயலே!"அவனுக்கு ஓடி அப்படியே மிதிக்கலாமா என்று வந்தது. ஆனால் யாரோ கூப்பிட்டு அதெல்லாம் பிரயோஜனமில்லை என்று சொன்னதுபோல் தன்னை அடக்கிக்கொண்டு, "இரு, ரெண்டு நாளையில் ஒனக்கொரு வழி பண்ணி விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு நாற்காலிக்குப் போனான். நாற்காலியில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தான்.

சிறிதுநேரம் சென்றதும் அவள் அந்த இடத்திலேயே படுத்துக் கொண்டாள். உடல் வெந்தபுண்ணாய் வலித்தது. ஆனால் தான் மட்டும் அடிவாங்கி விட வில்லையென்ற நினைப்பு அந்த வலிக்கு ஓரளவு ஒத்தடமாக இருந்தது. இருந்தாலும் போராட்டத்தின்போது வராத கண்ணீர் இப்போது வந்து தரையில் தேங்கியது.

அங்கே கொசு அதிகம். மிக அதிகம். நிகழ்ச்சி நினைவுகள் அவர்கள் மூளையைப்பிடுங்கிக்கொம்டிருந்தபோது இவை அவர்கள் உடலைப் பிடுங்கின. கடைசியாக அவன் எழுந்து அடுப்படிக்கு வந்தான். ஸ்டௌவ்வும் உலையும் தன்னால் நின்று போயிருந்தன. அவன் ஒருடம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு வந்து கட்டிலில் படுக்கையை விரித்துக் கொசுவலையைத்தொங்கவிட்டுக்கொண்டு படுத்தான்.

கொசுக்கூட்டம் முழுவதும் அவள் மேல் திரும்பியது. சிறிது நேரத்தில் அவளும் எழுந்து தான் படுக்கும் இடத்துக்குச் சென்று படுக்கையைப் போட்டுக் கொசுவலையைக் கட்டிக்கொண்டு படுத்தாள்.

நீண்ட நேரம், மிக நீண்ட நேரம். அவளுக்குத் தூக்கம் வர வில்லை. இப்போது மணி ஒன்று அல்லது ஒன்றரை இருக்கலாம் என்று அவள் நினைத்தபோதுகூடத் தூக்கம் வரவில்லை. நிகழ்ச்சி-- நினைவுகள் மையம் பலவீனமடைந்து இதர சாதாரண் விஷயங்கள் இடையிடையே வந்தபோதுகூடத் தூக்கம் வரவில்லை. மாலையில் சேர்மன் கேட்டதும் தொடர்ந்து நடந்ததும் நினைவில் வந்தன. நாளை செய்தாக வேண்டிய வேலைகள் வந்தன. சென்ற ஆண்டு உண்டான அபார்ஷன் வந்தது. தூக்கம் மட்டும் வரவில்லை. இப்போது, வாங்கிய அடிகளைவிட இந்தத்தூக்கமின்மை அதிக வேதனையை தர ஆரம்பித்தது. ஏதோ பத்தோடு பதினொன்றாக உடல்உறவும் நினைவில் வந்தது. அவள் சட்டென்று அதற்காகத் தன் மேலேயே எரிச்சல் பட்டாள். 'அதையா, இனிமேலா, இவனோடா' என்று நினைத்தாள். இனி செத்தாலும் அது மட்டும் கூடாதென்று உறுதி செய்துகொண்டாள். ஆனால் இப்படிப்பட்ட முன்னைய உறுதிகள் தகர்ந்துபோனதும் நினைவுக்கு வந்தது. விரோதமும், குரோதமும் கொப்பளித்து நின்ற சிலநாட்களிலேயே. இன்னும் அவை நீறு பூத்த நெருப்பாக இருந்தபோதே அவர்கள் உடல் உறவுகொண்ட துண்டு. அதில் வியப்பு என்னவென்றால், ஒரு காலத்தில் அவர் கள் இரவிலுங்கூடக் கணவன் மனைவியாக இருந்தார்களே, அந்த நாட்களில் நடந்தது போலவே, இதிலும் கூட மூச்சுத்திணறும் அணைப்புகளும் ஆழ்ந்த முத்தங்களும் இருந்ததுதான். அதை இவள் ஒன்றிரண்டு தடவை நினைத்துப் பார்த்திருக்கிறாள். இப்போதும் கூட அது எப்படிச் சாத்தியமாகிறதென்று நினைத்தாள். ஆனால் இப்போது ஏதோ, மங்கலாக, நிரவலாக அதற்கு விடை போல ஒன்று தெளிந்தும் தெளியாமலும் தெரிந்தது.

அந்த நேரத்திய கொடுக்கல் வாங்கல்கள் ராஜமாணிக்கத்துக்கும் பிலோமினாவுக்கும் இடையே நடந்ததல்ல. ஓர் ஆணினுடையதும் ஒரு பெண்ணினுடையதுமான உடல் உணர்ச்சிகள் வடிகால்தேடிய போது சாத்தியமாகியிருந்த ஓர் ஆணின் மூலமாகவும் ஒரு பெண்ணின் மூலமாகவும் செயல்பட்டுக்கொண்ட நிகழ்ச்சிகள்.

கடைசியாக அவள் மெதுவாகக் கண் அயர்ந்தாள். எப்படித் தான் கொசுவலையைக் கட்டினாலும் விடிவதற்குள் எப்படியோ இரண்டு கொசுக்கள் உள்ளே வந்துவிடத் தான் செய்கின்றன. அப்படி வந்து இதுவரை இப்படியும் அப்படியுமாக இருந்த இரண்டு கொசுக்கள் அவள் உறங்கிவிட்டதும்நிம்மதியாக அவள்மேல் போய் உட்கார்ந்தன.

இனி அவை கொஞ்சம் இரத்தம் குடிக்கும். குடித்த பிறகுதான் வெளியே போக வழியில்லாதது அவற்றுக்குத் தெரியும். பிறகு வலையின் சுவர்களில் அங்குமிங்கும் சென்று மோதும். கடைசியாக ஒரு மூலை உயரத்தில் சென்று பிராண்டிப் பார்க்கும். காலையில் அந்த வலை சுருட்டப்படும் வரை அங்கேயே உட்கார்ந்து விடுதலைக்காகத் தியானம் செய்து கொண்டிருக்கும்.

பின்னுரை

ஆணுக்குள் அடங்கியிருக்கும் மிருகம் ஆண் என்ற மதர்ப்பு. பெண்கள் அந்த உண்மையை அறிந்து அதை தூண்டி விட்டால் ஆண்கள் சிந்திக்காது எதையும் செய்வார்கள். செயல் முடிந்த பின் தவறை உணர்வார்கள்.

இரண்டு பெண்கள் ராஜமாணிக்கத்தைச்  சீண்டுகிறார்கள். ஒருத்தி டா போட்டு சீண்டினால் மற்றவள் ஜாதி பெயரை சொல்லி சீண்டுகிறாள். ராஜமாணிக்கத்தால் இந்த சீண்டல்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த கதையில் பகல் உறவுஎன்பது பகலில் இருவரும் கணவன் மனைவி என்ற நடிகர்கள். இரவில் ஆண் பெண் ஆண்டான் அடிமை என்ற உறவு. இதுவே எனது அறிவு.

 




32 கருத்துகள்:

  1. அந்த பார்வையற்ற என்ற வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம். அவரது ஆர்வத்தின் வெற்றிக்கு மதிப்பு கொடுங்கள். போதும். எனக்குக் கூட ஒரு கண் பார்வை தான். கைபேசியில் தான் தட்டச்சு. என் ஆர்வம் அந்தக் குறைபாடு இருப்பதையே உணர வைக்கவில்லை. ஒந்றைக் கண் ஜீவி சின்ன்ச் சின்ன எழுத்துப் பிழைகளையும் கண்டுபிடித்து விடுகிறார் என்று யாராவது குறிப்பிட்டால் தான் என் குறைபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவதாக ஆகி விடுகிறது. அதனால் தான் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வார்த்தை சிறப்பு தருதுன்னு நினைக்கிறேன் ஜீவி சார். எதுவுமே குறையல்ல. உத்வேகம் முயற்சி சுறுசுறுப்பு போன்றவை இல்லாதவர்கள்தாம் ஊனமுற்றவர்கள்

      நீக்கு
    2. பார்வையற்ற என்பது வரும் போதுதான் அந்தச் செய்தியே இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் அவரது ஆர்வமும் வெற்றியும் மதிப்பு கொடுக்கப்பட்டு பெரிதளவில் பேசப்படுகிறது. இதை பாசிட்டிவாகப் பார்க்க வேண்டும். உத்வேகம் தரும் செய்தி.

      அப்பெண்ணும் தன் குறைபாட்டைப் பெரிதாக எண்ணாமல் உழைப்பது எவ்வளவு பெரிய விஷயம்.

      நெல்லையின் கருத்தை டிட்டோ செய்கிறேன்.

      கீதா

      நீக்கு
  2. அரசு அலுவலகம் என்று பொதுவாய்க் குறைத்திருக்கலாம்.  எந்த பஞ்சாயத்து யூனியன் ஆபீசில் எஸ்தாபிளிஷ், டெஸ்பாட்ச், மேனேஜர் எல்லாம் இருக்கிறார்கள்?

    எவளுக்கும் பிலோமினாவுக்கும் நடந்த சண்டை?  நினைத்துப் பார்ப்பது டெஸ்பாட்ச் கிருஷ்ணன். ஆண்.  ஈவோக்கள் என்றால் என்ன?

    மற்றபடி கதை ஒரு மாதிரி இயல்பாக இருக்கிறது.   எங்கள் அலுவலகத்தில் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியே திருமணத்துக்குப் பின்னும் கலகலப்பாக இருந்த ஜோடியைத் தெரியும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நீங்கள் முழுக்கதையையும் சுட்டியில் சென்று படிக்கவில்லை என்று தோன்றுகிறது.

      சந்தேகங்களுக்கு விடைகள்.
      1. //அரசு அலுவலகம் என்று பொதுவாய்க் குறைத்திருக்கலாம். எந்த பஞ்சாயத்து யூனியன் ஆபீசில் எஸ்தாபிளிஷ், டெஸ்பாட்ச், மேனேஜர் எல்லாம் இருக்கிறார்கள்?//
      நீங்கள் குறிப்பிடுபவை வேலை பாகுபாடு, எல்லா அலுவலகங்களிலும் உள்ளதுதான்.
      அரசு அலுவலகங்கள் என்றாலும் சில வித்தியாசங்கள் காணப்படும். உதாரணமாக மேற்றேனிட்டி அசிஸ்டன்ட் (பிரசவ தாதி?) என்பவர். பஞ்சாயத்து யூனியனில் மட்டும் உள்ள ஒரு போஸ்ட். இவர்களுக்கு அலுவலக வேலை இல்லை.
      2. போவூர் மங்களம் ரவுடி மங்களம் என்று அறியப்பட்டவள் தான் பிலோமினாவுடன் சண்டை போட்டவள். அது கதை சுருக்கத்தில் உள்ளது.
      3. எங்கள் அலுவலகத்தில் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியே திருமணத்துக்குப் பின்னும் கலகலப்பாக இருந்த ஜோடியைத் தெரியும்
      இதைத்தான் ஆசிரியர் பகல் உறவு என்கிறார். அப்படியானால் "இரவு உறவு " என்று ஒன்று உண்டா என்றால் உண்டு எண்பது தான் பதில்.
      அது
      ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
      கூடி முயங்கப் பெறின்.
      தான்.

      Jayakumar

      நீக்கு
  3. ஈவோக்கள் E O க்கள். executive officers

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அருமை. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு சாதித்த இளம் பெண் ரக்ஷிதா ராஜுவையும், ஆசிரியர் பாஸ்கர் நாயக் அவர்களையும் மனதாற பாராட்டுவோம்.

    தான் சாலை துப்பரவு செய்யுமிடத்தில் சாலையில் கண்டெடுத்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்பரவு பணியாளர் இருதயமேரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

    மிளகு விளைச்சலில் புதுமை கண்ட விஞ்ஞானிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். அனைத்து நற்செய்தி பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. ரக்ஷிதா ராஜு - வாவ் போட வைக்கிறார். அதுவும் தடகளப் போட்டியில் ஓடுவது என்பது அசாத்தியம். பாதை மாறாமல்...பாராட்டுகள் வாழ்த்துகள் அவரது விடா முயற்சியும் உழைப்பும் அவருக்குப் பல பதக்கங்களையும் பெயரையும் உலக அளவில் பெற்றுத் தரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஆசிரியர், 56 வது வயதிலும் ஓடி வெற்றி பெறுவது அதுவும் நம்ம ஊரில்....இப்படி வயதானவர்கள் ஓடுவது என்பது அரிதுதான். ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய தேர்ந்தெடுத்த கதை பகிர்வும் அருமை.

    /கணவன் அடித்தாலும் உதைத்தாலும் கூட மற்றவர்கள் முன் கணவனை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். /

    இது பொதுவாக பெண்களின் இயல்பு. ஆனால், கதையில் வரும் இப்படியான ஒரு தம்பதியை நாங்கள் சென்னையில் ஓரிடத்தில் வசித்த போது எதிர் வீட்டில் கண்டிருக்கிறோம். வீட்டு வாசலில் வந்து ஏதோ மனத்தாங்கல் காரணமாக தங்கள் வெறி தீரும் வரை ஒருவருக்கொருவர் அடித்து, திட்டிப் பேசிக் கொள்வார்கள். அருகில் இருக்கும் வீட்டவர்கள் யாராவது சமாதானமாக பேசலாம் என்று அருகில் போனால், "உங்களுக்கென்ன வந்தது.? இங்கே சினிமாவா நடக்கிறது.?" என வந்த அவர்களையே இருவரும் தங்கள் பேச்சால் தாக்குவார்கள். மறுநாள் அந்த தம்பதியரின் கொஞ்சல்களும் வீட்டு வாசலிலேயே பலர் கண்பட அரங்கேறும். அங்கு வசித்தவர்கள் எல்லோரும் அதையும் கடக்கப் பழகிக் கொண்டார்கள் போலும். மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கிய அந்த சம்பவத்தை இன்றைய கதை எனக்கு திருப்பி தந்தது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. இருதயமேரிக்கு நல்ல இதயம்! பாராட்டுகள்.

    புதுவகை மிளகு - இளம் விஞ்ஞானிக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கீதா ரங்கன் க்கா க்காக யாராவது இஞ்சி, எலுமி, வெல்லம் எல்லாம் கலந்த எலுமிச்சம்பழம் கண்டுபிடித்தால் தேவலை

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை ஆ இதுலயும் எதுக்கு வெல்லம்!! ....வெல்லம் இல்லாம கண்டுபிடிச்சா நல்லதுதான்..ஏன் இப்ப மா இஞ்சி இல்லையா? அப்படி!!!

      கீதா

      நீக்கு
  9. சாதனை படைத்த ரக்ஷிதா, பாஸ்கர்நாயக், புதிய ரக மிளகை கண்டுபிடித்த விஞ்ஞானி அனைவரையும் பாராட்டுவோம்.

    கதை கணவன் மனைவி இருவரின் இரு முகங்களை எடுத்துச் சொல்கிறது. இருவருக்குமே மனத்தாங்கல் இருப்பது தெரிகிறது . ஆபீசின் முன் வெளிக்காட்டாத ஒருமுகம் வீட்டில் ஒருமுகம். சிரமமான வாழ்க்கைதான்.

    பதிலளிநீக்கு
  10. ரக்ஷிதா ராஜுவின் நம்பிக்கை பலிக்கட்டும், வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்று வெற்றிகளை ஈட்டி வரும் பாஸ்கர் நாயக்கிற்கு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    இருதயமேரி அவர்களின் நேர்மைக்கும் , பிறர் பொருள் மீது ஆசைபடாத குணத்திற்கும் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. பஸ்ஸில்வந்த சிலர் தம்பதிகள் என்றாலே அவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தில் இவர்களைப்பார்த்தார்கள்.//

    ஆனால் உள்ளே சென்றால்தான் தெரியும் நிஜம்!

    //ஒரு பெண்ணை அவள் கணவன் பெயரைச் சொல்லி, இன்னார்மிஸஸ் என்று சொல்லும்போது ஓர் ஆணை அவன் மனைவியின் பெயரைச் சொல்லிஇன்னாருடைய மிஸ்டர் //

    இந்த வரியைப் பார்த்ததும், நம்ம ஸ்ரீராமின் அப்பா நினைவுக்கு வந்தார். 'ஹேமா பாலசுப்பிரமணியம்'!

    இன்னாருடைய மிஸ்டர் என்றும் சொல்லுவதுண்டே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிஸ்டர் பிலோமினா // இப்படிப் பொதுவாகச் சொல்லப்படுவதில்லை என்றாலும் எங்கள் குடும்பத்தில் ஜாலியாகச் சொல்லிப் பார்த்திருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. யாரேனும் செலப்ரிட்டியாக இருந்தால் அவள் பெட்டர் ஹாஃப் அவளைக் குறிப்பிட்டுத்தான் அழைக்கப்படுவார்.

      நீக்கு
    3. ஏன்.. இப்போ நாம சாம்பசிவம் சாரையோ இல்லை ரங்கன் சாரையோ பார்த்தால் இவர்தான் கீதா சாம்பசிவம் சார், இவர் கீதா ரங்கன் சார் என்றுதானே சொல்லுவோம்

      நீக்கு
    4. ஆமாம் அதையும் சொல்ல நினைத்தேன்....அண்ணே சொல்லிட்டாரு!!

      கீதா

      நீக்கு
    5. ஏன்.. இப்போ நாம சாம்பசிவம் சாரையோ இல்லை ரங்கன் சாரையோ பார்த்தால் இவர்தான் கீதா சாம்பசிவம் சார், இவர் கீதா ரங்கன் சார் என்றுதானே சொல்லுவோம்//

      அப்படி போடுங்க!!!! அண்ணே!!!

      கீதா

      நீக்கு
  13. வெளியில் ஒரு முகம், வீட்டுக்குள் ஒருமுகம் இப்படி நிறைய கணவன், மனைவி இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

    போவூர் மங்களம் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. இவள் மூன்று வருஷங்களுக்கு முன் இருந்த அந்த பிலோமினாஅல்ல. //
    .
    இதெல்லாம் பெண்ணுக்கு அமையும் கணவன் பொருத்து....ராஜமாணிக்கம் போல ஒருத்தன்னா இப்படித்தான்.

    இயல்பான கதை...
    அதுவும் கதையில் இருவரும் காதலித்துக் கல்யாணம். ஆனால் அடியும் புடியும்....அப்புறம் இப்படியான இரவு...

    பாட்டு வரி நினைவுக்கு வந்தது "அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேந்துக்கறா"

    யதார்த்தக் கதை, வாழ்வில் நடக்கும் ஒன்று.... என்றாலும், பெண்ணியக் கருத்துகள் என்னுள் கொஞ்சம் மேலெழுகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ராஜமாணிக்கத்துக்குப் பெண்கள் மீது மனிதர்கள் மீதே மதிப்பே இல்லை. இது ஃபிலோமினாவுக்குக் காதலிக்கும் போது கண்ணை மறைத்திருக்கிறது.

    திருமண வாழ்க்கையே உடல் ஈர்ப்பு - அது இயல்பான ஒன்றுதான் என்றாலும் - என்பது போல் கதையின் தொனி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை முழுவதையும் வாசித்துவிட்டுத்தான் கருத்துகள்.....கதை இயல்பு நடப்பது என்றாலும். ஈர்த்ததா என்றால் இல்லை. ஓகே ரகம்..

      கீதா

      நீக்கு
    2. கதை ஈர்க்கவில்லை. பொதுவா அபூர்வமா நடப்பது இயல்பானதல்ல, நம்மையும் ஈர்க்காது. கமலா ஹரிஹரன் மேடம் சந்தித்த அந்தத் தம்பதியரும் அபூர்வமானவர்களே

      நீக்கு
    3. நெல்லை அபூர்வமாக நடப்பதா? இல்லை நெல்லை. இது பல இப்படியான குடும்பங்களில் வழக்கமான ஒன்று.

      கமலாக்கா சொல்லியிருப்பது போல் நடப்பது சகஜம்....

      சில விஷயங்களை, அதாவது எவ்வகை குடும்பங்கள் என்பதை இங்குப் பொதுவெளியில் சொல்ல முடியாது...

      கீதா

      நீக்கு
    4. அபூர்வமானதாக நடப்பதும் கூட ஈர்க்கும் நெல்லை....கதை ஈர்ப்பதற்கு நிகழ்வுகள் இயல்பானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எழுதுவதிலும் இருக்கிறது. அபூர்வமானதாக நடப்பதையே கூட இதெல்லாம் சகஜம் என்று சொல்லும் வகையைல் எழுதலாம். எனவே இங்கு நான் சொன்னது கதைக் கருவோ இல்லை கதையின் அம்சமோ நிகழ்வுகளோ அல்ல. சொன்ன விதம்.

      கீதா

      நீக்கு
  16. ஜெ கே அண்ணாவின் பின்னுரை சூப்பர். சரியானதே, ஜெ கே அண்ணா, அந்தக் கடைசி வரி,

    இந்தக் கதையில் ராஜமாணிக்கம் தன் தவறை உணர்வதாகத் தெரியவில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ​கதையைப் படித்து கருத்து கூறியவர்கள் எல்லோருக்கும் நன்றி. இவ்வாறு கருத்துக்கள் கூறக்கூற வாசிப்பனுபவம் விரிவடைந்து கதையை சரியாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி வணக்கம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!