சோழர்கள் சைவ சமயத்தைப் போற்றினார்கள் என்று சென்ற வாரம் சொல்லியிருந்தேன். ஆதித்த சோழன் பிற்காலச் சோழர் தலைமுறையில் இரண்டாம் தலைமுறை. படிப்பவர்களுக்கு, அப்படியென்றால், சோழர்கள் வைணவத்தையோ அல்லது விஷ்ணு, மஹாலக்ஷ்மி போற தெய்வங்களை ஏற்காதவர்களா என்ற சந்தேகம் வரலாம். பாரதத்தின் சமயங்கள் என்று சொல்லப்படுவது வேதத்தை அடிப்படையாகக் கொண்ட து. அதனைச் சுருக்கமாக அறு சமயங்கள் என்று சொல்வர் (இருந்தாலும் 20க்கும் மேற்பட்ட சமயங்கள் இருந்தன. இதைப்பற்றிப் பிறிதொரு சமயம் பார்ப்போம்). அந்தச் சமயங்கள் முக்கியத் தெய்வமாக ஒருவரையே வரித்திருக்கும். சைவ சமயம், சிவனை முதல் தெய்வமாகவும், வைணவம், விஷ்ணுவை முழுமுதற்கடவுளாகவும் கொண்டிருப்பது போல. ஆனால் அனைத்துச் சமயங்களும் வேதத்தை, இதிஹாச புராணங்களை ஏற்றுக்கொண்ட சமயங்கள். இவற்றையே தற்காலத்தில் இந்து மதம் என்று அடையாளப்படுத்தியிருக்கின்றனர்.
ஆதித்த சோழன் (முதலாம் ஆதித்த சோழன்) கிபி 907ல் சித்தூர் மாவட்ட த்தில், காளஹஸ்தி அருகில் பொக்கிஷம்பாளையத்தில் வைத்து இறந்ததும் அங்கு அவனுக்கு ஒரு பள்ளிப்படை அவனது மகனாகிய முதலாம் பராந்தகச் சோழனால் எடுப்பிக்கப்பட்ட தையும் சென்ற வாரம் பார்த்தோம்.
சோழ அரசர்கள், இராஜகேசரி அல்லது பரகேசரி என்ற பட்டப்பெயர் வைத்துக்கொண்டார்கள். ஒரு அரசன் இராஜகேசரி என்றால் அவனுக்கு அடுத்தது பட்டத்திற்கு வருபவன் பரகேசரி. ஆதித்த சோழன் இராசகேசரி என்பதால் அவனுக்கு அடுத்ததாகப் பட்டத்திற்கு வந்த முதலாம் பராந்தக சோழன் பரகேசரி என்ற பட்டப்பெயர் வைத்துக்கொண்டான். இவன் கிபி 907லிருந்து 955 வரை அரசாண்டான்.
அது சரி…எப்படி இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரை அரசாண்டான் என்று வரலாற்றாசிரியர்கள் ஓரளவு அறுதியிடுகிறார்கள்? ஒரு அரசன் ஆட்சி புரிய ஆரம்பித்த திலிருந்து கல்வெட்டில் அவனது பெயர் வெட்டப்படும். எந்த வருடத்திலிருந்து அடுத்த அரசனது கல்வெட்டு காணப்படுகிறதோ அப்போது அடுத்த அரசன் பட்டமேற்றுக்கொண்டுவிட்டான் என்று கணிக்கின்றனர். ஒரு அரசனைப் பற்றி பல கல்வெட்டுகள் பல செய்திகளைச் சொல்லும்போது அங்கு அனுமானத்திற்கு வேலையில்லாமல் போகிறது. உதாரணமாக முதலாம் பராந்தக மன்னனது 46ம் ஆண்டுக் கல்வெட்டுகள் கண்டியூர் , திருச்சோற்றுத்துறை போன்ற இடங்களில் காணப்படுகின்றன (அவனது ஆட்சிக் காலம் கிபி 907லிருந்து). அதன் பிறகு வேறு கல்வெட்டுகள் இல்லை. கிபி 950ல் தன் மகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியதாலும், பிறகு மகனது ஆட்சிக் கல்வெட்டுகள் காணப்படுவதாலும் முதலாம் பராந்தகன் 955ல் மறைந்திருக்கவேண்டும் என்று அனுமானிக்கின்றனர்.
ஆதித்த சோழன் மகனான முதலாம் பராந்தகச் சோழனுக்கு ஐந்து பிள்ளைகள் இரண்டு பெண்கள். முதல் மகன் இராஜாதித்தன். அதற்கு அடுத்தது கண்டராதித்தன். அதன் பிறகு அரிகுலகேசரி, உத்தமசீலன், அரிஞ்சயன் ஆகியோர். முதலாம் பராந்தகன் ஆட்சிக்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே பாண்டியர்களை அடக்க வேண்டி, அவர்களுடன் போர் புரிந்தான். ஆட்சிக்கு வந்த மூன்றாம் ஆண்டு, பாண்டிய நாட்டை ஆண்டுகொண்டிருந்த இராஜசிம்மனோடு போர் புரிந்தான். அந்தப் போரில் பாண்டிய அரசன் தோல்வியுற்றான். இருந்தாலும் பாண்டியநாடு முழுமையாக சோழனின் ஆதிக்கத்தில் வரவில்லை. அதன் பிறகும் பலமுறை போர்கள் நடந்தன. சிலவற்றில் பாண்டியன் வெற்றிபெற்றான். 915களில், பாண்டிய அரசன் இராஜசிம்ஹன், ஈழ அரசன் ஐந்தாம் காச்யபன் (காஸ்ஸபன்) துணையை நாடி, பெரும் படையை அங்கிருந்து பெற்றான். இலங்கைப் படைக்கு சக்க சேனாபதி என்பவன் தலைமை தாங்கினான். வெள்ளூரில் நடைபெற்ற இந்தப் போரில் முதலாம் பராந்தகச் சோழன், பாண்டிய மற்றும் ஈழப் படையை முழுமையாகத் தோற்கடித்தான். போரின்போது ஈழச் சேனாதிபதி விஷக் காய்ச்சலால் மாண்டான். எஞ்சியிருந்த ஈழப்படை திரும்பவும் இலங்கைக்கே சென்றது. சோழனுக்கும் பாண்டியனுக்கும் பல போர்கள் இந்தச் சமயத்தில் நடைபெற்றிருக்கவேண்டும். பாண்டிய மன்னன் இராஜசிம்ஹன் இந்தப் போரில் படுதோல்வி அடைந்து அவனும் ஈழத்துக்குச் சென்றுவிட்டான். 350 ஆண்டுகால பாண்டிய அரசு இந்தப் போருடன் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. இலங்கையில் பாண்டிய அரசனுக்கு மரியாதை கிடைத்தாலும், மீண்டும் படை திரட்டுவது சாத்தியமில்லாமல் போய்விட்ட து. அதனால் கிபி 925-930 வாக்கில் அங்கிருந்து தன் மணி முடி, ஆடையாபரணங்களை ஈழத்து அரசன் வசம் ஒப்படைத்துவிட்டு சேரநாட்டை நோக்கிச் சென்றுவிட்டான். உள்நாட்டுக் கலகம், சிறு சிறு போர் என்று அனைத்தையும் முடித்து பாண்டிய அரசை சோழப் பேரரசுடன் இணைத்துக்கொள்ள கிபி 930 ஆகிவிட்டது பராந்தகச் சோழனுக்கு. ஆனால் பாண்டியன் அரண்மனையில் முடிசூட்டிக்கொள்ள ஆசைப்பட்ட பராந்தகச் சோழனுக்கு அரசனின் மணிமுடி இலங்கையில் இருப்பது தெரியவந்த து. கடும் கோபத்துடன் இலங்கை அரசனிடம் தூது அனுப்பினான். இலங்கை அரசனோ மணிமுடியைத் தர இசையவில்லை. கடும் கோபம் கொண்டு, இலங்கையை நோக்கிப் படையெடுத்தான் பராந்தகன், பெரும் படையொன்றை அனுப்பி. இலங்கையில் நடைபெற்ற கடும் போரில், சோழப் படை வெற்றிபெற்றாலும், அப்போது இலங்கையை ஆண்டுகொண்டிருந்த மன்னன் உதயன், இராசசிம்மன் அடைக்கலப் பொருளாக விட்டுச்சென்றிருந்த அரசமுடியையும் ஆபரணங்களையும் இலங்கையின் தென்பகுதிக்குக் கொண்டு சென்றுவிட்டான். சோழப்படைகள் போரைத் தொடரத் தயங்கி நாடு திரும்பினர். இவ்வாறாக சோழ அரசன் பராந்தகன் பாண்டிய மற்றும் இலங்கையை வென்றாலும் பாண்டிய மணிமுடி இலங்கையிலேயே தங்கிவிட்ட து.
இந்தப் பராந்தகச் சோழன், தன் ஆறாம் ஆட்சியாண்டில் (913) புள்ளமங்கைக் கோயிலுக்கு நிவந்தனம் அளித்தது கல்வெட்டுச் செய்தியில் புலப்படுகிறது (இந்த புள்ளமங்கை கோயிலைப் பற்றியும் இந்தத் தொடரில் பார்ப்போம். இது தஞ்சையிலிருந்து கும்பகோணம் வரும் பாதையில் இருக்கிறது)
இதற்கிடையில் தொண்டைமண்டலச் சிற்றரசர்களாக இருந்த வாணர் குலத்தவருடன் போர், வைதும்பருடன் போர் (கடப்பா, கர்நூல் பகுதியில் இருந்த தெலுங்கு அரசர்கள்), வேங்கிநாட்டுடன் போர் (கிருஷ்ணா கோதாவரி நதிக்கிடையில் இருந்த பிரதேசம்) என்று பல போர்களை பராந்தகன் நட த்தி வெற்றிபெற்றான். சோழப்பேரரசு, பராந்தகன் காலத்தில் மிக வளர்ந்தது. சோழர்களைப் போலவே, அதன் வடபுலத்தில் இராஷ்டிரகூட அரசும் வலிமை பெற்று விளங்கியது. சோழனும் அவர்களோடு பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் உறவினைப் பெற்றிருந்தான். இருந்தாலும் இராட்டிரகூடத்தின் அரசுரிமைக் குழப்பம் போன்றவற்றால், அரசுரிமையைக் கைப்பற்றிய மூன்றாம் கிருஷ்ணன், தன் படைபலத்தைப் பெருக்கிக்கொண்டே வந்தான். வடபுலத்தில் தனக்குப் பிரச்சனை ஏற்படும் என்று முன்னரே யூகித்து, தன் மகனான இராஜாதித்தனை திருக்கோவலூர் அருகே படைபலத்துடன் இருக்கச் செய்திருந்தான் பராந்தகன். (பேரரசனின் மகன்கள், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்குரிய படைகளுடன் எல்லையைக் கண்காணித்துக்கொண்டிருப்பர். இப்போது உள்ளது போல இளவரசன் என்றால் வாழ்க்கையை அனுபவிப்பான், அதிகாரம் செலுத்துவான் என்பது இல்லாதிருந்த காலம் அது)
பராந்தகனின் வலிமையினாலும், அவன் தங்கள் பகுதியில் ஆதிக்கம் செலுத்த முனைந்ததாலும், பலரும் ஒன்று சேர்ந்து இராட்டிரகூடர் மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையில் படையெடுத்து வந்தனர். அவர்களை தக்கோலம் என்ற இடத்தில் (அரக்கோணம் அருகே) இராஜாதித்தன் படை எதிர்கொண்ட து. இதற்கு முன்பே ஒரு போரில் இராட்டிர கூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனை இராஜாதித்தன் வெற்றி பெற்றிருந்தாலும், தக்கோலம் போர் மிகக் கடுமையாக நடைபெற்றது. சோழனுக்கு எதிரான அரசர்களும் சேர்ந்திருந்ததால், பெரும்போராக அமைந்தது. யார் வெற்றி பெறுவர் என்று சொல்ல முடியாத அளவில் நடந்த போரில் இரு பக்கமும் ஆயிரக்கணக்கானவர் மாண்டனர். போரின் உச்சத்தில் இராஜாதித்தன் வெற்றி பெறும் நிலையில், யானையின் மீது போர்க்களத்தில் இருந்தபோது, கங்க மன்னன் இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பால் வீரமரணம் அடைந்தான். இந்த இராஜாதித்தனே ‘யானை மீது துஞ்சிய தேவர்’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுபவர். கிபி 949ல் நடந்த இந்தப் போரில் சோழப்பேரரசு, தொண்டை நாட்டின் பகுதிகளையும் திருமுனைப்பாடியையும் இழந்தது. மூன்றாம் கிருஷ்ணதேவன் (கிருஷ்ணன் என்றும் குறிப்பிடப்படுகிறான். அவர்களது மொழியில் கன்னர-கிருஷ்ண என்பதால், கன்னரதேவன் என்று குறிப்பிடப்படுபவன் இவனே).
நாட்டின் இளவரசனை இழந்த தால் முதலாம் பராந்தக மன்னன் மிகுந்த துயறுற்றான். பிறகு இரண்டாவது மகனாகிய கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான்.
வட பகுதிகளைப் போரில் வென்று சோழப்பேரரசின் எல்லைகளை விரிவடையச் செய்த முதலாம் பராந்தகச் சோழன், தன் கடைசி காலத்தில் தொண்டைநாடு மற்றும் வட பகுதிகளை இழந்து, அது மட்டுமல்லாமல் தக்கோலப் போரில் தன் முதல் மகனாகிய இராஜாதித்தனையும் இழந்தான். பாண்டிய அரசும் முழுமையாக பராந்தகனின் கட்டுப்பாட்டில் இல்லை. பாண்டிய வாரிசான வீரபாண்டியன், இவன் காலத்தில் சுயேச்சையாக தனி அரசு நடத்தியிருந்திருக்கவேண்டும். இதற்கெல்லாம் காரணம், தொடர்ந்த போர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
கிபி 953ல், கண்டராதித்த சோழன் சோழ நாட்டின் அரசனானான். இந்த அரசன் மிகுந்த சிவபக்தியும் தமிப் புலமையும் கொண்டவனாக இருந்தான். ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டை இயற்றியவர் இந்த கண்டராதித்தர் தாம்.
சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடி தன்னை
காரார் சோலைக் கோழி
வேந்தன் தஞ்சையர் கோன் கலந்த
ஆரா இன்சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா உலகிற் பெருமையோடும் பேரின்பம்
எய்துவரே.
கோழியூர் என்பது உறையூராகும். சோழர்களின் ஆதிகாலத் தலைநகராக இருந்த ஊரிது. தஞ்சையர் கோன் என்பது தஞ்சைக்கு மன்னன் என்ற பொருளில். தன் பெயரான கண்டராதித்தன் என்பதையும் பாசுரத்தின் கடைச் செய்யுளில் குறிக்கிறார். இப்போதுதான் நாம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் கல்கியால் குறிப்பிடப்படும் சோழ மன்னருக்கு வருகிறோம். இவரைப் பற்றி அடுத்த வாரம் காண்போம்.
சில செண்டிமீட்டர் அகலத்திலேயே சிற்பங்களைக் காணமுடிகிறதா?
இதுதான் ராஜகம்பீரன் திருமண்டபம்.
எப்படி இத்தகைய கோயிலைத் திட்டமிட்டார்கள்? ஆச்சர்யம்தான்.
குதிரை இழுக்கும் தேர்போன்ற வடிவம். சக்கரத்தின் அழகு சொல்லி மாளாது
இந்தச் சக்கரம் அந்நியப் படையெடுப்பால் சேதமடைந்திருந்ததாம். அதனைத் தொல்லியல்துறை நன்றாக மீட்டெடுத்திருக்கின்றனர்.
மேலே உள்ள படத்தின் நடுவில் சிறிய வளையத்தில் உள்ள சிற்பம் எவ்வளவு சிறிய இடத்தில் அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள் என்பது தெரியும்.
இப்போது சிறிது சிதைந்திருக்கும் இந்தச் சிற்பங்கள் கட்டிமுடிக்கப்பட்டபோது எப்படி கண்ணைக் கவர்ந்திருக்கும்? இன்னும் பலவாரங்கள் இங்குதானே இருக்கப்போகிறோம். வரும் வாரம் தொடருவோம்.
(தொடரும்)
வரலாற்றை மிக அழகாகச் சொல்கிறீர்கள் நெல்லை. தாராசுரம் கோவிலில் இன்ச் இன்ச்சாக படம் எடுத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ரசிக்கத் தயாராயிருக்கிறேன்.
பதிலளிநீக்குமூன்று முறை சென்று வந்திருக்கிறேன் இங்கு.
இவ்வளவு நுணுக்கமாக எல்லாம் படங்கள் எடுத்ததில்லை. இரண்டு வாரங்களாக படங்களை விட நீங்கள் சொல்லும் வரலாறு சுவாரஸ்யமாக இருக்கிறது.
வாங்க ஸ்ரீராம். நம் கலைப் பொக்கிஷங்களின் முக்கியத்துவம் இளம் தலைமுறைக்குத் தெரிகிறதா என்பது சந்தேகம்
நீக்குநான் அனேகமாக எல்லா படங்களையும் எடுத்திருப்பதால் இன்னும் எட்டு அல்லது பத்து வாரங்களுக்கு வரலாம்.
ஒரு கூடுதல் தகவல். சற்றுமுன் என் அக்கா சசி வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அவர் காலை ஐந்தரைக்குள் எங்கள் பிளாக் வாசித்து விடுவார்.
பதிலளிநீக்கு'இப்படி எழுத நெல்லை சாருக்கு என்ன ஒரு டாலெண்ட் ' என்று நினைத்தாராம்.
பார்த்தால் அதே வரிகளில் என் பாராட்டு முதல் கமெண்ட்டாக இருந்ததாம்.
வாழ்த்துகள், பாராட்டுகள் என்றார்.
மிக்க நன்றி உங்களுக்கும் உங்கள் அக்காவுக்கும். எழுதுவதற்கு உற்சாகமூட்டுவதற்கு நன்றிகள் ஒவ்வொரு பதிவும் தயார் செய்ய நிறைய நேரம் எடுக்கிறது. கூடியவரை நல்லாப் பண்ணணும் என்பது என் எண்ணம்
நீக்குஇந்த வாரம் சோழர் வரலாறு பாடம் தான் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வளவு வரலாற்று செய்திகளை எப்படி எங்கிருந்து பெற்றீர்கள் என்பதில் எனக்கு வியப்பு.
பதிலளிநீக்குஆமாம். நாம் இப்போது எந்த கோயிலின் சிற்பங்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம்? தாராசுரம் தானே?
கட்டுரை நன்றாக இருந்தாலும் பொன்னியின் செல்வன் தாக்கம் தெரிகிறது.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். நிச்சயம் பொன்னியின் செல்வன் தாக்கம் தெரியக்கூடாது என நினைத்து எழுதுகிறேன். நான் எழுத நினைப்பது வரலாறு. ரசிக்கும்படியாக இருக்கும் நாவல் அல்ல. நிறைய மறுமொழியில் எழுத ஆசை. ஒரு திருமணத்திற்காக சென்னை வந்திருக்கிறேன். இரவு இரயிலைப் பிடிப்பதற்குள் பெரும்பூதூர் சென்று கோயில் தரிசனம் செய்ய ஆசை. பார்க்கலாம்
நீக்குஒரு அரசன் ஆட்சி புரிய ஆரம்பித்த திலிருந்து கல்வெட்டில் அவனது பெயர் வெட்டப்படும். எந்த வருடத்திலிருந்து அடுத்த அரசனது கல்வெட்டு காணப்படுகிறதோ அப்போது அடுத்த அரசன் பட்டமேற்றுக்கொண்டுவிட்டான் என்று கணிக்கின்றனர்.//
பதிலளிநீக்குஆமாம்.
இப்படி ஈரோடில், பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு அருங்காட்சியகத்தில் ஆங்காங்கே எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் வருடங்களுடன், தெய்வ உருவங்கள், அரசர்கள் என்று வைத்திருக்கிறார்கள். படங்கள் எடுத்திருக்கிறேன்.
சூப்பரா சொல்லியிருக்கீங்க நெல்லை, வரலாறு.
படங்களும் செமையா இருக்கு.
இப்படி ஒவ்வொன்றும் நுணுக்கமாக எனக்கு எடுக்கும் ஆவல் உண்டு. ஆனால்....
ஆமாம் சக்கரம் தத்ரூபமாக இருக்கு.
இங்குள்ள சூரியனார் கோயில் (இதெல்லாம் பழசல்ல சமீப வருடங்களில் கட்டப்பட்டது) அங்கும் சக்கரம் அழகான வடிவமைப்பு (படங்கள் போட்டிருந்தேன் தளத்தில்) என்றாலும் நீங்கள் போட்டிருக்கும் படத்தில் அது எத்தனை வருடங்களுக்கு முன்பு எவ்வளவு அழகா செதுக்கியிருக்காங்க பாருங்க!
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. (இந்த அண்ணன் பிசினெஸ் வச்சுக்காதீங்க. ) நான் வரும் வாரங்களில் இன்னும் மிகப் பழைமையான சக்கரம் பகிர்கிறேன்
நீக்குசக்கரம் அழகு. மீட்டெடுக்கப்பட்டது என்பது தெரிகிறது அழகாகச் செய்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஇத்துனூண்டு கேப் குள்ள எல்லாம் எவ்வளவு அழகா செதுக்கியிருக்காங்க.
கீதா
அவற்றின் அழகு கைத்திறமை சொல்லிமாளாது
நீக்குதெய்வச் சிலைகள், உடையின் மடிப்பு என்று சிறிய சிறிய நுணுக்கங்கள் எல்லாமே செம. நீங்க சொல்லியிருப்பது போல் கட்டி முடிக்கப்பட்ட போது கவர்ந்து எல்லாரையும் சிலை போல நிக்க வைச்சிருக்கும்!
பதிலளிநீக்குகீதா
உண்மை கீதா ரங்கன். சீலை கட்டியிருக்கிறார்போல் -பாலாவியன்ன மேலாடை) ஒரு சிற்பம். மேற்கத்தைய சிற்பங்களையும் போட்டு ஒப்பீடு செய்ய ஆசை. இப்போதிருக்கும் சென்சார் ஆபீசர் ஒத்துக்கணும்
நீக்குநெல்லை சார்
பதிலளிநீக்குஸ்மரண யாத்ரை
கதையாசிரியர்: அப்பாதுரை
லிங்க்
https://docs.google.com/document/d/1eFJjUoRsRgSqHwp4Asy9nio2gqoty98Uir0UqapTpfY/edit?usp=sharing
ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார்.
மரண யாத்ரை தெரியும். அதான் பாடறாளே, நாலு பேருக்கு நன்றினு. சினிமாப் பாட்டு பாடினா எல்லாருக்கும் ஞானம் வந்துடறது. ஸ்மரண யாத்ரை தெரியுமோ? ஒரு எடத்துக்குப் போகணும்னு நெனக்கறோம்.. பஸ்சு காரு ப்ளேனுனு இல்லாம, டக்குனு நெனச்ச ஒடனே போக முடியறதுனு வைங்கோ, அதான் ஸ்மரண யாத்ரை.
எல்லாம் நடக்கற காரியந்தான் கீதா மாமி. நடந்துருக்கே?
படித்து பாருங்கள்.
Jayakumar
அப்பாத்துரை சார் மிகவும் வசீகரமாக எழுதுவார்.அவர் மிகுந்த அறிவுத் திறமையும் சப்ஜெக்ட் நாலட்ஜும் உள்ளவர். பெங்களூர் வந்தபின் படித்து எழுதறேன் முன்பே படிக்கலைனா
நீக்குசொல்லி வந்த விதம் அருமை தமிழரே...
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்....
மிக்க நன்றி கில்லர்ஜி. நிறைய பயணத்தினால் இணையம் வருவது சிரமமாகிறது.
நீக்குசோழர் ,பாண்டியர் ,இலங்கைப் படை எடுப்பு என நீண்ட வரலாறை மிகவும் விரிவாக தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபடங்களும் வரலாற்றுடன் அழகு சேர்க்கின்றன.
சிற்பங்கள் ஒவ்வொன்றும் நுணுக்கமான செதுக்கல். வளையசிற்பம் படத்தை பெரிதாக்கி பார்த்தேன் என்ன நுட்பம் என வியக்கவைத்தது.
சரித்திரத்துடன் சிற்பப் படங்களையும் விரிவாக தந்ததற்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு.
நீக்குSpecial thanks to KGG sir for his efforts in publishing with care
பதிலளிநீக்குவிரிவான வரலாறு, யாருக்கு பின் யார் என்ற வரலாறு முக்கியம். நான் வரலாற்றை விரும்ப பாடமாக எடுத்தவள். ரசித்து படித்தேன்.
பதிலளிநீக்குநாங்கள் அடிக்கடி போய் இருக்கிறோம், அப்போது அலைபேசியே, காமிராவோ என்னிடம் இல்லை. மகன், மருமகள், பேரனுடன் போனபோது மழை பெய்து கோயில் முழுவதும் த்ண்ணீர் தேங்கி நின்றது, கவன்மாக பார்த்து நடக்க வேண்டியது ஆகி விட்டது ஓரளவுதான் எடுத்தேன்.
நீங்கள் தொடர்ந்து தர போகும் படங்களை பார்த்து ரசிக்க போகிறேன்.
படங்கள் எல்லாம் அருமை. தேர்ச்சக்கரம், நடனமங்கையர்கள், வாத்தியம் இசைப்போர் அனைத்தும் மிக அருமை.
சிறு வளையத்தில் கண்ணன் குழல் ஊதும் சிற்பம் தானே? அழகு.
வாங்க கோமதி அரசு மேடம். இந்த மறுமொழி ஸ்ரீபெரும்பூதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் நடை திறக்கக் காத்திருக்கும்போது எழுதுகிறேன்.
நீக்குநான் பலமுறை தாராசுரம் சென்றிருக்கிறேன். ஒரு சமயம் மழைநீர் இரண்டு கோயில் பிரகாரங்களிலும் முழுமையாகத் தேங்கி, பலகை போட்டு அதன் வழியில் கோயிலுக்குச் சென்றேன்.தற்போது நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது.
கேஜிஜி சாருக்கு நன்றிகள். அனுப்பும் வேர்ட் டாகுமென்டை நேரம் செலவழித்து நவ்லா பதிவேற்றுகிறார்
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் சகோதரரே.
பதிலளிநீக்குசோழர் கால சரித்திர வரலாறுகளுடன் பதிவு மிக அருமையாக உள்ளது. நானும் பள்ளி இறுதியில் வரலாற்று பாடங்களை விருப்ப பாடமாக விரும்பி எடுத்து படித்தவள். ஆனாலும் கற்றது அனைத்தும் என் பிற்கால வாழ்க்கை வரலாற்று காலத்தினால் மறந்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது தங்கள் பதிவில் அப்போது படித்த நிறைய விஷயங்களை படிக்கும் போது சுவாரஸ்யமாக இருந்தது அத்தனையையும் இப்படி அருமையான கதை மாதிரி தொகுத்து தந்தமைக்கு முதலில் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. .
கோவில் படங்கள், சிற்பங்கள் அனைத்தையும் அருமையாக எடுத்திருக்கிறீர்கள். நல்ல விளக்கம். நான் சென்ற வார பதிவையே படிக்கவில்லை. அதையும் படித்து விட்டு வருகிறேன். என்னவோ வீட்டின், உடம்பின் சில பிரச்சனைகள் காரணமாக தாமதங்கள் வந்து சிலசமயம் குறுக்கிட்டு விடுகின்றன. உடனே பதிவை கண்டவுடன் வராததற்கு மன்னிக்கவும். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். புதிய வரலாறு பழைய வரலாற்றை மறக்கடித்துவிட்டதா?
நீக்குஉடல் நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள். வருகைக்கு நன்றி.