செவ்வாய், 28 ஜனவரி, 2025

சிறுகதை : மாறியது நெஞ்சம் - பானுமதி வெங்கடேஸ்வரன்


மாறியது நெஞ்சம்

பானுமதி வெங்கடேஸ்வரன் 
- 000000000000000000000000000000000 -

கையில் கறிகாய் பையோடு நடந்து கொண்டிருந்த வனஜாவை இடிப்பது போல் டூ வீலர் ஒன்று வந்து நின்றதும் பயத்தோடு ஒதுங்கியவள், ஹெல்மெட்டின் முகப்பு கண்ணாடியை தூக்கி சிரித்த மகளிடம், “ ம்ம் வந்து மோது, இதுக்குதான் டூ வீலர் வாங்கித் தந்திருக்கோம்” என்றாள் பொய் கோபத்தோடு. 

“என்ன மாம்ஸ்? எங்க போய்ட்டு வர?” குறும்பாக கேட்ட திவ்யா, அம்மாவின் கையிலிருந்த பையை வாங்கி தன் காலடியில் வைத்துக் கொண்டு, “ஏறு பின்னால..” என்றாள்.

மகளின் டூ வீலரின் பின் சீட்டில் அம்ர்ந்து கொண்ட வனஜா, “கறிகாய் தேவையா இருந்தது, போய் வாங்கிண்டு வந்தேன்”

“ஏம்மா கஷ்டப்படற? ஆன் லைனில் ஆர்டர் பண்ணினால் பத்து நிமிஷத்தில் வீட்டுக்கு கறிகாய் வரப்போறது”

எனக்கு வாக்கிங் போன மாதிரி இருக்கும், தவிர நம்மள நம்பிதானே சொர்ணா கடை போட்டிருக்கா, அவளுக்கும் உதவின மாதிரி இருக்கும்” என்று வனஜா கூறியதற்கு திவ்யா பதில் எதுவும் சொல்லவில்லை. வெளியே போவதற்கு அம்மாவுக்கு ஒரு சாக்கு என்று நினைத்துக் கொண்டாள். 

தாயும் மகளும் சேர்ந்து வீட்டிற்குள் நுழைவதை ஆச்சர்யதோடு பார்த்த ரமேஷ், “என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வரீங்க?” என்றார்

“நான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன், வழில அம்மாவ பார்த்தேன்” என்றபடியே கறிகாய் பையை கீழே வைத்த திவ்யா, “இந்த காலத்திலும் ஆன் லைனில் கறிகாய் ஆர்டர் பண்ணாம கடையில் போய் கறிகாய் வாங்குவது அம்மாவாகத்தான் இருக்கும்” என்றதும்,

“அப்படியெல்லாம் இல்ல, நீ ஆன்லைனில் ஆர்டர் பண்ணுகிறாய் என்றால் எல்லோரும் அப்படி இல்லை, என்ன ஆன் லைன்? அன்னிக்கு காலி ஃப்ளவர் ஆர்டர் பண்ணினாய், தம்மாத்தூண்டு வந்தது. பப்பாளி பழம் ஆர்டர் போட்டியே..? காயும் இல்லாம பழமும் இல்லாம ஒண்ணு வந்தது, பழுக்கவும் இல்லை.” வனஜா அடுக்கினாள். 

“நீ வாங்கற சொர்ணாகிட்ட மட்டும் எல்லாம் பெஸ்டாதான் இருக்குமா?”

“பெஸ்டா இல்லாட்டி நான் மறுநாள் அவகிட்ட போய் சொல்ல முடியும், தவிர எனக்கு என்ன பிடிக்கும்னு அவளுக்குத் தெரியும், போன வாரம் எனக்காக பரங்கிக்கொட்டை வாங்கி வந்தா.. உன்னோட ஆன் லைன் இதைச் செய்யுமா?”

“ஆள விடு.. நான் என்ன சொன்னாலும் நீ ஒத்துக்க போறதில்ல” என்று திவ்யா முடித்துக் கொண்டாள். 

இவர்கள் விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த ரமேஷ், “முதல் முதலா சூப்பர் மார்க்கெட் கான்செப்ட் வந்து, அரிசி, பருப்பு எல்லாத்தையும் பிலாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்தப்போ எங்க அம்மா இப்படித்தான் என்ன இருந்தாலும் நாம கையால தொட்டுப் பார்த்து வாங்கற மாதிரி இருக்குமா? அவன் கொடுப்பதை வாங்கிண்டு வரணும்னு சொன்னா” என்று சிரித்தார். 

வீட்டிற்கு அருகில் நடைபாதையில் கறிகாய் கடை போட்டிருக்கும் சொர்ணாவிடம் அம்மாவுக்கு ஒரு பாந்தவ்யமே உருவாகியிருந்தது. பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரங்களில் சொர்ணாவுக்கும் ஒரு பங்கு உண்டு. தான் அதிகம் பயன்படுத்தாத, நல்ல நிலையில் உள்ள புடவைகளை சொர்ணாவுக்குத் தருவாள். அவள் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட உதவுவாள். 

“பாவம்டி, அவ புருஷன் வேற ஒருத்திய சேர்த்துண்டு, இவளை விட்டுட்டான்”

ஞாயிறன்று அப்பாவைப் பார்க்க வந்திருந்த அப்பாவின் நண்பர் ஒருவர் ஏகப்பட்ட பழங்கள் வாங்கி வந்திருந்தார். அதில் வீட்டிற்காக எடுத்து வைத்துக் கொண்டு, மற்றவற்றை ஒரு பையில் போட்டு, “இத கொண்டு போய் சொர்ணாட்ட குடுத்துட்டு வா, அவ வீட்ல குழந்தைகள் இருக்கு, சாப்பிடும்” என்று கொடுத்தாள்.

அந்தப் பையை சொர்ணாவிடம் கொடுத்ததும், சின்ன வெட்க சிரிப்போடு வாங்கிக் கொண்டாள் சொர்ணா.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோக்காரர், “இவங்களுக்கு பழத்தைவிட, வெத்தில கொடுத்தீங்கனா ரொம்ப சந்தோஷமா வாங்கி போட்டுப்பாங்க” என்றார்.

அப்போதுதான் திவ்யா சொர்ணாவை கவனித்தாள், அவள் கடவாயில் வெற்றிலையை அடக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“வெத்திலை போட்டுக்கங்க, ஆனால் வாயில் அடக்கிக்கொள்ளக் கூடாது, அது நல்லதில்லை” என்றதும், சொர்ணா, “இல்லம்மா வெத்திலயை வாயில் அடக்கிக் கொண்டால் பசி தெரியாது அதான்.” என்றது திவ்யாவிற்கு சுரீர் என்றது. வெற்றிலையை வாயில் அடக்கிக் கொண்டு அதன் சாறை மெதுவாக முழுக்கிக் கொண்டே இருந்தால் பசி தெரியாதா? என்று நினைத்துக் கொண்டாள். 

இரண்டு நாட்கள் கழித்து அவளுடன் வேலை பார்க்கும் ராகேஷ், புதிதாக வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் செய்தான். தடபுடல் விருந்து, “ ரொம்ப ஹெவியா இருக்கு” என்று அவள் கூறியதும், ராகேஷ் வெற்றிலை பாக்கு தட்டை நீட்டி, வெத்தில போட்டுக்கோ, சரியாயிடும்” என்றதும், “பசி தெரியாம இருக்க வெத்திலையை வாயில் அடக்கிப்பேன்” என்ற சொர்ணாவின் கூற்று நினைவிற்கு வந்தது. 

அதன் பிறகு திவ்யா, ஆன் லைனில் கறிகாய் ஆர்டர் செய்வதில்லை.

40 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. ​கதையின் தலைப்பைப் பார்த்து காதல் கதையோ என்று நினைத்தேன்.
    சின்ன ஒரு பக்க கதை. கதை வெற்றிலை போடுவதை ஊக்குவிக்கறதா அல்லது ஆன்லைன் வர்த்தகப் பரிமாற்றத்தை தவிர்க்க சொல்கிறதா, அல்லது இரண்டுமே செய்யத் தூண்டுகிறதா என்பதை தெளிவு படுத்தலாம்.
    மற்றபடி ஆன்லைனில் ஆர்டர் செய்வது எங்களை போன்று தனித்திருக்கும் நடக்க முடியாத கிழம் கட்டைகளுக்கு சவுகரியமாக இருப்பதாக உணர்கிறேன். இங்கு திருவனந்தபுரத்தில் கோட்டை தவிர மற்ற இடங்களில் நடைபாதை காய் வியாபாரம் கிடையாது. ஆன்லைனில் வாங்குவதால் ஆன்லைனுக்கே உள்ள பல குறைகள் காய்களில் காணப்பெறும்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு,குறு வியாபாரிகள் பாதிக்கப் படுகிறார்கள் என்று ஒரு ஆதங்கம். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. தயார் செய்து வைத்த படத்தை இணைக்க தாமதமானதற்கு மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பொருத்தம் இல்லை. திவ்யா அம்மாவை பார்த்து ஏறிக்கொள்ளச் சொன்னது ரோடில். காய்கறிக கடைக்குள் அல்ல. மேலும் சொர்ணா கடை ரோட் சைடில், மார்க்கட்டிற்கு உள்ளே அல்ல.

      Jayakumar

      நீக்கு
    2. ரோட்டுக்கு அழைத்து வந்திருக்கிறேன்...  பாருங்கள்!

      நீக்கு
    3. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      கதைக்கு பொருத்தமாக தாங்கள் பகிர்ந்த இரு படங்களும் நன்றாக உள்ளது. முதல் படத்தைப் பார்த்து விட்டு, இப்போது வந்தால், அதற்குள் அவர்கள் மார்க்கெட்டை தாண்டி ரோடுக்கு வந்து விட்டார்கள்.:)) முதல் படத்தில் தாயும் மகளுமாக பொருத்தமாக இருந்தது. இரண்டாவதில் மகளுடன் அது அந்த கடை வைத்திருக்கும் சொர்ணாவா? இல்லை அம்மாவாகிய வனஜாவா? இருந்தும் கதைக்குப் பொருத்தமாகவும், உடனடியாகவும் படங்களை தேர்வு செய்து பகிர்ந்திருக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. கதை வெற்றிலை போடுவதை ஊக்குவிக்கறதா அல்லது ஆன்லைன் வர்த்தகப் பரிமாற்றத்தை தவிர்க்க சொல்கிறதா, அல்லது இரண்டுமே செய்யத் தூண்டுகிறதா என்பதை தெளிவு படுத்தலாம்.//

      ஜெ கே அண்ணா கதையில் எதுக்கு அதைத் தெளிவு படுத்த வேண்டும். நீதி வந்தால் கதை வேறு வகையாகிவிடுமே.

      இது கதை. கதையில் கதாபாத்திரங்கள் என்ன நினைக்கின்றன என்ன பேசுகின்றன நிகழ்வுகள் அவ்வளவே.

      கதையில் அந்த சொர்ணாவிடம் அம்மா காய் வாங்குவதும், அம்மா அதற்குச் சொல்லும் காரணம்.... பெண் திவ்யாவை, சொர்ணாவின் வார்த்தைகள் யோசிக்க வைக்கிறது.....அதனல முடிவு...இது சரியா அது சரியா என்பது கதையில் தேவை இல்லையே.

      கீதா

      நீக்கு
    5. என் சார்பாக கருத்திட்ட கீதாவுக்கு நன்றி.

      நீக்கு
  4. விசேஷ புது வார்த்தை அறிமுகம்:

    பாந்தவ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாந்தியன் என்பது பழைய வார்த்தைதான் சார். கதையைப் பற்றி உங்கள் கருத்தை கூறவில்லையே?

      நீக்கு
    2. *பாந்தவ்யம் என்பது பழைய வார்த்தைதான்? பந்தம் என்பதன் adjective.

      நீக்கு
  5. நல்ல கதை. இணைய வழி வியாபாரம் தான் இப்போது எங்கேயும்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய இன்றைய கதை சுருக்கமாக நன்றாக உள்ளது.

    இப்போது வீடெங்கிலும் ஆன்லைன் வர்த்தகம் அதிகமாகி விட்டது. இதற்கு மக்களின் சோம்பேறித்தனம் என்பதை விட, சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலிலும் எப்போதும் ஜனசந்தடி நிறைந்திருக்கும் சாலை போக்குவரத்திலும், மக்கள் தங்களை திணித்துக் கொள்ள விரும்புவதில்லை என நினைக்கிறேன். இரண்டாவதாக இது வீட்டுக்கு வீடு ஒரு பெருமைக்குரிய விஷயமாகவும் போய் விட்டது.

    வெற்றிலையின் சிறப்பை சொன்ன விதம் நன்று. வெற்றிலையில் (அதன் பெயர்தான் வெற்றிலையை ஒழிய) அதன் சக்தி நல்ல ஜீரணத்தை உண்டாக்கி பசியை தூண்டி விடும் தன்மை உடையது. அந்த காலத்தில் பெண்களுக்கு மகப்பேறு முடிந்ததும் இதன் மருத்துவ சக்தி ஒரு இன்றியமையாததாக இருந்தது. அது ஒரு காலம். இப்போது அதைப்பற்றி பேச முடியாது. :))

    இங்கு ஒரு வெற்றிலை ஒரு ரூபாய்க்கு விற்கிறது. இதில் விஷேட தினங்கள் என்றால், அதற்கு மேலாகவே விற்பனை ஆகிறது. வெற்றிலையில் பல பிரிவுகள் உள்ளதால், நல்ல இளசான வெற்றிலையை தேடி அலைய வேண்டும். இதை ஒரு அவசரத்திற்கு ஆன்லைனில் வாங்கினால், வெற்றிலை பூவரசு இலைகளைப்போல வரும்.

    இன்னமும் நிறைய சொல்ல வேண்டும் போல் உள்ளது. ஆனால், "நான் சுருக்கமாக எழுதிய கதையை விட இந்த கருத்துரை எவ்வளவு நீளமென சகோதரி வியக்கலாம். :)) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள், தி.கீதா போன்றவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாக கவனித்து விமர்சனம் செய்வீர்கள். அதுவும் சிறப்புதானே? மிக்க நன்றி. எங்கள் வீட்டிலும் என் மகனிடம் வெஜிடெபிள் வேண்டும் என்றால் உடனே zeptoதான்.

      நீக்கு
  7. பானுக்கா கதை நல்லாருக்கு. சின்ன மிட்டாயை அழகான பேப்பரில் சுற்றிக் கொடுத்திறுக்கீங்க! (ஆன்லைன வாங்கின மிட்டாய் இல்லை!!)

    ஆவாங்குவது பத்தி சொல்றதுக்கான அந்த '

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து முழுவதும் அடிக்கும் முன் இந்த கீபோர்ட் குதித்து ஓடியதில் வெளியாகிவிட்டது.

      ஆன்லைனில் வாங்குவது விளிம்பு நிலை வியாபாரிகளைப் பாதிப்பதைச் சொல்வதற்கான அந்த முடிச்சு நல்லாருக்கு. கூடவே ஒரு தகவல் வெற்றிலையை அடக்கிக் கொண்டால் பசிதெரியாது என்பது.

      'திவ்யாவிற்குச் சுரீர் என்றது ' னு சொல்லியிருக்கீங்க இல்லையா அந்த இடத்திலேயே கதையை முடித்திருக்கலாமோ அக்கா? கதையின் கடைசி வரியைச் சொல்லி?

      உங்க அளவுக்கு வாசிப்போ, கதையைப் பற்றிய கருத்து சொல்லும் திறமையோ இல்லை எனக்கு. என்னவோ அப்படித் தோன்றியது வாசித்ததும் அதான் சொன்னேன்.

      கீதா

      நீக்கு
    2. கொடுத்திறுக்கீங்க - கொடுத்திருக்கீங்க. கீ போர்ட் துள்ளல்,

      கீதா

      நீக்கு
    3. நான் சொல்ல நினைத்ததை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் கீதா. நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் மேடம்
    இணையவழி வியாபாரத்தின் தில்லுமுல்லுகளை நாசூக்காக சொல்லி விட்டீர்கள்.

    காய்கறி''தானே ? எல்லா இடத்திலும் கறிகாய் என்றே இருக்கிறதே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி அது பேச்சு வழக்கு....காறிகாய் வாங்கப் போலையான்னு ....கறிகாய் என்ன வாங்கின பேசுவதுண்டு நம் வீடுகளில்...

      கீதா

      நீக்கு
    2. நன்றி ஜி!. காய்கறியை கறிகாய் என்றும் செல்வதுண்டு.

      நீக்கு
  9. உடல் நிலை சரியில்லாதவங்களுக்கும், வயசானவங்களுக்கும் ஆன்லைன் வரப்பிரசாதம் தான்.

    நம் வீட்டிலும் சில மருந்துகளை, இங்கு கிடைக்காதவற்றை ஆன்லைனில் தான் வாங்குகிறோம். ஆனால் சில வீட்டுப் பொருட்கள் (காய்கறி, மளிகை அல்ல..)ஆன்லைனில் மலிவாகவே இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மகனுக்கு ஆன்லைன் வசதி, என் விருப்பம் direct purchase.

      நீக்கு
  10. "மாறியது நெஞ்சம்" கதைக்கரு நன்று. திவ்யாவின் மனம் மாறியது மகிழ்ச்சி. சொர்ணா போன்ற வியாபாரிகளும் பிழைக்கத்தான் வேண்டும்.

    ஆன் லைன் வாங்குதல் நன்மை தீமைகளை சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. சொர்ணா போன்றவர்களின் கடைகளும் இருப்பது ஆறுதல்.

      நீக்கு
  11. சிறப்பு..

    இனிய செவ்வாய்..
    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  12. இப்போதைக்கு எங்களுக்கெல்லாம் வேறே வழியே இல்லை. தொலைபேசி மூலம் கறிகாய்க்காரரை அழைத்து நமக்குத் தேவையானவற்றைச் சொன்னால் இரண்டு மணி நேரத்தில் பொருட்கள் கணினி பில்லோடு வந்துடும். இது ஆன்லைன் இல்லை. ஆனால் ஆன்லைனிலும் வாங்கிப் பார்த்தேன் சரியா வரலை. பழங்கள், காய்கள் போன்றவை தொலைபேசி வழியே பேசி வாங்குகிறேன். மளிகை சாமான்கள் எப்போதுமே வீட்டில் கொண்டு வந்து தான் கொடுப்பார்கள். அதோடு இப்போக் கொஞ்ச காலமாக ஸ்விக்கி மூலமும் சாப்பாடு வாங்கும்படி இருக்கு.என்ன ஒண்ணுன்னா டிப்ஸ் நம்ம தரோமோ இல்லையோ அவங்களே 3 ஆப்ஷன் போட்டுட்டு அதில் இரண்டாவது ஆப்ஷனில் பணம் எடுத்துக்கறாங்க. ஆகவே நான் வீட்டிற்கு வரவங்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. அதுவும் இங்கே அஸ்வினில் 21 ரூ சமோசாவுக்கு 30 ரூபாய் டிப்ஸ். அதுவும் ஒவ்வொரு சமோசாவுக்கும். இரண்டு சமோசா வாங்கினால் சமோசா 42 ரூபாய் டிப்ஸ் 31+31= 62 ரூபாய் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 107 அல்லது 109 வந்துடும். அதிலும் பல சமயங்களிலும் 2 சமோசா கொண்டு வந்து கொடுக்கச் சோம்பல் பட்டுக் கொண்டோ என்னமோ சமோசாவே இல்லை, வேறே தரேன்னு சொல்லிட்டு தூள் தூளாக நொறுங்கி இருக்கும் வெங்காய பகோஒடாவை 50 கிராம் கொடுப்பது உண்டு. இப்போ சமோசா வாங்குவதையே நிறுத்திட்டோம். பல சமயங்களிலும் வேறே தரேன்னு சொன்னால் உடனே ஆர்டரை கான்சல் செய்துடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா...   டெலிவரிக்கு அவர்களே பணம் எடுத்துக் கொண்டு விடுவதால் நாம் டிப்ஸ்  தரவேண்டிய அவசியமில்லை.  இதுவரை ஸ்விக்கி காரர்களுக்கு டிப்ஸ் கொடுத்ததில்லை, யாரும் கொடுக்கவும் மாட்டார்கள்.

      ஸ்விக்கியில் காய், பழம் வாங்கினால் எலிக்குஞ்சு போல வருவதால், சம்பந்தப்பட்ட கடைகளில் நீங்கள்  சொல்வது போல போன் பேசி வாங்கி விடுவது உண்டு.  காய்கறி, அரிசி, மளிகை எல்லாமே இப்படிதான். 
       
      கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் முன்பு இருந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் மளிகை கடைக்காரர் தான் எங்களுக்கு இன்றும்  மளிகை கொண்டு வந்து தருகிறார்.  "எங்க கிட்டதான் நீங்க வாங்கணும், எங்க போனாலும் நான் கொண்டு வந்து தருவேன்' என்று சொல்லி இருக்கிறார்.  மகன் திருமணத்துக்கு குடந்தைக்கும் அப்பாவும் மகனும் வந்திருந்தனர்.

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா, நீண்ட நாள் கழித்து உங்கள் கருத்தை படிப்பது சந்தோஷம்.

      நீக்கு
  13. இந்த ஆன்லைன் வியாபாரம் ஆரம்பிச்ச புதுசில் எனக்கும் சாலையோரக் கடைகளை நினைத்து வருத்தமாக இருக்கும். ஆனால் நம் நாட்டில் முக்கியமாய்த் தமிழ்நாட்டில் அது பாட்டுக்கு அது; இது பாட்டுக்கு இது என்னும் மனோநிலையில் மக்கள் இருப்பதாகத் தெரிகிறது. எங்க வீட்டிற்குப் பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஒரு பெண்மணி கூடையில் காய்களைத் தூக்கி வந்து வியாபாரம் செய்வார். அவரிடம் அதிகம் பேரம் பேசுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு பணிக்கு சென்று வந்தபோது பத்து நாளைக்கு அல்லது ஒரு வாரத்துக்கு இருக்கும் வகையில் காய் வாங்கி வந்து விடுவேன்.  

      அப்புறம் ஓய்வு பெற்றபின் நடைப்பயிற்சி செல்லும்போது அவ்வப்போது இதே மாதிரி வாங்கும் வழக்கம் வந்ததது.  

      நடைப்பயிற்சியை வெற்றிகரமாக நான்கு மாதங்களாக நிறுத்தியதில் ஜெப்ட்டோவிலும், இரவு எட்டரை மணிக்கு வாசலில் வரும் டெம்ப்போவிலும் வாங்குகிறோம்.  "ப்ரெஷ்ஷாக இருக்கிறது" என்று டெம்போக்காரர் சொல்லும் காய்கறிகளை பார்த்தால் அழுது வடியும்.  கடையில் சென்று பசுபசுவென வாங்கும் சந்தோஷம் இப்போதெல்லாம் இல்லை.  கீரை வாங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது!

      நீக்கு
    2. //தமிழ்நாட்டில் அது பாட்டுக்கு அது; இது பாட்டுக்கு இது என்னும் மனோநிலையில் மக்கள் இருப்பதாகத் தெரிகிறது// correct.

      நீக்கு
  14. மிக அருமையாக இருக்கிறது கதை.
    திவ்யாவின் மனம் மாறியது தான் தலைப்பு, அருமை.
    கணவர் இருக்கும் போது வெள்ளிக்கிழமை சந்தை வீட்டுக்கு அருகில் இருக்கிறது அங்கு போய் ஒரு வாரத்திற்கு வேண்டியது வாங்கி வருவோம்.

    இப்போது எனக்கு எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் காய்கறி கடை போட்டு இருப்பவர் போன் நம்பர் வாங்கி வைத்து இருக்கிறேன்., அவரிடம் தேவையான காய்கறியை முதல் நாளே சொல்லி விடுவேன் வாங்கி வந்து தருவார். அவரிடம் வெற்றிலை, பாக்கு, பழம் , இலை இருக்காது, இருந்தாலும் எனக்கு அவர் முதல் நாள் மார்ககெட் போகும் போது வாங்கி வந்து தந்து விடுவார்.

    பொங்கல் காய்கறிகள் எல்லாம், கரும்பு, மாவிலை, மஞ்சகொத்து , வாசலில் மாட்டும் பூளைப்பூ எல்லாம், காய்கறிகார அம்மாவின் கணவர், மகள், மகன் என்று ஒருவர் மாற்றி ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார்கள். அன்பான உதவும் உள்ளங்களால் தான் நான் இருக்கிறேன்.

    //வீட்டிற்கு அருகில் நடைபாதையில் கறிகாய் கடை போட்டிருக்கும் சொர்ணாவிடம் அம்மாவுக்கு ஒரு பாந்தவ்யமே உருவாகியிருந்தது. //

    ஆமாம், நமக்கு உதவும் நல்ல உள்ளங்களிடம் நமக்கும் பந்தம் உருவாகி விடும் உண்மைதான்.

    மாயவரத்தில் வீடு தேடி வந்துவிடும் காய், பழங்கள், கீரைகள் எல்லாம்.
    எங்கள் வீட்டு திண்ணையில் தான் அமர்ந்து வியாபாரம் செய்து போவார்கள். நேரத்திற்கு ஏற்றார் போல மோர், காப்பி, சாப்பாடு கொடுப்போம். மகிழ்ச்சியாக அமர்ந்து வியாபாரம் செய்து வெற்றிலை போட்டு செல்வார்கள். நாள் கிழமைகளில் வாங்கும் வெற்றிலைகளை பத்திரபடுத்தி அவர்களுக்கு கொடுப்பேன்.

    //“வெத்திலை போட்டுக்கங்க, ஆனால் வாயில் அடக்கிக்கொள்ளக் கூடாது, அது நல்லதில்லை”//

    நல்ல அறிவுரை அக்கறையான அறிவுரை அன்பானவர்களுக்கு தான் கொடுக்க முடியும் . சொர்ணவின் பதில் திவ்யாவை அதிர்ச்சி அடைய வைத்து அன்பு கொள்ள வைத்து விட்டது.
    அருமையான கதைக்கு வாழ்த்துகள் பானு.

    திவ்யா தன் அம்மாவை போல சொர்ணத்திடம் அன்பு காட்ட ஆரம்பித்து விட்டார். இனி அம்மாவை கேலி செய்ய மாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துக்கு நன்றி.// திவ்யா தன் அம்மாவை போல சொர்ணத்திடம் அன்பு காட்ட ஆரம்பித்து விட்டார். இனி அம்மாவை கேலி செய்ய மாட்டார்.//Yes.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!