செவ்வாய், 7 ஜனவரி, 2025

சிறுகதை​ : அன்பின் மழை - துரை செல்வராஜூ

அன்பின் மழை
 துரை செல்வராஜூ 
*** *** *** *** ***
மாலை மயங்குகின்றதா இல்லையா என்பது புரியவில்லை..

ஆனாலும் விளக்கு வைக்கின்ற நேரம்..

சூரியன் உதித்ததில் இருந்தே மழை பெய்து கொண்டிருக்கின்றது...

" வூழ்ழ்ழ்... வூழ்ழ்... வூழ்... "

பெருத்த அலறலுடன்  - பெய்கின்ற மழைத் துளிகளுக்குள் தாவி ஓடியது  அந்த நாய்..  

என்ன ஏதென்று புரியாமல் அதன் பின்னாலேயே  இன்னும் சில நாய்கள்..

மழையைப் பொருட்படுத்தாமல் எல்லாமும்  விழுந்தடித்துக் கொண்டு ஓடின.. 

" சளக்.. பளக்.. சளக்.. பளக்!..  " - என்று மழைத் தண்ணீரில் நாய்கள் ஓடுகின்ற சத்தம்..

இவை அனைத்தும் இந்தத் தெருவில் கவனிப்பாரற்றுத் திரிந்து கொண்டிருப்பவை..

" டேய்.. யார்ரா அவன் நாய அடிக்கிறது... மழ நேரத்தில?.. "

திண்ணையில் படுத்திருந்த வேலாயுதம் சத்தம் போட்டார்..

சில நொடிகள் அமைதி..

மழைத் தூறலின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது..

" அத யாரும் அடிக்கலே.. "

எதிர் சாரியில் மூன்றாவது வீட்டில் இருந்து சுப்பிரமணியின் குரல்..

" பின்னே?... "

" எரவானத்துல சொருவியிருந்த பிளாஸ்டிக் தாள்  நழுவி விழுந்திடுச்சி.. அதுல பயந்து போன நாய் அலறிக்கிட்டு ஓடுது.. "

" ஓகோ!...  அது சரி.. எரவானத்துல எதுக்கு பிளாஸ்டிக் சொருகி வெச்சிருக்கே.. திண்ணயில ஒழுகுதா?.. "  -   கேள்விக்கணை பறந்தது..

" ஆமா.. தாத்தா.."

தாத்தா.. எழுபது வயதை  நெருங்குகின்ற்வர்.. மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்கவில்லை என்னும் கதை.. சத்தமும் நாட்டாமையும் குறையவில்லை..

" இதுக்குத் தான் நான் ஆவணி மாசமே சொன்னேன்.. கூரைய பிரிச்சு மாத்து..ன்னு.. சரி.. இப்ப அதப் பேசி என்ன பிரயோசனம்.. எல்லாருமா வந்து இங்க படுத்துக்குங்க.. "

" தாத்தா.. உங்களுக்கு ஏன் சிரமம்?.. "

" அட மழை நேரத்துல புள்ளைங்களுக்கு சளி காய்ச்சல் வந்தா என்னடா பண்ணுவ?.. நூறு எரநூறு ன்னு எடுத்துக்கிட்டு டாக்ட்டர் கிட்ட ஓடுவியா.. "

உரிமையுடன் கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது..

" அதுக்கு.. ன்னு எத்தனை நாளைக்கு வந்து அங்க படுத்துக்க முடியும்?.. "

" எத்தனை நாளைக்கு வேணாலும் வந்து படுத்துக்குங்க..  நான் என்ன  தலையிலயா தாங்கப் போறேன்?.. வீடு காலியாத் தானே கிடக்கு!.. " 

" சரி.. ஒருவாய் சாப்பிட்டுட்டு வர்றோம்.. தாத்தா!".. "

தாத்தாவின் குரல் பாசத்துடன் இருந்ததால் சுப்பிரமணியிடமிருந்து  மறுப்பு ஒன்றும் இல்லை..

சற்று நேரத்தில் ஓட்டமும் நடையுமாக  -  சுப்பிரமணி தோளில் மகனை தூக்கிக் கொண்டு வந்தான்.. 

பின்னால் அவன் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும்.. 

கைகளில் பாய், போர்வை, தலையணைகள்..

" வாளி.. ல தண்ணி இருக்கு.. காலைக் கழுவிக்குங்க.. " என்றபடி தலைமாட்டில் இருந்த சாவிக் கொத்தை எடுத்துக் கொடுத்தார் வேலாயுதம்.. அதை வாங்கிக் கொண்டு கதவை திறந்த சுப்பிரமணி வாசல் விளக்கு சுவிட்ச்சை போட்டான்.. 

இருண்டு கிடந்த திண்ணையில் மங்கலாக வெளிச்சம் பரவியது.. 

பக்கவாட்டில் இருந்த அரிக்கனின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்தார் வேலாயுதம்..

" திண்ணையில சாரல் அடிக்குமா?.. "

" அது எப்படிடா அடிக்கும்?.. மூங்கித் தட்டியில கீத்து வச்சு முடைஞ்சிருக்குல்ல!.. "

வீட்டுக்குள் முன் கூடத்தில் பெண்டு பிள்ளைகள் படுத்துக் கொள்ள சுப்பிரமணி வெளித் திண்ணையில் பாயை விரித்துப் போட்டு அதில் சாய்ந்தான்.. 

" நீங்க சாப்பிட்டீங்களா?.. "

சுப்பிரமணியின் கேள்விக்கு கொட்டாவியுடன் பதில் வந்தது..

" அரும்பு தான் இருக்காள்.. ல.. மத்தியானம் வந்து பரக்க பரக்க சோறாக்கி வத்தக் கொழம்பு வச்சி அப்பளம் பொரிச்சுக் கொடுத்துட்டுப் போனா.. மழ நாளா.. சீக்கிரமே பசிச்சது... சாப்டுட்டு மிச்சத்துல தண்ணி ஊத்தி வச்சிருக்கேன்.. காலை ல .. பழயதுக்கு ஆகும்!.. "

"' பட்டணத்து.. ல பெரிய உத்யோகத்துல பையன் இருக்குறாரு.. செவனே.. ன்னு அங்க போயி இருக்காம.. இங்க பழய வீட்ல கெடந்து வத்தக்கொழம்பு.. அப்பளம்.. ன்னு லோல் பட்டுக்கிட்டு இருக்கீங்க!?... " 

" நமக்கு டவுன் காத்து ஒத்துக்கிறதில்ல சுப்பிரமணி.. "

" அதிசியமா நீங்க மட்டுந்தான் டவுன் ல இருக்கீங்களாக்கும்?.. " - மெல்லச் சிரித்தான் சுப்பிரமணி..

" நான் அங்கே இருக்கலாம்.. ஆனா எம் மனசு இருக்க மாட்டேங்குதேடா... " 

" அதென்ன.. அப்படியான மனசு!.. தேடி வச்ச திரவியம் வீணாப் போகுதே.. ந்னா?.. "

" திரவியம் தான்.. திரவியம் தான்!.. நாலு மா மரம்... வருசத்துக்கு இருபதாயிர்ம் ரூபாய்க்குக் காய்க்கிறது.. பதினைஞ்சு தேக்கு மரம்... இப்பவே பன்னண்டு லச்சத்துக்குக் கேட்டுக்கிட்டு இருக்கானுங்க.. இந்த காரை வீடு.. பின்னால கேணி.. எல்லாஞ் சேந்து அறுவது லச்சம் வரைக்கும் ஊடாடுது..  இதை எல்லாம்  தலையிலயா தூக்கிக்கிட்டு போகப் போறோம்... மனுசனுக்கு அன்பு வேணும்.. ஆதரவு  வேணும்.. அது தானடா முக்கியம்... "

" அதான் மருமக கண்ணுல வச்சி பாத்துக்குதே... அப்பறம் என்ன?.. "

" அந்தப் புள்ள மேல ஒரு குத்தமுங் கிடையாது.. ஆனா அக்கம் பக்கத்துல யாரு யாருன்னு.. யாருக்கும் தெரியாது.. காடு.. கரை.. வாய்க்கா.. வரப்பு.. ன்னு சுத்தித் திரிஞ்ச நமக்கு அது சரிப்படுமா?.. பாக்கெட் ல பால் வர்றதும்.. தவிச்ச வாய்க்குத் தண்ணி காசு கொடுத்து வாங்கறதும் . யாரோ மாவு அரச்சு.. யாரோ அவிச்சு வெச்ச இட்டலிய டப்பாவு ல வெச்சி யாரோ கொண்டாந்து கொடுக்கறதும்... "

" இது என்ன புதுசாவா நடக்குது...  அந்த மாதிரி தான் நம்ம ஊர்லயும் கொண்டாந்துட்டானுங்களே...  கெரகம்... காலம் மாறிப் போச்சு... காரியமும் மாறிப் போச்சு... ன்னு நாமளும் மாறிக்கிட வேண்டியது தான்.. அடுத்த ஊர்க் காரங்க... அடுத்த ஊட்டுக் காரங்களப் பார்த்தா முடியுமா?.."

" என்னால முடியல சுப்பிரமணி!.. "

" ஒங்களுக்கு என்ன தான் வேணும்?... "

" மனுசன்.. மனுசன் வேணும்!.. "

" ஏன்!.. அங்கே இருக்கறவங்க எல்லாம் மனுசங்களா தெரியலையா?.. "

" அடப்போடா... மனசே இல்லாதப்போ மனுசன் எங்கேயிருந்து வர்றது?..

" தாத்தா.. பத்து ரூவா பொறாத பொருள  ஒன்னுக்கு ஒன்னு பிரீய் ன்னு ரெண்டு பொருளா முப்பது ரூவாய்க்கு வித்துட்டுப் போய்டறான்... இதத் தான் ஏவாரம் ங்கறான்..  ஜனங்களும்  அதுக்குத்தான் மயங்குறாங்க... "

" ஆமாண்டா சுப்பிரமணி..  சாதாரண கீரையில இருந்து  பெரிய ஓட்டல் வரைக்கும் எல்லாத்துலயும் தில்லாலங்கடி. வேல பண்றாங்க.. எண்ணிக்கை ல மாங்காய வாங்கி எடைக் கணக்குல விக்கிறது தான் ஏவாரமாம்..  ஒருத்தனை ஒருத்தன் அடிச்சுத் திங்கறதிலேயே குறியா இருக்கானுங்க.. சினேகமா சிரிச்சா கூட பைத்தியக்காரன் ஆயிடறோம்... காலம் பூரா நேர்மை நியாயம்.. ன்னு இருந்துட்டு அங்கே போய்  இருக்கறப்போ மனசு திகைச்சுப் போயிடுதுடா.. வீடு நெருக்கமா இருந்து என்னடா பிரயோசனம்.. மனசு நெருக்கமா இல்லையே!... இதோ பாரு...  வாய் வார்த்தைக்கு அதட்டுனதும் நீ வாரி சுருட்டிக்கிட்டு இங்கே  வந்து படுத்துக்கிட்டே... அங்கே வழுக்கி விழுந்தாலும் தூக்கி விடுறதுக்கு ஆளு கிடையாதுடா ஆளு கிடையாது.. "

"  நாளைக்கே எனக்கு ஒரு தலவலி காச்சல்.. ன்னு படுத்துக்கிட்டா நீ வந்து எட்டிப் பாக்க மாட்டியா?.. என்னா.. ன்னு  கேக்க மாட்டியா?.. "

கண்ணைப் பறிக்கும் மின்னல் கீற்றுகள்.. இடி முழக்கத்தில் ஊர் அதிர்ந்தது..

" அதெல்லாம் ஒன்னும் வராதுங்க தாத்தா.. பேசாம இழுத்துப் போர்த்திக்கிட்டு சிவனே.. ன்னு தூங்குங்க ... எல்லாத்தையும் சாமி பார்த்துக்கும்... "  - வீட்டின் உள்ளிருந்து சுப்பிரமணியின் மனைவி குரல்..

" சுப்பிரமணி!.. ஒரு வேலை செய்யேன்... "

" சொல்லுங்க.. தாத்தா.. "

" இந்த அரிக்கன் லைட்டை   வீட்டுக்குள்ள கொடுத்திட்டு வாசல்.. ல கரண்டு வெளக்கை நிறுத்திடு.. " 

" அப்போ ஒங்களுக்கு?.. "

" பேட்ரி லைட் இருக்கே!.. " 

அரிக்கன் விளக்கின் சுடரை - சுப்பிரமணி சற்றே பெரிதாக்கிய  போது - கொஞ்ச நேரத்துக்கு முன் தலை தெறிக்க ஓடிய நாய்களில் ஒன்று  திரும்பி வந்து வாசலில் நின்று உடம்பை சிலுப்பிக் கொண்டது..

" இது நியாயமா?.. " - என்கிற மாதிரி தாத்தாவை நிமிர்ந்து பார்த்தது.. 

" திண்ணையில அந்த ஓரமா நீயும் படுத்துக்க!.. " -  என்றார் வேலாயுதம்..

மழை பெய்து கொண்டிருந்தது..

***

8 கருத்துகள்:

  1. கிராமங்களில்தான் அந்நியோன்யமும் நல்ல மனசும் இருக்கிறது என்பதை நன்றாகச் சொல்லிச் செல்கிறது சிறுகதை.

    ஆனால் இவையெல்லாம் இப்போதும் இருக்கிறதா இல்லை இருந்தால் நல்லாருக்குமே என்ற ஆதங்கமா?

    நல்ல சிறுகதை. மனதுக்கு நிறைவு

    பதிலளிநீக்கு
  2. தேக்கு மரங்கள் பன்னண்டு லட்சம் என்பதைப் படித்தபோது, எண்பது மொண்ணூறுகளில், தேக்குமரக்கன்று, ஈமு கோழிவளர்ப்பு, ஆடு வளர்ப்பு என்று விளம்பரங்கள் வந்து மக்களின் காசைச் சுருட்டிக்கொண்டு சென்றது நினைவுக்கு வருது.

    இப்போதும் பல இடங்களில் தேக்கு மரங்களைப் பார்க்கும்போது இது நினைவுக்கு வரும். எப்போ தேக்குமரம் தண்டு பெரிதாகி விலைக்கு விற்பார்கள் என்றும் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் இயற்கைக் காட்சிகளோடு இருக்கும் அதுவும் மலைகளும் நீரும் சூழ் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதி கிராமங்கள், கேரளத்துக் கிராமங்கள் ரொம்பப் பிடிக்கும்.
    ஆனால் வாழ்க்கை முறை மாறும் போது நம் வயிற்றுப் பிழைப்பிற்காக மாறும் போது அதில் நாம் எப்படி நம் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை யோசிப்பதுண்டு.

    நகரங்களிலும் உதவுகிறார்கள், துரை அண்ணா அதுவும் பெரிய குடியிருப்பில் என்பதை நான் என் தங்கை பெண் விடிட்டிற்குச் சென்றிருந்த போது அறிந்த அனுபவம்.

    கிராமங்களும் மாறி வருகின்றன. அது என் நேரடி அனுபவம். மழை வெள்ளம் வந்த போது….

    வயதானவர்களுக்கு உடம்பு முடியாமல் போகும் போது, அருகில் இருப்பவர் உதவும் நிலையில் இல்லை என்றால், அப்படியே உதவுபவர்கள் இருந்தாலும் எத்தனை நாட்களுக்கு உதவ முடியும்? கூடவே நமக்கு உதவுபவர்களுக்கு நாம் கைமாறு செல்லும் நிலையில் இருக்க வேண்டும். அப்படியான சூழல்கள் இல்லாதப்ப இப்படி வரும் இட்லி இடியாப்பம் உதவும். எனவே நாம் அதைக் குறையாகப் பார்க்க வேண்டாம் என்று தோன்றும். அப்படி அவர்களும் வாழ்வதற்கு நாம் உதவ முடிகிறதே உழைத்துதானே வாழ்கிறார்கள் இல்லையா?

    அது போல நகரங்களில் வேலை வாய்ப்புகள் இருக்கும் போது எல்லோரும் அங்குதானே குடியிருக்க முடியும். அதையும் நாம் குறையாகச் சொல்ல முடியாது. வாழ்க்கை முறை அப்படி ஆகியிருப்பதால் நாம் அதில் எப்படி நல்லபடியாகச் சிந்தனைகளுடன் வாழலாம் என்று யோசிக்கலாம் என்று எனக்குத் தோன்றும்.



    மனிதம் இருக்கத்தான் செய்கிறது. நம் கண்களில் அது படுவதில்லை. சனிக்கிழமை வெளியாகும் பாசிட்டிவ் செய்திகளில் தெரிகிறது.

    கிராமங்கள் வளர்வதற்கு அதாவது அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் வசிப்பது கடினம் குறிப்பாகக் கழிவறைகள், மருத்துவமனைகள் பள்ளிக் கூடங்கள்..... அரசின் பங்கு மிக முக்கியம். கிராமங்களிலும் அரசியல் இருக்கிறதை நான் நேரில் கண்டிருக்கிறேன். என் சிறு வயதிலேயே! நாட்டாமை எல்லாம்.

    எனவே எல்லாவற்றிலும் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. நாம் பார்ப்பதைப் பொருத்து.

    கதையில் நீங்க சொல்லிருப்பவற்றை உங்கள் ஆதங்கமாகக் கொள்ளலாம் இல்லையா துரை அண்ணா!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. //மனசே இல்லாதப்போ மனுசன் எங்கேயிருந்து வர்றது?..//

    மனதை உலுக்கிய வார்த்தை ஜி

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய கதை நன்றாக உள்ளது.

    /பத்து ரூவா பொறாத பொருள ஒன்னுக்கு ஒன்னு பிரீய் ன்னு ரெண்டு பொருளா முப்பது ரூவாய்க்கு வித்துட்டுப் போய்டறான்... இதத் தான் ஏவாரம் ங்கறான்.. ஜனங்களும் அதுக்குத்தான் மயங்குறாங்க... "/

    உண்மை.. போலி எதுவென்று தெரியாத மக்கள் இலவசத்திற்கு மயங்கி விடுகிறார்கள். நல்ல வார்த்தைகள். கிராமத்து காற்றின் சுகமே தனிதான். அதை இழக்க விரும்பாதவர்கள் நகரத்து வாழ்வை வெறுக்கிறார்கள். நல்ல கதை. இறுதி வரிகள் நன்றாக அமைக்கதுள்ளது. இந்தக்கதை யை வேறு மாதிரியும் எங்கோ படித்த நினைவு வந்தது. ஒருவேளை அதை எழுதியதும் தாங்களாக இருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. கதை அருமை. இந்த கதை உங்கள் பக்கத்தில் வந்து இருக்கிறது என்று நினைக்கிறேன். படித்த நினைவு இருக்கிறது.
    அக்கம் பக்கம், மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய்க்கும் அந்த திண்ணையில் இடம் இருக்கிறது. நல்ல மனம் படைத்த மனிதன் வாழும் இல்லம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!