சனி, 4 ஜனவரி, 2025

முத்துச்செல்வியும், முத்துக்காளையும் மற்றும் நான் படிச்ச கதையும்

 


======================================================================================================


============================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

இந்தாப் பாட்டியும் இல்லைப் பாட்டியும்

 கதையாசிரியர்: பெ.தூரன்

முன்னுரை

சின்ன, சிறிய சிறுவர் கதை, சிட்டுக்குருவி கதை, பெரியசாமி தூரன் எழுதிய கதை. 1963 இல் அச்சில் வந்தது. 

சிறுவர் கதை என்று வகைப்படுத்திய சிறுகதைகள் பிரிவு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் பொதுவான சில  அம்சங்களின் விவரம். 

● அளவில் சிறியது,

● கற்பனையோ உண்மையோ  நம்பமுடியாத சில பல விசயங்கள் இருக்கும்.

● சாதாரணமாக ஒரு ஊரிலே என்று துவங்கும்.

● மிக்க கதைகளும் பாட்டிகள் குழந்தைகளுக்கு சொல்வதாக இருக்கும்.

● பல கதைகளும் சுபமாக முடியும்.

  ● கடைசியில் ஓரு நீதி அல்லது போதனை அல்லது பாடம் இருக்கும். 

இன்றைய கதை மேற்கூறிய எல்லா விதிகளும் பொருந்தியது, ஆனால் ஒரு விதி விலக்கு. பாட்டிகள் கதைக்குள் வந்து விட்டார்கள். ஆகவே பாட்டி சொல்வது போல் அமையவில்லை. 

சாதாரணமாக ஒரே ஆசிரியரின் சிறுகதைகள் ஒன்றுக்கு மேல் இப்பகுதியில் இடம் பெற்றதில்லை. அது ஒரு பொதுக் கொள்கை. ஆனால் விதிவிலக்காக தூரன் அவர்களின் இக்கதை காளிங்கராயன் கொடை என்ற சிறுகதைக்கு அடுத்தபடியாக இப்பகுதியில் உட்படுத்தியுள்ளேன். ஒரே ஒரு சமாதானம் காளிங்கராயன் கொடை ஒரு சரித்திர அடிப்படை உள்ள கதை. இன்றைய கதை ஒரு சிறுவர் கதை. (சாக்கு போக்கு)

இந்தாப் பாட்டியும் இல்லைப் பாட்டியும்

 கதையாசிரியர்: பெ.தூரன்

ஓர் ஊரிலே இரண்டு கிழவிகள் இருந்தார்கள். இரண்டு பேருக்கும் ரொம்ப வயதாகிவிட்டது. அவர்களுக்கு எத்தனை வயதென்று கூட யாருக்கும் தெரியாது. அவர்கள் குடியிருந்த வீடுகள் அந்த ஊரின் ஒரு கோடியிலே எதிர் எதிராக இருந்தன. இரண்டு வீடுகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அந்தக் கிழவிகள் அப்படி ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவர்கள் உருவம் ஒரே மாதிரிதான் இருந்தது; ஆனால் குணம் வேறு வேறாக இருந்தது.

ஒரு கிழவி எல்லோரிடத்திலும் அன்போடிருப்பாள். யார் எதைக் கேட்டாலும், “இந்தா, எடுத்துக்கொள்என்று சிரித்த முகத்தோடு கொடுப்பாள். அதனால் குழந்தைகள் அவளை இந்தாப்பாட்டிஎன்று கூப்பிடுவார்கள்.

எதிர் வீட்டிலிருக்கும் மற்றொரு கிழவி பொல்லாதவள். யாருக்கும் எதுவும் கொடுக்கமாட்டாள். ஏதாவது வேண்டுமென்று யாராவது அவளிடம் போனால் அவள் உடனே, ‘இல்லைஎன்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொல்லுவாள். அதனால் குழந்தைகள் அவளுக்கு இல்லைப்பாட்டிஎன்று பெயர் வைத்தார்கள்.

ஒரு நாள் ஒரு சிட்டுக்குருவி இந்தாப்பாட்டியின் வாசலிலே உட்கார்ந்து இரை தேடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட சிறுவன் ஒருவன் விளையாட்டாக அதன்மேலே கல்லை வீசினான். அந்தக் கல் குருவியின் முதுகிலே பலமாகப்பட்டது. அதனால் பெரிய காயம் ஏற்பட்டு அதிலிருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. சிட்டுக்குருவி பறந்தோட முடியாமல் அப்படியே சாய்ந்து, படுத்துக் கிடந்தது. இறக்கைகளைப் பட பட வென்று அடித்துக்கொண்டு துடித்தது.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த இந்தாப் பாட்டி அதைப் பார்த்து விட்டாள். அந்தக் குருவி படுகின்ற வேதனையைக் கண்டு அவளால் பொறுக்கமுடியவில்லை. அவள் கண்களிலே கண்ணீர் பெருகிற்று. அவள் குருவியை அன்போடு எடுத்தாள். காயத்திற்கு மருந்து தடவினாள். குருவிக்குத் தண்ணீரும் அரிசியும் கொடுத்தாள். குருவியின் துன்பம் ஓரளவிற்கு நீங்கிற்று. இருந்தாலும் அதனால் பறக்க முடியவில்லை. அசையாமல் படுத்துக் கிடந்தது.

இந்தாப்பாட்டி அதைத் தன் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றி வந்தாள். நல்ல நல்ல இரையும் கொடுத்தாள்.

சில நாட்களிலே சிட்டுக்குருவியின் காயம் ஆறிற்று. உடம்பில் வலிமை ஏற்பட்டது. அதனால் அது கிழவியின் வீட்டை விட்டுப் பறந்து போய்விட்டது. ஆனால் அது கிழவியை மறக்கவில்லை.

ஒரு நாள் அது எங்கிருந்தோ திடீரென்று பறந்து வந்தது. இந்தாப்பாட்டியின் முன்னால் உட்கார்ந்தது. அதன் வாயில் வைத்திருந்த சுரைக்காய் விதை ஒன்றைக் கீழே போட்டது. பிறகு வெளியே பறந்து சென்றது.

இந்தாப்பாட்டி மிகுந்த மகிழ்ச்சியோடு விதையைக் கையில் எடுத்துக்கொண்டாள். தன் வீட்டிற்குப் பின்னாலிருந்த காலியிடத்தில் அதை முளைக்கப் போட்டாள்.

அதிலிருந்து உண்டான செடியில் சுரைக்காய் ஏராளமாகக் காய்த்தது. காய் வெகு ருசி. கிழவி சிட்டுக்குருவியை நினைத்துக்கொண்டே காய்களைச் சமைத்துச் சாப்பிட்டாள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் சுரைக்காய் வழங்கினாள். எல்லோரும் அதைத் தின்று சந்தோஷப்பட்டார்கள்.

ஒரு பெரிய காயை மட்டும் இந்தாப்பாட்டி செடியிலிருந்து பறிக்கவில்லை. விதைக்காக அதை அப்படியே விட்டு வைத்திருந்தாள். அது நாளடைவிலே நன்றாக முற்றிக் காய்ந்து பக்குவமாகத் தொங்கிற்று.

அதன் பிறகுதான் கிழவி அதைப் பறித்து வீட்டுக்குக் கொண்டு போனாள். அது மிகவும் கனமாக இருந்தது. காய்ந்துபோன சுரைக்காய் லேசாக இருக்கும். ஆனால் இது கனமாக இருப்பதைக் கண்டு கிழவி ஆச்சரிய மடைந்தாள். சுரைக்காயின் மேல்பாகத்திலே வட்டமாக அறுத்தெடுத்தாள். ஆகா, என்ன அதிசயம்! உள்ளே நிறைய அரிசி இருந்தது.

இந்தாப்பாட்டி அரிசியைக் கீழே கொட்டினாள். கொட்டக் கொட்ட சுரைக்காயில் அரிசி நிறைய இருந்து கொண்டே இருந்தது. வீடு முழுவதும் அரிசி குவிந்துவிட்டது. அப்பொழுதும் சுரைக்காயில் அரிசி குறையவில்லை. கீழே கொட்டக் கொட்ட நிறைந்து கொண்டே இருந்தது.

இந்தாப்பாட்டி அரிசியை எல்லோருக்கும் வாரி வாரிக் கொடுத்தாள். எல்லோருக்கும் நல்ல உணவு கிடைத்தது. எல்லோரும் அவளை வாழ்த்தினார்கள். இல்லைப்பாட்டிக்கு இந்த விஷயம் தெரிந்தது. அவள் எப்படியோ தந்திரமாகப் பேசி இந்தாப்பாட்டிக்கு ஏராளமாக அரிசி கிடைக்கின்ற இரகசியத்தைத் தெரிந்துகொண்டாள். தானும் அவ்வாறு சிட்டுக் குருவிக்கு உதவி செய்து சுரை விதை பெறவேண்டும் என்று தீர்மானித்தாள்.

அது முதல் அவள் தினந்தோறும் தன் வீட்டுக்கு முன்னால் நின்று பார்த்துக் கொண்டிருப்பாள். தினமும் பல சிட்டுக் குருவிகள் அங்கே உட்கார்ந்து இரை தேடிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்கும். சிறுவர்கள் தெருவிலே ஓடி ஆடி விளையாடுவார்கள். சில சமயங்களிலே குருவிகளின் மீது கல்லை வீசுவார்கள். ஆனால் ஒரு கல்லும் அவைகளைக் காயப் படுத்தவில்லை.

இல்லைப்பாட்டிக்கு ரொம்பக் கோபம். ஒரு பையனாவது சரியாகக் குறிபார்த்து அடிக்கவில்லையே என்று அவர்களை வைதாள். கடைசியில் அவளே குருவிகளின் மீது கல்லை வீச ஆரம்பித்தாள். எப்படியோ ஒரு கல் ஒரு சிட்டுக்குருவியின் முதுகில் பட்டு அதன் இறகு ஒடிந்துவிட்டது. இல்லைப் பாட்டிக்கு ஒரே ஆனந்தம். குருவி துடித்துக் கொண்டு தரையிலே கிடந்தது.

அவள் அந்தக் குருவியை வீட்டுக்குள் எடுத்துச் சென்றாள். ஒடிந்த இறகுக்கு மருந்து போட்டாள், குருவிக்கு இரையும் வைத்தாள.

கொஞ்ச நாளில் காயம் ஆறிற்று. குருவி பறந்தோடி விட்டது. சில நாட்களுக்குப் பிறகு அந்தக் குருவியும் ஒரு சுரை விதையைக் கொண்டுவந்து இல்லைப் பாட்டியின் முன்னால் போட்டது. கிழவி மகிழ்ச்சியோடு அந்த விதையை எடுத்து வீட்டுக் கொல்லையில் போட்டுத் தண்ணீர் ஊற்றினாள்.

சுரை முளைத்துப் படர்ந்து காய்த்தது. பெரிய பெரிய காய்கள் கிடைத்தன. ஒன்றை மட்டும் விதைக்காக விட்டு விட்டு மற்றவற்றைக் கிழவி பறித்துக் கொண்டாள். பக்கத்து வீட்டுக்கெல்லாம் கொடுத்தாள்.

இல்லைப்பாட்டி இப்படித் தானம் கொடுக்கிறதைக் கண்டு எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவள் யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டாள் என்பது எல்லோருக் கும் தெரிந்த விஷயம். ஆனால் அவள் கொடுத்த சுரக்காயைச் சமைத்து வாயில் போட்டதும் எல்லோருக்கும் கோபம் பொங்கிற்று. சுரைக்காய் ஒரே கசப்பு. அவர்கள் கிழவியிடம் ஓடி வந்தார்கள். “பேய்ச் சுரைக்காயைக் கொடுத்து எங்களை ஏமாற்றினாயா?” என்று அவர்கள் அவளை நன்றாகத் திட்டினார்கள்.

இல்லைப்பாட்டியும் ஒரு சுரைக்காயைச் சமைத்துக் கை நிறைய எடுத்து வாயில் போட்டதும் முகத்தைச் சுளித்தாள். அவளுக்கு என்னவோ மாதிரி இருந்தது. தலை சுற்றிற்று. கடைசியில் படுக்கையிலே படுத்துவிட்டாள். வயிற்றிலே அவளுக்கு வலியேற்பட்டது.

பல நாட்களுக்குப் பிறகுதான் அவளுக்கு ஒருவாறு குணம் ஏற்பட்டது. அவள் எழுந்து சென்று காய்ந்து தொங்கிக் கொண்டிருந்த விதைச் சுரைக்காயை அறுத்து வந்தாள். அது கனமாக இருந்தது. ஆவலோடு அதன் மேல் பாகத்தை வட்டமாக அறுத்து எடுத்தாள். சுரைக்காய்க்குள் அரிசியிருக்கு மென்று கையைவிட்டாள். வெடுக்கு வெடுக்கென்று உள்ளே யிருந்த தேள்களும் நட்டுவாக்களிகளும் அவள் கையில் கொட்டின. “ஐயோ ஐயோஎன்று கூவிக்கொண்டே இல்லை பாட்டி தரையில் சாய்ந்தாள்.

அவள் வீடு முழுவதும் தேள்களும் விஷப்பூச்சிகளும் அங்குமிங்கும் ஓடின. பக்கத்து வீட்டுக்காரர்கள் இல்லைப்பாட்டியின் கூக்குரலைக் கேட்டு மெதுவாக வந்து பார்த்தார்கள். கிழவியின் பரிதாப நிலையைக் கண்டு அவர்கள் மனம் இளகிற்று. கசப்புச் சுரைக்காயை அவள் கொடுத்ததை மறந்து விட்டு அவர்கள் அவளுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள்.

இல்லைப்பாட்டி சிட்டுக்குருவியின் இறக்கையின் மீது வேணுமென்றே கல்லை வீசி அதை முறித்ததையெல்லாம் அவள் வாயிலிருந்தே அவர்கள் அறிந்தார்கள். உண்மையை எல்லோருக்கும் சொல்லும்போதுதான் தேள் கொட்டின வலி கிழவிக்கு கொஞ்சங் கொஞ்சமாக நீங்கத் தொடங்கியது. “இனிமேல் அப்படிச் செய்யவே மாட்டேன்; எனக்குப் புத்தி வந்துவிட்டதுஎன்று அவள் குழறிக் குழறி எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருந்தாள். அதைக கேட்டுச் சிரிப்பதற்காகச் சிறுவர்களும் சிறுமிகளும் அவள் வீட்டைத் தேடி நாள்தோறும் வந்துகொண்டேயிருந்தார்கள்.

தம்பியின் திறமை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 14-11-63, பழனியப்பா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

பின்னுரை.

கதையின் பாடம் : பலனை எதிர்பார்க்காமல் செய்யும் உதவிகள் நன்மைகளையே தரும். பேராசை பெரு நஷ்டம் . கெடுவான் கேடு நினைப்பான்

கதை https://www.sirukathaigal.com/ தளத்தில் இருந்து பெறப்பட்டது.

பெரியசாமித் தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜனவரி 20, 1987) (. . பெரியசாமித் தூரன். பெ.தூரன்). தமிழறிஞர், தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர். முன்னோடியான பாரதி ஆய்வாளர், மரபுவழிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், தமிழிசைப் பாடல்களின் ஆசிரியர், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். நவீனத்தமிழ் அறிவியக்கத்துக்கு அடித்தளமாக விளங்கும் தமிழின் முதல் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர் எனும் வகையில் தமிழ் நவீன அறிவியக்கத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் முக்கியமானவர்.

1929 முதல் ஆசிரியராக பணியாற்றிய தூரன் சென்னையில் 1948-1968 வரை தமிழ்க் கலைக்களஞ்சியப் பணியில் முதன்மை ஆசிரியராகவும் 1968 முதல் 1976 வரை குழந்தைகள் கலைக்களஞ்சியப் பணி முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றி 1976-க்குப்பின் ஓய்வுபெற்று முழுநேர எழுத்தாளரானார். கோவையில் வாழ்ந்து மறைந்தார். 

பெரியசாமித் தூரன் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ மாணவராக இருந்தபோது சி. சுப்பிரமணியம், நெ.து. சுந்தரவடிவேலு, .வி. அளகேசன், இல.கி. முத்துசாமி, கே.எம். இராமசாமி, கே.எஸ். பெரியசாமி, கே.எஸ். பழனிசாமி போன்ற கல்லூரித் தோழர்களுடன் இணைந்து 'வனமலர்ச் சங்கம்என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம் 'பித்தன்என்ற இதழை நடத்தினார்.

13 கருத்துகள்:

  1. மிக அழகான கதை. குழந்தைகளுக்கு பாவத்தோடு சொன்னால் மிகவும் ரசிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. முத்துச்செல்வி, முத்து காளை இருவருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. கதை நல்ல படிப்பினையை தருகிறது. இது போன்ற கதைகள் நிறைய செவி வழியாக கேட்டு இருக்கிறோம். அந்த கதையில் இரண்டு குழந்தைகள் வருவார்கள். ஒரு பாட்டி வருவார், நல்ல குழந்தைக்கு நிறைய செல்வங்கள் கொடுப்பார், கெட்ட குழந்தைக்கு ஒன்றும் கிடைக்காது அதில்.

    இதில் இரண்டு பாட்டிகள் வருகிறார்கள்.
    நல்ல குழந்தை, ஒரு மாடு, ஒரு எறும்பு, பாட்டிக்கு உதவி செய்வார். வெயிலில் கட்டி வைத்த மாட்டை நிழலில் கட்டுவார், தண்ணீரில் தத்தளிக்கும் எறும்பை கரையில் எடுத்து போட்டு உதவுவார். பாட்டிக்கு ருசியான உணவு சமைத்து தருவார்.(பாட்டிக்கு கண் தெரியாது)

    கதை பகிர்வுக்கு நன்றி.

    பாட்டிகள் படம் இருவரும் ஒருவரே. முன்பு தேர்தல் சமயத்தில் இரண்டு கட்சிகளுக்கு இவர் ஒருவரே பிரச்சாரம் செய்தார். அப்போது இவர் பெரிதாக பேசப்பட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​அப்படியா? //அவர்கள் உருவம் ஒரே மாதிரிதான் இருந்தது; ஆனால் குணம் வேறு வேறாக இருந்தது.//

      Jayakumar


      நீக்கு
    2. உருவ ஒற்றுமை இருந்தாலும் குணம் வேறு வேறாகத்தான் இருக்கும். உருவ ஒற்றுமை என்பதால்தான் சார் இந்த படத்தை தேர்வு செய்து இருப்பார்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். பாஸிடிவ் செய்திகள் அருமை. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    இன்றைய கதை நன்றாக உள்ளது. குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்பார்கள். (ஆனால் அந்தக் கால குழந்தைகள்.) இப்போதுள்ள குழந்தைகள் கேள்விகள் கேட்டு நம்மால் பதில் சொல்ல முடியாத அளவிற்கு நம்மை சோர்வடைய செய்வதோடு அவர்களும் போர் என எழுந்து சென்று விடுவார்கள். சில குழந்தைகள் வேண்டுமானால் விரும்பி கேட்கலாம். எனக்கு இந்த நீதி கதைகள் என்ற வகையில் இந்தக்கதை பிடித்திருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. முத்தமிழ் செல்வியின் பயணத் தொடக்கத்தைப் பார்த்திருக்கிறேன். யுட்யூப் ஷார்ட்ஸில், செவன் சம்மிட் க்ளப் குழுவாக/.இப்ப அண்டார்ட்டிகா வின்சன் சிகரத்தை அடைந்ததற்கும் வாழ்த்துகள்.

    முத்துக்காளை அவர்களும் முன்பு வாங்கிய டிகிரிகள் குறித்து வாசித்த நினைவு இப்பவும் மற்றுமொரு டிகிரி வாங்கியது அவரது ஆர்வத்தையும் உழைப்பையும் சொல்கிறது. நடிகராக மட்டும் இல்லாமல் படிப்பிலும் ஆர்வத்துடன் மிளிர்வது மகிழ்ச்சியான விஷயம். மற்றவர்களுக்கும் நல்ல உதாரணம்
    அவருக்கும் வாழ்த்துகள்!

    இரு முத்தானவர்களின் முத்தான செய்திகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இந்தாப் பாட்டி இல்லை பாட்டி - என் பாப்பாவுக்குச் (ஹிஹிஹி அவன் பெரியவனானபிறகுதான்!!!) சொன்னதை இப்ப நான் பாப்பாவாக வாசித்தேன். ரசித்த கதை. மாடுலேஷனோடு இக்கதையைச் சொன்னால் பிரமாதமாக இருக்கும்.

    பெ தூரன் அவர்களின் பாடல்கள் பல ராகம் அமைக்கப்பட்டு பாடப்படுவதுண்டு. அப்படியான பாடல்களைக் கற்பதற்காகத் தேடிய போது கிடைத்தது.

    சிறுவர் இலக்கியக் கதை அருமையான கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ​இன்றைய பதிவைப் பார்த்தவர்களுக்கும், பதிவு பற்றி கருத்துரை கூறியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. பெ. தூரன் அவர்கள் சகலகலா வல்லவர். இவரது கர்நாடக சங்கீத சாஹித்தியங்கள் சாகாவரம் பெற்றவை.

    இந்தக் கதையை வாசித்ததும்
    பெ. தூரன் ஐயாவை இந்தாப் பாட்டி கதாபாத்திரமாகவும், அவர் சென்னை மானிலக் கல்லூரியில் வாசித்த பொழுது அவருக்கு நண்பர்களாக இருந்தவர்களில் ஒருவரை இல்லா பாட்டி கதாபாத்திரமாகவும் மனம் கற்பனை செய்தது.

    பதிலளிநீக்கு
  10. நல்லது செய்யின் நன்மைகிடைக்கும் கெட்டது செய்யின் தீமைதான் கிடைக்கும் என்பதை சிறுவர்கள் மனதில் பதியவைக்கும் கதை .நல்லகதைப் பகிர்வு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!