புதன், 15 ஜனவரி, 2025

காணும் பொங்கல் கண்டதுண்டோ!

 

நெல்லைத்தமிழன் : 

அடுத்தவன் பற்றி கவலையில்லாமல் back bag உபயோகப்படுத்துபவர் மீது குண்டர் சட்டம் போடமுடியாதா? Front bag போட்டுக்கொள்ளாததன் காரணம் தொந்தியாக இருக்கலாமா?

# தொந்தி இருப்பவர் நிச்சயமாக குண்டர்தான். கு.ச தாராளமாகப் பாயலாம்.

& பின்னாடி back bag போட்டுக்கொண்டு, முன்னே நிற்பவரின் பின்னே நின்றுகொண்டு பேருந்தில் பயணம் செய்பவர்கள், முன் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். பின்னால் வருந்திப் பயன் இல்லை! 

ஒரு profession அறம் உடையதாக இருக்கணும் என ஏன் எதிர்பார்க்கணும்?  நம் profession ல நம்மால் அறத்துடன் நடக்க முடிவதில்லை.  வாழ்க்கையிலும் அறத்துடன் இருப்பது கடினமாகிறது. இதில் மற்றவர்கள் அறத்துடன் இருக்கணும் என எதிர்பார்க்கலாமா?

# கொஞ்சம் அறத்திலிருந்து வழுவினால் சகித்துக் கொள்ளலாம்.‌ மக்கள் வரிப்பணம் அத்து மீறிப் பாழாவதை ஏற்க இயலவில்லை.‌

& மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 

    ஆகுல நீர பிற. 

கோவில் தரிசனத்தில் நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் தரிசனம், அங்கேயே இருப்பவர்கள் மணிக்கணக்கில் நாட்கள் கணக்கில் தரிசனம். இறைவன் கருணையில் வித்தியாசம் இருக்குமா?  

# இறைவனுக்கும் ஜீவனுக்கும் இடையேயான தொடர்பின் இயல்பு என்ன என்பது ஒவ்வொரு மதத்திற்கும் அல்லது மதத்தின் உட்பிரிவுக்குமே கூட வேறுபட்டு இருப்பதைக் காண்கிறோம்.‌ இந்த வேறுபாட்டை வைத்துப் பார்க்கும் போது இந்த தளத்திலே சொல்லப்பட்டிருக்கிற எல்லாமே தர்க்க ரீதியான முடிவுகள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.‌ சஞ்சலங்கள் அற்ற மன அமைதியுடன் கூடிய வாழ்க்கை என்றால் எந்தெந்த சித்தாந்தங்கள் நமக்கு ஒத்துப்போகும் என்பதைத் தெளிவாக உணர்ந்து அதைச் சரியாக அனுசரிப்பது ஒன்று மட்டுமே அந்த நல்ல அமைதியை நமக்குத் தரும். இறைவனின் கருணை பற்றிய சித்தாந்தங்களும் இந்த வகையானவையே.

நாம் முனைந்து செல்லும் கோயிலில் நடை சாத்தியிருப்பதும் எதிர்பாராத விதமாகச் சில கோயில்கள் தரிசனம் அமைவதும் எதைத் தெரிவிக்கின்றன? 

# கோயில் நடை சாத்தியிருப்பதும், தரிசனம் எளிதில் சிறப்பாகக் கிடைப்பதும் நமக்கு எதையும் தெரிவிப்பதில்லை.  ஆனால் நம் மனம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை  எப்படியான உணர்வுகளுடன் ஏற்றுக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே நமது மன அமைதி  இருக்கும்.

திருப்பதி பெருமாளை முழுமையா தரிசனம் செய்யவிடாமல் சில நொடிகளில் ஜரிகண்டி சொல்கிறார்களே என அலுத்துக் கொள்பவர்களை சந்நிதியில் அரைமணி அல்லது ஒரு மணி நேரம் அனுமதித்தால் என்ன செய்வார்கள்?

# கொஞ்ச நேரம் சென்றபின் சுற்றும்முற்றும் பராக்குப் பார்க்கத் தொடங்குவார்கள். பொன் நகரத்தில் இரும்பு ஆணி அபூர்வ வஸ்து.

கோயிலில் சாமியைக் கண்டதும் வணங்காமல் செல்போனில் வீடியோ எடுப்பவர்கள் சொல்லவிரும்பும் சேதி என்ன?

# யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதே.‌

& சேமித்து வைத்து, பிறகு மீண்டும் மீண்டும் பார்த்து சந்தோஷப்பட இருக்கலாம். ( நீங்க பொது நிகழ்ச்சி ஒன்றில் தமன்னாவைப் பார்க்க நேர்ந்தால், செல்போனில் வீடியோ எடுப்பீர்களா மாட்டீர்களா?) 

திருப்பதி லட்டு உங்களுக்கு அலுத்திருக்கிறதா?

# திருப்பதி லட்டு காய்ந்து போய் கவனிக்கப்படாமல் ஃப்ரிட்ஜில் இருந்தால் அலுத்ததாகத்தான் கொள்ள வேண்டும்.

& பல் வலி இருந்தால் - தி ல பக்கம் கூட பார்க்கமாட்டேன்! 

கே. சக்ரபாணி சென்னை  28

G R T.   G S T.     ஒப்பிடுக. 

# இரண்டுமே நமக்குப் பணச்செலவு. ஒன்று நோக்கிப் போன பணம் சற்றுக் குறைத்தோ மிக அதிகமாகவோ திரும்ப வர வாய்ப்பு உண்டு. இரண்டாவது போவது மட்டுமே உள்ள ஒரு வழிப்பாதை.

& GRT பணம் செலுத்துபவர்கள் சிரித்துக்கொண்டே வீட்டுக்காக செலுத்துவார்கள். (பர்ஸ்ல இருப்பதை எல்லாம் உருவி எடுத்துக்கொண்டு, ஒரு காலி பர்ஸ் இலவசமாகக் கொடுப்பார்கள்). GST பணம் செலுத்துபவர்கள் மூக்கால் அழுதுகொண்டே நாட்டுக்காக செலுத்துவரர்கள்! 

அழகு என்றால்  நம் இந்தியர்கள்தான்  என்பது  என் கருத்து. சரியா? 

# இந்தியர்களுக்குச் சரி.‌

& ஆண்களா அல்லது பெண்களா ? 

= = = = = = = =

KGG பக்கம்: 
= = = = = = = =

1972 ஆம் வருடத்திற்கு முன்பு வரை, தை மூன்றாம் தேதி என்றால், கணுப் பொங்கல் என்றுதான் கேள்விப்பட்டிருந்தேன். அம்மா, அக்காக்கள் எல்லோரும் கொண்டாடுவார்கள். நெற்றியில் மஞ்சள் கிழங்கால் தீற்றி, கணுப் பிடி பிடித்து எப்படியோ கொண்டாடுவார்கள். 

டிசம்பர் 71 ல வேலையில் சேரந்தபின், வந்த முதல் பொங்கல் திருநாள், 1972 ஜனவரி 15 ஆம் தேதி சனிக்கிழமை. அசோக் லேலண்ட் (எண்ணூர்) கம்பெனிக்கு அந்த வருடம், ஜனவரி 15 declared festival விடுமுறை தினம். ஞாயிறு optional working day. திங்கட்கிழமை weekly விடுமுறை தினம். ஒரு பொது விடுமுறையை அடுத்து வருகின்ற ஞாயிறு என்றால், பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு cut அடித்துவிடுவார்கள். 

ஆதலால், நிர்வாகத்தினர், அந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் விடுமுறையாக அறிவித்துவிடுவார்கள். 

தொழிற்சங்க கமிட்டி உறுப்பினர்கள் தொழிற்சாலை நிர்வாகத்திடம், ஆண்டு விடுமுறை நாட்கள் பற்றிப் பேச்சு வார்த்தை நடத்தும் போது, தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு சென்று திரும்ப ஒருநாள் பொது விடுமுறை போதாது என்று கூறி, ஞாயிற்றுக் கிழமைக்கும் விடுமுறை அறிவிக்கச் செய்துவிடுவார்கள். 

அதற்கு முந்தைய வருடங்கள் எப்படியோ - எனக்கு 1972 பொங்கல்தான் அ லே வில் தலைப்பொங்கல் ! அந்த வருட தீபாவளிதான் தலை தீபாவளி ! ( 1977 ல் கல்யாணம் ஆன பிறகு, என் மனைவியிடம் சொன்னேன் : " எனக்கு அசோக் லேலண்ட் கம்பெனிதான் முதல் மனைவி. என்னுடைய first priority அதுதான்." அதற்கு என் மனைவியும் சிரித்தபடி " அதற்கு நானும் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்" என்றார்!) 

ஆக, தலைப் பொங்கல், தலை மாட்டுப் பொங்கல், தலைக் கணுப் பொங்கல் எல்லாவற்றையும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடத் தீர்மானித்தேன். 

லாங் weekend கிடைத்ததால் என்னுடைய இரண்டாவது அண்ணன், அவர் மனைவி, குழந்தைகள் எல்லோரும் அந்த சமயம் சென்னை வந்திருந்தனர். 

திங்கட்கிழமை எனக்கு வாராந்திர விடுமுறை என்பதால், அவர்களையும் அழைத்துக்கொண்டு புரசவாக்கம் பக்கத்தில் இருக்கும் காண வேண்டிய இடங்களைக் காணலாம் என்ற நோக்கில் கிளம்பினேன். 

அந்தக் காலத்தில், சென்னை நகரப் பேருந்துகளில் ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்களில், Holiday Travel Ticket என்ற ஒன்று இருந்தது. (இப்பொழுதும் இருக்கிறதா தெரியவில்லை) இரண்டு ரூபாய்க்கு ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டால், நகரப் பேருந்துகளில் அன்றைய நாள் முழுவதும், அந்த டிக்கெட்டைக் காட்டி எங்கிருந்து எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். 

அந்த டிக்கெட்டை நாம் முதலில் பயணம் செய்யும் பேருந்தின் நடத்துனரிடமிருந்து இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டால் போதும். அதை அன்று முழுவதும் பயணம் செய்யும் பேருந்துகளில் காட்டி, எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்! 

பேருந்து நிறுத்தத்தில் சென்று நாங்கள் ஐந்து பேரும் நின்றோம். 

ஆனால் பாருங்க - ஒவ்வொரு பேருந்திலும் புளி அடைத்தாற்போல் பயணிகள்! ஏறும் வழி, இறங்கும் வழி எல்லாவற்றிலும் மக்கள் கூட்டம்! எந்த பேருந்திலும் நிற்கக் கூட இடம் இல்லை. 

செய்வதறியாமல் திகைத்தோம்! 

அப்போது பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருந்த கடைக்காரர் எங்களிடம் கேட்டார் " எங்கே போகவேண்டும்? " 

"எக்மோர் மியூசியம்" 

" ஓஹோ செத்த காலேஜா! இன்னிக்கு காணும் பொங்கல் சார்! செத்த காலேஜ், உயிர்க் காலேஜ், அண்ணா சமாதி பக்கம் எல்லாம் பஸ்ஸிலே போகவே முடியாது. வேண்டுமானால் ஆட்டோ பிடித்து போங்க. "

(இதென்னடா இந்த ஆள் நல்ல நாளும் அதுவுமா 'செத்தது, சமாதி' என்றெல்லாம் சொல்கிறாரே என்று பார்த்தால் - சென்னை மக்களின் சொல்லகராதியே தனித்துவம் வாய்ந்தது! செத்த காலேஜ் : மியூசியம்; உயிர்க் காலேஜ் : zoo; அண்ணா சமாதி : மெரீனா கடற்கரை! ) 

 அப்பொழுதே நாங்கள் சுதாரித்திருக்கவேண்டும் - ஆனால் செய்யவில்லை! 

ஆட்டோ பிடித்து, முட்டை பட்டர்மில்க்கில் (எக்மோரில்!) உள்ள  செத்த காலேஜ் க்குச் சென்றோம். 

மியூசியம் நுழைவு வாயிலில் டிக்கெட் வாங்கும் இடத்தில் நீ ஈ ஈ ஈ ண்ட வரிசை.. அதில் நின்று பொறுமை இழந்து உள்ளே சென்றால் - மக்கள், மக்கள், மக்கள்! எங்கும் கூட்டம். அதில் பெரும்பாலானோர் சென்னைவாசிகள் இல்லை. அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து வந்த சாமானியர்கள்தான் அதிகம்! அதிலும் பத்து பேர்களுக்கு ஒருவர் ட்ரான்சிஸ்டர் ரேடியோ ஒன்றை சத்தமாக வைத்து, பாட்டு கேட்டபடி வந்தார்கள். 

" டேய் - இது என்னடா மரத்தை எல்லாம் வெட்டி வெச்சிருக்காங்க
" அந்தக் காலத்து காலணா அரையணா எல்லாம் வெச்சிருக்காங்க " 
" டேய் எ வ் லாம் பெரிய எலும்புக்கூடு பாருடா! " 

எதையும் விவரமாகப் படித்துப் பார்க்காமல் அசுவாரசியமாக ரேடியோ கேட்டுக்கொண்டு, நொறுக்குத் தீனி தின்றுகொண்டு, எங்கும் நிற்காமல் நம்மையும் நிற்கவிடாமல் பிடித்துத் தள்ளியவாறு நடந்த கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக்கொண்டு அன்று நாங்கள் பட்டபாடு வார்த்தைகளில் வடிக்க முடியாது. 

காற்றோட்டம் இல்லாத பகுதிகளில் நீண்ட நேரம் கூட்டத்தோடு கூட்டமாக பெருத்த சத்தங்களுக்கு நடுவே இருந்ததால், வியர்வை, பசி, தலைவலி எல்லாம் சேர்ந்துகொண்டன. 

ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். 

அன்று நான் எடுத்துக்கொண்ட சபதம்: 'சென்னையில், இனிமேல், காணும் பொங்கல் அன்று வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன்' என்பதுதான்! 

== = = = = = = = = 

18 கருத்துகள்:

  1. விடுமுறை நாட்களில் தொலைக்காட்சி முன்பு மக்கள் தவம் இருப்பதன் காரணம் தெரிந்துவிட்டது.

    இங்கும் மற்ற நாட்களில் மார்க்கெட் சென்றால் நிம்மதியாக, பலவித காய்கறிக் கடைகளைப் பார்த்து தேவையானதை வாங்கலாம். வார இறுதி என்றால் கசகசவெனக் கூட்டம், இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள், பார்க்கும் இடமெல்லாம் கடைகள் என அந்தப் பக்கம் போவதே கடினமாக இருக்கும்.

    செத்த காலேஜ் என்றதும் என் அம்மா சொன்னது நினைவுக்கு வருது. அந்தக் காலத்தில் சென்னை வந்தபோது எல்லோரும் அங்கு போனபோது, அவர் மட்டும்தான் தைரியமாக எல்லாப் பகுதிகளையும் சென்று பார்த்தாராம்.

    பதிலளிநீக்கு
  2. அழகு என்றால் இந்தியர்கள்தாம் (சக்ரபாணி சார் பெண்களை நினைத்துச் சொல்லியிருக்கிறார்) என்பது ஓரளவு உண்மைதான், ஆனால் அது நம் கண்ணோட்டத்தில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் உடலைப் பேணாதவர்கள் இந்திய, ஆப்பிரிக்க மற்றும் சில தேசப் பெண்கள்தாம் என்றால் சக்ரபாணி சாருக்குப் புரியுமா?

    பதிலளிநீக்கு
  3. தமன்னாவோ வமன்னாவோ... பார்த்தால், நினைவுக்காக படம் எடுப்பேனே தவிர, ரசிக்கும் நோக்கில், வாய்ப்பே இல்லை... இது எழுதும்போது தாய்வானில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருது... இங்கு வேண்டாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு தனி செய்தியாக அனுப்பவும்.

      நீக்கு
    2. தருகிறவள் தமன்னா வாங்கிக்கொள்கிறவள் வமன்னா என்றால் இங்கே சண்டைக்கு யாரும் வரமாட்டார்கள். அது சரி திடுமென கேஜிஜி சாருக்கு வமன்னா மேல் என்ன ஆர்வம்?

      நீக்கு
  4. ​நெல்லை ரூம் போட்டு யோசிப்பாரா? எப்படியோ கேள்விகளை உருவாக்குகிறார். பதில்கள் நன்று.

    'கேள்வியும் நானே, பதிலும் நானே' என்று ஒரு புதிய பகுதியையும் புதனில் சேர்க்கலாம்.

    செத்த காலேஜ் நான் பார்த்தது 1959 இல் 10 வயது பையனாக இருந்தபோது. மாமா ரயில்வே எழும்பூரில் குவார்ட்டர்ஸில் இருந்தார். விடுமுறைக்கு அங்கு சென்றிருந்தேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. திருமலை உட்பட கேள்வி பதில்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை

    உங்கள் பக்கமும், அனுபவங்களும் படிக்க நன்றாக உள்ளது.

    /அன்று நான் எடுத்துக்கொண்ட சபதம்: 'சென்னையில், இனிமேல், காணும் பொங்கல் அன்று வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன்' என்பதுதான்! /

    நாங்களும் இந்த சபதத்தைதான் அங்கு (சென்னை) வாழ்ந்த நாட்களில் எங்கும் போகாமலே எடுத்திருந்தோம். "காணும் பொங்கல் என்பது மக்கள் வெள்ளத்தை மக்கள் காணும் நாள்" என்பதை திருமணமாகி சென்னை சென்றவுடன் புகுந்த வீட்டின் மூலம் நானும் தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. திருப்பதி ஏழுமலையானும், தமன்னாவும் ஒரே கோட்டில் வந்து விட்டார்களே....

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் பட்டிப் பொங்கல் வாழ்த்துகள்.

    கேள்வி பதில்கள் , kgg பக்கம் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!